Advertisement

கண்மணி 8:
தீர்க்க முடியாத பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் தான் கிக் இருப்பதாக திருவின் எண்ணம்..ஆகையால் இரவுக்குள் இவ்விசயத்தை முடித்தே தீர வேண்டும் என முடிவு செய்து கொண்டான்.
கணவன்  மீது கணக்கில்லாமல் கடுப்பு இருந்தாலும் அவனின் கண்ணோடு ஒரு கனெக்ஷனில் தான் இருந்தாள் யாழ்முகை. அவளுக்கும் அவனுக்குமான சண்டை அவர்களோடு தான்… அதை துளி கூட யாரும் கண்டுகொள்ள கண்மணி விரும்பவில்லை… அதனால் க்ளோஸ்-அப் புன்னகையோடே கணவனோடு உலாவினாள்.
இரவில் கேம்ப் பையர் நடக்க, ஜோடி ஜோடியாக அனைவரும் ஆடவும் பாடவும் செய்தனர்… திருவுக்கு நன்றாக பாட வரும். அதனால் அவனை அயன் பாட சொல்ல, அவனும் கண்மணியைப் பார்த்துக் கொண்டே அவன் கையில் இருந்த கிடாரை இசைத்துக் கொண்டே “கண்மணியே…! காதல் என்பது கற்பனையோ.. காவியமோ.. கண் வரைந்த ஓவியமோ..” என பாடவும் பரவச நதி ஒன்று பரவி பாவை நெஞ்சுக்குள் ஓடியது… உடல் வானிலையால் குளிர உள்ளமோ உடையவனால் குளிர, அவள் மேனியை சால்வையால் நன்றாய்ப் போர்த்திக் கொண்டாள். அவன் பாடி முடிக்கவும் ஓவென அனைவரும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய,ஒரே கிண்டல் தான்.
திருவின் முகம் பார்க்க தயக்கம் தடையாய் இருக்க, கண்மணி கண்ணாளனின் முகம் பாராமல் தவித்துப் போனாள். மொத்தமாய் நட்சத்திரப் போர்வையில் வானம் வசப்பட்டிருக்க அனைவரும் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடிலுக்குள்  சென்றனர்.
யாழ்முகை உள்ளே செல்ல முனைய அவள் கையைப் பிடித்தவன், “வா கொஞ்ச நேரம் இங்கேயே இருப்போம்..” என சாரல் வீசிய அந்த மலை உச்சிக்கு அழைத்துச்சென்றான்.
அங்குள்ள டென்ட்டுகள் எல்லாம் மலை மீதே அமைக்கப்பட்டிருக்க, நடுவே பிரமாண்டமான கேம்ப் பையரின் அனல் அந்த சாரலுக்கும் குளிருக்கும் இதமாய் இருக்க இணைகளோடு இணைந்திருப்பது இன்னும் இதமாய் இருக்க அனைவரும் இன்புற்றிருந்தனர்.
அந்த இதத்துக்கு இன்னும் இனிமை சேர்க்கும் விதமாய் ஒருவர் கிடாரில் மெல்லிய இளையராஜாவின் இசையைக் கசிய விட, அது உள்ளத்தையும் உயிரையும் வருடிச் சென்றது. எத்தனை காலம் ஆனாலும் இளமைக் குறையா இசையைப் படைக்க இசை ஞானியால் மட்டுமே முடியும்.
திருவின் இழுப்புக்கு இசைந்து கொடுத்தவள் அவனோடு அந்த மலையில்  வானோடு நிலம் உறவாடும் இடத்தில் அமர்ந்தவள் அவனைப் பார்த்து, “இன்னும் கோவம் இருக்கு.. நான் சமாதானம் ஆகல..” என அறிவித்தாள்.
அவன் கூப்பிட்டதும் வந்து விட்டதற்காய் அவன் அவள் கோபம் கோவிந்தாவாகி விட்டதாய்  நினைத்துக் கொண்டால்..?
“அது இருக்கட்டும் விடு..இந்த சூழ்நிலை நல்லா இருக்குல்ல யாழ்…அந்த இருட்டு…. இந்த இசை…. இந்த ஈரக்காத்து.. இந்த நெருப்பு..சொர்க்கமா இருக்கு…எனக்கு இதையெல்லாம் ரசிக்க சொல்லிக் கொடுத்தது அப்பாதான்..வாழும் போது ஒவ்வொரு நொடியும் ரசிக்கனும்னு சொல்வார்..அவரோட அடுத்த தெருக்கு போறது கூட ஒரு சுகம் தான்..
