Advertisement

கண்மணி 7:
மைசூர் சென்று இறங்கியவர்கள் ஹோட்டலில் அறை புக் செய்து தங்கினர். யாழ்முகையை சிறிது நேரம் ஓய்வெடுக்க சொன்னவன் குளித்து விட்டு ரெடியானான்.
கறுப்பு டீ-ஷர்ட் மேல் குளிருக்காக, ஸ்வெட்டர் அணிந்து ஜீன்ஸில் படு அம்சமாய் இருந்தான் திருநாவுக்கரசன்.
“யாழ் எழுந்திரு!” என அவன் டி.வியை ஆன் செய்து பாடல்களை ஒலிக்க விட, அவளோ போர்வைக்குள் புதைந்து முகத்தை கூட காட்டாமல்,
“ப்ளீஸ்பா என்னால இதை விட்டு வெளியவே வர முடியாது போல ரொம்ப குளிருது” என வாய்த் தந்தியடிக்க சொல்ல, கண்ணிமைக்கும் நொடியில் கண்மணியின் கணவன் போர்வையை இழுத்து அதற்குள் நுழைந்து மனைவியை இறுக்கமாய் அணைத்தான்.
“இப்ப குளிருதா?” என்றான் அவள் காதருகே அவன் பேசவும் வெப்பக்காற்று அவளை உரசி அவளை சிலிர்க்க செய்தது.
“இல்ல” என்றாள் மெல்லிய குரலில்.
அவளை இன்னும் நெருங்கியவன் “அப்போ இப்படியே இருக்கலாமா?” என்றான் குழைந்த குரலில்
“ஹ்ம்ம்” என அவள் சம்மதம் சொல்ல,
“அப்போ ஓகே” என அவன் அவள் கன்னத்தில் முத்தமிட மயக்கத்தில் இருந்தவள்,சட்டென கலைந்து
“அய்யோ என்ன செய்றீங்க காலையில? விடுங்க ஊரை சுத்தனும்னு வந்துட்டு உங்க ப்ரெண்ட்ஸ் என்ன நினைப்பாங்க”
“அவன் ஒன்னும் நினைக்க மாட்டான். பாரு அவன் இன்னும் ரூம் விட்டு வரல .. நீ தான இப்படியே இருக்கலாம்னு சொன்ன?? உன்னை முதல்ல சுத்திட்டு அப்புறம் ஊரை சுத்துறேன்டி” என்றவன் அவளை சுற்ற முயற்சி செய்தான்.
இவ்வளவு சம்பாஷனைகளும் இருவரும் போர்வைக்குள் இருக்கும் போதே நடைப்பெற்றது. ஹஸ்கி வாய்ஸில் இருவரும் பேசுவது அந்த காலை நேர அமைதியை அறைக்குள் ஊடுருவிய குளிர்காற்றோடு சங்கமித்து சங்கீதமாய் ஒலித்தது. ஆம் சரசசங்கீதம்!!
“என்னங்க டைம் ஆகுது” என அவள் போர்வையில் இருந்து தலையை வெளியே நீட்டி சொல்ல திருவும் அவளைப் போல் தலை நீட்டினான். தலைவனவன் தலைவியின் நெற்றியில் முட்டி “ அப்போ எழுந்திரு யாழ்! பெட்ல இருந்துட்டே டைம் ஆகுதுனு சொன்னா எப்படி??” எனவும்
“குளிருதே!” என்றாள் பாவமாய்! நிஜமாகவே அவளுக்கு தாங்க முடியாத குளிராகத்தான் இருந்தது.
“உன்னை” என்றவன் கட்டிலை விட்டு இறங்கி போர்வையோடு யாழ்முகையைத் தூக்கி பாத்ரூம் வாசலில் விட்டவன், “குளிராத்தான் இருக்கும்…ஹீட்டர் இருக்கு சோ டக்னு குளிச்சிட்டு வா. இந்தா இந்த டிரஸைப் போட்டுக்கோ… “ என சொல்லி ஜீன்ஸூம் குர்தாவும் கொடுத்தான்.
