Advertisement

மாயவனோ !! தூயவனோ !! – 2

 “தொம் தொம்..” என்ற காலடி ஓசை கேட்கவும் அத்தனை நேரம் நடந்தபடி யோசனை செய்து கொண்டு இருந்தவள் அமைதியாக அந்த அறையில்  இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி கொண்டாள்..

மனோகரன் தான் வந்தான்.. கண்கள் மூடி தலையை சாய்த்து அமர்ந்து இருந்தவள் முகத்தில் என்ன கண்டானோ சில நிமிடம் அவளையே பார்த்தபடி நின்று இருந்தான்.. பின் என்ன நினைத்தானோ “ ஹும்ஹும் “ என்று செருமினான்.. அதாவது அவளை அழைக்கின்றானாம்..

ஆனால் இதற்கெல்லாம் மித்ரா அசருவாளா என்ன.. “ நீ இப்படியே நின்று செருமிக்கொண்டே இரு “ என்று இமைகள் திறக்காமல் அமர்ந்து இருந்தாள்..

அவள் விழித்து கொண்டு தான் இருக்கிறாள் என்று அவனுக்கும் தெரியும். “ என்ன திமிர் இவளுக்கு ஒருத்தன் வந்து நிக்கிறேன் கண்ண திறக்காம எவ்வளோ அழுத்தமா உக்காந்து இருக்கா “ என்று எண்ணியவன் “ மித்ரா “ என்று அழைத்தான்..

தாலி கட்டிய கணவனின் முதல் அழைப்பு.. அதில் துளி காதல் இல்லை. ஏன் ஒரு நேசம் இல்லை, ஒரு பரிவு எதுவுமே இல்லை.. “ என் தலை எழுத்து இப்படி ஒருத்தன் எல்லாம் எனக்கு புருஷன் “ என்று தன் விதியை நொந்தபடி கண் திறந்தாள்.. ஆனாலும் எதுவும் பேசவில்லை.

“ ஓ !! மகாராணி பேரு சொல்லி கூப்பிட்டா மட்டும் தான் கண் திறப்பாளோ” என்று எண்ணியவன் அதை கூறாமல் “ இன்னும் எவ்வளோ நேரம் இப்படியே உக்காந்து இருப்ப?? கொஞ்சம் ப்ரெஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம்” என்று அழைத்தான்.

“ அவன் கூறுவதற்கெல்லாம் மறுத்து பேச வேண்டும்” என்று எண்ணி இருந்தவள் பின்பு என்ன நினைத்தாளோ அமைதியாக எழுந்து சென்று முகம் கழுவி வந்தாள்.

தன்னை கண்டவுடன் கத்துவாள், அழுவாள், சண்டை போடுவாள், இவளை எப்படி சமாளிப்பது என்று யோசனையில் வந்த மனோகரனுக்கு இவளது நடவடிக்கை ஆச்சரியமாக இருந்தது.

“ என்ன டா இது அமைதியா சொல்ற பேச்சு கேட்கிறா. இதுக்கு பின்னால என்ன பிளான் பண்ணி வச்சு இருக்காளோ “ என்று எண்ணி பேரு மூச்சு விட்டு கொண்டு இருக்கும் பொழுதே மித்ரா வந்து அவன் முன்னே நின்றாள்.

சாதாரண சிபான் புடவையில் புது தாலி கழுத்தில் மின்ன எந்த ஒப்பனையும் இல்லாமல் அழகு தேவதையாக மிளிர்ந்தாள் மித்ரா. அவளிடம் இருந்து பார்வையை விளக்க அவனுக்கு தான் கஷ்டமாக இருந்தது.

உனக்கு நான் சளைத்தவள் அல்ல என்பது போல மித்ராவும் அவனை ஆராய்வது போல பார்த்தாள். மனதிற்குள்

 “ பார்த்ததுமே அழகுன்னு சொல்ல முடியாது ஆனா ஏதோ இருக்கு இவன்கிட்ட.. அவன் கண்ணு என்ன இவ்வளோ ஷார்ப்ப இருக்கு. மித்ரா நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும் “ என்று தனக்கு தானே பேசிக்கொண்டாள்.

