Advertisement

அத்தியாயம் – 12

அதிகாலை நேர திருமணம், அதன் தொடர்ச்சியாக பெண் வீடு, மாப்பிள்ளை வீடு பிரவேசம், பிறகு குல தெய்வ கோவில் சென்று வந்து என்று அலைச்சல் ஆயிரம் இருந்தாலும், மனதில் இருந்த உற்சாகம் அலுப்பை எல்லாம் மூட்டை கட்டி அனுப்பியிருந்தது.

திருமணம் ஒரு பூரிப்பு கொடுக்குமென்றால், காதல் திருமணம் இன்னமொரு ஜொலிப்பை கொடுக்கும். அந்த ஜொலிப்பு அப்படியே புவனாவின் முகத்தில் பிரதிபளித்தது.

இன்னும் அகிலனை காணோம், அவனுக்கு முன்னே இவளை அறைக்கு அனுப்பிவிட்டார்கள்.. பின்தங்கி வந்தால் ஒரு நடுக்கம் என்றால் முன்னே சென்றால் காத்திருப்பு அதனினும் பெரிய விசயமாய் இருந்தது. அகிலன் அன்று அழைத்து சென்ற பிளாட் வீட்டில் தான் இப்பொழுது அனைத்து சம்பிரதாயங்களும்.

இங்கே தானே வாழ போகிறோம் இங்கேயே அனைத்தும் நடக்கட்டும், ஆரம்பிக்கட்டும் என்று அகிலன் முன்னமே வீட்டில் சொல்லிவிட, ஆரம்பத்தில் அவன் சொன்னதில் யாருக்கும் உடன்பாடில்லை.

அம்பிகா அத்தனை சத்தம் போட்டார்.. முகிலன் ‘என்ன டா..’ இது என்பது போல் பார்க்க, நிலா தான் இவனுக்கு ஆறுதலாய் பேசினாள்.

“நல்ல விஷயம் அகில்… தைரியமா உங்கண்ணா எடுக்காத முடிவ நீங்க எடுத்திருக்கீங்க….” என்று இவனிடம் சொல்ல, நிலாவை நினைத்தும் அவனுக்கு பாவமாய் போனது..

நிலவும் எத்தனையோ கனவுகளோடு தானே இந்த வீட்டிற்கு வந்தாள். ஆனால் இன்றோ தங்க கூண்டில் அடைப்பட்ட கிளி.. அனைத்தும் இருக்கிறது, ஆனால் ஒன்றுமே இல்லாத வெறுமையும் சேர்த்தே இருக்கிறது.

தன்னை நேசிக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காக புவனாவும் இந்த கூண்டில் அடைப்பட்டுவிட கூடாது. இயல்பான ஒரு வாழ்வு அவனுக்கும் வேண்டும். தனி வீடு என்றால் என்ன, இதோ இருவரின் பெற்றோர் வீடும் அருகருகே தான் இருக்கிறது. கார் இருக்கிறது. நினைத்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் வரலாம், இவர்கள் போகலாம்.

இதில் கௌரவ குறைச்சலுக்கு ஒன்றுமில்லையே.. பெயருக்கு ஒன்றாய் இருந்து சண்டையிட, தள்ளியிருந்து உறவாடலாம். அதுவும் இல்லாமல் தங்களுக்கே தங்களுக்கென்று ஒரு அழகிய வாழ்க்கை வாழலாம் என்ற அகிலனின் எண்ணம் வீண் போகவில்லை.

அம்பிகா முழு மனதாய் சம்மதம் சொல்லவில்லை என்றாலும் எப்படியோ அவர் வாயை அடைத்திருந்தான் அகிலன்.. அவன் வழியில்..

