Advertisement

அத்தியாயம் – 3

 

மூணார் என்னும் பெயருக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பது பொருளாகும் மதுரப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலி எனும் மூன்று ஆறுகள் கூடும் ஒரு வித்தியானசமான புவியியல் அமைப்பில் இந்த மலைப்பிரதேசம் அமைந்திருப்பதால் இப்பெயர் வந்துள்ளது.

 

இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டுக்கு அருகில் தான் இருக்கிறதா என்று பார்வையாளர்களை மலைக்க வைக்கும் இயற்கை எழிற்காட்சிகளைக் கொண்டுள்ள கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த ‘மூணார் மலைவாசஸ்தலம்’.

 

பிரமிக்க வைக்கும் அடுக்கடுக்கான பசுமையான மலைப்பிரதேச அமைப்புகளுடன் வீற்றிருக்கும் இந்த சுற்றுலாப்பிரதேசம் இந்தியாவின் முக்கிய புவியியல் அடையாளமான மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ளது.

 

ஒரு உற்சாகமூட்டும் குளுமையான சூழலில் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிப்பதற்கு இதைவிட ஒரு சிறந்த ஸ்தலம் இருக்க முடியாது. மலைப்பாதை, சைக்கிள் பயணம் மற்றும் மலையேற்றம் போன்ற பொழுதுபோக்குகளில் விருப்பமுள்ளவர்களுக்கு ஏற்ற பாதைகள் இங்கு ஏராளம் உள்ளன.

 

கண்களை திறந்தாலே போதும் காணுமிடமெங்கும் இயற்கையின் வண்ணக்கோலம்!!

அது சீசன் நேரம் மூணாரில் சுற்றுலாவாசிகள் அதிகம் பேர் வந்துக் கொண்டிருந்தனர். மீனாட்சி லாட்ஜ் பரபரப்பாயிருந்தது.

 

மூணாரை பற்றிய தகவல்களும் சுற்றிப்பார்க்கும் இடங்களும், வழிகளும், இன்னும் சில தகவல்களும் அடங்கிய சிறு குறிப்புகள் அடங்கிய அந்த புத்தகத்தை அங்கு தங்க வரும் அனைவருக்கும் அறை பதிவின் போது கொடுத்தான் ராகவ்.

 

சுற்றுலாவாசிகள் வருதும் போவதுமாய் கடந்த பத்து நாளாக பிசியாக ஓடிக்கொண்டிருந்தது ராகவின் பொழுது. இன்னும் கூட அதிக அறைகள் கட்டியிருக்கலாமோ என்று எண்ணும் அளவிற்கு அனைத்து அறைகளும் நிரம்பியது.

 

அன்று மாலை அவனுக்கு நிச்சயதார்த்தம், இப்போது நேரம் இரண்டு மணி. இன்னமும் அவன் அங்கிருந்து கிளம்பியிருக்கவில்லை.

 

அவன் கைபேசியின் ஓசை கேட்டு ஒரு பெருமூச்சுடன் அதை எடுத்து காதில் வைத்தான் அவன், “சொல்லுக்கா” என்றவாறே.

 

“என்னடா இன்னுமா நீ கிளம்பலை?? இன்னைக்கு உனக்கு நிச்சயதார்த்தம்டா… சென்னையில இருந்து நாங்களே கிளம்பி வந்திட்டோம்…”

 

“மாப்பிள்ளையா இலட்சணமா நீ இங்க இருந்து எங்களை வரவேற்று இருக்க வேணாமா… யாருக்கு வந்த விருந்தோன்னு உன் லாட்ஜே கதின்னு இருந்தா எப்படிடா??” என்று பொரிந்தாள் அவன் உடன்பிறந்தவள்.

 

அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவளிடமிருந்து கைபேசியை பிடிங்கிய சந்தியாவின் கணவன் முருகன் “என்ன மச்சான் பொண்ணு பிடிக்கலையா அதான் அப்படியே எஸ்கேப் ஆகிடலாம்ன்னு வராம இருக்கியா??” என்று நக்கலடித்தான்.

 

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை மாமா… இங்க சீசன் டைம் அதான் உடனே கிளம்ப முடியலை… இப்போ சண்முகம் வந்திருவாரு… நான் கிளம்பத்தான் போறேன்”

 

“எனக்கு கிடைக்காத வாய்ப்பு எஸ்கேப் ஆக உனக்கு கிடைச்சுத்துன்னு நினைச்சு சந்தோசப்பட்டேன் மச்சான்… நீ தேற மாட்டே போ…” என்று கிண்டலை தொடர்ந்தான் அவன்.

