Advertisement

அத்தியாயம் – 12
சதாசிவம் பேசியதும் கோபமாய் வீட்டை விட்டு கிளம்பிய சந்திரனும் சங்கீதாவும் அதன்பின் இந்த பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை.
ஆயிற்று ஒரு மாதம் ஓடிப் போயிருந்தது. மாலினிக்கு இப்போது ஒரு மனக்குறை மகள் மருவீட்டிற்கு கூட வீட்டிற்கு வந்து செல்லவில்லையே என்று தான்…
சிவா வாரம் ஒரு முறையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறையோ அங்கு சென்று தங்கி வருவான்.
இந்த முறை மாருதியிடம் சொல்லிவிட்டான் அவர்கள் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் தங்கிப் போகுமாறு.
அதுவரையில் தான் அங்கு இருந்து பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட இதோ மாருதியும் சங்கவியும் விருந்தாட வந்திருந்தனர்.
“வாங்க மாம்ஸ்… நீங்க வர்ற வரைக்கும் இங்க இருக்கணும்ன்னு தான் நான் கிளம்பலை… கடைக்கு போயிட்டு நேரா நைட் நான் அங்க போய்டறேன் மாம்ஸ்…”
“ஓகே சிவா பார்த்துக்கோங்க… எதுவானாலும் எனக்கு உடனே ஒரு போன் பண்ணுங்க…”
“நீங்க ஒரு வாரம் நிம்மதியா இங்க இருங்க மாம்ஸ்… அங்க நாங்க பார்த்துக்கறோம்” என்று பாவையையும் தன்னுடன் சேர்த்து சொன்னான் அவன்.
மாருதியும் மகிழ்வுடன் அவனுக்கு விடைக் கொடுத்தான். “அம்மா கிளம்பறேன், அப்பா போயிட்டு வர்றேன்… கவி பை நல்லா என்ஜாய் பண்ணு…”
“அம்மா உனக்கு அதை செய்யணும் இதை செய்யணும்ன்னு சொல்லிட்டு இருக்காங்க… எல்லாத்தையும் கேட்டு வாங்கிக்கோ” என்றான்.
“டேய் அண்ணா நில்லுடா இதென்னடா புதுசா அப்பாக்கு பை எல்லாம் சொல்லுறே… எனக்கு தெரியாம இது எப்போ நடந்தது… வானும் மண்ணும் எப்போ ஹான்ட் ஷேக் பண்ணுச்சு” என்றாள்.
“அதெல்லாம் அம்மாகிட்ட கேட்டுக்கோ, டைமாச்சு நான் கிளம்பறேன். பை மாம்ஸ்” என்று சொல்லி கிளம்பிச் சென்றுவிட்டான்.
அன்று அனுப்ப வேண்டிய இரண்டு வண்டிகளை வேகமாய் சரி செய்து முடித்திருந்தான். மதியமே வேலை முடிந்துவிட்டது.
‘தனியா இருப்பா பாவம், வேலை தான் முடிஞ்சுடுச்சே சீக்கிரம் போய்டுவோமா’ என்று மனம் எண்ணியது.
சிறிது நேரம் கழித்து தான் தன் எண்ணம் அவனுக்கு புரிய ‘நான் எப்போ அவளுக்கு பாவம் பார்க்க ஆரம்பிச்சேன்’ என்பதாய் தானிருந்தது அவன் எண்ணம், தன் மனம் எப்போது இப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பித்தது என்று அவனுக்கே புரியவில்லை.
வலுக்கட்டாயமாய் அந்த எண்ணத்தை மாற்றி மறுநாள் டெலிவரி கொடுக்க வேண்டிய வண்டியையும் சர்வீஸ் செய்து முடித்திருந்தான் இப்போது.
அப்படி இப்படியென்றாலும் அவன் வேலை மூன்று மணிக்கே முடிந்து போனது அன்று. அதற்கு மேல் தாமதிக்க அவன் உள்ளம் விழையவில்லை.
அங்கு இருந்த சின்ன குளியலறையில் குளித்து வேறு உடைக்கு மாறியவன், அவன் உடைமைகள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு பைக்கில் ஏறி அமர்ந்தான்.
அடுத்த அரைமணி நேரத்தில் ஆவடிக்கு வந்து சேர்ந்திருந்தான் அவன். வெளியில் ஏதோ வண்டி சத்தம் கேட்டதே என்று உள்ளிருந்து எழுந்து வந்திருந்தாள் பாவை.
அங்கு கேட்டை திறந்து பைக்கை உள்ளே விட்டவனை பார்த்ததும் தான் என்ன உணர்கிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.
