Advertisement

அத்தியாயம் பதிமூன்று :

“மா மா” என்று மீனாக்ஷி எதற்கெடுத்தாலும் அம்மாவை அழைக்க,

“என்ன மீனா, இத்தனை பேர் இருக்காங்க நான் அவங்களை கவனிக்க வேண்டாமா, நீ எதுன்னாலும் உன் அத்தைங்களை கூப்பிடு” என்று மகளை உறவோடு ஒட்டி வைக்க முயற்சி எடுத்தாள்.

திரு மில்லிற்கு சென்றவன் மதிய உணவிற்கு இன்னும் வரவில்லை. அப்படியே மாறிவிடுவான் என்று துளசிக்கு தோன்றவில்லை. ஆனாலும் மாற நினைத்திருப்பது, மாற ஆரம்பித்து இருப்பது மனதிற்கு ஒரு இதத்தை கொடுத்திருந்தது.

எல்லாம் விட வீட்டை விட்டு சென்றதை அவ்வளவு சுலபத்தில் மறந்து விடுவான் என்றும் தோன்றவில்லை. புதிய வரவொன்று வயிற்றினில் இருக்க, கோபத்தை அதிகம் காண்பிக்க வில்லையோ என்று தான் தோன்றியது.

என்னவோ இதை அவன் மறந்து விட வேண்டும் என்று மனது அவசர வேண்டுதல் வைத்தது. ஆனால் அவன் மறக்க முடியாதபடி படி பல சிக்கல்கள் மீண்டும் அவனை சூழ்ந்து இருந்தன என்பது துளசிக்கு தெரியாது.

“துளசி” என்று அதற்குள் பலமுறை அழைத்து விட்ட ரத்னா, அருகில் வந்து அசைக்கவும் தான், நிகழ்விற்கு வந்தாள் துளசி, “என்னமா” என்க,

“நாள் பார்த்தாச்சா? எப்போ? என்ன? நாங்க என்ன பண்ணனும்? அழைக்க நாங்களும் கூட வரணுமா? வீட்லயா? மண்டபத்துலையா?” என்று கேள்விகளை அடுக்கினார்.

“எனக்கு எதுவும் தெரியாது, அத்தை சொல்லுவாங்க! இப்போ தானே வந்த, கொஞ்சம் நேரம் பொறு!” என்றவள் சமையல் கட்டுக்கு விரைந்தாள். என்ன நடக்கிறது அங்கே என்று பார்க்க,

பின்னே மூன்று வீட்டிற்கும் அங்கே தான் உணவு. பின் சாரதாவும் சித்ராவும் இங்கே, ராதாவும் இங்கே, மேகநாதனின் தம்பி வீடுகள் இங்கே, வீடு ஆட்களால் நிரம்பி வழிந்தது.

இத்தனை நாட்களாக துளசிக்கும் செய்ய வேலையில்லை, வீட்டையும் கவனிக்க ஆள் இல்லை. அதனால் வேலைகள் அவளை பம்பரமாய் இழுத்துக் கொள்ள, அங்கேயும் இங்கேயும் நடந்தாள்.

“மெதுவா நட துளசி, இப்போ நீ பிள்ளைத்தாச்சி, வேலை சொல்ல மட்டும் செய். இழுத்து போட்டுக்காதே கண்ணு படும்” என்று ரத்னா அவளிடம் ரகசியம் பேச, அவள் “சரிம்மா” என்று தலையாட்டி வந்தாள்.

அகிலாண்டேஸ்வரியும் “நீ கொஞ்சம் அசையாம உட்காரு, எதுன்னாலும் ராதா கிட்ட சொல்லு. அவ செய்வா” என்று சொன்னவர், மகளையும் இதில் இழுத்து விட்டார். 

“சரி” என்று துளசியும் ஒரு அரைமணி நேரம் அமர்ந்தாள்.    

ஆனாலும் உண்மையில் துளசி அன்றி அணுவும் அசையாது, யாருக்கும் எந்த பொருட்களும் எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாது.