 

“ஏன் மாமா அக்கா பக்கத்துல இல்லையா… இவ்வளவு சத்தமா பேசுற மாதிரி இருக்கு… நீங்க பேசுறதெல்லாம் ரெக்கார்ட் பண்ணிட்டுக்கிட்டு இருக்கேன்…”

 

“அங்க வந்ததும் முதோ வேலையா டெலிகாஸ்ட் பண்ணிருவேன்… அப்புறம் உங்க பாடு திண்டாட்டம் ஆகிரும் பார்த்துக்கோங்க”

 

“ஏன்யா உனக்கு இந்த கொலைவெறி?? நீ இன்னுமா கிளம்பலைன்னு கேட்டது ஒரு குத்தமாய்யா… சரி சரி சீக்கிரம் கிளம்பி வந்திரு…” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான் அவன்.

ராகவ் அங்கிருந்த இருக்கையில் ஆசுவாசமாய் அமர்ந்தவன் சண்முகத்தின் வருகைக்காய் காத்திருந்தான். காலையிலேயே அவரை மார்கெட்டிற்கு அனுப்பியிருந்தான்.

 

சுற்றுலா பிரயாணிகளின் வருகையால் லாட்ஜுக்கு தேவையான உணவு பொருட்கள் எல்லாம் விரைவாய் தீர்ந்து போக அதையெல்லாம் மொத்தமாய் வாங்கி வர அனுப்பியிருந்தான்.

 

தினமும் வாங்கும் அளவைவிட அன்று சற்று கூடுதலாக வாங்க வேண்டியிருந்தது. அதனால் அவர் வரவும் தாமதப்பட்டுக் கொண்டிருந்தது.

 

இருக்கையில் இருந்து வெளியில் வந்தவன் உப்பென்றவாறே வெளிக்காற்றை ஆழ்ந்து  சுவாசித்தான். சட்டென்று ஓர் பனிபோர்வை சூழ ரம்மியமாய் அந்த பொழுதை ரசித்தான்.

 

கைபேசியை எடுத்தவன் அதிலிருந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்தான். ‘ஹாய் மேனகா டியர் இன்னைக்கு உனக்கும் எனக்கும் நிச்சயம்… நான் உன்கிட்ட போன்ல கூட பேசலைன்னு உனக்கு வருத்தமாயிருக்கலாம்’

 

‘நான் என்ன செய்ய நிச்சயம் முடிஞ்சு மணிக்கணக்கா என்ன வேணா பேசிக்கோன்னு உன் மாமியார் தடா போட்டுட்டாங்க’ என்று மனதிற்குள்ளாக பெண்ணிடம் பேசிக் கொண்டான்.

 

பெண் பார்க்க சென்ற போது அவனால் அங்கு செல்ல முடியாமல் போக அவன் வீட்டினர் தான் சென்று பார்த்து வந்திருந்தனர்.

 

பெண்ணின் புகைப்படத்தை சந்தியா தான் அவனின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்திருந்தாள். பார்த்ததுமே அவனுக்கு பிடித்து போனது, அழகான அமைதியான பெண்ணாக தோன்றினாள்.

 

தன் வீட்டிற்கு ஏற்ற பெண்ணாகவும் தன் அம்மாவிற்கு நல்ல மருமகளாகவும் இருப்பாள் என்று தோன்ற அவன் விருப்பத்தை உடனே சொல்லிவிட்டான்.

 

பெண்ணின் தகப்பனார் அவன் பெண் பார்க்க வராததால் அவனைத் தேடி நேரிலேயே வந்திருந்தார். சாதாரணம் போல் பேசினாலும் அவர் பேச்சில் பலவித குறுக்கு விசாரணைகள் இருந்ததை கண்டுக்கொண்டான் அவன்.

 

இறுதியில் அவருக்கு முழுத்திருப்தி என்ற பின்னே தான் நிச்சயத்திற்கு ஒத்துக் கொண்டிருக்கிறார் என்று அவனுக்கு தெரியும்.

 

அவன் தந்தை கூட சந்தியாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் போது இப்படியெல்லாம் விசாரித்ததை அவருடன் ஓரிரு முறை சென்ற போது கண்டுக் கொண்டிருந்தான்.

 

அதனால் அவன் மாமனார் அவனைப் பற்றி விசாரித்தபோது அவரிடம் பணிவாகவே பதில் சொன்னான். மனதிற்குள் லேசாய் ஒரு சிரிப்பும் எழுந்தது அவனுக்கு.

 

‘நீ எதுக்குமே சரியா வரமாட்டியே?? உன்னைப் போய் இப்படி சல்லடை போடுறாரே’ என்று அவனையே அவன் கலாய்த்துக் கொண்டான் அப்போது.

