Advertisement

அத்தியாயம் – 20

 

தன்னைப்போல ஒரு மாதம் ஓடியிருந்தது. இப்போதெல்லாம் பாவைக்கு ஏனோ வாழ்க்கையில் ஒன்றுமே இல்லாதது போல் தோன்றியது.

 

வீட்டில் அவளும் அவளின் அன்னையும் மட்டுமே. இதற்கு முன்பும் அவர்கள் இருவர் மட்டுமே இருந்திருக்கிறார்கள் அப்போதெல்லாம் இப்படி அவள் உணர்ந்ததில்லை.

 

திருமணத்திற்கு பின் அவளுடனே இருந்த சங்கவியும் இப்போது இங்கில்லை. மாருதியை எப்போதும் எதிர்பார்க்க முடியாது தான். காலையில் வேலைக்கு செல்பவன் இரவில் தானே வருவான் எப்போதும்.

 

சிவாவின் மீது ஏற்பட்டிருந்த அன்பில் தான் நேசிக்கும் ஒரு ஜீவன் தன்னையும் நேசிக்கும் ஒரு ஜீவன் என்றிருந்த எண்ணங்கள் சிவாவின் பாராமுகத்தில் வேதனையை கொடுத்தது அவளுக்கு.

 

அது வேறு ஒரு வெறுமையை கொடுத்திருந்தது. என்னடா வாழ்க்கை இது என்ற எண்ணத்தை கொடுத்தது அவளுக்கு.

 

‘ஒரு மகளாக ஒரு தங்கையாக உன்னோட பங்கை சரியா தானே செஞ்சே, ஒரு மனைவியா புருஷனோட அன்பை சம்பாதிக்க தெரியலையே உனக்கு’ என்று அவள் மனசாட்சியே அவளை கேள்வி கேட்பது போல் தோன்றியது.

தனிமையும் வெறுமையும் கொடுத்த அதீத அழுத்தத்தில் ஒரு கணம் தான் ஏன் இன்னும் இருக்க வேண்டும் பேசாமல் தற்கொலை செய்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் தோன்ற தலையை தட்டி தன்னை ஆசுவாசம் செய்தாள்.

 

மூச்சு முட்டும் போன்ற உணர்வு அவளுக்கு, ஓர் புழுக்கம் மனதினுள். இதற்கு மேல் வீட்டில் இருந்தால் அவள் என்ன செய்வாள் என்று அவளுக்கே தெரியாது என்று தோன்ற கையில் அவள் பர்ஸ் மற்றும் கைபேசி மட்டும் எடுத்துக்கொண்டாள்.

 

“அம்மா கோவில்க்கு போயிட்டு வந்திடறேன்…”

 

“இங்க யாரும்மா இருப்பாங்க…”

 

“வனஜாவோட அம்மாகிட்ட சொல்லிட்டு போறேன்ம்மா… சீக்கிரம் வந்திடுவேன்…”

 

“என்னம்மா திடிர்ன்னு??”

 

“என்னமோ போகணும்ன்னு தோணுது போறேன்ம்மா…” என்றுவிட்டு நில்லாமல் கிளம்பிவிட்டாள்.

 

வீட்டின் அருகில் இருந்த கோவில் தான் அது. நல்ல வேளை நடை இன்னும் சாத்தவில்லை. பன்னிரண்டு மணிக்கு தான் நடையடைப்பார்கள்.

 

அவள் சென்ற நேரம் பதினொன்றரை மணி என்பதால் திறந்து தானிருந்தது. உள்ளே சென்று அம்மனை தரிசித்து வந்தவள் கொடி மரம் விழுந்து வணங்கி ஒரு ஓரமாய் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

ஏனோ சிவாவிடம் பேச தோன்றியது. கைபேசியில் அவனுக்கு அழைப்பு விடுக்க உடனே எடுத்தவன் “என்ன” என்றிருந்தான்.

 

“என்ன பண்றீங்க??”

 

“வேலையா இருக்கேன்… அப்புறம் பேசறேன்…” எப்போதும் போல் அதே வழமையான பதில் அவனிடத்தில்.

 

போனை வைத்துவிட்டவளுக்கு உள்ளே ஒரு கேவல் எழும் போல் உணர்வு. அடுத்து மாலினிக்கு அழைத்தாள்.