அந்த ராயல் என்பில்டுல…அவரை இறுக்கிப் பிடிச்சு நான் உட்கார்ந்துட்டு போறது இன்னும் நினைவில இருக்கு..ம்ம்.. எனக்கும் சீக்கிரம் ஒரு பையனோ பொண்ணோ வேணும் யாழ்..இது மாதிரி விசயத்தை ரசிக்கும் போது தானா அப்பா  நியாபகம் வந்துடுது. எட்… நாட் சேட் மெமரீஸ்…அவர் இப்போ இருந்திருந்தா அவரோட சேர்ந்து சந்தோசமா ரசிச்சிருப்பேன்..” என அவன் இதயத்தோடு இயைந்த அவனது தந்தையோடான நினைவுகள் முதல் முறையாகப் பகிர்ந்து கொள்வதை அவள் ரசனையோடு   பார்த்திருந்தாள்.
ஆனாலும் மனம் ஓவர் டைம்  பார்த்து மைன்ட் வாய்ஸில்  அவனைக் கலாய்க்கத் தவறவில்லை.
“திரு நாவுக்கரசா…!! ஏற்கனவே நண்பனைக் கூட்டிட்டு வந்த தளபதிடா நீ..இப்ப அப்பாவையும் மிஸ் செய்றன்னு சொல்றியேடா…விட்டா ஹனிமுன் போய் பேமிலி உருவாக்கமா அதை பேமிலி டூர் ஆக்கிடுவ போல இருக்கே…” என தோன்ற சிந்தாமல் சேமிப்பாய் சிக்கனப்பட்டு போகிறது அவளது இதழோர சிரிப்பு.
முதல் முறையாக அவன் மனம் திறக்கையில்  கலாய்த்து காமெடி செய்யக் கூடாதென அவள் அமைதியாய் இருக்க,அவன் தந்தையுடனான தனி உலகில் சஞ்சரித்தவனாய்  இருந்தான்.
“மாமாவ. மிஸ் செய்றீங்களா .?” என இவள் ஆதரவாய் அவன் கைப்பிடித்து கேட்க,
“ஹ்ம்ம்..ரொம்ப….” என்றவனின் கண்கள் பளபளத்தாற் போல் தோன்ற,
“என்னப்பா அழறீங்களா என்ன..?”  என யாழ் கேட்க
தொண்டைக்குள் தன் துயரம் அடக்கியவன், “ஓய்..என்ன விட்டா என்னை அழுமூஞ்சி ஆக்கிடுவ போல..கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி  ஏதோ கோவம் இருக்குன்னு சொன்ன…இப்ப எங்க போச்சாம்..உன்னோட அந்த கோபம்..?” என இயல்புக்கு மீண்டு வர அவன் முயற்சி செய்வதை உணர்ந்தவள்,
“அதான் கண்மணி கண்மணின்னு பாடி என் பாழாப்போன மனசை சாய்ச்சிட்டீங்களே….அப்புறம் எங்க அந்த கோவம் இருக்கும்.கோவத்துக்கு இறக்கை முளைச்சி  பறந்து போய் அந்த மலை உச்சியில உட்கார்ந்திருக்கு..” என அவள் பாவனையாக சொல்ல,
“வாழ்க்கையை அனுபவிச்சு வாழனும்டி” என்றான் ரசனையோடு.!
“சும்மா…எல்லாத்துக்கும் பயப்படக் கூடாது…பாரு…கல்யாணம் செய்யக் கூடத்தான் நான் பயந்தேன்…இப்ப உன் கூட ஜம்முன்னு  வாழலையா…?பயந்திருந்தா இப்படி உட்கார்ந்து டக டகவென கொட்டும் இசையில் ஓகே என் கண்மணி மடியில்னு பாட முடியுமா…முடியுமா…மா…?” என பாடி ராகம் போட்டுக் கொண்டே அவள் மடியில் சாய,அவளுக்குள் அடங்க மறுக்கிறது ஆனந்த கூச்சல் ஓன்று.
அதற்கு இணையாக அச்சமும் கூச்சலிட, அவன் தலையைக் கோதி, “என் பேச்சைக் கேட்க மாட்டீங்ளா… நான் எப்படி பயந்தேன் தெரியுமா..?தோழா படத்துல கூட நாகார்ஜூன் இது மாதிரி சாகசம் செய்றேன்னு சரிக்கி விழுந்துடுவார்…” என  தீடீரென்று சொன்னாள்.
சொல்ல நினைக்கவில்லை ஆனால் சொல்லாமல்  இருக்க முடியவில்லை. கரையான் போல் கண்மணியின் காதல்கொண்ட மனதை  கரையான் போல் கவலை அரிக்க அவள் கேட்டே விட்டாள்.
