Advertisement

அத்தியாயம் – 14

 

‘எதுக்கு இப்படி சொல்லிட்டு போறாரு??’ என்று யோசித்தவளுக்கு அன்று அவனிடம் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என்று அவள் சொன்னதை மனதில் வைத்து தான் சொல்கிறான் என்று புரிந்தது இன்று.

 

ஏதோ கோபம் என்று உணர்ந்திருந்தாள் இப்படி என்று அவள் நினைக்கவில்லை. இப்போது அவளுக்கு சுருசுருவென்று வந்தது.

 

பின்னே இதுவே அவள் அம்மா வீட்டை அவன் தன் வீடு என்று சொல்வானா… தான் மட்டும் திருமணமாகிய ஒரே காரணத்தால் மாமியார் வீட்டை தன் வீடு என்று சொல்ல வேண்டும் அவன் சொல்ல மாட்டானா!!

 

அதற்கு கோபிக்க வேறு செய்வானா!! என்று இப்போது அவளுக்கு கோபம் வந்தது. நிஜமாகவே அப்படி சொல்ல வேண்டும் என்று எண்ணியெல்லாம் அவள் சொல்லவில்லை.

 

அந்நேரம் தோன்றியதை மட்டுமே பேசினாள். ஒரே நாளில் இது தான் உன் வீடு இவர்கள் உன் வீட்டவர்கள் என்று சொல்வதை ஒரு பெண் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும்.

 

ஆனால் மனம் அது முழுதாய் ஏற்றுக்கொள்ள சற்று அவகாசம் வேண்டும் தானே… பாவை இப்போது தான் தன் வீட்டவர்கள் என்ற எண்ணத்திற்கே வந்திருந்தாள்.

 

தன் வீடு என்ற எண்ணம் இருவரும் ஒன்றாய் இணைந்து ஒரே வீட்டில் இருந்திருந்தால் வந்திருக்குமோ!! என்னவோ!!

 

தன் போக்கில் அந்த அறையிலேயே நின்றிருந்தவளுக்கு சூழ்நிலை புரிய அறையை விட்டு வெளியில் வந்தாள்.

 

மாமனார் ஹாலிலேயே அமர்ந்திருந்தார், அவரிடம் சென்று என்ன பேச என்று தோன்றாமல் மாமியாரை கண்களால் துழாவினாள்.

 

அவள் பார்வையை உணர்ந்தவராக சதாசிவமே வாயை திறந்தார், “மாலினி உள்ள கிட்சன்ல இருக்கா” என்று.

 

“தேங்க்ஸ் மாமா…” என்றுவிட்டு அவளும் சமையலறை நோக்கிச் சென்றாள்.

 

“என்ன அத்தை செய்யறீங்க??” என்ற குரலில் திரும்பி புன்னகைத்தார் மாலினி.

 

“உங்க மாமாக்கு ஜூஸ் பிழியறேன்”

 

“கொடுங்க நான் பண்றேன்” என்றவளிடம் அதிகம் பிகு செய்யாமல் கொடுத்தார் மாலினி.

 

“அதை பிழிந்துக் கொண்டே “ஏன் அத்தை உங்களுக்கு என் மேல வருத்தமில்லையே?? அங்கவே இவ்வளவு நாளா இருக்கனே… யாராச்சும் எதாச்சும் சொல்லி…” என்று இழுத்தாள்.

“எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லைம்மா… அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னா பார்த்துக்கறது பிள்ளைங்களோட கடமை தானே…”

 

“இல்லை அத்தை மாமா ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டாரா… இதுவே நான் வேற வீட்டுக்கு கல்யாணம் ஆகிப் போயிருந்தா இப்படி எல்லாம் யாரும் இருக்க மாட்டாங்க தானே”

 

மாலினி லேசாய் சிரித்துவிட்டு “அது வாஸ்தவம் தான்ம்மா… உன் புருஷன் உன்னை புரிஞ்சவன் அவனே சரின்னு சொல்லும் போது நாங்க என்ன சொல்லிடப் போறோம்”

