Advertisement

அத்தியாயம் – 13
எல்லோரும் இப்போது மருத்துவமனையில் இருந்தனர். மகேஸ்வரிக்கு இன்று அறுவைசிகிச்சை நடந்து கொண்டிருந்தது அங்கு.
சென்ற முறை சென்ற போதே மருத்துவர் இன்னும் ஒரு மாதத்தில் அறுவைசிகிச்சை என்று சொல்லியே அனுப்பியிருந்தார். அதோ இதொவென்று எல்லா டெஸ்டும் முடிந்து மகேஸ்வரிக்கு அறுவைசிகிச்சை நடக்க ஒன்றரை மாதம் ஆகிப் போனது.
இரண்டு மணிநேரத்திற்கும் மேல் ஆகிப்போனது இன்னமும் மருத்துவர் வெளியே வந்திருக்கவில்லை. மேலும் மூன்று மணிநேரம் காத்திருப்புக்கு பின்னே தான் வெளியே வந்தனர்.
எல்லாம் நல்லபடியாக முடிந்து கட்டி வெளியேற்றப்பட்டு விட்டது என்பதை தெரிவித்தார். மகேஸ்வரி கண்விழிக்க எப்படியும் இருபத்தி நான்கு மணி நேரமாகும் என்றுவிட்டார் அவர்.
பாவை முகத்தில் தான் பயத்தின் சாயல் அதிகமிருந்தது. சிவாவிற்கு அவளிடம் சென்று என்ன பேச என்று தெரியாமல் தள்ளியே நின்று தான் பார்த்திருந்தான்.
ஆபரேஷன் நல்லபடியாக முடிந்துவிட்டப்படியால் அவள் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தாலும் இன்னமும் தெளிவில்லாமல் தானிருந்தாள் அவள். காலையில் சாப்பிட்டது தான் அதன்பின் ஒன்றும் சாப்பிடவில்லை யாரும்.
சிவாவிற்கு இந்த இருபது நாட்களாய் மாருதி வேறு சரியாக அவனிடம் பேசாதது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
மாருதி அங்கிருந்து எழுந்திருந்தான். “நான் போய் சாப்பிட எதுவும் வாங்கிட்டு வர்றேன்” என்று.
“மாம்ஸ் நானும் வர்றேன்” என்று உடன் வந்தவனை தவிர்க்க முடியாமல் அவனுடன் சென்றான் அவன்.
அங்கு சென்றதும் மற்றவர்களுக்கு பழச்சாறுக்கு ஆர்டர் செய்துவிட்டு மாருதி அங்கேயே நிற்க “மாம்ஸ் உங்ககிட்ட பேசணும்” என்றிருந்தான் சிவா.
அவனுக்கு மாருதி தன்னை ஏன் தவிர்க்கிறான் என்று தெரிந்தே ஆகவேண்டும்.
“சொல்லுங்க சிவா…” என்றான் மற்றவன் அவன் முகத்தை நிமிர்ந்தும் பார்க்காமல்.
“என் மேல எதுவும் கோபமா இருக்கீங்களா மாம்ஸ்?? நான் எதுவும் தப்பு பண்ணிட்டேனா??” என்று கேட்டவனை இப்போது நிமிர்ந்து பார்த்திருந்தான் அவன்.
“ஏன் சிவா அப்படி கேட்கறீங்க??”
“இல்லை மாம்ஸ் நீங்க என்கிட்ட சரியா பேசறதில்லை. அம்மா என்கிட்ட பேசாம இருந்தப்போ எப்படி கஷ்டமா இருந்துச்சோ அப்படி தான் இருக்கு நீங்க என்னை தவிர்க்கும் போதும்” என்று அவன் சொன்னதும் மாருதிக்கு குற்றவுணர்வாகிப் போனது.
“அப்படில்லாம் ஒண்ணுமில்லை சிவா….”
