Advertisement

கண்மணி 6:
அன்று காலையில் எழுந்ததுமே திரு யாழ்முகையிடம் சொல்லி விட்டான்.. “யாழ்! சீக்கிரமே வேலையெல்லாம் முடிச்சிடு.. நான் மதியமே வர பார்க்கிறேன் நைட் ட்ரைன் இருக்கு.. அப்புறம் உங்க வீட்டுல சொல்லிட்டியா?? நான் அம்மாகிட்ட சொல்லிட்டேன் எதுக்கும் நீ ஒரு வார்த்தை சொல்லிடு” எனவும்,
“நான் அத்தைகிட்ட முன்னாடியே சொல்லிட்டேங்க” என அவள் சொல்லவும் அவள் கன்னம் தட்டி புன்னகைத்துச் சென்றான் திருநாவுக்கரசு. அதன்பின் திரு கிளம்பி தன் அலுவலகம் சென்ற போது மணி எட்டு. பெசன்ட் நகரில் ஆர்ப்பரிக்கும் அலைகடல் அருகே அழகுற அலுவலகம் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
“கார்னர்ஸ் ஆஃப் தி எர்த்” அதாவது பூமியின் மூலைகள் என்று ஆங்கிலத்தில் ஒவ்வொரு எழுத்தும் தனித் தனியாக தொங்கிக் கொண்டிருந்தது. வாயிலிலேயே சிறிய நீரூற்று இருக்க அங்கு சென்ற திரு,
“ஷ்யாம், மியூசிகல் ஃபவுண்டேனாக இதை மாத்தணும். அதுக்கான ஆளுங்க கிட்ட சொல்ல சொன்னேனே சொல்லிட்டியா?” என அவனிடம் மேலாளராய் இருப்பவனிடம் கேட்க,
ஷ்யாமோ “திரு நான் என்ன நினைக்கிறேன்னா சும்மா வாசல்ல எதுக்கு இவ்வளவு செலவு செஞ்சு ஃபவுண்டேன் வைக்கணும். இது நம்ம ஆபீஸ் மட்டும் தானே. உலகத்தை சுத்தி பார்க்க தான் நம்மகிட்ட மக்கள் வருவாங்க.. நம்ம ஆபீஸை சுத்திப் பார்க்க இல்லைடா  நான் சொல்றது புரியுதா?” என தன் கருத்தை முன் வைத்தான்.
அவர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தது திரு மட்டுமே. அவனின் நண்பனின் நண்பன் தான் ஷ்யாம். ஷ்யாம் அவர்களிடம் வேலை செய்பவன் மட்டுமே ஆனால் வேலையாள் கருத்தைக் கேட்டால் வேலை வெற்றியடையும் என்பது திருவின் எண்ணம்.
கருத்து மோதல் வரலாம். ஆனால் கருத்துக்கள் கண்டிப்பாகப் பரிமாறப்பட வேண்டும். பரீசிலிக்க வேண்டும் என்பது திருவின் ரூல் ஆகையால் ஷ்யாம் தைரியமாகத் தன் கருத்தை முன் வைத்தான்.. ஆறு மாத காலமாய் திருவைப் பார்க்கிறான் ஷ்யாம். பணக்காரன் என்ற கர்வமோ, முதலாளி என்று ஆதிக்கமோ யாரிடத்திலும் செலுத்த மாட்டான்.. ஆக்கமான கருத்துக்கள் அவனால் ஆதர்ஷிக்கப்படும்.
