Advertisement

கசாட்டா 1:

நரை கூடி போகும் நேரம்

நடை தளர்ந்து போனாலும்

தீராதடி உன் மேல் நான்

கொண்ட காதல்..!

சூரிய மொட்டு அவிழ்ந்து அதன் ஒளிக்கற்றை பரவத் தொடங்கிய அந்த அதிகாலை பொழுதில் குற்றாலம் நகரம் அதற்கே உரிய இயற்கை எழிலோடு காட்சியளித்தது. அந்த நகரில் ஒரு அழகிய தோட்டத்திற்கு நடுவே அமைந்த “ வேதகி ” இல்லத்தில்

“ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை…”என்று கணீர் குரலில் விநாயகப் பெருமானின் துதிப் பாடலை பாடிக்கொண்டிருந்த குரலுக்கு சொந்தக்காரர் தான் நம் ஆச்சி கிருஷ்ணவேணி @ கிருஷ்ணா.

நெற்றியில் குங்குமமும் மஞ்சள் பூசிய முகமுமாய் நின்றவரின் தோற்றம் தன் ஒட்டு மொத்த வேண்டுதலும் ஒரே நேரத்தில் நிறைவேறியது போலனாதொரு மன நிறைவை பிரதிபலித்தது. அவரின் மோன நிலை நீடித்தது சில மணித் துளிகளே அதன் பின் அவ்விடத்தில் ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொண்டது… அதற்கு அடையாளமாய் கிருஷ்ணா ஆச்சியின் குரல் வாசல் வரை ஒலித்தது.

“ஏலே முனியா இங்க வாயா…!“ என்று தோட்டப் பக்கம் பார்த்து குரல் கொடுத்து கொண்டே முற்றத்தில் உட்கார்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்த கணவரிடம் காபி கோப்பையை நீட்டினார்.

நெற்றியில் மூன்று விரல் அளவிலான திருநீற்று பட்டையும், மூக்கு கண்ணாடி சகிதம் அணிந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த வேதாச்சலம் @ வேதா மனைவியின் குரலில் நிமிர்ந்து பார்த்தார் .

பார்த்தவரது முகம் புன்னகை பூசியதோடு காதல் பார்வை வீசவும் தவறவில்லை. அவரது மனைவியோ அதை கவனித்தாக தெரியவில்லை.

“என்ன ஆச்சி கூப்பிட்டியளா..?“ என்று தன் முகத்தில் படிந்த வியர்வையை துடைத்தவாறே வந்து நின்றான் அந்த வீட்டில் வேலை செய்யும் முனியன்.

“மச்சுல (மாடியில்) இருக்க அறையை சுத்தம் பண்ண சொன்னேன்லா பண்ணிட்டியா “என்று கிருஷ்ணா கேட்க

“அதை நேத்தே பண்ணிட்டேன் ஆச்சி “

“சுத்தம் பண்ண சரி…. ரோமரொ அடிச்சியா..?”

“என்ன ஆச்சி சொல்லுதிக எனக்கு விளங்கலயே…?” என தலையை சொரிந்தபடி நிற்க,

“இது கூட தெரியாம இத்தனை வருஷம் வீட்டு வேலை பார்க்கியாக்கும்” என்று சொல்ல, இவர்களின் பேச்சைக் கேட்டுவிட்டு படித்து கொண்டிருந்த பேப்பரை டேபிளில் வைத்த படியே சிரித்த வேதா  தன் மனைவியின் புறம் திரும்பி,

“கிருஷ்ணா அது ரோமரொ இல்லமா ரூம் ஸ்பிரே எங்க சொல்லு ரூம்… ஸ்பிரே” என்று கேலி இழையோடும் குரலில் அழுத்திச் சொல்ல

“என்ன கிண்டல் பண்ணனும்னா மட்டும் வரிஞ்சு கட்டிட்டு வருவீங்களே… இவ்ளோ நேரம் தொண்ட தண்ணீ வத்த கத்துனேன்லா அப்போ எல்லாம் மனுசன் நிமிர்ந்தே பாக்கல. ஒத்த ஆளா நானும் எவ்ளோ வேலைய தான் பார்க்குறது“ என சலித்துக் கொள்ள,