“இல்லை மாம்ஸ் ஏதோ இருக்கு, எதுவாயிருந்தாலும் சொல்லுங்க” என்று முகம் பார்த்து பேசுபவனிடம் அதற்கு மேல் முகம் திருப்பிக் கொள்ள அவனால் இயலவில்லை.
“இல்லை சிவா அது வந்து… கவி இப்போ…” என்று இழுத்தான்.
“நான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்… நீங்க உங்க வாழ்க்கையை ஆரம்பிக்காம இருக்கப்போ” என்றவனுக்கு மேலே தொடர முடியவில்லை.
சிவாவிற்கு விஷயம் என்னவென்று இப்போது புரிந்தது. சங்கவி இப்போது கர்ப்பமாக இருக்கிறாள்.
“மாம்ஸ் என்னை பாருங்க… இதுக்காக தான் நீங்க அப்படி இருந்தீங்களா… இந்த விஷயம் கேள்விப்பட்டு ரெண்டு வீட்டிலையும் எவ்வளவு சந்தோசமா இருக்காங்க தெரியுமா உங்களுக்கு”
“அத்தை நிம்மதியா ஆபரேஷன்க்கு சம்மதம் சொன்னாங்க அது தெரியுமா உங்களுக்கு”
“ரெண்டு வீட்டுக்கும் முத வாரிசு எல்லாரும் ரொம்ப சந்தோசமா இருக்கோம்… எங்களையும் உங்களையும் ஒண்ணா சேர்த்து ஏன் கம்பேர் பண்ணிக்கறீங்க…”
“இல்லை சிவா ரெண்டு கல்யாணமும் ஒண்ணா தானே நடந்துச்சு…”
“ஆமா மாம்ஸ் இல்லைங்கலை… அப்படியே ரெண்டு பேரும் வாழ்க்கையை தொடங்கியிருந்தா கூட இப்போவே அந்த நல்லது நடந்திருக்கும்ன்னு உறுதியா உங்களால சொல்ல முடியுமா”
“எது எது எப்பப்போ நடக்கணுமோ அது அது அப்பப்போ நடக்கும் மாம்ஸ்… உங்களுக்கே தெரியும் எங்க ரெண்டு பேருக்கு இடையில இருக்க சின்ன கேப்…”
“அதெல்லாம் எங்களுக்குள்ள சரியாகணும்… உண்மையான புரிதலும் நேசமும் இயல்பா எங்களுக்குள்ள நடக்கணும்… அப்புறம் தான் எங்க வாழ்க்கை தொடங்கும் மாம்ஸ்”
“நீங்க உங்களையும் எங்களையும் சேர்த்து குழப்பிக்காதீங்க… எப்பவும் போல என்கிட்ட பேசுங்க… என் அண்ணனை விட உங்களை மேலா நினைக்கறேன்…”
“என்கிட்ட போய் ஏன் மாம்ஸ்??” என்றவனிடம் இப்போது ஆதங்கம்.
“சாரி சிவா…” என்றான் மாருதி மனமார்ந்து.
அவனுக்குள் குற்றவுணர்ச்சி சங்கவி கர்ப்பமானதில் இருந்தே… தங்கையும் அவள் கணவனும் வாழ்க்கையே தொடங்காதிருக்கும் போது இப்படி ஒரு விஷயம் அவனுக்கு பெரும் உறுத்தலாய் சங்கடமாகிப் போனது.
அதன்பொருட்டே சிவாவிடம் பேச தயக்கம் அவன் முகத்தை பார்க்கவே ஒரு கூச்சம் வந்து ஒட்டிக்கொண்டது எப்போதும்.
இப்போதைய சிவாவின் பேச்சில் கொஞ்சம் தெளிவு வந்திருந்தது அவனுக்கு.
“மாம்ஸ் என்கிட்ட போய் நீங்க சாரி கேட்கலாமா… ஒரு ஆதங்கம் அதான் மனசுல வைக்காம கேட்டுட்டேன்” என்றான் சிவா.
“தேங்க்ஸ் சிவா… உங்ககிட்ட பேசின பிறகு தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு” என்றான் மாருதி உள்ளார்ந்து.
