Advertisement

கசாட்டா 6:

என் இருவிழி உறங்கிய

போதும் உறங்கவில்லை

உன்னில் நான் கொண்ட காதல்

கனவிலும் நீ..!

குடும்ப உறுப்பினர்களின் கேலியும் கிண்டலும் அவர்களைத் துரத்த அங்கிருந்த அறைக்குள் வந்ததும் ஒப்புக்காய் தன் முகத்தில் ஏந்திய புன்னகையையும் சேர்த்தே துரத்தினான் கௌதம்… அறையின் வாசலில் கையைப் பிசந்து கொண்டு நிலைமையைச் சமாளிக்கத் தெரியாமல் நின்றிருந்தாள் மதி.

“என்ன அங்கேயே நின்னுட்டு இருக்க உள்ள வா… அங்க இருந்து எல்லாரும் நம்மள தான் பார்த்துட்டு இருக்காங்க…“

மதி தரைக்கு வலிக்குமோ பாதம் நோகுமோ என அன்ன நடை நடந்து வந்தாள். அவள் உள்ளே வந்ததும் தான் தாமதம் “ இங்க பாரு என்ன பண்ணுவீயோ எனக்குத் தெரியாது… இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது..” எனக் கடுகடுத்தான் கௌதம்.

“நானா? நான் எப்படி சொல்ல முடியும்? வேணும்னா இவனே சொல்ல வேண்டியது தான..?” என முணு முணுக்க அது தெள்ள தெளிவாய் கௌதமின் காதுகளில் விழுந்து வைத்தது.

“ஹேய் என்னடி சொன்ன.? சொல்ல தைரியம் இல்லாம உங்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கேனு நினைச்சியா..? நடந்த எல்லாத்தையும் சொல்ல எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது… ஆனா அதை மறுபடியும் கிளறி அசிங்கப்பட விரும்பலை… ஒழுங்கு மரியாதையா இந்தக் கல்யாணத்தை நிறுத்த பாரு…”

“அய்யோ ‘கௌ.. எனத் தொடங்க அவனது முறைப்பில் அப்பிடியே வார்த்தைகளை விழுங்கினாள். ‘சா’ எனத் தொடங்க மீண்டும் முறைத்து வைத்தான் .

என்னாடா இவன் எப்படி சொன்னாலும் அய்யனார் சிலை மாதிரி முறைச்சு வைக்கிறான்… “இதைப் பாருங்க என்ன என்னால சொல்லி நிறுத்த முடியும்..? இப்படி தடாலடியா வேண்டாம்னு எல்லார் முன்னாடியும் சொல்ற தைரியம் எனக்கு இல்லை…“ எனச் சொல்ல

கௌதம் “ ஹா ஹா குட் ஜோக்… உனக்குத் தைரியம் இல்லை… இத நான் நம்பணும்… ஏன் நீ பண்ணுனதெல்லாம் மறந்து போச்சோ..?“ கேலியுடன் அவளைக் குத்தி பேச,

“அது எதோ வேகத்துல யோசிக்காம செஞ்சுட்டேன்… மன்னிச்சிருங்க. ப்ளீஸ்…” எனக் கெஞ்ச

“என்னது யோசிக்காம செஞ்சுட்டீயா…? நீ செஞ்ச விஷயத்தால நான் இழந்தது அதிகம்… அதால நான் அனுபவிச்ச வலி கொஞ்சமில்லை… நீ என்னடானா ஈஸியா மன்னிச்சுருங்கனு சொல்ற…”

“எல்லோரும் இந்தக் கல்யாணத்தை ரொம்ப ஆசையோடு எதிர்பார்த்துட்டு இருக்காங்க…. இப்போ போய் இப்படிச் சொல்றீங்களே..?”