அவனும் அவளது விழிகளை ஊடுருவது போல பார்த்தான். அவளும் நேருக்கு நேர் தான் பார்த்தாள் ஒரு சில நொடிகளுக்கு மேல் இருவராலும் அடுத்தவர் விழிகளின் வீச்சை தாங்க முடியவில்லை போல பார்வையை திருப்பி கொண்டனர்.

வேறு எங்கோ பார்த்தபடி “ சாப்பாடு ரெடியா இருக்கு சாப்பிட வா “ என்று அழைத்தான். அவளோ காதே கேட்காதது போல நின்று இருந்தாள்.. அவளும் வருவாள் வருவாள் என்று மனோகரன் காத்து இருந்தது தான் மிச்சம்.

ஆனால் மித்ரவோ அசையாமல் நின்று இருந்தாள். பொறுமையை இழந்த மனோகரன் “ மித்ரா நான் ஒரு தடவ சொன்னா கேட்க பழகிக்கோ. இதென்ன பழக்கம் காது கேட்காதது போல இருக்கிறது.. ஒரு வேலை நெஜமாவே “ என்று நக்கலாக அவன் கூற வரவும் அவனை பார்த்து முறைத்துவிட்டு வேகமாக முன்னே நடந்தாள்.

“இவள சாப்பிட கூப்பிடவே நான் ஒரு படி அரிசி சோறு சாப்பிடனும் போல.. இதுக்கே இப்படியா.. ஆனா மித்ரா உனக்கு இந்த மனோகரன் பத்தி தெரியாது. நினைச்சதை நடத்தி காட்டுவான்  “ என்று எண்ணியவன் மெல்ல புன்னகைத்தபடி சென்றான். எந்த தகராறும் செய்யாமல் அமைதியாக உண்டாள் மித்ரா. மருதுவின் மனைவி பொன்னி தான் இருவருக்கும் பரிமாறினாள்.

பொன்னியையும் மருதுவையும் மித்ராவிற்கு அறிமுகம் செய்து வைத்தான் அவள் கணவன். “ மித்ரா இவங்க ரெண்டு பெரும் ரொம்ப வருசமா நம்ம கிட்ட தான் இருகாங்க. நம்ம குடும்பத்துல ஒருத்தர் போல தான் இவங்களும். உனக்கு என்ன வேணும்னாலும் நான் இல்லாத நேரத்தில் இவங்க கிட்ட கேட்கலாம்.” என்றான் நான் இல்லாத நேரத்தில் என்பதை அழுத்தி கூறி.

அதை கவனித்தும் கவனிக்காதது போல இருந்தவள் அவர்களை பார்த்து புன்னகை பூத்தாள். “ உங்க சமையல் ரொம்ப நல்லா இருக்கு “ என்று பொன்னியை பாராட்டி கூறவும் பொன்னிக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை.

“ அப்படிங்கள சின்னம்மா.. எல்லாம் நம்ம பெரியம்மா கிட்ட கத்துகிட்டது தான். நான் சின்ன பொண்ணா இருக்கும் பொழுதே இங்க வந்துட்டேன். அப்புறம் இவங்க அப்பா அதான் பெரிய அய்யா தான் இவருக்கு என்னைய கட்டி வச்சாங்க “ என்று சிரித்தபடி தன் வரலாற்றை கூற தொடங்கவும் மருது

“ இந்தா போதும் போதும் இதெல்லாம் அப்புறம் பேசலாம் முதல்ல அவங்க சாப்பிடட்டும். சின்னம்மா நீங்க தப்பா நினைக்காதிங்க “ என்றான்

மித்ராவோ இருவரையும் பார்த்து புன்னகைதவள் “ நான் மித்ரா.. இது தான் என் பேரு.. சின்னம்மா இல்லை. அப்படி கூப்பிட்டா நான் இனிமே உங்க கூட பேசவே மாட்டேன் “ என்று சிரித்தபடி அதே சமயம் அழுத்தமாக கூறும் தன் மனைவியை கண் இமைக்காமல் பார்த்தான் மனோகரன்.

அவர்களும் சரி என்று கூறி சென்று விட உண்பது மட்டுமே வேலை என்பது போல இருந்தாள் மித்ரா. மனோகரனின் பார்வையை உணர்ந்தாலும் அதை அவள் பொருட்படுத்தவில்லை.

