Advertisement

அத்தியாயம் – 17

 

சிவாவின் அணைப்பு இன்னமும் இறுகிக் கொண்டே சென்றது. இருவருக்குமான அந்த முதல் அணைப்பை சுகமாய் அனுபவித்து கொண்டிருந்தனர்.

 

“சிவா…” என்ற மாலினியின் குரல் கேட்கும் வரையிலும் அது தொடர்ந்தது. முதல் அழைப்பிற்கு பதில் சொல்லாதவன் அவளை விட மனமில்லாமல் மோன நிலையிலேயே இருந்தான்.

 

அவனிடமிருந்து விலக முயன்றவளையும் விடாது பிடித்திருந்தான். “சிவா…” என்று மாலினி மீண்டும் அழைக்கவும் மெதுவாய் அவளை விடுவித்து “இதோ வர்றேன்ம்மா…” என்றான்.

 

இரு கைகளால் அவள் முகம் பற்றி தன் புறம் இழுத்தவன் அவள் நெற்றி இரு கன்னம் என்று மெதுவாய் தன் இதழ் பதித்தவனின் பார்வை இப்போது அவள் இதழ்களின் மீதே…

 

ஒரு பெருமூச்சுடன் அவளைவிட்டு விலகியவன் “இதோ வந்திர்றேன்” என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றான்.

 

“என்னம்மா??”

 

“நாளைக்கு அப்பாக்கு ஆஸ்பிட்டல் போகணுமே சிவா… அதான் ஞாபகப்படுத்தலாம்ன்னு கூப்பிட்டேன்”

 

“எனக்கு ஞாபகமிருக்குமா… காலையில சாப்பிட்டு ரெடியா இருங்க வண்டி வந்திடும்…”

 

“சரிப்பா நீ போய் தூங்கு…” என்றவரிடம் விடைபெற்று அவர்கள் அறைக்கு வந்து கதவை தாழிட பாவை அங்கில்லை. சுற்று முற்றும் பார்க்க அவள் கட்டிலில் படுத்திருந்தாள்.

 

கொஞ்சம் ஏமாற்றத்தின் சாயல் அவன் முகத்தில். கட்டிலின் உள் ஏறி படுத்திருந்தவளின் மூடிய இமைகளின் வழியே அங்குமிங்கும் அலைந்த கருவண்டு அவன் கண்களில் தவறாமல் விழுந்தது.

 

‘தூங்குற மாதிரி பாவனை பண்றியா’ என்று மனதிற்குள் சிரித்து அவனும் சென்று படுத்தான்.

 

அவளருகே நெருங்கி படுத்தவன் கரங்கள் இடையில் தவழவிட பட்டென்று அவள் விழி திறந்தாள்.

 

“தூங்கலை தானே…” என்று லேசாய் அவன் சிரிக்க அவள் அசடு வழிந்தாள். அவள் நெற்றில் மீண்டும் தன் இதழ் பதித்தவன் “தூங்கலாம்” என்று சொல்ல இருவருக்கும் அப்படி ஒரு நிம்மதி அன்று. நன்றாய் உறங்கினர்.

 

மறுநாள் காலை உணவு முடிந்து அவன் கடைக்கு சென்றுவிட சற்று நேரத்தில் வாசலில் வண்டி வந்து நின்றது.

 

“அத்தை வண்டி வந்திருச்சு கிளம்பலாமா??” என்று வந்து நின்றவளை “நீ எங்கம்மா வர்றே??” என்றார் மாலினி.

 

“அப்போ நீங்களும் மாமாவும் மட்டும் தனியா போகப் போறீங்களா என்ன??”

