Advertisement

கண்மணி நீ வரக் காத்திருந்தேன் – 6 :

       ஸ்கிப்பிங் செய்து கொண்டிருந்தவள் எப்பொழுதும் போலத் தன்னை யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. இது வரை பொது இடத்தில் மட்டுமே அப்படித் தோன்றிக் கொண்டிருந்தது பருவ வயதின் மனக் கோளாறு என எண்ணியவள் இப்பொழுது தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில்…. அதுவும் ஊடுருவும் வெளிச்சக் கூரை வேய்ந்த மொட்டை மாடியில்…”வர வர உன் பிரண்ட்ஸ் சொல்றாப்போல உனக்கு வயசுக் கிறுக்கு ஏறிப் போச்சு தேனுக் குட்டி..” எனத் தன்  தலையில் தானே குட்டிக் கொண்டவள் முகம் கழுவிவிட்டுக் கீழே வந்தாள்.

       வந்தவள் அன்னையிடத்தில் போய் “அம்மா..எனக்கு நியூ இயர் க்ரீட்டிங்க்ஸ் வந்திடுச்சா…?” என்று கேட்டாள்.

         “இன்னிக்குப் போஸ்ட் மேன் வரமாட்டார்ன்னு தெரியாதாடா…அதுவும் இவ்வளவு காலையில…?” என்று கேட்டுக் கொண்டே வந்த தாமோதரனிடம், “உங்களுக்கு வயசாக வயசாக ஞாபக மறதி அதிகமாகிடுச்சு தாத்தா…5 வருஷமா போஸ்ட்ல வரதில்லையே…செக்யூரிட்டி கிட்டெல்ல யாராவது குடுத்துட்டுப் போறாங்க… காமெரா வெச்சுக் கூடக் குடுத்திட்டுப் போறவங்களைக் கண்டுபிடிக்கவும் முடியறதில்லை…புதுப் புது ஆளுங்க…சரி..வயசுப் பொண்ணு இருக்கிற வீட்டில இப்படில்லாம் நடக்குதேன்னு யாராவது தேடிக் கண்டுபிடிக்கறீங்களான்னு பார்த்தா அதுவும் இல்லை…கலெக்டர் பொண்ணுக்கே இப்படில்லாம் நடக்குது…யாரும் எதுவும் கண்டுக்கறதும் இல்லை…” என்று அங்கலாய்த்தவளிடம்,

       “ஆமாமா…இப்படி கிரீட்டிங்க்ஸ் இப்போத்தான்  புதுசா வருதா என்ன…? 15 வருஷமா வந்துட்டுதானே இருக்கு…ஆனாலும் நீ ரொம்பதான் கலெக்டர் பொண்ணுன்னு அலட்டிக்கறே…?       இதெல்லாம் நல்லதுக்கே யில்லை சொல்லிட்டேன்….” என்ற பங்கஜத்தின் குரலை “அம்மா…பசிக்குதும்மா…குளிச்சிட்டு வரேன்” என்ற ஒற்றை வார்த்தையில் அமர்த்தியவள் அவ்விடத்தை விட்டகன்றாள்.

       அவள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த கிரீட்டிங்க்ஸ் அந்த வீட்டின் சோ ஃபா அருகே போடப்பட்டிருந்த டீபாயில் இருந்தது. இந்த முறை அத்துடன் ஒரு வண்ணத்தாள் சுற்றப்பட்ட ஒரு பரிசுப்பெட்டியும் வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்துப் பேத்தியிடம் கொடுத்தார் தாமோதரன். அது எப்படி அந்த இடத்திற்கு வந்தது என யாரும் யோசிக்கவில்லை…வழக்கம் போல யாராலோ யாரிடமோ கொடுத்துவிடப்பட்டு அங்கே வந்ததாக எண்ணிக் கொண்டு பரிசைப் பிரித்தவளது கரங்களை அலங்கரித்தது ஒரு அழகிய பெரிய சங்கு.

