Advertisement

Epilogue
நான்கு வருடங்களுக்கு பின்…
“அனு அனு… நேரமாகிறது பார்… இப்போழுது கிளம்பினால் தான் கதிர் வீட்டில் இருந்து வருவதற்குள் நாம் மண்டபம் செல்லலாம்.” என்றபடியே அவர்கள் அறைக்கு வந்தார் ரேகா.
ஆதி வாக்களித்தது போலவே கயல் படித்து முடித்து வேலைக்கு சென்றவுடன் திருமண வேலைகள் ஆரம்பமாயிற்று. நாளை காலை திருமணம்…
“இதோ அத்தை… பாருங்கள் இவளை அழகாக ட்ரெஸ் போட்டு தலை வாரிவிட்டால் ஓல்ட் ஸ்டைல் என்று கலைத்து விடுகிறாள்.” என்று சலிப்போடு கட்டிலில் அமர்ந்திருக்கும் அக்ஷிதாவை கண் காட்டினாள் அனு. இவற்றையெல்லாம் சிரித்து கொண்டே பார்த்துக் கொண்டிருந்தனர் வர்ஷினியும், சந்தியாவும்.
“அக்ஷி குட்டி ஏன் இப்படி பண்றிங்க? சித்தி கல்யாணத்திற்கு போக வேண்டாமா?” என்று தன் செல்ல பேத்தியை வாஞ்சையோடு தூக்கிக் கொண்டார்.
“பாட்டி அம்மாக்கு ஹேர்ஸ்டைல் பண்ணிவிடவே தெரியல… நீங்க செஞ்சு விடுறீங்களா?? என் கிளாஸ்ல மோனி போட்டு வருவாள்ல அதே மாதிரி…” என்று கையை ஆட்டி ஆட்டி மழலையோடு பேசினாள் ஆதி, அனுவின் மூன்று வயது செல்லமகள் அக்ஷிதா. 
“சரிடா குட்டி…” என்று அங்கேயே அவளுக்கு தலையில் கிளிப் குத்திவிட்டு அனு புறம் திரும்பியவர், “நீ போய் சீக்கிரம் கிளம்பு… மாமா ரூம் மட்டும் தான் காலியாக இருக்கிறது அங்கு தான் ஆதியும் கிளம்புகிறான், நீயும் அங்கேயே கிளம்பு நான் இவளை ரெடி செய்கிறேன்.” என்றதும் அவசர அவசரமாக பட்டுப்புடவையை எடுத்து ஆதி இருக்கும் அறைக்கு சென்றாள்.
“வெளியே போங்கள்… நான் உடை மாற்ற வேண்டும்.” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் அனு. 
“மாற்று யார் வேண்டாமென்று சொன்னது?” என்றவன் தோள்களை குலுக்கி கண்ணாடி முன் தலை வாரினான்.
“போதும் இப்போதே ஆரம்பிக்காதீர்கள் நிறைய வேலை இருக்கிறது. என்னிடம் வாதிடாமல் கிளம்புவதற்கு எல்லாம் தயாராக இருக்கிறதா என்று பாருங்கள்.” என்று அவனை இழுத்து வெளியேற்றினாள்.
“உன்னை…” என்று ஆரம்பிக்கும் போதே ஒரு மழலை குரல் குறுகிட்டது.
“மாமா மாமா… கயல் ஆன்ட்டி உங்களையும், அனு அத்தையையும் கூப்பிட்டார்கள்.” என்று செய்தி தாங்கி வந்தது முரளியின் புதல்வன்.
யோசனையில் நெற்றி சுருங்க அனுவை நோக்க அவளும் அதே பாவனையோடு நின்றிருந்தாள்.
“வா என்னவென்று பார்ப்போம்.” என்று ஆதி செல்ல அவனை பின்தொடர்ந்தாள் அனு.
“என்ன விஷயமடி… இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பப் போகிறோம்.” என்று கயல் அறையில் நுழைந்தவுடன் அனு பேச ஆரம்பித்தாள்.
“மாமா ஏன் அங்கேயே நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள்.” என்று கயல் நாகரிகம் கருதி வெளியில் நின்றவனை கூப்பிட்டாள்.