வெறும் குர்தாவும் ஜீன்ஸூம் மட்டும் குடுத்தால் போதுமா??? என எண்ணி தலையில் தட்டியவள் “லூசு போய் பேக்கை எடுங்க” என்று அவனை அதட்ட, அவன் தந்தவுடன் கதவை சாத்தி அவளுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டாள். குளித்து விட்டு அவள் வெளியே வந்ததும்,
“இப்போ குளிர் போச்சா?” என அவள் பின்னால் நெருங்கி நின்று கேட்கவும்,
“போச்சு போச்சு “ என்றபடியே விரைந்து ரெடியானாள்.
கண்ணாடி முன் நின்று பொட்டிட்டவளின் பின்னால், கைகோர்த்து வளைத்தவன் அவள் தலையோடு தலை மோதி கன்னம் உரசி நின்று, “குளிருதா?” என்றான்.
“நான் ஸ்வெட்டர் போட்டு விட்டேன் திருநாவுக்கரசரே!” என அவள் சிரிக்க,
“உன்னை..! இரு இனி உன் ஸ்வெட்டரை ஒளிச்சு வைச்சுடுறேன்” என்று மிரட்டினான் அவளை. அவர்கள் ரெடியானதும் இவாவை அழைக்க, அவர்களும் வந்து சேர அன்று முழுவதும் மைசூரை சுற்றினார்கள்.
பகலில் ஊரைச்சுற்றிப் பார்த்து இரவில் அவளைச் சுற்றிப் பார்த்து என  ஒரு பர்ஃபெக்ட் ஹனிமூன் கொண்டாடினான் திருநாவுக்கரசன். கண்மணி சிறு சுணக்கத்தையும் உணரவில்லை.
அவனுள் இருக்கும் சுகநொடிகள் ஆழ்மனதில் சேமித்து வைத்தான். இவாவும் அயனும் கைகோர்த்துக் கொண்டு அவர்கள் உலகில் சஞ்சரித்தனர். இவர்களுக்கு நடுவே வரவே இல்லை. சாப்பிடும் போது மட்டுமே நண்பர்களுக்கிடையே கேலியும் கிண்டலும் இருக்கும்.
அன்று இரவு யாழ்முகை கணவனிடம், “அதான் பேலஸ், கோவில் எல்லாம் போயிட்டோமே இன்னும் என்ன ப்ளான்?” என கேட்க,
“நாளைக்குத்தான் ரியல் ட்ரிப்பே பான்ஃபையர், ட்ரக்கிங்லாம் உண்டு. இப்போசீக்கிரம் தூங்கு யாழ்” என சொல்லி விட்டு அவளை நெருங்கிப் படுக்க,
“தூங்குன்னு சொன்னீங்க? ஹம்ம்! இப்போ என்ன???” என இவள் கிண்டலாய்க் கேட்ட த்வனியில்,
“உன்னை தாண்டி தூங்கச் சொன்னேன்! நான் தூங்க மாட்டேன் நீ தூங்கு” என அவள் கன்னத்தில் முத்தமிட,
“உங்களை!” என அவள் அவன் கன்னத்தைக் கிள்ளி விளையாட, இவன் அவள் கண்களுக்குள் தன் கண்ணிலிருந்து காதலை புகுத்தி அவளைப் பார்வையாலேயே தன்னுள்ளே புதைத்தான்.
“உனக்குப் பிடிச்சிருக்கா?? முதன் முதலா என் கூட வந்திருக்க ஹவ் டூ யூ ஃபீல்?” என்றான்.
“ம்ம் எதுவும் எனக்கு சொல்லத் தெரில பட் வித் யூ ஐ ம் ஹேப்பி. உங்க கூடவே இப்படி இருபத்தி நாலு மணி நேரமும் இருக்கிறது. எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றாள்.
முகம் முழுக்க மகிழ்ச்சியும் மலர்ச்சியுமாய் ஆனால் அடுத்த நொடியே அதற்கு ஆப்பு வைத்தான் அவள் கணவன்.
“யாழ்! இந்த நாலு நாள் தான் உன் கூட இருக்க முடியும். அதற்குப் பின்னாடி கம்பெனி டெவலப் பண்றதுல என்னோட கவனம் போய்டும். வீட்டுக்கும் சீக்கிரம் வர முடியாது… நிறைய ட்ராவல் செய்ய வேண்டியிருக்கும். அபிஸீயல் ட்ரிப் ஸோ உன்னை அழைச்சிட்டுப் போக முடியாது. அப்ப நீ முகத்தை தூக்கி வைச்சு சண்டைப் போடக் கூடாது” என்று தன் நிலையை நல்ல விதமாகவே சொன்னான்.