“ இத்தனை நேரம் நான் எவ்வளோ பேசினேன் ஒரு வார்த்தை பேசுனாலா.. அழுத்தம் பிடிச்சவ. இவங்க கிட்ட மட்டும் பல்லு எல்லாம் சுலுக்கிற மாதிரி சிறுச்சுகிட்டே பேசுறா. இரு மித்ரா உன்னைய எப்படி பேச வைக்கிறதுன்னு எனக்கு தெரியும். அது கூட தெரியாமையா உன்னைய கல்யாணம் பண்ணி என் முன்னே உக்கார வச்சு இருப்பேன் “ என்று மனதிற்குள் கருவிக்கொண்டான்.

ஆனால் இதெல்லாம் தெரியாத மித்ராவோ தன் தட்டில் இருப்பதை காலி செய்து விட்டு எழுந்தாள். அவ்வளோதான் இத்தனை நேரம் அடக்கி வைத்து இருந்த கோவம் எல்லாம் மனோகரனுக்கு வெளி வந்தது.

“ டேபிள் மேனேர்ஸ் தெரியாத?? “ என்றான் அவளையே பார்த்து நக்கலாக. அவனது முகத்தை பார்த்தவள்   “ பேசிக் மேனேர்சே இல்லாதவங்க எல்லாம் டேபிள் மேனேர்ஸ் பத்தி பேச கூடாது “ என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.

இதுவரை யாரும் அவனிடம் இப்படி அவனிடம் முகம் திருப்பி சென்றது இல்லை. ஆனால் இன்று  திருமணம் முடிந்து இன்னும் முழுதாய் ஒரு நாள் கூட முடியவில்லை இவள் இப்படி செய்கிறாள் என்று நினைத்தவனுக்கு அவளை எப்படியாவது அடக்கியே ஆகவேண்டும் என்று வெறி வந்தது.

கையை கழுவிவிட்டு எழுந்து அவள் இருந்த அறைக்கு சென்றான். முன்பு இருந்தது போல கண்கள் மூடி அமர்ந்து இருந்தாள். இவன் வந்தது தெரிந்தும் அவளிடம் எதுவும் அசைவு இல்லை.

“ஆ ஊன்னா கண்ண மூடி தியானம் பண்ணற மாதிரி உக்காந்திடுறா ?? பெரிய புத்த பிச்சுன்னு நினைப்பு போல “ என்று நினைத்துகொண்டே “ மித்ரா “ என்று அழைத்தான். அந்த அழைப்பில் ஆளுமை தான் ஆட்சி செய்தது.

“ என்ன ??” என்று கூட கேட்காமல் கண்களை மட்டும் திறந்து பார்த்தாள். அவளையே முறைதுகொண்டு “ இங்க பாரு. நான் கேள்வி கேட்டா பதில் சொல்லணும் புரியுதா ?? நான் பேசும்போது இப்படி முகம் திருப்பிகிட்டு போகுற வேலை எல்லாம் நிறுத்திக்கோ “ என்று கர்ஜித்தான்.

அவனது குரலும் முகமும் மித்ராவின் மனதை சில்லிட வைத்தது. ஆனாலும் வெளியே காட்டாமல் அவனையே பார்த்தபடி இருந்தாள். அவள் முன்னே மற்றொரு இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்தான்.

அவனே பேசட்டும் என்று அவளும் அவனையே பார்த்தபடி அமர்ந்து இருந்தாள். குரலிலும் முகத்திலும் மென்மையை கொண்டு வந்து “ இங்க பாரு மித்ரா “ என்றான்

“ எனக்கு கண்ணு நல்லா தெரியும் “ என்றாள் அவள் இடக்காக.  

“ எனக்கு பொறுமை ரொம்ப கம்மி மித்ரா. நான் இவ்வளோ தன்மையா யாருகிட்டையும் பேசுனது இல்லை “ என்றான் பொறுமையை இழுத்து பிடித்து.

“ ஓ !! சரி அப்புறம் “ என்றாள் கதை கேட்பவள் போல.

அவளது பதிலில் கடுப்பானவன் அவளை ஒரு வெற்று பார்வை பார்த்துவிட்டு “ உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா ??” என்று கேட்டான்.

இந்த கேள்வியை கேட்டதும் அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது. ஏதோ பயங்கரமான ஜோக்கை கேட்டவள் போல தன் வயிற்றை பிடித்துகொண்டு சிரித்தாள். அவனுக்கோ கடுப்பாக இருந்தது.