உள்ளே ஒரு மனநிம்மதி எழுந்ததை மட்டும் அவளால் நிச்சயம் உணர முடிந்தது. வந்தவனை வாவென்று கூட சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
‘வான்னு சொல்றாளா பாரு, இவளுக்கு போய் பாவம் பார்த்தோமே’ என்ற முணுமுணுப்பு அவன் மனதிற்குள்.
அவன் உள்ளே வந்ததும் “சாப்பிடுறீங்களா??” என்று கேட்டாள்.
“அதிசயம் தான்… இன்னைக்கு மழை வரப்போகுது…” என்று வாய்விட்டே சொல்லிவிட்டான். (மனதிற்குள் சொல்வதாக நினைத்து தான்)
“என்ன அதிசயம்?? ஏன் மழை வரும்??”
“மைன்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா பேசிட்டேன் போலருக்கே…”
“என்ன சொல்றீங்க?? ஒண்ணும் புரியலை…”
“நீ என்னை பார்த்து சாப்பிடுறீங்களான்னு கேட்டேல அதை தான் அதிசயம்ன்னு சொன்னேன்” என்று அவன் விளக்கம் சொன்னதும் அவனை முறைத்தாள் அவள்.
‘அதானே பார்த்தேன்… எங்கடா நல்லா போச்சேன்னு ரைட்டு’ என்று எண்ணியது அவன் மனக்குரலே தான்.
“நான் கேட்டதுக்கு இன்னும் நீங்க பதில் சொல்லலை. முகம் கை கால் கழுவிட்டு வர்றீங்களா சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா” என்றாள் அவள் மீண்டும்.
‘நிஜமாவே இது அதிசயம்’ என்று நம்ப முடியாமல் அவளறியாமல் அவன் கையை கிள்ளிப் பார்த்துக் கொண்டான். ‘வலிக்குது அப்போ கண்டிப்பா இவ தான் பேசினாளா’
“வேணாம் நான் சாப்பிட்டு தான் கிளம்பினேன். அத்தை என்ன பண்றாங்க??”
“தூங்கிட்டு இருக்காங்க…”
“ஹ்ம்ம் சரி…”
“நீங்க காபி…” என்று ஆரம்பித்து “டீ சாப்பிடறீங்களா??” என்றாள்.
மெதுவாய் வாய்க்குள்ளே சிரிப்பை மென்றவன் “சரி கொண்டு வா” என்றான்.
“கை கால் கழுவிட்டு வர்றீங்களா??”
“ஏன் என்னை பார்த்தா அழுக்காவா தெரியுது” என்றான்.
“நான் அதுக்கு சொல்லலை அவ்வளவு தூரம் வண்டியில வந்திருக்கீங்க… ட்ராவல்ல ஒரே தூசியா இருக்கும் அதான்”
“பரவாயில்லை பாவை உனக்கு கூட மூளையிருக்கு” என்று சொல்லிவிட்டு அவள் முறைப்பதை கண்டும் காணாமல் அறைக்குள் சென்று மறைந்தான் அவன்.
அவன் கைலிக்கு மாறி முகம் கழுவி துண்டில் முகத்தை துடைத்துக் கொண்டே வெளியில் வந்து அமர்ந்திருந்தான். பாவை அவனுக்கு டீயை கொண்டு வந்து கொடுத்தவள் உடன் சூடாய் இரண்டு பஜ்ஜியும் சட்னியும் வேறு வைத்திருந்தாள்.
‘என்னடா சிவா இன்னைக்கு இவ்வளவு ஸ்பெஷல் கவனிப்பா இருக்கு’ என்று அவனே அவனை கேட்டுக்கொண்டான்.
‘எதுவரைக்கும்ன்னு பார்ப்போம்’ என்றும் நினைத்துக் கொண்டான்.
“என்ன விசேஷம் பஜ்ஜி எல்லாம் கடையில வாங்கினியா??” என்று வேண்டுமென்றே கேட்டான்.
“மதியம் சாப்பிட்டது உங்களுக்கு பசிக்குமோன்னு அவசர அவசரமா செஞ்சு கொடுத்தா கடையில வாங்கின்னேன்னு கேட்கறீங்க” என்று முறைப்பாய் பார்த்தாள்.
அவன் பதில் சொல்லும் முன் “பாவை அங்க யாருகிட்டம்மா பேசிட்டு இருக்கே??” என்ற குரல் உள்ளிருந்து கேட்டது.
“உங்க மாப்பிள்ளை வந்திருக்காரும்மா” என்றாள்.
