Advertisement

பகுதி – 30
“இப்பொழுது எதற்கு ஆதியையும் குழப்பி விட்டுள்ளாய்? அவனாவது தெளிவாக இருந்தான்.” என்று ஆதி சென்ற பின் ரேகாவிடம் வினவினார் கோபால்.
“நான் என்ன குழப்பினேன்? எதார்த்தத்தை கூறினேன்.” என்று அதற்கு அசால்ட்டாக பதில் தந்தார் ரேகா.
“நீ இப்பொழுது நடிக்காதே… எனக்கு தெரியாதா உன்னை பற்றி. நீ வேண்டுமென்றே தான் அவனை இப்படி குழப்பி விட்டுள்ளாய்.” என்றார் தன் மனைவியை படித்தவராய்.
“வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? ஒருவரை ஒருவர் பிரிந்திருப்பது எவ்வளவு கடினம் என்று என்னைத் தவிர வேறு யாருக்கு நன்றாகத் தெரியும். அதே நிலை அவனுக்கும் வரக்கூடாது. உங்களுக்கு தெரியாததா என்ன… நாம் எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறோம். விஷேச நாட்களில் கூட சந்தோசமாக இருக்கமுடியாது. நீங்கள் ஒரு காட்டிலும் நான் ஒரு இடத்திலும்; ஆசையாக சேர்ந்து நேரம் செலவழிக்க கூட முடியாது. ஏன் எவ்வளவு நாள் ஆதி உங்களை மிஸ் பண்ணி இருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன? அதே நிலை நம் பிள்ளைக்கும் வேண்டாம். பணம், பதவி, பகட்டு எல்லாம் ஒரு கண்துடைப்பு தான். குடும்பம் தான் ஒருவருடைய ஆணிவேர். நினைத்த நேரத்தில் நம் துயரோ, மகிழ்ச்சியோ, சந்தேகமோ, சிந்தனையோ எதுவாயினும் குடும்பத்துடன் பகிர்ந்துக் கொள்ள முடியாமல் பணம், புகழ் மட்டும் இருந்து என்ன பயன்? அவனோ அவன் பிள்ளைகளோ யாரையும் மிஸ் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன், இது தவறா?” என்றார் உணர்ச்சி பொங்க. எங்கோ ஆரம்பித்த இந்த பேச்சு கடைசியில் ரேகா இத்தனை வருடங்களாய் தன் மனதில்  போட்டு வருத்தியதை ஆதியை சாக்காக வைத்து வெளியேற்றிவிட்டார்.
“ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்…” என்றவர் ரேகாவை அணைத்து கொள்ள, தான் நினைத்ததை அவள் வெளிப்படுத்திவிட்டாள் என்ற பெருமிதம் மனதில் வேரூன்றியது.
வீட்டிற்கு வந்த ஆதி காலிங் பெல் அடிக்க தேவதையாய் வந்து  கதவை திறந்தாள் அனு.
“டார்லிங்…” என்ற கூவலோடு அம்மாவிடம் பேசிய உவகையில் அவள் மேல் சற்று சரிய அவன் மார்பில் கை வைத்து தடுத்தாள் அனு.
என்ன என்பது போல் பார்வையால் விழிக்க, அவள் கயலை காட்ட இருவரும் வார்த்தை இல்லா மொழியிலே பேசிக் கொண்டனர்.
“என்ன விஷேசம் இன்று? புடவை கட்டி, பூ வைத்து எக்ஸ்ட்ரா டச்சப் செய்து இருக்கிறாய்?” என்று உள்ளே நுழைந்தவுடன் கேட்டான்.
“கோவிலுக்குச் சென்றிருந்தேன்.” என்றவள் அவன் பையை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்று வைத்தாள்.
அதற்குள் கயல் மேல் தன் பார்வையை ஓட்டியவன் அவள் அருகில் வந்து அமர்ந்துக்கொண்டான், “ஓய்… என்ன புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு எங்களை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?”