அகிலாண்டேஸ்வரி ஒன்றோன்றிற்கும் துளசியை தேடினார். அவள் சொன்னாலும் எங்கே என்று தெரியாமல் தடுமாற, “நான் பார்த்துக்கறேன், நீங்க உட்காருங்க” என்று அவளே எழுந்து கொள்ள,

“என்னம்மா இது? உன் வீடு தானே, வேலை செய்யற இடம் மாதிரி ரிடயர்மென்ட் வாங்கிட்டியா?” என்று ராதா கிண்டல் செய்ய,

“போடி” என்று சலித்து அமர்ந்து அரட்டையில் ஆழ்ந்து விட்டார். இப்படியாக துளசியை வேலைகள் இழுத்துக் கொண்டது. வேலை விஷயத்தில் அவள் பிள்ளை தாச்சி என்பதும் பின்னுக்கு போனது.

அத்தனை பேருக்கும் நேரத்திற்கு நேரம் சாப்பிட கொடுக்க சொல்லவே சரியாக இருந்தது. ரத்னா மகளை கவலையாக பார்த்திருந்தார். பெரிய வீட்டில் வாழ்க்கை பட்டால் இப்படியோ என்று தோன்ற அவருக்கு தெரியவில்லை, பெரிய வீடோ சிறிய வீடோ வேலை செய்பவர் தான் செய்வர் என்று.  

வீடு கலகலவென்று இருந்தது, யாராவது வீட்டிற்கு வந்த வண்ணம் இருக்க, எல்லோரிடமும் அகிலாண்டேஸ்வரி துளசி உண்டாகியிருப்பதையும் சொல்ல, “அச்சோ” என்று சங்கடமாகிவிட்டது துளசிக்கு.

திரு இரவு வரையிலும் வரவில்லை, மதியம் அழைத்த போது வேலை என்று விட்டான். இந்த அழைப்பே துளசிக்கு புதிது.

“குடுத்து விடவா” என்று துளசி ஆரம்பிக்கும் போதே வைத்திருந்தான். மூன்று மாதமாக எதுவும் செய்யாமல் இருந்தான். வருவான், போவான் அவ்வளவே! என்ன நடந்தது என்று கேட்டால் ஞாபகம் கூட இருக்காது. துளசி சென்றதில் இருந்து துளசியின் ஞாபகம் மட்டுமே! வந்து விட்ட பிறகு தான் மற்ற எல்லா ஞாபகமும்.

தொழில் மேனேஜரின் மேற்பார்வையில் நடந்து கொண்டிருந்தது. உற்பத்தி வெகுவாக குறைந்து இருக்க, விற்பனையும் சற்று மந்தமாக தோன்ற, ஏன் என்று பார்க்க, தொழிலின் பிரச்சனைகள் எல்லாம் அப்போது தான் கண்களுக்கு தெரிய அதனை சரி செய்ய அமர்ந்து கொண்டான். துளசியையும் மறந்து விட்டான், மீனாக்ஷியையும் மறந்து விட்டான்.

இரவு பத்தரை மணிக்கு வர வீடே அடங்கியிருந்தது. ரத்னாவும் வேலவனும் உறவினர் ஒருவர் வீட்டிற்கு உறங்க சென்றிருந்தனர்.  துளசியும் அகிலாண்டேஸ்வரியும் தான் இருந்தனர். மீனாக்ஷி கூட உறங்கியிருந்தாள். அகிலாண்டேஸ்வரி படுத்து இருந்தார், ஆனால் உறங்க வில்லை.

“என்னடா இப்போ போய் இவ்வளவு லேட்டா வர்ற, எவ்வளவு வேலை இருக்கு, அப்போ அப்போ வீட்டுக்கு வர வேண்டாமா?” என்று அகிலாண்டேஸ்வரி, திரு உள்ளே நுழைந்த நிமிடம் பேசினார்.

