Advertisement

சாட்டா 10:

வெண் பஞ்சு நெஞ்சம்

கூடப் பாறாங்கல்லாய்க் கனக்கிறது

உன் காதல் எனை விட்டு நீங்கிய நொடி!

சென்னை மாநகரம் தனக்கே உரிய பரபரப்புடன் தனது நாளை தொடங்கியது.சிதம்பரம் குடும்பமும் ராகவன் குடும்பமும் சென்னையை வந்தடைந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டிருந்தது.

அனைவரும் காலை உணவை முடித்துக் கொண்டு ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

கவிதா “அண்ணி..! நாளை மறுநாள் தான உங்களுக்குக் காலேஜ் ஆரம்பிக்குது..?” என்று கேட்க,

“ஆமா கவி..! ஏன் கேட்குற..? “

அந்நேரம் அங்கு வந்த பிரசன்னா “ வேற எதுக்கு நீ காலேஜ் போயிட்டனா உன் தொல்லை குறையும்னு தான்…” என மதுவை வம்பிழுக்க,

“டேய் பிரசாதம்..! வேண்டாம்…. அப்புறம் நான் ஆரம்பிச்சேன்..! மகனே நீ தாங்க மாட்ட…”

”அத்தான் ஏதோ உளறிட்டு இருக்காங்க… நான் உங்களை அப்படி நினைக்கவே இல்லை… நான் ஏன் அப்படிக் கேட்டேன்னா நீங்க ஹாஸ்டல் வேகேட் பண்ணனும்ல அதான்…” எனக் கவி சொன்னதும்,

“இல்லை நான் ஹாஸ்டல்ல இருந்தே போறேன்…”

“என்ன மதிம்மா இப்படிச் சொல்ற..? இவ்ளோ பெரிய வீடு இருக்கும் போது நீ ஏன் ஹாஸ்டல்ல தங்கணும்…? இவ்ளோ நாள் இருந்த சரி… இப்போ நீ இந்த வீட்டு மருமகள்… கௌதமுக்கு இங்க என்ன உரிமை இருக்கோ அதே உரிமை உனக்கும் இருக்கு… நாளைக்குக் கௌதம் கூடப் போய் ஹாஸ்டல்ல வேகேட் பண்ணிட்டு வந்திரு…”

“ஹைய்யோ…! இனி தினமும் இந்தக் கௌதம் கூட இருக்கணுமே….சும்மாவே அந்த ஆட்டம் போடுவான் இதுல இது அவன் வீடு வேற oh my god…” என மனசுக்குள் பேசிக் கொண்டிருக்க

மதியின் அமைதியை பார்த்த ஜானகி ஒருவேளை இங்கு இருந்தால் வீட்டுப் பொறுப்பைக் கவனிக்க வேண்டும் எனத் தயங்குகிறாளோ என எண்ணி “மதிமா..! இங்க இருந்தா நீ தொந்திரவு இல்லாம படிக்கலாம்… அத்தை எல்லா வேலையும் பார்த்துப்பேன் சரியா..?”

“அய்யோ படிக்கணுமா..? அவன் தான் அப்படினு பார்த்தா அத்தை அதுக்கு மேல இருக்காங்களே..? நாமெல்லாம் உப்புமா குடும்பமானு படத்துல சொல்ற மாதிரி இவங்க படிக்கச் சொல்ற குடும்பமா இருக்காங்களே…?மதி பார்த்தியா உனக்கு வந்த சத்திய சோதனையை..!“ எனத் தன் நிலையை எண்ணி நொந்து கொண்டாள்.

“அண்ணி..! நீங்க வேற அவளுக்குச் செல்லம் குடுக்காதிங்க….நீங்களும் ஒரு ஆளா எவ்வளோ வேலை செய்வீங்க வீட்டுக்கு மருமக வந்தாச்சு அவளுக்கும் கொஞ்சம் வேலையைக் குடுங்க… “ எனத் தாமரை ஜானகியிடம் கூற,

“அம்மா லோட்டஸ் உன் மகளுக்கு நல்லா வைக்குற ஆப்பு… “முணு முணுக்க அது தாமரையின் காதில் விழுந்து வைத்தது.