சிவாவும் துண்டை தோளில் போட்டுக்கொண்டு மரியாதை நிமித்தம் அவரை உள்ளே சென்று பார்த்து வந்தான்.
“எப்படியிருக்கீங்க அத்தை??”
“நல்லாயிருக்கேன்…”
“சீக்கிரமே எழுந்து நடமாடிடணும் நீங்க??” என்றான் அவன்.
“கண்டிப்பா நீங்க எல்லாரும் பக்கத்துல ஆதரவா நிக்கும் போது எனக்கும் நம்பிக்கையா தான் இருக்கு…”
“ஏன் அத்தை நீங்க உள்ளவே தான் இருக்கணுமா… அப்படியே வெளிய ஹால்க்கு வந்து உட்காருங்களேன்…”
“என்னால முடியாதுங்களே…” என்றார் அவர்.
“பாவை…” என்றழைத்தான் அவன்.
“கொஞ்சம் ஹெல்ப் பண்ணு… உள்ள ரூம்ல ஒரு ஒத்தை கட்டில் இருக்குல, அதை எடுத்து வந்து நான் ஹால்ல போடுறேன்… நீ அத்தைக்கு மேல கொஞ்சம் மெத்துன்னு இருக்க மாதிரி விரிச்சு விடு”
“அப்புறம் அவங்களை கூட்டி வந்து ஹால்ல படுக்க வைப்போம்” என்றவன் சொன்னது போலவே உள் அறையில் இருந்த கட்டிலை வெளியில் கொண்டு வந்து போட்டான்.
பாவை அவன் செய்வதெல்லாம் கொஞ்சம் வியப்பாய் தான் பார்த்திருந்தாள்.
இருவருமாய் ஆளுக்கொரு புறம் பிடித்துக்கொள்ள அவரை தாங்கி வந்து வெளியில் படுக்க வைத்தனர்.
முதலில் கூச்சப்பட்ட மகேஸ்வரியிடம் உங்கபிள்ளை மாதிரி நானு என்னை பிடிச்சு எழுந்திருங்க என்று அவன் சொல்லவும் மறுக்காமல் எழுந்திருந்தார்.
“அத்தைக்கு பிடிச்சதை டிவில போட்டு விடு” என்று மனைவியிடம் சொல்லிவிட்டு அவன் அறைக்கு சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் மகேஸ்வரி மருமகனின் புராணத்தை மகளிடம் படித்துக் கொண்டிருந்தார். எப்போதும் சிடுசிடுப்பாய் கேட்பவள் ஏனோ இன்று அமைதியாய் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
சிவா எப்போதும் போல் அவளை கூவி கூவி அழைத்தெல்லாம் தொல்லை செய்யாமல் அமைதியாகவே இருந்தான்.
அதற்கு பாவையும் ஒரு காரணம், அவள் அவனையும் விட அமைதியாய் அவன் சொல்லும் முன்னே அனைத்தும் செய்துக் கொண்டிருந்தாள்.
இரண்டு நாட்கள் சென்றிருக்கும் அன்று ஞாயிற்றுக்கிழமை கடைக்கு செல்ல வேண்டும் என்று கிளம்பினாள் அவள்.
அப்போது தான் ஒன்று உரைத்தது அவளுக்கு. மாருதி அவளிடம் பணம் எதுவும் கொடுக்காமலே கிளம்பிச் சென்றது. சென்ற வாரம் கொடுத்தது செலவழிந்து போனது.
நேற்று தான் ஒன்றாம் தேதி பிறந்திருந்தது. எப்போதும் அவன் சம்பளம் வாங்கிய தேதி அன்று பணத்தை வீட்டில் எடுத்து கொடுத்துவிடுவான்.
அவள் அங்குமிங்கும் துழாவ அகப்பட்டது நூறு ரூபாய் மட்டுமே. என்ன செய்ய என்றே அவளுக்கு புரியவில்லை. சிவாவிடம் சென்று கேட்க தயக்கம் வேறு.
வேறு வழி தோன்றாமல் அவர்கள் அறை நோக்கிச் சென்றாள். “நான் கடைக்கு போயிட்டு வர்றேன்” என்றாள் மொட்டையாய்.
“என்ன வேணும்ன்னு சொல்லு நான் போய் வாங்கிட்டு வர்றேன்” என்றான் அவன்.