ஷ்யாம் பேசும் வரை, தன்னை நோக்கி வரும் ஆற்றின் வளம் பெற அமைதியாய் காத்திருக்கும் ஆழி போல் குறுக்கீடாமல் கேட்டான் திரு. ஷ்யாம் பேசி முடித்த பின்,
திருநாவுக்கரசன், “யூ ஆர் ரைட் ஷ்யாம் .. ஆனால் நம்மளோட நோக்கமே பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது தான்..  ட்டூரிட்ஸ் அட்ராக்ஷன் ரைட். அதுவும் நாம் புதுசா ஆரம்பிக்கிறோம். அதனால் விளம்பரம் ரொம்ப முக்கியம். மியூசிகல் ஃபவுண்டேன் வைக்கிறதால் இந்த ரோட்ல போறவங்க பார்ப்பாங்க அன்ட் இது  போஷ் (posh) ஏரியா. எனக்கு ஒரு ஐடியா இருக்கு பேசாம இங்க ஒரு ஐஸ்கிரீம் , ஜூஸ் ஸ்நாக்ஸ் ஷாப் போல செட் செய்யலாம் இது சாதாரண ட்ராவல் ஏஜென்சியா இருக்க கூடாது ஷ்யாம். இட்ஸ் மை ட்ரீம். எப்படியும் அதிகப் பணம் இருக்கவங்க மட்டும் தான் டூர் போக முடியும் சோ பிரம்மாண்டம் தேவை ஷ்யாம்” என முடிக்க ஷ்யாமிற்கு திருவின் யோசனை சரியாகத் தான் பட்டது. அதன் பின்  இன்டிரீயர் டெகரேட்டரை வரவழைத்து அவரோடு பேசியவன் கூர்க் செல்ல வேண்டி இருப்பதால் நாலு நாட்களில் செய்ய வேண்டியதை சொல்லிவிட்டு கிளம்பினான்.
வீட்டில் யாழ்முகையோ தேவையானவற்றை பேக் செய்து விட்டு மாமியாரிடம் செல்ல அவரோ எதோ தீவிரமாக கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருந்தார். அவளுக்கு வீட்டில் கணினி இருப்பது தெரியும். ஆனால் மாமியார் பயன்படுத்துவது தெரியாது. அவள் வீட்டில் இளசுகளுக்கு மட்டுமே கணினி இயக்க தெரியும். அதனால் அதிகரித்த ஆச்சர்யமும் அறியத் தூண்டும் ஆவலும் மருமகளை மாமியார் இருக்கும் இடம் கொண்டு வந்து சேர்த்தது. அருகில் ஆள் நிற்பதைக் கண்டு திருவின் தாய் துளசி பார்க்க,
கண்மணி வாய் திறந்து “என்னத்த உங்களுக்கு கம்ப்யூட்டர் பார்க்கத் தெரியுமா?” என மங்கையவள் மழலையின் ஆர்வத்தில் வினவ,
துளசியோ ” கம்ப்யூட்டரை பார்க்க எல்லோருக்கும் தெரியுமேடா? அதுல வேலை பார்க்கவும் எனக்கு தெரியும்” என சொல்லி சிரிக்க,
அப்படியே அவர் போல என்ற எண்ணம் இதயத்துவாரத்தில் தோன்றி கணவனின் நினைவு வந்த காரணமோ என்னவோ காற்று ஒன்று கண்மணியின் இதயத்தில் ஊடுருவி அவளுக்கு சாமரம் வீசியது. நினைவே சுகம்!
“அய்யோ போங்கத்தை! என்ன செய்றீங்க” என்று தன் தலையில் தட்டிக் கொண்டே கேட்க, “உட்கார் முதல்ல” என்றார் அவர்.