“நான் சண்டைப் போடுவேன்” என யாழ்முகை சொல்லவும் திருவுக்கும் கோபம் வர அவளை முறைக்க,
“என்ன முறைப்பு? சண்டை போட்டா சமாதானம் செய்யணும் புரிஞ்சுதா?” என்றவுடன் “யாழி! யாழி! என் செல்ல யாழி” என்று கொஞ்சியவன் அவளை உச்சி முகர்ந்து “மிஸஸ்.திருன்னு ப்ரூவ் பண்ற நீ” என்றான்.
மறுநாள் பதினொரு மணி போல் குடகுமலை என்றழைக்கப்படும் கூர்க் சென்றனர். தலைகாவிரி தொடங்கவும் இடமான கூர்க் இயற்கை விரும்பிகளின் இஷ்டமானதொரு இடம்.
கேம்ப் அமைத்து ட்ரெக்கிங், பான்ஃபையர், ஜிப்லைன் என மலைப் பிரதேசத்துக்கான சாகசங்கள் அனைத்தும் செய்து தரும் நிறுவனம் மூலம் அவர்கள் இங்கு வந்திருந்தனர். அது போலத்தான் திருநாவுக்கரசனின் “கார்னர்ஸ் ஆஃப் தி எர்த்” வெறும் ட்ராவல் ஏஜென்ஸியாக மட்டும் இல்லாமல் உலகத் தரம் வாய்ந்த ட்ராவல் மேனேஜ்மென்ட் நிறுவனமாக உருவாக்குவதே திருவின் எண்ணம். வெறும் சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்லாமல் அங்கு இது போன்ற சாகசங்கள் அந்த ஊருக்கே உரிய உணவு வகைகள், கேம்ப், டென்ட் எல்லாம் அமைத்து “100% ஹாலிடேஸ்” என்பதே திருவின் குறிக்கோள்.
மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குடகுமலையில் தான் பொன்னி நதியென புகழப்படும் காவிரி தோன்றுகின்றாள். சங்க காலத்தில் பொன்படு நடுவரை என்று போற்றப்பட்ட இவ்வூரில் மழை பொழிந்தால் காவிரி ஆற்றில் வெள்ளம் வரும் இதற்கு பொன் போல் தோன்றும் மலை என்று பொருள்.
கூர்க் சென்றவுடன் கண்களுக்கு ஏதோ பொலிவு கிடைத்தாற் போல உணர்ந்தாள் யாழ்முகை. அவர்கள் சென்ற வாகனத்தில் இருந்து வெளியே பார்க்க எங்கெங்கும் பசுமையான காடுகள்.அவள் மனமோ “பச்சை நிறமே பச்சை நிறமே” என பி.ஜி.எம் வாசித்தது. வளப்பமான பசுமை பள்ளத்தாக்குகள் எல்லாவற்றையும் விழி விரித்துப் பார்த்தாள் யாழ்முகை.
அவர்கள் போக வேண்டிய இடம் வந்ததும் இறங்கி நடக்க, கண்மணியின் கைகள் கணவனின் கைகளோடு பிணைந்திருக்க, அதைக் கண்ட அயன் இவாவிடம் “பாரு! சிஸ்டர் எப்படி திரு கையை விடாம பிடிச்சிருக்காங்க.. நீ என்னடானா பத்தடி தள்ளி வர்ற.. இட்ஸ் டூ பேட் யா!” என குற்றம் கூற,
“யாருடா பேட். யூ ஹேவ் பிகம் டூ பேட்… புதுசா கல்யாணமானவங்க கூட சீக்கிரம் ரெடியாகிட்டாங்க. நீ என்னை ரெடியாகவே விடல.. கீப் டிஸ்டன்ஸ்” என்று இன்னும் தள்ளிப் போக,
அவன் முகம் சுருக்குவது பொறுக்காமல் இவாஞ்சலின் ஓடி வந்து அவன் கையைப் பிடித்துக் கொள்ள, அவன் முகம் கொள்ளாப் புன்னகையோடு அவளைத் தோளோடு சேர்த்து அணைத்தான்.