அதை திருவும் உணர்ந்தவனாய், “அதே படத்துல அவ்வளவு ஆனா பின்னாடி நாக் சார் என்ன செய்வார்?? பறக்கனும்னு ஆசைப்படுவார்இல்லையா..? அதான் அவரோட உயிர்ப்பு…அது தான் அவரை மீட்டெடுக்கும்….கனவுகள் கூட நம்ம உயிரோட கலந்துட்ட ஒரு விசயம்டா…எஸ் எனக்குப் புரியுது..உனக்கு என் மேல பாசம்..அன்பு அதனால வந்த பயம்..ஏன்னா அதைப் படத்துல அவர் சொல்வார்… அன்பு இருக்க இடத்தில பயம் இருக்கும்.. நமக்குப் பிடிச்சவங்க நல்லா இருக்கனும்னு பயம்…ஆனா இதெல்லாம் எனக்குப் பிடிச்ச விசயங்கள்டா யாழ்…அதை நான் உன் மேல திணிக்கல இல்ல..அது போல…என்னோட விருப்பத்துல தலையிடாதம்மா..உன் பயமே என்னைத் தோக்க வைக்கலாம்..இது போல அட்வெஞ்சர்  ஸ்போர்ட்ஸ் டேஞ்சர்னா ஏன் கவர்மென்டே அதை அனுமதிக்கனும்..?
ஆந்திராவுல இதுக்காகவே இப்ப  கடப்பா மாவட்டத்துல ஒரு அகாடமி திறக்கப் போறாங்க…. இது மேல எனக்கு ஒரு ஆசை..பயத்தோடு போட்டி போடனும்னு ஒரு வெறி…உயர உயர வானத்துல பறந்து பறந்து அந்த காத்த உணரனும்னு ஒரு ஆசை….இது போல மலை மேல ஏறி ‘ஓ’ன்னு கத்தனும்….என்னோட ஆசையெல்லாம் இப்படி நீ பயந்து போய் தடுத்தாஎனக்கே உன்னைக் கஷ்டப்படுத்துறோம்னு குற்றவுணர்வா இருக்கும்மா…” என அவள் சால்வை நுனியைக் கைகளால் சுற்றிக் கொண்டே சொல்ல அவளும் அவன் பேச்சில் வழக்கம்போல் மயங்கிய சமயம் ,
அவள் மனசாட்சி, “எப்பவும் மயக்கம் தான்..அவன் எப்படி உன்னைக் கன்வின்ஸ் செய்றான்.. அவனோட பெட்டர் ஹாப் நீ..கொஞ்சம் பெட்டரா கன்வின்ஸ் செய்ய மாட்ட…? மாமா நீங்க சொல்றதெல்லாம் சரிதான்…ரேஞ்சுக்கு மண்டையாட்டிட்டு அப்புறம் எனக்குள்ள போட்டு குழப்பி என்னை சீக்கிரமே  ஹார்ட் அட்டாக் வரவைச்சு காலி செஞ்சுடவ போலயே” என அட்டாக்கிற்கான வார்னிங் கொடுக்க,
‘நோ…. நோ…அல்பாயுசல போறதா…’ என இவள் அரைக்கூவல் விடுத்து, “பயத்துக்கு பயப்படாம நீங்க மட்டும் இருந்தா போதுமா.. நானும் அப்படி பயப்படாம இருக்க வேண்டாமா..?” என அவனைத் திருப்பிக் கேள்வி கேட்க,
அந்த கேள்வியில் உள்ள நியாயம் அவனை சுட, பயமின்றி அவன் மட்டும் இருந்தால் போதுமா..? அவனின் சரி பாதியும் அவ்வாறு இருக்க வேண்டாமா…?
திருவுக்கும் யாழ் சொல்ல அவளின் நிலை புரிந்தது. தன்னுடையை அத்தனை முடிவுகளுக்கும் மண்டை ஆட்டும் மனைவி இதுக்கு மட்டும் ஒத்துக் கொள்ளாமல் பிடிவாதம் பிடிக்கிறாள் என்றால் அவளது பயம் அவனுக்குப் பிடிபட, மனைவிக்காக அவள் நிம்மதிக்காக சில காலம் இந்த சாகசங்களைத் தள்ளி வைக்க நினைத்தான்.
உறவுகளைத் தக்க வைக்க சில நேரம் விட்டுக்கொடுத்தல் அவசியம். இல்லாவிடில் அவ்வுறவையே விட்டுக் கொடுக்கும் நிலை ஏற்படலாம். ஆகையால் மனைவிக்காக திரு தன் நிலையை விட்டுக் கொடுக்க முனைந்தான்.
“உனக்குப் பிடிக்கிற வரைக்கும் நான் இதெல்லாம் செய்ய மாட்டேன்… அதுமட்டுமில்லை இதெல்லாம் செய்ய எங்க இனி நேரம் இருக்கப் போகுது எனக்கு…?”
