Advertisement

கசாட்டா 7:

வேதனை கொண்டு

வாடிகிடந்த என் மனம்

மறுநொடி வாசம் வீசுகிறது

உன் காதலின் வரவால்!

ஆதவனின் வருகையால் முதலில் கண்விழித்த கௌதமின் கண்களில் போர்வையைக் கழுத்துவரை மூடிக் கொண்டு குழந்தையைப் போல் சுருண்டு படுத்துக் கொண்டிருந்த மதியை கண்டதும் நேற்று இரவு நடந்தவை கண்முன் விரிய தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

காலை கடன்களை முடித்து வரும் வரையிலும் மதி துயில் கலையாமல் இருக்க “ஹோ மகாராணிக்கு இன்னும் தூக்கமா? இப்போ தெளிய வைக்கிறேன் “எனச் சூளுரைத்துக் கொண்டவன் அதைச் செயல்படுத்த ஆரம்பித்தான்.

அவளருகில் சென்றவன் போர்வையை மெல்ல உருவ ஏதோ ஒரு கதகதப்புத் தன்னை விட்டு நீங்குவதை உணர்ந்த மதி சிணுங்கினாள். அதை எதிர் பார்த்தவன் போல் அவள் காதோரம் மொபைலை கொண்டு சென்றவன் Who lets the dogs out? {Woof woof woof woof} என்ற பாடலை உச்சஸ்தாயில் ஒலிக்க விட மிரண்ட மதி திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியில் ஷோபாவிலிருந்து கீழே விழுந்தாள்.

அதைப் பார்த்து மனதுக்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டுடிருந்த கௌதம் மதி பார்க்கும் முன் தன் முகத்தைச் சரிப்படுத்திக் கொண்டான்.

“ஹைய்யோ மது பார்த்து எழுந்திரிக்கக் கூடாதா..? அப்படி என்ன அவசரம். ரிலாக்ஸ்..!” என ஒன்றும் தெரியாதவன் போல் பேச மதியோ குழப்பத்தில் ஆழ்ந்தாள்.

எதோ சவுன்ட் கேட்ட மாதிரி இருந்துதே என மனதில் தோன்றியதை வாய்விட்டு கேட்டே விட்டாள்.

“அய்யோ..! அதான் இப்படிப் பயந்துட்டியா…? சார்ஜ் போடலாம்னு வந்தேன்.. அந்த நேரம் பார்த்து ப்ரெண்ட் கால் பண்ணிட்டான்.. சாரி..!” என்றான்.

அவன் சொல்வதை நம்பாத பாவனையுடன் தான் படுத்திருந்த ஷோபாவின் பின்புறம் கண்களை அலைபாய விட அங்கு ஒரு சுவிட்ச் போர்டு இருப்பது கண்ணில் பட்டது.

“ச்ச.. அவன் சொல்றது உண்மை தான் போல… நாம தான் திடீர்னு சவுண்ட் கேட்டதும் பயந்துட்டோம்…” எனத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்ள,

அவளின் செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த கௌதம் மனதுக்குள் “என்கிட்டயேவா..? சுவிட்ச் போர்டை பார்த்துட்டு எல்லாம் தெரிஞ்சு தான பண்ணேன்… ஹா ஹா தொப்பித் தொப்பி..“ எனத் தான் ஆடப் போகும் ஆட்டத்தைக் குத்து விளக்கேற்றி ஆரம்பித்தது வைத்தான் கௌதம்.

மதி குளித்து ரெடியாகி வெளியே செல்ல நினைத்த நேரம் குளியலறையிலிருந்து வெளி வந்த கௌதம் “ மது ஒரு நிமிஷம்..!உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்…“

அதைக் கேட்ட மதி நின்று விட “மது எல்லாரும் நேற்று நடந்த விஷயத்தால வருத்தப்பட்டுட்டு இருப்பாங்க… அதனால நம்ம ரெண்டு பேருக்குள்ள ஒரு பிரச்சனையும் இல்ல சந்தோஷமா தான் இருக்கோம்னு தெரியுற மாதிரி பேசு…  நான் என்ன சொல்ல வர்றேனு புரியுதுல..?” என்று கேட்க தலையை ஆட்டியபடியே வெளியே சென்றாள். அவள் சென்ற இரண்டு நிமிடங்களில் தானும் தயாராகிக் கீழே சென்றான்.

