Advertisement

அத்தியாயம் பதினான்கு :

காலையில் துளசி எழுந்த போது திரு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, சில நொடிகள் பார்த்திருந்ததவள் மகளை தேடிச் சென்றாள்.

பின்பு மகளுக்கு தேவையானதை எல்லாம் கவனித்து அவளும் குளித்து வந்த போது நேரம் ஒன்பதை நெருங்கியிருந்தது.

அகிலாண்டேஸ்வரி துளசியிடம், “நான் சொன்னதை கேட்டியா?” என்றார்.

விழித்தாள், அது அவளின் ஞாபகத்திலேயே இல்லை, அவளின் முகத்தை பார்த்தே கேட்கவில்லை என்று கண்டு கொண்டவர், “என்ன துளசி மூணு நாள் ஆச்சு, நாம இன்னும் விஷேஷதுக்கு நாள் குறிக்கலை, எங்கே அவன்?”

“தூங்கறாங்க”  

“என்ன இன்னுமா தூங்கறான்? எழுப்பு அவனை, கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை” என்று ஏகத்திற்கும் சத்தமிட,

“உங்களுக்கு இப்போ என்ன வேணும்?” என்று எழுந்து வந்திருந்தான் திரு.

“அது இன்னும் நாள் குறிக்கலை, எங்கே பண்ண போறோம்? வீட்லையா? மண்டபத்துலையா? எதுவும் பேசலை!”

“ராதாக்கு பண்ணும் போது யார்கிட்ட கேட்டீங்க? நீங்க தானே பண்ணியிருப்பீங்க, இப்போ எதுக்கு என்னை தொந்தரவு பண்றீங்க. நான் முன்னமே உங்களுக்கு என்ன தோணுதோ செய்ங்கன்னு சொல்லிட்டேன்!”  

“டேய், நீங்க அப்பா அம்மாடா உங்களுக்கு ஆசை இருக்காதா?”

“எனக்கில்லை, உனக்கு இருக்கா?” என்று துளசியைப் பார்த்து அதிகாரமாகக் கேட்டான்.

இரு கைகளையும் ஆட்டி சிறு குழந்தை போல அவசரமாக “இல்லையில்லை” என்றாள். அவள் சொன்ன விதம் திருவிற்குள் கடுப்பை கிளப்பியது. என்ன பண்றேன் நான் இவளை இப்படி பதில் சொல்றா என்று! அவ்வளவு கொடுமை படுத்தறேனா? இவ தான் என்னை படுத்தி எடுக்கறா? அவளை முறைத்தவன் பின்பு அம்மாவின் புறம் திரும்பி,  

“ம்ம், கேட்டுக்கிட்டீங்க தானே செய்ங்க, அதை விட்டு சும்மா அதட்டி உருட்டி எப்போ பார்த்தாலும் சண்டை இழுத்துட்டே இருந்தீங்க..” என்றவன், “வீட்டுக்கு வரவே எரிச்சலா இருக்கு” என்று கத்திச் சென்றான்.

மேகநாதனும் அங்கே தான் இருந்தார், வெங்கடேஷ் ஷோபனா என அனைவரும்!

அவனின் வார்த்தைகளில் துளசியின் முகம் சுருங்கிவிட, சமையலைறைக்கு மகளுக்கு உணவு எடுப்பதற்காகச் சென்றாள்.

“சும்மா அவனை ஏன் தொந்தரவு பண்ற? நம்மை தான் செய்ய சொல்லிட்டானே விடு!” என்று மேகநாதன் அதட்ட,

“பாட்டி, அப்பா கோபமா இருக்கும் போது பேசாதீங்க!” என்று மீனாக்ஷி பெரிய மனுஷியாய் சொன்னாள்.

“ஆனாலும் ரொம்ப தாண்டி உங்கப்பன் கத்துறான்” என நொடித்தார் அகிலாண்டேஸ்வரி.

உணவை எடுத்துக் கொண்டு போய் மகளுக்கு உணவை ஊட்ட ஆரம்பித்தாள்.

துளசி இல்லாத போதும் அகிலாண்டேச்வரி எதற்காவது சண்டை பிடித்துக் கொண்டே இருப்பார், இன்று அப்படி பேசவும் கத்திவிட்டான். “வீட்டுக்கு வரவே எரிச்சலா இருக்கு” என்ற வார்த்தை அது அகிலாண்டேஸ்வரியை கொண்டு, துளசியை கொண்டு இல்லை, துளசி இல்லாத வீட்டை கொண்டு!