 

“எப்பவும் அப்படி தான் போவோம். எப்போவாச்சும் சிவா வருவான்…”

 

“உங்க பிள்ளை வருவார் தானே… இன்னைக்கு அவர்க்கு பதில் நான் வர்றேன்… போவோம் வாங்க…”

 

“இல்லைம்மா மதியம் அவன் சாப்பாட்டுக்கு…”

 

“வெளிய சாப்பிட்டுக்குவார்…”

 

“நானும் மாமாவும் மட்டும் போயிட்டு வர்றோம்மா…”

 

“நமக்கு வேற யாரும் உதவி பண்ணமாட்டாங்க அத்தை… நமக்கு நாம தான் உதவி செஞ்சுக்கணும், ஆஸ்பிட்டல் எதாச்சும் கேட்டா நீங்க ஒத்தை ஆளா அங்கிட்டு இங்கிட்டும் போய்கிட்டு இருப்பீங்களா…”

 

“நான் கூட வர்றேன், மேல எதுவும் சொல்லக் கூடாது. நீங்க எப்போ ஆஸ்பிட்டல் போனாலும் என்கிட்ட சொல்றீங்க, நான் அங்க இருந்தா அங்க இருந்தே வந்திடுவேன். இங்க இருந்தா நாம சேர்ந்து போவோம்” என்று முடித்துவிட்டாள் அவள்.

 

மூவருமாக மருத்துவமனை கிளம்பிச் சென்றனர். சதாசிவத்தை பரிசோத்தித்த மருத்துவர் இனி அவருக்கு பிசியோதெரபி தொடங்கலாம் என்று சொன்னார்.

 

பிசியோதெரபி மருத்துவரை சென்று பார்த்தனர். அவர் சொல்லிக் கொடுத்ததை பாவை கவனமாக பார்த்துக் கொண்டிருந்தாள். இனி தினமும் வீட்டிலேயே அவர் அப்பயிற்சி செய்யலாம் என்று அவர் சொன்னார்.

 

மாலினிக்கு நல்ல வேளையாக பாவை உடன் வந்தாள் என்ற மனநிலை தான் இப்போது. மருத்துவர் சொன்னது பாதி புரிந்தும் புரியாமலும் இருந்தார் அவர்.

 

சதாசிவத்திற்கும் மகன் தன்னிடம் சொன்ன சொல் உண்மையாவதாய் தோன்றியது.

 

அவன் அன்று அவள் அம்மாவையே நன்றாக பார்த்துக் கொள்கிறாள் இங்கும் அப்படித் தானே இருப்பாள் என்ற போது சதாசிவம் மனதில் அம்மாவை பார்த்துக்கலாம் மாமனார் மாமியாரை அப்பா அம்மாவா பார்த்துக்க முடியுமா என்ன என்றே தான் தோன்றியது.

 

இன்று பாவை அவர்களுடன் வந்ததில் இருந்து மனதில் அவள் மீதான நல்ல எண்ணம் கூடிப் போனது அவருக்கு.

 

ஒருவழியாய் அவர்கள் மருத்துவமனையில் இருந்து கிளம்ப மதிய நேரமாகிவிட “நாம ஹோட்டல்ல போய் சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம்” என்றாள்.

 

“அதெல்லாம் வேணாம்மா வீட்டில போய் சமைச்சுக்கலாம்” என்று மாலினி சொல்ல “அத்தை இப்போவே நேரமாகிட்டு வீட்டுக்கு போக இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்…”

 

“அதுவரை நீங்க ரெண்டு பேரும் பசியோட இருப்பீங்களா… அவசியத்துக்கு ஹோட்டல்ல சாப்பிட்டா தப்பில்லை…” என்று சொல்லி அவர்களை அருகில் இருந்த நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றாள்.

 

சதாசிவத்தை வண்டியில் இருந்து ஏற்றி இறக்க ட்ரைவருடன் அவளும் உதவினாள். அன்றைய பொழுது அப்படியே சென்றுவிட அவள் அங்கு வந்து மேலும் இரண்டு நாட்களும் கடந்திருந்தது.

 

இன்னும் இரண்டு நாளில் அவளும் அங்கிருந்து கிளம்ப வேண்டும். இருவரும் மனம்விட்டு பேசிக் கொள்ளாவிட்டாலும் ஒருவரின் மனம் மற்றவருக்கு புரிந்தது.

