Advertisement

அத்தியாயம் பன்னிரண்டு :
நன்கு உறங்கிவிட்டவளுக்கு அர்த்த ராத்திரியில் விழிப்பு வர, விழித்து பார்த்தவளுக்கு சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த திரு தான் கண்களில் பட்டான்.
வேகமாக எழுந்து அமர, “எதுக்கு இப்படி வேகமா எழற, மெதுவா பார்த்து எழணும்” என்று அதட்டினான்.
“ம்ம்” என்பது போல தலையாட்டியவள், எழுந்து வெளியே சென்று மகளை பார்த்து வந்து மீண்டும் படுக்கையில் அமர்ந்தாள்.
“நீங்க தூங்கலை” என்று திருவிடம் கேட்க, “தூக்கம் வரலை” என்று அவன் பதில் சொன்னான்.
“ஏன் வரலை?” என்றாள் பதில் கேள்வியாக,
“நீ என் கேள்விக்கு பதிலே சொல்லலை” என்று திரு சொல்ல,
“அதுக்கு எனக்கு பதில் தெரியாது, நீங்க எப்படி என்னை பார்த்து இப்படி கேட்கலாம்னு சண்டை போடணும்னு தோணுது, ஆனா போடவரலை! நீங்க ஏன் என்னை வந்து கூப்பிடலை?” என்றாள் தளர்வாக.
அதற்கு நேர் மாறாக திரு ஆத்திரப் பட்டான், “ஏன் கூப்பிடணும், எதுக்கு கூப்பிடணும், நானா உன்னை போன்னு சொன்னேன். நீதானே போறேன்னு போன!”
“சரி, நான் போனா என்னை கூப்பிட மாட்டீங்களா? உங்க பொண்ணை மட்டும் கூப்பிட்டுக்கிட்டீங்க”
“அதனால தானே, நீ திரும்ப இங்க வந்த, இல்லைன்னா வந்திருக்க மாட்ட தானே!” என்று எங்கோ பார்த்துக் கொண்டு கரகரத்த குரலில் கூற,
துளசி வாயடைத்து போய் அவனை பார்த்தாள்! 
பின்பு அவனை பார்த்தவள் “முதல்ல என்னை பாருங்க” என்று சொல்ல, திரும்பி அவளை பார்த்தவுடன் “இனிமே எதுன்னாலும் என் முகம் பார்த்து தான் பேசணும். என்கிட்டே தான் பேசணும். எங்கேயோ பார்த்துட்டு, யார்கிட்டயோ பேசினா, நான் அதை காதுல வாங்க மாட்டேன், புரிஞ்சதா!” என்றாள்.
“நீ இந்த மாதிரி எப்போவுமே என்கிட்டே சொன்னதேயில்லை”
“இதெல்லாம் சொல்லணுமா? எல்லார் முகத்தையும் பார்த்து பேசத் தெரியுதில்ல”
“எல்லார் முகமும் என்னை டிஸ்டர்ப் பண்றதில்லை, உன் முகம் மட்டும் தானே என்னை டிஸ்டர்ப் பண்ணுது”  இதற்கும் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து போனாள்.
“எனக்கு உங்களை மாதிரி பேச வரலை, எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஒன்னு தான், நீங்க என்கிட்டே நடந்துக்கறது சரியில்லை! இன்னும் கொஞ்சம் கூட நல்லா நடந்துக்கலாம்!” என்று சொல்ல,
“ம்ம் சரி” என்றான் உடனே.
“இவர் என்ன என்னை வைத்து காமெடி பண்ணுகிறாரா” என்று தான் துளசிக்கு தோன்றியது. ஆனால் அவனின் முகம் அத்தனை சீரியசாய் இருந்தது. 
“இதெல்லாம் இங்கேயே இருந்து சொல்லியிருக்க வேண்டியது தானே, அதை விட்டு நீ ஏன் என்னை விட்டு போன?” என்றான் அவளையே நேருக்கு நேராக தீவிரமாய் பார்த்து. இதற்கு என்ன பதில் சொல்லுவாள்.