“ஏன் நீங்க பார்க்க மாட்டீங்களா?” என்று வள்ளென்று விழுந்தான்

அதிலேயே அவனின் மூட் சரியில்லை என்று துளசிக்கு புரிந்து விட , “என்ன?” என்பது மாதிரி அவனின் முகத்தை விடாமல் பார்க்க,

“நான் பார்க்கற வேலையை தான் நான் பார்க்க முடியும். பாக்கி எல்லாம் நீதான் பார்க்கணும்” என்று அகிலாண்டேஸ்வரி சண்டைக்கு கிளம்பினார்.

“அத்தை அவர் முதல்ல சாப்பிடட்டும், பசியா இருப்பார், அப்புறம் பேசுங்க” என்றாள் மெதுவான குரலில் துளசி.

“இவன் சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள நான் தூங்கிடுவேனே” என்று அவர் சொல்ல,

“ம்ம்ம்! எழுதிக் குடு, இவ என் கூட சண்டை போடட்டும்!” என்று சொல்லி ரூமின் உள் உடை மாற்றக் கிளம்பினான்.

நிஜமாகவே திருவிடம் என்ன என்ன கேட்கவேண்டும் என்று அகிலாண்டேஸ்வரி சொல்லி, உறங்க கண்மூடி கொண்டார்.

திரு வந்ததும் அவனுக்கு உணவு எடுத்து வைக்க, “நீ சாப்பிட்டிட்டியா?” என்றான்.

“இல்லை” என்பது போல தலையசைக்க,

“இனிமே மீனாக்ஷி சாப்பிடும் போதே சாப்பிட்டிடணும்” என்றான் அதிகாரமாக.

“அதை கொஞ்சம் தன்மையா சொன்னா தான் என்ன?” என்று துளசிக்கு தோன்றிய போதும், தலை “சரி” என்று தானாக ஆடியது.

பின்பு உண்ண ஆரம்பிக்க, அருகில் இருந்த சேரில் அமர்ந்தவளிடம், “சாப்பிடுன்னு தனியா சொல்லணுமா?” என்றும் அதட்டினான். அவளுக்கும் ப்ளேட் வைத்து உணவை உண்ண ஆரம்பித்தவள் பின்பு மெதுவாக “என்ன பிரச்சனை?” என்று கேட்க,

“நீதான் என் பிரச்சனை? வேற என்ன இருக்க முடியும்?” என்றான் கடுப்பாக.

“நான் என்ன பண்ணினேன்?” என்று லேசாக துளசி முனக,  

“என்ன பண்ணுனியா? ம்ம், என்னை விட்டுட்டு போன, போனியா…… நான் எதுவும் சரியா கவனிக்கலை. பிசினெஸ் டல் அடிக்குது” என்றான் நேரடியாக. பின்பு மேலே பேசாமல் வாயை மூடிக் கொள்ள, இன்னும் என்ன வரப் போகிறதோ என்று பயந்து இருந்தவள் ஆசுவாசமானாள்.

“நானா இவரை பார்க்க வேண்டாம்னு சொன்னேன்” என்று மனதிற்குள் நினைத்தாலும் வெளியில் சொல்லவில்லை அமைதியாக உண்டாள்.

ஆனாலும் பார்த்தும் பாராமல் திருவின் முகத்தினை ஆராய அது உம்மென்று இருந்தது. அவன் உண்டு முடித்து எழுந்து சென்று விட, துளசிக்கு வேகமாக உண்ண முடியாமல் மெதுவாக உண்டு எழுந்து சென்றாள்.

அவனோடு இருக்கும் பொழுதுகளை மனது எதிர்பார்க்க, அவன் உள்ளே சென்றதும் மனது சப்பென்று உணர்ந்தது.

இத்தனை நாட்கள் அவன் பிடிக்காமல் அருகில் இருக்க மாட்டேன் என்கிறான் என்று நினைத்திருக்க, இப்போது அவனுக்கு பிடித்திருக்கிறது என்பது நிச்சயம்.