“ ஹேய் ! இப்ப எதுக்கு இந்த நேரத்துல இப்படி சிரிக்கிற. நீ என்ன லூசா ??”

“ நான் லூசு இல்ல. நீ தான் லூசு “ என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தாள்.

“ மித்ரா “ என்று அவன் ஒரு அரட்டல் போடவும் தான் அவள் சிரிப்பு நின்றது..

“ இப்ப எதுக்கு இப்படி சிரிச்ச??” என்றான் எரிச்சலாக.

“ பின்ன நீ கேட்டது உனக்கே லூசு மாதிரி தெரியல. இந்த கேள்விய நீ எப்ப கேட்டு இருக்கனும் சொல்லு ?? எப்ப கேட்டு இருக்கனும்?? “  என்றாள் பதிலுக்கு ஆங்காரமாக.

அப்பொழுதுதான் அவனுக்கு தன் கேள்வியின் மடத்தனம் புரிந்தது. ஆனாலும் அவள் ஒருமையில் பேசுவது இன்னும் கோவத்தை தூண்டியது.

“ ஏய் என்ன மரியாதையை இல்லாம பேசுற?? ” என்றான் கோவமாக.

அவனை ஒரு ஆழ பார்வை பார்த்தவள் “ நான் என் அண்ணனையே நீ வா போ அப்படின்னு தான் பேசுவேன் “ என்றாள் கூலாக.

அவளது பதிலில் கோவம் வரவில்லை மனோகரனுக்கு ஏனோ மனதிற்குள் மகிழ்ச்சி தான் வந்தது. தன் அண்ணனிடம் பேசுவது போல தன்னிடம் பேசுகிறாள் என்றால் என்ன அர்த்தம் தன்னையும் அவள் குடும்பத்தில் ஒருத்தனாக தானே எண்ணுகிறாள் என்று எண்ணினான். அந்த எண்ணமே அவன் முகத்தில் சிரிப்பை ஏற்படுத்தியது..

அதை கண்ட மித்ரா “ இப்ப நீ ஏன் சிரிக்கிற ?? ” என்று வெடித்தாள்.

“ ஒண்ணுமில்ல மேல சொல்லு “ என்று சைகை செய்தான்.. “ அதான் நான் எனக்கு ரொம்ப பிடிச்ச என் அண்ணனையே அப்படிதான் பேசுவேன். நீ எங்க அப்பா அம்மாவை மிரட்டி எனக்கு தெரியாமையே கல்யாணம் பேசி முடிச்சு, இப்படி யாருக்கும் தெரியாம அவசரமா ஒரு கட்டாய கல்யாணம் செஞ்சு இங்க வந்து உக்கார வச்சு இருக்க உனக்கு எல்லாம் என்ன மரியாதை?? ” என்றாள் பல்லை கடித்தபடி.    

அத்தனை நேரம் அவன் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்தது. “ ஏய் என்ன டி சொன்ன கட்டாய கல்யாணமா ??” என்று எகிறினான். அவனது சத்தத்தில் மிரண்டு அவனை நோக்கினாள் மித்ரா.. அவளது மருண்ட பார்வையில் தன் கோவத்தை குறைத்து கொண்டான் மனோகரன்.

ஒரு ஆழ்ந்த மூச்சை விட்டு மீண்டும் அவள் முன்னே அமர்ந்தான் “ இங்க பாரு மித்ரா நான் சொல்றதை பொறுமையா கேளு.. உன்கிட்ட என்ன சொல்லி உங்க அப்பா அம்மா சம்மதம் வாங்குனாங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா இது நீ சொல்லுற மாதிரி அவசர கல்யாணமோ இல்ல கட்டாய கல்யாணமோ இல்லை”

“ பொறு நான் பேசி முடிச்சிடுறேன்.. இந்த கல்யாணம் பத்து நாட்களுக்கு முன்னவே பேசி முடிச்சாச்சு. “ என்று அவன் கூறும் பொழுதே

“ என்ன பத்து நாளுக்கு முன்னா ?? ஆனா நேத்து நைட்டு தானே “ என்று அவள் கூறவும்

“ அது எனக்கு தெரியாது மித்ரா. உன்கிட்ட நேத்து தான் சொல்லி இருப்பாங்கன்னு நான் நினைக்கலை. அதுவும் இல்லாம இதுல உன் சம்மதம் ரொம்ப முக்கியம்னு நான் எப்பவோ உங்க அப்பா கிட்ட சொல்லி இருந்தேன்.”