 

“எப்படிம்மா இருக்கே?? அம்மாக்கு எப்படியிருக்கு??” என்று ஆரம்பித்தார் அவர்.

 

இவளும் பதிலுக்கு அனைவரின் நலமும் விசாரித்தாள். இவள் குரல் அவருக்கு எப்படிக் கேட்டதோ “என்னம்மா குரல் ஒரு மாதிரியா இருக்கு” என்றிருந்தார் அவர்.

 

‘இவருக்காச்சும் ஏதோ வித்தியாசம் தெரிஞ்சுதே… என்னையும் அக்கறையா விசாரிக்க ஆளிருக்காங்க…’ என்று தோன்றி மனதில் லேசாய் ஒரு நிம்மதி.

 

“அப்படிலாம் ஒண்ணுமில்லை அத்தை…”

 

“ஒண்ணும்மில்லை தானே…”

 

“ஒண்ணுமேயில்லை அத்தை…”

 

“ஹ்ம்ம் அப்போ சரிம்மா…”

 

“அவர் ரொம்ப வேலை வேலைன்னு இருக்காரா அத்தை…”

 

“ஆமாம்மா ஏதோ புதுசா ஒரு வேலை பத்தி சொல்லிட்டு இருந்தான். அதுக்காக தான் பணத்துக்கு அலைஞ்சுட்டு இருக்கான். உன்கிட்ட கூட சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன்” என்றார் அவர்.

 

அவர் இப்படி சொல்லும் போது கணவனை அவரிடம் விட்டுக்கொடுக்க முடியாமல் “ஆமா அத்தை ஏதோ வேலைன்னு சொன்னார். ஆனா ரொம்ப விளக்கமா எல்லாம் சொல்லலை. என்ன விஷயம் அத்தை??”

 

“ராயல் என்பீல்ட் ஷோரூம் இங்க வைக்கறதுக்கு இவன்கிட்ட பேசி இருப்பாங்க போல, கூடவே சர்வீஸ் சென்டரும்…”

 

“நாமா முயற்சி பண்ணாம தானா வந்து கேக்குறாங்கன்னு இவனுக்கு ஒரு எண்ணம். சரி முயற்சி பண்ணிப் பார்ப்போம்ன்னு பணத்துக்கு அலையறான்”

 

“இனிஷியலா கொஞ்சம் அமௌன்ட் தேவைப்படுது. இடம் கூட அவன் பிரண்டு கொடுக்கறேன்னு சொல்லிட்டான். ஆனாலும் ஷோரூம்ன்னா கொஞ்சம் நல்லா வைக்கணும்ல…”

 

“உங்க மாமா காசுக்கொடுக்கறேன்னு சொல்லியும் வேணாம் சொல்லிட்டான். பெரியவனுக்கு இடத்தை எழுதி கொடுத்தாச்சு. அவன் கொடுத்த காசை சங்கவி பேர்ல போட்டுட்டான்”

 

“அந்த காசை எடுத்துக்க சொன்னாலும் பிடிவாதமா முடியாதுன்னு சொல்லிட்டான். நான் தான் என் நகையாச்சும் வைச்சுக்கோன்னு சொல்லி இருக்கேன். அதுக்கே இப்போ தான் சரின்னு சொல்லி இருக்கான்” என்று முடித்தார் அவர்.

 

அதன்பின் அவரிடம் மேலும் ஓரிரு வார்த்தை பேசி பின் போனை வைத்துவிட்டாள் அவள்.

 

‘இவ்வளவு பிரச்சனை இருக்கு, இந்த மனுஷனுக்கு எங்கயும் என் ஞாபகம் வரவேயில்லையா…’ என்று அவள் யோசனை சென்றது.

 

‘ஆமா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து அப்படியே ரொம்ப பேசி கிழிச்சிட்டீங்க’ என்று மனசாட்சியும் வேறு குத்தியது.

 

‘அவன் தான் வேலை வேலை என்று எதுவுமே என்னிடத்தில் சொல்லவில்லை. அவன் கஷ்டம் தெரிந்தும் நான் பேசாமல் இருக்கலாமா’ என்ற எண்ணம் அவளுக்கு.