 

நேரம் மூன்றை கடந்து மேலும் அரை மணி நேரம் சென்றிருந்தது. சண்முகத்திற்கு அழைக்க அவர் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

 

லேசாய் ஒரு பதட்டம் எழ உடன் சென்ற வண்டியின் டிரைவருக்கு அழைத்தான். நல்ல வேலையாக இரண்டு மணி அடித்து முடிப்பதற்குள் அவர் போனை எடுத்திருந்தார்.

 

“என்னாச்சுண்ணே எங்க இருக்கீங்க… சண்முகம் இல்லையா, அவர் போன் சுவிட்ச் ஆப்ன்னு வருது” என்று கடகடவென்று பேசினான்.

 

“தம்பி… தம்பி… ஒரு நிமிஷம்…”

 

“என்னண்ணே??”

 

“இங்க ஏதோ பாறை உருண்டிருச்சு தம்பி நாங்க வர்றதுக்கு இன்னும் ஒரு அரை மணி நேரம் ஆகும் போல… இப்போ தான் அதை சரிபண்ணிட்டு இருக்காங்க தம்பி. சண்முகம் போன் சார்ஜ் இல்லை, இருங்க அவர்கிட்ட கொடுக்கறேன்” என்று போனை சண்முகத்திடம் கொடுத்தார் அவர்.

“சொல்லுங்க ராகவ்…”

 

“என்னாச்சு சண்முகம்?? ரொம்ப லேட் ஆகுமா… இன்னைக்கு என்ன நாள்ன்னு உங்களுக்கு தெரியும்ல… வீட்டில இருந்து போன் மேல போன் போட்டுட்டு இருக்காங்க…”

 

“நீங்க வராம நான் இங்க இருந்தும் நகர முடியாது… என்ன செய்ய??” என்றான் அவரிடமே.

 

“ஒண்ணும் பதட்டம் வேண்டாம் ராகவ்… நாங்க எப்படியும் அரை மணி நேரத்தில வந்திடுவோம்… நீங்க ரெடியா இருங்க… நான் வந்ததுமே கிளம்பிடுங்க…”

 

“நான் உங்களுக்கு திரும்ப பத்து நிமிஷத்துல கூப்பிடுறேன்… லேட் ஆகுற மாதிரி இருந்தா நீங்க நம்ம அக்கவுண்ட்ஸ் பார்த்துக்கற ராஜுகிட்ட போன் பண்ணி சொல்லுங்க…”

 

“அவன் நான் வர்ற வரைக்கும் இருப்பான்… நான் வந்ததும் அவனை ரிலீவ் பண்ணிடறேன்”

 

“என்ன சண்முகம் இப்படி?? லாஸ்ட் மினிட்ல எனக்கு என்ன செய்யன்னு தெரியலை… இங்க இவ்வளோ கெஸ்ட் இல்லைன்னா எனக்கு பிரச்சனையில்லை”

 

“நான் நம்ம கிட்சன் ஹெட் மணிகிட்டவே சொல்லிட்டு போயிருவேன்… இங்க கெஸ்ட் ஏதாச்சும் கேட்டா கூட வேற யாரும் ஒழுங்கா பதில் சொல்லிக்க மாட்டாங்க…”

 

“உங்களுக்கு தெரியும் ராஜுக்கு இங்கிலீஷ் சரியா பேச வராதுன்னு… இப்போ வந்திருக்கற கெஸ்ட் பாதி பேரு இங்கிலீஷ் மட்டும் தான் பேசுறாங்க…” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் அவன்.

 

சண்முகத்திற்கும் நிலைமை புரிந்தது ஆனால் அவனும் தான் என்ன செய்வான். “சரி சண்முகம் நான் வெயிட் பண்ணுறேன், நீங்க எனக்கு திரும்ப போன் பண்ணுங்க… பேலன்ஸ் இல்லைன்னா மிஸ்டுகால் விடுங்க நானே செய்யறேன்” என்றுவிட்டு போனை வைத்தான்.

 

‘சீக்கிரமே இன்னொரு நம்பிக்கையான ஆளு நம்ம லாட்ஜ்க்கு எடுக்கணும்’ என்ற எண்ணம் மனதில்.

 

ஏனெனில் சண்முகத்திற்கும் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. இன்னும் பத்து நாளில் அவனுக்கு திருமணம், எப்படியும் ஒரு மாதத்திற்கு அவன் அவ்வப்போது விடுப்பு எடுப்பான் என்பதை அறிவான்.