“இல்லத்தை பரவாயில்லை உங்க முன்னாடி எப்படி” என தத்தையவள் தயக்கம் கொள்ள,
அவள் கையைப் பிடித்தவர் அருகில் கிடந்த நாற்காலியை இழுத்துப் போட்டு “உட்கார் கண்மணி இல்லன்னா இன்னைக்கு நாள் முழுக்க இப்படியே நிற்க வைப்பேன்” என மிரட்ட,
“என்னத்தை அவரை மாதிரியே பண்றீங்க” என சிணுங்கிக் கொண்டே அவள் அமர,
“அட! அப்போ அரசு உன்னை அப்படி மிரட்டினானா என்ன?” என்றதும், கண்மணியும் நடந்தவற்றை சொல்ல அவர் முகத்தில் பெருமிதமும் பெரு மகிழ்ச்சியும் சரிசமாய்க் கலந்து இருக்க
“ஆமா! அவன் அப்படித்தான் சின்ன வயசுல ஆம்பிள்ளை புள்ள அடக்கி வளர்க்காட்டி அடங்காம போயிடுவான்னு எங்கப்பா சொல்லுவாங்க.. ஆனா அதுக்கு எந்தவித அவசியமும் இல்லாம செய்திட்டார் அவங்கப்பா… அரசுப்பா சொன்னா அரசு அப்படியே கேட்க்குவான்… எனக்கு தெம்பு இல்லாததால ஒரு புள்ளையோட நின்னுட்டோம்.. அதனால் அரசு மேல அவருக்கு அப்படி ஒரு பிரியம்”
“அவனும் அவங்கப்பாவும் பைக்ல சுத்துறதைப் பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கும்., அவங்க அப்பா என்னை பார்த்துக்குற மாதிரியே என்னை பார்த்துப்பான். அவன் முழுக்க முழுக்க அவரோட வளர்ப்புடா கண்மணி. ஒரு விஷயம் வேண்டாம்ன்னா நியமான காரணம் சொன்னா புரிஞ்சுப்பான். அவனுக்கு சரின்னு பட்டுட்டா நம்மளை எப்படியாவது சம்மதிக்க வச்சுடுவான்டா”
அவன் அவங்க அப்பாவை ரொம்ப மிஸ் செய்யுறான்னு எனக்கு தெரியும் ஆனால் அதை காட்டிக்கவோ சொல்லவோ மாட்டான். அவருக்கு ஹார்ட்ல பிளாக் பிழைக்க வைக்க முடியாதுனு சொல்லிட்டாங்க அப்ப ரொம்ப அழுவான். ஆனால் அவர் சொல்லிட்டார்
“அரசு அப்பா இன்னும் கொஞ்ச நாள் தான் இருப்பேன்… நீ அழுதபடியேவா அப்பாவை அனுப்பப் போற அப்படினு கேட்கவும் அவர் இருந்த வரைக்கும் முன்னாடி எப்படி இருந்தாங்களோ அப்படியே இருந்தாங்க அவர் சாகுற அன்னைக்கு அவன் அழுத அழுகை இருக்கே ஆயுசுக்கும் நான் மறக்க மாட்டேன். ஆனால் அடுத்த நாள் அவன் சாதாரணமாகிட்டான்.
“என்னை தேத்தினதும் அவன் தான்.. அவன் கூடவே உட்கார வச்சுப்பான். தனியாவே என்னை விட்டதில்லை… ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பொண்ணு எப்படி அடை சுடுறதுனு கேட்க வர நான் சொல்றதைக் கேட்ட அரசு,
“அம்மா இப்ப இந்த அக்காகிட்ட சொல்றதை எல்லாருக்கும் சொல்லலாம்லனு சொல்லி ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு எனக்கு தெரிஞ்ச சமையல் குறிப்பு எல்லாம் போட வச்சான்… அதனால வருமானமும் வருது. அது கூட ரெண்டாம் பட்சம் தான். ஆனால் எனக்கு தனிமை இல்லை. நான் உலகத்துக்கு அடையாளம் செய்த என் மகன் என்னை அடையாளம் காட்டிட்டான்…“என்றார் மிகவும் நெகிழ்ச்சியாக.
“இதைப் பாரு” என அவளிடம் மவுஸைத் தள்ள அழகான அதே சமயம் எளிமையான வகையில் அமைந்திருந்தது அவரது ப்ளாக் (வலைப்பூ) ஆயிரக் கணக்கில் பின் தொடருபவர்கள் இருக்க கருத்துக்களும் குவிந்திருந்தன.