 

அங்கிருந்த அத்தனை நாட்களும் இனிமையானதாய் மகிழ்ச்சியானதாய் இருந்தது. சிவாவின் ஒவ்வொரு செயலும் அவளை அவன் பால் ஈர்த்தது.

 

அன்று காலையில் பாவை மாலினிக்கு சமையலில் உதவி செய்து கொண்டிருந்தாள். மாலினி மகனை சாப்பிட அழைத்து வரச்சொல்ல அவள் தங்கள் அறைக்கு சென்றாள்.

 

சிவா அப்போது தான் குளித்து வந்திருந்தவன் உடைமாற்றிக் கொண்டிருந்தான். உள்ளே சென்றவள் அதை பார்த்துவிட்டு பாதியிலேயே நின்றுவிட்டு அறை வாயிலில் நின்றுக்கொண்டே “சாப்பிட வாங்க” என்று அழைத்து சென்றுவிட்டாள்.

 

அப்போது சந்திரனும் சங்கீதாவும் உள்ளே வந்துக் கொண்டிருந்தனர். அவர்களை கண்டதும் “வாங்க மாமா, வாங்க அக்கா… எப்படியிருக்கீங்க??” என்றாள் பரஸ்பர நலவிசாரிப்பாய்.

 

அவர்களோ ஹ்ம்ம் என்றதோடு சரி. மருமகள் யாரை விசாரிக்கிறாள் என்று உள்ளிருந்து எட்டிப்பார்த்த மாலினி மகனையும் பெரிய மருமகளையும் கண்டு வேகமாய் வெளியில் வந்தார்.

 

“டிபன் சாப்பிடுங்க நான் எடுத்திட்டு வர்றேன்…” என்று இருவரையும் பொதுவாய் பார்த்து சொல்ல “ஹ்ம்ம் இப்போ அது ஒண்ணு தான் குறையா இருக்கு…” என்று சுள்ளென்று பதில் சொன்னான் சந்திரன்.

 

உள்ளிருந்த சிவாவிற்கு வெளியில் நடந்த உரையாடல் எல்லாம் கேட்டுக் கொண்டு தானிருந்தது. ஆனாலும் அவன் வெளியில் வரவில்லை. வெளியில் கேட்ட குரலிலேயே அது யாரென்று புரிந்து போனது அவனுக்கு.

 

பாவையோ அவன் சொன்னதை சாதாரணம் போல் காட்டிக்கொண்டு “அத்தை நீங்க பேசிட்டு இருங்க நான் குடிக்க ஏதாச்சும் எடுத்திட்டு வர்றேன்” என்று உள்ளே சென்றுவிட்டாள்.

“எப்படியிருக்கீங்க ரெண்டு பேரும்??”

 

“எப்படி நல்லாயிருப்போம் பெத்தவங்களே கொடுமை செய்யும் போது எப்படி நல்லாயிருப்போம்ன்னு நினைக்கறீங்க…” என்றான் அவன் வெடுக்கென்று.

 

அவன் பேசுவது மனதிற்கு கஷ்டமாக இருந்த போதும் மாலினிக்கு அவனை எதிர்த்து ஒன்றும் சொல்ல முடியவில்லை. சிவாவை கேள்வி கேட்பது போல் அவனை கேட்க முடியவில்லை அவருக்கு.

 

“அவர் இல்லையா??” என்றான் இப்போது.

 

“யாரு??”

 

“அப்பா…”

 

அதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே என்று எண்ணிய போதும் “உள்ள இருக்கார்”

 

“அவர்கிட்ட பேசணும்”

 

“இப்போ தான் எழுந்திருக்கார், கூட்டிட்டு வர்றேன்” என்றுவிட்டு அவர் உள்ளே நகர்ந்தார்.