 

ஒரு முடிவெடுத்தவளாய் வீட்டிற்கு சென்றாள். மாலை மாருதி வீட்டிற்கு வந்ததும் “நாளைக்கு நான் எங்க மாமியார் வீட்டுக்கு போயிட்டு வர்றேன். மதியம் வரை நீ லீவ் போட்டு அம்மாவை பார்த்துக்கறியா!!” என்றாள்.

 

யோசனையுடன் தங்கையை ஏறிட்டான். “என்னால ஒரு வாரத்துக்கு இப்படி அப்படி நகர முடியாது. நீ நாளைக்கே போயாகணுமா… அடுத்த வாரம் வேணா போயிட்டு வாயேன்…” என்றான்.

 

அங்கு சோபாவில் அமர்ந்திருந்த மகேஸ்வரி என்ன நினைத்தாரோ “மாருதி அரை நாள் தானே நானே இருந்துக்குவேன். நீ போயிட்டு பாவை, ஆனா ஏன் அரை நாள்னு சொல்றே… நாளைக்கு சாயங்கலாமே வாயேன்”

 

“இல்லைம்மா நீங்க தனியா இருப்பீங்க… நான் போய் எல்லாரையும் பார்த்திட்டு சீக்கிரம் வந்திடறேன். வனஜாம்மாகிட்ட சொல்லிட்டு போறேன்ம்மா”

 

“எதுனாலும் எனக்கு உடனே போன் பண்ணுங்க, நான் வந்திடறேன்” என்றாள் அவள்.

 

“அவ்வளவு அவசரமா நீ நாளைக்கே போக என்ன இருக்கு பாவை எனக்கு புரியலை…” என்றான் மாருதி அவளிடம் பதில் வாங்கிடும் நோக்குடன்.

 

“ஏன் அண்ணா எங்க வீட்டுக்கு போறதுக்கு கூட நான் நாள் நட்சத்திரம் பார்த்து தான் போகணுமா… அண்ணி அங்க வீட்டுக்கு போய் ஒரு வாரம் ஆகுது. நானும் எல்லாரையும் பார்த்து நாளாச்சு…”

“உனக்கு நான் அங்க போறதில இஷ்டமில்லையா??” என்றாள்.

 

“ஹேய் நான் அப்படி சொல்லலை பாவை. அவசரமா ஏன் போகணும், அடுத்த வாரம் கூட போயேன்னு தான் சொல்ல வந்தேன்… நீ எப்போ வேணும்னாலும் போயிட்டு வாம்மா…” என்றுவிட்டான் அவன்.

 

மறுநாள் காலையில் அனைத்து வேலையும் முடித்து வைத்துவிட்டு அவள் அன்னையிடம் ஆயிரம் பத்திரம் சொல்லி வேப்பம்பட்டுக்கு கிளம்பிவிட்டாள்.

 

ஸ்டேஷன்விட்டு இறங்கியதும் அவனுக்கு அழைக்கலாமா என்று தோன்றியது. அவள் வருவதை யாரிடமும் முன்னமே சொல்லியிருக்கவில்லை அவள்.

 

சர்ப்ரைஸாகவே இருக்கட்டுமே என்றுவிட்டு ஒரு ஆட்டோ ஒன்றை பிடித்து அட்ரெஸ் சொல்லி ஏறி அமர்ந்தாள்.

 

எதற்கும் சிவாவிற்கு மட்டும் அழைத்து சொல்லிவிடுவோம் என்று அழைக்க அவனோ போனை எடுக்கவேயில்லை.

 

வீட்டிற்கு வந்து இறங்கியவள் ஆட்டோவிற்கு பணம் கொடுத்து உள்ளே வந்திருந்தாள். “அத்தை…” என்று அழைத்துக்கொண்டே வந்தவளை பார்த்து ஆச்சரியம் மாலினிக்கு.

 

“என்னம்மா நீ!! நேத்து போன் பண்ணும்போது கூட வர்றேன்னு ஒரு வார்த்தை சொல்லலையே…” என்றார்.