“ அப்புறம் நீ சொன்ன மாதிரி இது கட்டாய கல்யாணம் இல்லை. யாரும் உன் கை காலை கட்டிபோட்டு சினிமால வரது மாதிரி நீ வேணாம் வேணாம்னு கதற கதற தாலி கட்டல. அதை முதல்ல புரிஞ்சுக்கோ “ என்றான் கடுமையாக..

“ தன் அப்பா அம்மா இன்னும் தன்னிடம் எதையெல்லாம் மறைத்து இந்த திருமணம் நடத்தி இருகின்றனர்” என்று நினைக்கும் பொழுதே மித்ராவின் முகத்தில் வேதனை குடி ஏறியது. அத்தனை நேரம் இருந்த தைரியம் தெம்பு எல்லாம் காணாமல் போனது. கண்களில் இதோ இதோ கீழே விழுந்துவிடுவேன் என்பது போல கண்ணீர் எட்டி பார்த்தது..     

அவள் முகத்தில் தோன்றும் உணர்வுகளை எல்லாம் மனோகரன் கவனித்து கொண்டு தான் இருந்தான்.. அவளின் வேதனை படிந்த முகம் அவனுக்கு என்ன உணர்த்தியது மேலும் தன் குரலை தாழ்த்தி கொண்டு “ இந்த கல்யாணம் உனக்கு பிடிக்காம நடந்து இருக்கலாம். ஆனா இது உன் வாழ்கை சம்பந்தப்பட்டது மட்டும் இல்லை, என் வாழ்கையும் இதுல அடங்கி இருக்கு. நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன் “ என்று கூறிவிட்டு அவளது முகத்தையே பார்த்தான்..

“ இவன் என்ன கூற வருகிறான்” என்பது போல அவளும் பார்த்தாள்.. மனதிற்குள் இன்னதென்று கூற முடியாத பயம் தொற்றி கொண்டது. சுற்றும் முற்றும் பார்த்தாள். அந்த அறையில் அவனும் அவளும் மட்டுமே தனித்து இருப்பது புரிந்தது..

“ இத்தனை நேரம் இவனோட தனியாவா பேசிட்டு இருந்தோம்னு “நினைத்தவள் வேகமாக எழுந்தாள்.. அவள் எழவும் “ நான் பேசிட்டு இருக்கேன் “ என்றான் அடிக்குரலில்..

“ என்.. எனக்கு தூக்கம் வருது. நான் தூங்கனும்” என்றாள் பார்வையை எங்கோ பதித்தபடி.. “ தூங்கலாம்.. என்ன அவசரம்.. தூக்கம் எப்ப வேணா தூங்கலாம். ஆனா பேச வேண்டிய விஷயத்தை உடனே பேசி முடிச்சிடனும். இது என்னோட பாலிசி.. சோ உக்காரு” என்று  அவளது கைகளை பற்றி இழுத்து அமர வைத்தான்..

இருவருக்குமான முதல் ஸ்பரிசம்.. அவன் என்னவோ சாதரணமாக தான் அவளது கைகளை பற்றியது.. ஆனால் அவளது பார்வையை கண்டு மேலும் அவளை சீண்ட தோன்றிவிட்டது மனோகரனுக்கு.

“ ஹ்ம்ம் யாரும் இல்லை.. சுற்றி எல்லாம் தோட்டம் தான்.. சிலு சிலுன்னு காத்து.. கண்ணுக்கு எதிரே  அழகான புது பொண்டாட்டி.. “ என்று கூறியபடி அவளை நெருங்கி அமர்ந்தான்..

அவ்வளோதான் மித்ரா பதறி துடித்து எழுந்து விட்டாள்.. “நானே இந்த கல்யாணம் பிடிக்கலை சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன இப்படி எல்லாம் பேசுற?? ஒழுங்கா அங்கேயே நில்லு சொல்லிட்டேன்.. “ என்றாள் பின்னால் நகர்ந்தபடி.

அவனும் முன்னேறியபடி “ இல்லாட்டி என்ன பண்ணுவ?? உன்னால என்ன பண்ண முடியும்?? அது சரி உன்னால இந்த கல்யாணத்தையே தடுத்து நிறுத்த முடியல.. வேற என்ன பண்ணிட முடியும் “ என்று வில்லன் போல கூறிக்கொண்டே முன்னே நடந்தான்..