“நிஜமாவா…? உங்களை நம்ப முடியாதே..உடனே சரண்டர் ஆகுற ஆள் இல்லையே நீங்க…என்னவிசயம்…செப்பு…செப்பு..” என அவன் முடியை இழுக்க
“ஹா….வலிக்குதுடி….இவ்வளவு பெரிய ரவுடியா நீ..என்ன செப்பு சொப்புன்னுட்டு…அதான் சொல்றேன்ல…அப்புறம் என்ன  நிஜமான்னு ஒரு கேள்வி…? ஆனா உன் பயம் போகுற வரை இப்படி நான் போகமாட்டேன்..அது மட்டும் சத்தியம்..”
“ம்ம் சரிங்க… பட் என்னோட பயம் போச்சுன்னா..ஓகே…”
“அதைப் போக வைக்கிறது தான் என்னோட வேலை…” என அவனும் சொல்ல அவளைத் தீண்டிய குளிர் காற்றில் உடல் நடுங்க, அவள் சால்வையை இழுத்துப் போர்த்தினாள்.
“சரி…வா…சண்டை போட்டோம்ல…வா உன்னை சமாதானம் செய்யனும்” என அவன் அவளின் மேல் இருந்து எழுந்து கொள்ள,
அவளும் மெதுவே எழுந்து, “அதான் என்னை சமாதானம் செஞ்சாச்சே இன்னும் என்ன..??” என அவன் எதைப் பற்றி பேசுகிறான் என அறிந்தும் அறியா பாவனையில் கேட்க,
அவனோ அவளைப் பார்த்து  நக்கலாய்ப் புன்னைக்க, அவள் அவனை முறைக்க, அந்த கூதக்காற்றில் அவள் சால்வை பறக்க.. அதை அழகாய் அவன் பிடிக்கையில் அவளோடு இடித்து… சால்வையை அவனுக்கும் அவளுக்குமாய் சேர்த்துப் போர்த்திக் கொண்டான்.
அவன் செயலில் செல்ல சிரிப்பை சிதற விட்டவள், அவன் தோளில் சாய்ந்து கொள்ள “நோ நோ கண்மணி…இப்ப நீ கோவப்படனும்.. நம்ம டென்ட்டுக்குள்ள போன பின்னாடி தான் உன்னை நான் சமாதானம் செய்யனும்.. நீயும் சமாதானம் ஆகனும்..” என சீரியசாய்ப் பேச
“உங்களை..” என  தலையில் அடித்துக் கொண்டு நடந்தாள்…ஒரே சால்வைக்குள் இருந்தவர்கள் ஒரே போர்வைக்குள் நுழைய ,
திருவோ ஹஸ்கி வாய்ஸில் “நம்ம ப்ர்ஸ்ட் நைட்லாம் வரலாறுல பொறிக்க வேண்டியது யாழ்…?” என அந்த கும்மிருட்டில் சிறு சூர்ய கீற்றாய் விளக்கொன்று எரிய…வானில் நட்சத்திரப்பூக்கள்  மின்னும் அந்த நிலவொளியில் பாதி மலர்ந்த தாமரையாய் அவள் முகம் தோன்ற அதைக் கைகளால் அளந்த வண்ணம் ரசனையோடு சொல்ல,
அவன் தீண்டலில் கரைந்தவள் “பார்த்து வரலாறுல எல்லாத்தையும் பொறிச்சா கொலஸ்ட்ரால் வரப்போகுது….நம்ம கதையாவது அவிச்சு வைப்போம்!” என அவனை வம்பிழுக்க,
“உன்னை..! எங்க பேச கத்துக்கிற இப்படி நீ…?” என அவன் அவள் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்துக் கேட்க,
“ம்ம்… திரு திருன்னு ஒருத்தர் இருப்பார்..அவர் கூட சேர்ந்தா இப்படி தான் ஆகிடுவாங்களாம்…” என அவன் தோளில் கொடியாய்ப் படர்ந்து  சொல்ல,
“அப்படியா….அந்த திரு என்ன என்ன செய்வானாம்..?”
“அதெல்லாம் வரலாறுல அவிக்க கூட முடியாது..வெரி சீக்ரெட்..காதல் கான்பிடென்ஷியல் டேட்டா..” என விழிகள்  விரிந்து அதில் சிரிப்பைப் படர விட்ட வண்ணம் சொல்ல ,
“ஆமா..ஆமா..இதெல்லாம் ஹைலி கான்பிடென்ஷியல் தான்…” என அவனும் ஒத்துக் கொண்டான்.
அப்படியே குளிர் நிலவோடு சேர்ந்து அவர்கள் தேனிலவு அடுத்து  வந்த நாட்களில் இனிதே நிறைவுற்றது.

Advertisement