ஆனால் திருவின் வார்த்தைகள் துளசியை காயப்படுத்த அதில் உழன்றவள், கணவன் எழுந்து விட்டான், அவனுக்கு காஃபி கொடுக்க வேண்டும் என்பதை மறந்து விட்டாள்.

நேரமாகி விட்டதால் விரைவாக குளித்து தயாராகி உணவு மேஜைக்கு வந்தவன், துளசி மகளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருப்பதை பார்த்தான். அவனுக்கு அன்று அந்த ப்ரோகர்களை சந்திக்க வேண்டி இருந்தது, இன்னும் ஒரு மாதம் டைம் கேட்கச் சொல்ல, அதனால் துளசி வேலையாய் இருப்பதை பார்த்ததும் அவன் வெளியில் கிளம்பிவிட்டான்.

எப்போதும் யாரிடமும் சொல்லிக் கொள்ளும் வழக்கமில்லை, ஆனால் துளசி பார்க்கும் போது தான் வெளியில் கிளம்புவான், இன்று எதுவும் ஞாபகமில்லை, துளசி இதனை கவனிக்கவில்லை!

மகளுக்கு ஊட்டி முடித்து வந்து கணவனை தேட, அவனை காணவில்லை!

வெளியில் வந்து அவனின் பைக்கை பார்க்க அதுவுமில்லை, மனதிற்கு மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது! ஆனால் சற்று நேரத்தில் எல்லோரும் வந்து விடுவர் என்று புரிந்து, அதற்கு ஏதுவாக வேலைகள் செய்ய ஆரம்பித்து விட்டாள்.

ஆனாலும் மனதில் ஒரு வெறுமை சூழ்ந்து விட்டது. வேலைகள் இயந்தர கதியில் நடக்க, அவளின் முகத்திலும் ஒரு புன்னகை ஒட்டிக் கொண்டது. எல்லோரும் இருக்கும் போது அகத்தின் அழகை முகத்தில் காட்டவிடவில்லை அவளின் முகம்!

அன்று மீனாக்ஷியை அலங்கரித்து புகைப்படம் வேறு எடுத்தனர். ரத்னா வந்தவர் மீனாக்ஷியுடன் இருக்க, அவளின் அத்தைகள் அவளை ஒரு வழியாக்கி கொண்டிருக்க, எல்லாவற்றையும் ஒரு சிறு புன்னகையுடன் பார்த்திருந்தாள். அதிகம் துளசி யாரிடமும் பேசியதில்லை, அவளிடமும் யாரும் பேசியதில்லை என்பதால், என்ன ஏதென்ற பேச்சுக்கள் எப்போதும் போல!

மேகநாதனும் அகிலாண்டேஸ்வரியும் மற்ற இரு வீட்டினருடனும் கலந்து பேசி, மண்டபம் நாள் என குறித்தனர். வெங்கடேஷிடம் விருந்தின் பொறுப்பை ஒப்படைத்து, அழைப்பை அவர்கள் பார்க்க முடிவெடுத்தனர்.

நாள் முழுவதும் அதில் ஓட, என்ன தான் வேலைகள் நடந்து கொண்டிருந்தாலும் துளசியின் மனதில் திரு திரு திரு மட்டுமே!

அன்றும் மதியம் உணவிற்கு வரவில்லை, காலையில் உண்ணாமல் சென்று விட்டான் என்பதை ஞாபகத்தில் கொண்டு மதியம் வருகிறானா என்று சிறிது நேரம் பார்த்தவள், அவனை கேட்காமலேயே உணவை ஆட்களிடம் கொடுத்து விட்டாள்.

உண்டானா, இல்லையா என்ற ஞாபகம் தான்!

மேகநாதன் “வேலா நீயும் ரத்னாவும் இங்க இருக்கீங்க, நாங்க சென்னை போய் எப்படி அழைக்க?”

“தேவையில்லைங்கய்யா பிரசன்னாக்கு ஃபோன்ல சொல்லிடுங்க, இங்க நாங்க என்ன பண்ணனும் சொல்லுங்க?” என்றார் அவர்.