“அடிப்பாவி..! நிமிர்ந்து பார்க்கலையாவா??? ரொமான்டிக் லுக் விட்டதை கூட கவனிக்காம இருந்துட்டு இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை“என்று முணு முணுத்துக் கொண்டவர்,

“கோவிச்சுகாத கிருஷ்ணா..! நான் என்ன செய்ய மாட்டேன்னா சொல்றேன்… எதாவது உதவி செய்யலாம்னு வந்தா உங்களுக்கு ரொம்ப நேரம் நின்னா மூட்டு வலிக்கும் போய் ரெஸ்ட் எடுங்கனு விரட்டுற இப்போ என்னடானா இப்படி சொல்ற  என்னமா நீ இப்டி பண்றீயேமா..?“ என சொல்லி வேதா சிரிக்க, கிருஷ்ணாவும் முறைக்க முயன்று முடியாமல் சிரித்து விட்டார்.

“சரி சரி போதும் உங்க கிண்டல் எல்லாம்… வாங்க வந்து சாப்ட்டு சுகர் மாத்திரைய போட்டுட்டு உட்காருங்க”

வேதா சாப்பிட்டு முடித்ததும் அவருக்கான மாத்திரையை கொடுத்தவர் எதோ நியாபகம் வந்தவராய் அடுக்களையை நோக்கி வேகமாய் நடை போட்டார்.

அங்கே வேலை செய்து கொண்டிருந்த பெண்மணியிடம் ”பலசரக்கு சாமான் லிஸ்ட் குடுத்தேனே அத வாங்க சொல்லிட்டியா”

“சொல்லிட்டேன் ஆச்சி சயாங்காலம் கொண்டு வந்து குடுக்கேன்னு கடை அன்னாச்சி சொன்னாங்க”

“அப்படியா சரி எதுக்கும் நீ மத்தியானம் வீட்டுக்கு போகும் போது ஒரு எட்டு கடைக்கு போய் அன்னாச்சிக்கு நியாபகப் படுத்திட்டு போ”

“சரி ஆச்சி போகும் போது சொல்லிடுறேன்” என்றார் அங்கு சமையல் வேலை பார்க்கும் கமலம்மாள்.

“அப்புறம் சொல்ல மறந்துட்டேன், நாளையிலருந்து வேலை கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும். கூடமாட ஒத்தாசைக்கு ஆள கூப்பிட்டுக்கோ”

“ஆட்டும் ஆச்சி, எல்லாரும் எத்தன மணிக்கு வாராக” என்று கமலம் கிருஷ்ணவேணியிடம் கேட்க,

“நாளைக்கு காலையில விடிய முன்ன வந்துருவாக” கமலத்திடம் பேசி முடித்ததும் கணவரை தேடி சென்றார்.

வேதா ஹாலில் உள்ள ஷோபாவில் எதோ யோசனையில் உட்கார்ந்திருந்தார்.

“ரெஸ்ட் எடுக்காம இங்க வந்து உக்காந்துருக்கீக” என வேதாவை கேட்க

“ஒன்னும் இல்ல நாளைக்கு அவங்க எல்லாரும் வரதை நினைச்சா எவ்ளோ சந்தோஷமா இருக்கு ஆனா எல்லாம் கொஞ்ச நாள் தான் நினைக்கும் போது வேதனையா இருக்கு கிருஷ்ணா” என வேதா தன் மனைவிடம் புலம்ப,

அவர் சொல்வதும் உண்மை தானே…! ஆனால் தானும் வருத்தப்பட்டு பேசினால் மேலும் வேதனைப்படுவார் என எண்ணி கலங்கிய தன் கண்களை துடைத்தவாறே எழுந்து நின்றார்.