“ஓ… உனக்கு இந்தக் கல்யாணம் நடக்கணும்னு வேற ஆசை இருக்கா..? நீ சொல்லாட்டி என்ன..? நானே எல்லார் முன்னாடியும் போய் இந்தக் கல்யாணம் நடக்காதுனு சொல்லிடுறேன்… காரணம் கேட்டா அதையும் சொல்றேன்…“ என மதியின் முகத்தைப் பார்க்க

“நான் பண்ணுனதைச் சொல்லாதிங்க ப்ளீஸ்…!“

“உங்க அப்பா உன்னை நல்ல செல்லம் கொஞ்சி தலையில வச்சு ஆடுவாருல… அவருக்கும் தெரியட்டும் அவர் செல்ல மகள் பண்ணுன காரியம்… இதுல எனக்கு உன்னை கல்யாணம் பண்ணுறத பத்தி யோசிக்க அவருக்கு டைம் வேணுமா..? எனக்கு அந்த டைம் கூடத் தேவையில்லை இந்தக் கல்யாணம் நடக்காது நான் முடிவெடுத்துட்டேன்..“

மதி அவன் கையைப் பிடித்து ப்ளீஸ் எனக் கண்களால் கெஞ்ச கௌதம் முறைப்புடன் பிடித்த கைகளை நோக்க மதியின் கை தானாகப் பின்னோக்கி சென்றது.

அவளது கை விடுபட்டதும் விருட்டென்று அறையை விட்டு வெளியேறினான்… ஹாலில் அனைவரும் திருமணத்திற்குத் தேவையானவற்றைப் பட்டியலிட்டுக் கொண்டிருக்கக் கௌதம் அவர்கள் நோக்கி நடந்தான்.

வேதா கௌதமிடம் “ கௌதம் நாளைக்கு நாள் நல்லாயிருக்கு… அதனால நாளைக்கே நாம கல்யாணத்திற்குத் தேவையான ஜவுளி எடுத்துட்டு வந்துருவோம்…” எனக் கூற

“கல்யாணமே நடக்கப் போறது இல்லை…. இதுல டிரஸ் எதுக்குத் தண்ட செலவு..?” என்று சொன்னதும்

“என்னய்யா…? அபசகுணமா பேசுற… “கிருஷ்ணா பதட்டப்பட

“அபசகுணம் இல்லை ஆச்சி… நடக்கப் போறதை தான் சொல்றேன்…“  என்று சொல்ல,

அதை கேட்டு அனைவரும் அதிர்ந்து போய் இருக்க “கௌதம்…” என மூன்று குரல்கள் உச்சஸ்தாயில் சத்தமிடவும் ராகவன் கௌதமின் சட்டையைப் பிடித்து உலுக்கவும் சரியாய் இருந்தது

“என்ன கௌதம்..? நிச்சயம் முடிஞ்ச பிறகு இப்பிடி சொன்னா என்ன அர்த்தம்..?”  என ராகவன் கோபமாய் கேட்க,

“முதல்ல சட்டையிலிருந்து கையை எடுங்க நான் சொல்றேன்…” என்க ராகவனோ தன் பிடியை சிறிதும் தளர்த்தாமல் இருந்தார்.

கௌதம் அவர் கைகளைத் தன் சட்டையிலிருந்து விடுவித்தவாறே “ உங்க மகளைக் கல்யாணம் பண்ண விருப்பம் இல்லைனு அர்த்தம்… “ எனச் சொல்ல

“ஏன் துரைக்கு நேற்று வரை விருப்பம் இருந்தது… இன்னைக்கு என்ன ஆச்சு..?”

