Advertisement

கண்மணி 10:

சில நாட்களுக்கு பிறகு கண்மணி இவாஞ்சலின் அக்காவிற்கு ஒரு முறை உடைகள் வடிவமைத்துக் கொடுக்க, அவள் திரைத் துறையில் பின்னணி பாடகியாக இருப்பவள்…ஒரு விழாவிற்கு அவள் அணிந்து சென்ற உடை அனைவரது கண்ணையும் கருத்தையும் கவர்ந்து விட கண்மணியின் திறமையும் வெகு விமர்சையாக பேசப்பட்டது.

இவாவின் அக்கா ஜென்ஸீ திருவிடம் இது பற்றி பேச, அவனோ நேரடியாக கண்மணியிடமே பேச சொல்லி விட்டான்… கண்மணியோ மீண்டும் கணவனிடமே வந்து  நின்றாள்.

“டைரக்டர் பிரதாப் இருக்கார்ல…அவரோட படத்துக்கு என்னை காஸ்ட்ட்யூம் டிசைன் செய்ய சொல்லி கேட்கராறாம்.. ஜென்ஸீக்கா சொன்னாங்க… நான் என்ன செய்ய…?” என எண்ணெய் மிதக்கும் மீன் குழம்பை போல் அவள் வதனமெங்கும் குழப்பம் மிதக்க விடையறியும் பாவத்தோடு கணவனை நோக்க,

“நான் என்ன செய்யனும்னு என்கிட்ட கேட்ட கேள்வியை உனக்கு நீயே கேளு யாழி… வாழ்க்கையோட சில தருணங்களில்  நம்ம மட்டுமே யாரையும் சாராம எடுக்க வேண்டிய முடிவுகள் வரலாம்…அந்த மாதிரி ஒரு தருணம் இது உனக்கு…யார் என்ன சொல்வாங்கன்னு நினைக்காத… நீ எந்த முடிவு எடுத்தாலும் நான்  உன் கூடத்தான் இருப்பேன்…உனக்கு எவ்வளவு டைம் வேணுமோ யோசிச்சு முடிவு சொல்லு…ஆனா அந்த முடிவுக்காக நீ வாழ்க்கையில என்னைக்குமே வருத்தப்படக் கூடாது..அது மட்டும் தான் நான் சொல்வேன்…” என தீர்க்கமாக சொன்னான் திரு நாவுக்கரசன்.

காற்றில் தலையசைக்கும் தென்னங்கீற்றாய் தலைவனிடம் தலையசைத்தவள் இரண்டு நாட்கள் கழித்து திருவிடம் வந்தவள், “நான் லைப்ல இப்படி ஒரு வாய்ப்பு வரும்னு கனவுல கூட நினைச்சதில்லங்க…ரொம்பவே சந்தோசமா இருக்கு..ஆனா சினிமா  ஒரு மாய உலகம்…ஒரு சூழல் அப்படி இப்படின்னு இந்த கதைப்புக்ல படிச்சதெல்லாம் கண் முன்னாடி வந்து பயமுறுத்துது….ஆனாலும் முயற்சி செஞ்சாதானே தோக்க கூட முடியும்…கதவை திறந்தா தானே புலி இருக்கா பூஞ்சோலை இருக்கானு தெரியும்…ஸோ எனக்கு ட்ரை செஞ்சுப் பார்க்கனும்னு ஆசையா இருக்கு…முன்னாடி பாராகிலைடிங் செய்ய கூட  பயந்தவ தானே நான்..இப்ப உங்க கூட சேர்ந்து நானும் செய்றேன் தானே…ஆனா வீட்ல என்ன சொல்வாங்களோன்னு பயம் இருக்கு”

“அது மட்டுமில்லாம இனியன் வேற ரொம்ப சின்னப்பையன்..அவனையும் பார்க்கனும்..அதான் குழப்பமா இருக்கு..” என அவன் தோள் சாய்ந்து சொல்ல, அவளை ஆதரவாய் அணைத்தவன்