“இவ்வளவு நேரம் ஃபியூஸ் போன பல்பாய் இருந்தவள் உங்களை கண்டதும் தெளசண்ட் வாட் பல்பாக மின்னுகிறாள் அதைத்தான் கவனித்துக் கொண்டிருந்தேன்.” என்று பதிலுறைத்தவளை போலியாய் முறைத்துவிட்டு தன் அறைக்குச் செல்ல அங்கு கட்டில் பக்கத்தில் அமைதியாய் நின்றிருந்தாள் அனு.
அவளை பின்னிருந்து அணைத்தவன், “சாப்பிட்டாயா? உடம்பெல்லாம் சரியாகிவிட்டதா?” என்று கேட்க ம்… போட்டவள் அவன் புறம் திரும்பாமல் எந்தவொரு அசைவுமின்றி நிற்க குனிந்து அவள் கழுத்தில் முகம் புதைத்தான் அவள் மணாளன்.
அவன் இதழ் அவள் மேனியை வருட துள்ளிக் குதித்து திமிறியவள், “நான் உங்களிடம் பேச வேண்டும்.” என்றாள் தன் மூச்சை சமன் செய்துகொண்டு.
“நானும் தான். அதற்கு முன் ஒரு குளியல் போட்டு வருகிறேன். இங்கேயே இரு.” என்றவன் அவளை விட்டு விலகி வார்டோபிலிருந்து மாற்றுடைகளை எடுத்துக்கொண்டு குளியறைக்குள் புகுந்தான்.
அதற்குள் மெத்தையை சரி செய்தவள் வீட்டை பூட்டிவிட்டு மீண்டும் அறைக்குள் வர ஆதியும் வெளியில் வந்தான். அவளை பார்த்ததும் டவலை அவள் மேல் போட்டு விட்டு கட்டிலில் அமர்ந்தான்.
“ம்ச்… என்ன இது… இதுவே வேலையாகி போயிற்று உங்களுக்கு…” என்று முகம் சுளித்தவள் அவனை நோக்கி அதே டவலை வீசினாள்.
தன் முகத்தில் விழுந்ததை சற்றும் எதிர்பாராதவன் ஒரு  நொடி கண்களை மூடித்  திறந்தவன் மீண்டும் அவள் மேல் வீசினான். அவர்கள் பேச நினைத்தது எல்லாம்  நினைவை விட்டு அகன்று சிறுபிள்ளையாய் மாறி ஒருவர் மேல் ஒருவர் அந்த துவாலையை தூக்கிப்போட்டு விளையாடினர்.
சுளீரென்று தன் மேல் பட்ட துணியை மீண்டும் அவன் மேல் கோபத்தில் விட்டு எரிய, இம்முறை அவன் தூக்கி போடும் போது குனிந்து கொண்டாள். அந்த நேரம் பார்த்து கயல் உள்ளே வர அந்த டவல் கயல் மேல் விழுந்தது, “அய்யோ… இது என்ன புது வித வரவேற்பா… மாமா…” என்று சிணுங்கினாள் அவள்.
அதிர்ந்தவன் கயல் அருகில் வந்து, “உனக்கு ஒன்றும் இல்லையே… உன் அக்காவிற்கு சிறு பிள்ளை என்று நினைப்பு.” என்று அனுவை சீண்டினான்.
“ம்ம்… நான் தான் அவள் மேல் தூக்கி போட்டேன் பார்…” என்று கழுத்தை நொடித்தாள் அனு.
“முதலில் நீ தானே தூக்கிப்போட்டாய்…” என்று ஆதி தப்பிக்க, “ஆங்… நான் என்ன செய்தேன். நீங்கள் தான் என் மேல் முதலில் போட்டீர்கள்.” என்றாள் அவள் விவாதத்திற்கு தயாராய்.
“நான் மடிக்கச் சொல்லி உன்னிடம் கொடுத்தேன்.” என்றான் அவன் அப்பாவியாய்.
“நடிக்காதீர்கள்… வேண்டுமென்றே என் மேல் போட்டு விட்டு இப்பொழுது ஒன்றும் தெரியாதது போல் சாதிக்கிறீர்கள்.” என்று சண்டைக்கோழியாய் மாறினாள்.
“இது ஒரு சிறிய விஷயம் இதற்கு போய் நான் ஏன் மெனக்கெடப் போகிறேன்.” என்றான் அவன் தோள்களை குலுக்கி.