 

“எனக்கு தெரியலை அத்தை… எங்க அம்மா வீட்டு பக்கம் கூட எல்லாரும் கேக்குறாங்க இன்னுமா நீ உன் வீட்டுக்கு போகலைன்னு…”

 

“நான் பெரிய தப்பு பண்ணுற மாதிரி எனக்கு ஒரு பீல்… தவிர இதுவரை நீங்க யாருமே என்னை ஒரு சொல் சொன்னதில்லை. உங்க பேரு கெடுற மாதிரி இருக்கக் கூடாதுல…”

 

“அதான் இங்க வந்து தங்கிட்டு வர்றேன்னு வந்துட்டேன்… என்னடா திடிர்னு வந்துட்டேன்னு உங்களுக்கு கூட தோணியிருக்கலாம்”

 

“எங்களுக்கு எதுவும் தோணலைம்மா… இது உன் வீடு நீ எப்பவும் வரலாம்…”

 

“தேங்க்ஸ் அத்தை…” என்றவள் “ஜூஸ் ரெடி சுகர் போட்டிறவா…” என்று அவரிடம் கேட்டு அதை போட்டு எடுத்துச் சென்று மாமனாரிடம் கொடுத்து வந்தாள்.

 

மாமியாரும் மருமகளுமாக பேசிக்கொண்டே மதிய உணவை முடித்தனர். சிவா ஏனோ வருவதற்கு தாமதமாக மூவரும் உண்டு முடித்திருந்தனர்.

 

“அத்தை மணி இரண்டரை ஆகப் போகுது… இன்னும் அவர் வரலையே…”

 

“ஆமாம்மா இவ்வளவு நேரம் ஆகாது. நீ ஒரு போன் பண்ணிப் பாரேன்” என்று பொறுப்பை மருமகளின் மேல் போட்டார்.

 

‘நானா…’ என்று யோசித்தாலும் தன் கைபேசி எடுத்து அவனுக்கு அழைத்திருந்தாள்.

 

“சொல்லு…” என்றது எதிர்முனை.

 

“சாப்பிட வரலையா??”

 

“வேலை இருக்கு, என்னால சாப்பிட வரமுடியாது… நீங்க சாப்பிடுங்க” என்றுவிட்டு பேச்சு முடிந்தது என்பது போல் அவன் போனை வைத்தும் விட்டான்.

 

“அத்தை அவர் வேலை இருக்கு வரமுடியாது சொல்றார்”

 

“சரி விடும்மா நைட் வந்து சாப்பிடுவான்…” என்றார் அவர் இது எப்போதும் நடக்கும் நிகழ்வாய்.

“ஏன் அத்தை கடை இங்க பக்கத்துல தானே இருக்குன்னு சொன்னீங்க… வந்து சாப்பிட்டு போகலாம்ல…”

 

“அவன் தான் வேலை இருக்குன்னு சொல்றானே??”

 

“நான் வேணா சாப்பாடு எடுத்திட்டு போகவா?? கடை எங்க இருக்குன்னு மட்டும் சொல்லுங்க நான் விசாரிச்சு போய்டுவேன்…”

 

“அதெல்லாம் வேணாம்மா அவன் வேலை இருந்தா இப்படி தான் செய்வான்…” என்று சொன்னது சதாசிவம்.

 

“இல்லை மாமா இவ்வளவு நேரமாச்சு சாப்பிடலைன்னா என்னாகும்…” என்று இழுத்தாள்.

 

“அவன்கிட்ட ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்லிடும்மா… நான் யார்கிட்டயாச்சும் கொடுத்து அனுப்பறேன்னு சொன்னாலே திட்டுவான்…” என்றார் மாலினி.

 

“சரி அத்தை…” என்றவள் அவன் செல்லுக்கு மீண்டும் முயற்சித்தாள்.

 

“எதுக்கு சும்மா சும்மா போன் பண்ணுறே?? நெறைய வேலை இருக்கு எனக்கு. அதான் சாப்பிட வரமுடியாது சொன்னேன்ல” என்று சிடுசிடுத்தான்.