“நான் எப்போவுமே இப்படி தானே, திடீர்ன்னு ஒன்னும் இப்படி நடக்கலையே. இப்போ மட்டும் உனக்கு என்னை விட்டு போக ஏன் தோணிச்சு? எப்படி மனசு வந்துச்சு? நான் உன்னை தேடுவேனா மட்டேனான்னு கூட உனக்கு தெரியாதா?”
“நீ செஞ்சதை பார்த்ததும் உன்னை கொல்லணும் போல ஆத்திரம் வருது, ஆனா உன்னை கொன்னுட்டு எனக்கு இந்த உலகத்துல என்ன வேலை, அதான் பேசாம இருக்கேன்!” என்றான் அத்தனை தீவிரமான குரலில்.
அதுவே அவன் எவ்வளவு காயப் பட்டிருக்கிறான் என்று காண்பிக்க, அவனை அமைதி படுத்தும் வகை தெரியாது விழித்தாள்.  அவனின் இந்த கோபம் அவர்களின் வாழ்க்கைக்கும் நல்லதல்ல என்று புரிந்து தணிந்து பேசினாள். “எதுக்கு இவ்வளவு கோபம்”  
“நீதான் செத்துப் போகணும் போல இருக்குன்னு அம்மாகிட்டயும் அப்பாகிட்டயும் சொன்னியாமே! செத்துப் போகற அளவுக்கு நான் என்ன செஞ்சேன்?” என்று ஆவேசமாகப் பேசினான்.
“சாரி” என்று அவனை பார்த்து சொல்ல,
“குப்பைல போடு உன் சாரியை, என்னை நீ கொஞ்சம் கூட புரிஞ்சிக்கவேயில்லையா? உனக்கான என்னோட அன்பு உனக்கு தெரியவேயில்லையா?”
“யாராவது ஏதாவது பேசினா அதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்? யார் கிட்டயாவது உன்னை விட்டு கொடுத்திருக்கேனா? இல்லை யாரோ என்னவோ பேசட்டும்ன்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்திருக்கேனா?”
“அப்புறம் நான் வேண்டாம்னு சொல்ல ஏன் பணம் கொடுத்தீங்க? அது ஒரு மாதிரி என்னை ரொம்ப அந்த சமயம் பாதிச்சது. நான் உங்களுக்கு முக்கியமே இல்லைன்னு தோண வெச்சது” என்று கம்மிய குரலில் கூறினாள்.
“ஏன் இப்படி பண்ணுனீங்கன்னு என்னை கேட்கலாம், அதை விட்டு வீட்டை விட்டு போறது எந்த வகையில நியாயம்! என்னவோ போக இடமில்லை! படிக்கலை! வேலைக்கு போக முடியாது! அப்படி இப்படி சொன்னியாமே?”
“நீ படிச்சிருந்தா? உன்னால வேலைக்கு போக முடிஞ்சா? நீ என்னை விட்டு போயிடுவியா?” என்றவன் அவளை கோபமாக உறுத்து விழிக்க,
“அது சும்மா சொல்லிட்டேன்”
“சும்மா என்ன வேணா சொல்லுவியா நீ”  
“எனக்கு தூக்கம் வருது”
“என்னை தூங்க வெச்சிட்டு நீ தூங்கு” என்று சட்டமாய் படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவனை என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்தவள்,
“நீங்க முன்னமே என்கிட்டே இப்படி பேசியிருந்தா, பிரச்சனை இருந்திருக்காது!” என்று சொல்ல,
“உனக்கு பிரச்சனை இருந்திருக்காது, எனக்கு பிரச்சனை இருந்திருக்கும், நான் ஒரு வழியாகி இருப்பேன்!” என்றான் சோர்வான குரலில்.