“விருப்பம் இல்லைனா இல்லை தான் விடுங்களேன்….” என எரிச்சலாய் கத்த

“நீ சம்மதம் சொன்ன பிறகு தானடா நிச்சயத்திற்கு ஏற்பாடு செஞ்சோம்… இப்போ வந்து கல்யாணம் வேண்டாம்னு சொல்ற… இது தப்புக் கௌதம்… “ எனத் தந்தையாய் சிதம்பரம் கேள்வி கேட்க

இதற்குக் கௌதம் என்ன சொல்லுவான் சிறு வயதில் பார்த்தவளை இப்போது எப்படி இருப்பாள் என்பது கூடத் தெரியாமல் காதல் கொண்டதை சொல்வானா? இல்லை தன் மனம் வெறுத்தவளை மறக்க நினைப்பவளை தன் காதலியாய், மனைவியாக ஆகப் போகிறவளாய் பார்த்ததைச் சொல்லுவானா? இப்படி இருதலை கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டிருக்க மதியோ அறையிலேயே முடங்கிக் கொண்டாள்.

வேதாவும் “ கௌதம் நேற்று வரை சம்மதம்னு சொன்னவன் இன்னைக்குத் திடீர்னு கல்யாணம் வேண்டாம்னு சொல்ற…? அதுக்கு என்ன காரணம் அத சொல்லு முதல்ல..?” எனக் கேட்க

கிருஷ்ணா “ தாத்தா கேட்குறாங்கல என்ன காரணம்னு சொல்லுப்பா… “ எனத் தன் பங்குக்குக் கௌதமை கேள்வி கேட்டு வைத்தார்.

காரணம் கேட்டால் நடந்ததைச் சொல்லுவேன் என மதியிடம் கூறியவன் ஏனோ அவளைக் காட்டிக் குடுக்க மனமில்லாமல், அதே நேரம் அவளை ஏற்கவும் முடியாமல் மௌனம் மட்டுமே தனது பதில் என்பது போல் அமைதியானான்…

அவனது மௌனம் அனைவரையும் கலங்கடிக்க ராகவனோ இதற்குத் தான் வேண்டாம் என்று சொன்னேன் என்பது போல் கிருஷ்ணாவை பார்க்க ,

“உறவு நீடிக்கத் தான் செய்த செயல் மேலும் பிளவுபடுத்தி விட்டதோ…?” என எண்ணி ராகவனின் பார்வையைத் தாள முடியாமல் உணர்விழந்து சரிந்தார்.

அவர் விழும் முன் தன் கைகளில் ஏந்திய வேதா மெல்ல ஷோபாவின் மேல் கிடத்தினார்… தண்ணீர் எடுத்துத் தெளித்துப் பார்த்தும் முன்னேற்றம் எதுவுமில்லை.

அனைவரும் அதிர்ச்சியில் அசையாது நிற்க கௌதம் ஆச்சியைத் தூக்கி கொண்டு காரை நோக்கி ஓடினான்… அடுத்தப் பத்து நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்தனர்.

அங்கே கிருஷ்ணாவிற்குச் சிகிச்சை நடந்து கொண்டிருக்க இங்கு அனைவரும் ஆளுக்கொரு மூலையில் சந்தோஷமாய் இருந்த வீடு சில நொடிகளில் சோக வடிவானதை நினைத்து மறுகி கொண்டிருந்தனர்.

வெளியே வந்த மருத்துவர் வேதாவிடம் “உங்களைப் பார்க்கணும்னு சொல்றாங்க போய்ப் பாருங்க… ரொம்ப டிஸ்டர்ப் பண்ணாதிங்க… அவங்களுக்கு ஓய்வு தேவை சீக்கிரம் பேசிட்டு வந்திடுங்க…” வேதா கிருஷ்ணா இருக்கும் அறையை நோக்கி விரைந்தார்.

“டாக்டர் அம்மாவுக்குப் பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்லையே…?“ என்று கேட்க,

“மைல்ட் அட்டாக்… அதிக அதிர்ச்சி தான் காரணம்… ரொம்ப மன அழுத்தத்துல இருக்காங்க…. கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க… நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிரலாம்…“

வெளியே வந்த வேதா “மதி… கௌதம்..! வாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” என அழைத்துச் சென்றார்… கௌதமையும் மதியையும் அழைத்துக் கொண்டு நேரே வீட்டிற்குச் சென்றார் வேதா.