“பேச ஆரம்பிச்சா போதுமே….நிறுத்த மாட்டிங்கலே?? போங்க போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க எனக்கு நிறைய வேலை கிடக்கு” என அன்பு மிரட்டல் விடுத்தார் கிருஷ்ணா. அது சரியாக வேலை செய்தது

“கட்டுன புருஷன் கிட்ட பேச உனக்கு நேரமில்லை அப்படிதான கிருஷு”

“கொஞ்ச நாள் நான் ரொம்ப புஷி “

“அது புஷி இல்ல செல்லம் பிஷி”

போதும் எனக்கு கிளாஸ் எடுத்தது. நான் தட்டடில (மொட்டை மாடி) போய் வத்தல் ஊத்திட்டு வாரேன் என சொல்ல வேதாவும் சிரித்துக் கொண்டே அறைக்குள் சென்றார்.

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் ஊரில் வசித்து வரும் நம்  வேதா & கிருஷ்ணாவிற்கு மூன்று பிள்ளைகள். வாழ்க்கை ஓட்டத்தில் ஒவ்வொருவரும் அவரவர் பணியிடம் காரணமாக வெவ்வெறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர். தாயையும் தந்தையையும் தங்களுடன் வருமாறு எவ்வளவோ அழைத்து பார்த்தும் அவர்கள் சொந்த மண்ணை விட்டு வர மறுத்து விட்டனர்.

ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்கு வசதிப்படும் நேரங்களில் வந்து முதியவர்களை பார்த்து விட்டு செல்வார்கள். ஒன்றாக கலந்து கொள்ள கூடிய விஷேசங்களுக்கு தம்பதி சமேதராய் மட்டும் வந்து போவார்கள். நாளை தான் ஒட்டு மொத்த குடும்பமும் விடுமுறை நாட்களை ஆச்சி மற்றும் தாத்தாவுடன் கழிக்க வரப் போகிறார்கள்.. அதற்கு தான் இந்த தடபுடலான ஏற்பாடு.

மூத்தவர்: சிதம்பரம் அவரது மனைவி ஜானகி . சென்னையில் டெக்ஸ்டைல் பிஸினஸ் செய்து வருகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள்: கௌதம் , கவிதா

இளையவர்: வெற்றி அவரது மனைவி மீனாட்சி . வெற்றி திருச்சியில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள்: சந்தோஷ், சந்தியா

கடைக்குட்டி: தாமரை அவரது கணவர் ராகவன். ராகவன் கோவையில் உள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள்: மதுமதி, பிரசன்னா.

சென்னை மாநகர் தன் நிலையில் இருந்து மாறுபடாமல் இன்றும் வழக்கமான பரபரப்புடன் காணப்பட்டது.

“ஜானு டிபன் ரெடியா??” எனக் கேட்டவாறே மாடியில் இருந்து இறங்கினார் சிதம்பரம்.

“வாங்க டிபன் எடுத்து வைக்கிறேன்”  என்றார் ஜானகி.

சிதம்பரம் “ஜானு கௌதம் எங்க ஆளையே காணோம் “

“இன்னைக்கு கடைசி எக்ஸாம் அதான் சீக்கிரம் காலேஜ் போயிட்டான்”

“எக்ஸாமா? சொல்லவே இல்ல” என்றார் சிதம்பரம் கேலிக் குரலில்.

“எப்போதும் பிஸினஸ் பத்தி யோசிச்சுட்டே இருந்தா வீட்டுல நடக்குறது எங்க நியாபகம் இருக்க போகுது” என்று கணவரை சாடினார் ஜானு.

“என் வாய் தான் எனக்கு சத்ரு” என்று முணங்கியபடி சாப்பிடத் தொடங்கினார் சிதம்பரம்.

“அந்நேரம் அம்மா காபி குடும்மா…! குடிச்சுட்டு ஒரு குட்டி தூக்கம் போடணும் டயர்டா இருக்கு” என்றபடி வந்து நின்றாள் அந்த வீட்டின் கடைக்குட்டி கவிதா.