       “ஐ! வலம்புரிச் சங்கும்மா…காதில வை..கடல் சத்தம் கேட்கும்…” என்ற தாத்தாவை “நாங்களும் பாரதிராஜா படம்லாம் பார்த்திருக்கோம் தாத்தா…” என்று உதட்டைச் சுழித்துக் கொண்டே சொன்னவள் ”அதை பூஜை ரூமிலே வை தேனு…அப்போத்தான் விசேஷம்…” என்று கூறிய அன்னையிடம் “போம்மா…இது எனக்கு வந்த பரிசு…நான் இதை என் கார்லதான் வெச்சிப்பேன்…” என்று எடுத்துச் சென்று அவளது அறைக்குப் போய் வாழ்த்து அட்டையைப் பிரித்தவள் வாயடைத்துப் போனாள்.

       அதன் அழகில் மனதைப் பறிகொடுத்தவள் எடுத்துக்கொண்டு தனது அலுவலக அறையில் கோப்புக்களுள் மூழ்கியிருந்த தந்தையிடம் அதைக் காண்பித்து “அப்பா…இது என்ன..? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு…ஆனால் நினைவு வரலை…” என்று கேட்டாள்.

       “இது ஜெல்லி ஃபிஷ் மா… ரொம்ப ஆபத்தான விஷயம்…உயிரோட இருக்கும்போது இதைத் தொடக் கூடாது.இதோட கொடுக்குகள் ஒவ்வொரு செல்லிளையும் ஓட்டை போட்டுவிடும் அளவுக்கு வீரியமானது.”

       “தெரிஞ்சிடுச்சுப்பா..எவ்வளவு அழகா சின்னச் சின்னக் கண்ணாடிப் பேழைக்குள்ள பதிச்சு கீ செயின் செய்திருக்காங்க…எனக்கு ரொம்பப் பிடிச்ச்சிருக்கு… என்னோட கார் கீயை இதுல கோர்த்து வெச்சிக்கறேன்..”

       என்று தன்னறைக்கு ஓடிப் போனவள் “எப்படியும் லவர்ஸ்னா கீ செயின் அல்லது பேனா குடுத்தால் பிரிஞ்சிடுவாங்கன்னு சொல்லுவாங்க…இவன் பத்தாவது படிக்கும்போது சின்னச் சின்ன சங்கைக் கோர்த்து செஞ்ச பேனா அனுப்பினான். பன்னிரண்டுக்கு சின்னச் சின்னக் கிளிஞ்சல் சேர்த்து செஞ்ச பேனா…இப்போ இந்தக் கீ செயின்…வீட்டில இவங்க யாரும் அதை அனுப்பிட்டு இருக்கறது யாருன்னு தெரிஞ்சிக்கக் கூட விரும்பாத மாதிரி இருக்காங்க…இவங்க யாரோதான் இப்படி பண்றாங்க”  என்று வீட்டிலிருக்கும் யாரோ தன்னைக் கலாய்க்கவே இப்படி செய்வதாக எண்ணிக்கொண்டாள்.

அதே நேரம்….

       தனது அலைபேசியில் எதையோ மந்தஹாச முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் அலைஅரசன்.

       உள்ளே வந்த ராஜசேகர்..அவனது அலைபேசியை எட்டிப்பார்த்துவிட்டு அவனது முதுகில் தட்டிவிட்டு “ஏண்டா.. நீ உன் லவரைப் பார்க்கணும்னா நேர்ல போக வேண்டியதுதானே…என்னை ஏண்டா இதில கோர்த்து விடறே? ஆனாலும் மச்சி தங்கச்சி சூப்பர்டா…என்ன ஒரு அழகு…? ப்பா….பேய் மாதிரியே இருந்தாடா…”

       “போடா..அவ எப்படி இருந்தாலும் ஷி இஸ் மைன்…அவளுக்கு முதல்ல என்னைப் பிடிக்கறதுதானே முக்கியம்…அதை நினைத்து நானே கவலைல இருக்கேன்…”

       “கவலைப் படாதே மச்சான்..என் தங்கச்சிக்கு உன்னைக் கண்டிப்பாப் பிடிக்கும்…” என்றவனின் அலைபேசி “தேன்..தேன்..தித்திக்கும் தேன்…” என்று சிணுங்க…”பை மச்சான்..” என்று அங்கிருந்து செல்லுடன் நகர்ந்தான் ராஜசேகர்.