ஒரு மணி நேரம் கழித்துப் பொது அறைக்கு மாற்றப்பட்டார் கிருஷ்ணா… அனைவரும் கிருஷ்ணா இருக்கும் அறையில் ஒன்று கூட மெல்ல கண்விழித்து அனைவரையும் ஒருமுறை கண்டவர், “அப்பா எங்க..?“ எனச் சிதம்பரத்திடம் கேட்டார்.

அவர் கேட்டு முடிக்கவும் வேதா கதவை திறக்கவும் சரியாய் இருந்தது.

வேதா உள்ளே வர அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். ஆம் நீங்கள் நினைத்து சரி தான். அங்குக் கௌதமும் மதியும் மணக்கோலத்தில் நின்றனர்.

இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்ற வேதா கௌதமிடம் “கௌதம், நானும் உன் ஆச்சியும் எது செஞ்சாலும் உங்க நல்லதுக்காகத் தான் இருக்கும்னு நீ நம்பினால் மதியை கல்யாணம் பண்ணனும்… அதுவும் இப்போவே…”

“தாத்தா அது வந்து நான் எப்படி…?“ எனத் தடுமாற

“கௌதம் இதுல நீ தடுமாற ஒண்ணும் இல்லை… எங்களை நம்பினால் மதியை கல்யாணம் பண்ணு இல்லை… முடியாதுனு நேரடியாய் சொல்லிடு..”

“மதி நீயும் என்ன நினைக்குறீயோ சொல்லுமா…?” என மதியிடமும் வினவ

“நீங்க என்ன சொன்னாலும் சரி தாத்தா…” எனத் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள் மதி.

அவள் பதிலை கேட்டு ஒருமுறை அவளைத் திரும்பி பார்த்தவன் தனது பதிலுக்காக வேதா காத்திருப்பது புரிய தாத்தாவின் பேச்சை தட்டவும் முடியாமல் அதே சமயம் இதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் குழப்பத்திலேயே சம்மதம் என்பதாய் தலையை ஆட்டி வைத்தான்.

வீட்டிலுள்ள பூஜை அறையில் இருக்கும் கடவுள் படங்களின் சாட்சியாகக் கௌதம் மதியின் கழுத்தில் மங்கல நாணை மூன்று முடிச்சிட்டு அவளைத் தன் வாழ்க்கை துணைவியாக்கி கொண்டான்.

மணக்கோலத்தில் நின்ற கௌதம் – மதியை கண்ட அனைவரும் ஒரு வித திகைப்பில் இருக்கக் கிருஷ்ணாவின் உள்ளமோ குளிர்ந்து போனது… ஒரு புதுத் தெம்பு தன்னில் பாய்வது போல் உணர்ந்தார் உறவுகளை நேசிக்கும் அந்த முதியவள்.

வேதா “கௌதம்… மதி… எல்லார்கிட்டையும் போய் ஆசிர்வாதம் வாங்கிகோங்க…“ எனச் சொல்ல

கௌதம் மதி முதலில் கிருஷ்ணாவின் அருகில் சென்று அவரை வணங்க அவர் இருவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விடலானார்.

கௌதம் “ ஆச்சி அழாதிங்க…! ஏற்கனவே உடம்பு சரியில்லாம இருக்கீங்க… இந்த நேரத்துல அழுது உடம்பை கெடுத்துக்காதிங்க….”

மதி “ ஆமா ஆச்சி எதைப் பற்றியும் யோசிக்காம ரெஸ்ட் எடுங்க…” எனச் சொல்ல கௌதம் மதியை ஒருமுறை திரும்பி பார்த்தான். அதன் பிறகு அவள் புறம் திரும்பவேயில்லை.