“என்ன யாழ் பிடிச்சிருக்கா? “ என திரு கேட்டது தான் போதும் வெள்ளத்தால் நீர் நிறைந்த செம்பரம்பாக்கம் ஏரி போல வாய் திறந்தாள்.
“வாட் அ பியூட்டி! சேன்சே இல்ல போங்க.. இப்படியே நடந்துகிட்டே இருக்கலாம் வாழ்க்கை முழுதுக்கும்.. ரொம்பத் தேங்க்ஸ் இந்த ட்ரிப் நிஜமாகவே ரொம்ப சூப்பர் தான்”  என அந்த சீதோஷ்ண நிலையில் நடக்க நடக்க மேனியெல்லம் தீண்டி உள்ளே ஒருவித குறு குறுப்பைத் தரும் குளிரில் நடந்த வண்ணம் அந்த அழகிய தருணங்களை ஆழ்ந்து மனதின் ஆழத்திலிருந்து மலைக் காற்றை சுவாசித்த வண்ணம் மனைவியவள் சொல்ல,
மன்னவனோ அவள் வார்த்தையில் விவரித்த பரவசத்தை அவன் விழிகளில் தேக்கி, அவள் கண்னோடு நோக்கி, “இப்படியே நடக்கணுமா?” என்றான். பிழையின்றி பிணைந்திருந்த கைகளைக் காட்டி.
அவன் விழியில் அன்பின் சாரல் வீசக் கண்டவள் அவனை விடவும் காதலாய் நோக்கி “மாட்டேன் இப்படியே முடியாது” எனவும்,
கவிதையொன்றின் சுவையில் திளைத்துப் படிக்கையில் கரண்ட் கட்டான கடுப்பு மொமண்ட் லுக்கோடு மனைவியை முறைக்க,
“ரொம்ப தூரம் நடந்தா கால் வலிக்கும்ல நீங்க தூக்குவீங்களாம் நான் ஜாலியா அப்படியே இதையெல்லாம் ரசிப்பேனாம்” என்று கண்ணில் கள்ளத்தனம் மின்னவும், அதையும் தாண்டி காதல் கசியவும் சொல்ல,
“உன்னை!” என்றவன் அவள் தோளில் கையைப் போட்டு நன்றாக இறுக்க,
“ப்ச் ப்ப்ளிக் ஆத்துக்கார்ர். இங்க நோ ரொமேன்ஸ்” என சொல்ல,
“மிஸ்ஸ். திரு அங்க பாருங்க என் தோழனும் தோழியும் ஆறு மாசம் கழிச்சும் எப்படி கெமிஸ்ட்ரி மெயின்டென் செய்றாங்க நீங்க என்னடான்னா கெமிஸ்ட்ரில ரொம்ப வீக்”
“இவா அக்கா… உங்க ப்ரெண்ட் என்னவோ சொல்றாரு கேளுங்க” என போட்டுக் கொடுக்க,
“என்னடா சொன்ன?” என்றபடியே அவர்கள் அருகில் வர,
“இவ கெமிஸ்ட்ரில வீக்ன்னு சொன்னேன்”  என்று திருவும் யார்கிட்ட என்பது போல் லுக் விட,
“அய்யோ கண்மணி சும்மா இருந்த சிங்கத்தை எழுப்பிட்டியே .. இவர் வேற பெரிய அப்பாடக்கராட்டம் எல்லாத்தையும் உளறிடுவாறே” என்று முழிக்க,
“நான் கூட கெமிஸ்ட்ரில வீக் தான்” என்று இவாஞ்சிலின் அப்பாவியாக சொல்ல திரு வாய்விட்டு சிரிக்க, அவன் எதை சொல்கிறான் என புரிந்து அயனும் “ஆமாடா மச்சான் “ என்று திருவைப் பார்த்து கண்ணடிக்க,
இவாஞ்சலினோ தோழனையும் கணவனையும் முறைத்து விட்டு “கண்மணி அன்போடு உன்னை கெஞ்சிக் கேட்டுக்கிறேன் திருவாளர் திருநாவுகரசுக்கு ப்ரெண்ட்ங்கிறதால அக்கானு சொல்லாத.. ப்ளீஸ் கண்மணி மீ பாவம்யா” என கண்மணியின் கன்னத்தை கிள்ளி கொஞ்சி சொல்ல,
“சரிக்கா” என்றவள் நாக்கைக் கடித்து விட்டு “சாரி சாரி கொஞ்சம் டைம் கொடுங்க அக்கா” என சொல்ல,
நண்பர்கள் இருவரும் சிரிக்க, “டைம் எடுத்துக்கோ கண்மணி பட் ட்ரை டு கால் மீ இவா.. அப்போ தான் எனக்கு ப்ரியா பேச வரும்பா.. திருவுக்கு மட்டும் இல்லை ஐ ம் ப்ரெண்ட் ஆஃப் யூ டூ” என்று சொல்ல, அவள் அழகாக புன்னகைத்தாள்.