“அப்பொழுது நான் பொய் சொல்கிறேனா?” என்று கோபமாய் அவன் அருகில் வர ஆதி அதை எதிர்பதற்குள் கயல் உட்புகுந்தாள்.
அவர்கள் இருவர் நடுவிலும் இடைபுகுந்தவள் அனு புறம் திரும்பி, “போதும்… ஸ்டாப்… அக்கா என்ன சிறு பிள்ளை போல் நடந்து கொள்கிறாய்?” 
“பார்… உன் தங்கையே உண்மையை ஒப்புக் கொண்டாள்.” என்று ஆதி குறுக்கிட்டான். 
“மாமா… நீங்களுமா…” 
“இப்போ புரிகிறதா…” என்று அனு மீண்டும் ஆரம்பிக்க கயல் கும்பிடு போடாத குறையாய் தான் வந்த விஷயத்தை ஒப்புவித்தாள்.
“மாடியில் என் யூனிபார்ம் துவைத்துப் போட்டிருக்கிறேன். காலையில் சீக்கிரமே எடுத்து விடு, நாளை அதைத் தான் போட்டுக் கொள்ளவேண்டும்.” என்று சொல்லிவிட்டு தன் அக்காவின் பதிலுக்கு காத்திராமல் வெளியேறினாள். ஏனெனில் அவளுக்குத் தெரியும் இன்னும் சற்று நேரம் அங்கே இருந்தால் தனக்கு திட்டுவிழுமென்று. நேற்றே அவளிடம் துவைக்க வேண்டுமென்றால் முன்னரே சொல் என்று கூறி இருந்தாள் அனு.
இங்கு அனு அவனிடம் பழிப்பு காண்பித்துவிட்டு நகர அவளை பிடித்து தன் மேல் இழுத்தான்.
“விடுங்கள்… நான் தான் பொய் சொல்கிறேனே.” என்று கூறி அவன் பிடியிலிருந்து விலக முயன்றாள்.
“இப்பொழுது யார் குழந்தை போல் நடந்துகொள்வது?” என்றவன் தன் விரல்களால் அவள் முகத்தில் கோலமிட அவன் விரல்களை பிடித்து நிறுத்தியவள், “இதெல்லாம் நாட் அலவ்ட்… முதலில் உங்களிடம் பேசவேண்டும்.” என்று கூற அதற்கும் பதில் தயாராக வைத்திருந்தான்.
“உன் மாமியார் கட்டளையை மீறவா முடியும்?” என்றவன் விரல்கள் முன்னர் செய்த வேலையை அவன் இதழ்கள் தற்போது செய்தன.
“அத்தையா??” என்று திகைத்தவள் தன் கைகளால் அடுத்த முத்தத்தை பதிக்க இருந்த அவன் இதழ்களை மூடினாள்.
“அத்தை என்ன சொன்னார்கள்? கோபமாக இருக்கிறாரா?”
“அதெல்லாம் இல்லை… சொல்லப் போனால் உன் அத்தை தான் என் பங்கையும் சேர்த்து என் மருமகளை கொஞ்சு டா என்றார்… போதுமா?” என்றவன் மீண்டும் குனிய அவனிடமிருந்து விலகினாள்.
“நிஜமாகவா அத்தைக்கு என் மேல் கோபம் இல்லையா?” என்று கேட்டாள் விழிகளை விரித்து.
“ஆமாம்… இன்னும் கொஞ்ச நாள் தான் எல்லாம் சரியாகிவிடும்.” என்றவன் மீண்டும் அவளை இழுக்க முற்பட அவள் தள்ளி நின்றாள்.
“இன்னும் என்ன?” என்றான் சலிப்புடன். ஏற்கனவே ரேகா குழப்பிவிட்டதில் அதற்கு பதில் தேடியே கலைத்திருந்தான்.
மனதில் ஏதோ நினைத்தவளாய் அவனை நெருங்கியவள் அவன் கழுத்தில் மாலையிட, அவன் சந்தேகமாய் பார்த்தான்.
“நான் ஒன்று கேட்டால் மறைக்காமல் உண்மையைச் சொல்வீர்களா?” என்று கேட்டவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.