 

“உங்ககிட்ட பேசின பிறகு தான் அத்தை வரணும்ன்னு தோணிச்சு. அண்ணியை பார்த்தும் நாளாச்சு அதான் உங்களை எல்லாம் ஒரு எட்டு பார்த்திட்டு போகலாம்ன்னு வந்திட்டேன்”

 

“எப்படியிருக்கீங்க அண்ணி??” என்று சங்கவியை விசாரிக்க பதிலுக்கு அவளும் விசாரிக்க அங்கு வந்த மாமனாரிடமும் நலம் விசாரித்துக் கொண்டாள்.

 

“அம்மாவை தனியா விட்டு வந்தியா…” என்றார் மாலினி.

 

“ஆமா அத்தை மதியம் கிளம்பிடுவேன், உங்களை எல்லாம் பார்க்க தான் வந்தேன்… பக்கத்து வீட்டு அம்மாவை பார்த்துக்க சொல்லி இருக்கேன். ஒண்ணும் பிரச்சனையில்லை அத்தை…”

 

“என்ன சாப்பிடுறே??”

 

“நான் என்ன விருந்தாளியா எனக்கு எதுக்கு அத்தை பார்மாலிட்டிஸ் எல்லாம்…” என்றவள் “அண்ணி உங்களுக்கு கேரட் அல்வா பிடிக்கும்ன்னு அத்தை சொன்னாங்க…”

 

“இது உங்களுக்கு…” என்று அவளிடம் ஒரு டிபன் பாக்சை நீட்டினாள்.

 

“அப்போ எங்களுக்கில்லையான்னு எல்லாம் நினைக்க கூடாது அத்தை… அண்ணிக்கு போக மத்தது எல்லாம் உங்களுக்கு தான்…” என்றாள் மாலினி வாயை திறக்கும் முன்.

 

“நான் கேக்க முன்னாடியே நீயே பதில் சொல்லிட்டியா…” என்றவர் உள்ளே சென்று சற்று நேரத்தில் அனைவருக்கும் ஜூஸ் அடங்கிய தட்டை எடுத்துக்கொண்டு வந்தார்.

 

கொஞ்ச நேரம் அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தாள். சிவா எப்போது வருவான் என்றெல்லாம் அவள் கேட்கவேயில்லை.

 

ஆனால் அவள் கேட்பாள் என்று மாலினி எதிர்பார்த்திருந்தார். அதனால் மகனுக்கு அழைத்திருந்தார் அவர்.

 

“சொல்லுங்கம்மா…”

 

“கொஞ்சம் வீட்டுக்கு வந்திட்டு போ சிவா…”

 

“என்ன விஷயம்??”

 

“பாவை வந்திருக்காடா தெரியும் தானே உனக்கு…” என்றார் மகனை நோட்டம் விடும் சாக்கில்.

 

“ஹான்… அவளா எப்போ வந்தா??”

 

“வந்து அரைமணி நேரம் ஆகுது…”

சிவா அங்கு யோசனையானான், ‘அதை சொல்ல தான் போன் பண்ணாளோ’

 

“சிவா…”

 

“ஹான்… ம்மா…”

 

“என்னடா??”

 

“கொஞ்சம் வேலையிருக்கு, முடிஞ்சதும் வந்திடறேன்… ஒரு அரைமணி நேரத்துல அங்க இருப்பேன் போதுமா…”

 

“ஹ்ம்ம் சரி வா…” என்றுவிட்டு போனை வைத்தவருக்கு ரெண்டும் அழுத்தம் என்று தான் எண்ணிக்கொண்டார்.

 

பாவை மீண்டும் சிவாவிற்கு அழைத்திருக்கவில்லை. எப்படியும் மதிய சாப்பாட்டுக்கு அவன் வீட்டிற்கு வருவான் என்று தெரியும். அப்போது அவனிடம் பேசிக்கொள்ளலாம் என்று இருந்தாள்.

 

சிவா அன்னையிடம் அரைமணி என்று சொல்லிவிட்டான் தான், ஏனோ அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.

 

‘எதற்கு வந்திருப்பாள்?? ஏன் வந்திருப்பாள்?? எதற்காக அழைத்தாள்??’ என்று பல கேள்விகள் அவன் மண்டைக்குள். பத்து நிமிடம் கூட சென்றிருக்காது, கடையை இழுத்து பூட்டினான். வண்டியை வீடு நோக்கி செலுத்தியிருந்தான் இப்போது.

