Advertisement

அமைதியாய் அமர்ந்திருந்தாள். “அதுக்காக அவளோட பேசிட்டு இருந்தேன், தொடர்புள இருந்தேன் நினைக்காதே, அப்படி எதுவுமே இல்லை. அவங்கப்பா தம்பி மூலமா அவளுக்கு உதவி செஞ்சேன் அவ்வளவு தான்!”
“நீ என்னை விட்டு போயிட்ட, அதுக்கு அப்புறம் ஒரு பத்து பதினஞ்சு நாள்ல தான் அவ இறந்து போயிட்டா. எனக்கு அதுக்கு பிறகு உன்னை வந்து கூப்பிடறதை யோசிக்கக் கூட முடியலை. அதுக்காக அவ இறந்து போகாம இருந்திருந்தா வந்திருப்பேன்னு சொல்ல முடியாது! எனக்கு எந்த விளக்கமும் குடுக்க முடியாது, நான் இப்படி தான்!” என்று திடீரென்று கத்தினான்.
அவனுக்கே அதை பற்றி இப்போது பேச பிடித்தமில்லை. துளசியும் அதனை பற்றி எந்த பேச்சும் வளர்க்கவில்லை விட்டு விட்டாள்.
“நான் உங்க கிட்ட எந்த விளக்கமும் கேட்கலை, போதுமா, பேசாம தூங்குங்க!” என்றாள் கனிவாக.
பின் உடனே கறாராக “மீனாக்ஷிக்காக எல்லாம் இங்கே வரலை புரிஞ்சதா! மீனாக்ஷி மட்டும்னா அவளை அங்கே கூப்பிட்டு இருப்பேன், அதே சமயம் உங்களுக்காகவும் வரலை போதுமா, எனக்காக வந்தேன். என்னால உங்களை விட்டுட்டு இருக்க முடியலை, அதுக்காக வந்தேன்!” என்று சொல்ல,
“இதையாவது முன்னமே சொல்லியிருக்கலாம் தானே, என்னை எவ்வளவு டென்ஷன் செஞ்சு பேச வைக்கிறா” என்று அவனுக்கு அவனே பேசிக் கொண்டு படுக்க,
“ஏன் டென்ஷன் பண்றதை இவர் மட்டும் தான் குத்தகை எடுத்து இருக்குறாரா?” என்று அவளும் முனகிக் கொண்டே பக்கத்தில் படுத்தாள்.
பின் அவன் புறம் திரும்பி படுத்தவள் “எப்படி உங்களுக்கு நான் இப்படி இருக்குறது தெரிஞ்சது”  
“என்னவோ எனக்கு பார்த்தவுடனே தோணிச்சு, உனக்கு ஏன் தெரியலை”
“எனக்கு எப்பவுமே ரெகுலர் இல்லை தள்ளி தள்ளி தான் போகும் ரெண்டு மூணு மாசம் கூட சில சமயம் ஆகிடும். அதுவுமில்லாம இப்படி ஆகும்னு நான் நினைக்கலை. எனக்கு எப்பவும் உங்க ஞாபகம் மட்டும் தான். அதனால் சுத்தமா இதை கவனிக்கலை!” என்று சிறு வெட்கத்தோடு சொல்ல,
அந்த முகத்தையே ஆசை தீர பார்த்திருந்தான். ஆனாலும் மனதில் இருந்த கோபம் முழுவதுமாக மறையவில்லை. 
அவனின் பார்வையில் லஜ்ஜையுற்று “கண்ணை மூடுங்க” என்றவளிடம்,   
“நீதானே நான் உன் முகம் பார்க்கறதில்லைன்னு சொன்ன, இனி எப்படி பார்க்கிறேன்னு பாரு!” என்று அவளையே விடாது பார்க்க,
முகம் முழுக்க ஒரு வெட்கம் பரவ, கண்களை மூடிக் கொண்டாள்.
படுத்தவுடனே துளசி உறங்கிவிட, மீண்டும் அவளின் முகம் பார்த்து சில மணித்துளிகள் இருந்தான். துளசி விட்டு சென்றது அவனுக்குள் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. “நான் எப்படி இருந்தாலும் என் மனைவி என்னோடு” என்ற கர்வம் முழுவதுமாக அடிவாங்கியது.
என்னென்னவோ யோசனைகள், தனக்கு வாழ்க்கையை சரியாக நடத்த தெரியவில்லையோ என்ற எண்ணம். அதன் பிறகு சில மணித்துளிகள் யோசனைகள் ஓடிய போதும்,     
அவனின் கண்களை தானாக உறக்கம் தழுவியது.
எல்லாம் சரியாகிவிட்டதா என்று கேட்டால் அவர்களுக்கே தெரியாது. ஆனால் எல்லாம் சரியாக தான் இருந்தது.
காலை விழித்தவுடனே திரும்ப வீட்டில் உறவுகள் வந்து விட, துளசியின் அப்பாவும் அம்மாவும் வர,
“ஒழுங்கா அவங்களை வான்னு கூப்பிடற, சும்மா வாசல் படியை மிதிக்க கூடாது அது இதுன்னு சொன்ன பிச்சிடுவேன்” என்று திரு மிரட்டினான் சன்னக் குரலில்.
