Advertisement

 மனம் – 12

நாட்கள் ஜெட் வேகத்தில் பறந்திருந்தது.. யதுவீர் லக்க்ஷனா நிச்சயதார்த்தம் முடிந்து, இரண்டு மாதங்கள் கண் மூடி கண் திறப்பதற்குள் சென்றிருந்தது.. நிச்சயம் முடிந்து யதுவீர் மூன்று நாளில் மும்பை கிளம்பிட, அவனது குடும்பமோ மேலும் ஒருவாரம் இருந்துவிட்டே கிளம்பினர்..

லக்க்ஷனா தான் யதுவீர் கிளம்புகையில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டே இருந்தாள். என்னவோ எல்லாமே சீக்கிரம் சீக்கிரம் நடந்தது போல் இருக்க, எதையும் அவள் முழுதாய் உணரக்கூட இல்லை என்பதாகவே அவளுக்குப் பட்டது.

யதுவீர் நேரம் கிடைக்கையில் வீட்டிற்கே வந்துகூட பார்த்துவிட்டு போவான்..  அப்படியில்லையா அவள் ஆபிஸ் விட்டு கிளம்புகையில் வந்து பிக்கப் செய்துகொண்டு வீட்டில் விட்டு செல்வான்.. இடைப்பட்ட தூரங்களை கடக்கும் நேரங்களே அவர்களுக்கான நேரமாய் இருந்தது..

யதுவீருக்கு மனதில் வேறொரு எண்ணம், இப்போதைக்கு ஜோடியாய் எங்கேயும் சுற்ற வேண்டாம் என்று.. அவனுக்கும் ஆசை இருந்ததுதான்.. ஆனால் நேரலை பேட்டிக்கு பின்னே, இப்போதைக்கு கொஞ்சம் அமைதியாய் இருப்போம் என்றே தோன்றியது.

ஆனால் லக்க்ஷனாவிற்கோ மனதிற்குள் இத்தனை நாட்களாய் அடக்கிவைக்கப்பட்ட காதல். இன்று அதற்கான தடை தகர்த்து, இரு குடும்பத்தின் சம்மதமும் கிடைத்து, அதிலும் நிச்சயமும் முடிந்த பின்னே இப்படியான கட்டுபாடுகள் எல்லாம் என்ன என்று இருந்தது..

“ம்ம் போ யது.. இப்படி கார்லயே சுத்திட்டு இருக்க.. நான் கேப்லயே போயிடுவேன்..” என்று முகத்தை தூக்க,

“வாட் ஐ டூ பேபி…..” என்று உதடு பிதுக்கி தோள்களை தூக்குபவனைப் பார்த்து, “பொழச்சு போ…” என்று மட்டும் தான் சொல்ல முடியும்.

அவளுக்கும் எல்லாமே தெரியும்.. இருந்தும் ஆசைகளுக்கு சூழல் புரியாது அல்லவா.. இருவருக்குமே இருவரையும் பிடிக்கும்.. ஆனால் ஒருவரை பற்றி ஒருவருக்கு அத்தனை தெரியாது. அப்படித் தெரிந்துகொள்வதற்கான நேரமும் கம்மியாகவே இருந்தது.. அதுவும் யதுவீர் சென்னையில் இருந்து கிளம்புகையில்,

“நான் ஏர் போர்ட் வர்றேன்…” என்று லக்க்ஷனா பிடிவாதமாய் இருக்க,

“வேணாம் லக்க்ஷி…. நான் டீம் கூட போறேன்.. அங்க வந்து ஒரு பைவ் மினிட்ஸ் தான் உன்கூட பேச முடியும்… ஜஸ்ட் த்ரீ ஹவர்ஸ் வெய்ட் பண்ணு.. நானே கால் பண்றேன்..” என்றதும் முகம் கூம்பிப் போனது அவளுக்கு..

சொல்லிக்கொண்டு செல்லவென்று லக்க்ஷனா வீட்டிற்கு வந்திருந்தான்.. அவளுக்கோ மனதில் பழைய எண்ணங்கள்.. இப்படித்தான் அன்றும் சொல்லிக்கொண்டு செல்லவென்று வந்தான்.. ஆனால் அவள் செய்தது என்ன??

காதலை காட்ட வேண்டிய இடத்தில் காயத்தை பரிசளித்தாள், வலி என்னவோ அவளுக்குத் தான் அதிகம் என்றாலும், அதன் தாக்கம் அவனிடமும் இருந்தது தானே.