ம்… கொட்டியவன் அவள் என்ன செய்கிறாள் என்று பொறுமையாக பார்க்க அவன் முகத்தில் தன் இதழை படரவிட்டாள். ஒன்றும் புரியாமல் நின்றவன் சற்று நேரத்தில் அவளுடைய செயலுக்கு ஆவலாய் தன் முகத்தை அவளுக்கு வாட்டமாய் நீட்டினான்.
“என்னை பிடிக்காமல் போயிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்றாள் தன் செயல்களை நிறுத்தாது. அன்று ரேகா கூறியதில் அதிகமாக அவள் மனதை வருத்திய விஷயம் இது தான். அவனுக்கு பிடித்துவிட்டதால் தன்னை காதலோடு தாங்குகிறான் இல்லையென்றால் என்னவாகி இருக்கும் என்ற ஆவல்  நேற்றிலிருத்தே அவளை படுத்தியது.
“ம்… டிவர்ஸ் செய்திருப்பேன்.” என்று சடாரென யோசியாமல் கூற அவள் மார்பிலே ஒரு குத்து விட்டாள். அதில் தெளிந்தவன் தான் கூறியதை நினைவு படுத்தி அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திருத்திருவென விழித்தான்.
“அத்தை சொன்னது சரி தான் ஏதோ என்னை பிடித்து போய்விட்டது இல்லையென்றால்…” என்று அவள் பிதற்ற இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று தோன்றியது அவனுக்கு.
“ஏய்… அதான் அப்படி நடக்கவில்லையே, பின்னர் ஏன் தேவை இல்லாமல் உளருகிறாய். நேற்றிலிருந்து லூசு மாதிரி இதைத் தான் யோசித்தாயா? நான் கூட ஏதோவென்று பயந்து அம்மாவிடம் சண்டை வேறு போட  சென்று விட்டேன்.” என்று தலையில் அடித்துக் கொண்டான்.
“ம்ச்… நீங்கள் வேறு ஏன் தேவையில்லாமல் பிரச்சனையை இழுத்து விடுகிறீர்கள்? அத்தை சொன்ன மற்ற விஷயங்களுக்கு தெளிவாக முடிவெடுக்க முடியவில்லை. அதை தான் உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.” என்றவள் சோர்ந்து கட்டிலில் அமர்ந்தாள்.
“என்னிடமும் சொன்னார்கள்… இப்பொழுது தானே படிக்க ஆரம்பித்திருக்கிறாய், நமக்கு நேரம் இருக்கிறது பொறுமையாக யோசிப்போம்.” என்று அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
அவன் தோளில் சாய்ந்தவள், “பேசாமல் இப்பொழுதே நாம்…” என்று ஆரம்பிக்க ஏதோ தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டது.
“நான் என்னவென்று பார்த்து வருகிறேன்.” என்று அவள் வேகமாக வெளியேற அவளை பின் தொடர்ந்து சென்றவன் வெளியில் மழை பெய்வதை பார்த்து ஆச்சர்யத்துடன் அனுவை தேட அவளோ வேகமாக மாடிக்கு ஏறினாள்.
“ஏய்… பார்த்து… இப்போது எதற்கு அங்கே போகிறாய்?” என்று அவனும் பின் தொடர்ந்து கீழே நின்றான்.
போன வேகத்தில் கயல் துணியை எடுத்து வந்தவள் எதிர்பாராமல் படிகளில் வழுக்கி விழ வேகமாக அவளிடம் ஓடினான் ஆதி.
“பார்த்து வரமாட்டாயா?” என்று அதட்டி அவள் கால்களை ஆராய்ந்தான்.
நல்ல வேலையாக கடைசி இரண்டு படிகளில் விழுந்ததால் பெரிதாக அடியில்லை.
ஆதி தூக்கப்போவதை பார்த்து, “நானே வருகிறேன்.” என்று மெதுவாக எழுந்திருக்க லேசாக பின்னங்காலில் வலித்தது.
அவள் முகம் சுருங்குவதை கவனித்தவன் அவளை லாவகமாக கரங்களில் ஏந்தி அறைக்கு தூக்கிச் சென்றான்.