“இனியனை நான் பார்த்துக்கிறேன்மா…என்னோட கனவுக்காக நீ உன்னோட ஆசையெல்லாம் மூட்டைக் கட்டி வைச்ச தானே..அதுவும் கல்யாணமானா ஒரே மாசத்துல நான் கம்பெனியைப் பார்க்க போயிட்டேன்..உன்னை ஹனிமூனுக்கு கூட நான் குழந்தை பொறந்து  தான் அழைச்சிட்டு போனேன்…ஆனால் நீ கொஞ்சம் கூட அதை காட்டிக்காம என்னோட முயற்சிக்கு துணை நின்ன…” என கடந்தகால நினைவுகளைப் பேச

“நான் என்ன செஞ்சேன்…எல்லாம் உங்க உழைப்பு..உங்க ப்ரண்ட்ஸ்…தான் காரணம்..”

“இல்லடா…. ஒருத்தங்க முயற்சிக்கு இரண்டு வகையில துணை போகலாம்..ஒன்னு அவங்களோட முயற்சில பங்கு எடுத்து தோள் கொடுக்கலாம்..இல்ல..அவங்களுக்கு முழு சுதந்தரம் கொடுத்து அவங்க  விருப்பபடி வேலை செய்ய விடுறது…. நீ இரண்டாவது வகை…என்னை எந்த வகையிலையும் தொல்லை செய்யல.. நீ உன்னோட குட்டி குட்டி க்யூட்டான ஆசைகளை எல்லாம் மனசுல வைச்சிட்டு மலர்ச்சியா என்கிட்ட  நடந்துகிட்ட..எனக்கு நீ அமைதியையும் நிம்மதியையும் கொடுத்தடா..இப்ப உன் கூட நான் இந்த சிட்டிவேஷன்ல நிக்கிறது முக்கியம்…”

“சினிமா பத்தி எத்தனை விதமான விமர்சனங்கள் வந்தாலும் நாளுக்கு நாள் சினிமா வளர்ச்சி அடைஞ்சிட்டு தான் இருக்கு..யாரும் சினிமா பார்க்கிறது நிறுத்தல…இல்ல..அன்ட் மோரோவர் காஸ்ட்யூம் டிசைனர் தானே…ஒன்னும் பிரச்சனை வராத..வந்தாலும் பார்த்துக்கலாம்..  நீ உனக்காக செய்ய போற விசயம்..முழு மனசோட எந்த குழப்பமும் இல்லாமல் செய்டா..”

“பாதி பெண்கள்…இந்த மாதிரி சின்ன வயசில குழந்தைங்க புருசன் குடும்பனு ஒரு லஷ்மண ரேகையை அவங்களே போட்டுட்டு வர மாட்றாங்க…சிலரால முடியாம போகலாம்..ஆனா ஒரு சாரார்.. அவங்க எண்ணங்களை வெளிப்படுத்தாமலே போயிடுறாங்க.. அப்புறம் நாற்பது வயசுக்கு  மேலயோ இல்ல மருமக வந்தா அவ சம்பாதிக்கறது பாத்து ஒரு தாழ்வு மனப்பான்மை..ஒரு வெறுமை உருவாக்கிடுது.. .உனக்கான சிறகு உன்கிட்ட இருக்கு.. நான் கூண்டோட கதவை திறந்தே தான் வைச்சிருக்கேன்..பறந்து போறதும்..இப்படியே இருக்கதும் உன் இஷ்டம்..” என்றவனின் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தவள் அடுத்த நாளே ப்ரதாப்பிடம் சம்மதம் தெரிவித்து விட்டாள்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு:

“இனியன் நில்லுடா..ஓடாத..” என்ற கண்மணியின் சத்தம் பின்னணி இசையாக ஒலிக்க, யாழ்முகை திருவின் இரண்டு வயது மகன் வாசலில் ஓடிக்கொண்டிருந்தான்.

“ஒரு இடத்துல நில்லுடா…சாப்பிட்டு போ…” என அவள் கத்தியும் கேட்காமல் அங்கிருந்த விளையாட்டுப் பொருட்களையெல்லாம் அள்ளி இறைத்து ‘அம்மா கேட்ச்.’ என தூக்கிப் போட்டான்.