“ஏதும் வேண்டுமா?” என்றான் அவள் அருகில் வந்து.
“ம்ம்… அக்கா மாமா பக்கத்தில் வந்து நில்.” என்று கட்டளையிட அனு புரியாமல், “எதற்கு?” என்று கேட்க அவளை இழுத்து ஆதி பக்கத்தில் நிற்க வைத்தாள் கயல்.
ஆதியும் அனுவும் ஒருவரை ஒருவர் கேள்வியாக பார்த்துக் கொள்ள அவர்கள் உணரும் முன் அவர்கள் காலில் விழுந்தாள் கயல்.
“ஏ… என்ன இது?” என்று பதறினான் ஆதி.
“மாமா எனக்கு முதுகு வலி வருவதற்குள் ஆசி செய்துவிடுங்கள். அக்கா நீயும் தான்.” என்று சற்று குறும்பு மின்ன அவர்களை ஏறிட்டாள் கயல்.
அனு கண்ணை காட்ட அவளை மனமார தம்பதி சகிதமாக வாழ்த்தினர்.
“என்ன புதுசா ஏதேதோ செய்கிறாய்?” என்று கேள்வியாய் தன் புருவங்களை உயர்த்தினான்.
புன்னகையை உதிர்த்தவள், “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை மாமா. என் வாழ்க்கையை வடிவமைத்து அதை நேர் வழியில் செலுத்தியது நீங்கள் தான். என் அப்பா இருந்திருந்திருந்தால் கூட கதிரை காதலித்தது தெரிந்ததும் கை காலை உடைத்து வீட்டில் உட்கார வைத்திருப்பார். நான் இப்போது இருக்கும் நிலை என்றுமே என் கனவாகி இருக்கும். இருளில் போக இருந்த என்னை நீங்கள் தான் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தீர்கள். அன்று மட்டும் நீங்கள் என்னை கவனியாது என் போக்கில் விட்டிருந்தீர்கள் என்றால் என்றோ வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்திருப்பேன்.” என்றதும் அனு அதிர்ச்சியில் அவள் கையை அழுந்த பிடிக்க கயல் மீண்டும் தொடர்ந்தாள் “உங்களுக்கு தெரியும் முன்வரை நிறைய பொய் கூறியிருக்கிறேன். பல நாட்கள் இவளுக்கு தெரியாமல் அவனுடன் வெளியில் சென்றிருக்கிறேன், ஏன் நீங்கள் எங்கள் வாழ்வில் வந்த பின்பும் கதிருடன் போனில் திருட்டுத் தனமாக காதலை வளர்திருக்கிறேன். இப்போது அதையெல்லாம் திரும்பி பார்த்தால் எனக்கே குற்றவுணர்ச்சியாக இருக்கிறது. இந்த பத்து வருடத்தில் நீங்கள் எனக்கு நிறைய கற்று தந்துள்ளீர்கள். அக்கா ட்ரைனிங்கில் இருந்த போது கூட என்னுடைய நிழலாக துணை இருந்திருக்கிறீர்கள். உங்களை என் தந்தை ஸ்தானத்தில் தான் பார்க்கிறேன்…” என்றவள் கண்கள் கலங்கியதோடு அனுவின் கண்களும் கலங்கிற்று. கயல் கூறிய பாதி விஷயங்கள் இன்று வரை அனுவிற்கு தெரியாது. ஆதியின் கரங்கள் கயல் தலையை ஆதரவாய் வருடின.
“ஆமாம்… ஆமாம்… நம்பிவிட்டேன்… அதனால் தான், உன் அக்கா போடும் காபி சரி இல்லையென்று உன்னை காபி ஷாப் கூட்டி போனேன் என்று இவளிடம் போட்டுக் கொடுத்தாய்… இன்றும் அதை பிடித்துக் கொண்டு தொங்குகிறாள்.” என்று கேலியாய் இதழை வளைத்து அவ்விடத்தில் நிலவிய உணர்ச்சிகளின் போராட்டத்தை மாற்ற நினைத்தான்.