“சூப்பர் அத்த” என அவரின் கையைக் குலுக்க,
“அரசு மாதிரி ஒரு புருஷன் கிடைக்க கொடுத்து வச்சுருக்கணும்டா நீ! அவன் எல்லோரையும் சந்தோஷமா வச்சுப்பான். அவனை சந்தோஷமா வச்சுக்க வேண்டியது உன் பொறுப்பு. அதுக்கு முதல்ல நீ சந்தோஷமா இருக்கணும். சுத்தி இருக்கவங்க சந்தோஷமா இருந்தாலே அவன் சந்தோஷமாகிடுவான்” என சொல்ல,
“அவரை நான் நல்லா பார்த்துக்குவேன் அத்தை” என்றாள் புன்னகை முகமாகவே. அவளுக்குப் புரிந்துது அன்று ஏன் திரு தன் தாயிடம் சுமூகமாக நடந்துக் கொள்ள சொன்னான் என்று! அன்று கசப்பாக இருந்தது இன்று கனிந்துப் போய்விட்டது. காரணம் புரிய கசப்பும் மறைகிறது தானே?
தன் மாமியாரையும் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள். இத்தனை நாளும் அவரிடம் மரியாதையாகத் தான் நடந்து கொண்டிருந்தாள். ஆனால் இன்று அதையும் மீறி ஒரு பாசம் தோன்றியது. சிறிது நேரம் பேசிவிட்டு கண்மணியையும் ஓய்வெடுக்க சொல்லி விட்டு தானும் ஓய்வெடுக்க சென்றார் துளசி.
இரவு ஊருக்கு செல்ல வேண்டும் என்பதால் உறங்கினால் தாமதமாகி விடும் என்பதால் அவர்களின் வீட்டின் பின் உள்ள தோட்டத்திற்கு சென்றாள் கண்மணி. அங்குள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுவது திருவின் தாத்தா வேலை இவளுக்குமே இதில் எல்லாம் விருப்பம் என்பதால் அவருக்கு கூடமாட ஒத்தாசை செய்வாள். அங்கிருந்த மல்லிகைப் பந்தலில் நித்திய மல்லி பூத்திருக்க, சும்மா இருக்க பிடிக்காமல் பூக்களைப் பறித்து கட்ட முடிவு செய்து பூக்களைப் பறித்தாள். கொஞ்சம் உயரமான பந்தல் என்பதால் அங்கிருந்த கல்மேடையில் ஏறிப் பறித்து கொண்டிருக்கையில் அங்கு வந்தான் திருநாவுக்கரசன்.
இடையில் புடவையை ஏத்தி சொருகிக் கொண்டு பூப்பறிக்க, கூடையில் விழுந்த பூவைப் போல் பூம்பாவையளின் அழகில் அவனுமே விழுந்தான். அவன் மட்டும் விழவில்லை. ஆம்! யாழ்முகையும் கல்மேடையில் இருந்து தடுக்கி கீழே விழுந்திருந்தாள்.
“யாழ்..!” என்றபடி திரு அடிகள் அகலமாய் வைத்து தன்னவளிடத்தில் விரைய மெதுவாக கைகளை ஊன்றி எழ முயற்சிக்க திருவும் கை கொடுக்க அவனை முறைத்துக் கொண்டு கைப் பிடித்து எழுந்தவள் முகம் சுருக்கி மேடையில் அமர,
“அடிப்பட்டுடுச்சா யாழ்?”
“இல்லை அவார்ட் கிடைச்சுது” என கடுப்புடன் சொல்ல
“என்ன ஆச்சு என் பொண்டாட்டிக்கு” என்றபடி தோள் சுற்றி கை போட,
“விழும் போது பிடிக்கலையாம்.. இப்போ மட்டும் என்ன?”