சிதம்பரம்-ஜானகியிடம் ஆசிர்வாதம் வாங்கும் போது சிதம்பரம் “ கௌதம்..! நீ இந்தக் கல்யாணத்தை முழு மனசோட தான் செஞ்சுகிட்டனு என் மனசு நம்ப மறுக்குது… அதே சமயம் நாங்க தலைகுனியுற மாதிரி எதுவும் செய்ய மாட்டேனு எனக்கு நம்பிக்கையும் இருக்கு…” எனக் கௌதமின் தோள்களைத் தட்டி குடுக்கக் கௌதமோ மௌனம் எனும் முகமூடியை அணிந்து கொண்டான்.

அவனின் மௌனம் சிதம்பரத்தின் மனதை கலங்கடிக்க ஜானகியிடம் “இவன் அமைதிக்குப் பின்னால் ஏதோ பூகம்பம் இருப்பது போலத் தோணுது…“ எனத் தன் மன கலக்கத்தைப் பகிர,

“நீங்களே எதையாவது கற்பனை பண்ணி மனச போட்டு குழப்பிக்காதிங்க… எல்லாம் நல்லதாவே நடக்கனும்…” கணவரை அமைதிப் படுத்தினார்.

ராகவனிடம் ஆசிர்வாதம் வாங்க சென்ற போது ஒரு நிமிடம் கௌதம் தயங்கி நிற்க மதி தன் தந்தையின் காலில் விழ, அதில் உணர்வுக்கு வந்த ராகவன் தன் மகளைத் தூக்கி விட்டபடி வேதாவிடம் சென்றார்.

“மாமா நீங்க இப்பிடி ஒரு காரியம் செய்வீங்கனு நான் நினைச்சு பார்க்கலை…?“  என ராகவன் குரலில் வேதனையும் ஏமாற்றமும் ஒருங்கே ஒலிக்க,

“மாப்பிள்ளை ஏன் இப்பிடி பேசுறீங்க..? இந்தக் கல்யாணத்துல உங்களுக்கும் விருப்பம் தான. யாருக்கும் சொல்லாம இதை நடத்திட்டேனு வருத்தப்படுறீங்களா..? தப்பு தான் மாப்பிள்ளை பெத்த பொண்ணு கல்யாணத்தைப் பார்க்க முடியாம போறது எவ்ளோ பெரிய வலினு எனக்குப் புரியுது…ஆனால் வேற வழி தெரியலை என்னை மன்னிச்சுருங்க…”

“தெரியாம நடந்தது ஒரு புறம் இருந்தாலும் இவனுக்குப் பண்ணி வைச்சுருக்கீங்களே…. அது தான் என் மனச அறுக்குது…“எனக் கொந்தளிக்க, ராகவன் கூறியதை கேட்டதும் கௌதமின் முகம் கோபத்தால் சிவந்து போனது.

வெற்றி “என்ன அத்தான் தெரிஞ்சுதான் பேசுறீங்களா..? கௌதம் ரொம்ப நல்ல பையன் நீங்க என்னடானா இப்பிடி பேசுறீங்க..?”

“ஆமா நல்லவன் தான் நேற்று வரைக்கும் அந்த நம்பிக்கை இருந்துச்சு… எப்போ நிச்சயம் முடிஞ்ச பிறகு வேண்டாம்னு சொன்னானோ அப்போவே அந்த நம்பிக்கை விட்டு போச்சு… இன்னைக்கு இப்பிடி சொல்றவனுக்குக் கல்யாணம் பண்ணீட்டிங்க… நாளைக்கு என் பொண்ண மறுபடியும் வேண்டாம்னு சொல்லமாட்டான்னு என்ன நிச்சயம்..? ” என் கேள்விக்குப் பதில் என்பது போல் பார்க்க

அனைவரும் வாயடைத்து நின்றனர்… என்ன சொல்ல முடியும் அவர் சொல்வது உண்மை தானே நிச்சயம்… முடிந்த பிறகு கௌதம் இப்படி ஒரு குண்டை போடுவான் என எதிர் பார்க்கவேயில்லையே..?! என்ன சொல்லி ராகவனைச் சமாதானப்படுத்துவது..? எனத் தெரியாமல் முழி பிதுங்கி நிற்க,

