Advertisement

கண்மணி நீ வரக் காத்திருந்தேன் – 5:

       கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த மீட்டிங்கில் கலந்துகொண்ட அலுவலர்களைக் கலந்து பேசி சில முக்கியமான முடிவுகளை எடுக்க கலெக்டருக்கு அதிகாரம் கொடுக்கப் பட்டிருந்தது.

       அதன் முதற்கட்டமாக கடலோரப் பாதுகாப்பு பற்றியும் அது சம்பந்தமாக கடலோரப் பாதுகாப்புப் படையும் காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் போன்ற அம்சங்களை வலியுறுத்திவிட்டு மேற்கொண்டு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்ந்துவிட்டுக் கலைந்து சென்றனர்.

       தொடர்ச்சியாக கடலோரக் காவல் படையால் கோட்டைப் பட்டினத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணாதுரையின் மோட்டார் போட் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கோட்டைப்பட்டினத்தில் மருத்துவ மனைகளிலும், மருந்துக் கடைகளிலும்  விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். குண்டடி பட்டவனுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவரும்  அதில் ஒருவரே…குண்டடி பட்டவனை விசாரிக்கத் தொடங்கினர்.

       அவன் ****** கட்சியின் கடைநிலைத் தொண்டன் என்பது தெரிய வந்தது. பொதுமக்கள் மத்தியில் நிலவும் அசாதாரண சூழலை அடிப்படையாகக் கொண்டு குழந்தையைக் கடத்தினால் ஒரு சிறு பிள்ளைக்காக தற்போதைய மாநில அரசாங்கம் இரு நாடுகளுக்கு மத்தியில் ஒன்றுமே செய்ய இயலாது. நிறைவேற்ற இயலாத கோரிக்கைகளுக்கு மத்தியில் சிறு குழந்தையின் ஜீவா மரணப் போராட்டம் மாதர் சங்கங்கள், சமூக நல அமைப்புகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதொரு போராட்டக் களமாக மாறும். அவ்வேளையில் அக்கட்சி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லத் துவங்கும். போராட்டம் வலுப் பெறும் வேளையில் குழந்தை விடுவிக்கப்பட்டு ******* கட்சியின் மீதான நல்லெண்ணம் வலுப்பெற்று அடுத்த 15 நாட்களில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ******* கட்சி வெற்றி பெறும்.

       “இதுதாங்க எங்க திட்டம்..வட்டச் செயலாளர் அண்ணன் சொன்ன மாதிரி வலது கையில துணியை ஆட்டிக் காட்டிட்டு கடற்கரையில இந்தப் பையன் ஓடி வந்தான். கூட ஒரு பொம்பளையும் இருக்கவே போலிஸ் அப்போதான் சந்தேகப் படாதுன்னு அண்ணன் அனுப்பினாருன்னு நினைச்சு விஷயத்தைச் சொல்லிப் பிள்ளையை அவன் கையில் தந்திட்டு நான் வந்திட்டேங்க.அண்ணன் உண்மையிலேயே பிள்ளையை வாங்க யாரை அனுப்பினாருன்னு எனக்குத் தெரியாது.”

  காவல்துறையினரும் அரசு இயந்திரமும் ஒருங்கே

முடிவு செய்து குழந்தையைக் கடத்திய குற்றத்தை இரு தொண்டர்கள் மேலும் அவனுக்கு ராமேஸ்வரத்தில் உதவிய ஆட்டோக்காரன் மேலும் மட்டுமே சுமத்தி வழக்கை முடித்து வைத்தனர். அலை அரசன் அந்தக் குண்டடி பட்டவனை மறைவிலிருந்து அடையாளம் காட்டினான்.கடலோரக் காவல்படையும் காவல்துறையும் இணைந்து செயல்பட்டு குழந்தையை மீட்டதாகவும் போட்டோவுடன் பேப்பருக்கு செய்தி கொடுத்தனர். கடலோரப் பாதுகாப்பு பலப் படுத்தப்படும்; உள்நாட்டுப் போக்குவரத்தை மேற்கொள்வோருக்குப் புதிய தண்டனைகள் விதிக்கபடுவது பற்றி வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆலோசிக்கப்பட்டு வரன்முறைப் படுத்தப் படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

       வீட்டிற்கு மீண்டும் அரசுவுடனும் தனது குடும்பத்துடனும் திரும்பி வந்த கங்காதரன் நடந்தவற்றைத் தந்தையிடமும் துரையிடமும் பகிர்ந்து கொண்டார். இரு நாட்கள் பள்ளி விடுமுறையாதலால் அங்கேயே தங்கிவிட்டுப் பின் செல்ல தேனுவின் குடும்பத்தினரின் வற்புறுத்தலின் பேரில் முடிவெடுத்தனர்.