யாழ்முகை பாவமாக நிற்கையிலேயே அங்கு வந்த திரு, “குட்டிப்பையா..அம்மாவை ஏன் ஓட விடுற..” என்றபடி  மகனை தூக்கிக் கொள்ள,

“அப்பா..” என கழுத்தைக் கட்டி கொண்டான் இரண்டு வயது தமிழினியன். இனியனுக்கு அப்பா என்றால் அபிமானம் அதிகம் தான். அவன் சொல்படி தான் நடப்பான். திருவும் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் மகனை நெஞ்சில் சும்ந்து கொண்டே திரிவான். மகனது துறுதுறுப்புக்கு ஈடு கொடுத்து அவனும் சரிக்கு சமமாய் விளையாடுவான். மழலையில் மிழற்றும் மகனின் குரலில் அவன் லயித்து தன்னையே மறந்து போய் விடுவான்.

யாழ்முகை இனி திரு பார்த்துக் கொள்வான் என அறைக்குள் செல்ல அவளது அலைப்பேசி சரியாக ஒலித்தது. திரையில் ‘டைரக்டர் கிரண்’ என வர எடுத்துப் பேசினாள். பேசி முடித்தவள்:… பேசா மடந்தையாகி இருந்தாள்.

குழந்தையை தாத்தாவிடம்  விட்டு வந்தவன், மனைவி தனியாக என்ன செய்கிறாள் என எட்டிப் பார்க்க… அவன் உள்ளே வந்ததும் அவனை இறுக்கி அணைத்து தலைவனின்  இதயத்தை தலையணையாக்கி தலை சாய்த்து கண்ணீர் உகுத்தாள்.

“என்னடா யாழி…என்னாச்சு…?”

“தேங்ஸ்டா…திரு!” என்றவளை மகிழ்வோடு பார்த்தான் திருநாவுக்கரசன். பின்னே மகிழ்வாக இருக்கும் சில ‘அற்புத’ தருணங்களில் மட்டுமே இப்படி அழைப்பாள் யாழ்முகை. கண்டிப்பாக கண்மணி மிகவும் சந்தோசமாக இருக்கிறாள் என அறிந்தவன்,

“என்னடி..என்ன ஹாப்பி நியூஸ்…?”

“கிரண் சார் படம் ‘சந்திரவதனா’வுக்காக எனக்கு தேசிய விருது  கிடைச்சிருக்கு..” என்றதுதான் போதும் அவளை அப்படியே தூக்கிக் கட்டிலில் சாய்த்து அவள் முகமெங்கும் முத்தமிட்டான்.

திரு அவனது அதீத ஆனந்தத்தைக் காட்ட தெரியாமல் காட்டாற்று வெள்ளமாய் மனைவியை சூழ்ந்து கொண்டான்.

வெளியே இருந்து ,”அப்பாஆஆஆ…” என்ற மகனின் குரலில் களைந்தவன் மனைவியை இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டு  விலகி “வந்துட்டேன் இனியன்..” என்றபடி மகனைத் தூக்கி வந்தவன்,

“அம்மாவுக்கு ப்ர்ஸ்ட் ரேங்க் கிடைச்சிருக்கு..கிஸ் பண்ணுங்க…” என்றதும் அவர்களது மகனும் முத்தமிட  அவளும் பதிலுக்கு முத்தமிட்டு மகனைக் கொஞ்சினான்.

பிறகு அனைவரிடமும் இந்த விசயத்தை பகிர, யாழ்முகையின் பெரியப்பவுக்கெல்லாம் அவ்வளவு ஆனந்தம்… முதலில் இதை எதிர்தவர் அவர் தான்…பெண்பிள்ளை சினிமாவுக்கெலம் போக கூடாதென… ஆனால் திரு தான் ‘என் மனைவி என் உரிமை’ என்று அவர்களை வாய் மூட வைத்தான்.

இப்போது ‘உங்க பொண்ணுக்கு அவார்ட் கிடைச்சிருக்காமே..தமிழ் நாட்டுல இது மாதிரி கிடைக்கிறது இதான் இரண்டாவது  தடவையாமே….’என்ற புகழுரைகள் கேட்கும்போது தங்கள் பெண்ணை குறைத்து மதிப்பீட்டு விட்டோமோ என்ற உணர்வு எழுவதைத் தடுக்க இயலவில்லை.

