Advertisement

பகுதி – 29
“அவர் எங்கே அண்ணா?” என்று கேட்டபடியே முரளி முன் வந்து நின்றாள் அனு.
“அவன் ப்ராஜெக்ட்டில் மாட்டிக் கொண்டான். முக்கியமான வேலை அதனால் தான் நான் வந்தேன். வா உன்னை வீட்டில் ட்ராப் செய்கிறேன்.” என்று அவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய, மனமே இல்லாமல் முரளியுடன் வீடு வந்து சேர்ந்தாள்.
ஆதியை பற்றி வெகு நேரம் யோசித்து கேட்கலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்தி முடிவுற்கு வந்தவள், “வேலை முடிய அதிக நேரம் எடுக்குமா அண்ணா…” என்று முரளியிடம் கேட்டாள்.
“அப்படித் தான் நினைக்கிறேன்.” என்று பதிலுறைத்து விட்டு அவ்விடம் அகன்றான்.
அதைக் கேட்டதும் நேற்று கிடைத்த நேரத்தை வீண் செய்துவிட்டோம் என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டாள்.
அதே நேரம் மற்றொரு இடத்தில்,
“நேற்று என்ன நடந்தது?” என்ற ஆதியின் குரல் நான்கு சுவர்களுக்குள் ஒலித்தது.
“என்ன நடந்தது? பெரிதாக ஒன்றும் நடக்கவில்லையே.” என்று பதிலும் வரிசையில் வந்தது.
“அம்மா… நேற்று அங்கு வந்த போது ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. என்ன அது?” என்றான் அதிகாரமாய்.
“என்னடா கல்யாணம் ஆனதும் வீரம் வந்துவிட்டதா? நீ எப்படி அவளுடன் வாழ வேண்டும் என்று தீர்க்கமாக இருக்கிறாயோ அதில் பாதியாவது அவள் இருக்கிறாளா என்று கேட்டேன். அதற்கென்னவோ இந்த குதி குதிக்கிறாய்?” என்றார் ரேகாவும் பதிலுக்கு கோபமாய்.
தாயின் பதிலைக் கேட்டதும் இதற்காகவா அவள் குழம்பி தன்னையும் தவிர்கிறாள் என்று புரிந்ததும் சப்பென்று ஆனது.
“என்னடா பேச்சையே காணோம்? நீ யோசிப்பதை பார்த்தால் என்னை வில்லி ரெஞ்சிற்கு சித்தரித்து ஏமார்ந்து விட்டாயோ?”
“அம்மா…” என்று திகைப்புடன் ஏறிட்டான் ஆதி. அவர் சொல்வது என்னவோ உண்மை தான். அனு நடந்து கொண்ட விதத்தை பார்த்தவனுக்கு தன் தாய் தான் அவளிடம் ஏதும் ஏடாகூடமாக சொல்லி இருக்க வேண்டும் என்று நினைத்து அதை கேட்கவே வந்துவிட்டான்.
“கரெக்ட் தானே… உன் மேல் எனக்கு இன்னும் கோபம் இருக்கிறது. ஆனால் என்ன செய்வது உனக்குத் தான் அவளை பிடித்து விட்டது. இனியும் உன்னை கட்டாயப்படுத்த எனக்கு விருப்பம் இல்லை. உன்னையும் இங்கேயே அழைத்து வந்து விடலாம் என்ற முடிவுக்கும் வந்து விட்டேன். அதற்கு முன் உன் அன்பிற்கு அவள் ஏற்றவளா என்று எனக்கு தெரிய வேண்டாமா???”
“அவளிடம் பேசிய பின் உங்கள் சந்தேகம் தீர்ந்து விட்டதா.” என்று ஆவலோடு மறுநொடியே வினவினான்.
“நான் எதிர்பார்த்த பதில் அவளிடமிருந்து கிடைக்கவில்லை.” என்று ரேகா முகத்தை திருப்பிக் கொண்டார்.