“ஐயோ! நிஜமா நான் பார்க்கலை.. நீ பூ பறிக்குறது ரொம்ப அழகா இருந்துச்சா அதான் பார்த்தேன்.. சடன்னா நீ விழுவனு எதிர்பார்க்கலைமா”என அவன் மெய்யுரைக்க,
“பூப்பறிக்குறதுல என்ன அழகை கண்டீங்க?” என கேட்டு விட,
“என் கண்ணுக்கு நீ அழகா தான் தெரிஞ்ச… என்ன இந்த சினிமாவில் சரியான டைம்ல ஹிரோயின் விழ ஹீரோ தாங்குவார் அந்த சீன் மிஸ்ஸாகிடுச்சு” என திரு கண்ணடிக்க,
“ஹா ஹா ஆசைதான்.. விழுந்தவளைப் பிடிக்கலை.. சாருக்கு ரொமேன்ஸ் கேட்குதோ?” என சொல்லி சிரிக்க,
“சிரிக்குற நீ!அந்த சீன் இல்லைனா என்ன… வேற சீன் இல்லையா என்ன?” என அவளை அலேக்காக தூக்கி அறைக்குள் சென்றவன் அவளைக் கட்டிலில் கிடத்தி, “திரு வழி தனி வழி” என சொல்லி அவளருகில் படுத்துக் கொள்ள,
“ஹூம்கும்.. திருட்டு வழி . யாராவது பார்த்தா மானம் போகும்” என யாழ்முகை திட்ட,
“ஹேய்! என் பொண்டாட்டி என் உரிமைடி” என்றான்
“சரி சொல்லு வலிக்குதா எங்கேயாவது.. தைலம் போடவா?” என்றவனின் குரலில் இருந்த அக்கறை அட்சரம் பிசகாமல் அவள் உள்ளத்தில் வெல்லப்பாகாய் வெள்ளம் பாய்ச்ச அதன் இனிமையில் கரைந்தவள் அவன் மேல் சாய்ந்து கொண்டு “இல்லை “  என தலையசைத்தாள்.
யாழ்முகை வீட்டில் அவள் தந்தையெல்லாம் இப்படி கேட்டதே இல்லை. அவளிடம் அக்கறை இருந்தாலும் அவள் அன்னையெல்லாம் உடல் நலமின்றி இருந்தாலும் அவர் தான் எல்லாம் செய்ய வேண்டும். இவன் என்னடாவென்றால் சாதரணமாக விழுந்ததற்கு இத்தனை முறை கேட்கிறானே என்ற வியப்பு தான் அவளுக்கு. ஏனோ தேனாய் இனித்தது அவள் உள்ளம்.
“யாழ்மா..! எல்லாம் எடுத்து வச்சுட்டியா? நைட் சீக்கிரம் போகனும்” எனவும்
“நான் எடுத்து வச்சுட்டேங்க”
“சரி யாழ்மா..! எனக்கு டயர்டா இருக்கு அஞ்சு மணிக்கு எழுப்புறியா?“ என சொல்லி கண் மூட, அவன் சோர்வாய் இருப்பதைக் கண்டவள் அவனை தொல்லை செய்யாமல் வந்து அவள் வீட்டிற்கு போன் செய்து வெளியூர்ல போவதாய் சொன்னாள். பின்னர் தேநீர் தயார் செய்து தோட்டத்தில் களை எடுத்துக் கொண்டிருந்த தாத்தாவிடம் சென்றாள்.
அவள் தந்த தேநீரை வாங்கியவர், “என்ன பேத்தி! என் பேராண்டி என்ன செய்றான்” என வினவ,
“தூங்குறார் தாத்தா”
“இன்னைக்கு வெளியூர்ல போகப் போறிங்களாமேமா…மருமக சொல்லிச்சு.. என் பேரன் தான் எனக்கு எல்லாமே கண்ணு.  என் பிள்ளையை தான் பறி கொடுத்துட்டேன்.. ஆனா என் கொள்ளுப் பேரனை பார்க்காம போக கூடாதுனு தான் உயிரைப் பிடிச்சு வச்சுட்டு இருக்கேன்… அவன் சும்மா வியாக்கியானம் பேசுவான் நீ கேட்டுக்காதே! எனக்குப் பேரப்பிள்ளை வேணும் கண்ணு” என தன் ஆசையை சொல்ல,
“சரிங்க தாத்தா!” என்று சமத்தாய் சொல்லிவிட்டு மாமியாருக்கும் தேநீர் கொடுத்தாள்.
மணி ஐந்தை தாண்டியிருக்க திருவை எழுப்ப செல்ல, அவன் போன் அடிக்கும் ஓசையில் அவனே எழுந்து கொண்டான்.