சில நேரங்களில் சிறகுகள் இருந்தும் பறக்கவியலாமல் போவதற்கு பெண்களே தங்களுக்குள் விதித்துக் கொள்ளும் சுயச்சிறைகளே காரணம். இன்னொன்று குடும்பங்கள் கட்டமைக்கும் கட்டுப்பாட்டு சிறைகள்.

ஆனால் அவற்றிலிருந்து மீண்டால் மட்டுமே சிறகடித்துப் பறக்க முடியும்..

**********************************

தேசிய விருது  வழங்கப்பட்ட பின், திரு அவனுடையை நண்பர்களுக்கும்  நெருங்கிய உறவினர்களுக்கும் பார்ட்டி தந்தான். அதில் இயக்குனர் கிரணும் கலந்து கொள்ள,  கண்மணி திருவை அவருக்கு அறிமுகப் படுத்தி வைப்பதற்காக அவனை அழைக்க,

“மீட் மை ஹஸ்பண்ட் மிஸ்டர்.திரு” என அறிமுகம் செய்து வைக்க,

அப்போது அங்கு வந்த திருநாவுக்கரசன் , “நோ மிஸ்டர்.கிரண்…ஐ அம் மிஸ்டர்.கண்மணி..” என்றபடி அவருடன் கை குலுக்கி கொள்ள,தன்னை காதல் பார்வை பார்த்த மனைவியை பார்த்து கண்சிமிட்டினான்.

“வாவ்.. நைஸ் டூ மீட் யூ மிஸ்டர்.கண்மணி” என்றார் கிரண் முகம் கொள்ளாப் புன்னகையோடு.

அதன் பின் பஃபே உணவு பரிமாறப்பட, நண்பர்கள் அனைவரும் ஒன்றாய் உண்ண, இவாஞ்சலின் தன் குட்டி தேவதை ஷ்ருஷ்டியைக் கையில் வைத்தபடி “அது என்னடா மிஸ்டர்.கண்மணி…..ரொம்ப உருகிற…போ..” என வம்பிழுக்க

“ஒன்னுமில்ல இவா..அது என்ன. .டாட்டர் ஆப்…வைப் ஆப் அப்படின்னே சொல்றது..இவ மிஸஸ்.திருவா இருக்கறதை விட நான் மிஸ்டர்.கண்மணியா இருக்கறது எனக்குப் பெருமை தான்.. என்னோட மனைவியின் பெயரால் அடையாளம் காட்டப்படுறது எனக்கு அவமானமான விசயம் இல்ல.. ” என உணர்வுபூர்வமாய்ப் பேச இவா நண்பனின் தோளில் தட்டி புன்னகைத்தாள்.

பார்ட்டி முடிந்த பின் இரவு குழந்தையை உறங்க வைத்தவன் மனைவியை அழைத்துக் கொண்டு பின்பக்க தோட்டத்திற்கு அழைத்து வந்தான்… சொட்டு சொட்டாய்  பனித்துளிகள் பன்னீர் ரோஜா செடிகளின் மீது படர்ந்த அந்த பனி இரவில், காதுக்குள் கள்ளத்தனமாய்ப் புகுந்த ஈரக்காற்றில் மேனி சிலிர்க்க, கூத சேலையை நன்றாகப் போர்த்தியவளின் தோளின் மீது அழுத்தமாய்க் கைவைத்து அணைத்தவன்,

“என்ன யாழி…? அமைதியா இருக்க…”

“இல்ல…சில நேரம் அமைதியா இருக்கறது கூட தனிசுகம் தருதுங்க…. நான் லைப்ல நினைச்சே பார்த்திராத விசயம்..காஸ்ட்யூம்  டிசைனர்க்கு அவார்ட் தருவாங்கன்னு கூட எனக்கு முன்னாடி தெரியாது தெரியுமா…உங்க அளவுக்கு நான் திறமை இல்ல..அப்படின்னு எல்லாம் நினைச்சுக் குழப்பிப்பேன்…ஆனா கடவுள் தன்னோட குழந்தைகளுக்கு நல்லது செய்யாம விடறதுல்ல தெரியுமா…?..அதுவும் கல்யாணத்தனைக்கு கூட அவ்வளவு கடுப்பு..இவன் வீட்டுக்கு நம்ம போகணுமானு…பேசாம வீட்டோட மாப்பிள்ளையா இருக்கவனைப் பார்க்கலயே இந்த பெரியப்பான்னு கோவம்…ஆனா இப்ப தான் தெரியுது..மேரெஜ்  எவ்வளவு அருமையான விசயம்னு…..” என திருமண வாழ்வில் திளைத்துப் போய் சொல்ல