 

சண்முகத்திற்கு மூணார் தான் சொந்த ஊர்… ராகவின் தந்தை காலம் தொட்டே அவர்கள் குடும்பம் நல்ல பழக்கம் இவர்களுக்கு. சண்முகத்தின் தந்தை சொல்லித்தான் அவன் இங்கு சேர்ந்தான்.

 

சண்முகம் மிகவும் நம்பிக்கையானவன் என்பதாலும் அதே ஊர் என்பதாலும் எந்த நேரம் அழைத்தாலும் உடனே வந்து தனக்கு உதவுவான் என்பதாலும் அவன் இன்றுவரை அந்த லாட்ஜில் பணி புரிகிறான். ராகவிற்கு அடுத்ததாய் அந்த லாட்ஜில் அவன் மிக முக்கியமானவன்.

தன் திருமணமும் எப்படியும் இன்னும் மூன்று மாதத்தில் வைத்துவிடுவார்கள் என்று அவனுக்கு தெரியும். சண்முகமும் அப்போது புது மாப்பிள்ளையாய் இருப்பான்.

 

அதனால் நல்ல ஆளை விரைந்து பிடிக்க வேண்டும் தாங்கள் இல்லாத சமயத்தில் பார்த்துக்கொள்ள என்று எண்ணிக்கொண்டே அவன் அன்னைக்கு அழைத்தான் அவன்.

 

போனை எடுத்த மீனாட்சியோ “எங்க இருக்கே ராகவா?? பக்கத்துல வந்திட்டியா??” என்று தான் கேட்டார்.

 

“அம்மா நான் இன்னும் கிளம்பவேயில்லை…” என்றவன் தன் சூழ்நிலையை விளக்க அவருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.

 

“ஏன் ராகவா யாரையாச்சும் பார்த்துக்க சொல்லிட்டு கிளம்பி வாயேன்… எல்லாரும் சேர்ந்து போனா தானே நல்லாயிருக்கும்…”

 

“அம்மா நீங்க எல்லாம் முதல்ல கிளம்புங்க… பொண்ணு வீட்டு அட்ரஸ் தான் எனக்கு தெரியுமே… நான் இங்க இருந்து நேரா அங்க வந்திடறேன்ம்மா…”

 

“உன் டிரஸ் எல்லாம் இங்க இருக்கேப்பா…”

 

“இங்கயும் என்னோட புது டிரஸ் எல்லாம் இருக்கும்மா… நான் வந்திடறேன், எனக்காக நீங்க காத்திட்டு இருக்க வேண்டாம்…”

சண்முகம் வந்து சேர கிட்டதட்ட மணி நாலேகால் ஆகிப்போனது. அவர் வந்ததும் ராகவ் பொறுப்பை அவரிடம் மாற்றிவிட்டு அவனறைக்கு சென்று குளித்து தயாரானான்.

 

வெளியில் வந்தவனை அனைவருமே கொஞ்சம் வியப்பாய் தான் பார்த்தனர். மடிப்பு கலையாமல் லேசான கரையில் அழகாய் உடுத்திய வெள்ளை வேட்டி, கரையின் நிறமான கனகாம்பர நிறத்தில் சட்டை என்று வந்தான்.

 

சண்முகமோ “கலக்குறீங்க மாப்பிள்ளை… ஜோர் ஜோர்… போயிட்டு வாங்க…” என்று விடைக் கொடுக்க லேசாய் புன்னகைத்தவாறே வெளியில் வந்து தன் ஜீப்பை எடுத்தான் ராகவ்.

 

ஏனோ வண்டியில் ஏறியதும் உள்ளே ஒரு உற்சாக ஊற்று சுரந்தது அவனுக்கு. பெண்ணை நேரில் பார்க்கும் ஆர்வமும் எதிர்ப்பார்ப்பும் போட்டி போட்டது அவனுக்குள்.

 

மெதுவாய் செந்தாழம் பூவின் பாடலை ஒலிக்கவிட்டு உடன் விசிலடித்துக் கொண்டே வண்டியை ஓட்ட அடுத்த இரண்டு மணி நேரத்தில் பெண்ணின் வீடு இருக்கும் இடமான போடி மெட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான்.

 

கிளம்பும் முன் வீட்டினருக்கு போன் செய்து சொல்லியிருந்தான். வீட்டிற்கு அருகே நெருங்கிய போது முருகனுக்கு அழைத்து வெளியே வந்து காத்திருக்க சொன்னான்.

 

ஏனோ தனியே உள்ளே செல்ல ஒரு சங்கோஜம் வந்தது அவனுக்கு. பெண் வீடு இருக்கும் முக்கிலேயே காத்திருந்த முருகனை ஏற்றிக் கொண்டு பெண் வீட்டு வாயில் வந்து இறங்கினான்.