சிறிது அவனின் குணமும் பிடிபட்டது, அவனுக்கு இதெல்லாம் வராதென்று! ஆனாலும் புதிதாய் இத்தனை வருடங்கள் இல்லாமல் ஒரு எதிர்பார்ப்பு! “நீயென்ன புதிதாய் திருமணமானவள் போல அதையும் இதையும் எதிர்பார்க்கிறாய்” என்று மனது குட்டு வைக்க,

“ஏன்? அப்போது தான் எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமா, இப்போது இருக்கக் கூடாதா என்று மனது நினைத்தது.

இப்படி பலதும் மனதில் ஓடினாலும் கைகள் பாட்டிற்கு கணவனுக்கு பால் கலந்து எடுத்துப் போனது.

வாங்கி அருந்த ஆரபித்தான், திடீரென்று துளசி “பால் உங்களுக்கு மட்டும் தான் இருந்தது” என்று பேச,

புரியாமல் திரு பார்க்க “இந்த மாதிரி டைம்ல நான் நிறைய பால் குடிக்கணும்” என்றாள்.

உடனே நேரம் பார்த்தான், கடை இருக்குமா? போய் வாங்கி வரலாமா?” என்பது போல.

அவனின் எண்ணம் புரிந்தவள் – “கடை எல்லாம் இருக்காது!”  

“அப்போ ஏன் எனக்கு குடுத்த, நீ குடிக்க வேண்டியது தானே!” என்று ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராய் பேசினான்.

“எனக்கு இதுதான் வேணும்” என இல்லாத தூசியை படுக்கையில் தட்டிக் கொண்டு துளசி பேச,

திருவின் முகம் அதுவரையில் இருந்த ஒரு கடுமையை விட்டு, ஒரு மென்மையை தத்தெடுத்தது.

“பிடி” என்று அவளிடம் கிளாசை நீட்டினான், ஒரு இரண்டு வாய் தான் குடித்திருந்தான்.

கையில் வாங்கியவள் மெதுவாய் சிப் சிப்பாக குடித்தாள். மறந்தும் திருவை பார்க்கவில்லை எதிரில் இருந்த சுவரை பார்த்து குடித்தாள்.

“எதுக்குடி என்னை விட்டு போன?” என்றான் திரும்பவும்.

“அச்சோ” என்றானது அவளுக்கு,  “ஒரு வேளை நேற்று மாதிரி எதுவுமோ இல்லை எதிர்பார்ப்போ” என்று எதிர்பார்போடு அவள் திரும்ப, “இல்லை” என்று காண்பித்து கொடுத்தது அவனின் முகம்.

கவலையான ஒரு முகம்!

“என்ன? என்னாச்சு? நிறைய பிரச்சனையா?” என்றாள்.

“நிறைய பிரச்சனை எல்லாம் இல்லை, ஆனா கைல காசில்லை!” என்றான்.

“காசில்லைன்னா” என்றவளிடம்,

“நேத்து உன்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகும் போது ஒரு கார் வாங்கலாம்னு யோசிச்சேன், இன்னைக்கு காலையில மில்லுக்கு போன பிறகு கைல எவ்வளவு இருக்குன்னு பார்த்தப்போ தான் சுத்தமா எதுவுமே இல்லைன்னு புரிஞ்சது. எல்லா பணமும் வெளில இருக்கு, கிட்ட தட்ட ஒரு ரூபா வெளில நிக்குது” என்று சொல்ல,

அவர்களே பேசினதில்லை? இதில் தொழில் பற்றி எங்கே பேச! அவனையே பார்த்திருந்தாள்.