வீட்டுக்குள் எல்லாம் சகஜமாக வரமாட்டார் ரத்னாவை போல. உள்ளே வந்து ஓரிரு வார்த்தைகள் பேசியபின், அங்கே வீட்டின் முன் இருந்த வராண்டாவில் தான் ஒரு சேர் போட்டு அமர்ந்தே இருப்பார். எப்போது இங்க வந்தாலும் அப்படி தான்!

எப்போதுமே வேலைக்காரன் என்ற எல்லைக்குள் தான் நிற்பார். ஆனால் ரத்னா அப்படி கிடையாது. அவர் யாரும் பேசினால் பேசுவார், பேசாவிட்டாலும் முறுவலுடன் கடந்து விடுவார். மொத்தத்தில் இருவரிடமும் எந்த குறையும் தெரியாது.

இப்படியாக தொலைபேசியில் சொல்லி, இங்கே பெரியவர்கள் ஜரூராக வேலையை ஆரம்பித்து விட, துளசிக்காவது நடப்பது தெரியும், திருவிற்கு அது கூட தெரியாது!

இரவு தான் வீடு வந்தான், அவனை பார்த்ததுமே களைப்பாக இருப்பது தெரிய, “மதியம் சாப்பிட்டீங்களா?” எனக் கேட்டாள்.

அதற்கு பதில் சொல்லாமல் படியிறங்கி சென்று, அவனின் பைக்கில் மாட்டி இருந்த பையை எடுத்து வந்து அவளிடம் நீட்டி ரூமின் உள் போய்விட…. 

அவள் அதனை எடுத்து வைத்து பார்க்க உண்டிருந்தான். பின்பு அதனை கழுவ போட்டுவிட்டு வர, உறங்கும் மகளை நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் மீனாட்சியை நேற்று இரவும் பார்க்கவில்லை. இன்று காலையில் அவள் விழித்து இருந்த போதும் கவனித்து பார்க்கவில்லை. இப்போதும் உறங்கி விட்டாள், இன்று அகிலாண்டேஸ்வரி கூட உறங்கி விட்டார்.

அவன் நின்று பார்ப்பதை துளசி நின்று பார்த்தாள். பின்பு உணவு மேஜைக்கு வந்து அமர்ந்தவனிடம் உணவை வைக்க, “எதுவும் வேண்டாம் இட்லி மட்டும் போதும்” என்றான்.

ஆம்! நிறைய பதார்த்தங்கள் இருக்க, அதனை வைக்க போனவளிடம் இதனை சொல்ல,

“இவ்வளவு இருக்கு, எல்லாம் இல்லைனாலும் கொஞ்சம் ருசி பார்க்கலாம்” என்றாள்.

“வேண்டாம், ருசியா சாபிடற அளவுக்கு எனக்கு மூடில்லை!” என்றுவிட,

அவன் கேட்டதை வைத்தவள் அவளும் இட்லி வைத்து கொண்டு அமர்ந்தாள்.

அதனை பார்த்தவன் முறைத்தான், “என்னை நீ நிம்மதியாவே இருக்க விடமாட்டியா?” என்று அடிக் குரலில் சீற,

“இப்போது என்ன?” என்று புரியாமல் பார்த்தவளிடம்,

“உனக்கு சாப்பிடறதுக்கு என்ன? ஒழுங்கா எல்லாத்துலையும் டேஸ்ட் பாரு!” என்று அதட்டினான்.

“இல்லை, எனக்கும் வேண்டாம்”  

“என்னை டென்ஷன் பண்ணாத துளசி” என்று விருட்டென்று நாற்க்காலியில் இருந்து எழுந்து விட,

அவன் எழுந்த வேகத்திற்கு பயந்து விட்டவள், “இல்லையில்லை சாப்பிடறேன்” என்று ஒவ்வொன்றாக எடுத்து அவளின் ப்ளேட்டில் வைத்துக் கொள்ள, நிச்சயம் அவளால் அதனை உண்ண முடியாது என்று திருவிற்கு தெரிந்து போனது. 

அவளையே பார்த்திருக்க, வேகமாக அதனை உண்ண ஆரம்பித்தாள். நான்கு வாய் உள்ளே போனதும் வேகம் குறைய, அதற்கு பிறகு இரண்டு வாய் உள்ளே போனதும், அதுவும் நின்று போக உணவை அளக்க ஆரம்பித்தாள். 