“ இதெல்லாம் என்கிட்டே நடக்காது சொல்லிட்டேன். நீ ஏதோ பேசணும் சொன்னயே.. வா பேசலாம்.. விடிய விடிய கூட பேசலாம்.. ஆனா இது.. இது எல்லாம் வேண்டாம்..” என்று திக்கி திணறி பேசுபவளை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தான்.                                               

“ குட்.. இப்பதான் நீ என் வழிக்கு வந்து இருக்க.. நான் சொல்றதை கேட்டு நடந்தா என்னைக்குமே உனக்கு நல்லது.. இதை நீ எப்பையும் மனசுல வச்சிக்கணும். புரியுதா” என்று கேட்கவும் சிறு பிள்ளை போல தலையை உருட்டினாள்.

மீண்டும் இருவரும் இருக்கைக்கு சென்று அமர்ந்தனர்.. மித்ராவிற்கு “ யப்பா “ என்று இருந்தது. ” என்ன மனுசன் இவன் இப்படி நடந்துக்கிறான்.. புரிஞ்சுக்கவே முடியல “ என்று மனதிற்குள் கடிந்தாள்.. இதை அவன் எப்படி கண்டானோ,

“ என்னை புரிஞ்சுக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்.. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் இந்த கல்யாணம் எந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நடந்தாலும் சரி இது நிஜ கல்யாணம் தான்.. நம்ம வாழ்கைய விதி இப்படி தான் இணைச்சு வைக்கணும்னு இருக்கு. சோ இதை எந்த காரணம் கொண்டும் ரெண்டு பேருமே விளையாட்டா எடுத்துக்க கூடாது” என்று தனக்கும் சேர்த்து கூறுவது போல கூறினான்..

அப்பொழுது தான் மித்ராவிற்கு நியாபகம் வந்தது “ இவனிடமே என்ன பிரச்சனை என்று கேட்டுவிட்டால் என்ன??” என்று நினைத்து கொண்டு இருக்கும் பொழுதே மனோகரன்

“ என்கிட்டே நீ என்ன வேணா கேட்கலாம், பேசலாம். ஆனா இந்த கல்யாணம் ஏன் இப்படி நடந்தது அப்படின்னு மட்டும் கேட்க கூடாது. ஏன்னா நான் உங்க அப்பா அம்மாக்கு சத்தியம் பண்ணி குடுத்து இருக்கேன் “ என்று உறுதியாக கூறவும் அவளுக்கு தொஸ் என்றானது.

“ ஆமாமா பெரிய சத்தியம். இவன் முகர கட்டைய பார்த்தாலே சத்தியம் எல்லாம் இவனுக்கு சக்கரை பொங்கல் சாப்பிடுறது போலன்னு தோணுது “ என்று மனதிற்குள் கூறிக்கொண்டு அவனையே அமைதியாக பார்த்தாள்..

“ என்ன இப்படி பார்த்தா என்ன அர்த்தம்.?? எதாவது பதில் பேசுனா தானே உன் மனசுல என்ன இருக்குனு எனக்கும் தெரியும்.” என்றான் அவனும் அவளையே பார்த்து.

“ இவன்கிட்ட என்ன பேசுறது?? ” என்று யோசித்தவள் அந்த அறையை சுற்றி தன் விழிகளால் பார்த்தாள் பின்பு “ இது தான் உன் வீடா ?? ” என்றாள் நக்கலாக. ஏனென்றால் அந்த தோப்பு வீட்டில் இருப்பதே மூன்று அறை தான்.

ஒன்று சமையல் அறை மற்ற இரண்டும் படுக்கை அறை. இப்பொழுது இவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பது ஒன்று, மற்றொன்றை மருது பொன்னி பயன்படுத்துகிறார்கள். மீதம் இருப்பது ஒரு சிறு ஹால் அவ்வளவே.

சேர்ந்தார் போல ஐந்து பேர் வந்தால் கூட அமர இடம் இல்லை.. அதனால் தான் அவள் அப்படி கேட்டது. “ இல்ல. இது போன வாரம் தான் வாங்குனது. நம்ம கல்யாணம் முடிஞ்சு இங்க வரணும்னு தான் வாங்கினேன்” என்றான் ஒருமாதிரி குரலில்..