“அயன் சொல்லு எஸ்! எஸ்! நாங்க நேரா வந்துடுவோம்… நீ வழக்கம் போல லேட் செய்யாம சரியா வாடா” என்று சொல்லி விட்டு வைத்தவன் முகம் கழுவி வந்து யாழ்முகை கொடுத்த தேநீரைக் குடித்தான்.
குடிக்கும் முன்னே “நீ குடிச்சியா யாழ்?” என்று கேட்கவும் மறக்கவில்லை.
அவன் அக்கறை வழக்கம் போல கண்மணியை குளிர்விக்க, அடுத்து அவன் சொன்னதில் அவளுக்கு கொடைக்கானல் உணர்வு போய் கொளுத்தும் வெயிலின் தாக்கம் ஏற்பட்டது. அவளை அவனோடு தர்க்கம் செய்யவும் வைத்தது.
“என் ப்ரெண்ட் அயன் சொன்னேன்ல அவனும் வரான் நம்ம கூட… அவனுக்கும் இப்போ தானே கல்யாணம் ஆச்சு. ஸோ நம்ம கூட கூர்க் வரான்” என்றதும் யாழ்முகைக்கு அவ்வளவு கோபம்.
“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? நீங்க சொல்றதும் செய்றதும் சரியா? நம்ம கூட அவங்க எதுக்கு வர்றாங்க” என கத்த,
திருவோ நிதானமாய் “ நான் ஒன்னும் அவ்வளவு முட்டாள் கிடையாது. கம்பெனி ஸ்டார்ட் செஞ்சிட்டா ஒரு வருஷத்துக்கு அங்க இங்க நகர முடியாது. அவனும் ஆறு மாதமா கம்பெனி விஷயம் பார்க்க செய்றான் எங்கேயும் போகல. இரண்டு நாள் முன்ன கூட சண்டை. அதான் போயிட்டு வந்தா ஒரு சேஞ்ச் இருக்கும்னு பார்த்தேன். நம்ம ப்ரைவசிக்கு எந்த டிஸ்டபர்ன்ஸும் வராது புரிஞ்சுப்பனு நினைக்குறேன் யாழ்! இது எனக்கு திடீர்னு தோணினது தான் அதனால் உன்கிட்ட சொல்ல முடியலை. அவனையும் கம்பெல் செஞ்சு தான் வரவச்சிருக்கேன்” என்றவன் சட்டை மாற்றத் துவங்கினான்.
யாழ்முகை எதுவும் சொல்லாமல் போக அவளின் கைப் பிடித்து நிறுத்தியவன் “சாரிடா. சொல்ல மறந்துட்டேன் நிறைய வொர்க்” என சமாதானம் செய்ய,
“சரி இட்ஸ் ஓகே” என்றபோதிலும் அவள் மனம் சமாதானமாகவில்லை  என உணர்ந்தவன், ‘திரு பாவம்’என்றான் பாவம் என்ற பாவத்தோடு!
பாவையை மயக்கும் பாவம்!
ஓடிச் செல்ல முனைந்த கோபத்திற்கு மூக்கனாங்கயிறு மாட்டி மூக்கு நுனியில் கொண்டு வந்து நிறுத்தியவள் “எல்லாமே திரு ரூல்ஸ் தானே! பின்ன என்ன பாவம்?” என முறுக்கிக் கொண்டு கேட்க,
“ஐ வாஸ் நாட் இன்டென்ஷனல் புரிஞ்சுக்கோடி” என அவன் சொல்ல, அவள் அமைதியாகவே நின்றாள். அதற்கு மேல் நேரமாகிவிடும் என அவன் கிளம்பத் தயாராக ஒரு வழியாக வீட்டில் சொல்லிக் கொண்டு காரில் புறப்பட்டனர். காரை ரயில் நிலையம் அருகில் இருக்கும் தன் நண்பன் வீட்டில் விட திருவுக்கு எண்ணம்.