       அலை அலை என ஒட்டிக் கொண்டு அவனுடனே அலைந்தாள் தென்றல். அவனுடன் பேச அவளுக்கு அநேகம் கதைகள் இருந்தன. குண்டுக் கன்னத்தில் குழல் கற்றைகள் அலைமோத விழிகள் மின்ன ஒரு சின்னஞ்சிறு பொம்மை அவனுடன் பல கதைகள் பேசிக் கொண்டு திரிவது அவனுக்குள்ளும் ஒரு பரவச நிலையைத் தோற்றுவித்திருந்தது.

       இரு நாட்கள் கழித்து அவர்கள் ஊருக்குக் கிளம்பும்பொழுது அதைத் தடுத்த தென்றல் அழுத அழுகையைக் காணச் சகிக்காமல் உயிர்த் தோழியானவளை உறங்க வைத்து விடைபெற்றான் அலைஅரசன்.

       “அவனை இங்கே எங்க வீட்டிலேயே விட்டுட்டுப் போங்க…என் மகள் கூட அவனையும் ஸ்கூலுக்கு அனுப் பறேன்…அவன் இல்லாம இருக்க மாட்டா போல இருக்கு..” என்ற பங்கஜத்திடம் “பொம்பளைப் பிள்ளைன்னா யோசிக்கலாம்…இவனோ எங்களுக்கு ஒத்தைப் பையன்…லீவு நாளில்தான் கடலுக்குக் கூட்டிட்டுப் போவோம்…மீதி நாள் ஸ்கூலுக்குப் போறான்தானே…” என நாசூக்காக மறுத்து விடைபெற்றனர் அண்ணாதுரை தம்பதியர். தொடர்பு விடுபடாதிருக்க வலியுறுத்தி அனுப்பி வைத்தனர் கங்காதரன் குடும்பத்தினர்.

       வீடு வந்து சேர்ந்த அலையரசனுக்கு தேனுவின் முகம் நினைவை விட்டு நீங்கவில்லை.கங்காதரனின் வீடும் வசதியும் பண்பும் சமூக அந்தஸ்தும் அவனுக்குப் புதிய உலகத்தை அறிமுகப் படுத்தியது. அவருடைய மரியாதைக்குக் காரணம் அவருடைய கல்வியும் அது தந்த செறிவும்தான் என உணர்ந்து தன்னுடைய வாழ்க்கைப் படகை சீரிய பாதையில் செலுத்த உறுதி பூண்டான்.

         பொத்திப் பொத்தி வளர்த்த ஒற்றை மகள் அந்தக் கடத்தல் நினைவுகளை மறந்து விட்டதில் அகமகிழ்ந்தனர் அவளைப் பெற்றவர்கள். சொந்த மகளை முன்னிறுத்தாது பிரச்சினையை இயல்பாகக் கையாண்டதை முன்னிட்டுப் பதவி உயர்வு மாநிலத் தலைநகரில் பணியாற்றுமாறு அழைக்கப்பட்டார் கங்காதரன்.

       அடிக்கடி தொடர்பிலிருக்குமாறு வலியுறுத்திச் சென்னை வந்த போதும் கால மாற்றமும் அந்தஸ்து பேதமும் அவரவர் குடும்பத்தின் பெரியவர்களின் நினைவில் நீங்கா இடம் பெற்றன. தொலைபேசிகள் அரிதாக இருந்த அக்காலத்தில் கடிதப் போக்குவரத்தும் இல்லாது போயிற்று.