“தப்பு என்பேர்ல தான். கைல எவ்வளவு பணம் இருக்குன்னு பார்க்காம நிறைய பணத்தை வெளில சுத்த விட்டுடேன், இப்போ கொஞ்சம் சிரமம்!” கைல இருக்குறது இந்த மாசம் எல்லோருக்கும் சம்பளம் குடுக்க தான் வரும் , இனிமே வர்ற வசூல் கூட ஒரு ரெண்டு மூணு மாசத்துக்கு எடுக்காம நிறுத்தினா தான் கொஞ்சம் மாசத்துக்கு வொர்கர்ஸ்க்கு சம்பளம் குடுக்க சிரமமில்லாம இருக்கும்” என்று சொல்லிக் கொண்டே வந்தவன்,

“எல்லாம் உன்னால தான்” என்றான் கடுமையாக திரும்பவும்

துளசி பரிதாபமாக பார்த்திருக்க,  

அவளின் முகம் பார்க்காமல் “நீ என்கூட இல்லை, அதனால தான் எனக்கு இப்படி” என்று சுவரை பார்த்து முறைத்தான்.  

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் துளசி விழித்தவளுக்கு ஒரு சோர்வும் மனதினுள் வந்து உட்கார்ந்து கொண்டது.

“நம்ம வீட்ல ஒரு விஷேஷம். நான் ஊருக்கெல்லாம் பணம் குடுக்கறேன், ஆனா எனக்கு செலவு செய்ய இப்போ பணமில்லை. இதுவரை ஒரு ஒத்தை பைசா நான் யார் கிட்டயும் வாங்கினது கிடையாது. இப்போ எனக்கு புதுசா யார் கிட்டயும் கேட்கவும் முடியாது” 

“நம்ம என்ன அப்படி ஒத்துமையாவா வாழ்ந்துட்டு இருந்தோம். ஒரு சின்ன விஷயம், நீ போன, இப்போ என்னோட நிலைமை…” என்று சலித்தவன் படுத்துக் கொண்டான்.

“நாம பணம் குடுத்தவங்க கிட்ட கேட்க முடியாதா?”

“யார் கிட்ட கேட்ப, நாகேந்திரன் மாமாக்கு இருபது லட்சம், ராதா வீட்டுக்காரனுக்கு முப்பது லட்சம், இப்படியே அம்பது லட்சம் போச்சு!”

“இன்னும் அம்பது லட்சம் ஒரு இடம் வாங்க அட்வான்ஸ் கொடுத்தேன், நாலு மாசம் ஆச்சு. நீ போகும்முன்ன. பாக்கி குடுக்காததுனால அந்த டீல் அப்படியே நிக்குது. எனக்கு எந்த யோசனையும் இதுவரை ஓடவேயில்லை!”

“இப்போ ஓடுது, ஆனா உடனே பணம் பிரட்ட முடியாது!” என்றவன், கண்களை மூடி தலைக்கு கைகளை முட்டுக் கொடுத்து படுத்துக் கொண்டான்.

துளசிக்கு அங்கேயே படுப்பதா, இல்லை முன்பு போல அவளின் ரூம் போவதா என்று தெரியவில்லை, அவன் பேசாவிட்டால் போகிறது என்று அவளாக இன்று பால் குடிக்கும் சாக்கில் பேச்சை வளர்த்திருக்க,

இந்த பிரச்சனைகளை எதிர்பார்த்திருக்கவில்லை.

திருவை திருமணம் செய்த நாளாக திருவின் பாராமுகம், மற்ற சொந்தங்கள் செய்யும் அலட்சியங்கள், இது மட்டும் தான் அவளின் பிரச்சனை! வேறு எதுவுமில்லை! பணமென்பது பிரச்சனை என்று என்றுமே இருந்தது இல்லை. இப்போதும் இல்லை தான், ஆனால் திருவின் கவலை அவளை கவலை கொள்ளச் செய்தது.

மெதுவாக அவளின் ரூம் நோக்கி நடக்க,

“என்னை கொன்னுட்டு தான் விடுவியா நீ” என்று திரு கத்தினான்.

அப்படியே விதிர்த்து நின்று விட்டாள், “ஏன் இப்படி பேசறீங்க?” என்று கனத்த குரலில் கேட்க,

“பின்ன எதுக்குடி போற, தினமும் சொல்வாங்களா? இல்லை நான் உன் பின்னாடி சுத்தணுமா?” என்று சுள்ளென்று விழுந்தான். காலையில் இருந்து பணப் பிரச்சனை அவனின் மண்டைக்குள் மிக அதிகமாய் குடைய அதையெல்லாம் துளசியிடம் காட்டினான்.