அவளை போலவே ஆதிக்கும் கயல் மேல் தனி பிரியம் உண்டு. பொறுப்பாய் இருப்பதை அனுவால் கற்றுக்கொண்டாலும் சங்கடமான, இக்கட்டான சூழலை சமாளிப்பதற்கு கற்றுக்கொடுத்தது கயல் தான். அனு தன் மனைவி என்பதனால் அவளுக்கு எது செய்தாலும் அவளிடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கும். ஆனால் கயல் மேல் காட்டிய அன்பு அவனுக்கே ஆச்சர்யம் தான். இன்று அவன் மகளை நன்றாக புரிந்து கொண்டு அவளுக்கேற்றார் போல் நடந்து கொள்கிறானென்றால் அதற்கு அச்சாரமிட்டது கயல்தான்.
கயல் பதிலிற்கு மென்னகை சிந்தி கண்களை துடைக்க அங்கே மீண்டும் மழலை குரல் ஒலித்தது.
“அப்பா… நான் ரெடியாகிட்டேன்.” என்று கொஞ்சு தமிழில் கீச்சிட்டு உள்ளே ஓடி வந்தாள் அக்ஷிதா.
அழகிய பட்டுபாவாடையில் குட்டி தேவதையாய் ஓடி வந்த தன் மகளை வாரி தூக்கிக் கொண்டு குண்டு கன்னங்களில் முத்தமிட்டான் ஆதி.
சுற்றும் முற்றும் தன் சிறிய விழிகளை திரியவிட்ட அக்ஷிதா தன் தந்தையிடம் பார்வையை நிறுத்தினாள், “அம்மா இன்னும் கிளம்பவே இல்லை நாம் எப்படி சீக்கிரம் போவது? அதற்குள் கல்யாணம் முடிந்து விடுமே.” என்று வெகுளியாய் வருந்தியது அந்த சின்ன சிட்டு.
அவள் வெகுளித்தனமான கேள்வியில் முன்னர் நிலவி இருந்த நிலை மாறி வசந்தமானது.
“அம்மாவை இங்கேயே விட்டுவிட்டு போய் விடுவோமா?” என்று தன் மகளிடம் கேட்டாலும் அவன் கடைக்கண் பார்வை அனு மேல் தான் இருந்தது.
“வேண்டாம் வேண்டாம் அம்மா பாவம்…” என்று வாயை பொற்றிக் கொண்டாள் அக்ஷிதா.
அனு முகம் பிரகாசத்தில் மின்ன ஆதியின் தோளில் இருந்த தன் மகளை முத்தமிட்டாள், “ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன்டா என் செல்லகுட்டி… நாம் தான் பஃர்ஸ்ட் போகப் போறோம்.” என்றவள் ஆதிக்கு பழுப்பு காண்பித்துவிட்டு வெளியில் ஓட கயல் வாய்விட்டே சிரித்துவிட்டாள். முன்னர் எப்படி சிறு பிள்ளை போல் சண்டையிடுவாலோ அதே போல் தான் இப்பொழுதும் இருக்கிறாள், என்ன காலத்திற்கு தகுந்தது போல் கொஞ்சம் குறைத்துக் கொண்டாள். 
“அப்பா அதற்குள் நாம் கீழே செடிக்கு தண்ணீர் ஊற்றிவிட்டு வரலாமா? பாட்டி சொன்னார்கள் நாளை ஊற்ற நேரம் இருக்காதாம்.” என்று அவன் தாடையை தன் புறம் திருப்பி கேட்டாள் அவன் செல்லமகள்.
“ம்… ஓகே டா குட்டி…” என்று கிளம்ப அந்நேரம் உள்ளே வந்தார் கயலின் சித்தி. அவரை தவிர அந்த குடும்பத்தில் யாரும் இவர்களுடன் தொடர்பில் இல்லை.
“அப்பா இங்கே பாருங்க… என் பிளான்ட் இவ்ளோ ஹைட்டாயிடுச்சு…” என்று அந்த செடியின் நுனியை பிடித்து கூறினாள் அக்ஷிதா.