“அவளே சின்னப் பெண். நீ நன்றாக அவளைக் குழப்பி விட்டிருப்பாய். கொஞ்சம் அவகாசம் கொடு அவளுக்கு.” என்று கோபால் தன் மருமகளுக்கு வக்காலத்து வாங்கினார்.
“அப்பா சொல்வதும் சரிதான். அவள் நன்றாக குழம்பிப்  போய் இருக்கிறாள். ஆனால் நீங்கள் எதிர்பார்க்கும் அத்தனையும் அவளிடம் இருக்கிறது. சில விஷயங்களில் அனுபவம் போதவில்லை என்றாலும் பாசம் காட்டுவதில் எந்த குறையும் வைக்கமாட்டாள்.” என்று தன் மனைவிக்கு தந்தையுடன் சேர்ந்து வக்கீல் வேலை செய்ய, ரேகா இருவரையும் முறைத்தபடி நின்றார்.
“அதெல்லாம் சரி… நீ அவளை படிக்க வைக்கிறாயாமே? அதுவும் அம்மணிக்கு கலெக்டருக்கு படிக்க ஆசையாம்!… அதை அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து நிறைவேற்ற போகிறீர்களாமே?” புருவம் உயர்த்தி வினவினார்.
அனுவிடம் பேசியதன் மூலம் அவளுடைய கனவை தெரிந்து கொண்ட கோபால் தானும் அவளுக்கு தேர்வுக்கான நுணுக்கங்கள் மற்றும் சில அவசியமான விஷயங்களை கற்று தருகிறேன் என்று உறுதி அளித்துள்ளார். அதோடு நில்லாமல் அவளுக்கான குறிப்பு எடுக்கும் பணியையும் தொடங்கி விட்டார். அவள் கடைசி வருடம் படுக்கும் போதே பரிட்சைக்கு தயாராக தன்னால் முடிந்தவற்றை செய்துவருகிறார். இதில் சுயநலம் ஒன்றும் அடங்கி இருக்கிறது. நாட்டிற்கு நல்ல அதிகாரியை உருவாக்குவதோடு அவள் கனவு நிறைவேறினால் தான் தன் மகன் நிம்மித்தியடைந்து அவனெக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்வான் என்பதும் அவருக்கு நன்றாகவேத் தெரியும்.
“அதில் என்ன தவறு இருக்கிறது?” என்றான் ஆதி அவன் அம்மா சொல்ல வருவது புரியாமல்.
“உனக்கு புரிகிறதா இல்லை புரியாத மாதிரி நடிக்கிறாயா என்று தெரியவில்லை. சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதுவது சுலபம் கிடையாது. அதற்கு நிறைய உழைக்க வேண்டும். அதில் எப்படி உன்னுடன் இருக்க நேரம் கிடைக்கும். அப்படியே எழுதி தேர்வாகி விட்டாள் என்றே வைத்துக்கொள், அதற்பின் வரும் ட்ரைனிங், போஸ்டிங் பற்றியெல்லாம் யோசித்தாயா? அவள் காலேஜ் முடித்து, பரிட்சை எழுதி, ட்ரைனிங் முடித்து வரவே ஆறு வருடங்கள் எடுக்கும், அதன் பின் போஸ்டிங் போடுவார்கள். இங்கேயே கிடைத்து விட்டால் பரவாயில்லை, வேறு எங்கும் கிடைத்தால் என்ன செய்வாய்? நீயும் அவளுடனே சென்று விடுவாயா? அதுவும் சில நேரங்களில் முடியாது. நீ சாப்ட்வேரில் வேலை செய்கிறாய், அவளுக்கு போஸ்டிங் கிடைக்கும் இடத்தில் ஐ.டி கம்பெனி இல்லை என்றால் என்ன செய்வாய்? குழந்தைகள் பிறந்த பின் எப்படி வளர்ப்பீர்கள், உன்னோடு ஒரு மாதம், அவளோடு ஒரு மாதம் என்று குழந்தைகளை அலைக்கழிப்பாயா?” என்றவர் தன் மனதிலிருந்த அத்தனையும் கொட்டிய பின் தன் எதிரில் இருந்தவர்களை பார்க்க அவர்கள் இருவரும் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தனர்.