 

வீட்டு வாசலில் கேட்ட பைக் சத்தம் கேட்டு மாலினியை தவிர மற்றவர்களுக்கு ஆச்சரியம் தான் சிவா இந்த நேரத்தில் வீட்டிற்கு வர மாட்டானே என்று…

 

“என்ன அண்ணா இந்த நேரத்துல வீட்டில, வீட்டம்மா வந்திருக்கான்னு வந்திட்டியோ…” என்று கிண்டல் செய்தாள் சங்கவி.

 

அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் லேசாய் சிரித்து அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்திருந்தான்.

 

“அம்மா குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுங்களேன்…” என்றிருக்க அவர் எழப்போக “நான் எடுத்திட்டு வர்றேன் அத்தை…” என்று சொல்லி எழுந்து உள்ளே சென்றிருந்தாள் அவள்.

 

“அத்தை அவர்க்கு ஜூஸ் எங்க வைச்சிருக்கீங்க பிரிட்ஜ்லயா…” என்று உள்ளிருந்து குரல் கேட்டது.

 

“ம்மா எப்படிம்மா அண்ணாக்கும் ஜூஸ் போட்டியா என்ன??” என்றாள் சங்கவி.

 

“ஆமா கவி…” என்றவர் “பிரிட்ஜ்ல தான் பாவை வைச்சிருக்கேன்”

 

“முன்னாடியே சொல்லிட்டியாம்மா அவங்ககிட்ட”

 

“நான் சொல்லவே இல்லை கவி, அவளே கண்டுப்பிடிச்சிருக்கா… நான் சிவாவை விட்டு உங்களுக்கு மட்டும் தனியா ஜூஸ் போட மாட்டேன்னு… உனக்கு சந்தேகம்ன்னா நீ அவளையே கேளேன்…” என்றார் மாலினி.

 

சம்மந்தப்பட்டவனோ என்ன தான் நடக்கிறது என்ற ரீதியில் சமையலறையின் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவனுக்கு குடிக்க தண்ணீரும் இன்னொரு கையில் ஜூஸ் சகிதம் வந்தவள் அவனிடம் தண்ணீரை முதலில் நீட்டினாள். “அப்புறம் எதுக்கு அதை கொண்டு வந்தே??” என்றான் அவன் முறைப்பாய்…

 

“வெயில்ல வர்றீங்க வந்ததும் ஜில்லுன்னு குடிச்சா நல்லதில்லை… கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு ஐஞ்சு நிமிஷம் கழிச்சு இதை குடிங்க” என்று எதிரில் இருந்த டிபாயின் மீது ஜூஸ் அடங்கிய கோப்பையை வைத்தாள்.

 

“ஆமா அண்ணி… அம்மா அண்ணாக்கும் ஜூஸ் போட்டிருக்காங்கன்னு எப்படி தெரியும் உங்களுக்கு… கரெக்ட்டா கேக்குறீங்க??” என்றாள் சங்கவி.

 

“அத்தை எப்பவும் எல்லாருக்கும் சேர்த்து தானே செய்வாங்க… அவங்க செல்ல பிள்ளைய விட்டு குடிச்சா அத்தைக்கு தூக்கம் வராது. ஆமா தானே அத்தை…” என்று கிண்டலாய் சொல்லி முடித்தாள்.

 

“எம் புள்ளைக்கு எடுத்துவைச்சா  என்னையவா கிண்டல் பண்றீங்க… பார்ப்போம் நாளைக்கு நீங்க எல்லாம் உங்க புள்ளைக்கு எடுத்து வைச்சுட்டு குடிக்கறீங்களா இல்லை நீங்க மட்டும் குடிக்கறீங்களான்னு” என்றார் மாலினியும் இயல்பாய்.

 

அங்கு சாதாரண பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்க சிவாவிற்கு ‘இவளென்ன அமைதியாய் இருக்கிறாள்’ என்ற யோசனை தான்.

 

சற்று நேரம் பொறுத்து “கவிம்மா நீ நேரமா சாப்பிடு வா…” என்று மகளை அழைத்தார். அவளும் அன்னையுடனே எழுந்து சென்றாள். சதாசிவம் அவர் அறையில் இருந்தார்.