வேதா “மாப்பிள்ளை…! அவன் சின்னப் பையன் ஏதோ கோபத்துல விவரம் தெரியாம பேசிட்டான்… அவன் ஒத்துக்கிட்ட பிறகு தான் இந்தக் கல்யாணத்தைப் பண்ணிவச்சேன்… இனி அந்த மாதிரி தப்பு நடக்காது… ”

“நீங்க சொல்றீங்க அப்படி நடக்காதுனு தப்பு செஞ்ச அவன் எனக்கென்னனு நிற்கிறான்…“ எனக் கௌதமை சாட

கௌதம் தன் அருகில் நின்று கொண்டிருந்த மதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு “இனிமே அது மாதிரி நடக்காது…“ எனச் சொல்லவும்,

மதிக்கோ கௌதமின் கைகள் தன் கைகளைத் தொட்டதும் நூறு வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல் என்னவென்று விவரிக்க முடியாத சிலிர்ப்பு உடலெங்கும் பரவி ஓடியது.

கருப்பான கைய்யாலே என்னைப் புடிச்சான்

காதல் என் காதல் பூ பூக்குதம்மா ….. எனப் பாட்டிசைக்க

மதியோ “கருப்பான கையா..? அவன் கருப்பா ஒண்ணும் இல்லையே ஆர்யா மாதிரி கலரா அழகாதான இருக்கான்…” எனக் கௌதமிற்கு வக்காளத்து வாங்க.

மனசாட்சியோ “ஏன்டி…! பிரச்சனையின் ஆரம்பமே அவன் (ஆர்யா) தான். மறுபடியும் ஆர்யாவா???” எனக் கொந்தளிக்க மதி வாயை மூடிக்கொண்டாள்.

இதற்கு முன் மதி கௌதமிடம் கெஞ்சும் போது அவன் கைகளைப் பிடித்திருக்கிறாள் தான்… ஆனால் இது அவனின் முதல் தீண்டல் அல்லவா? ஏன் இந்த உணர்வு அவளால் யோசிக்க முடியவில்லை…

ராகவன் மனதில் “மன்னிச்சிருங்கனு ஒரு வார்த்தை சொன்ன குறைஞ்சு போயிடுவாரா…? துரை…! “ குமுறிக் கொண்டிருக்க

“கல்யாணம் தான் அவசரமா வீட்டுல வச்சு நடந்து விட்டது… அதற்குப் பிறகு உள்ள சடங்குகளை நல்ல படியா செய்யலாம்… முதலில் கோவிலுக்குப் போகலாம்…” என கிருஷ்ணா சூழ்நிலையை திசை திருப்பி இலகுவாக்க முயல,

“ஆச்சி உங்களுக்கு நாளைக்குத் தான் டிஸ்சார்ஜ்… அதை மறந்துட்டீங்களா..? “ பிரசன்னா கேட்க

“அட போடா…! கௌதமையும் மதியையும் கல்யாண கோலத்தில பார்த்ததுமே எனக்குச் சரியாகி விட்டது… டாக்டர்கிட்ட சொல்லிட்டு இன்னைக்கே வீட்டுக்குப் போலாம்… தலைக்கு மேல வேலை இருக்கு…”

அனைவரும் ஒருவித சந்தோஷத்திலேயே மிதந்து கொண்டிருந்தனர். ஒரு வாரத்தில் நடக்க வேண்டிய திருமணம் இன்று நடந்துவிட்டது இதில் வருத்தப்பட ஏதுமில்லை. ஆனால் திருமணத்தை நேரில் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் இல்லாமலில்லை. இந்தச் சந்தோஷத்தில் கலந்து கொள்ளாமல் தத்தளித்துக் கொண்டுருந்தது இரண்டு ஜீவன். ஒன்று ராகவன்

ராகவன் திருமணம் முடிந்த பிறகு தன்னால் இந்த விஷயத்தில் ஒரு அளவுக்கு மேல் தலையிட முடியாது அவ்வாறு நடந்தால், அது மகளின் வாழ்வை பாதிக்கும் எனத் தெரிந்தாலும் தன் மகளை வேண்டாம் என அனைவரின் முன் கூறிய கௌதமின் மேல் ஒரு தந்தையாய் கோபம் இருக்கத்தான் செய்தது.