“என் செல்லம் டெய்லி தண்ணீர் ஊற்றி பத்திரமா பாத்துகிறால்ல அதான்…” என்று அவளை தூண்டி ஊக்குவித்தான்.
அன்று கயலிடம் ஆதி குளோபல் வார்மிங்கை பற்றி பேசியது அனு மனதில் ஓரமாக பதிந்து கிடந்தது. வேலையில் சேர்ந்த பின் மக்களுக்காக திட்டங்கள் வகுக்கும் போது இது நினைவில் வர புதிதாக அவள் மனதில் உதித்ததே இந்த யோசனை.
அதாவது குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பித்தவுடன் கிடைக்கும் இடத்தில் பள்ளியிலோ அல்லது வீடுகளிலோ அவர்களுக்கென்று ஒரு இடம் கொடுத்து அந்த இடத்தில் அவர்களாகவே ஒரு செடியை நட்டு அதை அவர்கள் பள்ளி முடிக்கும் வரை பாதுகாக்க வேண்டும். சிறிய விதையாகவோ அல்லது மரக் கன்றாகவோ அவர்களால் ஆரம்பிக்கும் இந்த முயற்சி அவர்கள் பன்னிரெண்டாவது படித்து முடிக்கும் போது மரமாக விருட்சமாகி இருக்கும். இதன் மூலம் வெட்டப்படும் மரங்கள் மீண்டும் உயிர் பெரும். சிறு வயதிலிருந்து செய்தால் காலப்போக்கில் அது தினமும் செய்யும் வாடிக்கையாகிவிடும். இதே போல் அனைத்து குழந்தைகளும் நட்டால் நம் பூமியும் குளிர்ந்து, நல்ல காற்றை சுவாசிக்கவும் முடியும். வளர்ந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டால் இப்போதெல்லாம் குடும்பத்தாருடன் கலந்து கூடி பேசுவதே கடினமாகி விடுகிறது இதில் எங்கு மரம் நட்டு அதை வளர்ப்பது… அதனால் இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து இவர்கள் இருக்கும் இடத்திலே போஸ்டிங் வாங்கி வந்துவிட்டாள் அனு.
“அப்பா மோனி இருக்காள்ல அவ… அவ பிளாண்டோட போட்டோ எடுத்து வச்சியிருக்கா… என்னையும் எடுங்க பா… எனக்கும் போட்டோ வேணும்.” என்று அவனை கொஞ்ச அவளை நிற்க வைத்து போட்டோ எடுக்க அனைவரும் கிளம்பி வந்துவிட்டனர்.
“மாமா என்னையும் என் ஸ்வீட்ஹார்டையும்.” என்று ஓடி வந்து கயல் அக்ஷிதாவை தூக்கிக் கொள்ள அவள் தலையை தட்டினாள் அனு.
“என்னடி ஓட்டம்… புது பொண்ணு மாதிரி அடக்கமா இருப்பாயா?” என்று அதட்ட கயலிற்கு வக்காலத்து வாங்கினான் ஆதி.
“புது பொண்ணு என்று சொல்லிவிட்டு எதற்குடி அவள் மேல் கை நீட்டுகிறாய்? நீ போ அவள் வருவாள்.” என்றவன் சற்று கடிந்துவிட்டான் என்றே சொல்லவேண்டும்.
இவர்கள் புகைப்படமெல்லாம் எடுத்துவிட்டு கிளம்ப தன் தாய் முகத்தை கவனித்த அக்ஷிதா ஆதி கழுத்தை கட்டிக்கொண்டு காதில் கிசுகிசுத்தாள்.
“அப்பா… அம்மா கோபமா இருக்காங்க… நீ திட்டியதில் தான் கோபிச்சிகிட்டாங்க… நான் போய் கிஸ் குடுக்கவா?” என்று கேட்க ஆதி அப்போது தான் அனு முகத்தை கவனித்தான். தான் தேவையில்லாமல் அனைவர் முன்னரும் கத்திவிட்டோமோ என்று குற்றஉணச்சி தோன்ற, காரில் ஏறியவன் அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
“என்னடா… டிரைவ் பண்ணாமல் பின்னால் உட்கார்ந்து இருக்கிறாய்?” என்று அவனிடம் திரும்பி கேட்டார் கோபால்.