 

சிவா நிதானமாய் தயாராகி வெளியில் வந்தான். வந்தவர்களை சம்பிரதாயமாய் பார்த்து வாங்க என்று மட்டும் சொன்னான் அவர்கள் பதிலை எல்லாம் எதிர்பார்க்காமல்.

 

“ஓவியா டிபன் வை…” என்று சொல்லி அவர்களுக்கு எதிரில் இருந்த சோபாவின் அமர்ந்து கொண்டான்.

 

இன்று புதிதாய் அழைத்தவனை மனதிற்குள் மெச்சி “இதோ வர்றேங்க…” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தவள் கையில் ஜூஸ் கிளாசுடன் வந்தாள்.

 

“எடுத்துக்கோங்க” என்று சொல்லி சந்திரனுக்கும் சங்கீதாவிற்கும் கொடுக்க இருவரும் எடுத்துக்கொள்ளாமல் அவளை பார்த்தனர்.

 

‘இவ புருஷன் மரியாதை கொடுக்க மாட்டான், இவ ஜூஸ் கொடுக்கறா’ என்று தான் யோசித்தாள் சங்கீதா. இருவரும் அதை எடுக்காமலே இருக்கவும் கிளாசை அங்கிருந்த டிபாயின் மேல் வைத்தாள் அவள்.

 

“நான் உன்னை டிபன் கொண்டு வரச்சொன்னேன்…”

 

“ஒரு நிமிஷங்க…” என்றுவிட்டு உள்ளே சென்றவள் அவனுக்கு டிபன் கொண்டு வந்து வைத்தாள். அவன் யாரையும் கவனிக்காமல் உணவு உண்பதிலேயே கவனமாய் இருந்தான்.

 

அதற்குள் சதாசிவத்தை அழைத்துக்கொண்டு மாலினி வந்திருந்தார். சந்திரன் பார்த்துக் கொண்டிருந்தானே அன்றி எழுந்து வந்து அந்த வீல் சேரை தள்ளி வர நினைக்கவில்லை.

 

அவன் இப்போது மட்டுமில்லை எப்போதும் இப்படி தான் என்பதால் மற்றவர்களும் அதை பெரிதாய் நினைக்கவில்லை. சிவாவிற்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்த பாவை அதை வைத்துவிட்டு வேகமாய் அவர்கள் அருகில் வந்தாள்.

 

“ஏன் அத்தை நேத்து தான் கை வலிக்குது சொல்லிட்டு இருந்தீங்க… என்னை கூப்பிட்டு இருக்க வேண்டியது தானே…” என்று சொல்லி அவளே தள்ளிக்கொண்டு வந்து சந்திரன் அருகில் நிப்பாட்டினாள்.

 

சிவா அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டு தானிருந்தான் பார்வையாளனாய். மாலினிக்கு தான் இன்று ஏதோ பெரிதாய் வெடிக்கப் போகிறது என்ற பயம் இரு மகன்களின் முக பாவம் பார்த்தும்.

 

அச்சத்துடனே அவர்களை பார்த்துக் கொண்டிருந்தார். “சொல்லுப்பா” என்றார் சந்திரன்.

 

அங்கு வந்ததில் இருந்து இதுவரை யாரையும் பெயருக்காய் கூட நலம் விசாரித்திருக்கவில்லை சந்திரனும் சங்கீதாவும்.

 

“அன்னைக்கு பேசினதை பத்தி என்ன முடிவு பண்ணியிருக்கீங்க??” என்று முடிந்த கதையை தொடர்கதையாக்கினான்.

 

“அதை தான் அன்னைக்கே பேசிட்டோமே…” என்றார் அவர் எல்லாம் முடிந்தது போல்.

 

“அன்னைக்கும் நீங்க அதை பத்தி முடிவா ஒண்ணுமே சொல்லலை”

“இப்போதைக்கு இந்த வீட்டை விக்குற ஐடியா எனக்கில்லை”

 

“அப்போ என்னோட ஷேர்க்கு என்ன வழி??”