எதுவும் பேசாமல் என்ன தான் செய்கிறாள் பார்ப்போம் என்று பார்த்துக் கொண்டிருந்தான் அவனும் உண்ணவில்லை.

சிறிது நேரம் கழித்து தலையை தூக்கி பார்க்க, திரு சாப்பிடாமல் இருப்பது புரிய,

மீண்டும் அவளின் உணவை எடுத்து வேகமாக வாயினில் வைக்க போக, அவளின் கை பிடித்து தடுத்தவன், அவளின் தட்டை தன் புறம் நகர்த்தி உண்ண ஆரம்பித்தான்.

அவனின் செய்கையை விழி விரித்து துளசி பார்க்க, அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உணவை காலி செய்து விட்டான்.

“இன்னும் கொஞ்சம் வைக்கவா” என துளசி கேட்க,

“நீ இன்னும் சாப்பிடலை”  

“இப்போதானே சாப்பிட்டேன்”

பதில் பேசாமல் திரு பார்க்க,

“என்னவோ சாப்பிட முடியலை” என்று துளசி சொல்ல,

“சரி, இந்த இட்லி மட்டும் சாப்பிடு” என்று அவனின் தட்டில் இருந்த இட்லியைக் காட்ட, “அதுல ரெண்டு மட்டும் போதும்” என்று சொல்லி உண்டாள்.

“இவ்வளவு லேட் நைட் சாப்பிடாதே, மீனாக்ஷி சாப்பிடும் போதே சாப்பிட்டிட்டிடு”

“நீங்க சீக்கிரம் வர முடியாதா?”

திரு அமைதியாக இருக்க, முயன்று “ப்ளீஸ் வாங்களேன்” என்றாள் கெஞ்சல் குரலில்.

அந்த குரல் திருவை எதோ செய்ய, காலையில் பயம் கொள்கிறாள், இப்போது கெஞ்சுகின்றாள், “துளசி என்ன பேசற?” என்றான் இறுகிய குரலில்.

அவனின் அந்த குரலில் துளசி அமைதியாகிவிட, எழுந்து சென்று விட்டான்.

படுக்கையறையில் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவனிடம் சென்று பாலை நீட்ட,  

“நீ குடிச்சியா?” என்றான்.

“குடிச்சிட்டேன்” என்பது போல தலையை அசைத்தாள்.

“இனிமே இங்கே எடுத்து வந்து என் முன்னே குடி, இப்போ இதை குடி!”  

“வேண்டாம்” என்று மறுக்க,

“குடின்னு சொன்னேன்!” என்று அதட்டினான்.

வாங்கி குடித்து, உடனே படுத்துக் கொண்டாள். அவளின் முகம் மிகவும் சோர்ந்து இருந்தது, உடல் அசதியோ, மன அசதியோ, படுத்த சில நிமிடங்களில் உறங்கியும் விட்டாள்.

என்ன செய்தாலும் பொறுத்துப் போகும் துளசி என்பதனையும் விட, என்ன செய்தாலும் எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளாத துளசி, இது தான் திரு அறிந்த துளசி!

பேசாத போது, முகம் பாராத போது எல்லாம் அதனை அமைதியாக கடந்து விட்டவள், இப்போது ஏன் இப்படி என்று திருவிற்கு புரியவில்லை.

ஆம், திருவிற்கு புரியவில்லை! துளசி அவன் பிடிக்காமல் இப்படி நடக்கிறான் என்று நினைத்திருக்க, இல்லையில்லை பிடித்தும் இப்படி நடக்கிறான் என்று தெரிந்த உடனேயே அவளின் மனதில் எங்கோ ஓர் இடத்தில் அமிழ்ந்து கிடந்த எதிர்பார்ப்புகள் கடல் அலையாக பொங்க ஆரம்பித்து விட்டது.

அவனின் அருகாமைக்கும், அவனின் பேச்சிற்கும் அவனின் மூச்சு காற்று முகத்தில் மோதுவதற்கும் மனம் வெகுவாக ஏங்க ஆரம்பித்து விட்டது.

உறங்கும் அவளை எப்போதும் போல சிறிது நேரம் பார்த்து இருந்தவன், பின்பு உறங்கி விட்டான்.