ஒரு சாலைக்குள் புகுந்து செல்கையில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்க வண்டியை நிறுத்தியவன், “இப்படி அமைதியா வராதே யாழ்! எனக்கு கடுப்பா இருக்கு.. நான் தான் வேணும்னு செய்யலனு சொல்றேன்ல” என காரக் குரலில் சொல்லவும்,
யாழ்முகை மூக்கு நுனி கோபத்தை மூட்டை கட்டி வைத்தாள். அவன் மீது எரிச்சல் இருந்தது என்னவோ உண்மை தான். ஆனால் யாழ்முகைக்கு கோபத்தை வெகு நேரம் இழுத்துப் பிடிக்கும் திறமை எல்லாம் இல்லை என்பதால் சிறிது நேரத்திலேயே அவளது கோபம் சிறகின்றி பறந்து போனது. ஆனால் அவன்மேல் வருத்தம் இருந்தது. முதன் முறையாக அவனுடன் போகும் பயணத்தில் இது என்ன தடை என்ற எண்ணமே எரிச்சலுற செய்தது.
திருவைப் பொறுத்துவரை அவனுக்கு இந்த மாதிரி பார்மாலிட்டிஸ் இல்லை. நண்பனோடு போனாலும் மனைவிக்கான முக்கியத்துவத்தை தந்து விடுவான் அதனால் அவனுக்கு தனிமை பாதிக்கப்படும் என்ற எண்ணம் கிஞ்சிற்றும் இல்லை. அவன் அவனுடைய மனைவியை அழைத்து வரப் போகிறான்.. நான் என் மனைவியுடன் போகிறேன் என்பதே திருவின் எண்ணம்.ஆனால் எண்ணங்கள் ஓடுவது ஒரு இடமாய் இருக்க எதிரொலி வேறு இடம் அல்லவா?
யாழ்முகையின் அமைதி திருவை எரிச்சலபடுத்த அதற்கு மேல் தாமதித்தால் நேரமாகிவிடும்  என காரை எடுக்க முனைய காரிகையின் கைகள் கணவனின் கை மேல். உடனே வெள்ளை அடித்த வீடு கணக்காய் பளிச்சென்றானது திருவின் முகம்.
“கோபம் போச்சா?” என ஆவலாய்க் கேட்க,
“போகல போகல அப்படியே தான் இருக்கு” என்றாள் அவசரமாய்!
“போக வைக்கணுமே! இந்த மூக்கு மேல தானே இருக்கு” என்றபடி அவள் முகம் நோக்கி மூக்கின் நுனியில் முத்தமிட்டவன் தடம் மாறி..  தடுமாறி.. இருந்த நிலைமாறி.. அவள் இதழில் கரைந்தான். சுகமாய் பதமாய் இதமாய் ஒரு இன்ப இதழ் தழுவல் அரங்கேறியதன் சாட்சியாய் முகமெல்லாம் சிவந்து மூச்சு வாங்க இருந்தாள் யாழ்முகை.
“கோபம் போச்சுதானே?” என அவன் நம்பிக்கையாய்க் கேட்கவும்
“அதிகமாச்சு” என முறைக்க,
“ஏய்! நான் சமாதானம் தானேடி செஞ்சேன்.. சரி விடு அதிகமான கோபத்தை குறைக்குறேன்” என நெருங்க,
“இது ஒன்னும் சமாதானம் செய்ற வழியில்லை!”
“அப்போ நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணு! ரூம்க்கு போனதும் கால்ல விழறேன்!”
“அப்ப கூர்க்ல போயும் ஹனிமூன் கிடையாது.. இதுல வேற திரு வழி தனி வழினு டையலாக் அடிச்சிட்டு தூங்க வேண்டியது” என கயல் விழிகள் இரண்டும் துடித்து சிரிக்க, கணவன் மனம் கனிந்து கனியாய்ப் போனது.