மற்றொருவன் கௌதம். கௌதமின் மனநிலையோ நதியில் மாட்டிக் கொண்ட இலை போல் ஆனது. கரை ஒதுங்கவும் முடியாமல், விதியின் ஓட்டத்தில் பங்கு பெறவும் முடியாமல் கலங்கி நின்றான்.

அவன் நினைத்திருந்தால் காரணத்தைச் சொல்லி திருமணத்தை நிறுத்தி இருக்கலாம்தான் . மதியை காட்டி குடுக்கவும் மனதில்லை. இதை ஏற்றுக் கொள்ளவும் மனதில்லை அவனை நினைத்து அவனுக்கு அவன் மீதே எரிச்சல் படர்ந்தது.

கோவிலில் கிருஷ்ணா “ கௌதம்..! உங்க கல்யாணத்தைத் தான் நாங்க பார்க்க முடியலை… அதனால் இந்தக் குங்குமத்தை மதி நெற்றியிலும், மாங்கல்யத்துலயும் வச்சு விடுப்பா…”

கௌதம் ஒரு மணித்துளிகள் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க அதைக் கண்ட ராகவனுக்குக் கோபம் எகிற ஆரம்பித்தது.

“மறுபடியும் என் பொண்ண வேண்டாம்னு குங்குமத்தை வச்சுட்டு சொல்லலாமா..? இல்லை அதுக்கு முன்னாடியே சொல்லலாமானு யோசிக்கிறீயா கௌதம்..? உன்னால என் பொண்ண வைச்சு காப்பத்த முடியாதுனா இப்பவே சொல்லிருப்பா…” என அவனின் தன்மானத்தைக் குறி வைத்து அடித்து நக்கலாய் வினவ,

கௌதம் அவரை முறைத்து விட்டு மதியின் தோளை பிடித்துத் திருப்பிக் குங்குமத்தை அவளது நெற்றியிலும் வகிட்டிலும் வைத்தவன், மாங்கல்யத்தில் வைப்பதற்காகக் குங்குமத்தை எடுத்தவன் அதிர்ந்து நின்றான்… மார்பினில் தொங்கி கொண்டிருந்த மாங்கல்யத்தை எப்படித் தொட்டு வைப்பது என யோசித்துக் கொண்டிருக்க,

ராகவனோ “ ஹீக்கும் “ எனச் செறும

சுவிட்ச் போட்டார் போல் படாரென மாங்கல்யத்தைத் தூக்கி குங்குமத்தை வைத்தான். வைத்துவிட்டு எதுவும் நடக்காதுது போலத் திரும்பி நின்று கொள்ளமதியோ உறைந்து நின்றாள்.

அனைவரும் கோவிலுக்குச் சென்று வீட்டிற்கு வரும் போது மணி ஏழைத் தொட்டிருந்தது. அதன் பின் நலுங்கு எனப்படும் பல விளையாட்டுகள் நடைபெற்றது. அனைத்திலும் கௌதம் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டான்.

இரவும் வந்தது. கௌதம் தனது அறையில் இருக்க மதி பல யோசனைகளுடன் கௌதமை தனியே சந்திக்கப் போகும் ஒரு வித பயத்துடனே படியேறியவள் எப்போது அறையின் வாசலை அடைந்தாள் என அவளுக்கே தெரியவில்லை.