இருவரும் பழச்சாறை எடுத்துக்கொண்டு வந்து தங்கள் இணைகளுக்கு கொடுத்தனர்.
இருட்டும் நேரம் நெருங்கி விட “மாம்ஸ் நீங்க கவியை கூட்டிட்டு வீட்டுக்கு போங்க… நான் இங்க பாவையோட ஆஸ்பிட்டல்ல இருக்கேன்”
“இல்லை சிவா நீங்க கவியை கூட்டிட்டு உங்க வீட்டுக்கு போங்க… பாவை கூட நானிருக்கேன்…” என்றான் மாருதி மறுத்து.
“மாம்ஸ் சொல்றதை கேளுங்க… நீங்க அவளை கூட்டிட்டு கிளம்புங்க… இங்க நான் பார்த்துக்கறேன்” என்று கட்டாயப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தான்.
அவர்கள் கிளம்பியதும் அவனும் அவளும் மட்டுமே. இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை.
ஏனோ அவன் பார்வை அவளையே ஆராய்ந்தது. ‘என்னை மாதிரியே இவளுக்கும் அம்மான்னா ரொம்ப பிடிக்கும் போல… ஒரே நாள்ல இப்படி ஓய்ஞ்சு போய்ட்டா பாவம்’ என்றிருந்தது அவன் சிந்தனை.
‘மதியமும் இவ சாப்பிடலை நைட்டாகி போச்சே’ என்ற யோசனை வர எழுந்து அவளருகே சென்றான்.
“பாவை…”
“ஹான்…” என்று நிமிர்ந்தாள் அவள்.
“வா சாப்பிட போகலாம்…”
“இல்லை எனக்கு வேணாம். இங்க அம்மாகிட்ட யாராச்சும் இருக்கணும்ல…”
“அத்தை இப்போதைக்கு கண் முழிக்க போறதில்லை. நாளைக்கு தான்னு டாக்டர் சொன்னாங்கல்ல… நீ என்னோட எழுந்து வா சாப்பிட்டு உடனே வந்திடலாம்…”
அவளோ மறுப்பாய் பார்க்க அவள் கைப்பிடித்து உள்ளே இருந்த நர்சிடம் சென்றான்.
“நர்ஸ்…”
“சொல்லுங்க சார்…”
“டாக்டர் இப்போ எங்களை கூப்பிடுவாங்களா??”
“இல்லையே?? ஏன் கேட்கறீங்க??”
“இல்லை இவங்களை வெளிய கூட்டிட்டு போய் சாப்பிட வைச்சு கூட்டிட்டு வரலாம்ன்னு தான்…”
“போயிட்டு வாங்க சார்… பேஷன்ட் நாளைக்கு தான் கண்முழிப்பாங்க… எதுவா இருந்தாலும் இனி இதுக்கு மேல கேட்க மாட்டாங்க நாளைக்கு காலையில தான்”
“தேங்க்ஸ்… எதுவும் அவசரம்ன்னா இந்த நம்பர்க்கு கூப்பிடுங்க” என்று அவன் கடையின் கார்டை கொடுத்து அதில் இருந்த அவனின் எண்ணுக்கு அழைக்கச் சொன்னான்.
“இப்போ போகலாமா??” என்றான் அவளைப் பார்த்து.
‘வரலைன்னா விடவா போறீங்க’ என்று எண்ணிக்கொண்டு அவனிடம் தலையசைத்தாள்.
அவளை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தவன் அருகே இருந்த ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.
“நல்லா சாப்பிடு… சாப்பிட்டா தான் தெம்பா அத்தையை கவனிக்க முடியும். அவங்க எழுந்து வரும் போது நீ மயங்கி விழுந்திடக் கூடாதுல்ல” என்று முடித்தவனை முறைத்திருந்தாள் அவன் மனைவி.
“அப்படிலாம் ஒண்ணும் விழ மாட்டேன்…”
“விழுந்திடக் கூடாதுன்னு தான் சொன்னேன்” என்றான் அவனும் விடாமல்.