தாமரை தன் மகளை அழைத்துக் பேசிக் கொண்டிருக்கையில் அங்கே ஆஜரான கௌதம் “ அத்தை என்ன சொல்றா உங்க பொண்ணு..?“ என மதியின் தோள்களில் கையைப் போட்டு அணைத்தவாறே கேட்டான்.

தன் மகளிடம் கௌதம் உரிமையோடு இருப்பதைக் கண்ட தாமரை இனி கவலைப்படத் தேவையில்லை என முகம் மலர,

நடப்பதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராகவனோ “என்னடா இது நேற்று வரைக்கும் அந்நியன் மாதிரி பேசுனவன் இன்னைக்கு ரெமோ ரேஞ்சுக்கு நடந்துக்குறான்… எதோ இடிக்குதே..?! எப்பிடியோ சந்தோஷமா இருந்தா சரி தான்… அப்படி இல்லாம என் பொண்ணுக்கு எதாவது டார்ச்சர் குடுத்தான்னு தெரிஞ்சுது அன்னைக்கு அவனுக்குத் தெரியும் இந்த ராகவன் யாருனு..?” முணு முணுத்துக் கொண்டார்.

தாமரை “இந்தக் கல்யாணம் நடந்ததுல சந்தோஷமா இருந்தாலும் மனசுல ஒரு கவலை இருந்துச்சு… இப்போ உங்களைப் பார்த்ததும் ரொம்பச் சந்தோஷமா இருக்குக் கௌதம்..!” என்று நெகிழ்ந்து போன குரலில் கூற,

“கவலைப்படாதிங்க அத்தை..! எல்லாம் நான் பார்த்துக்கிறேன்…“என ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் குடுத்து சொல்ல அந்த அழுத்ததின் அர்த்தம் கௌதம் மட்டுமே அறிந்த ஒன்று.

“அத்தைகிட்ட கவலைப்பட வேண்டாம்னு சொல்லு மது..!“ என அவள் முகம் பார்க்க, அவளோ கௌதமின் கைகள் தன் தோள் மேல் இருப்பதில் ஏற்பட்ட கூச்சத்தில் நெளிந்து கொண்டிருந்தாள்.

அவளின் நிலையைக் கண்டு கொண்ட கௌதம் அவளை இடையோடு சேர்த்து அணைத்தபடி நின்று கொண்டான் அவளை மேலும் தவிக்கவிடும் எண்ணத்தில்…

“ஏன்டா..! நீ ஏதோ ஆட்டம் பாருனு பிலிம் காட்டிட்டு இங்க என்னடானா ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க…?” மனசாட்சி அவனிடம் சண்டைக்கு வர,

“நீ ஏன் இந்தக் குதி குதிக்குற..? இதுவும் என் ஆட்டத்துல ஒரு பார்ட்… பேசாம வேடிக்கை மட்டும் பாரு நான் கூப்பிடும் போது மட்டும் வா.. இப்போ போ..!” என விரட்ட,

“என்னமோ பண்ணி தொலை… நான் கிளம்புறேன்..!“ என மனசாட்சி அவனிடமிருந்து விடை பெற்றது… இங்கு மதியோ அவன் அணைத்ததில் அவனது விரல்கள் அவளது வெற்றிடையில் பதிய நெளிவது போய் உருகி உறைந்து நின்றிருந்தாள்.

என்ன இது என்ன இது என்னைக் கொல்வது

என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது

புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ…..

புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ….