 

அங்கு இப்போது பாவையும் சிவாவும் மட்டுமே. “உங்ககிட்ட பேசணும்… உள்ள போலாமா…”. அவனே அவளிடம் பேச நினைக்க அதற்குள் அவள் சொல்லியிருந்தாள். ஒன்றும் சொல்லாமல் எழுந்து அவர்கள் அறைக்கு சென்றான்.

 

உள்ளே வந்தவள் கதவை அடைத்துவிட்டு அவனையே பார்த்திருந்தாள். அவள் பார்வை உணர்ந்தவன் “சொல்லு என்ன விஷயம்??”

 

அவள் எதுவும் சொல்லவில்லை, கொண்டு வந்திருந்த பையில் இருந்து எதையோ வெளியில் எடுத்தாள். அதை அவன் உணரும் முன்னமே கட்டிலில் அவனருகே வைத்திருந்தாள் அதை.

 

“என்ன இதெல்லாம்??” என்றவனின் விழிகளில் அப்பட்டமான கோபம்.

 

“நீங்களா கேட்டிருக்கணும்… ஆனா கேட்கலை…”

 

“நான் ஏன் கேட்கணும்?? இதெல்லாம் எனக்கெதுக்கு, நான் என்ன நகையை மாட்டிட்டு அலையறனா…” என்றான் அவன்.

 

ஆம் பாவை அவன் முன் வைத்திருந்தது அவள் நகைகளை தான்.

 

“நீங்க ஷோரூம் ஆரம்பிக்கணும்ன்னு பணத்துக்காக வெளிய அலையறீங்களா… ஏன் என்கிட்ட கேட்க மாட்டீங்களா…”

 

“உன்கிட்ட சொல்லிட்டு செய்யற அளவுக்கு நாம இன்னும் மனசுவிட்டு பேசிக்கலை” என்றான் அவன்.

 

அந்த வார்த்தை அவள் மனதை கீறியது. “சரி பேசிக்கலை ஒத்துக்கறேன். ஆனா நான் உங்க மனைவி தானே… விஷயம் தெரிஞ்சு நானா தானே கொடுக்கறேன்…”

 

“என்னை அசிங்கப்படுத்தறியா நீ??” என்று இரைந்தான்.

 

“இதுல அசிங்கம் எங்க இருந்து வந்திச்சு… அத்தைகிட்ட வாங்குவீங்க என்கிட்ட வாங்கிக்க மாட்டீங்களா…”

 

“அவங்க என்னோட அம்மா…”

 

“நான் உங்க பொண்டாட்டி…”

 

“உன்கிட்ட வாங்குறது எனக்கு அவமானம்…”

 

“அப்போ கவி அண்ணி நகையை வாங்கிக்கோங்க…”

 

“லூசா நீ அவ இன்னொரு வீட்டுக்கு வாழ போய்ட்டா, அவளோடதை யாரும் வாங்குவாங்களா…”

 

“கவி அண்ணி இந்த வீட்டில பிறந்து இன்னொரு வீட்டுக்கு போய்ட்டாங்க சரி. இப்போ சொல்லுங்க நான் எந்த வீட்டு பொண்ணு” என்றாள்.

 

“உனக்கு வர வர ரொம்ப திமிர் ஆகிட்டு… இல்லைன்னா இப்படி கேட்பியா… அன்னைக்கே இது உங்க வீடுன்னு சொன்னவ தானேடி நீ” என்று சொல்லிக் காட்டினான்.

 

“நான் ஒரு தரம் தான் சொன்னேன். அதுவும் வேணும்ன்னு சொல்லலைன்னு உங்ககிட்ட சொல்லிட்டேன். அப்போவும் நீங்க அதே பேசறீங்க…”

 

“சரி அதை விடுங்க… நான் இந்த வீட்டு பொண்ணு தான்னு நினைச்சா உங்க மனைவின்னு நினைச்சா இதை எடுத்துக்கோங்க…”

 

“இல்லைன்னா நீங்க அத்தையோட நகையும் வாங்க கூடாது. வாங்கவும் நான் விட மாட்டேன். அதுக்கு மேல உங்க இஷ்டம்…”

 

“இங்க பாரு…” என்று அவன் எதையோ சொல்ல வர அவனை கையமர்த்தி தடுத்தாள்.