ஆயிற்று இன்றுடன் மூன்று மாத காலம் ஓடிபோயிருந்தது. மகேஸ்வரி இப்போது மெல்ல எழுந்து நடமாட ஆரம்பித்துவிட்டார்.
அவருக்கு அறுவைசிகிச்சை முடிந்திருந்தாலும் மருத்துவர்கள் அவருக்கு கீமோ கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மாதம் ஒரு முறை வீதம் அவருக்கு கீமோ கொடுக்கப்பட்டது. பாவைக்கு தான் ஓயாத வேலை மசக்கையில் அவஸ்தை படும் சங்கவியையும், அவள் தாயையும் ஒருங்கே கவனித்துக் கொண்டிருந்தது அவளே!!
மகேஸ்வரிக்கு மகளை இன்னமும் தன் வீட்டிலேயே வைத்திருப்பது சங்கடமாக இருந்தது. சிவா தான் உறுதியாய் சொல்லிவிட்டான் அவரின் கீமோ முடியும் வரை அவள் அங்கேயே இருக்கட்டும் என்று.
சிவா தனக்காய் தன் குடும்பத்திற்காய் இவ்வளவு தூரம் இறங்கி வந்திருக்கும் போது தான் மட்டும் எதுவும் செய்யவில்லை என்ற குற்றவுணர்ச்சி பாவைக்கு.
திருமணம் முடிந்த அன்று சிவாவின் வீட்டிற்கு சென்றது தான். அதன்பின் இன்று வரை இங்கு தானிருக்கிறாள். மாலினி வாரம் இருமுறையாவது வீட்டிற்கு வந்து செல்வார் தான்.
சங்கவிக்கு இப்போது கொஞ்சம் பரவாயில்லை, மகேஸ்வரியும் கொஞ்சம் நன்றாகவே நடமாட ஆரம்பித்துவிட்டார்.
மாமியார் வீட்டிற்கு சும்மாவது சென்று வரவேண்டும் அவர்களிடம் நேரில் பார்த்து தன்னிலை விளக்கவேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.
மாமியாருக்கு தெரியும் என்றாலும் வீட்டில் மாமனாரும் இருக்கிறாரே என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் அவளுக்கு.
அந்த வாரம் சிவா வீட்டிற்கு வந்த போது அவனிடம் பேசி அங்கு சென்று வர வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டாள்.
சனிக்கிழமை அன்றே சிவா பாவையின் வீட்டிற்கு வந்துவிட்டான். மறுநாள் அவன் முன் வந்து நின்றவளை என்ன என்பது போல் பார்த்தான் அவன்.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”
“பேசு” என்றானவன்.
“நீங்க வீட்டுக்கு போகும் போது என்னையும் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு கூட்டிட்டு போறீங்களா??” என்றாள் மெதுவாய்.
அவன் பதிலொன்றும் சொல்லாமல் அவளை முறைத்தவாறே கடந்து சென்றிருந்தான் இப்போது.
கூட்டிச் செல்கிறேன், இல்லை என்று எதுவுமே சொல்லாமல் அன்று இரவு அவன் வீட்டிற்கும் கிளம்பிச் சென்றுவிட்டான்.
‘ஆளைப்பாரு வீட்டுக்கு வரேன் சொல்றேன்… கூட்டிட்டு போகாம பதிலும் சொல்லாம போறான் லூசு’ என்று தன் கணவனை மனதிற்குள் திட்டிக் கொண்டாள் பாவை.
மேலும் ஒரு வாரமும் ஓடிவிட்டது. அந்த வாரம் சிவா அங்கு வரவில்லை, அதற்கு மேல் தாமதிக்க பாவைக்கு மனமில்லை. மாருதியின் முன் சென்று நின்றாள்.
“அண்ணா…”
“சொல்லு பாவை…”
“நான் அவர் வீட்டுக்கு போயிட்டு வரட்டுமா??” என்று அவள் சொல்லவும் அவனுக்கு முதலில் ஒன்றுமே விளங்கவில்லை.