“நீங்க டிரைவ் பண்ணுங்கள்… எனக்கு முதுகு வலிக்கிறது… நேற்று இரவு நிறைய வேலை…” என்று நெட்டி முறிக்க அனைவரும் நம்பி விட்டனர். அனுவும் பதறியடித்து அவன் புறம் திரும்பினாள்.
“ஏன் என்னிடம் சொல்வில்லை? பாப்பாவை என்னிடம் கொடுங்கள். நீங்கள் நன்றாக சாய்ந்து உட்காருங்கள்.” என்று அக்ஷிதாதை தன் மடியில் அமர்த்திக் கொள்ள மறு நொடியே அவன் விரல்களை தன் ஸ்பரிசத்தில் உணர்ந்தாள். அதில் நெளிந்தவள் அவனை முறைக்க அதற்கு அசராமல் இருப்பதை பார்த்ததும் அவனது நடிப்பை புரிந்து கொள்ள, அவன் கண்களாலே அவளை சமாதனம் செய்தான். அதோடு இல்லாமல் தன் மகளிடம் கண் ஜாடை செய்ய முன்னர் பேசி வைத்தது போல அனு முகத்தை முத்தங்களால் குளிர்வித்தாள்.
…. 
முகூர்த்த நேரம் நெருங்கும் தருவாயில் அக்னி எதிரில் அமர்ந்திருந்தனர் கயலும் கதிரும்.
“இன்றைக்கு நீ அழகாய் இருக்கிறாய்…” என்று கயல் அருகில் அமர்ந்திருந்த கதிர் கிசுகிசுக்க வெட்கத்தில் தலை கவிழ்ந்தாள் கயல்.
“அப்போ நான் அழகாய் இல்லையா சித்தப்பா?” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான். கயல் அவன் நிலையை கண்டு உள்ளே சிரிக்க, அவளுக்கும் எங்கே தனக்கும் இது போல் நேரிடுமோ என்று அமைதி காத்தாள். ஏனென்றால் கேட்பது அக்ஷிதாவாயிற்றே, வெகுளியாய் தான் பார்க்கிற விஷயங்களை அப்படியே வெளியில் சொல்லி விடுவாள். அது போல் பல தடவை ஆதியையும், அனுவையும் தன் வெகுளித்தனத்தால் சங்கடத்தில் நெளிய விட்டிருக்கிறாள்.
“இங்கே கீழே பாருங்க… சித்தி மட்டும் தான் அழகா… ஆனால் அப்பா நான் தான் அழகு என்று சொன்னாங்க…” என்று அவள் உதட்டை பிதுக்க அப்போது தான் தனக்கும் கயலுக்கும் இருக்கும் சிறு இடைவெளியில் புகுந்து உட்கார்ந்து இருக்கும் அக்ஷிதாவை கவனித்தான்.
அவளுக்கு என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் பல்லை காட்டி சிரிக்க அவள் விடுவதாகயில்லை, “நீங்க போனில் சித்திக்கு கிஸ் குடுப்பிங்கள்ல அதே மாதிரி நேரிலும் குடுப்பிங்களா படத்துல வரமாதிரி…” என்று கேட்க இருவரும் நெளிந்தனர்.
‘இவளை எப்படி வீட்டில் வைத்து சமாளிக்கிறார்கள்? யாராவது காப்பாற்றுங்களேன்.’ என்று கதிர் மனதில் புலம்ப அதை புரிந்து கொண்டது போல் அங்கு வந்து சேர்ந்தான் ஆதி.
“மாமா ப்ளீஸ்… அவளை கூட்டிப் போங்கள். மானத்தை வாங்கி விடுவாள் போல.” என்று கயல் மெல்லிய குரலில் கெஞ்ச, தன் மகளின் சேட்டை அறிந்து அமைதியாய் அக்ஷிதாவை தூக்கி வைத்துக் கொண்டான்.