பின் அவனே “நம்ம கல்யாணம் என்ன இஷ்டப் பட்டா நடந்தது, இல்லையே, ஆனாலும் நடந்த அப்புறம் இஷ்டம் வந்துடுச்சு தானே! அது உனக்கு தெரியவேயில்லையா? என்னை புரியவேயில்லையா உனக்கு?” என்று மீண்டும் ஆரம்பிக்க.. அவனை எப்படி சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் தவித்து தான் போனாள்!
முறுக்கி கொண்டு அமர்ந்திருந்தான்!
துளசி திருவிற்கு எதுவும் மறுத்தது கிடையாது என்றாலும், தானாக அவனை இதுவரை எப்போதும் நெருங்கியது இல்லை. அதற்கெல்லாம் இன்று தான் மொட்டை மாடியில் அவளாய் அவனை அணைத்து கொண்டது!
இப்போது தானாய் நெருங்கி உட்கார கூட அத்தனை தயக்கமாய் இருந்தது.
அவனையே பார்த்திருக்க, “எதுக்குடி என்னை விட்டு போன” என்றான் திரும்பவும், இத்தனை நாட்கள் மனதில் வைத்து மறுகிக்கொண்டிருந்தது அவனை அப்படி பேச வைத்தது. 
“அச்சோ அவனிற்கு எதுவும் ஆகிவிட்டதோ?” என்று பயந்தே போனாள் துளசி.
“தெரியாம போயிட்டேன், இனிமே போகவே மாட்டேன்!” என்று சொல்ல,
“ஓஹ், இனிமே போற ஐடியா வேற வெச்சிருந்தியோ” என்று பேசினான்.
துளசி “அச்சோ, இவன் என்னிடம் பேசாமல் இருந்தாலே பரவாயில்லை” என்ற முடிவிற்கு வந்து விட்டாலும், அவனை மிகவும் வருத்திக் கொண்டு விட்டானோ என்ற கவலை இருக்க, மீனாக்ஷி, அவளின் கர்ப்பம் எல்லாம் பின்னுக்கு போய் அவனை கவலையாய் பார்த்தாள்.
அவளின் பார்வையை பார்த்தவன் “என்ன ரொம்ப டார்ச்சர் பண்றேனா?” என்று கேட்டான்.
“ஆம்” என்பது போல தலையசைத்தாள்.
“இதுவே உனக்கு டார்ச்சர்ன்னா, நான் மனசுக்குள்ள எவ்வளவு அனுபவிச்சு இருப்பேன், நான் தான் வேற ஒரு பொண்ணை விரும்பறேன்னு உன்கிட்ட வந்து சொன்னேன். ஆனாலும் கல்யாணத்தை நிறுத்தாம நீ என்னை கல்யாணம் பண்ணிகிட்ட? ஏன் பண்ணிக்கிட்ட எனக்கு பதில் சொல்லு?”
துளசி அமைதியாய் இருக்க,
“ஏன் பண்ணிக்கிட்ட சொல்லு?” என்றான் அழுத்தமான குரலில்.
“நான் மறுத்தாலும் வேற யாரையாவது மாமா உங்களுக்கு கல்யாணம் பண்ணி தான் வைக்க போறாங்க. அதை ஏன் நானே பண்ணிக்க கூடாதுன்னு தோணிச்சு. ஏன்னா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்!” என்று சொல்லிவிட்டாள்.
“பிடிச்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட, அப்புறம் ஏண்டி விட்டுட்டுப் போன” என்று பேச,
அதற்கு மேல தாள முடியாதவளாக துளசி அவனின் புறம் திரும்பி அவன் மேல் சாய்ந்து எப்போதும் அவன் செய்யும் வேலையை செய்தாள்.
ஆம்! சத்தமின்றி முத்தமிட்டாள்!
திருவின் மனதின் அலைபுருதல்கள் எல்லாம் மாயமாய் மறைய, அவன் ஒத்துழைப்போ எதிர்ப்போ எதுவுமின்றி இருக்க, செயல் முழுவதும் தனதாய் எடுத்தவள், வெகு நேரம் கழித்தே அவனை விடுவிக்க, அதன் பின்னே தான் கொஞ்சம் அமைதியானவன், பின்பு மெதுவாக “உனக்கு அந்த பொண்ணு பேர் தெரியுமா?” என்றான்.