 

“நீங்க வரலைன்னா பரவாயில்லை… நான் சாப்பாடு கொண்டு வர்றேன்”

“என்ன சொன்னே??” என்றான்.

 

“சாப்பாடு கொண்டு வர்றேன்னு சொன்னேன்”

 

“உனக்கு கடை எங்க இருக்குன்னு தெரியுமா முதல்ல…”

 

“தெரிஞ்சுக்கறேன்…”

 

“ஒண்ணும் தேவையில்லை… வேலை முடிஞ்சதும் நானே வீட்டுக்கு வர்றேன்…”

 

“நான் வருவேன் அவ்வளவு தான்…” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள் அவள்.

 

அவள் பேசுவதையே சதாசிவமும் மாலினியும் பார்த்துக் கொண்டிருந்தனர். சதாசிவத்திற்கு கொஞ்சம் மருமகளின் மீது நம்பிக்கை வந்தது. மகன் மேல் அவள் அக்கறையாய் தானிருக்கிறாள் என்று.

 

“அத்தை சாப்பாடு எதுல எடுத்து வைச்சுக்கட்டும்” என்று கேட்டு அதை இருவருமாக சேர்ந்து எடுத்து வைத்தனர்.

 

“நம்ம வீட்டுல இருந்து மூணாவது தெருன்னு சொன்னீங்களே… அதை மட்டும் காட்டுங்க அத்தை நான் போய்டுவேன்” என்றாள்.

 

அவர் ஒன்றும் சொல்லவில்லை அவளுடனே தெரு முனை வரை வந்து அவள் செல்ல வேண்டிய வழியை காட்டினார்.

 

“வலது பக்கமாவே போம்மா… பாதி தூரம் போனதும் கடை வரும்… SM மெக்கானிக் ஷாப்ன்னு” என்று சொல்லவும் அவளும் தலையாட்டி சென்றாள்.

 

சிவா அவள் வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை. தான் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறோம், எப்படியும் அம்மாவும் அப்பாவும் கூட அதே தான் சொல்லியிருப்பார்கள் அவள் வரமாட்டாள் என்று தான் எண்ணியிருந்தான்.

 

அதனால் அவன் வேலையில் முழ்கியிருக்க அருகே கேட்ட கொலுசொலியில் தான் நிமிர்ந்திருந்தான். அவளை அங்கே கண்டதும் கொஞ்சம் அதிர்ச்சி தான் அவனுக்கு.

 

அவனறியாமல் உள்ளே எதுவோ ஒரு உணர்வு எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை.

 

“நான் தான் வேணாம்ன்னு சொன்னேன்ல” என்று சொன்னது அவ்வளவு அழுத்தமாக இல்லை என்றாலும் சொல்லியிருந்தான்.

 

“நான் கொண்டு வருவேன்னு சொன்னேன்ல… வீட்டில சும்மா தானே இருக்கேன், ஒரு எட்டு இப்படி வந்துட்டு போறேன். அதுல உங்களுக்கென்ன குறைஞ்சு போகுது” என்றவளை விழியகல பார்த்தான்.

 

எப்போதும் சலவை செய்த துணியை உடுத்திக்கொண்டு பார்க்க டிப்டாப்பாக தெரியும் சிவா இல்லை அங்கு. ஒரேடியாய் அழுக்காய் என்றில்லாமல் கொஞ்சம் கிரீஸ் மேலே படிந்திருக்க அடர்த்தியான சிமென்ட் நிறத்தில் மேல் சட்டையும் கருப்பு நிற கால் சட்டையும் அணிந்திருந்தான்.

 

அதில் கூட ஒரு கம்பீரம் அவனிடத்தில் தெரிந்ததுவோ அல்லது எப்போதும் இல்லாமல் அவள் கண்ணுக்கு அவன் புதிதாய் தெரிகிறானோ என்று அவளே அறியாள்.