“என்னது தூங்கனுமா..? ஏன்டி மணி 9 ஆகுது இன்னும் தூக்கம் கேட்குதோ..? பொண்ணா லட்சணமா சீக்கிரம் எழுந்திருச்சு என் கூட ஒத்தாசை பண்ணலாம்ல”

“போம்மா எக்ஸாமுக்கு படிச்ச டயர்ட்டே இன்னும் போகலை” என கவிதா சலித்துக் கொள்ள,

“டென்த் பப்ளிக் எக்ஸாம் எழுதிட்டு இவ பண்ற அலும்பு இருக்கே முடியல சாமி..! எக்ஸாம் முடிஞ்சு ஒரு வாரம் ஆகுது இன்னும் டயர்ட் போகலனு சொல்றா… ஸ்டேட் பர்ஸ்ட் எடுக்குற பிள்ளைங்க கூட இப்படி ரெஸ்ட் எடுக்க மாட்டாங்க”

“இந்த காபியை குடிச்சுட்டு ஊருக்கு போக தேவையானதை எல்லாம் எடுத்து வை. அப்புறம் அங்க வந்து அதை காணோம் இத காணோம்னு என் உயிரை வாங்காத”

“அம்மா என்ன திட்டலைனா உனக்கு பொழுது விடியாதே”

“பொழுது விடிஞ்சதே உனக்கு தெரியாது இதுல என்ன சொல்ல வந்துட்டா” என ஜானு சிரிக்க

“அம்மா “பல்லைக் கடித்தவாறு குட்டித் தூக்கம் போட கிளம்பினாள் கவி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“மீனா எங்க இருக்க” என்று அழைத்தவாறே வீட்டினுள் வந்தார் வெற்றி.

“என்னங்க என்ன விஷயம்”

“அண்ணன் போன் பண்ணுணான் எத்தன மணிக்கு கிளம்புறீங்கனு கேட்டான். நான் உங்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னேன்”

“ஏங்க உங்க அண்ணன் வீட்டுல வரும் போது இந்த வழியா தான வருவாங்க”

“திருச்சி பக்கம் வரும் போது போன் பண்ண சொல்லுங்க நாமளும் அவங்க கூட சேர்ந்தே போயிரலாம்”

“இதுவும் நல்ல ஐடியா தான்… எப்பிடி மீனு உனக்கு மட்டும் இந்த மாதிரியெல்லாம் தோணுது”

“ஆங்…! வீட்டுல ஒருத்தராவது புத்திசாலியா இருக்க வேண்டாம். வாத்தியார் புள்ள மக்குனு சொல்லுவாங்க இங்க வாத்தியாரே மக்கா இருக்காரு”

“அடியேய் எனக்கு எதிரி வெளியில இல்ல வீட்டுக்குள்ளயே தான் இருக்கு.எங்க நம்ம வீட்டு குட்டி வாண்டுகளை காணோம்”

“ஊருக்கு போற குஷியில பேக்கிங் பண்ணிட்டு இருக்காங்க… இருங்க அவங்கள கூப்பிடுறேன்… சந்தோஷ்..! சந்தியா..! இங்க வாங்க அப்பா கூப்பிடுறாங்க”

“இதோ வரோம்மா” என துள்ளி குதித்த படி வந்தனர் சந்தோஷூம், சந்தியாவும்.

“உங்களுக்கு தேவையானத எல்லாம் எடுத்து வைச்சுக்கோங்க… பெரியப்பா போன் பண்ணுணதும் கிளம்பனும் லேட் பண்ணக்கூடாது….” என்று பிள்ளைகளிடம் அறிவுறுத்த,

நாம எல்லாரும் சேர்ந்து போறோமா ஐய் ஜாலி என்று சந்தோஷத்தில் கூக்குரலிட்டனர் சந்துவும் , சந்தியாவும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“ஏன்டி காபி கேட்டு எவ்ளோ நேரம் அகுது..? அத குடுக்காம கால்ல சக்கரம் கட்டுன மாதிரி அங்கிட்டும் இங்கிட்டும் ஒடிக்கிட்டு இருக்க” என சீண்டிக் கொண்டிருந்தார் ராகவன்.

“ஏன் சொல்ல மாட்டீங்க காலையிலருந்து நிக்க நேரம் இல்லாம வேலை பார்த்துட்டு இருக்கேன்… உதவி பண்ணலனாலும் பரவாயில்ல உபத்திரவம் பண்ணாம இருங்க “ காபியை நீட்டினார் தாமரை.