ஆக அப்படியான அந்த கசப்பான நினைவுகளை கொஞ்சம் மாற்றி மறக்க  வேண்டும் என்றுதான் லக்க்ஷனா ஏர் போர்ட் வருகிறேன் என்றாள். அவனோ மறுக்க,

பூனம் கூட “லக்க்ஷி.. வரட்டுமே யது..”  என,

“நீங்களே ஏர் போர்ட் வரப்போறதில்ல..” என்றிட,

“லக்க்ஷி.. பிடிவாதம் பிடிக்காத…” என்றார் மீரா..

அனைவரின் முன்னும் மீரா அப்படி சொல்லிட, அதற்குமேல் அவளால் ஒன்றும் பேசமுடியாமல் போக, “ம்ம் சரிம்மா..” என்று மட்டும் சொல்லி அமைதியாய் அமர்ந்திருந்தாள்..

நவநீதன் அன்று காலையில் தான் கிளம்பியிருந்தார் துபாய்க்கு.. அவர் இருந்திருந்தால் கூட குடும்பத்துடன் சென்று யதுவீரை வழியனுப்பி இருக்கலாம்.. இப்போது அவரும் இல்லை என்றபடியால், யதுவீரின் பெற்றோரும் ஏர் போர்ட் போகவில்லை என்பதால் லக்க்ஷனாவை மட்டும் எப்படி அனுப்ப என்றுதான் மீரா அப்படி சொன்னார்.

ஏற்கனவே அவர்கள் பக்கத்து உறவுகளில் பேச்சுக்கள் இன்னமும் கொஞ்சம் ஒருமாதிரி தான் இருக்கிறது.. ஆக எதுவாக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு லக்க்ஷனா அவள் விருப்பத்திற்கு இருக்கட்டும் என்றிருக்க, அவளோ யதுவீர் கிளம்புகிறானே என்பதிலேயே நின்றுவிட்டாள்..

லக்க்ஷனா அமைதியாகவே இருப்பதைப் பார்த்தவன், “ஆன்ட்டி லக்க்ஷியும் நானும் கொஞ்சம் பேசிட்டு வர்றோமே..” என்று மாடியைப் பார்க்க, மீராவோ மகள் முகத்தைப் பார்த்தார்.  

லக்க்ஷனாவிற்கு இதையாவது கேட்டானே என்றிருக்க, ‘போகவா..’ என்பதுபோல் மீராவைப் பார்க்க, அவரும் சரியென்று தலையை அசைத்தார்..

லக்க்ஷனா பூனமை அடுத்து பார்க்க, அவரோ இதெல்லாம் சகஜம்தான் என்பதுபோல் அமர்ந்திருக்க, லக்க்ஷனா எழுந்து முன்னே நடக்க, யதுவீர் அவளைப் பின் தொடர்ந்தான்..

பொழுது சாயும் நேரமென்பதால், வெயில் அத்தனை அதிகமில்லை.. கொஞ்சம் கொஞ்சமாய் காற்றில் குளுமை பரவிக்கொண்டு இருக்க, மாடிக்கு வந்தவளும் அமைதியாகவே நிற்க,

“லக்க்ஷி பேபி… நீ மாறவேயில்லை…” என்றவனை ஒருவித வலியுடன் நிமிர்ந்து பார்த்தாள் லக்க்ஷனா..

உண்மையும் அது தானே..

“ஹே… சாரி சாரி… நான் ஜஸ்ட் அன்னிக்கும் இன்னிக்கும் கம்பேர் பண்ணிட்டேன்.. உன்னை ஹர்ட் பண்ணனும்னு சொல்லலை..” என்று வேகமாய் யதுவீர் மன்னிப்பை வேண்ட,

“இல்ல யது.. எனக்குமே சேம் திங்கிங் தான்.. அதான் ஏர் போர்ட் வர்றேன் சொன்னேன்..” என்றாள் இயல்பாய் குரலை வைத்து..

“சோ.. வி ஆர் செயிலிங் இன் தி சேம் போட்டா..” என்றபடி யதுவீர் கொஞ்சம் அவளருகே நெருங்கி நிற்க,

“ஒய்.. தள்ளி நில்லு…” என்று லக்க்ஷனா தள்ளிப்போக,

“இதுக்கு ஒரு டிரைவ் போயிருக்கலாம்..” என்று சலித்துக்கொண்டவன், “லக்க்ஷி…” என்று ஆழ்ந்த குரலில் அழைக்க, சுற்றும் பார்வையை பதித்திருந்தவள் அவனை என்னவென்று பார்க்க,

“எல்லாமே ரொம்ப ரொம்ப ஃபாஸ்ட்டா நடந்திருச்சுல்ல..” என,

“ம்ம் எஸ் யது.. ரொம்ப ரொம்ப… ஜஸ்ட் த்ரீ டேஸ்ல.. ஆனா…” என்று இழுத்தவளுக்கு அதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை, தொண்டை அடைத்தது.