 

“இப்போவே எல்லாம் பிரிக்கிறதுக்கு எந்த அவசியமும் இல்லைன்னு நினைக்கிறேன்”

 

“இவன் சொல்லிக்கொடுத்ததை அப்படியே என்கிட்ட சொல்றீங்களா” என்றவனின் குரல் இப்போது ஓங்கி ஒலித்தது.

 

அதுவரை எதுவுமே பேசாமல் இருந்தவன் “என்னை எதுக்கு இதுல இழுக்கறே??”

 

“நீ தானேடா அன்னைக்கு அப்பாக்கு சொல்லிக்கொடுத்தே??”

 

“என்ன சொல்லிக்கொடுத்தேன்??”

 

“சொத்து மொத்தமும் நீயே சுருட்டணும் நினைக்கிறே… முதல்ல அப்பாவோட கடையை மொத்தமா சுருட்டிட்டே, இப்போ வீடும்” என்றான் நாக்கில் நரம்பே இல்லாமல்.

 

சிவாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது. பாவை அங்கு நடப்பதை எதுவோ நடக்க போகிறது என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“எதுக்குடா சிரிக்கறே??”

 

“இல்லை அப்பா கடை இருக்கற இடம் என்னவோ சொந்த இடம் போல சொல்றியே அதை நினைச்சேன் சிரிச்சேன்”

 

“வேணும்னா இனிமே நீயே கடையை பார்த்துக்கோ… கடைக்கு வாடகை கொடு, வர்ற வண்டியை எல்லாம் சர்வீஸ் பண்ணு சரியா”

 

“என்னடா விளையாடுறியா??”

 

“இல்லை நீ தான் விளையாடுறே… அப்பா கடையில என்ன சொத்து இருக்குன்னு நினைச்சு அதை நான் எடுத்துக்கிட்டேன்னு பேசுறே…”

 

“அங்க இருக்கற டூல்ஸ் இதை தவிர்த்து அந்த கடைக்கு போட வேண்டியது என்ன தெரியுமா உழைப்பு… முதல்ல அப்பாவோட உழைப்பு இப்போ என்னோடது அவ்வளவு தான்”

 

“என்னமோ அங்க கோடி கோடியா பணம் கொட்டுற மாதிரி நான் சுருட்டிட்டேன்னு சொல்றே??” என்றவனின் முகத்தில் அப்பட்டமான கோபமிருந்தது.

 

“சிவா நீ அமைதியா இரு…” என்ற சதாசிவம் “சந்திரன் அந்த கடையில என்ன இருக்குன்னு அதை அவன் எடுத்துக்கிட்டான்னு பேசுறே நீ??”

 

“அவன் சொன்ன மாதிரி அதுக்கு வாடகை கொடுக்கறதுல இருந்து அவன் தான் பார்த்துக்கறான். அதுல இருந்த என்னோட பழைய டூல்ஸ் தவிர பெரிசா அந்த கடையில எதுவுமே இல்லை”

 

“முன்ன என்னோட உழைப்பு இப்போ அவனோட உழைப்பு. என்னைவிட வேலை திறமை அவன்கிட்ட இருக்கு, அதுனால தான் நெறைய பேரு இப்போ கடைக்கு வந்து போறாங்க…”

 

“இத்தனைக்கும் அவனுக்கு நான் எதுவும் சொல்லிக் கொடுத்தது கூட இல்லை. கடைக்கு வரும் போது நான் செய்யறதை பார்த்து அவனா செய்யறான்”

 

“இதுக்கு மேல நீ கடை பத்தி பேசினா நான் அப்புறம் மனுஷனா இருக்க மாட்டேன்” என்று சின்ன மகனுக்கு ஆதரவாய் பேசி பெரிய மகனை கண்டித்தார் அவர்.

 

“கடையை என்னமோ பண்ணிட்டு போங்க… வீட்டை பத்தி உங்க முடிவு என்ன??”