அப்படித்தான் இன்று காலை திருமணம் முடிந்து நேராய் அவர்கள் வீட்டிற்கு தான் சென்றனர், இங்கேயே அனைத்து சம்பிரதாயங்களும் நடக்கட்டும் என்று அம்பிகா கூற,

“வேண்டாம்மா… கெஸ்ட் நெறைய இருக்காங்க.. புவன்க்கு ஷையா இருக்கும்.. பிளாட்ல ரெடி பண்ணிடுங்க.. நாங்க மார்னிங் அகைன் வந்திடுறோம்…”  என்று இன்முகமாகவே அகிலன் கூறிவிட, அதற்குமேல் யாருக்கும் என்ன சொல்வது என்றும் தெரியவில்லை.

உறவுகளில் சில பெண்கள் கூட, “என்ன புவனா, கல்யாணம் ஆகி ஒருநாள் கூட ஆகல, அதுக்குள்ளே தனிக்குடித்தனமா..??” என்று இரண்டொரு முறைக்கு மேல் கேட்க, பொறுமையாகவே சிரித்துக்கொண்டிருந்தவள், ஒரு அளவுக்கு மேல் தாங்காது,

“ஒருத்தர் செய்றது, அடுத்தவங்களுக்கு தப்பா தெரியலாம்.. ஆனா யாருக்குமே அவங்க சூழ்நிலைல இருந்து பார்த்தா தானே தெரியும்.. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விஷயம் சரி.. அவருக்கு இது சரின்னு தோணிருக்கு அவ்வளோதான்…” என்றவளின் பதிலில் அடுத்து யாரும் வாய் திறக்கவில்லை.

இந்த திடம், இந்த துணிவு அகிலன் கொடுத்தது, அகிலன் மனைவி என்ற பந்தம் கொடுத்தது. புவனா துணிச்சலாய் பேசுபவள் தான், ஆனாலும் இந்த நிமிர்வு காதலித்தவனை கை பிடித்ததினால் வந்தது.

இதையெல்லாம் நினைத்து பார்த்தவளுக்கு, ‘என்ன செய்கிறான் அகிலன்.. இன்னுமேன் வரவில்லை…’ என்று தோன்றியது..

இதோ அறைக்கு வெளியே தான் அவன் பேச்சுக்குரல், ஆனாலும் உள்ளே வராமல் அடம் செய்கிறானே என்றிருக்க, பேசாமல் எழுந்து போய் பார்ப்போமா என்று கூட தோன்றியது.

ஆனாலும் தொழில் முறையாய் அவன் உதவியாளர் சுதனுடன் பேசிக்கொண்டு இருப்பவனை தொல்லை செய்யாமல், அன்று ஒளிபரப்பான கேம் ஷோவை யூ டியூபில் பார்க்க தொடங்கினாள்.

அன்றைய ஒளிபரப்பிற்கு பிறகு இது அடிக்கடி நடக்கும் ஒன்றும். அதுவும் முழு நிகழ்ச்சி எல்லாம் காண மாட்டாள். அகிலன் சொன்ன ‘ எஸ் ஐம் கமிட்டட்…. இன் லவ்….’ இதை மட்டுமே திரும்ப திரும்ப போட்டு பார்ப்பாள். ஏனோ அவன் கூறும் அந்த நொடியில் அவளுக்கு அத்தனை மயக்கம்..

மயக்கம் தரும் காதல் போதை அவளுக்கு பிடித்தே இருந்தது.

இன்றும் அப்படி காணத் துவங்க, அகிலன் உள்ளே வந்ததையோ, மெல்ல கட்டில் மீதேறி இவளருகில் வந்ததையோ அறியவில்லை.

சரியாய் அகிலன் அப்படி சொல்லும் பொழுது கேமார அவன் முகம் மட்டுமே காட்ட, வீடியோவை அப்படியே பாஸ் செய்தவள், “ஐ லவ் யூ அகிலன்…” என்று அலைபேசியில் அவன் முகம் பார்த்து..