“லக்க்ஷி.. வாட் ஹேப்பன்…” என்று அவள் கைகளை பற்ற, அவளோ அத்தனை நேரம் நின்றிருந்தவள், அப்படியே கீழே அமர, அவனும் ஒன்றும் சொல்லாமல் அவளருகே அமர்ந்துகொள்ள, அவன் கரங்களோடு தன் கரத்தினை பிணைத்து, அவன் தோள்களில் சாய்ந்துகொண்டாள்..

கொஞ்ச நேரம் முன்புதான் யதுவீர் அவளிடம் கொஞ்சம் நெருங்கி நின்றதற்கு தள்ளிப்போ என்றாள், இப்போது அவளாகவே இப்படி செய்யவும்,

“வாட் ஹேப்பன் லக்க்ஷி..” என்றான் திரும்பவும்..

“ம்ம் நத்திங்…” என்று கண்களை கொஞ்ச நேரம் இறுக மூடித் திறந்தவள், “சாரி யது…” என்றாள் வேறெதுவும் சொல்லாது..

“ஹா…… பேபி.. டெய்லி இப்படி சாரி சொல்லிடுற.. பட் வொய்….?? பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. லீவ் இட் லக்க்ஷி..” என்று யதுவீர் புரியாது அவளது முகத்தைப் பார்க்க,

“நான்.. நான் ரொம்ப கோழையா இருந்திட்டேன்ல.. திங் பண்ணி பாரு.. இப்படியொரு பிராப்ளம் நடந்து, தென் உனக்கு என்மேல லவ் வந்து, வீட்லயும் எல்லாரும் ஓகே சொல்லி மேரேஜ் பிக்ஸ் ஆகலைன்னா.. நம்ம என்ன பண்ணிருப்போம்???” என்று அவனைப் பார்த்து கேட்டவளின் கண்களில் நீர் வழிந்தது..

அப்படியெல்லாம் நடந்தே இருக்காவிடில் இப்போது லக்க்ஷனா இப்படித்தான் கண்ணீர் வடித்திருப்பாள், உள்ளத்தில் இருக்கும் காதலை உரியவனிடம் சொல்லாது போன சோகத்தில்.. ஆனால் நடந்தது வேறல்லவா..

லக்க்ஷனா இப்போதும் கண்ணீரோடு பார்க்க, யதுவீரோ அவளை முறைதிருந்தான்..

“லக்க்ஷி.. இந்த மேரேஜ் அந்த பிராப்ளம்னால வந்தது இல்லைன்னு ஹவ் மேனி டைம்ஸ்…” என்றவன் அதற்குமேல் பேச விரும்பாமல் “ம்ம்ச்..” என்று ஒரு சலிப்பை மட்டுமே அவன் வெளிப்படுத்த,

“நான் அப்படி சொன்னேனா…” என்றாள் லக்க்ஷனா..

“தென் வாட்..??” என்று அவளைப் பார்த்து எகிறியவன், இன்னும் என்ன என்பதுபோல் பார்க்க,

“இதெல்லாம் நடக்கலைன்னா, அப்போ என்னாகியிருக்கும்?? அம்மா எனக்கு அலையன்ஸ் பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தாங்க.. இந்த பிராப்ளம் நடக்கவும் தான் என்கிட்ட என்ன எதுன்னு விசாரிச்சாங்க.. அப்படியெல்லாம் நடந்திருக்கலைன்னா இந்நேரம் நம்ம இப்படி பேசிட்டு இருக்க முடியுமா??” என்று லக்க்ஷனா தான் நினைத்ததை விளக்கிச் சொல்ல,   

“ஓ…” என்று நெற்றியை, தடவியவன், “சாரி பேபி… கொஞ்சம் டென்சன் ஆகிட்டேன்..” என்று சிரிக்க,

“ஹ்ம்ம்.. அதெல்லாம் நினைச்சு பார்க்கவும் தான் கொஞ்சம் பயந்துட்டேன் யது.. எனக்கும் உன்கிட்ட சொல்ற தைரியம் வந்திருக்காது…..” என்று வருந்த,

“ஹ்ம்ம் லுக் லக்க்ஷி… இதுதான் நடக்கனும்னு இருந்தா கண்டிப்பா நடந்திருக்கும்.. நீயோ நானோ வேணும் வேணாம் நினைச்சாலும் இது நடக்கனும்னு இருந்தா கண்டிப்பா நடந்துதான் ஆகும்.. சோ டோன்ட் கன்பியுஸ் யுவர்செல்ப்.. நடக்காததை திங் பண்ணி ஏன் பீல் பண்ற…” என்றான் ஆறுதலாய்..