 

“அதையும் நானே சுவாஹா பண்ணப் போறேன் உனக்கெதுக்கு??” என்று இடைபுகுத்தான் சிவா இப்போது.

 

“அண்ணன்னு மரியாதை இருக்கா உங்களுக்கு. அவர் அவங்கப்பாகிட்ட பேசிக்கிட்டு இருக்கும் போது நீங்க ஏன் குறுக்க புகுந்து பேசுறீங்க??” என்றாள் சங்கீதா.

 

“மரியாதை பத்தி பேச உங்களுக்கு தகுதியே இல்லை” என்றான் சிவா அலட்சியமாய்.

 

“டேய் அவ உங்க அண்ணி, மரியாதையா பேசு…”

 

“ஓ!! உன் பொண்டாட்டின்னா நான் மரியாதை கொடுக்கணும். அப்போ என் பொண்டாட்டின்னா உங்களுக்கு இளக்காரமா…”

 

“உங்களை மதிச்சு பேசினவகிட்ட எப்படியிருக்கன்னு கேட்டா உங்க முத்து உதிர்ந்து போகுமா… அதை தான் கேட்கலை அவ மரியாதையா கொண்டு வந்து கொடுத்த ஜூஸ் கையில கூட வாங்கலை”

 

“அண்ணிக்கு நான் கொடுத்த மரியாதையை கூட நீ என் மனைவிக்கு கொடுக்கலை…” என்றான் சிவா.

 

“ஆமா இவரு அப்படியே ஒண்ணா சேர்ந்து பொழைச்சுட்டாரு மரியாதை கொடுக்கலையாம் மரியாதை…” என்றதும் சிவாவின் பொறுமை முற்றிலும் பறந்தது.

 

அவன் பேசும் முன்னே சதாசிவம் முந்தியிருந்தார். “சந்திரன் அவங்க ரெண்டு பேரு விஷயத்துல நீ ஏன் தலையிடுற??”

 

“சங்கீதா மாதிரி அந்த பொண்ணும் இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கறதும் இருக்காததும் அவங்களோட தனிப்பட்ட விஷயம்… அதைப்பத்தி நீங்க பேச வேண்டியதில்லை”

 

“ஆமா எனக்கெதுக்கு அந்த பேச்சு…” என்ற சந்திரனின் பாவனையில் இப்போதும் அலட்சியமே. சிவாவிற்கு கோபம் தலைக்கேறி இருந்தது.

 

“மத்த கதை எல்லாம் வேண்டாம், நான் பேச வந்த விஷயத்துக்கு வாங்க…”

 

“அது தான் முடியாதுன்னு சொல்லிட்டேன்ல”

 

“முடியாதுன்னா நான் எப்படி வீடு வாங்குறது. பெத்த பிள்ளை வீடு வாங்குறது பார்த்து சந்தோசப்படாத நீங்க எல்லாம் என்ன பெத்தவங்க”

 

“உன்னையும் பெத்தவங்களா போய்ட்டாங்க அப்புறம் எப்படி அவங்க சந்தோசப்பட முடியும்” என்று குத்தினான் சிவா.

 

“சிவா…” என்று கண்டிப்பாய் பார்த்தார் சதாசிவம்.

 

“எனக்கு இப்போ பணம் வேணும் என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது. இடம் வாங்குறதுக்கு நான் அட்வான்ஸ் கொடுத்தாகணும்” என்று ஒரே பேச்சாய் முடித்தான்.

 

“சிவா உன்கிட்ட பேசணும் உள்ள வா” என்றார் அவன் தந்தை.

 

“அதென்ன அவன்கிட்ட போய் தனியா பேசுறது. எதுவா இருந்தாலும் இங்கவே பேசுங்க” என்றிருந்தான் சந்திரன்.