மறுநாள்:

       காலையிலேயே காலேஜுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த தென்றல் அன்னை கேட்டதற்காக அவுட் ஹவுஸ் பக்கம் கறிவேப்பிலை பறிக்கச் சென்றவள் அங்கு அவுட் ஹவுஸ் வாசலில் அவனைக் கண்டு திகைத்தாள்.

       “அடப்பாவி,,,இவனா…? இது நம்ம வீடுன்னு தெரிஞ்சு வந்திருக்கானா இல்லை தெரியாம வந்திருக்கானா தெரியலையே…?இவன் கண்ணில படாம சீக்கிரமே எஸ் ஆகிடணும்” என்று வந்த வேலையை முடித்துக் கொண்டு விரைந்தவள் அவன் அவளைக் கண்டதைக் காணவே இல்லை.

       அவளது நினைவுகளில் அவனைக் கண்ட முதல் நாள் நினைவு வந்தது. அவள் இளநிலை படிக்கும் மேலாண்மைப் பிரிவின் மாணவியர் தலைவியான அவளிடம்  இரு நாட்களில் அவர்கள் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ செய்யவிருக்கும் மிகப் பெரிய ஏற்றுமதிக் கம்பெனிக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் பொறுப்புக் கொடுக்கப் பட்டிருந்தது. அந்தக் கம்பெனியின் சிறப்பு – வரலாறு – சரித்திரம் – என்றெல்லாம் புகழப் பட்டவற்றுள் மிக முக்கியமான விஷயம் அவற்றை நடத்துவதில் 97% பெண்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

       அதற்குரிய ஏற்பாடுகளை பெண்களுக்குப் பிடித்த வகையில் செய்திருந்த அவளுக்கு இன்டர்வியூ நடத்த விதமோ சற்றும் பிடிக்கவில்லை. அதற்கான ஒரே காரணம் அந்த நெடியவன்…அவனுடைய கண்கள்…அவனது கரங்கள்..அவனது உயரம்…அவனது கார்நிறம்…அவனது பேச்சு…அவனது அழுத்தம்…அவன் மனதில் நினைப்பதைக் கண்கள் வழியேயோ அல்லது முகம் வழியோ தெரிவிக்காத அவனது உடல்மொழி மற்றும் பாவனைகள்…மொத்தமாய் ஒற்றை வரியில் அவன்…அவன் மட்டுமே…

       அறிமுகப் படலம் முடிந்ததும் அவன் “ஹலோ…” என்று கை கொடுத்தபோது அவனது நீட்டப்பட்ட கரு நிறக் கரங்களுக்குள் முதன் முறையாகப் பதிந்த அவளது கரங்கள் கைகுலுக்குவதற்காகவே  இருந்தாலும் அவளுடைய தகப்பனின் தோளில் அவள் சாயும்பொழுது அவள் உணரும் அதே பாதுகாப்பான உணர்வைக் கொடுத்தது கண்டு  சற்றே திடுக்கிட்டாள்.

        “ஹாய்..எனச் சற்றே தடுமாறியவள் சமாளிப்பாய்…” ஹாய் சார்…வெல்கம் டு அவர் கேம்பஸ்…” என்று கையிலிருந்த பூங்கொத்தைக் கொடுத்து சொன்னவள் “ஐ ம் அலை அரசன்… அண்ட் திஸ் இஸ் ராஜா…” என்று அறிமுகப் படுத்தியவனின் முகம் அவள் காட்டிய “உங்க கம்பெனியில் எல்லாருக்கும் இப்படித்தான் ராஜா…அரசன்..அப்படின்னு பேர் வெப்பிங்களோ என்ற பாவத்தைப் படித்தவன் உள்ளுக்குள் கொஞ்சம் வாடவே செய்தான்.

      

       எதையோ சொல்லத் துடிக்கும் அவனது கண்கள், அவளது சிந்திக்கும் திறனைச் சிதறடிக்கும் அவனது கரங்கள்…அவளை நிமிர்ந்து பார்க்கச் செய்யும் அவனது உயரம்…எல்லாம் அவளை அன்று அதிகம் தொந்தரவு செய்தது அவளுக்குச் சற்றும் பிரியமில்லாத விஷயமாக இருந்தது.