“நீ காலேஜ் போய்ப் படிக்குறது தான் இல்லை அட்லீஸ்ட் வீட்டு வேலையிலயாவது அண்ணிக்கு உதவியா இரு”

“ஹீம்கும்” எனச் சலித்துக் கொண்டாள்.

“அண்ணி எங்க அண்ணன் உங்க காலேஜ்ல தான் வேலை பார்த்தான். ரெண்டு பேரும் பார்த்ததே இல்லையா?” எனத் தன் சந்தேகத்தை முன் வைக்க

“அது.. அது வந்து..” என இழுத்தவள் ‘தெரிஞ்சுருந்தா தான் நான் கொஞ்சம் அலர்ட் ஆகீருப்பேனே தெரியாம போச்சேம்மா தெரியாம போச்சே’ என முணுமுணுக்க

“நான் அவ கிட்ட சொல்லவே இல்லை கௌதம் அங்க தான் வேலை பார்க்குறானு…. சொன்னா உடனே இவ அவங்க அப்பாகிட்ட சொல்லிடுவா அப்புறம் அவர் தங்கு தங்குனு குதிப்பாரு… எதுக்கு வம்புனு சொல்லாம விட்டுட்டேன்…. அதுமட்டுமில்லாம கௌதம்-மதி சின்ன வயசுல பார்த்துக்கிட்டது தான். அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் சந்திக்க வாய்ப்பு அமையவே இல்லை…. இவங்க காலம் முழுதும் ஒண்ணா இருக்கப் போறாங்கனு தான் அவங்க பழக நேரம் அமையலை போல..” எனத் தாமரை சொல்ல,

“உனக்குத் தெரியுமா? யூ டூ ப்ரூட்டஸ்…” என மது முனக

ஜானகி “ஆமா கௌதம் வெளியூர்ல தங்கி படிச்சான்… அதானால நாம குற்றாலம் போகும் போது அவன் வரமாட்டான்….அவனுக்கு லீவு கிடைக்கும் போது அவன் மட்டும் அத்தை மாமாவை பார்த்திட்டு வருவான்… “ என்றார்.

“ச்ச அண்ணன் மட்டும் உங்க காலேஜ்லயே வேலை பார்த்திருந்தா டெய்லி நீங்க சேர்ந்தே காலேஜ் போயிருக்கலாம்…”

இது தாமரைக்குமே புதுச் செய்தி…

தாமரை ”அப்படினா கௌதம் இப்போ அங்க வேலை பார்க்கலையா?” என்று கேட்க,

“இல்லை அத்தை..! அங்க ஏதோ பிரச்சனைனு வேற காலேஜ்ல சேர்ந்துட்டான்…”

மதுவிற்கு என்ன பிரச்சனைனு வீட்டில் சொல்லி இருப்பானோ கவிகிட்ட கேட்கணுமே எல்லாரும் இருக்காங்க எப்படிக் கேட்க? சரி அவ தனியா இருக்கும் போது கேட்கலாம்” என நினைத்துக் கொண்டாள்

மாலை நேரம் தொடங்கியதும் ராகவனின் குடும்பம் கோவைக்குக் கிளம்பத் தயாரானார்கள். தாமரை தாயாய் சில பல அறிவுரைகளை மதுவிடம் கூற மதுவோ” வொய் பிளட் சேம் பிளட் “என்பதாய் கேட்டுக் கொண்டிருந்தாள்.

இதை முடித்துக் கொண்டு ஹாலை அடைந்த நேரம் ராகவன் அவளைப் பிடித்துக் கொண்டார். ராகவன் மகளிடம் பேசிக் கொண்டிருந்த நேரம் கௌதம் அங்கு வந்து சேர்ந்தான்.

அவனைக் கண்டதும் ராகவன் எப்போதும் போல முறுக்கி கொள்ளக் கௌதம் “எப்போ பாரு நம்மள பார்த்தா மட்டும் உர்ருனே இருக்க வேண்டியது” முணு முணுக்க

ராகவன் கௌதமை ஒற்றைக் கண்ணால் பார்த்தவாறே “என்ன பிரச்சனைனாலும் அப்பாக்கு ஒரு போன் பண்ணு அடுத்த நிமிஷம் அப்பா இங்க இருப்பேன் சரியா..?” என மகளிடம் கூற,

“ஆமா ஆமா போன் பண்ணு..! கோயம்புத்தூர்ல இருந்து சென்னைக்கு ஆகாசத்துல பறந்து அஞ்சு நிமிஷத்துல வந்திருவாரு…” என மனதிற்குள் சாடினான்.