       கடற்கரை மாளிகையில் வளரும் அவளது நினைவடுக்குகளில் மீனவர் குப்பம் என்ற பகுதி ரவுடிகளும் குற்றச் செயல் புரிபவரும் ஒதுங்கி வாழும் கடற்பரப்பு என்று இந்தச் சமூகத்தால் பதிப்பிக்கப்பட்டது. பெற்றோருக்கோ சுனாமியின் சீற்றம் 2௦௦4 ல் தமிழகத்தைச் சுழற்றியடித்தபோது பங்கஜமும் கங்காதரனும் அவரது பதவியைப் பயன்படுத்தி அண்ணாதுரையின் குடும்பத்தைப் பற்றி அறியமுயன்ற பொழுது ஒரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை.

       அன்றாடம் நாம் சந்தித்து மறந்து போகும் சிற்சில மனிதர்களைப் போல அலையும் அவன் குடும்பமும் ஆனார்கள். அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியாத நிலையில் மகளிடம் ஒரு துயர சம்பவம் அவளை முன்னிறுத்தி நிகழ்ந்தது தெரியத் தேவையில்லை என முடிவெடுத்தார்கள்.

       காலத்தின் காலடிச்சுவடுகள் விபரமறிந்தவர்கள் மனதில் நிலைத்திருக்க அலையின் மனதில் அழிக்க இயலா வண்ணம் நிறைந்திருக்க அலை என்ற ஒருவனது வாழ்வில் தனக்கான தேடலை எற்படுத்தியதையோ அவனது வருங்காலத்தின்  மையப் புள்ளியாகத் தன்னை நிலைநிறுத்தியதையோ அறியாதவளாய் வளர வளர அவனைச் சந்தித்ததையே மறந்து போனாள் தென்றல்.

1-1-2௦18

       சென்னை ஈஞ்சம்பாக்கம்… கடற்கரைப் பகுதியில் கட்டப்பட்டிருந்த அந்த பங்களா கலை நேரப் பரபரப்புக்குச் சற்றும் விதிவிலக்கின்றி இருந்தது. சமையலறையின் தாளிக்கும் மணம் வீட்டை நிறைத்தது. அதை வெளியிலிருந்தும் கூட நுகர்ந்தவாறே அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தான் அவன். யாரும் கதவைத் திறக்க வில்லை.

       மாறாக அவனுக்கருகிலிருந்த வீடியோ போன் அலறியது. சந்தன நிறத்தில் கடலை மாவுப் பூச்சுடன் வெண்ணிற சட்டை அணிந்த கிராப் தலையுடன் இருந்த ஒரு உருவம் அப்புறத்தில் “யார் நீங்க? யார் வேணும்..?” என்று கேட்டது.

       “என் பெயர் ராஜசேகர்..இங்கே வாடகைக்கு வீடு இருக்குன்னு சொன்னாங்க…அதுதான் பார்க்க வந்தேன்…”

         “வெயிட்…5 மினிட்ஸ்…” என்ற அவ்வுருவம் வெளியில் வந்தபொழுது கழுவித் துடைத்த முகத்துடன் இருந்தது.

       அழைத்துச் சென்று அவுட் ஹவுசைத் திறந்து காட்டியவள் “வாடகை+++++++, அட்வான்ஸ்++++++, எல்லாவற்றையும் தெரிவித்து விட்டு அவனது சம்மதத்தைத் தெரிந்து கொண்டு மீண்டும் அவனை அழைத்து வந்து வீட்டு வாயிலருகேயே நிறுத்திவிட்டு “வெயிட் பண்ணுங்க…அப்பாவை வரச் சொல்றேன்…” எனச் சென்றவளிடம் “கொஞ்சம் இருங்க…கடலை மாவு பூசினால் உடனே கொஞ்சம் பால் அல்லது பன்னீர் போட்டுடுங்க..இல்லைனா சருமம் வறண்டுவிடும்…” என்றவனிடம் ஒரு அலட்டலே இல்லாத முறுவலுடன் “தேங்க்ஸ் ஃபார்  தி டிப்ஸ்…” என்றுவிட்டுப் போனாள்.

       “ப்பா…என்ன ஒரு அமர்த்தல்… மச்சான்..நீ காலிடா…” என்று முனகியவன்…உள்ளிருந்து வெண்ணிற வேட்டி சட்டையில் வந்தவர் அவனை உள்ளே அழைத்ததும் “அப்பா..ஒரு வழியா சொர்க்க வாசல் திறந்து உள்ளே கூப்பிடுட்டாங்கய்யா…” என்று மீண்டும் முனகிக் கொண்டே அவரைப் பின் தொடர்ந்து அவர் காண்பித்த இருக்கையில் அமர்ந்தான்.