அவனைப் பொறுத்த வரைக்கும், இது நடக்கவேண்டும் என்று இருந்திருக்கிறது நடந்துவிட்டது.. லக்க்ஷனாவிற்கு என்மேல் காதல் இருந்தது.. அவனுக்கும் அவள் மீது ஒரு ஈர்ப்பும், காதலும் ஏற்பட, அடுத்தடுத்து நடந்தது எல்லாமே சுபம் தான்.

ஆனால் லக்க்ஷனாவிற்கு அப்படியல்ல, நடக்காதா என்று எத்தனை நாள் ஏங்கியிருப்பாள், அப்படியான ஒன்று திடுதிப்பென்று நடந்துவிட, இன்னமும் அவளால் இதை நம்ப முடியவில்லை.. அதை அப்படியே வார்த்தைகளில் தெரிவிக்க,        

“வொய்??? அதுவும் நான் இருக்கப்போ…” என்றவன், கொஞ்சம் திரும்பி அவள் கன்னத்தில் இதழ் பதித்து,

“இப்போ நம்ப முடியுதா??” என்றான் இன்னும் சிரித்து..

“ஹா ஹா.. இதான் நம்ப வைக்கிறதா???” என்று சிரித்தவள்,

“ஐ டோனோ யது.. உன்னை ஏன் லவ் பண்ணேன்.. எது உன்கிட்ட பிடிக்கும்?? இப்போவரைக்கும் எனக்கு தெரியாது.. அதெல்லாம் தெரிஞ்சுக்கவும் விரும்பல.. வாட் எவர் யூ ஆர்.. நீ எப்படியிருந்தாலும் சரி ஐ லவ் யூ.. பட் சில நேரம் நான் என்னை நினைச்சு தான் கொஞ்சம் குழம்பிடுறேன்” என்று தலையை சரித்து அவனை நேருக்கு நேராகப் பார்த்துக் சொல்ல, யதுவீர் ஒன்றும் பேசாமல் அவளை இன்னும் தன்னோடு சாய்த்து, லக்க்ஷனாவின் நெற்றியில் தன் கன்னம் வைத்து அழுத்தி  தன் பிடியை மட்டும் கொஞ்சம் இறுக்கிக்கொண்டான்.

யதுவீருக்கு இது ஒரு பழக்கம்.. கொஞ்சம் எமோசனலான நேரங்களில் மௌனத்தை துணைக்கழைத்து, அவளது ஸ்பரிசத்தை மட்டும் அவன் உள்ளம் உணர செய்துகொள்வான்.. இந்த நிச்சயம் முடிந்த இந்த கொஞ்ச நாளில் லக்க்ஷனா இதை மட்டும் அவனிடம் நன்கு புரிந்திருந்தாள்..

இத்தனை நேரம் பேச்சுக்களாய் கழிந்த பொழுது, இப்போது கொஞ்சம் மௌனமாகவும் கழிய, அடுத்து சிறிது நேரத்திலேயே யதுவீரின் அலைபேசி சிணுங்க, எடுத்துப் பார்த்தவன்,

“கிளம்பனும் லக்க்ஷி…” என்று சொல்லிக்கொண்டே, அழைப்பை ஏற்று “ஜஸ்ட் ஹால்ப் ஹவர்…” என்று சொல்லிவிட்டு வைத்தவன், அவளைத் திரும்பிப் பார்க்க, அவளோ இன்னும் கொஞ்ச நேரம் இரேன் என்பதுபோல் பார்த்தாள்.