“இல்ல உங்களுக்கு கடை தெரியாதே…”
“அதெல்லாம் கேட்டுட்டு போய்டுவேன்”
“இல்லை வந்து… நானே… நானே போய்க்கறேன்”
“சரி போயிட்டு வா…” என்று சொல்ல அவன் எதுவாவது கேட்பான் என்று நினைத்தவள் அதற்கு மேல் அவன் ஒன்றும் சொல்லாது போனதும் சரி என்று திரும்பப் போனாள்.
என்ன யோசித்தானோ “ஒரு நிமிஷம்” என்றிருந்தான் இப்போது.
“என்ன??”
அங்கு மாட்டியிருந்த அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து இரண்டு ஐநூறு ரூபாய் தாளை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அந்த நிமிடம் அப்படியே தான் பூமியினுள் புதைந்து போக மாட்டோமா என்றிருந்தது அவளுக்கு. தான் அவ்வளவு அவமானம் செய்தும் இப்படியெல்லாம் கூட ஒருவனுக்கு யோசிக்க தெரியுமா என்று அவளைக் குறித்தே அவளுக்கு அவமானமாக இருந்தது.
அவனைப்பற்றிய தன் கணிப்பு எங்கோ எப்படியோ தவறியிருக்கிறது என்று புரிந்தது. கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பது அக்கணம் அவள் உணருவதாய்.
“நீங்களும் வாங்க…” என்றாள் அவன் கொடுத்ததை வாங்காமல்.
அவளை ஏற இறங்க பார்த்தவன் “திடிர்ன்னு என்னாச்சு?? அப்போ அத்தையை யாரு பார்த்துப்பாங்க??”
“என் பிரண்ட் வனஜாவோட அம்மாவை கொஞ்சம் நேரம் வந்து இருக்க சொல்றேன்”
“சரி” என்றவன் “இந்த காசை முதல்ல கையில வாங்கு” என்று சொல்லி அவள் கையில் திணித்தான்.
“அதான் நீங்க கூட வர்றீங்கல்ல…”
“அதனால” என்று திரும்பி பார்த்து அவளை முறைத்தான்.
அதிசயமாய் அவன் முறைப்பில் அடங்கியவள் “ஒண்ணுமில்லை” என்றுவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.
அன்று இரவு அறைக்கு வந்தவள் “நாளைக்கு அம்மாவை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகணும். அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டா வந்திடுவாங்க…”
“காலையில பத்து மணிக்கு அங்க இருக்கணும். போன் பண்ணி சொல்றீங்களா, நான் பண்ண மறந்துட்டேன். என் போன்ல வேற பேலன்ஸ் இல்லை” என்றாள்.
“ஏன் அவங்களை கூப்பிடணும்?? நான் கூட வரமாட்டேனா?? அவங்களே ஒரு மாசம் கழிச்சு இப்போ தான் அங்க போயிருக்காங்க தொல்லை பண்ண வேண்டாமே” என்றான்.
“இல்லை உங்களுக்கு வேலை இருக்கும். நீங்க கடைக்கு போகணும்ல”
“ஒரு நாள் கடைக்கு லீவ் விட்டா ஒண்ணும் ஆகாது”
“ஹ்ம்ம் சரி…”
“ஆஸ்பிட்டல் எங்க இருக்கு??”
“சென்னையில சாரி அண்ணாநகர்ல இருக்கு”
“வண்டி சொல்லிடவா??”
“ஹ்ம்ம் சொல்லிடுங்க” என்றாள்.
மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் வண்டி வந்துவிட அவசர அவசரமாய் எல்லாம் வண்டியில் எடுத்து வைத்தாள்.
“அம்மாவை கூட்டிட்டு போய்டலாம்” என்று அவள் உள்ளே வர இருவருமாய் சேர்ந்து அவரை தாங்க அவளால் சரியாக பிடிக்க முடியவில்லை. மொத்த பாரமும் அவள் மேல் இருந்தது போல் தோன்றியது.
“நீ வெளிய போ நான் அத்தையை கூட்டிட்டு வர்றேன்” என்றான்.
“எப்படி??”
“போ” என்றவன் “அத்தை அன்னைக்கு சொன்னது தான் என்னை உங்க பையன்னு நினைச்சுக்கோங்க” என்றவன் சட்டென்று அவரை இரு கைகளாலும் தூக்கிக் கொள்ள கண்ணில் நீர் வழிய அவனையே பார்த்திருந்தாள் பாவை…
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை
எனக்கு நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க
நான்தான் விரும்பறேன்

நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே
பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே….
இனிவரும் எந்தப் பிறவியிலும்
உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்
உன்னப் போல தெய்வமில்ல
உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அர்ச்சனைதான்
எனக்கு வேற வேலை இல்ல

Advertisement