அந்த குரலில் என்ன இருக்கிறது என்று அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை. “ ஓ !! அப்ப உன் வீட்டுக்கு எப்ப போவோம் ?? ” என்று அடுத்த கேள்வியை தொடுத்தாள்..

அவனுக்கு என்ன தோன்றியதோ அமைதியாக இருந்தான்.. ஒரு சிறு அமைதிக்கு பின் “ தெரியலை மித்ரா “ என்றான் கரகரப்பான குரலில்.. அவனது பதிலை கேட்டு அதிர்ச்சி அடைவது அவள் முறை ஆயிற்று..

“ என்ன !!! தெரியலையா ?? கல்யாணம் தான் யாருக்கும் தெரியாம நடந்ததுனா, வீட்டுக்கும் கூட்டி போகமாட்டியா ?? நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க மனசுல.. என் அப்பா அம்மா வேணும்னா நீ சொல்லுற எல்லாம் நம்பலாம். ஆனா நான் நம்ப மாட்டேன்” என்று கத்த தொடங்கி விட்டாள்.

“ ஹேய் ஹேய்.. ஏன் கத்துற.. அமைதியா பேசு. எனக்கு இப்படி கத்தி பேசுனா பிடிக்காது.. என் மனசுல என்ன நினைக்கிறேன்னு நீ தெரிஞ்சு ஒன்னும் ஆக போறது இல்லை. ஒழுங்கா நான் சொல்லுற பேச்சை கேட்டு நட. அது தான் உனக்கு நல்லது. “ என்று கூறவும்

“ இல்லாட்டி என்ன பண்ணுவ ?? ” என்றாள்  மித்ரா.

“ உனக்கு உங்க அப்பா அம்மா எங்க இருகங்கன்னு தெரியவேணாமா ?? அவங்க கிட்ட நீ பேசவேண்டாமா ?? ” என்றான் மெல்ல புன்னகைத்தபடி.

“அப்பா.. அம்மா” என்று ஒரு முறை மனதிற்குள் எண்ணியவள் “ கடவுளே இதை எப்படி மறந்தேன் “ என்று தலையில் அடித்து கொண்டாள்.      மித்ராவிற்கு மனம் ஆறவில்லை. “ என்ன மாதிரியான கல்யாணம் இது”  என்று குழம்பி தவித்தாள்.

“ கொஞ்ச நேரம் எதுவும் நினைக்கமா தூங்கு மித்ரா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன் “ என்று மெத்தையை கை காட்டினான். அவன் மெத்தையை கை காட்டவும் தான் மித்ராவிற்கு திடுக்கென்று இருந்தது.

இத்தனை நேரம் இல்லாத ஒரு பயம் அவளை வந்து அண்டிகொண்டது. அவனை பயமும் குழப்பமும் வேதனையும் கலந்த ஒரு பார்வை பார்த்தாள்.. அவனும் என்ன என்பது போல புருவத்தை உயர்த்தினான்..

“ நான் தூங்குறது இருக்கட்டும். நீ ஏன் இங்க வர ?? ” என்று கேட்டே விட்டாள்.. “ பின்ன நான் தூங்க வேண்டாமா ?? ” என்று பதில் கேள்வி கேட்டான் மனோகரன்.

“ நீ.. நீ.. வெளிய தூங்கு..” என்று பட்டென்று அவளிடம் இருந்து பதில் வரவும் அவன் சிரித்தே விட்டான்..

“ கல்யாணம் ஆகி முதல் நாள் ராத்திரியே புருசன வெளிய தூங்கு சொன்ன பொண்டாட்டி நீயா தான் இருப்ப..” என்று கிண்டல் செய்தான். “ சரி அப்ப நான் வெளிய தூங்குறேன் “ என்று வெளியே செல்ல கிளம்பியவளை கை பிடித்து நிறுத்தினான்..

“ ஒரு தடவ சொன்னா உனக்கு புரியாதா?? நான் சொல்ற பேச்சை கேட்டு நட. வெளிய சுத்தி மரம் செடி கொடி தான். இந்நேரம் பாம்பு எல்லாம் சாதரணமா வரும் போகும்.. போ.. போயி அது கூட வேணா சேர்ந்து படுத்துக்கோ “ என்று உறுமினான்.