“சரிப்பா…!நீங்க கவலை படாம போயிட்டு வாங்க” எனத் தந்தைக்கு ஆறுதல் சொல்ல

“இவளால கவலைப்படத் தான் நான் இருக்கேனே…? அதானல நீங்க நிம்மதியா இருக்கலாம்..?!” என முணு முணுத்துக் கொண்டான்.

ஒருவழியாக ராகவன் குடும்பம் விடை பெறவும் என்ன தான் விளையாட்டு தனமாய் இருந்தாலும், தந்தைக்கே ஆறுதல் சொன்னாலும் ஒரு பெண்ணாய் தாய் தந்தையரை தன் சகோதரனை பிரியும் துயரம் தொண்டையை அடைக்கக் கண்களில் நீர் கோர்த்தது.

அவளுக்கு அருகில் நின்றிருந்த கௌதமின் கைகளில் ஒரு துளி விழ ஏறிட்டு பார்த்தவனின் கண்களில் மதியின் கலங்கிய முகமே தென்பட்டது.

அவளை அணைத்து ஆறுதல் கூற மனம் விரும்பினாலும் அவனது தன்மானம் தடுக்க அதே நேரம் அவள் கலக்கத்தைப் பார்க்க முடியாமல் அவள் கைகளை லேசாக அழுத்தி கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான். இரவும் வந்தது மது தங்களின் அறைக்குச் செல்ல கௌதம் அங்குத் தனது லேப்டாப்பில் மூழ்கி இருந்தான்.

எங்குப் படுப்பது என ரூமை தன் கண்களால் வலம் வந்தவள் என்ன செய்வது எனத் தெரியாமல் சரி அவனிடமே கேட்கலாம் என முடிவெடுத்து “ம்ஹீம்” எனச் செறும

அதில் நிமிர்ந்தவன் “என்ன “ எனக் கேட்க,

“அது வந்து எங்க படுக்குறதுனு… “ என்று இழுக்க

“என் மடியில படு…! கேட்குறா பாரு கேள்வி..?” மறுபடியும் தன் லேப்டாப்பில் முழ்கி விட

“இவன் மடியில படுத்துட்டாலும் அப்படியே தாலாட்டி தூங்க வச்சுருவான் ஆளும் மூஞ்சியும் பாரு…. “ என முனகியபடி கட்டிலை நோக்கி நடை போட்டாள்.

சிறிது நேரம் கழித்து லேப்டாப்பை அணைத்து விட்டு எழுந்து கௌதம் கட்டிலில் படுத்திருந்த மதியின் அருகில் வேகமாகச் சென்றவன் அவளை எழுப்பினான்.

அப்போது தான் தூக்கத்தைத் தொடர்ந்த மது சலிப்புடன் “ ம்ச் என்ன வேணும் உங்களுக்கு..?” எனக் கடுப்பாகக் கேட்க,

“இது என் பெட்… நீ எழுந்திரு..!” என்றான்.

“என்ன விளையாடுறீங்களா..? எனக்கு ஒண்ணு ஆசை இல்லை உங்க பெட்ல படுக்கணும்னு… அங்க தாத்தா வீட்ல ஷோபா இருந்துச்சு சோ ப்ராப்ளம் இல்லை… இங்க உங்க ரூம்ல ஷோபா இல்லை வேற எங்க படுக்குறதாம்” தூக்கம் கலைந்த கோபத்தில் சீறிக் கொண்டிருக்க

“ஏன் மேடம் தரையில படுக்க மாட்டிங்களோ?” என அவளது பில்லோவையும் பெட்ஷீட்டையும் தரையில் போட,

“ச்ச எல்லாம் என் தலையெழுத்து… “ எனச் சலித்துக் கொண்டு கீழே படுக்க எத்தனித்த நேரம் கௌதம் உடை மாற்ற சென்றான்.