“உன்னை பார்க்கும் போதே தெரிகிறது நீ இதையெல்லாம் யோசிக்கவில்லையென்று. நிதானமாக யோசி, அவள் கனவை நனவாக்கும் உன் எண்ணம் உயர்ந்தது தான் ஆனால் அதற்கு நீ கொடுக்கப்போகும் விலை கொஞ்சம் பெரியது.” என்று ரேகா கூற ஆதி பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தான்.
என்ன இது அனுவை தான் குழப்பிவிட்டார் என்று பார்த்தால் என்னையும் சேர்த்து அல்லவா குழப்புகிறார். அவர் சொல்வதும் யோசிக்க வேண்டியதாகத் தான் உள்ளது, என்று நினைத்தவதன் அந்த உரையாடலை அதோடு நிறுத்தாமல் மேலும் தொடர்ந்தான்.
“நீங்கள் சொல்வதை யோசிக்கிறேன் ஆனால் அதற்கும் இப்பொழுது எங்களை ஏற்றுக்கொள்ளாததற்கும் என்ன சம்பந்தம்?” 
“எல்லாவற்றையும் என்னிடமே கேட்காதே. உனக்கு பதில் சொல்லியே என் வாய் வலிக்கிறது.” என்றவர் அறையை விட்டு வெளியேற ஆதி அவர் கை பற்றி நிறுத்தினான்.
“ரே டார்லிங் ப்ளீஸ்… இன்னும் எவ்வளவு நாள் நாம் இப்படி தனித்தனியாக இருப்பது. கொஞ்சம் இறங்கி வாயேன்.” என்று அவர் கழுத்தோடு அணைத்து செல்லம் கொஞ்சினான்.
அவன் கையை தட்டி விட்ட ரேகா கண்ணீர் மல்க அவனை நோக்கி, “இப்படிக் கூப்பிட உனக்கு இவ்வளவு நாள் தேவைப்பட்டதா? நான் தான் கோபத்தில் உன்னிடம் பேசவில்லையென்றால் நீ அப்படியே விட்டுவிடுவாயா? என்னை ஏதோ சீரியலில் வர வில்லி ரெஞ்சிற்கு லுக் விடுகிறாய். நானும் நீ எவ்வளவு நாள் என்னிடம் ஒழுங்காக பேசாமல் இருக்கிறாய் என்று பார்த்தேன். நான் அங்கு வரும் வரை உனக்கு என் நியாபகம் வரவில்லை அப்படித் தானே. இன்றும் நீ எனக்காக வரவில்லை உன் பெண்டாட்டிக்காக வந்திருக்கிறாய்.” என்றவர் தன் ஆதங்கத்தை கொட்டி அதற்கு தோதாய் கண்ணில் வழியும் நீரை துடைத்துக் கொண்டார்.
இதை கேட்டுக் கொண்டிருந்த மற்ற இருவரும் திகைத்து நின்றனர். இன்று வரை வீம்பாய் பேசாமல் இருந்தது அவள் தானே பின்னர் ஏன் இவள் வருந்துகிறாள் என்று யோசித்த பின்னரே இருவருக்கும் உண்மை உரைத்தது. ஆதிக்கு திருமணம் ஆன நாளிலிருந்து ரேகாவிடம் இவர்கள் இருவரும் பேசியது அனுவை ஏற்றுக்கொள் என்பது மட்டும் தான். அதை மீறி வேறு ஏதும் பேசியதில்லை, அவர் ஏன் இந்த திருமணத்தை ஒத்துக் கொள்ளவில்லை என்றுக் கூட கேட்டதில்லை. திருமணத்தன்று அவர் பேசிய வார்த்தைகளை வைத்து அவர்களாவே ஏற்றத்தாழ்வு பார்க்கிறார் என்ற காரணத்தை பிடித்துக்கொண்டனர். அதோடு மட்டுமில்லாமல் அவர் மனதில் என்ன ஓடுகிறது என்பதையும் கணிக்கத் தவறிவிட்டார் கோபால். நடந்தது நடந்துவிட்டது இனி நடக்கப்போவதையாவது சரி செய்வோம் என்று இருவரும் முடிவெடுக்க ஆதியும், கோபாலும் ஒரு சேர ரேகாவை அணைத்தனர்.