       அவரிடம் மீண்டும் வாடகை அட்வான்ஸ் ஆகியவற்றை உறுதி செய்து கொண்டவன்…”நாங்க ரெண்டு பேர் சார்…இன்னொருத்தரும் என் கூடத் தங்குவார்…நாங்க “கிளிஞ்சல்கள்” குரூப் ஓஃப் கம்பெனிஸ்ல வேலை செய்றோம்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே காபியுடன் வந்த தென்றல் தந்தையை அர்த்தத்துடன் பார்த்தாள்…மேலாண்மையில் இளநிலை படித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு செயலாய்வுக் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு வேளை இந்தக் கம்பெனியிலே செய்யலாமா என்ற எண்ணத்துடனான  அவளது பார்வையைப் புரிந்து கொண்டவர் சம்மதமாக விழிகளை மூடித் திறந்தார்.

       அங்கிருந்து தென்றல் அகன்றதும் “இன்னொருத்தர் யாருப்பா…? அவரையும் பார்த்துட்டுத்தான் முடிவு பண்ணனும்…”என்று சொன்னவரிடம் “அவனால் இப்போ வர முடியலை சார்…நான் என் போனில் வீடியோ கால் போட்டுத் தருகிறேன்..நீங்க பேசுங்க…” என்று அலைபேசியை எடுத்துத் தந்தான் ராஜசேகர். பேசியவரின் முகம் முடிவில் மலர்ந்திருந்தது.

       அலைபேசியை வாங்கி மீண்டும் ஷர்ட் பாக்கெட்டில் போட்டவன் “தேங்க்ஸ் சார்…உங்க அக்கௌன்ட் நம்பர் சொல்லுங்க…என்று உடனே அட்வான்ஸ் தொகையை நெட் ட்ரான்ஸ்பஃர் செய்து விட்டு வீட்டின் சாவியைப் பெற்றுக் கொண்டு “சார்…நான் கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க…எதுக்கு அவுட் ஹவுசைப் போய் வாடகைக்கு விட்டுகிட்டு…?” என இழுத்தவனிடம்…”இல்லைப்பா..நான் செங்கல்பட்டு மாவட்டக் கலெக்டர்…அடிக்கடி வெளியூர் போக வேண்டி இருக்கும்…அப்போ வீட்டில் செக்யூரிட்டி தவிர பாதுகாப்பா  இருக்கும்தானே..அதுதான்…” என்றவரிடம் மலர்ந்த முகத்துடன் தலையசைத்து விடைபெற்றுக் கிளம்பினான்.

       அவனை அனுப்பிவிட்டு உள்ளே வந்தவரை மனைவியும் மகளும் முறைப்புடன் எதிர்கொண்டனர். “ஏம்பா என் ப்ராஜெக்ட் பத்திப் பேசலை…?” என்று கேட்ட மகளிடம் “அப்பா அரேன்ஜ் பண்ணிட்டேன்டா..” என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு “வயசுப் பொண்ணு இருக்கற வீட்டில இரண்டு பேச்சிலர் பசங்களுக்கு வீடு குடுக்கணுமா..?” என முறைத்த மனைவிக்கேற்ற சமாதானம் சொல்லிவிட்டு உள்ளே சென்று தகப்பனுக்கும் அதே பதிலைச் சொல்லிச் சமாளிக்கத் தொடங்கினார் கங்காதரன்.

       விட்ட ஸ்கிப்பிங்கை மாடியில் சென்று கடலலைகளைப் பார்த்தவாறே தொடர்ந்தவளுக்கு மனம் இனம் புரியாத உற்சாகத்தில் கூத்தாடுவது புரிந்தேதான் இருந்தது. அது காதில் ஹெட்செட்டில் வழிந்த ஷ்ரேயா கோஷலின் ரகசிய சினேகிதனாலா அல்லது அவளது வாழ்வில் இனி நடைபெறப் போகும் முக்கிய நிகழ்வுகளாலா என முடிவு செய்ய இயலாமல் பொங்கித் ததும்பும் கடல் நுரைகளாய் அவளது கன்னி மனம் காத்திருந்தது.

 

Advertisement