நாடி எங்கும் ஓடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ…

அனைவரும் காலை உணவை முடித்ததும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

ராகவன் “மாமா அத்தை இன்னும் இரண்டு நாளில் லீவு முடியுது… மதியை சென்னையில கொண்டு போய் விடணும்… அதனால அடுத்து என்ன செய்யணும்னு சொன்னீங்கனா அதை ஏற்பாடு பண்ணிட்டு போக சரியா இருக்கும்…” என்று சொல்ல,

“அதுக்குள்ள லீவ் முடிஞ்சுடுச்சா..? நேற்று தான் நீங்க எல்லாரும் வந்த மாதிரி இருக்கு…!” என வேதா பெருமூச்சு விட

“அப்பா..! இதுக்குத் தான் எங்க கூட வந்து இருங்கனு ஒவ்வொரு தடவையும் சொல்றேன் எங்க கேட்குறீங்க… இத்தனை பேரு இருக்கும் போது நீங்க ஏன் தனியா இருந்து கஷ்டப் படணும்… “

“அத விடுப்பா… எங்களுக்குப் பார்க்கணும்னு தோணுச்சுனா உங்ககிட்ட சொல்ல போறோம்… இல்லை முடிஞ்சுதுனா நாங்களே ஒரு எட்டு வந்து பார்த்துட்டுப் போகப் போறோம்…இப்போ நாம கௌதம் –மதி விஷயதுக்கு வருவோம்…” என்று பேச்சை மாற்றிவிட,

வெற்றி “அதான உடனே பேச்ச மாத்திருவீங்களே..?“ எனத் தந்தையிடம் குறைபட வேதா தாத்தாவும், கிருஷ்ணா ஆச்சியும் சிரித்தே மழுப்பினர்.

“மாப்பிள்ளை கௌதம்–மதி கல்யாணம் சிம்பிளா முடிஞ்சுடுச்சு… வரவேற்பையாவது தடபுடலா பண்ண வேண்டாமா..? அதைப் பற்றி நீங்களும், சிதம்பரமும் என்ன முடிவு பண்ணிருக்கீங்க…?”

“எங்க ஆபிஸ்ல இருந்து ஒரு இருபது பேர் தான் வருவாங்க… சிதம்பரத்துக்கு நிறையப் பேர் பழக்கத்துல இருப்பாங்க… அதனால வரவேற்பு சென்னையிலயே வைக்கலாம்…”

வேதா “நீ என்னப்பா சொல்ற மாப்பிள்ளை சொன்ன மாதிரி சென்னையில வைச்சுக்கலாமா..?“

“அது ஒண்ணும் பிரச்சனையில்லை அப்பா..? ஆனா கொஞ்ச நாள் கழிச்சு வைக்கலாம்னு நினைக்குறேன்… நீங்க என்ன சொல்றீங்க அத்தான்..?“ எனத் தந்தையிடம் தொடங்கி ராகவனிடம் முடித்தார்.

“இயர் எண்டிங் அதனால எனக்கும் ஆடிட்டிங் இருக்கு… கொஞ்ச நாள் கழிச்சே வச்சுக்கலாம்..” எனத் தன் சம்மதத்தைத் தெரிவித்தார்.

அதன் பின் நாளை ராகவன் குடும்பம், சிதம்பரம் குடும்பத்தோடு சென்னை சென்று மதியை புகுந்த வீட்டில் விட்டு விட்டு அங்கிருந்து கோவை செல்வதென்றும், வெற்றி குடும்பம் திருச்சி செல்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.

நாளை சென்னை செல்வதால் கௌதமையும், மதியையும் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வருமாறு கூறினார் கிருஷ்ணா.

தன் ஆட்டத்தைக் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் ஆட காத்திருக்கும் கௌதமிற்கு இருவரை மட்டும் கோவிலுக்கு அனுப்புவது “கண்ணா லட்டு திங்க ஆசையா..? “ என்பது போல் குதூகலம் குற்றால அருவி போல் சீறிப் பாய்ந்தது.

உற்சாகத்துடனே மதியுடன் கோவிலுக்குத் தன் காரில் கிளம்பிச் சென்றான்… கோவிலில் அம்பாளின் முன்னிலையில் கண்ணைத் திறக்க துடிக்கும் குழந்தைபோல் இமைகளைச் சுருக்கி வேண்டிக் கொண்டிருந்த மதியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்.