“ரொம்ப சலிச்சுக்காதடி உனக்கு ஊருக்கு போற குஷி. இதுல  நான் என்ன செஞ்சாலும் உபத்திரவமா தான் தெரியும்”

“இந்த நக்கல் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…“ முனங்கியவாறு அங்கிருந்து நகன்ற தாமரை அப்படியே அதிர்ச்சியில் சிலையென சமைந்து விட்டார்.

“அம்மா ஏன் இவ்ளோ ஷாக் உனக்கு..?” என்றான் பிரசன்னா.

“எது செய்றதா இருந்தாலும் சொல்லிட்டு செய்டா… இப்படி அதிர்ச்சி குடுக்காத அப்புறம் எனக்கு எதாவது ஆயிருச்சுனா என் புருஷன் பாவம்டா..”

சூரிய வெளிச்சம் முகத்தில் சுள்ளென்று பட்டாலும் எழுந்திருக்காத மகன் இன்றைக்கு குளித்து விபூதி அணிந்து நிற்பதை பார்த்து தாமரை அவனை வார,

“அம்மா போதும் எனக்கு ஆயிரம் ரூபாய் வேணும் அப்பாகிட்ட வாங்கி குடுங்க…”

“எதுக்குடா உனக்கு இவ்ளோ பணம்”

“காலேஜ் சேரணும்ல அப்ளிகேஷன் வாங்குறதுக்கு தான் மா”

“போதும் நடிக்காதடா ப்ரெண்ட்ஸ் கூட ஊரை சுத்தறதுக்கு அப்ளிகேஷன் ஒரு சாக்கு”

“கண்டுபிடிச்சுட்டியாம்மா..! போம்மா பேங்க் மேனேஜர் மிஸ்டர்.ராகவன்கிட்ட கேளு..! இப்போவே மனுசன்ட டோக்கன் போட்டா தான் நான் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள குடுப்பாரு”

“ஆனாலும் உனக்கு கொழுப்புடா…! கொஞ்சமாவது அப்பானு பயம் இருக்கா பாரு” என மகனை கண்டித்து விட்டு சென்றார்.

எப்போதும் மகன் பணம் கேட்கும் போது செய்யும் அர்ச்சனைகளை முடித்து விட்டே மனைவியிடம் பணத்தை குடுத்தார் ராகவன்.

அந்நேரம் ராகவனின் செல்போன் ஒலியெழுப்ப அதை பார்த்தவரது முகம் புன்னகை பூசியது… அவரது செல்ல மகள் தான் அழைத்திருந்தாள்.

“மதி செல்லம் எப்பிடிடா இருக்க? சாப்பிட்டியா?”

“அப்பா இது டூ மச் த்ரி மச் இல்ல ஓவர் மச்ப்பா..! நேத்து நைட் தான பேசுனீங்க அதுகுள்ள எப்படி இருக்கேன்னு கேட்குறீங்க..?”

“சரிடா..!  என் செல்லத்தை நான் கேட்காம வேற யாரு கேட்பா..?”

“எங்க நம்ம வீட்டு லோட்டஸ் இன்னைக்கு ஒரே குஷி மூடுல இருப்பாங்களே..?”

“ஆமாடா காலையில இருந்து அவ அலம்பல் தாங்கல… நீ வந்தா தான் எனக்கு சப்போர்ட்டா இருக்கும்…”

“வரேன் வந்து கவனிச்சுக்குறேன் இந்த லோட்டஸை… சரிப்பா எனக்கு நேரமாச்சு நான் வைக்கிறேன்…” என்றதும்,

“சரிடா..! சாயங்காலம் கரெக்ட் டைம்க்கு ஸ்டேசன் போயிடு… நான் கார் அனுப்பட்டானு கேட்டாலும் வேண்டாங்குற… உங்க அம்மாகிட்ட சொன்னா அவ அண்ணன் வீட்டோட வர சொல்லுவா… அதுக்காக தான் நீ ட்ரெயின்ல வரேன்னு சொல்றதுக்கு சம்மதம் சொன்னேன்… பார்த்து பத்திரமா வரணும் புரிஞ்சுதா..?” “சரிப்பா நீங்க கவலைப்படாதீங்க..! நான் வந்துருவேன்“ என்று அழைப் பை துண்டித்தாள் மதி.

Advertisement