இப்போது சதாசிவத்திற்கு கோபம் வந்திருந்தது. “அப்படியா சரி கேட்டுக்கோ… இது என் சுய சாம்பாத்தியம் இதை நான் யாருக்கு வேணா எழுதி வைக்கலாம்…”

 

“இதை கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஒரு வேளை உங்களுக்கு பிள்ளைங்க இருந்தா தாத்தா சொத்து பேரன் பேத்திக்குன்னு உரிமை கொண்டாடலாம். இங்க அதுக்கும் வழியில்லை. இனிமே என்கிட்ட சொத்து கேட்டு வராதே” என்று ஒரேடியாய் முடித்தார் அவர்.

 

சிவாவிற்கு அவர் பேசியது மிகுந்த சந்தோசம். சந்திரனோ அவமானமாய் உணர்ந்தான். சதாசிவம் சிவாவிற்கு ஜாடை காட்ட அவரை உள்ளே அழைத்துச் சென்றான் அவன்.

 

“சிவா அவன்கிட்ட நீ ஏன் பேசுறே??”

 

“அப்பா அவனுக்கு சொந்த பந்தம் மேல இப்படி பாசமே இல்லாம போச்சே… அதான் கோபம் எனக்கு அதுனால நான் பேசினேன்…”

 

“அவனை மாதிரி இந்த சொத்து உனக்கும்…”

 

“எனக்கு வேணாம்ப்பா… எனக்கு ஒரு பங்கு கொடுக்கணும்ன்னு நீங்க நினைச்சா அதையும் அண்ணாக்கும் கவிக்கும் கொடுத்திடுங்க”

 

“என்ன சொல்றே சிவா?? உனக்கும் குடும்பம்ன்னு ஆகிட்டு யோசிக்காம எதுவும் வேணாம்ன்னு சொல்றே??”

 

“அம்மாவும் நீங்களும் உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது எதுவுமே இல்லை தானே. இப்போ இதெல்லாம் நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சது தானே. அதே மாதிரி எனக்கும் சம்பாதிக்க முடியும்…”

 

“நீங்க சேர்த்து வைச்சதை நான் பெருக்கறதுல இல்ல சந்தோசம். நான் கஷ்டப்பட்டு நம்ம குடும்பத்துக்கு செய்யறதுல தான் எனக்கு சந்தோசம்” என்று சொன்னவனை நிச்சயம் பெருமையாகத் தான் பார்த்தார் அவர்.

 

இது நாள் வரை அவனை அப்படி அவர் சொன்னதில்லை. ஆனால் மனதிற்கு அந்த எண்ணம் அவருக்கு வந்தது. ‘இவன் என் ரத்தம்… என்னைப் போலவே உழைக்கும் சிந்தனை கொண்டவன்’ என்ற எண்ணமே அது.

 

“சரிப்பா வெளிய போவோம்…” என்று சொல்ல அவரை தள்ளிக்கொண்டு வெளியில் வந்தான்.

 

சந்திரனும் சங்கீதாவும் பிடித்து வைத்த பிள்ளையார் போன்று அதே இடத்திலேயே அமர்ந்திருந்தனர்.

 

“சரி நான் இப்போ ஒரு முடிவுக்கு வந்திட்டேன். இதே ஊர்ல அம்மா பேர்ல ஒரு இடமிருக்கு. சில வருஷம் முன்னாடி சீட் போட்டதுல அது நமக்கு விழுந்த இடம்”

“அது இந்த வீட்டை விட அதிக மதிப்பு இருக்கும். அதை உன் பேருக்கு மாத்திடுறேன். இந்த வீடு சிவாவுக்கும் சங்கவிக்கும் எழுதிடறேன்”

 

“அப்பா…” என்று தடுத்த சிவாவை கையமர்த்தினார், எதுவும் பேசாதே என்று.