மெய் எழுத்தும் மறந்தேன்

உயிர் எழுத்தும் மறந்தேன்

ஊமையாய் நானும் ஆகினேன்

கையைச் சுடும் என்றாலும்

தீயை தொடும் பிள்ளைபோலே

உன்னையே மீண்டும் நினைக்கிறேன்

குருக்கள் வந்து பிரசாதம் தரும் வரையிலும் கண் மூடி நின்றிருந்த மதுவின் நெற்றியில் குங்குமத்தை வைத்தான் கௌதம்… அவள் கண் விழிக்க முயற்சிக்கும் போது கௌதம் தன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

மது கண்விழித்துப் பார்த்த போது கௌதம் கண் மூடிய நிலையில் இருக்கக் குருக்கள் கோவிலின் உட்புறம் சென்று கொண்டிருந்தார்…அவர் தான் குங்குமம் வைத்திருப்பார் என எண்ணினாள்.

கோவிலை விட்டு வெளியேறி காரில் ஏறி அமர்ந்தனர்.கௌதம் காரை ஸ்டார்ட் செய்ய அதுவோ கிளம்பாமல் மக்கர் செய்தது.

மது “என்ன ஆச்சு..?“எனக் கௌதமிடம் கேட்க,

“தெரியலை மது..! திடிர்னு ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது…” என்று சொல்லவும்,

“தாத்தாகிட்ட போன் பண்ணி மெக்கானிக் யாரையாவது வர சொல்லலாமா..?” என்று கேட்க,

“வேண்டாம்…!கொஞ்சம் இறங்கி தள்ளி பார்க்கலாம். உனக்கு டிரைவ் பண்ண தெரியுமா..? நீ காரை ஸ்டார்ட் பண்ணு நான் தள்ளுறேன்…”

“இல்லை வேண்டாம்…நீங்களே ஸ்டார்ட் பண்ணுங்க நான் தள்ளுறேன்…” எனச் சொல்லி மது இறங்கிய மறு நொடி கார் வேகமெடுத்தது.

*******************************************************************************************

காலைப் பொழுது யாருக்கும் காத்திராமல் விடிய வேதகி இல்லத்தில் அனைவரும் தங்களது ஊருக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்… அனைவரது உடைமகளும் பேக் செய்யப்பட்ட பையில் கிருஷ்ணா ஆச்சியின் கைப்பக்குவத்தில் தயார் செய்யப்பட்ட முறுக்கு, சீடை போன்ற கார வகைகளும், அதிரசம், ரவா லட்டு போன்ற இனிப்பு வகைகளும் தங்களுக்கான இடத்தைப் பிடித்துக் கொண்டன… பலகாரங்களுடன் தனது பாசத்தையும் பார்சல் செய்து அனுப்பிக் கொண்டிருந்தார் அந்த மூதாட்டி…அனைவரும் ஒன்று கூடிய போது காலை உணவு பரிமாறப்பட்டது.

“கௌதம் நாங்க எல்லாரும் ஒரு வண்டியில வந்திடுறோம்…நீயும் மதியும் ஒரு கார்ல வந்துடுங்க…“ எனச் சிதம்பரம் அவர்களுக்குத் தனிமை கொடுக்க வேண்டி இதைச் சொல்ல கேட்டுக் கொண்டிருந்த மதிக்கோ பகீரென்றது.

நேற்று நடந்தது போதாது என்று இன்னைக்குமா..? என எண்ணியவளின் மனம் நேற்று நடந்ததை நோக்கி பயணப்பட்டது.

மதி இறங்கிய நொடி கார் வேகமெடுக்கவும் திகைத்து நின்றாள் மதி.

“என்னது அவன் பாட்டுக்கு எனக்கு என்னனு விட்டுட்டுப் போறான்..? அவன் என்ன தான் மனசுல நினைச்சுட்டு இருக்கான்..? சரியான லூசா இருப்பான் போலயே…!“ வசைப்பாடி கொண்டிருக்க,

ஹாரன் ஒலி எங்கோ தூரத்தில் கேட்பது போல் இருக்கச் சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள் அங்கே காரின் விண்டோ வழியே கௌதம் வா எனக் கையசப்பது தெரிந்தது… எங்கே மறுபடியும் விட்டு சென்று விடுவானோ என மதி தன் நடையை வேகப்படுத்த காரை அடைந்ததும் மேல் மூச்சு வாங்கியது.