 

“இதுக்கு மேல பேச எதுவுமில்லை… இது உங்களுக்கு வேணாம்ன்னா நானும் உங்களுக்கு வேணாம்ன்னு அர்த்தம்… இந்த உலகத்திலேயே நானும் இருக்க வேணாம்ன்னு அர்த்தம்” என்று விழிகளில் வழிந்த நீருடன் அங்கிருந்து வேகமாய் நகர்ந்திருந்தாள்.

 

சிவாவோ அவள் பேச்சில் சிலை போல் அப்படியே அமர்ந்துவிட்டான். வெளியில் வந்தவள் கண்ணைத் துடைத்திருந்தாள், “அம்மா போன் பண்ணாங்க நான் உடனே கிளம்பறேன் அத்தை…” என்றாள்.

 

சாப்பிட்டு செல் என்றார் அவர். நேரமாகிவிட்டது என்று மறுத்தாள். சிவா கொண்டு வந்து விடுவான் என்று அவர் சொல்ல “இல்லை அத்தை அவர்க்கு வேலை இருக்கும் நான் கிளம்பறேன். ட்ரைன் தானே போய்டுவேன்” என்று சொல்லி கிளம்பி விட்டாள்.

 

அவள் முகமும் பேச்சும் ஒன்றும் சரியில்லை என்பதை மாலினி கண்டுக்கொண்டார். கவியோ “என்னம்மா நடக்குது இங்க??” என்றாள்.

 

“தெரியலை கவி, நீ எதுவும் உன் வீட்டுக்காரர்கிட்ட சொல்லிடாதே… இது ஏதோ புருஷன் பொண்டாட்டி பிரச்சனை… நான் சிவாகிட்ட பேசறேன்” என்றார் அவர்.

 

“ஹ்ம்ம் சரிம்மா…”

 

“சிவா…” என்று மாலினி வெளியில் இருந்து குரல் கொடுக்கவும் அவன் வெளியே வரவும் சரியாய் இருந்தது.

“என்ன சிவா அவ தனியா கிளம்பி போறா??”

 

“எங்கம்மா??”

 

“வீட்டுக்கு போறேன்னு சொன்னா…” என்று அவர் முடிக்கும் முன்னே அவன் வெளியில் சென்றிருந்தான்.

 

தூரத்தில் அவள் நடந்து சென்றுக் கொண்டிருப்பது கண்ணில்பட பைக்கை உதைத்து கிளப்பினான்.

 

அவளருகில் சென்று வண்டியை நிறுத்தி “ஏறு…”

 

“இல்லை நான் வரலை” என்று அவன் முகம் பார்க்காமல் சொன்னவளின் குரல் உடைந்திருந்தது. கண்கள் அவனை காணாது போனாலும் அவள் அழுகிறாள் என்பதை உணர்ந்தான்.

 

“ஏறுன்னு சொன்னேன்…”

 

“உங்களுக்கு வேலை…”

 

“இருக்கட்டும் நீ ஏறு முதல்ல”

 

“ஸ்டேஷன்ல விட்டிருங்க அம்மா தனியா இருப்பாங்க நான் வீட்டுக்கு போகணும்”

 

“அங்க தான் போறோம் ஏறு…”

 

அவள் வண்டியில் ஏற அவன் எதுவும் பேசாமல் வண்டியை கிளப்பினான். பைக் ஸ்டேஷன் கடந்து அவள் வீட்டிற்கு செல்லும் பாதையின் மெயின் ரோட்டில் பயணிக்க “நீங்க ஏன் அவ்வளவு தூரம்”

 

“பேசாம வா… வண்டி ஓட்டிட்டு இருக்கேன்ல”

 

“ஹ்ம்ம்…”

 

“ஏன் என்னை பிடிச்சுக்கோன்னு வேற உனக்கு தனியா சொல்லணுமா…” என்றான்.

 

‘என்ன சொல்றாரு…’ என்று அவள் விழிக்க பின்னால் கைவிட்டு அவள் கரம் பற்றி தன் இடுப்பை சுற்றி போட்டான்…

 

அந்த நேரம் மனதில் சொல்ல முடியா நிம்மதி அவளை சூழ்ந்தது. அப்படியே அவனை இறுக்கி அவன் முதுகில் சாய்ந்துக் கொண்டாள்…

 

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே!!

Advertisement