இவா அவள் கன்னத்தில் உள்ள குழியைத் தொட்டுப் பார்த்து “டூ பியூட்டிபுல் ஃபீல் லைக் கிஸ்ஸிங்” என சொல்லி குழி விழும் இடத்தில் பட்டென்று அன்பின் அச்சாரமாய் முத்தமிட,
திருவும் நொடியும் தாமதிக்காது, “மீ டூ” என்று மற்றொரு கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட, ஏற்கனவே இவாஞ்சலில் முத்தமிட்டதற்கே கூச்சப்பட்டவள் இப்போது இவனும் இப்படி செய்ய வெட்கம் தாளாமல் “அய்யோ” என்ற்படி கணவனின் தோளிலேயே முகத்தைப் புதைத்துக் கொள்ள,
“மச்சான் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் பண்ணிட்டியே” என்ற அயன் மனைவியை பார்த்து,
“யூ டூ வீக் இன் கெமிஸ்ட்ரி ரைட்” என்று அவள் எதிர்பாரா நேரத்தில் முத்தமிட,
“அடப்பாவி இதையா சொன்னீங்க” என்று சொல்லி அயனைத் தோளில் அடித்து அதிலேயே சாய்ந்து கொண்டாள்.
இப்படி எந்த விதமான பதற்றமும், ஓட்டமும் இன்றி நொடிகள் வேகமாய் நகர்ந்தன  மேற்கு தொடர்ச்சி சரிவுகளின் வியக்கதக்க இயற்கை காட்சிகளைக் கண்டு களித்தனர் இரண்டு ஜோடிகளும்.
“டேய் திரு.. குடகுமலைக் காற்றில்னு ஒரு சாங் வரும்ல அது கூர்க்கை தானே குறிக்குது” என தன் ஐயத்தைக் கேட்கவும்,
“எஸ் அயன் இது தான். கொடவா ஆதிவாசிகளின் இருப்பிடமாக இருந்ததால் தான் அவங்க மொழியில் குரோத தேசா எனும் சொல்லில் இருந்து வந்திருக்கலாம் இல்லனா கொட் அவ்வா அதாவது காவிரி அன்னையைக் குறிக்கலாம் இது கூர்க் ஆனது ப்ரிட்டிஷ் காலத்துல தான்” என்று தனக்கு தெரிந்த விவரங்களை சொல்ல சொல்ல மூவரும் ஆர்வமாக கேட்டனர்.
ஆனால் ஆர்வத்தையும் தாண்டிய அலைப்புறுதல் ஒன்று அடி நெஞ்சிலிருந்து ஆர்ப்பாட்டமின்றி அமைதியாய் எழும்பியது கண்மணிக்கு.. தன் கணவன் அளவுக்கு தனக்கு திறமையில்லையே . அவனது அறிவுக்கும் பண்புக்கும் பழக்க வழக்கத்துக்கும் தான் பொருத்தமாக இல்லையே. ஏதோ பெயருக்கு ஒரு டிகிரியைப் படித்து வெட்டியாக இருக்கிறேன். இவாஞ்சலின் அக்கா கூட இவர் கூட சேர்ந்து வேலைப் பார்க்கப் போறாங்க.. ஐ ம் நாட் மேட் பாஃர் ஹிம்” என்ற எண்ணம் சிந்தையில் உதித்தது.