பாம்பு என்ற சொல்லிலே அவள் அடங்கிவிட்டாள். மித்ரா அமைதியாக நிற்கவும் “ ரெண்டு பெரும் இங்க தான் படுக்கணும். அதுவும் இந்த பெட்ல தான் தூங்கனும். எனக்கு கீழ படுத்து எல்லாம் பழக்கம் இல்ல. அப்புறம் இன்னொன்னு “ என்று கூறி விட்டு அவள் முகத்தையே பார்த்தான்.

அவளும் என்ன கூற வருகிறான் என்று கேட்க அவனையே பார்த்தாள் “ நான் ஒன்னும் மிருகம் இல்ல.. புரியுதா.. உன் பயம் தேவை இல்லாத ஒன்னு. நார்மலா இருக்க பாரு.. என் மேல உனக்கு நம்பிக்கை இல்லைனாலும் உனக்கு உன் மேல நம்பிக்கை இருக்குல சோ போயி தூங்கு. நான் ஒரு பத்து நிமிஷத்துல வரேன் “ என்று அவளது கன்னங்களை தட்டிவிட்டு சென்றான்.

போகும் அவனையே விழிகள் விரித்து பார்த்து நின்றாள் மித்ரா. “ என்ன மனுஷன் இவன்.. ஒரு நேரம் நல்லா பேசுறான். சில நேரம் கடு கடுன்னு பேசுறான். ச்சே “ என்று ஒரே நாளில் அழுத்தவள் சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டாள்.

அவள் உறங்கிவிட்டாள் என்று உறுதியான பின்பு தான் மனோகரன் வந்து படுத்தான் அவள் உறக்கம் கலையாதவாறு. ” ஒரு நாள், அதுவும் முதல் நாளே இவளை சமாளிக்க இவ்வளோ கஷ்டமா இருக்கே. இன்னும் வாழ்கை முழுக்க எப்படி சமாளிக்க போறேனோ ஆண்டவா நீ தான் பார்த்துக்கணும்” என்று இறைவனை வேண்டிவிட்டு அவனும் கண்கள் மூடினான்.

மித்ராவிற்கு நடுவில் முழிப்பு வந்து விட்டது.. கண்களை திறந்தவளுக்கு ஒரு நொடி தான் எங்கு இருக்கிறோம் என்று புரியவில்லை.

பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவள் கணவனை கண்ட பின் தான் அவளுக்கு அன்று நடந்த அத்தனையும் கண் முன்னே வந்தது. ஏனோ அவளுக்கு அழுகை அடக்க முடியாமல் வந்தது. ஆனாலும் அசையாமல் படுத்து இருந்தாள்.

மனோகரனோ நிம்மதியான உறக்கத்தில் இருந்தான்.. “ நான் இங்க தூக்கம் வராம தவிக்கிறேன் இவனுக்கு அப்படி என்ன தூக்கம் “ என்று நினைத்தவள்  மெல்ல திரும்பி பார்த்தாள்.

அவன் மனதில் இருந்த நிம்மதி அவன் முகத்தில் அப்படியே தெரிந்தது போல. காற்றில் முன் நெற்றி முடி பறக்க, சீரான சுவாசம் விட்டு அமைதியாக படுத்து இருந்தவனையே விழிகள் அகலாமல் பார்த்தாள் மித்ரா..

“ நேத்து வரைக்கும் இவன் யாருன்னே தெரியாது.. ஆனா இன்னைக்கு தாலி கட்டி.. கல்யாணம் முடிஞ்சு.. இதோ ஒரே ரூம்ல ஒரே பெட்ல.. ஐயோ கடவுளே “ என்று கடவுளை துணைக்கு அழைத்தாள்..

மெல்ல அவன் விழித்துவிடாதவாறு எழுந்து ஜன்னல் அருகே சென்று நின்று கொண்டாள். அடக்க மாட்டாமல் அழுகை வந்தது மித்ராவிற்கு.. ஒரு புறம் தனக்கு நடந்த திருமணம், மறுபுறம் அவளது பெற்றோர் ஏன் இப்படி செய்தனர், இப்பொழுது எங்கு இருக்கின்றனர்?? இதை எல்லாம் எண்ணி எண்ணி அழுதாள்.. கடவுளும் கை கட்டி நின்று வேடிக்கை பார்த்தார்.             

 

                           மாயம் – தொடரும்          

                                       

                                             

                               

 


Advertisement