காலையில் அன்று விரைவில் விழித்து விட, அன்று பார்த்து துளசி இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள். எழுந்து வெளியில் வந்த போது ஹாலில் அகிலாண்டேஸ்வரியும் மேகநாதனும் தான் அமர்ந்து இருந்தனர்.

“திரு” என்று அம்மா அழைக்க, மீனாட்சியை பார்த்து நின்றிருந்தான் அவளும் உறக்கத்தில்!

“திரு” என்று சத்தமாக அகிலாண்டேஸ்வரி அழைக்க,

“கத்தாதீங்க, மீனாக்ஷி எழுந்துக்க போறா!”  

“அடேய், எழாம பின்ன தூங்கிட்டேவா இருப்பா! நீ வா!” என்று அதட்டினார்.

“என்ன இப்போ?” என்றபடி அவனும் முறுக்கி கொண்டு அமர்ந்தான்.

என்றைக்கு விஷேஷம் வைத்திருக்கிறது, எந்த இடத்தில், அதற்கு முன்தினம் வீட்டினில் புண்ணியாதானம் என்று அவர் விவரம் சொல்ல, எல்லாம் கேட்டு அமர்ந்திருந்தான்.

“உனக்கு உன்னோட ஆளுங்கல்ல யாரையாவது கூப்பிடணுமா?”

“இல்லை, வேண்டாம்! அது ரொம்ப பெரிய கூட்டம். அப்புறம் ஆளுங்க அதிகமாகிடுவாங்க. எனக்கு யாரையும் கூப்பிடறதுல விருப்பமும் இல்லை. சொந்தம்னா அது வேற, என்னைக் கேட்டா இந்த மாதிரி விஷேஷமே தேவையில்லை சொல்லுவேன்” என்று ஆரம்பித்தான்.

“ஷ்” என்றவர், “நீ யாரையும் கூப்பிடலைல்ல அதோட விடு!” என்றார்.

“ஆனாலும் நீ ரொம்ப தான் பண்றம்மா” என்று முறைத்தான் திரு.

“பின்ன ஒத்த பேத்தியை வெச்சிருக்கோம், விட்டுடுவோமா, போடா டேய், போடா!”

“என்னவோ பண்ணு, நான் என்ன வேலை பண்ணனும்?”

“ஒன்னும் வேண்டாம், எல்லாம் நாங்க பார்த்துக்கறோம்! தயவு செஞ்சு நீ வீட்டுக்கு விஷேஷதுக்கு எல்லாம் நேரத்தோட வந்துடு. என்னால கேட்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியலை, உன் பொண்டாட்டி சோர்ந்து தெரியறா? உன் பொண்ணு நிமிஷத்துக்கு ஒரு தரம் அம்மாவை தேடுறா? பின்ன  அம்மா முகம் வாடி இருந்தா பொண்ணு முறுக்கிக்கறா. நீ எதுவுமே பண்ணாதே, இங்க இரு, அப்போ தான் எல்லாம் நல்லா நடக்கும்” என்று தணிவாக சொல்ல,

“பார்க்கறேன் மா” என்று சொல்லி எழுந்து விட்டான்.

அப்போது தான் எழுந்த மீனாக்ஷி “ப்பா, அம்மா எங்கே?” என,

“தூங்கறா” என்றவனிடம்,

“எழுப்பி விடுங்க” என்று சொல்ல,

“தூங்கட்டுமே” என்று திரு சொல்லிக் கூட முடிக்கவில்லை.

“அம்மா” என்று மீனாக்ஷி அப்படி ஒரு கத்து கத்த,

துளசியை அந்த சத்தம் எழுப்பி விட்டது.

இங்கே திரு மீனாக்ஷிய “எதுக்கு இப்படி கத்தற?” என்று கோபமாய் ஒரு அதட்டு அதட்டினான்.

மீனாக்ஷிக்கு கண்களில் நீர் தளும்பி விட்டது.

எழுந்து வந்த துளசியின் கண்களில் பட்டது அதுதான்.

“என்ன?” என்று பதறி மகளின் அருகினில் வர,

“ஒரு வார்த்தை சொல்லக் கூடாது, அம்மாவும் மகளும் அழ ஆரம்பிச்சிடுவாங்க, சே” என்று சொல்லி திரு உள்ளே போய் விட்டான்.