அவன் தலை மறைந்ததும் “மதி நீ சைலன்ட் ஆ இருக்க இருக்க இவன் ரொம்ப ஆடுவான்… சோ பேக் டூ பார்ம்…” தனக்குத் தானே சொல்லிக் கொண்டு பக்கெட்டில் தண்ணீர் எடுத்து வந்து பெட்டில் கவிழ்த்தாள். பிறகு ஒன்றும் அறியாதது போல் வந்து படுத்துக் கொண்டாள்.

உடை மாற்றி வந்த கௌதம் களைப்பில் பெட்டில் சாய அடுத்த நிமிடம் துள்ளி எழுந்தான்.

“ஹே மது..! என்னடி இது. சின்னப் புள்ளத்தனாமா பெட்ல போய்த் தண்ணிய ஊத்தி வச்சுருக்க லூசு…” என அவளிடம் சீற,

மதி அசையாமல் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்க அவளின் அலட்சியம் கௌதமை கடுப்பேற்ற அவள் புறம் வந்தவன் “உன்னைத்தான் கேட்குறேன் காது என்ன செவிடா? எதுக்குடி இப்படிப் பண்ண..?” என அவளை உலுக்க

“இந்த வீட்டுல உங்களுக்கு என்ன உரிமை இருக்கோ அதே உரிமை எனக்கும் இருக்கு…. நான் பெட்ல படுக்கக் கூடாதுனா நீங்களும் படுக்கக் கூடாது…!” எனச் சொல்லிவிட்டு படுத்துக் கொள்ள,

கௌதம் இவ்ளோ நாள் சைலன்ட்-ஆ இருந்தவ இப்போ பதிலுக்குப் பதில் குடுக்க ஆரம்பிச்சுட்டாளே? கௌதம் இனி நீ உஷாரா இருக்கணும்டா” எனக் கட்டிலின் மறுபுறம் தரையில் படுத்தான்.

அதிகாலை பொழுது அழகாக விடிய முதலில் கண் விழித்த கௌதம் தன் அன்றாடக் கடமைகளை முடித்து வெளி வந்தவன் மதுவை பார்த்ததும் தோன்றிய யோசனையில் பாத்ரூம்க்குள் சென்றவன் பக்கெட் நீருடன் வெளி வந்தான்.

மதுவின் அருகில் சென்றவன் பக்கெட் நீரை அவள் மேல் கொட்ட அவளோ மெதுவாக எழுந்து “என்ன அத்தான் இது என்னைக் குளிப்பாட்டுறதுல அவ்வளோ ஆசையா..? பட் நான் சின்னப் பொண்ணு இல்லை சோ நானே குளிச்சுப்பேன் சரியா..?” எனிவே தேங்க்ஸ்” என்று கூறிவிட்டு எழுந்து செல்ல

“ஹே நில்லு அது என்ன புதுசா அத்தான் பொத்தான்ட்டு இனி இப்படிக் கூப்பிடாத…” என்றவன் முகம் சுளிக்க,

“என்ன அத்தான்..? எதுக்கு அத்தான்..? உங்களுக்குப் பிடிக்கலை அத்தான் சொல்லுங்க அத்தான்…“ என வார்த்தைக்கு வார்த்தை அத்தான் போட கௌதம் கடுப்பின் உச்சத்திற்குச் சென்றான் எனச் சொல்லவும் வேண்டுமோ?

“பிடிக்கலைனா பிடிக்கலை ஏன்னு காரணம்லாம் உங்கிட்ட சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்லை” எனக் கடுகடுக்க

“உங்களுக்கு உண்மையாவே அப்படிக் கூப்பிடுறது பிடிக்கலையா?” பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க

கௌதம் ரொம்பக் குழையுறாளே என மனதில் நினைத்துக் கொண்டு “ஆமா சுத்தமா பிடிக்கலை” என்றான்.