“யார் வீட்டுக்கு சொல்றே பாவை??”
“அவரோட வீட்டுக்கு தான், எங்க மாமியார் வீட்டுக்கு…” என்று சேர்த்து சொல்லவும் தான் அவனுக்கு புரிந்தது.
“என்ன திடீர்ன்னு??”
“இல்லை நான் கல்யாணம் ஆனதுல இருந்து இங்கவே இருக்கேன். யாரும் என்னை எதுவும் சொல்லலை தான் ஆனாலும் நான் அங்க போக வர இருந்தா தானே நல்லா இருக்கும்” என்றாள்.
‘இதேதுடா என் தங்கைக்கு பொறுப்பு வந்திருச்சு’ என்று எண்ணிக்கொண்டான் மாருதி.
“ஆமா இதை ஏன் நீ என்கிட்ட சொல்ற, சிவாகிட்ட சொல்லியிருக்க வேண்டியது தானே”
“சொன்னேன் அவர் பதிலே சொல்லலை” என்றாள்.
“அவர்கிட்ட உங்க வீட்டுக்கு போகணும்ன்னு சொன்னியா??”
“ஆமா”
“உன்னை…” என்று பல்லைக் கடித்தவன் “நீ அந்த வீட்டு பொண்ணு இனிமே அது ஏன் உனக்கு ஞாபகம் வரலை. நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போங்கன்னு தானே சொல்லியிருக்கணும்”
“அண்ணா நான் சாதாரணமா தான் அதை சொன்னேன். எனக்கு அப்படி சொல்ல வரலையே… நான் என்ன செய்வேன்… திடிர்னு எல்லாமே மாத்திக்கணும்ன்னா எப்படி முடியும்”
“ஏன் உங்கண்ணி மாத்திக்கலையா?? கஷ்டம் தான் உடனே மாத்திக்கறது கஷ்டம் தான்… மனசுல அந்த எண்ணம் வரலைன்னா கூட பேச்சளவிலே நீ சொல்லியிருக்கணும்”
“இப்போ என்னை என்ன செய்ய சொல்றே??”
“இனிமே மாத்திக்கோ சரியா… நான் கூட்டிட்டு போறேன்… ஆமா அங்கவே தானே இருக்க போறே??”
“இல்லை போயிட்டு உன்கூடவே வந்திடறேன். அவர் தான் அம்மாக்கு கீமோ முடியறவரை இருக்க சொன்னார்ல”
“அப்போ ஒண்ணு செய்… போறது தான் போறே ஒரு வாரம் பத்து நாளாச்சும் இருந்திட்டு வாயேன்”
“ஹ்ம்ம் சரிண்ணா”
“சரி நீ ரெடியாகு” என்றுவிட்டு அவன் சங்கவியை தேடிச் சென்றான். பாவையிடம் பேசியதை சொல்ல அவளோ “என்னங்க நீங்க முத முத அண்ணி வீட்டுக்கு போறாங்க. அண்ணன் இல்லாம தனியா போறதா…”
“அதான் நான் போறனே…”
“அண்ணன் கூட போனா தான் நல்லாயிருக்கும்” என்றாள் அவள்.
“சரி நான் சிவாக்கு போன் பண்ணி சொல்றேன்…”
சிவாவிடம் பேச அவனால் உடனே கிளம்பி வர முடியாத சூழ்நிலை நிலவ பாவையை ரயில் ஏற்றிவிடுமாறு சொன்னான்.
ஸ்டேஷனில் இருந்து அவனே வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறிவிட மாருதியும் பாவையை ரயிலேற்றிவிட்டான்.
மகேஸ்வரிக்கு மகள் மாமியார் வீட்டிற்கு சென்றது அவ்வளவு சந்தோசம். மருமகளிடம் சொல்லி பூரித்துப் போனார் அவர்.
பாவை ஸ்டேஷன் விட்டு வெளியில் வரவும் சிவா வேகமாய் உள்ளே ஓடிவரவும் சரியாய் இருந்தது.