ஆம்! நிலத்தை விரைவில் மீத பணம் கொடுத்து கிரையம் செய்யாவிட்டால், அந்த ஐம்பது லட்சமும் ஸ்வாஹா! கூடவே இவர்கள் இருவரும் பணம் திரும்பக் கொடுப்பர் என்ற நம்பிக்கை இல்லை. ஒரு கோடி அவனின் மூளையில், மனதில் எல்லாம் பதிந்து “நஷ்டமா” என்ற எண்ணத்தை கொடுத்திருக்க தளர்ந்திருந்தான்.

துளசி பதில் எதுவும் பேசாமல் வந்து படுத்துக் கொண்டவள் சிறிது நேர அமைதிக்கு பின் அவன் புறம் திரும்பி படுத்து , மெதுவாக “என்னை எவ்வளவு வேணா திட்டிக்கங்க, ஆனா இப்படி கொல்றேன்னு எல்லாம் பேசாதீங்க” என்று சொல்ல,

“ப்ச்” என்று சலித்தவன், அன்றைக்கு அது போதும் என்று நினைத்தானோ என்னவோ “நானா பேசலை! தானா வந்தா ஒன்னும் பண்ண முடியாது!” என்றான்.

என்ன பதில் இதுவோ என்று தோன்றிய போதும் கண்களை மூடிக் கொண்டாள். அவனின் அணைப்பிற்காய் மனம் ஏங்கியது. அவனோ பணத்தின் கவலையில் உறக்கமும் வராமல், எப்படி இந்த நஷ்டத்தில் இருந்து வருவது என்ற யோசனை மட்டுமே மனதிலும் மூளையிலும் உலாவர படுத்திருந்தான்.

நேற்று வரை துளசியின் யோசனை! அவள் வந்த பிறகு இப்போது அவளின் யோசனை இல்லவே இல்லை!

அவளாய் சென்று அணைக்கும் அளவிற்கு தைரியம் வரவில்லை. மனதிற்கும் எதோ செய்த போதும் நாள் முழுவதும் ஓயாது செய்த வேலையில் உடல் ஓய்ந்து இருக்க உறக்கம் வந்து விட்டது.

அவள் உறங்கிவிட்டாள் திரு உறங்கவேயில்லை நேற்று வேறு கோபம்! இன்று வேறு கவலை!

வெகு நேரம் கழித்து துளசியின் புறம் திரும்பி படுத்தான், அவளின் முகம் பார்த்ததும் மனதில் ஒரு அமைதி, அத்தனை நேரம் இருந்த கவலை குறைந்தது.

“ரொம்ப டார்ச்சர் பண்றேன் இவளை, முதல்ல பேசாம! இப்போ பேசி!” என்று தோன்ற, “சாரி” என்று உதடுகள் முணுமுணுத்தது.

கூடவே “அவளுக்கு இப்போ டென்ஷன் குடுக்கவே கூடாது, நீ என்ன பண்ற?” என்று அவனுக்கு அவனே திட்டிக் கொண்டு படுத்திருந்த போதும், கொஞ்சமும் தெரியாத சேலை மறைந்திருந்த அவளின் இடையை பார்த்தான். மெதுவாக சேலையை விலக்கியவன், அவளின் வயிற்றை கரிசனமாக தடவிக் கொடுத்தான்.

அவள் விழிந்திருந்த போது இதனை செய்திருந்தால் துளசியின் மனதின் ஏக்கங்கள் எல்லாம் எங்கோ பறந்திருக்கும், ஆனால் அவனுக்கு தான் தெரியவில்லையே!        

சிறு சிறு செய்கைகள், காமத்திற்கும் அப்பாற்பட்டது! காதலுக்கும் அப்பாற்பட்டது!

 

Advertisement