“ஹப்பா எங்க பிடிக்கும்னு சொல்லிருவீங்களோனு நினைச்சேன்…நல்ல வேளை பிடிக்கலைனு சொல்லிட்டீங்க..” எனப் பேசிக் கொண்டே இருக்க

இவ என்ன லூசா பிடிக்கலைனு சொன்னதுக்குச் சந்தோஷப்படுறா அப்போ அத்தான்னு கூப்பிடாம இருக்க வேண்டியது தான..?“ எனக் கௌதம் நினைத்துக் கொண்டிருக்க

“இனிமே நான் உங்களை அத்தான்னு சொல்லவே சொல்லாம இருக்க மாட்டேன் அத்தான்…!“ என்றாளே பார்க்கலாம் கௌதமிற்குக் கோபம் தலைக்கேறியது

“ஆக எனக்குப் பிடிக்காததைச் செய்றதுக்குத் தான் பிடிக்குமா இல்லையானு கேட்டியா? உன்னை..!” என அவளை அடிக்கத் துரத்த அவளோ பாத்ரூம்க்குள் தஞ்சம் புகுந்தாள்.

ஒருவழியாகக் குளித்துக் கிளம்பி கீழே வர அனைவரும் அமர்ந்து காலை உணவை முடித்தனர்.

மதியும் கவியும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க மதி கவியிடம் “கவி உங்க அண்ணன் என்ன பிரச்சனையால எங்க காலேஜில் இருந்து விலகிட்டாங்க” எனக் கேட்க

“அதுவா என்னனு முழுசா தெரியாது ஆனா ஏதோ ஒரு ஸ்டூடண்ட் தான் காரணம்னு மட்டும் சொன்னான்… மத்தபடி எதுவும் என்னைக் கேட்காதிங்கனு சொல்லிட்டான்… அதான் அப்பாவும் அம்மாவும் ரொம்ப எதுவும் கேட்டுக்கலை” எனச் சொல்ல

“எல்லாம் என்னால தான்” முணு முணுக்க

“ஆமா நீங்க இதை அண்ணன்கிட்டயே கேட்டிருக்கலாமே…”

“இதுக்குக் காரணமே நான் தான் இதுல இத போய்க் கேட்டேன் கடிச்சே குதறிருவான்…“ மனதினுள் நினைக்க

அந்நேரம் கௌதம் வெளியே செல்ல தயாராகி வந்தான்… அவனைக் கண்டதும் சிதம்பரம் “கௌதம்…! மதி ஹாஸ்டல்ல வேகேட் பண்ணனும் நீ அவளைக் கூட்டிட்டு போய்ட்டு வா…” என்க,

“அப்பா நீங்களே இப்படிச் சொன்னா நான் என்ன பண்றது….வேணும்னா நீங்க கூடிட்டு போய்ட்டு வாங்க..” என்று சொல்ல

“என்னால போக முடிஞ்சா போக மாட்டேனா? ஆபிஸ்ல பெண்டிங் வொர்க் நிறைய இருக்கு… நீ வெளியவே இரு மதி உள்ள போகட்டும்” எனச் சொல்ல வேறு வழி இல்லாமல் சரி என்றான்.

இருவரும் கிளம்பி கல்லூரியை அடையும் வரையிலும் காரினுள் ஒருவித அமைதியே நிலவியது.

காரில் இருந்து இறங்கிய மது கௌதமிடம் சொல்லிவிட்டு போவதற்காக அவன் முகம் பார்க்க அவனோ எது சொன்னாலும் பொரிந்து விடும் அளவிற்கு இருந்தது.மது தன் ஹாஸ்டலை நோக்கி நடைபோட்டாள்.

தொலைப்பேசி ஒலிக்க எடுத்து பார்த்த கௌதம் “அய்யோ இவன்கிட்ட சொல்ல எப்படி மறந்தேன்..?!“ எனத் தன்னை நொந்தவாறே காதில் வைத்தான்.

ராகுல் ”டேய் ஊருக்குப் போனதும் என்னை மறந்துட்டியா? ஒரு போன் இல்லை உங்கிட்ட இருந்து”

“சாரிடா இருந்த பிரச்சனைல உங்கிட்ட பேச மறந்துட்டேன்..”

“அப்படி என்னடா தலை போற பிரச்சனை உனக்கு..?”

“அது… அது வந்து எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுடா..!”

“ஹே மச்சான்..! விளையாடத என்ன பிரச்சனைனு சொல்லு..?”