 

“அதெப்படி நீங்க சொல்றீங்க அந்த இடம் இந்த வீட்டைவிட மதிப்பு அதிகம்ன்னு…”

 

“உனக்கு அவ்வளவு சந்தேகம் இருந்தா நீயே விசாரிச்சுக்கோ…ஸ்டேஷன்க்கு பின்னாடி தான் அந்த இடம் வருது…”

 

“அப்போ அங்க வீடு கட்டலாம்ன்னு சொன்னப்போ உங்கம்மா தான் ட்ரைன் சத்தம் அதிகமா வரும் வேணாம்ன்னு சொல்லி இங்க வீடு கட்ட சொன்னா…”

 

சந்திரனுக்குள் மனக்கணக்கு வேகமாய் ஓடியது. மனைவியின் முகத்தை பார்க்க அவளும் திருப்தியாய் பதில் பார்வை கொடுக்க “ஹ்ம்ம் சரி நீங்க சொல்றீங்க பார்ப்போம்” என்று போனால் போகிறதென்று சரி என்பது போல் சொன்னான்.

 

“அப்பா நீங்க எழுதி கொடுக்கறது முன்னாடி ஒரு விஷயம். அண்ணன் அந்த பிளாட்வாங்க நீங்க கொடுத்த பதினைஞ்சு லட்சத்தை திருப்பி கொடுக்கணும். அது சங்கவிக்கு சேர வேண்டியது…”

 

“இதுக்கு சரின்னா மட்டும் எழுதிக்கொடுங்க இல்லைன்னா நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன். எல்லாருக்கும் ஈகுவல் ஷேர் தான் வரணும்…” என்றான் கட்டன்ரைட்டாக.

 

“திரும்ப திரும்ப நீ ஏன் அங்கவே வர்றே??”

 

“உனக்கு மட்டும் அதிகமா கொடுத்தா சந்தோசமா வாங்கிப்பே, நாங்க மட்டும் இளிச்சவாயா…” என்றான் அவனும் பதிலுக்கு.

 

“உன்கிட்ட எனக்கென்ன பேச்சு… அப்பா நீங்க என்ன சொல்றீங்க??”

 

“சிவா சொல்ற மாதிரி நீ அந்த காசை கொடு அன்னைக்கே நாம ரிஜிஸ்டர் பண்ணிடலாம்…” என்று முடித்துவிட்டார் அவர்.

 

அவகாசம் வேண்டும் யோசித்து பதில் சொல்கிறேன் என்று சந்திரனும் அவன் மனைவியும் கிளம்பி சென்றுவிட்டனர். வீடே மழையடித்து ஓய்ந்தது போல் இருந்தது.

 

சிவாவின் கோபத்தை இன்று தான் பாவை முழுதாய் காண்கிறாள். ஆனாலும் அவன் கோபத்தில் ஒரு நேர்மை இருந்ததை அவள் உணர்ந்தாள்…

 

அவளுக்கு அவனின் இந்த கோப முகம் கூட மிகப்பிடித்தது. சந்திரனும் சங்கீதாவும் அவளை யாரோ போல் நடத்தியது போது கொஞ்சம் வருத்தம் அவளுக்கு இருந்தது உண்மை தான்.

 

இப்போதெல்லாம் உறவுகளிடம் அவள் பெரும்பாலும் மரியாதையை எதிர்பார்த்ததில்லை. நெறைய பார்த்துவிட்டாள் அவள் அன்னை விஷயத்தில் என்பதால் அது அவளுக்கு அனுபவ பாடமாகி போனது.

 

ஆனால் சிவா தனக்காய் தன் அண்ணனிடம் பேசியது அவ்வளவு உவகையை கொடுத்தது அவளுக்கு. தான் அவனுக்கு எதுவுமே செய்ததில்லை. சொல்லப்போனால் அவனை அவ்வளவு தூரம் அவமானப்படுத்தி இருக்கிறாள்.

 

‘அவனுக்கு என் மேல் கோபமே இல்லையா…’ என்று தான் அவளுக்கு தோன்றியது இப்போது…

 

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா

சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா
சொல்லா சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேனல்லவா

Advertisement