 

அவனை பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள் வந்த வேலை மறந்து. அவனுமே அவளைத் தானே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

முயன்று தன் கவனம் திருப்பியவன் “கை கழுவிட்டு வந்து சாப்பிடுறேன்… நீ…” என்று அவளை பார்த்தவன் உள்ளே சென்று ஒரு ஸ்டூலை எடுத்து வந்து துடைத்து அவளுக்காய் போட்டான்.

 

“உட்காரு…” என்றுவிட்டு கை கழுவி வந்தான்.

 

“நீங்க எங்க உட்கார்ந்து சாப்பிடுவீங்க??”

 

“நின்னுட்டே சாப்பிட்டுக்கறேன்… கீழ உட்கார முடியாது ரொம்ப அழுக்கா இருக்கும்”

 

“ஒரு நிமிஷம்…” என்றவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒரு மேஜை இருந்தது அங்கு.

 

அருகே சென்று அதில் இருந்த பொருளை எடுக்க “என்ன செய்யறே?? நீ எதுக்கு இதெல்லாம் தூக்குறே நான் செய்ய மாட்டேனா??” என்றவன் அவள் நோக்கம் புரிந்து அதை சற்று அப்புறப்படுத்தி வைத்தான்.

 

“வேஸ்ட் துணி இருக்குமா இல்லை நியூஸ் பேப்பர் இருந்தா கொடுங்க” எனவும் ஒரு துணியை கிழித்து அவளிடம் நீட்டினான்.

 

பரபரவென்று துடைத்தவள் சன்னலில் சொருகி வைத்திருந்த நியூஸ் பேப்பர் எடுத்து அதில் விரித்துவிட்டு அவனுக்கு உணவை எடுத்து வைத்தாள்.

 

“சாப்பிடுங்க…” என்று சொல்லி அவன் அவளுக்கு அமர கொடுத்த இருக்கையை அவனிடம் கொடுத்தாள்.

 

“நீ எங்க உட்காருவே??”

 

“இதுல உட்கார்ந்துக்கறேன்” என்று சொல்லி அவன் உட்கார்ந்து வேலை செய்வதற்கு வைத்திருந்த அந்த சிறிய பிளாஸ்டிக் ஸ்டூலில் அமர்ந்து கொண்டாள்.

 

அதை வாயிலை நோக்கிப் போட்டுக்கொண்டவள் வெளியே வேடிக்கை பார்க்க ஏனோ முதன் முறையாய் சிவாவின் பார்வை மனைவியின் மேல் படிந்தது உரிமையுடன்.

 

அவளையே பார்த்துக்கொண்டு சாப்பிட்டு முடித்திருந்தான். புதிதாய் ஏதோவொரு உணர்வு அவளுக்குள் இப்போது.

 

அவன் பாத்திரங்கள் எடுத்து வைக்கும் சத்தம் கேட்டு வேகமாய் எழுந்து அவனருகே சென்றாள். “கூப்பிட்டு இருக்கலாம்ல நீங்களே போட்டுக்கிட்டீங்களா..”

 

“பரவாயில்லை…”

 

“நான் எடுத்து வைச்சுக்கறேன் நீங்க ஹான்ட் வாஷ் பண்ணிட்டு வாங்க…” என்று சொல்ல அவனும் சென்றுவிட்டான்.

 

அவன் திரும்பி வருவதற்குள் சுத்தம் செய்து முடித்திருந்தாள். “சரி நான் கிளம்பட்டுமா…”

 

“ஹ்ம்ம் போயிட்டுவா… இனிமே இப்படி சாப்பாட்டை தூக்கிட்டு வந்திடாதே… நானே வீட்டுக்கு வந்திடுவேன்…”

 

“நான் இங்க இருந்தா எடுத்திட்டு வந்திடுவேன்…”

 

இருவருமே பேசிக்கொண்டே வெளியில் வர தெருவில் சென்ற பெண்மணி ஒருவர் “என்னா சிவா பொண்ணு யாரு…”

 

“என் வைப்” என்றான்.