காதல் என்பது “மேட் பார் ஈச் அதர் மட்டுமல்ல லிவிங் வித் ஈச் அதர் , லிவிங் பார் அதர் என்ற நிலைகளும் காதல் தான்.. அது கண்மணிக்கு புரியவில்லை புரியும் போது அவர்கள் சிறந்த தம்பதிகளாக இருப்பர்.
இப்படி அவள் யோசனை ஓட தடையாய் ஒலித்தது திருவின் குரல்.
“யாழ் இந்த க்ளாசை போட்டுக்கோ” என்றவன் சன் கிளாசை நீட்டினான். பின்னர் இருவரும் பல சுய உருக்கள் “செல்ஃபி” எடுத்து தள்ளினர்.
யோசனைகள் ஓரமாய் இருக்க, ஓடிக் கொண்டிருப்பது தானே வாழ்க்கை.ஓட வேண்டும்… எண்ணங்களோடு ஓடுவர் சிலர்..! எண்ணத்துக்கு எதிராக ஓடுவர் சிலர்..! ஆனால் ஓடுவர்..! தேக்கமில்லா தேடுதல் அல்லவா வாழ்வு!  தேங்கி நிற்காமல் நொடிகளை ரசித்து வாழ வேண்டும். அதுவும் வாழ்வின் விநாடிகள் ஒவ்வொன்றையும் ரசித்து வாழும் திருநாவுக்கரசனின் மனைவியாய் இருந்து கொண்டு தேங்கி நிற்கவா முடியும்? கணவனோடு ஒன்றி அவனோடு அந்த பயணத்தை அனுபவித்தாள்.
நிஷானி மோட்டேவில் உள்ள மலையேற்றப் பாதையில் ஏறிக் கொண்டிருந்தனர் திரு மற்றும் அயன் தம்பதிகள்…
ஷோல்டர் பேக்கை திரு மாட்டியிருக்க அவனுக்கு முன்னால் கண்மணி நடந்து கொண்டிருந்தாள். இவாவும், அயனும் மலையேற்றத்தில் பயிற்சியும் பழக்கமும் இருந்ததால் அவர்கள் விரைவாக சென்று விட, கண்மணிக்கு ஈடு கொடுத்து மெதுவாகவும் அவளுக்கு பாதுகாப்பாகவும் பின்னாலேயே வந்தான் திருநாவுக்கரசன்.
“உங்களுக்கு கடுப்பா இல்லையா?? நான் ஸ்லோவா இருக்கேன் அவங்க எல்லாம் சீக்கிரம் போயிட்டாங்களே?”
“லூசு நாங்க எல்லாம் வருஷா வருஷம் செய்ற விஷயம். பட் யூ ஆர் டூயிங் இட் பாஃஃர் தி பர்ஸ்ட் டைம். ஸ்டாப் கம்ப்ளைனிங் யுவர்செல்ஃப்” என்று அதட்ட, அவளோ சிரிப்பை சேமிப்பாய் அதரங்களில் அடக்கி வைக்க,
“ஏய் எதுக்கு சிரிக்குற?”
“துரை இங்க்லீஸ் எல்லாம் பேசுது”
“உன்னை..! வாடி” என்று இழுத்துக் கொண்டு போனான். போகும் வழியில் அவள் திடீரென அலறி பின்னால் விழப் போக, அவளைப் பற்றி பிடித்தவன்,
“என்னாச்சுடா யாழ்” என அவன் கேட்க, அவளோ பதட்டத்தில் கணவன் மேலேயே சாய்ந்து நிற்க
“அட்டைப் பூச்சி” என திக்கித் திணறி கண்மணி சொல்ல,
“ஓ அட்டையா இங்க நிறையா இருக்கும்.. நீ என் பின்னாடி வாடா.. கீழே கொஞ்சம் கவனம் வச்சுக்கோ’ என்றபடியே அவளை பின்னால் விட்டு அவன் முன்னால் சென்றான்.