அவள் கையில் இருந்த பையை கண்டவன் ஒற்றை புருவம் தூக்கி அவளைப் பார்த்தான் யோசனையாய். அவளிடம் வேறு ஒன்றும் கேட்கவில்லை.
பாவையோ ‘நீ கூட்டிட்டு போகலைன்னா என்னால வர முடியாதா’ என்ற பார்வை பார்த்து அவனை முறைத்தாள்.
“வா…” என்றுவிட்டு அவள் கையில் இருந்த பையை வாங்கிக்கொண்டவனின் பின்னே சென்றாள்.
வெளியில் நின்றிருந்த அவன் பைக்கின் முன் பையை வைத்தவன் “ஒரு நிமிஷம்” என்றுவிட்டு சற்று தள்ளிச்சென்று அவன் கைபேசியில் வீட்டிற்கு அழைத்தான்.
“சொல்லு சிவா” என்றார் மாலினி எதிர்முனையில்.
“உங்க மருமகளை கூட்டிட்டு வீட்டுக்கு வர்றேன் இப்போ…”
“என்னடா சிவா என்னாச்சு?? எதுவும் பிரச்சனையா??”
“அம்மா அவளுக்கு உங்க எல்லாரையும் பார்க்கணுமாம்… சரி நான் போனை வைக்குறேன்” என்றுவிட்டு அவளை நோக்கி வந்தான்.
அவளை ஏற்றிச் சென்று வீட்டில் விட மாலினி ஆரத்தி கரைத்து வைத்துக்கொண்டு வாசலிலேயே நின்றார்.
“என்னம்மா இதெல்லாம்…” என்றான் அவன்.
“நீங்க ரெண்டு கல்யாணத்தன்னைக்கு ஒண்ணா வந்தது. அதோட இப்போ தானே உங்களை சேர்ந்து பார்க்கறேன்… அதான்டா” என்றார் மகனிடம்.
“அத்தை அதெல்லாம் வேணாமே…” என்றாள் பாவையும் கூச்சமாக.
“நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து நில்லுங்க… எனக்கு இப்போ தான் மனசுக்கு சந்தோசமா இருக்கு” என்றவர் இருவருக்கும் ஆலம் சுற்றி வீட்டிற்கு அழைத்து சென்றார்.
அவளைவிட்டு விட்டு காலில் வெந்நீரை ஊற்றியது போல் சிவா கிளம்பினான்.
“அம்மா நான் கடைக்கு கிளம்பறேன். இவளை விடறதுக்கு தான் வீட்டுக்கு வந்தேன், டைம் ஆச்சு” என்றுவிட்டு வெளியே சொல்லப் போக “சிவா நில்லுடா” என்றார் அவர்.
“என்னம்மா??”
“அவளை அப்படியே விட்டுட்டு போறே?? உங்க ரூமை காட்டுடா, அவ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணட்டும். ஒரு அஞ்சு நிமிஷம் இருந்து பேசிட்டு போடா”
“அத்தை அவர்க்கு வேலை இருக்கு சொல்றார்ல அவர் கிளம்பட்டும்” என்று அவனை முறைத்துக்கொண்டே சொன்னாள் அவள்.
சிவா வாயில் வரை சென்றவன் திரும்பி வந்திருந்தான். “வா…” என்றுவிட்டு அவள் பையுடன் அறைக்குள் நுழைந்தான்.
“உன் திங்க்ஸ் இங்க வைக்கறேன்…” என்றுவிட்டு “உன் பாஷையில சொல்லணும்ன்னா இது என்னோட ரூம்” என்றுவிட்டு அவளை திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டான் அவன்….
சுடும் வெய்யில் கோடை காலம்
கடும் பனி வாடை காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும்
காலம் உள்ளதா?
இலை உதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழை காலம் என்றே
நெஞ்சம் சொல்லுதே
ஓ மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ
பின்னலாய் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திட தானோ

Advertisement