 

“நீ உள்ள போ மச்சான். வண்டியை நான் ஓரமா பார்த்து நிறுத்திட்டு வர்றேன்” என்று சொல்லி ராகவிடம் வண்டி சாவியை பெற்றுக்கொண்டு அவனை உள்ளே அனுப்பி வைத்தான் முருகன்.

 

“சரி மாமா…” என்றுவிட்டு அவனும் இறங்கிச் சென்றான்.

 

அதற்குள் அங்கு கூடியிருந்தவர்கள் தங்களுக்குள்ளாக மாப்பிள்ளை வந்துட்டாருப்பா… சரவணன் நல்ல மாப்பிள்ளையை தான் பிடிச்சிருக்கான், நல்லாதேன் இருக்காரு… என்பது போன்ற பேச்சுகள் காதில் விழுந்தது அவனுக்கு.

 

மனதிற்குள் லேசாய் மகிழ்ச்சி சுரக்க முன்னே நடந்தவனை பெண்ணின் தந்தை சரவணன் வாயிலிலேயே நின்றிருந்தார் வரவேற்கவென…

 

அவருக்கு இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தவாறே லேசாய் ஒரு புன்னகை சிந்தினான்.

 

“வாங்க… வாங்க… ரொம்ப சிரமப்பட்டீங்களா வழி கண்டுப்பிடிக்க…”

“அதெல்லாம் இல்லைங்க… மாமா வழி சரியா சொன்னாங்க அதைக்கேட்டு கரெக்டா கண்டுப்பிடிச்சிட்டேன்”

 

“சரி உள்ள வாங்க… உங்களுக்காக தான் காத்திட்டு இருந்தோம்… நல்ல நேரம் முடியறதுக்குள்ள ஆரம்பிச்சிடலாம்” என்று சொன்னவர் “சத்யன் எங்க போயிட்டே??” என்று குரல் கொடுத்தார்.

 

“சித்தப்பா இங்க இருக்கேன்…” என்று முன்னில் வந்தான் அவன்.

 

“மாப்பிள்ளையை கூட வா…” என்றவர் “இவன் சத்யன் என் அண்ணன் பையன்…” என்று அறிமுகம் செய்தார். அவனுக்கு இதழ் விரித்து ஒரு புன்னகை கொடுத்து அவனுடன் நடக்க வேகமாய் ஓடி வந்தாள் ஒரு பெண்.

 

“அப்பா இந்த மாப்பிள்ளை எப்போ தான் வருவாரு… இப்படி நேரத்தை கடைப்பிடிக்க தெரியாதவரை எங்க இருந்து தான் மாப்பிள்ளையா பிடிச்சீங்க நீங்க…” என்றவாறே சரவணனின் முன் நின்றது ஜெயக்னா…

 

மெல்லிய குரலில் அவள் தந்தையிடம் சொன்னாலும் பின்னால் வந்த ராகவின் காதில் அந்த பேச்சு ஸ்பஷ்டமாய் விழத்தான் செய்தது.

 

“உன்னை யாரு இப்போ இங்க வரச்சொன்னா?? வர வர உனக்கு வாய் கூடிப்போச்சு… கொஞ்சம் வாயை மூடிட்டு வா, மாப்பிள்ளை பின்னாடி வர்றார்” என்று அடிக்குரலில் மகளை கண்டித்தார் சரவணன்.

அவள் மெதுவாய் திரும்பி பின்னால் பார்த்தவள் சத்தியமாய் அங்கு ராகவை எதிர்பார்க்கவில்லை.

 

ஜெயக்னாவை கண்டதுமே அவன் முகம் ஒரு நொடி சுருங்கி பின் இயல்பகியது. அவளுக்கோ அவனை கண்டதும் பார்வையில் அனல் கக்கியது…

 

“நீங்க தப்பா எடுத்துக்காதீங்க… ஜெயா எப்பவும் இப்படி தான் பட்டுப்பட்டுன்னு பேசிடுவா…” என்று ராகவின் முகம் போன போக்கைக் கண்டு அவனை சமாதானப்படுத்தும் விதமாய் சத்யன் பேசினான்.

 

அவனுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை, ஒன்றும் பேசாமல் நேராய் உள்ளே சென்றான் அவன்…

 

நீ இன்று

நானாகவில்லை

நான் இன்று

நீயாகவில்லை

நாம் ஒன்று

சேர்த்திருக்கவில்லை

சேரும் நாள்

வெகு தொலைவிலில்லை!!

 

 

Advertisement