“ஹ்ம்ம்… அதை இங்க பார்த்து சொன்னா கொஞ்சம் சந்தோசம்…” என்ற குரலில் படக்கென்று திரும்பி பார்க்க, வேகமாய் அலைபேசியை மறைக்க முயல்,

“ஹே… கள்ளி… எத்தனை நாளா இப்படி யாருக்கும் தெரியாம ரசிக்கிற…??” என்று உல்லாசமாய் அவளை கேள்வி கேட்டபடி அவன் அவளருகே அமர,

“ஹா.. நான்… நான் ஏன் யாருக்கும் தெரியாம பார்க்கணும்…” என்றாள் வேகமாய்.

“பின்ன எதுக்கு மொபைல்ல மறைக்க பாக்குற… ”

“அது.. அது சும்மா…” என்றவள், வேகமாய் அதை அருகிலிருந்த மேஜையில் வைத்துவிட்டு, மீண்டும் அமர,

“அட என்ன புவன்… இப்படி உட்கார்ந்துட்ட…” என்றான் ஒரு மாதிரி..

இவளுக்கோ தான் எதுவும் தப்பாக செய்துவிட்டோமோ என்று தோன்ற,

“ஏன்.. என்னாச்சு…” என்று மீண்டும் எழ,

“ஹா.. ஹா… பரவாயில்ல நல்லாவே ரியாக்ட் பண்ற…” என்று சிரித்தான்..

“ச்சு.. எப்போ பாரு உங்களுக்கு என்னை கிண்டல் பண்றது தானா…” என்று உதடு சுழித்தாள்.

“ம்ம்.. உன்னை தான் கிண்டல் செய்ய முடியும்..” என்றவன் அவள் மடியில் தலைவைக்க,

“நான் ஒன்னு கேட்கட்டுமா???” என்றாள் மெல்ல..

“ம்ம்…”

“அடிக்கடி இப்படி தான் மடியில படுக்குறீங்க…”

அவள் என்னவோ சாதாரணமாய் கெட்டு விட்டாள். நிஜமாகவே அவளை பொருத்தமட்டில் இது சாதாரண கேள்வி தான். ஒன்று அவனுக்கு இப்படி படுப்பது பிடித்தமாய் இருக்கும் இல்லை அவள் மடி பிடித்தமாய் இருக்கும். இரண்டில் ஒன்றை எதிர் பார்த்தாள். ஆனால் அவன் சொன்னதோ வேறு..

“ஹ்ம்ம்… எனக்கு தெரிஞ்சு நான் அம்மா மடியில படுத்தது இல்லை புவன்…” என்றான் கண்களை விட்டதில் பாய்ச்சி..

அவன் சொன்ன பதிலை கேட்டவளோ ஏனடா இப்படி ஒரு கேள்வி கேட்டோம் என்றானது.. அவன் ஏக்கங்கள் பற்றி தெரிந்தும் தான் இதை கேட்டிருக்க கூடாதோ என்று நினைத்தாள்.

“ம்ம்.. சாரி…” என்று அவள் குரல் இறங்க,

“அட.. அதுக்கெல்லாம் இப்போ நானே பீல் பண்ணல.. அதான் நீ வந்துட்டியே புவன்.. தென் வாட்.. எனக்கே எனக்குன்னு நீ… உனக்கே உனக்குன்னு நான்.. நமக்கே நமக்குன்னு பேபி… இது போதுமே…” என்றான் காதலாய்.

அகிலன், விசயத்தில் அவன் பூர்வியிடம் பழகுவதில் புவனா கண்டதெல்லாம் ஒன்றே ஒன்று தான், அகிலன் சிறு வயதில் எதையெல்லாம் தன் தந்தையிடம் எதிர் பார்த்திருப்பானோ, அதையெல்லாம் பூர்விக்கு கொடுத்தான்..

கொஞ்சலும் கண்டிப்பும் சமமாய் இருக்கும்..

அப்ப்டியிருப்பவன் தாயன்பை தன்னிடம் யாசிக்கிறான் என்று தெரியவும் இன்னும் உள்ளம் உருகி போனது அவளுக்கு..