 

“இப்போ தான் பாக்குறேன்… என்னப்பா உன்னைத் தேடி கடைக்கே வந்துட்டாளா…”

 

“சாப்பாடு எடுத்துட்டு வந்தாங்கம்மா…”

 

“பரவாயில்லைப்பா கொடுத்து வைச்சவன் தான்…” என்றுவிட்டு சென்றுவிட்டார்.

 

‘கண்ணு வைக்கறாங்கப்பா, முத வீட்டுக்கு போய் அம்மாவை சுத்தி போட சொல்லணும்’ என்று நினைத்துக் கொண்டான். “நீ வீட்டுக்கு கிளம்பு… நான் வேலை முடிச்சுட்டு வர்றேன்”

 

“நைட் வந்திடுவீங்களா…”

 

“வந்திடுவேன்…”என்று சொல்ல அவளும் வீட்டுக்கு சென்றுவிட்டாள்.

 

இரவு வேலை முடிந்து தாமதமாகத் தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் சிவா. அவன் வரும் போதே மணி ஒன்பதுக்கு மேல் ஆகியிருந்தது.

 

வந்ததும் அலுப்பு தீர குளித்துவிட்டு பசியுடன் ஹாலில் வந்து அமர்ந்தான் “அம்மா சாப்பாடு வைங்க” என்றவாறே.

 

“பாவை அவனை கொஞ்சம் கவனிம்மா…” என்றுவிட்டு அவர் தங்கள் அறைக்கு செல்ல சிவா கடுப்பானான்.

 

“அம்மா…”

 

“என்னடா…”

 

“நீங்க சாப்பிட்டாச்சா நான் வர்றதுக்கு முன்னாடியே”

 

“ஆமாடா நானும் அப்பாவும் சேர்ந்து சாப்பிட்டோம்…”

 

“இதென்ன புதுசா??”

 

“அதான் பாவை இருக்கால்ல…” என்றவர்  “பொண்டாட்டி வந்த பிறகும் அம்மா அம்மான்னே சொல்லிட்டு இருப்பான்…” என்று முணுமுணுத்தவாறே உள்ளே சென்றுவிட்டார்.

 

சமையலறையில் இருந்து வெளியில் வந்தவள் “ஏன் நான் சாப்பாடு போட்டா சார்க்கு இறங்காதா…”

 

“நான் எப்போ அப்படி சொன்னேன்??”

 

“இப்போ அத்தைக்கிட்ட சொன்னீங்களே??”

 

“என்ன சொன்னேன்?? நீங்க சாப்பாடு வைக்க மாட்டீங்களான்னு கேட்டேன். அதுல என்ன தப்பு… தினம் அம்மா தானே எனக்கு வைப்பாங்க…” என்று வழமையை சொல்லிவிட அவள் முகம் சுருங்கியது.

 

“ஒரு இரண்டு மாசம் தான் அம்மாக்கு சரியானதும் நான் இங்க வந்திடுவேன்…”

 

“நான் இப்போ அதைப்பத்தி கேட்கவே இல்லையே…”

 

“ஆனாலும் உங்க மனசுல நான் எதுவுமே செய்ய மாட்டேன்னு தோணியிருக்கே…”. ‘அடக்கடவுளே நான் யதார்த்தமா சொன்னேன். அது ஒரு குத்தமாய்யா’ என்று நினைத்துக்கொண்டவன் “நான் சாதாரணமா தான் சொன்னேன்”

 

“டிபன் வைக்கவா…”

 

“பயங்கர பசியில இருக்கேன், எது கொடுத்தாலும் சாப்பிட்டுவேன்” என்றதும் அவனை கவனிக்க ஆரம்பித்தாள்.

 

பாதி சாப்பிட்டு முடித்த பின்னே தான் நீ சாப்பிட்டியா என்று அவளை கேட்க தோன்றியது அவனுக்கு, ஆனால் கேட்கவில்லை.