“எந்த பொண்ணு?”
“ஷெரினா, நான் காலேஜ் பைனல் இயர் வரும்போது அவ ஃபர்ஸ்ட் இயர் சேர்ந்தா, பார்க்க பொம்மை மாதிரி இருப்பா, எனக்கு அவளை அவ்வளவு பிடிச்சது, எப்பவும் அவ ஞாபகம், அவ பின்ன சுத்தினேன். அவளுக்கும் பிடிச்சது, நான் கல்யாணம் பண்ண நினைச்சப்போ, எங்க அப்பா அது தெரிஞ்சு அவ மொத்த குடும்பத்தையும் தூக்கி..” என்று நடந்தது அனைத்தையும் சொல்லிக் கொண்டே வந்தவன்,
“என்னால ஒரு ஜீவன் கஷ்டப்பட்டு வீணா போச்சு, நான் எப்படி என் குடும்பத்தோட அப்படி சந்தோஷமா இருக்க முடியும். ஆனாலும் உண்மையா சந்தோஷமா தான் இருந்தேன். நீ என்னை நிம்மதியா தான் வெச்சிருந்த. சும்மா என்னோட மன திருப்திக்காக உன்னை நேரடியா பார்க்காம பேசாம சுத்திட்டு இருந்தேன்”
“அவங்க அவங்க வாழ்க்கைக்கு அவங்க அவங்க தான் பொறுப்பு. நீங்க எப்படி பொறுப்பாக முடியும்” என்று துளசி சொல்ல,
“அப்படி என்னால நினைக்க முடியலை, அவ நல்லா இருந்திருந்தா நினைச்சு இருப்பேனோ என்னவோ? ரொம்ப கஷ்டப்பட்டுட்டா, அப்புறம் இப்போ…” என்று நிறுத்தியவன்,
துளசியின் முகம் பார்த்து “போய் சேர்ந்துட்டா” என்றான் குரல் கமற.
“என்ன?” என்று துளசி அதிர்ந்து பார்க்க,
“ம்ம்” என்றவன், “செத்து போயிட்டா, சூசைட்! கிட்ட தட்ட அஞ்சு தடவைக்கு மேல காப்பாத்தி விட்டேன் அவளுக்கு தெரியாமலேயே. ஆனா இந்த தடவை முடியலை!”
“நான் ஒரு பொய்யான நம்பிக்கை கொடுத்தேன் தானே எல்லாம் என்னால முடியும்னு காதலிச்ச சமயத்துல. அது தான் அவளை வாழ விடாமா பண்ணிடுச்சு போல, அவளால அவளோட வாழ்க்கையை வாழ முடியலை அப்கோர்ஸ் நான் எங்கேயும் இப்போ அவ ஞாபகத்துல இல்லை. அவ சாகும் போதும் இல்லை. ஆனா அவளால அவ வீட்டுக்காரனோட வாழவே முடியலை, எனக்கு அமைஞ்ச மாதிரியான வாழ்க்கை அவளுக்கு அமையலை. அடி உதைன்னு நிறைய கஷ்டப்பட்டா போல. அதனால வாழற ஆசையே இல்லாம போய்டுச்சு, குழந்தைங்களும் இல்லை, வாழ்க்கைல அதனால ஒரு பிடிப்பில்லாம போயிருக்கும்” என்றான் எங்கோ பார்த்து.
அதன் பிறகு துளசி எதுவுமே பேசவில்லை, என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை! எதுவாகினும்  நடந்ததற்கு இவர் எப்படி பொறுப்பாக முடியும் என்று தான் தோன்றியது. வருத்தம் தான், ஆனால் அதனை மீறி ஒன்றுமில்லை!
இது தான் வாழ்க்கையின் நிதர்சனம்! எங்கோ எதுவோ என்பது போல தான் அவளின் மனநிலை! ஆனால் திரு?

Advertisement