மலை உச்சிக்கு சென்ற பின், அங்கு வழங்கப்பட்ட ஹோம் மேட் காஃபியை பருகினர். சிறிது நேரம் கழித்து ரஃபில்லிங் எனப்படும் மலைகள், பாறைகள் போன்றவற்றில் ஏறுவதற்கான ஆயத்த ஏற்பாடுகளை சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் செய்ய, திருவும் அதற்கான உபகரணங்களை அணிய போகும் முன்,
“யாழ் நான் செய்யப் போறது ராஃபில்லிங் ஓகேவா.. இந்த பாறை மேல ஏறப் போறேன்… இதுக்கு பயிற்சி வேணும் அதனால நீ இங்கேயே இரு.. போட்டோஸ் எடு.. இவாவும் இருப்பா .. நாங்க ஒரு ஒன் அவர்ல வந்திடுவோம்“ என்று சொல்லவும் மறக்கவில்லை.
பயத்தில் வெளிறிய முகத்தை வெளிக்காட்டாமல் கண்கள் அச்சத்தில் அகல விரிந்திருக்க, அந்த செங்குத்தான பாறைகளில் திருநாவுக்கரசன் ஏறப் போகிறான் என்று நினைக்க, நினைக்க ஐயமொன்று அடி நெஞ்சில் அழைப்பே இன்றி அமர்ந்திருக்க, ஈரக்காற்றோடு இயைந்திருந்த குளுமையும் மீறி உடலில் வியர்வை அரும்பாய்ப் பூத்தது யாழ்முகைக்கு .
அதைப் பார்த்த இவா, “ஹே கூல்! ஒண்ணுமில்லை கண்மணி . அவனுங்க இரண்டு பேருக்கும் இதெல்லாம் சப்ப மேட்டூர் சால்ட் வாட்டர்” என சமாதானம் செய்ய, ஏனோ அவளது ஆறுதலில் அடைந்து கிடந்த அச்சம் அடைப்பின்றி வெளியே வர, கண்களில் நீர்படலம்.
“இல்ல அவர் அவ்வளவு மேல போறார்ல விழுந்திடுவாங்களோன்னு பயமா இருக்குக்கா”
“ப்ச் நத்திங் வில் ஹேப்பன்.. ரொம்ப சேஃப்பான முறையில ஏறுவாங்க கண்மணி. அன்ட் தே ஹவ் மோர் ப்ராக்டீஸ் .. பயப்படாதேம்மா ..இங்கே வா நாமும் போய் என்ஜாய் செய்யலாம்” என இழுத்துக் கொண்டு போனவள் அவளுக்கு யோசிக்க இடம் கொடாமல் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளினாள்.
பின்னர் இருவரும் , மீண்டும் ஒருமுறை காஃபியை வாங்கி பருகி கொள்ள இவாஞ்சலின் “கண்மணி ! இந்த குர்தா ரொம்ப அழகா இருக்கு.. இந்த டிசைன் எனக்கு பிடிச்சிருக்கு .. எங்க வாங்கின??” என கண்களால் ஆடையில் இருந்த கலைநயத்தை ரசித்தவாறே கேட்க,
“டாப்ஸ் தனியா வாங்கி டிசைன் நான் செஞ்சேன்கா”
“நீயா?? எப்படி! அருமையா இருக்கு… எனக்கும் செஞ்சு தரீயா?” என ஆரவரமாய்க் கேட்க,
“கண்டிப்பா செஞ்சுத் தரேன்கா”
“எப்படி கத்துக்கிட்டே நீ??”
“எனக்கு இதுல ரொம்ப இன்ட்ரெஸ்ட்கா.. ஃப்ரீயா இருக்கப்போ வீட்டுல செஞ்சது” என்றாள் மிகுந்த ஆர்வத்தோடு.
திருவும் அயனும் ராஃபில்லிங் முடித்து வர, இவாவும் அயனும் பேசியபடி உணவருந்த செல்ல, அவர்கள் பின்னாலேயே யாழ்முகையும் அமைதியாகப் போக,
“ஓய் கண்மணி மேடம் என்னாச்சு?” என அவன் அவள் கைப்பிடித்து இழுக்க,
“விடுங்க.. எல்லாம் உங்க இஷ்டம் தானே? நீங்க வர்ற வரைக்கும் எப்படி பயந்தேன் தெரியுமா? இப்ப என்ன கொஞ்சல் வேண்டி கிடக்கு” என சினத்தை சிடு சிடுப்பாய் காட்ட,
“நோ நோ நான் எங்க உன்னை கொஞ்சினேன்.. பாரு! கண்மணின்ற உன் பெயரை கூப்பிட்டாலே உன்னை கொஞ்சுற ஃபீல் வருது.. எல்லாம் உங்க அப்பா தப்பு .. நிஜமா நான் உன்னை கொஞ்சவே இல்லை” என ஏற்கனவே எழுந்த கோபக்கனலை கொழுந்து விட்டு எறிய செய்தான்.