லேசாக அவனை முறைத்தவள் “எதை பிச்சுடுவீங்கலாம்” என்று வாய் கொடுக்க,  
“ம்ம், உன் டிரெஸ்ஸை” என்று அவன் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே சொல்ல, துளசியின் உடலில் தானாக ஒரு சிலிர்ப்பு ஓட,  “ஆங்” என்று வாயை பிளந்தவள், என்ன இது என்பது போல தன்னையே  நொந்து கொண்டு, நேற்று இரவு இதற்கு இவன் பேசாமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது போல, இன்று பார்க்கமலே இருக்கலாம் என்று தோன்றியது. 
அவசரமாக அவனின் அருகில் இருந்து விலகி “வாங்கம்மா, வாங்கப்பா” என்று அவர்களை வரவேற்றாலும், முகத்தின் மலர்ச்சியையோ வெட்கத்தையோ மறைக்க முடியவில்லை. அது அவளை பேரழகியாக காட்டியது.
திருவின் முகத்தினில் யாருக்கு எதுவும் தெரியவில்லை. அவனின் முகம் எப்போதும் போல தான் உணர்வுகளற்று.
“என்ன அண்ணி உங்க முகம் இப்படி ஜொலிக்குது?” என்று நிருபமா கேட்டே விட,
“தெரியலையே” என்று முணுமுணுத்து பதில் சொல்ல,
“மாசமா இருக்கால்ல அதுதான்!” என்று அகிலாண்டேஸ்வரி பதில் கொடுத்தார்.
“வா வேலா” என்று மேகநாதன் வந்து வரவேற்க,
“வாங்க” என்று எப்போதும் போல திரு சொல்லியவன், மில்லிற்கு கிளம்ப, துளசியின் முகம் மலர்ந்து விகசித்தது.
ரத்னா அவளிடம் “அங்கே தானே இருந்த சொல்லவேயில்ல” என்று குறைபட்டார்.
அங்கே அவளின் சின்ன அத்தைகள் இருப்பதை கவனிக்காமல் “அது எனக்கே தெரியலைம்மா நேத்து வந்த பிறகு இவர் தான் என்னை கவனிச்சு சொன்னார்” என்று சொல்லிவிட, அங்கே கொல்லென்ற சிரிப்பலை.
“இப்படியா இருப்ப? எதோ எங்க பையன் விவரமா இருக்கவும் பொழைக்கறோம்” என்று கிண்டல் செய்ய, தன் வெட்கத்தை மறைக்க முடியாமல் சமையல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.    
“அய்யே, என்ன அக்கா இது உங்க முகம் இப்படி பளபளன்னு இருக்கு” என்று தனம் வேறு கேட்க,
“போடி நீ” என்று அவளிடம் செல்லமாய் கோபித்துக் கொள்ள,
அதற்குள் “மா” என்று மகளின் சத்தம் கேட்க,
“என்ன?” என்று விரைந்து வந்தவளிடம்,
“இவ்வளவு பூ எனக்கு வேண்டாம்”, ராதா அதை வைத்து விட அதை வேண்டாம் என்று சொல்லி கொண்டிருந்தாள். 
“ஷ், அத்தை, என்ன சொல்றாங்களோ அதை வெச்சிக்கோ!” என்று மகளிடம் சொன்னாள்.
“மா, ரொம்ப வெயிட்டா இருக்கு” என்று சொல்லிக் கொண்டே,
“மா முகத்துக்கு என்ன போட்டீங்க இட் லுக்ஸ் வெரி ஷைனி” என்றாள் மகள்.
“அதுவா உங்கப்பா ஸ்பெஷல்லா ஒரு பௌடர் போட்டான்” என்று ராதா மீனாக்ஷியிடம் கிண்டல் செய்ய,
“ஆமாம்” என்ற ஷோபனா, “உங்கப்பாக்கு ஃபோன் செஞ்சு கேளு” என்றும் சொன்னாள்.
மீனாக்ஷி கையில் இருந்த அகிலாண்டேஸ்வரியின் ஃபோன் எடுக்க, “ஆத்தாடி ஆத்தா, எவடி அவ, பேசாம உட்காருடி!” என்று ராதா ஷோபனாவை அதட்ட அங்கே இன்னும் இன்னும் சிரிப்பலை கிளம்பியது.
“என்னவோ சிவப்பா இருந்தா அப்படி தான் இருக்கும். இது ஒரு அதிசயமா?” என்று சாரதா நொடிக்க, அதனை கவனிப்பவர் யாருமில்லை. துளசி கவனித்தாலும் புன்னகை மாறாமல் மகளை தான் பார்த்திருந்தாள். 
“யாரும் எது பேசினாலும், காதில் போட்டுக் கொள்ள கூடாது” என்று தான் இருப்பாள். இன்று இன்னும் ஸ்திரமாய் அதனை மனதில் நினைத்துக் கொண்டாள்.
என்னவோ திருவின் மனதும் அவ்வளவு நிறைவாய் இருக்க, வெகு வருடங்களுக்கு பிறகு ஒரு பாட்டினை முணுமுணுத்து கொண்டே பைக்கினை ஓட்டிக் கொண்டிருந்தான்.
என்றென்றும் புன்னகை                                                முடிவில்லா புன்னகை                                                       இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்               உன் முதல் பார்வையிலே    
இது பெண்களின் வரமா சாபமா யாரும் அறியாதது! என்ன தான் அடி உதை வாங்கினாலும், அவமானங்கள் சந்தித்தாலும், கணவன் என்று வரும் போது அவனின் ஒற்றை காதல் பார்வையில் எல்லாம் மறந்து தான் போகிறது!

Advertisement