அறையின் வாயிலில் நின்று கொண்டு “உள்ள போவோமா..? இல்லை அப்பிடியே கீழே ஓடிருவோமா..? “என மனதுக்குள் நீயா..? நானா..? நடத்திக் கொண்டிருக்க,

அப்போது தான் குளியலறையில் இருந்து வெளி வந்த கௌதம் அறைவாயிலில் நின்று கொண்டிருந்த மதியை பார்த்தான். பார்த்ததும் அவளை நோக்கி நடந்தான்.

ஏற்கனவே பயத்தில் சில்லிட்டு இருந்த கால்கள் அவன் நெருங்கிய வர வர உறைந்து எந்த நிமிடமும் துவண்டு விடுவேன் எனச் சொல்லிக் கொண்டிருந்தது.

அவள் அருகில் சென்றவன் அவளை அறைக்குள் இழுத்து கதவை தாளிட்டான். அவ்வளவு தான் மதிக்குப் பயத்தில் வயிற்றில் குடை ராட்டினம் சுற்ற ஆரம்பித்தது.

கதவை தாளிட்டவன் நேராக மதியிடம் சென்று அவள் கையில் இருந்த பால் கிளாசை வாங்கி மட மட வென வாயில் ஊற்றினான்.

மதியோ ஆடு திருடிய திருடன் போல் முழித்துக் கொண்டிருக்கக் கௌதம் வந்த சிரிப்பை அடக்கி விட்டு இருக்குற டென்சன்ல காலையிலருந்து சரியா சாப்பிடவே இல்லை… Anyway thanks for the milk. என்று கூறிவிட்டு ஷோபாவில் உட்கார்ந்து மாத இதழை புரட்ட தொடங்கினான்.

தன்னிடம் கோபப்படுவான் என எண்ணிய மதி அவன் சகஜமாகப் பேசவும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவன் முன்பு சென்று நின்றாள்.

அவன் என்ன? என்பது போல் பார்க்க,

சாரி அன்ட் தேங்க்ஸ் நீங்க காலையில என்கிட்ட கோபப்பட்டதையும் வெளிய எல்லார்கிட்டயும் பேசினதை பார்த்து என்ன நடக்கமோனு பயந்து போயிருந்தேன்… ஆனால் அதுக்குப் பிறகு நடந்த விஷயங்களை இவ்ளோ மெச்சூர்டா ஹேண்டில் பண்ணுவீங்கனு நான் நினைக்கலை என மருத்துவமனையிலும், கோவிலிலும் கௌதம் நடந்து கொண்டதை நினைத்து கூறினாள்.

கௌதம் எழுந்து நின்று “அப்பிடியா..? வேற என்னவெல்லாம் என்னைப் பற்றி நினைச்சிங்க…” எனக் கேட்டுக் கொண்டே அவளை நெருங்கி வர மதி பின்னோக்கி சென்றவள் கட்டிலின் காலில் முட்டி நின்றாள்.

அருகே வந்தவன் தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுத்து அவள் கையில் திணித்து “போ..! போய் ஷோபால தூங்கு எனக்கு டையர்ட்-ஆ இருக்கு…” என்றவன் கட்டிலில் விழுந்தான்.

ஷோபாவை நோக்கி சென்று கொண்டிருந்த மதி “இவனுக்கு என்ன ஆச்சு காலையில அந்தக் கத்துக் கத்தினான்… இப்போ என்னடானா அந்த மாதிரி எதுவும் நடக்காத மாதிரி நடந்துக்குறான்… என்னவோ போ நம்மள கோபத்துல கடிச்சு குதறாம இருக்கானே அதுவே போதும்…“ என நினைத்துக் கொண்டு உறங்கி போனாள்.

உறங்கி கொண்டிருந்த மதியை பார்த்தவாறே இருந்த கௌதம் “இனிமே தான்..! என் ஆட்டத்தை நீ பார்க்கபோற..?!” என்று மனதில் கூறிக் கொண்டு கண்முடினான்.

Advertisement