       அன்று அவளுடைய வகுப்புத் தோழிகளிடம் கேட்ட கேள்விகள்…எல்லாவற்றையும் விட முக்கியமாக அனைவரையும் இண்டர்வியு செய்து முடிந்த பின் மட்டுமே அவளை நேர்காணல் செய்தது எல்லாம் அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது…அது மட்டுமன்றி பெண்கள் எப்படி இருக்கணும்னு நீங்க நினைக்கறிங்க என்ற கல்வியை எல்லாரிடமும் கேட்டது அவளுக்குச் சற்றும் பிடிக்கவில்லை.

       இந்தக் கம்பெனி கால் லெட்டர் மட்டும் குடுத்துட்டு வேலை குடுக்காம எஸ் ஆகிற லிஸ்ட் போல…இப்படியா ஒரு ஸ்டுடென்ட் ஐ கூடவே வெச்சிட்டு இன்டர்வியு செய்வாங்க என்று எண்ணியது அவளது கருத்துக்கு வலு சேர்த்தது.

       “பெண்கள் பத்தித் தனியா நினைக்க என்ன இருக்கு சார்…? உருவத்தைக் குறிக்கரதுக்கான சில வேறுபாடுகள் அவர்கள் உடலில் இருக்கு…மனதும் திறமையும் எல்லார்க்கும் ஒண்ணுதானே…? இன்ஃபாக்ட் அவங்களுக்கு இருக்கற மன வலிமை ஆண்களுக்கு இருக்காது…ஏன் நீங்க இதே கேள்வியை எல்லார்கிட்டேயும் கேட்கறிங்க ன்னு தெரிலை…” என்று பொரிந்து தள்ளியவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன் வெறுமனே “ஓகே…யு மே கோ நவ்..” என்று மட்டுமே சொல்லி அவளை அனுப்புவான் என்று எதிர்பார்க்கவில்லை.

       பதிலுக்கு அவன் எதாவது சொல்லுவான் என எண்ணியவளுக்கு அவனது இந்த பாவனை சற்றே ஏமாற்றம் தந்தது.அதனினும் அதிர்ச்சி அன்றே வந்த கேம்பஸ் இண்டர்வியூவில்  செலக்ஷன் லிஸ்ட்டில் அவள் பெயர் இல்லாதது…கோ ஆர்டிநேட்டர் என்ற நிலையில் அவள் வெறும் ஐம்பது பேரை மட்டுமே செலக்ட் செய்ததற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள நினைக்க அவளுக்குக் கிடைத்ததோ “மேடம்…உங்களுக்கு விஷயம் தெரிவிக்கப் பக்குவம் இல்லைன்றதாலே பிரின்சிபாலுக்கு மட்டும் எக்ஸ்ப்லேநேஷன் குடுக்க சொன்னாங்க…” என்ற அவனது ஊழியரின் பதிலில்  நொந்தே போனாள் தென்றலரசி.

       மிகுந்த கோபத்துடன் டைனிங் டேபிளில் இருந்த குளிர் நீரை எடுத்துப் பருகியவள் அன்னையின் சூடான பூரி கிழங்கின் வாசத்திலும் “சாப்டுட்டுக் கிளம்பு தென்றல்..நேரமாகுது பாரு” என்ற குரலிலும் நிகழ்வுக்கு வந்தவள் உண்டு முடித்துக் கிளம்பும்போது கையிலெடுத்த கார் கீ செயின் அவளது முகத்தில் புன்முறுவலை ஏற்படுத்தியது. அவுட் ஹவுசில் இருக்கும் அவன் ராஜாவுடைய தோழனாகத்தான் இருக்க வேண்டும். அன்றே அவர்கள் இருவரும் மிக நெருக்கமானவர்களாகத்தான் தோன்றியது. அவளது  வீட்டிற்கே அடிக்கடி வந்து போக வேண்டியிருக்கும் அவன் அவளிடம் தனியாக மாட்டாமலா போகப் போகிறான்…என எண்ணியவாறே “அப்போ உன்னை வெச்சு செய்யறேன் பாரு” என்று அப்படி ஒரு சந்தர்பத்திற்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள் தென்றல்.

 

Advertisement