அதைக் கண்டு சந்தோஷித்தவனாய் “மது வேணும்னு பண்ணல… கார் ஸ்டார்ட் ஆகுதானு ஒரு தடவை ட்ரை பண்ணலாம்னு கியர் போட்டு எங்க ஸ்டார்ட் ஆகப் போகுதுனு கொஞ்சம் வேகமா ஆக்ஸிலேட்டர் பிரஸ் பண்ணிட்டேன்… கொஞ்ச நேரம் கார் என் கண்ட்ரோல்ல இல்லை… நீ தப்பா எடுத்துக்காத..? “ நம்ப முடியாத விளக்கத்தைக் கொடுக்க,

மதி அவனது முகபாவனைகளில் இருந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியாமல் போக இவன் நல்லவனா? இல்லை கெட்டவனா? என நாயகன் ஸ்டைலில் மனதிற்குள் விவாதம் பண்ணிக் கொண்டிருந்தாள்.

‘நான் அண்ணன் கூடத் தான் வருவேன்’ எனக் கவி போட்ட சத்தத்தில் மதி நினைவிற்கு வந்தாள்.

கவியும் உடன் வருவேன் என்றதில் மகிழ்ச்சி அடைந்த மதி அப்போ நானும் அவங்க கூடவே வர்றேன் எனப் பிரசன்னா கூறியதும் அவள் மனம் “ தம்பிடா” எனக் குதுகலமிட்டது… அவர்கள் இருந்தால் நேற்று போல் நடக்காது அல்லவா..? இறங்கி தள்ள தான் இருவர் இருக்கிறார்களே..? அந்தச் சந்தோஷம் தான் மதிக்கு.

கௌதம் செய்வது வேண்டுமென்றா? அல்லது எதார்த்தமாக நடக்கிறதா? என மதில் மேல் பூனை போல் முடிவுக்கு வர முடியாமல் தவிக்கும் மதிக்கு கௌதமின் உள்குத்து தெரிய வரும் போது கௌதமின் நிலை???

கவியும் பிரசன்னாவும் கௌதம் மதியுடன் செல்வதாய் முடிவெடுத்த பிறகு அவர்கள் காருக்கு டிரைவரை ஏற்பாடு செய்து விட்டார் சிதம்பரம்… அனைவரும் விடைபெறவும் வேதகி இல்லத்தில் வெறுமையும் வேதா தாத்தா மற்றும் கிருஷ்ணா ஆச்சியின் மனதில் பாரமும் தொற்றிக் கொண்டது… இரு கார்கள் சென்னை நோக்கி புறப்பட, மற்றொரு கார் திருச்சி நோக்கி புறப்பட்டது.

கார் குற்றாலத்தை விட்டு வெளியேறியதும் கவிதா “ஏதாவது படம் பார்த்துட்டே போகலாம்… ரொம்பப் போர் அடிக்குது..?! “ என சொல்ல,

பிரசன்னா “ஓ பார்க்கலாமே..! என்ன படம் இருக்கு காமெடி படம் எதாவது பார்க்கலாம்… “

கவிதா “வி ஸ் ஒ பி பார்க்கலாம்…” என்றதும்,

பிரசன்னா “எனக்கு டபுள் ஓகே..! ஆர்யா, சந்தானம் காம்பினேஷன் செம காமெடியா இருக்கும்….” அவனும் சொல்ல,

ஆர்யா எனக் கேட்டதும் கௌதமும், மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மதி அசடு வழிவதை பார்த்த கௌதமின் முகத்தில் புன்னகையின் சாயல் வெளிப்பட அது மதிக்கு தெரியா வண்ணம் பார்த்துக் கொண்டான்…மதியோ கௌதமை முதலில் பார்த்த நாளை தன் நினைவடுக்கில் இருந்து எடுத்து மனக் கண்ணில் ஓடவிட்டாள்.

Advertisement