மெல்ல அவன் பார்பில் தட்டியபடி, “நீங்க நினைச்ச மாதிரி கண்டிப்பா நம்ம லைப் நல்லா இருக்கும்…” என்க,

“நோ நோ… இதுல ஒன் வே இல்லை புவன்.. எதுவுமே நம்ம டிஸ்கஸ் பண்ணனும்.. சரி எது தப்பு எதுன்னு ரெண்டு பேருமே பேசணும்.. அப்போதான் நல்லாருக்கும்…” என்று அவன் கூற, சிரித்தபடி  அமோதித்தாள்.

பிளாட்டில் யாருமில்லை இவர்கள் இருவரை தவிர, இருவருக்குமான ஏகாந்த பொழுது.. இவர்களின் காதலுக்கு எவ்வித எதிர்ப்பும் இருக்காது என்று தெரியும். ஆனாலும் காதலும் அத்தனை எளிதில் கிடைத்திடவில்லை..

காதலிக்கும் போது பேசாத பேச்செல்லாம் இப்பொழுது பேசினான் அகிலன். புவனாவையும் பேச வைத்தான்.. புவனாவை காதலிக்க வைக்கவே அவனுக்கு சரியாய் இருந்தது. அவள் காதல் சொன்ன பிறகோ நாட்கள் கம்மியானதாய் இருக்க, இதோ திருமணமும் முடிந்தே விட்டது..

இன்னும் கொஞ்சம் காதலர்களாய் சுற்றி திருந்திருக்கலாமோ என்ற எண்ணம் அகிலனுக்கும் இருந்தது புவனாவிற்கும் இருந்தது. எதோ இந்த திருமணத்திற்காகவே தங்கள் காதலித்தது போல் தோன்ற, காதலுக்காக காதலிக்க ஆசைகொண்டனர்.

“அதென்ன புவன்.. அடிக்கடி நீ அந்த வீடியோவே போட்டு பார்க்கிற…??” என்றபடி தன் மீது அவளை சாய்த்து அமர்ந்தவன் கேட்க,

“பிடிச்சிருக்கு பாக்குறேன்…” என்றாள் அவளும்..

“என்ன பிடிச்சிருக்கு அதில…???”

“எதோ ஒன்னு பிடிச்சிருக்க போயி தானே பாக்குறேன்…”

“அதான் புவன்… என்ன பிடிச்சிருக்கு….???”

“அடடா… உங்களை பிடிச்சிருக்கு அதான்…”

“ஹ்ம்ம் இந்த பதிலை கேட்க நான் எத்தனை கேள்வி கேட்கவேண்டி இருக்கு…” என்று அவன் நகைத்தவன்,

“உனக்கு என்கிட்ட எதுவும் கேட்கணுமா புவன்…??” என்றான் அவள் கண்களை பார்த்து..

அவளோ ‘இல்லையே..’ என்பது போல் உதடு சுழிக்க,

“இல்ல… ஒரு க்ரிட்டிக்கல் சிச்சுவேஷன்ல தான் நீ என் லைப்ல வந்தன்னு சொன்னேன்.. பட் அது என்ன மாதிரி சிச்சுவேஷன்னு சொல்லலை…” என்று அகிலன் கூற,

“ஷ்… நம்ம லைப்ல என்ன நடந்தது, என்ன நடக்குது… இதெல்லாம் நமக்கு தெரிஞ்சா போதும் அகிலன்… ஊருக்கே சொல்லனும்னு அவசியம் இல்லை…” என்று அவனை சமாதானம் செய்தாள்.

“ம்ம்… எங்கேஜ்மென்ட் ப்ரேக் ஆனது சொல்லிருப்பேன்.. ஆனா அது நான் மட்டுமே சம்பந்த பட்டது இல்லையே….”