“நான் உன்னை எழுப்பச் சொன்னேன், எழுப்ப வேண்டாம் சொன்னாங்க, அதுதான் கத்தி கூப்பிட்டேன், திட்டுறாங்க” என்று அம்மாவை அணைத்து கொண்டாள்.

“அப்பாக்கு கத்தினா, சண்டை பிடிச்சா பிடிக்காது தானே! மீனாக்ஷிக்கு தெரியாதா என்ன?” என்று பேசிக் கொண்டே அவளுக்கு தேவையானதை கவனித்தாள்.

அப்பா மட்டும் கத்தறார் என்று மீனாக்ஷி சொல்ல

அதனால தான் நம்மை விடறதில்லை என்று துளசி சொல்ல

இந்த பதிலை மேகநாதனும் அகிலாண்டேஸ்வரியும் பார்த்து இருக்க, அப்போது தான் எழுந்து வந்த ஷோபனாவும் வெங்கடேஷும் அம்மா மகளின் கொஞ்சலை பார்த்து நின்றனர்.

“அப்பா என்னை எப்பவும் தான் திட்டுவாங்க, அப்புறம் அடிப்பாங்க!” என்று மீனாக்ஷி பெரிய பட்டியலாய் வாசித்தாள்

“அடிப்பாங்களா, என்ன உளர்ற?” என்றாள் துளசி.            

 ஆம்! திரு அடித்தது தெரியாது! அகிலாண்டேஸ்வரி தான் “அம்மா ரொம்ப கவலைப்படுவா சொல்லாதே” என்றிருந்தார், இப்போது சொல்லி விடவும்,

“அடிச்சாங்களா?” என்று திரும்பவும் கம்மி போன குரலில் துளசி மகளிடம் கேட்டாள்.

“ம்ம்ம், அப்புறம் பாட்டி அப்பாவை பிடிச்சு தள்ளி விட்டுட்டாங்க, விட்டா அடிச்சிருப்பாங்க!” என்று அகிலாண்டேஸ்வரியின் மேலும் குற்ற பத்திரிக்கை வாசிக்க,

“என்ன?” என்று அதிர்ந்து அவள் கேட்டது அவ்வளவு சப்தமாய் ஒலித்தது.

“போச்சுடா, இந்த குட்டி பிசாசு போட்டுக் குடுத்துட்டா” என்று அகிலாண்டேஸ்வரி ஒரு பார்வை பார்த்தவாறே, “பின்ன உங்கப்பன் செய்யறதுக்கு அடிக்காம கொஞ்சுவாங்களா?” என்றார்.

“நீங்க எதுக்கு கொஞ்சறீங்க? ஒன்னும் வேண்டாம்! எங்கம்மா கொஞ்சிப்பாங்க!” என்று துளசியை அணைத்தவாறே சொல்ல,

கேட்டுக் கொண்டிருந்த வெங்கடேஷ் சப்தமாய் சிரித்தே விட்டான். ஷோபனாவிற்கு விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகியது.  

திருவின் முகத்திலும் புன்னகை! கூடவே ஒரு கோபம்! “இவங்கம்மா என்னை கொஞ்சுவாலா, என் பொண்ணு அவ்வளவு புத்திசாலி போல” என்று நினைத்து இருந்தான்.

துளசி “தான் வீட்டில் இல்லை என்றால் இவ்வளவு கலாட்டாவா?” என்று நினைத்துக் கொண்டே மாமியாரை பார்த்தாள்.

“த பாரு, வீட்ல விஷேஷம் சரியா, உன் புருஷனை தள்ளி விடப் போனேன்னு என்னை முறைச்சிட்டே இருக்கக் கூடாது! அவனை என்னால சமாளிக்க முடியலை, புள்ளைய அடிச்சான் எனக்கு கோபம் வந்துடுச்சு” என்று சொல்லிவிட,

அதற்கும் வெங்கடேஷ் சப்தமாய் சிரிக்க,

“ஆமா, இவ முறைச்சிட்டாலும்” என்று அதற்கும் திரு மனதினில் சண்டையிட்டுக் கொண்டே அமர்ந்திருந்தான்.  

ஆம்! மனதினில் கோபம் கனன்ற ஆரம்பித்தது, “எப்போது இவள் என்னை கொஞ்சினாள்” என்று.

 

Advertisement