 

எதுவோ ஒன்று தடுக்க ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவள் தோசை சுட சுட அவன் பசியில் எவ்வளவு சாப்பிட்டோம் என்று கணக்கில்லாமல் உண்டுக் கொண்டிருந்தான்.

 

“இப்படி சுட்டுட்டே இருக்கே… நீ சாப்பிட்டியா??” என்றான்.

 

“அப்பாடா இப்போவாச்சும் கேட்டீங்களே??”

 

“நீ இன்னும் சாப்பிடலையா??” இல்லையென்ற அவள் தலையசைப்பில் “எனக்கு போதும் நீ சாப்பிடு…” என்றுவிட்டு எழுந்திருந்தான்.

 

“நல்ல பசியில இருக்கீங்க போதும் சொல்றீங்க… சாப்பிடுங்க” என்று மேலும் இரண்டு தோசை வைத்தாள்.

‘இப்போ நல்லா தானே இருக்கா… அன்னைக்கு மட்டும் ஏன் அப்படி ராட்சசி மாதிரி நடந்துகிட்டா… ஒரு வேளை அப்போ இவளுக்கு பேய் எதுவும் பிடிச்சிருந்திருக்குமோ…’

 

ஒருவழியாய் இருவருமே சாப்பிட்டு முடித்தனர். சிவா முன்னமே அறைக்கு சென்றிருக்க பாவை சற்று நேரம் கழித்து மெதுவாய் தயங்கிக் கொண்டே உள்ளே வந்தாள்.

 

அறைக்கதவை மூடிவிட்டு இங்குமங்கும் எதையோ எடுப்பதும் வைப்பதுமாய் அவள் நடந்துக் கொண்டிருக்க கட்டிலில் படுத்திருந்தவன் விழித்து பார்த்தான். “என்ன அம்மாகூட படுத்துக்கறியா??”

 

“ஏன்??”

 

“அப்போ எதுக்கு ரூமை அளந்துகிட்டு இருக்க… படுக்க வேண்டியது தானே…”

 

இதுநாள் வரை அவள் அன்னையுடன் தான் படுத்துக் கொண்டிருந்தாள். சிவா வீட்டிற்கு வந்தாலும் அவனுடன் ஒன்றாய் ஒரே அறையில் வந்து சென்றிருக்கிறாள் ஆனால் அங்கேயே படுத்துக்கொள்ள வேண்டும் என்றதும் எதுவோ ஒரு தயக்கம் அவளுக்கு.

 

கையை பிசைந்து நின்றிருந்தாள். எங்கே படுப்பது என்று. “என்ன தூக்கம் வரலையா தாலாட்டு பாடணுமா…” என்று மேலும் மேலும் அவளை சீண்டியவனை முறைத்தாள்.

“நீங்க உள்ள தள்ளிப்படுங்க…”

 

“அதை முதல்லயே சொல்ல வேண்டியது தானே…”

 

“அதான் சொல்லிட்டேன்ல”

 

“எல்லாமே முதல்ல கஷ்டமா தான் இருக்கும். பழகிட்டா சரியாகிடும்” என்றான் பொதுவாய்.

 

எதற்கு சொன்னான் என்று அவனுக்கும் தெரியாது, ஏன் சொன்னான் என்று அவளுக்கும் தெரியாது. ஆனாலும் அவனுக்கு தலையாட்டி வைத்தாள்.

 

அவன் கட்டிலில் உள்ளே படுத்துக்கொள்ள அவள் ஓரத்தில் கீழே விழுவது போல் படுத்துக்கொண்டாள்.

 

இருவருக்குமே உள்ளே ஒரு உணர்வு அவள் திரும்பி அருகிருந்தவனை பார்க்க அவனும் அப்போது அவளை பார்த்தான்…

 

உனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன்
உன் உயிர் சேர்ந்திட நான் வரை பார்க்கிறேன்

 

உனக்குள் பார்க்கவா
உள்ளதை கேட்கவா
என் உயிர் சேர்ந்திட
ஓர் வழி சொல்லவா

Advertisement