“அப்படியே கொஞ்சிட்டாலும்..” ஆத்திரத்தின் விளிம்பினில் அவளிருக்க, தீயினுள் தென்றலாய் அவன் ஒரே குஷியாய் இருந்தான். அவளை வம்பிழுக்கவும் செய்தான்.
“எனக்கு கொஞ்சத் தெரியாதுங்க கண்மணி!” என்றான் கொஞ்சலாய்!
“ஆமா கொஞ்சத் தெரியாது ஆனா என்னை கோபப்படுத்த மட்டும் தெரியும்” என்றவளின் கருவிழிகள் கலங்கி கண்ணீரை உகுக்க, சிரித்தபடியே அவள் கோபத்தை ரசித்தவன் சீரியசாய் மாறி அவளை தோளோடு அணைத்து,
“என்னாச்சு யாழ்மா? என்ன கோபம்?”
“இது மாதிரி மலையேறது தான் உங்க ஹாஃபியா? .. கொஞ்சம் மிஸ் ஆனாலும் உயிர் போய்டும்” என பயம் படிந்த வார்த்தைகளை அவள் உதிர்க்க,
“மிஸ் ஆகாது யாழ்! ஐம் குட் அட் இட்.. ப்ராக்டீஸ் இல்லாம நான் செய்யல” என்றான் நிதானமாய்.
“மிஸ் ஆயிடுச்சுன்னா பயமா இருக்குன்னு சொன்றேன்ல” என்று தேம்பலுடன் சொல்ல, அவனோ அவள் நிலை உணராது..
“மிஸ் ஆகாது … எக்யூப்மென்ட்ஸ் இருக்கு.. சேஃப்டி மெஷர் இருக்கு”
“திடீர்னு எதாவது ஆகிட்டா?? எப்பவும் எல்லாம் சரியா இருக்காது..”
புரியாமல் விதண்டாவாதம் செய்கிறாளே என்ற கடுப்பில், “மிஸ்ஸாயிட்டா ட்ரைக்டா சொர்க்கம் தான்” என்று அவனும் பதில் பேச,
அந்த வார்த்தைகள் கொடுத்த தாக்கத்திலிருந்து, அதன் அச்சத்திலிருந்து அவள் வெளிவரும் முன்னே மிஸ்டர். ப்ராக்டீகல் திரு அவர்கள்
“எப்படியும் சாகத்தானே போறோம்… நமக்கு பிடிச்சதை செஞ்சிட்டு செத்தா தான் என்ன?” என அவன் எதார்த்தமாய் சொல்ல, எரிமலையின் சீற்றம் அவள் கண்களில் வலிகளை விழிகள் பிரதிபலிக்க
“எப்பவுமே இஷ்டப்படி பேசக்கூடாது.. இப்படி பேசுறதுனா பேசவே வேண்டாம்” என்றபடி யாழ்முகை சென்றுவிட, திருவுக்கு எரிச்சல் தான் வந்தது. இவ்வளவு நேரம் இருந்த இனிமை காணாமல் போயிருந்தது.
மனமோ “ லைஃப்ல இந்த சின்ன சின்ன அட்வெஞ்சர்ஸ் கூட செய்யலைனா எப்படி?? ரொம்ப சின்ன புள்ளைத்தனமா நடந்துக்குறா இவ..” என்று மனையாளைப் பற்றி எண்ணியது.
ஆனால் சண்டைகள் எல்லாம் சமாதானத்தில் முடிய வேண்டும் என்ற கொள்கை உடைய திருவாளர் திருநாவுக்கரசு மனைவியின் பின்னே சென்று பேச முயல,
“எதுவும் இங்க பேச வேண்டாம்… ரூம்க்கு போய்ப் பார்த்துக்கலாம்” என்று அடக்கப்பட்ட அழுகையோடு சொல்லிப் போனாள் கண்மணி.
திருவுக்கோ இது இன்று தீரும் சண்டையாகத் தோன்றவில்லை.

Advertisement