“நிஜம் தான்டா..! எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. நாம ஈவினிங் மீட் பண்ணலாம் அப்போ உனக்கு எல்லாம் விவரமா சொல்றேன்”

“அடப்பாவி..! சரிடா நாம எப்போதும் போற ரெஸ்ட்ராரண்ட் வந்திரு”

“ஓகே டா ஸீ யூ தேர் “என்று கூறி வைத்தான்.

மது விடுதியில் தன் அறைக்குச் செல்ல அங்கு அப்போது தான் வந்திருந்த ஸ்வேதா தனது உடைகளை அடுக்கி வைத்து கொண்டிருந்தாள்.

மதியை கண்டதும் “ஹே மது வாடி எப்படி இருக்க? எப்போதும் நீ தான் ப்ர்ஸ்ட் வருவ இன்னைக்கு என்ன லேட் பேக் ஒண்ணும் காணோம் அங்கிள் வந்திருக்காங்களா?” எனக் கேள்வி கேட்டுக் கொண்டே போக

“ஸ்ஹப்பா ஒரு ஒரு கேள்வியா கேளுடி…!பதில் சொல்றதுக்கு முன்னாடியே ட்யர்ட் ஆக்கிட்டியே எருமை…”

“சரி சரி சொல்லுடி… “ என்றதும்,

“ஸ்வீ..! நான் ஹாஸ்டல் வேகேட் பண்ண போரேன் டி…” சொன்னது தான் தாமதம்,

ஸ்வேதா “ஹேய் என்னடி..! என்ன ஆச்சு சொல்லு..? ஏன் திடீர்னு..? “எனப் படப் படக்க

“சொல்றேன் சொல்றேன்… முதல்ல வார்டன் ரூம்க்குப் போய்ப் பார்மலிட்டிஸ் முடிச்சுருவோம்… நீ என் கூட வா…” என அவளையும் அழைத்துக் கொண்டு போனாள் மதி.

ஸ்வேதா அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாய் மதுவுடன் நடக்க ஹாஸ்டல் வேகேட்டிங் பார்ம் நிரப்ப அதில் வெளியேருவதற்கான காரணம் என்பதில் காட் மேரிட் எனக் குறிப்பிட அந்த நாளின் இரண்டாவது அதிர்ச்சிக்கு உள்ளானாள் ஸ்வேதா.

ஸ்வேதா ”ஹேய் மேரிட்-ஆ..? ஏன்டி சொல்லவே இல்லை… போடி என்னை ப்ரெண்டா நினைக்கவே இல்லைல… இவ கிட்ட என்ன சொல்றதுனு சொல்லாம விட்டுட்டியா?”

”ஹேய் திடீர்னு நடந்திடுச்சு செல்லம்… அதான் சொல்ல முடியலை இல்லைனா உங்கிட்ட சொல்லாம இருப்பேனா?”என்னை புரிந்துகொள்ளேன் என்பது போல் பார்க்க

“சரி பார்ம் குடுத்துட்டு வா..! உங்கிட்ட நிறையப் பேசணும்… ”ஒரு வழியாக ஹாஸ்டல் வேகேட்டிங் ப்ரொசிஜரை முடித்து வெளி வந்த மதுவை ஸ்வேதா பிடி பிடியெனப் பிடித்துவிட்டாள்.

மது நடந்த அனைத்தையும் கூற “கௌதம் சார் உன் மாமா பையனா?? என்னால நம்பவே முடியலைடி..?“

“சரி நம்பாதே..! மித்ததை நாளைக்குக் காலேஜில் பேசிக்கலாம்… அவங்க வெளிய நிற்கிறாங்க நான் போயிட்டு வர்றேன்.”

“அவங்களா? ம்ம்ம் ஒரே கொஞ்சல்ஸ் தான் போல நீ நடத்து”

“அடியேய்..! நீ வேற நான் பண்ணிருக்க வேலைக்குக் கொஞ்சல் ஒண்ணுதான் குறைச்சல்…. அப்புறம் எனக்குக் கல்யாணம் ஆனது வேற யாருக்கும் தெரிய வேண்டாம் சரியா? தெரிஞ்சுது கிண்டல் செஞ்சே கொன்னுடுவாளுங்க” என எச்சரித்து விட்டு சென்றாள்.

Advertisement