“அப்படி என்ன அவசரம்? எப்படியும் நனைந்தாகிற்று. பொறுமையாக வரவேண்டியது தானே?” என்று அவள் வலிக்கு ஸ்பிரே அடித்துக் கொண்டே அதட்டினான்.
“நான் என்ன வேண்டுமென்றா விழுந்தேன்?” என்றாள் அவளும் தன் பங்கிற்கு.
“மழை பெய்தால் வழுக்கும் என்று தெரியாதா… சிறு பிள்ளை போல் காரணம் சொல்லிக் கொண்டிருக்கிறாய்.” என்றான் அதே அதட்டுதலுடன்.
“இப்பொழுது எதற்கு இப்படி அதட்டுகிறீர்கள்? நான் தெரியாமல் தானே விழுந்தேன். அதுவும் கீழ் படியில் தான்.” என்று தன் கால்களை உள்ளிழுத்துக் கொண்டாள்.
“மேலிருந்து விழுந்திருந்தால் என்னவாகி இருக்கும்? அப்படி என்ன அவசரம்… இன்றும் மட்டும் அல்ல அன்று கூட இப்படி தான் உன்னை கூப்பிட்டேன் என்று வேகமாக ஓடிவருகிறாய் விழுந்தால் தெரியும்.” 
“அதான் நீங்கள் இருக்கிறீர்களே… பார்த்துக் கொள்ள மாட்டீர்களா?” என்று அவன் அதட்டலை திசைத் திருப்பினாள்.
“நீ என்ன சினிமா வசனமெல்லாம் விட்டுக் கொண்டிருக்கிறாய்? இன்று போல் உன்னை பிடிக்க முடியாமல் போய் விட்டால்? சமயோசிதமாக யோசி, நான் எப்போதும் உன்னுடன் இருக்க முடியாது அப்போது ஏதும் நடந்தால் என்ன செய்வாய்?” 
“ஏன் இப்படி பேசுகிறீர்கள். என்னை விட்டு எங்கே போய்விடுவீர்கள்? அன்றும் இப்படி தான் அபசகுணமாக பேசினீர்கள்.” என்றவள் குரலில் ஒரு வித தடுமாற்றம் தெரிய அவள் கையை தனக்குள் இறுக பற்றிக் கொண்டான்.
“இங்கே பார்… என்னால் முடிந்த வரை உன்னோடு தான் இருப்பேன். பின்னாளில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நான் வேறு இடத்தில் வேலை செய்யலாம், நீ வேறு இடத்தில்… என்று கண்டிப்பாக நமக்கு பிரிவு என்பது நடந்தேறும்.” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பேசிய அவன் இதழ்களை பட்டென்று அடித்தாள். 
“என்றும் உங்களை விட்டு நான் பிரியமாட்டேன்…” என்றவள் அவன் கன்னத்தில் இதழை ஒற்றி எடுத்தாள். சற்று எக்கி அவன் காதுகளில், “லவ் யூ.” என்று முணுமுணுக்க அவன் பதிலுக்கு ம் போட்டு நன்றாக வாங்கி கட்டிக்கொண்டான்.
“என்ன ம்ம்?” என்றாள் புருவத்தை உயர்த்தி.
அவள் கேட்க விரும்புவதை உணர்ந்தவன் தன் விஷமப் புன்னகையை கட்டுப்படுத்த அதை பார்த்தவளுக்கு கோபம் ஜிவ்வென்று ஏறியது.
“பதில் சொல்லத் தெரியாதா உங்களுக்கு… வேண்டுமென்றே இப்படிச் செய்கிறீர்கள்…” என்றவள் கைகள் அவனை அடிக்க, தன்னால் அவனை காதலிக்க வைக்க முடியவில்லை என்ற கோபம் மற்றும் ஆற்றாமையே கண்ணீராய் பெருக்கெடுத்தது.
அவளை தடுக்காமல் அவள் அவசரத்தை ரசித்தவன் அமைதி காக்க அனு மனதில் அது வடுவாய் மாறியது.
“நான் அழுவது உங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா?” என்று கேட்டவள் அவனை தள்ளி விட்டு திரும்பி படுத்துக்கொண்டாள்.

Advertisement