“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ரேகா… உன் வீம்பு கொஞ்சமாவது உன் மகனுக்கும் இருக்குமல்லவா… அதான் நீ கோபித்துக் கொண்டதும் அவனும் பதிலுக்கு உன்னிடம் சற்று விலகி இருந்துவிட்டான். போனது போகட்டும் இனியாவது நீங்கள் இரண்டு பேரும் ஈகோவை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள். என்னால் முடியலடா சாமி… உன்னிடம் இவனை பார்க்கப் போகிறேன் என்று சொன்னால் நீ ஒரு புறம் முகத்தை தூக்கி வைத்துக் கொள்வாய், இவனிடம் பேசினால் பாதி நேரம் அம்மா எப்போது மனம் மாறவாள் என்று பேசியே கொள்வான். ஆக மொத்தம் என்னை ஒரு வழி ஆக்கிவிட்டீர்கள்.” என்று கோபால் மகிழ்ச்சியாய் சலித்துக் கொண்டார்.
அதை காதில் வாங்காதது போல் ஆதி ரேகாவிடம் திரும்பினான்.
“சாரி ரே டார்லிங்…”
“போடா… போய் உன் பெண்டாட்டியை கொஞ்சு.” என்று பொய்யாக கோபித்துக் கொள்ள அந்த இடத்தில் முன்னர் இருந்த இறுக்கம் தளர்ந்து இணக்கம் உருவானது.
“ரே டார்லிங்… இன்றைக்கு உன் கையால் தான் டின்னர். எவ்வளவு நாள் ஆயிற்று உன் கையால் சாப்பிட்டு.” என்று ஆதி அசடு வழிய ரேகா மனம் குளிர்ந்தது.
“அவள் உனக்கு பிடித்ததெல்லாம் செய்துத் தருகிறாளா இல்லை உன்னை காய போடுகிறாளா? எப்படி இளைத்து விட்டாய்…” என்று ரேகா அவன் கையை பிடித்து டைனிங் ரூமிற்கு சென்றார் ரேகா.
“ஏய்… உனக்கு கண்ணாடி போட வேண்டுமா… அவன் ஒரு சுத்து பெருத்து நல்லா வெயிட் போட்டு இருக்கான்.” என்று கோபால் கத்தும் சத்தம் அவர்கள் இருவர் காதுகளையும் எட்டவில்லை.
“ரே டார்லிங் ஒரு பைவ் மினிட்ஸ், அவளுக்கு போன் செய்து சொல்லிடறேன்.” என்று தன் செல்போனை எடுக்க ரேகா அதை பிடுங்கி தள்ளி வைத்தாள்.
“நீயே வெகு நாட்கள் கழித்து இன்று தான் இங்கு வந்திருக்கிறாய். கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தால் ஒன்றும் குறைந்து விடாது.” என்றவர் உள்ளே போக ஆதி தன் தந்தையிடம் திரும்பி ஜாடை செய்தான்.
அதை புரிந்து கொண்டவர் அனுவிற்கு கால் செய்து விஷயத்தை எடுத்துரைக்க அவனிடம் இன்றே பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தவளுக்கு ஏமாற்றமே தங்கியது.
“அக்கா ஏதும் பிரச்சனையா? ஒரு மாதிரியாக இருக்கிறாய்?” என்று கயல் தன் படிப்பை ஒதுக்கி வைத்து விட்டு கேட்க ஒன்றும் இல்லை என்று சமாளித்து விட்டாள். ஆனால் வரப்போகும் இடர்களை எப்படி எதிர்கொண்டு சமாளிப்பாள் என்பதற்கு விடை அவளே!

Advertisement