“டைம் கிடைக்கிறப்போ எல்லாம் வர்றேன் லக்க்ஷி… இப்படி டல் ஃபேஸ் காட்டாத ப்ளீஸ்…” என்றவன் தானும் எழுந்து, அவளுக்குக் கை கொடுக்க,

‘இந்த பழக்கத்தை இவன் விடவே மாட்டான் போல..’ என்று எண்ணியவள், அவன் கைகளில் தன் கையை வைக்க, அவளை லேசாய் இழுத்து எழுப்பியவன்,

“ஓகே பேபி.. டேக் கேர்… கால் பண்றேன்… டோன்ட் கன்பியுஸ் உர்செல்ப்…” என்றவன், அவளுக்கொரு அணைப்பையும் கொடுத்து விடுவிக்க,

“ஹ்ம்ம்…..” என்று ஒரு பெரு மூச்சு விட்டவள், “டேக் கேர் யது…” என்று சொல்லி அவனோடு சேர்ந்து கீழே வந்தாள்…

இது நடந்தும் ஒரு வாரம் ஆகிவிட்டது.. யதுவீரின் குடும்பமும் மும்பை கிளம்பிட, அடுத்த இரண்டு மாதங்களும் வேகமாய் கடந்திருந்தது. ஆனால் லக்க்ஷனாவிற்கு இந்த இரண்டு மாதமும் என்னவோ கட்டை வண்டி பயணமாய் தோன்றியது..  

லக்க்ஷனாவிற்கும் யதுவீருக்கும் நேரம் முன்னும் பின்னுமாய் இருந்தது.. அவள் சும்மா இருக்கும் நேரத்தில் அவனுக்கு இவளோடு பேசிடும் நேரம் இருக்காது.. அவன் அழைக்கையில் அவளால் சரியாய் பேசும் சூழல் இருக்காது.

லக்க்ஷனா காலையில் எழுந்து அவனுக்கு காலை வணக்கம் அனுப்பினால், அவனோ ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது போல் ஒரு செல்பி எடுத்து அனுப்புவான்.. முதலில் அவனது புகைப்படங்களைப் பார்க்கவே ஆவலாய் ஆசையாய் இருக்கும்.. இவளும் அவ்வப்போது ஏதாவது செல்பிக்கள் எடுத்து அனுப்புவாள்.. அதற்க்கெல்லாம் எதாவது ஒரு ஸ்மைலி பதிலாய் வரும்..

இப்படித்தான் யதுவீருக்கும் லக்க்ஷனாவிற்கும் அவர்களின் காதல் பொழுதுகள் கழிந்தது.. சில நேரங்களில் அவனைப் பார்க்க வேண்டும் போல் அவளுக்கு இருக்கும், அப்போது அவன் பிசியாய் இருப்பான்.. அவன் விடியோ கால் அழைக்கையில், பல நேரம் லக்க்ஷனா தூங்கி வழிவாள்.

இதற்கிடையில் யதுவீர் டெல்லி டோர்னமென்ட் செல்லும் நாளும் வர, “யது டேக் கேர் யது.. பார்த்து விளையாடு என்ன.. ரொம்ப விழுந்து வைக்காத…” என்று சின்ன பையனுக்கு அறிவுரை சொல்வது போல் லக்க்ஷனா சொல்ல,

“ஹா ஹா… மாம் கூட இப்படியெல்லாம் சொன்னதில்ல பேபி… விழுந்து வைக்காத வா..” என்று மீண்டும் அவள் சொன்னதையே சொன்னவனுக்கு வயிறு வலிக்கும் அளவு சிரிப்பு வந்தது..

சிரித்துகொண்டே இருந்தான்.. “ஹே பேபி.. ரியல்லி.. விழாம எப்படி ப்ளே பண்ண.. ஹாஹா டெல் மீ டெல் மீ.. இல்ல நீ ட்ரைன் பண்ணேன்…” என்று சிரிக்க, இவளுக்கோ புசுபுசுவென்று கோவம் வந்துவிட்டது..

“லூசு போடா…” என்று திட்டிவிட்டு போனை வைத்துவிட, யதுவீருக்கோ இன்னமும் சிரிப்பு அடங்கவில்லை..

“ஓ மை காட்…” என்று கண்ணில் துளிர்த்த நீரை சுண்டியவன், சிரித்த முகமாகவே ப்ளைட் ஏறினான்..

கொஞ்ச நேரத்தில் லக்க்ஷனாவிற்குமே தான் சொன்னதை நினைத்து சிரிப்புதான்.. பின்னே நீச்சல் அடிப்பவனிடம் உடைகள் நனையாமல் நீச்சல் அடி என்று சொன்னால் அது நியாயமா?? அதுபோல் கபடி ஆடுபவனிடம் கீழே விழாமல் ஆடு என்றால் யாருக்குதான் சிரிப்பு வராது..