“அது ரைட் தான் யாழி…. நான் கூட சீக்கிரம் கம்பெனியை ஸ்டார்ட் செய்யணும்னு தான் மேரேஜ் செய்தேன்…அதுவும் இது ஒரு கமிட்மென்ட் அப்படிங்கற எண்ணம்.. நம்ம சமூகம் தர ப்ரஷர்….எல்லாம் மேரேஜைப் பார்த்து நம்மளைப் பயப்பட வைக்கிறது..ஆனா இட்ஸ் எ இன்ட்ரெஸ்டிங் ஜர்னி….”  என்று சிலாகித்தான் திரு நாவுக்கரசன்.

“ஆமா…இன்னிக்கு என்ன…அடிச்சு விட்டீங்க… கிரண் சார்கிட்ட…”

“ஹா…ஹா…அடிச்சு விட்டேனா….அதுல என்ன இருக்கு.. எப்பவுமே நீ என் மிசஸ்.திருவாகவே அடையாளம் காட்டப் படணும்….மிஸ்டர்.கண்மணியா என்னை அடையாளம் காட்டுறதுல என்ன வந்துச்சு…..”

அவளது அஸ்திவாரமாய் இருப்பவன் அவளை தன் அடையாளம் என சொன்னதில் அகத்தில் அடைமழை பெய்யக் கண்டாள்.வெளியே  வீசிய ஈரக்காற்றும், உள்ளே பெய்த காதல் காற்றிலும் உடல் நடுங்க கணவனை நெருங்கி அமர்ந்தாள்.

“சரிங்க…மிஸ்டர் கண்மணி வாங்க போகலாம்..திரு ரூல்ஸ்லாம்  திருவுக்கு தான் புரியும்..மொக்கைப் போட்டுட்டு.” என பழிப்புக் காட்டி அவள் எழ,

திருவும் எழுந்தவன் அங்கிருந்த சரக்கொன்றை மரத்தை ஆட்ட, மஞ்சள்  நிறப்பூக்கள் கொத்தாய் ஈரத்தோடு வந்து மங்கை மேனியில் விழ, அவள் மஞ்சள் முகம் நிலவென மின்னியது.கண்மணிக்கு இப்படி செய்வது மிகவும் பிடிக்கும்.திரு சில விசயத்தில் ரூல்ஸ் லாஜிக் பார்த்தாலும் மனைவியின் சின்ன சின்ன செல்ல ஆசைகளை நிறைவேற்றி வைப்பதில் அலாதி ஆனந்தம் அவனுக்கு. யாழ்முகையின் முகத்தை தீராக் காதலோடு நோக்கியவன், அவள் கண்ணில் அழுத்தமாய் முத்தமிட்டான்.

அவள் கண்மூடி அவனது கைத் தீண்டலில் கரைந்திருக்க… அதைக் கண்டு களித்தவன்  கன்னம் தட்டி, “சரி…சரி…..வா….ரொம்ப நேரம் இங்க நின்னா சளிப் பிடிச்சிடும்..” என கையோடு இழுத்துப் போனான்.

கணவனின் காதல் அக்கறை என்ற அட்டைப்பெட்டியில் அழகுற அடைத்து வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்த அவன் மனைவி அவனோடு இணைந்து நடந்தாள்.

அவர்கள் வாழ்வில்  இனி நூறானந்தம்…!!அவனுக்கும் அவளுக்குமான வாழ்வே பேரானந்தம்…!!

காதல் என்ற வார்த்தை வெறும் வார்த்தையாக அன்றி..அவர்கள் வாழ்க்கையாகவே மாறிப்போனது..

 

*********************சுபம்***********************

 

Advertisement