“ஷப்பா….. நானுமே இதை நீங்க ஊரெல்லாம் மைக் பிடிச்சு சொல்லனும்னு எதிர் பார்க்கலையே…”

“ஒருவேளை உன் மனசில அதுகூட கோவம் வர காரணமா இருக்கலாமே புவன்.. எல்லாத்தையும் மறைக்க தான என்னை கேட்டீங்கன்னு…”

புவனாவிற்கு சுத்தமாய் இந்த பேச்சு ரசிக்கவில்லை. போனதெல்லாம் போகட்டும் இனி அவனுக்கும் அவளுக்குமான வாழ்வு மட்டும் தான் மனதில் இருக்க வேண்டும் என்று நினைத்தவள் பேச்சை மாற்றினாள். 

“சரி சரி… உங்க ஆராய்ச்சி எல்லாம் இருக்கட்டும்… என்னை எதுக்கு உங்களுக்கு இவ்வளோ பிடிச்சது…” என்று புவனா கேள்வி எழுப்ப, அகிலனோ தலையில் கை வைத்தான்..

“என்ன அகிலன்…???”

“உலகம் எவ்வளோ முன்னேறினாலும்… இந்த பொண்ணுங்க, கேக்குற ரெண்டே கேள்வி, என்னை ஏன் பிடிக்கும்?? எவ்வளோ பிடிக்கும்?? இது தான் போல…” என்றான்.

“ஓஹோ…!!! அப்போ சார்கிட்ட எத்தனை பொண்ணுங்க இந்த கேள்வி கேட்டங்கலாம்…” என்று அவள் சண்டைக்கு ஆரம்பிக்க,

“ரியல்ல ஒரே ஒருத்தி… அது நீ… ரீல்ல நெறைய சீன்ஸ் இப்படி..” என்று அவளை அணைத்து சமாதானம் செய்ய,

“ம்ம்ம் ஒன்னும் வேணாம்…. நான் கேட்டதுக்கு ஆன்சர் பண்ணல..” என்று பிகு செய்தாள்..

“ஹேய் என்ன புவன்….” என்று அவளை கொஞ்ச, இவளோ மிஞ்ச தொடங்கினாள்.

நிறைய முறை அவன் கூறியிருக்கிறான் ஏன் பிடித்தது எதற்கு பிடித்தது என்று, ஆனாலும் எத்தனை முறை அவன் கூற கேட்டாலும் அவளுக்கு தெவிட்டவில்லை.. இப்பொழுதும் அதே காரணத்தை அவன் கூற கேட்கும் ஆவல் எழ, அகிலனோ வேறொரு ஆவலில் இருந்தான்.

அகிலனின் ஈர முத்தம் இனித்தாலும், “நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க…” என்றாள் அவன் முகத்தை நிமிர்த்தி…

“இதோ கொஞ்ச நேரம் முன்னாடி கிஸ் பண்ணும் போது கண்ணு மூடி ரசிச்சியே அதான் காரணம்…” என்றவன் மீண்டும் முத்தமிட தொடங்க, புவனாவால் அதற்கு மேல் விலக முடியவில்லை, விலக்க முடியவில்லை.

வாழ்வில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தேடல், ஆனால் அது என்னவென்பதை உணராமல் அனைவருமே பந்தய குதிரைகளாய் பணத்தின் பின்னே ஓடும் காலமிது. நின்று நிதானித்து, சற்றே சுய அலசல் செய்தால் போதும் நம் மனம் நாடுவது எது,  நம் இதயம் தேடுவது எது என்பது சரியாய் தெரிந்துவிடும்..

வாழ்கையை கட்டாயத்திற்காக வாழாமல், விருப்பதிற்க்காய் வாழ்ந்தால் அதன் சுகம் தனிதானே..  

அகிலனும் அப்படிதான் தனக்கான தேடல், அன்பான இயல்பான ஒரு குடும்பம் என்றதை உணர்ந்து, அதையும் ஒருத்தியிடம் காதல் கொண்டு பெற்ற பிறகு    அவனின் தேடல் அவளிடம் இருக்க, அவளின் பதிலோ அவனாய் மாற, இதயம் சுகத்தில் லயிக்க, காதலின் தேடல் அழகாய் துவங்கியது..

 

 

 

 

Advertisement