அவளுக்கே அப்போது சிரிப்பாய் இருக்க, மீரா பார்த்தவர் “என்ன டி நீயா சிரிக்கிற..” என்று விசாரிக்க, லக்க்ஷனாவிற்கு இந்த சம்பாசனையை மீராவிடம் கூறுவதில் எந்த சங்கடமும் இருப்பதாய் தெரியவில்லை என்பதால் அப்படியே சொல்ல, அவருக்கும் சிரிப்புதான்..

“நல்லா சொன்ன போ.. விழுந்து வைக்காம ஆடணுமா.. சுத்தம்.. அப்படி புதுசா ஒரு கேம் கண்டு பிடி….” என்று மீரா அவளையே கிண்டல் செய்ய,

“சரி சரி ரொம்ப pt டீச்சர்னு காட்டாதம்மா…” என்றாள் பதிலுக்கு அவளும்…

யதுவீர் டெல்லியில் இருக்க, லக்க்ஷனா சென்னையில் இருக்க, இரண்டு குடும்பத்தினரும் இன்னும் திருமணம் பற்றிய பேச்சைத் தொடங்காமல் இருந்தனர்.. அதுக்கூட சொந்த பந்தத்தில் ஒரு பேச்சாய் இருந்தது..

மீரா பக்கத்து உறவில் ஒரு விசேசம் என்று மீரா அங்கே சென்றிருக்க, அங்கே வந்திருந்தவர்களோ, “என்ன நிச்சயம் மட்டும் பண்ணிட்டு போயிட்டாங்க.. கல்யாண தேதி எப்போன்னு கேட்டா இப்படி முழிக்கிற மீரா.. ” என்று அவரை டென்சன் பண்ணிட,

“அவங்க இப்போ கல்யாணம் பண்ண கூட ரெடிதான். எங்க வீட்ல தான் இவர் வந்தததும் தேதி குறிக்கலாம்னு சொல்லிருக்கோம்..” என்று மீரா சமாளிப்பாய் சொன்னாலும் உண்மையும் அதானே..

“அது என்னவோ.. ஏற்கனவே நெட்ல அது இதுன்னு வருது.. இதுல நிச்சயம் பண்ணிட்டு இப்படி ப்ரீயா விட்டா எதுவும் ஆகிட்டா என்ன பண்றது.. காலாகாலத்துல கல்யாணம் வைக்கிற வேலையை பாரு..” என்று அக்கறையாய் சொல்வது போல் சொல்லிட, அதுவோ மீராவிற்கு இன்னமும் மண்டை குடைச்சலை கொடுத்தது.

அவருக்கு லக்க்ஷனாவை பற்றியும் தெரியும், யதுவீரைப் பற்றியும் தெரியும். இருவருமே எப்படி காதலிக்கத் தொடங்கினர் என்பதும் தெரியும். ஆனால் ஊருக்கெல்லாம் தங்கள் பிள்ளைகள் இப்படித்தான் என்று விளக்கவும் முடியாதே.. ஆக முடிந்தளவு அமைதியாகவே இருந்தார்..

இதற்கிடையில் நீலம் ஒருமுறை வீட்டிற்கு வந்தவரிடம் மீரா இதெல்லாம் பகிர, அவரும் அதையேதான் சொன்னார்..

“என்கேஜ்மென்ட் பண்ணிட்டா ஏன் டிலே பண்ணனும் மீரா…??” என்று கேட்க,

“ம்ம் சரி.. நான் லக்க்ஷி அப்பாக்கிட்ட பேசுறேன்..” என்றவர் மறக்காமல் அதை கணவரிடம் சொல்லவும் செய்ய,  “எவ்வளோ சீக்கிரம் ரிலீவ் ஆகி வர முடியுமோ வர்றேன்..” என்றார் நவநீதன்..

ஆனால் இது லக்க்ஷனாவிற்கு தான் அத்தனை உவப்பானதாய் இல்லை.. யதுவீரோடு கல்யாணம் என்ற சந்தோசம் இருந்தாலும், இன்னும் தாங்கள் காதலையே முழுமையாய் செய்யவில்லையோ என்ற எண்ணம் இருந்தது..

அதிலும் யதுவீர் டெல்லி சென்றபிறகோ இருவரும் பேசிக்கொள்ள கூட நேரமில்லாமல் போக, இதில் திருமணம் என்றதும் கொஞ்சம் அவள் மனம் சுணங்கியது நிஜம்தான்..

        

       

                  

 

Advertisement