“அப்பா நீ அம்மாகிட்ட அழகா இருக்கனு… சொல்ற மாதிரியே சித்தப்பாவும் சொல்றாரு…”
“அதையெல்லாம் கேட்கக் கூடாது செல்லம்… அம்மா ஒர்க் பண்ணிட்டு இருந்தால் நாம் அறைக் கதவை தட்டிவிட்டு தானே உள்ளே செல்கிறோம் அதே போல் யார் பேசுவதையும் அவர்கள் அனுமதி இல்லாமல் கேட்கக் கூடாது புரிகிறதா?” என்று எடுத்துச் சொன்னவுடன் தலையாட்டி கேட்டுக் கொண்டாள்.
திருமணம் இனிதே முடிய கயலை கண்ணீர் மல்க வழியனுப்பினர்.
“அப்பா சித்தி அழகா இருந்தாங்க… அதே மாதிரி நான் எப்போ ட்ரெஸ் போட்டுகிட்டு பெரிய ஹேர்லாம் வச்சிகிறது?” என்று தன் முடியை இழுத்து அளந்து கேட்டாள்.
“நீ படித்து முடித்து அம்மா மாதிரி பெரிய வேலைக்கு சென்றவுடன்…” என்று அவள் தலைக்கு கிளிப் போட்டுவிட்டு பதில் கூறினான்.
அதே நேரம் உள்ளே வந்தாள் அனு, “அக்ஷி போய் தாத்தாவுடன் தூங்கு. நீ தாத்தாவிடம் இன்றைக்கு அவர்களுடன் தூங்குகிறேன் என்று சொன்னாயாமே?” என்று அவள் சொன்னவுடன் இருவருக்கும் முத்தமிட்டு சமர்த்தாய் வெளியில் ஓடினாள்.
கதவை தாழிட்டு உள்ளே வந்தவள், “இன்றைக்கு கயலை படுத்தி எடுத்துவிட்டாள் போலிருக்கு…”
“ஏன் அப்படி சொல்கிறாய்?”
“போகும் போது இத்தனை வருடங்கள் அவளுக்கு துணையாக நான் இருந்து விட்டேன். அதனால் அவளுக்கு துணை ஏற்பாடு செய் இல்லையென்றால் அவளுடைய வெகுளிக் கேள்வியால் உங்களை துளைத்து எடுத்திடுவாள் என்று கயல் சொன்னாள். இவள் என்ன கேட்டாலோ தெரியவில்லை.” என்றபடியே அவன் மார்பில் முகம் புதைத்தாள் அனு.
“அவள் சொல்வதும் சரி தானே… அவளுக்கு பதில் கூறியே நான் இளைத்து விடுவேன் போலிருக்கு.. ஏடாகூடமாக கேள்வி கேட்கிறாள்…” என்று அவன் சலிக்க அவன் மார்பில் குத்தினாள்.
“என்ன சலித்து கொள்கிறீர்கள்??? அவளுக்கு நீங்கள் சொல்லாமல் வேறு யார் சொல்வது…”
“சலித்து கொள்ளவில்லைடி… சில நேரம் இடம் பொருள் தெரியாமல் பேசுகிறாள் சமாளிக்க கஷ்டமாக இருக்கிறது.”
“இப்போது தான் அவள் எதிரே அனைவரும் நாகரிகமாக தானே நடந்து கொள்கிறோம்… பின்னர் என்ன?” என்றவளின் விரல்கள் அவனோடு சண்டையிட்டன.
“டிவியில் வருவதை பற்றி எல்லாம் ஒன்றுவிடாமல் கேட்கிறாள்… ஹைப்பர் ஆக்டிவாக இருப்பாளோ என்று சந்தேகமாக இருக்கிறது.” என்று வருந்த,
“அவளுக்கென்று விளையாட துணை இருந்தால் எல்லாம் சரியாகிவிடும்.” என்றவள் அவனை தன் வசப்படுத்த அங்கு தன் தாத்தா கூறும் கதைகளில் நோண்டி நோண்டி கேள்வியால் தன் தாத்தாவை திணறடித்துக் கொண்டிருந்தாள் அக்ஷிதா. 

Advertisement