“ரொம்ப டென்ஷன் பண்ணிட்ட நீ இன்னைக்கு! என்னால ரொம்ப நேரம் சண்டை போட்டுட்டு இருக்க முடியாது.. ப்ரெண்ட்ஸ்குள்ள அடிச்சிக்கிட்டா கூட முதல்ல போய் சமாதானம் செஞ்சிடுவேன்” என்றவனின் வார்த்தைகளை வழி மறைத்தவள்,
“எப்படி இப்ப செஞ்ச மாதிரியா?” என கேலியாக கண்மணி கலாய்க்க,
“அடியே! அது எல்லாம் உனக்கான டெக்னிக் … நான் அவன் இல்லை” என அவனும் சிரித்த வண்ணம் சொல்ல,
“எவன் இல்லை?” என்றாள் மீண்டும்..
“யாழ் விட்டுடுடி” என்றவன் காரை அவள் சிரித்தபடி பேச ஆரம்பிக்கவும் எடுத்து விட்டான். ஆனால் அவளை அருகில் வைத்து அவள் கையை பிடித்த வண்ணமே பேசினான்.
“எனக்குப் புரியுது! ஆனா சரி நம்ம நண்பனுக்கும் ஒரு சேஞ்சா இருக்கட்டுமேன்னு தான் நான் சொன்னேன். நம்ம ப்ரைவ்சிக்கு எந்த தொல்லையும் இருக்காது. இதுவரைக்கும் நான் யார்கிட்டேயும் கேட்டு டிசைட் செஞ்சதில்லை. முக்கியமா இட் வாஸ் நாட் அ பிக் இஸ்யூ.. என்னைப் பொறுத்தவரை . ஆனால் ஐ வில் நெவர் ரிபீட் திஸ். உன்னை கன்செல்ட் செய்யாம எதுவும் செய்ய மாட்டேன் சாரி” என்றதும் அவன் தோளில் நன்றாக சாய்ந்து கொண்டாள்.
திருவின் மனம் கூட நிறைவாய் உணர்ந்தது. அவனுக்கு சண்டை போட்டால் உடனே சரியாக வேண்டும். இல்லாவிட்டால் அது கூடுதலாய் ஒரு பாரத்தை ஏற்றி வைப்பது போல் தோன்றும். மனம் லேசாக கார் ரயில் நிலையம் அடைந்தது.
கண்மணி மனதில் கணவனின் நினைவே! கடவுள் தனக்கு நல்ல துணைவனை அமைத்துக் கொடுத்திருக்கிறார்… அவருக்கு மனதார நன்றி சொன்னாள். கால்ல விழுவாராம்ல பேச்சுக்கு கூட  அவள் வீட்டில் இப்படி யாரும் சொன்னதில்லை. ஓரளவிற்கு திருவின் குணம் பிடிபட ஆரம்பித்துவிட, அவனை பிடிக்கவும் கூட செய்தது.
இத்தனைக்கும் இருவருக்குள்ளும் முரண்களே! ஆனால் அவை இடர்பாடாக அன்றி ஈர்ப்பாகத்தான் இருந்தது. கண்மணி சில ட்ராமா டைப் செயல்களை ஒதுக்க நினைத்தாள்.. திருவின் எதார்த்தங்களை ஏற்கப் பழகினாள்.
அங்கு அவர்கள் சென்று ஒரு பத்து நிமிடங்களில் அயனும் இவாஞ்சலினும் வந்து விட்டனர்.
“வணக்கம் சிஸ்டர் ஐ அம் அயன். இந்த நல்லவனோட ப்ரெண்ட்” என அறிமுகப்படுத்திக் கொள்ள,
இவாவும் நான் இவாஞ்சலின் இந்த நல்லவனுக்கு ப்ரெண்ட், இந்த நல்லவனுக்கு வைஃப்” என திருவையும், அயனையும் காட்டினாள்.. யாழ்முகையும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
இரயில் வரும் வரை அயனும் திருவும் கம்பெனி பற்றி பேச, இவா யாழ்முகையிடம் பேச்சு கொடுத்தாள்.. பொதுவான பேச்சுக்கள். பின்னர் இரயில் கிளம்பி மைசூர் சென்றது. அந்த வழித்தடம் அவர்களின் வாழ்க்கை தடத்தை மாற்றக் காத்திருந்தது…

Advertisement