Advertisement

பகுதி – 28
“அத்தை…” தான் அழைப்பது ரேகாவிற்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்பதை உணர்ந்து மீண்டும் அழைத்தாள்.
“உனக்கு என்ன வேண்டும்?” என்று ரேகா மொட்டையாக கேட்க அனுவிற்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன… என்ன கேட்கிறீர்கள் அத்தை? எனக்கு புரியவில்லை.” என்று பவ்யமாக வெளிவந்தது அனுவின் கேள்வி.
“என்னால் மரியாதையை விட்டெல்லாம் உன்னை என் வீட்டு மருமகளாய் ஏற்க முடியாது. ஊரில் உள்ளவர்கள் எல்லோர்க்கும் நீ அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண், இப்படி இருக்கும் போது நீயே சொல் நான் எப்படி தலை நிமிர்ந்து உன்னை என் வீட்டு மருமகளாக ஏற்றுக்கொள்வது? எங்களுக்கென்று ஒரு அந்தஸ்து இருக்கிறது, அதை கெடுக்க நான் விரும்பவில்லை. இதற்கான தீர்வை நான் உன்னிடமே விடுகிறேன். பின்னாளில் உங்களை பிரித்த பாவம் எனக்கெதற்கு… அப்படியே உன்னை மருமகளாக ஏற்றுக்கொண்டு என் வீட்டிற்கு அழைத்து சென்றாலும் உன்னை தான் அதிகம் தூற்றும் இவ்வுலகம்.” என்றவர் முன்னுக்கு பின் முரணாக பேசி அவருடைய விருப்பத்தை கணிக்க முடியாமல் திணறடித்தார்.
அவர் பேச பேச அனுவின் மனம் பாரமானது. என்ன செய்வது, என்ன சொல்வது ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. வசதி குறைந்த அனைவருக்கும் கீழ் இருக்கும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தது அவள் தவறா இல்லை எதிர்பாராமல் ஆதியின் கரம் பற்றியது தான் தவறா? அப்படியே இது இரண்டும் தவறென்றாலும் இதில் இவள் பங்கு என்ன இருக்கிறது? அன்று மட்டும் ஆதி குறுக்கிடாமல் இருந்திருந்தால் இன்று நடக்கும் கதையே வேறு.
“உங்களுக்கு எதில் விருப்பம்? நீங்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் அத்தை? நான் உங்கள் மகனை விட்டு பிரியவேண்டும் என்பதற்காக இப்படி பேசுகிறீர்களா?” என்று அசால்ட்டாக கேட்டவளை பார்த்து சற்று திகைத்துவிட்டார். அவரின் விருப்பத்தை விட தன் மகனின் மகிழ்ச்சி தான் முக்கியம் என்றாலும் அனு தன் மகனுக்கு பொருத்தமானவளா? தன்னைப் போல் அவனிடம் பாசத்தை செலுத்தி சேய் போல் பார்த்துக் கொள்வாளா? அவனை எந்த அளவிற்கு நேசிக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ளவே முன்னுக்கு பின் முரணாக பேசினார். அதோடு அவர் கூறிய அந்தஸ்து விஷயத்திலும் சற்று ஏமாற்றம் இருந்தது தான் உண்மையும் கூட. ஆனால் அவளின் எதிர் கேள்வியில் தன் எண்ணம் ஈடேராததால் அவளை இன்னும் எவ்வளவு குழப்ப முடியுமோ அவ்வளவு குழப்ப நினைத்து காய் நகர்த்தினார்.
“நான் என்ன சொல்வது… ஜாதகம் பார்த்து பொருந்தி, பெண் பார்த்து அனைவருக்கும் பிடித்துப்போய் நிச்சயம் முடிந்து நல்ல சுபமுகூர்த்த நாளில் சீர், சம்பிரதாய சடங்குகளோடு திருமணம் நடந்திருந்தால் என் விருப்பத்தை கேட்க செவி கொடுத்திருப்பார்கள்.
இது தான் ஏதோ கார்டை ஸ்வைப் செய்து ஷாப்பிங் செய்வது போல் கண நொடியில் நடந்த திருமணமாயிற்றே. உன் நல்ல நேரம் என் மகனுக்கு உன்னை பிடித்துவிட்டது… அதற்காக எல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. உன்னை ஏற்றுக்கொள்ள ஒரு அழுத்தமான காரணம் இருந்தால் பார்போம்…” என்று நிறுத்தியவர் பெருமூச்சை வெளியேற்ற அனு முகத்தில் தோன்றிய குழப்ப ரேகை மன நிறைவளித்தது.
“நல்ல முடிவாய் எடு…” என்றுவிட்டு அவர் உள்ளே சென்றுவிட்டார்.
எவ்வளவு நேரம் அப்படியே  நின்றாள் எனத் தெரியவில்லை. மனமும் மூளையும் ரேகா கூறிய வார்த்தைகளுக்கு விடை கண்டுபிடிக்க திணற பலவேறு திசைகளில் மனம் ஓட்டமெடுத்தது.
“ஏய்… எத்தனை தரம் உன்னை கூப்பிடுவது? இங்கு நின்று எதை வெறித்துக் கொண்டிருக்கிறாய்?” என்று ஆதி அவள் தோள் பற்றினான்.
“ஆங்… ஒன்றும் இல்லை.” என்றவள் அவனை பார்க்காமல் உள்ளே விரைந்தாள். அவளின் இறுகிய முகத்தை கண்டவன் யோசனையோடு அவளை பின்தொடர்ந்தான்.
“என்னமா ரொம்ப பிஸியா உன்னை பார்க்க வந்தால் ஆளை காணோமே?” என்றார் கோபால் உள்ளே நுழைந்த அனுவை பார்த்து.
கோபாலின் குரலில் தன் முக பாவனையை சடாரென மாற்றியவள், “அப்படியேல்லாம் ஒன்றும் இல்லை மாமா.” என்றாள் கடினப்பட்டு வரவழைத்த புன்னகையோடு.
சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் புறப்பட ஆதியின் பார்வை அனுவை விட்டு அகலவில்லை. அதை கவனிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தவளை தொந்தரவு செய்யாமல் சிறிது நேரம் அமைதி காத்த பின்,
“என்னவாயிற்று?” என்று கேட்டான் அவள் முகத்தை தன் விரல்களால் நிமிர்த்தி.
கேள்வியான அவன் நேர் பார்வையை சந்திக்க முடியாமல் தவித்தவள் அவனை பார்க்காமல், “ஒன்றும் இல்லையே.” என்றபடியே அவனைத் தாண்டி போக முனைந்தாள்.
அனால் அவளை தடுத்து இழுத்து தன் முன் நிறுத்தியவன், “நீ கொஞ்ச நேரமாகவே சரியில்லை. என்ன நடந்தது? அம்மா எதுவும் சொன்னார்களா?” 
“அதெல்லாம் ஒன்றும் இல்லையே. எனக்கு கொஞ்சம் தலைவலி நான் போய் தூங்குகிறேன்.” என்று அவன் பதிலை எதிர்பார்க்காமல் அறைக்குள் தஞ்சமடைந்தாள்.
அவள் சரசரவென போவதை பார்த்தவனுக்கு அவள் தன்னை தவிர்க்கிறாளோ என்று எண்ணம் தோன்றியது.
“அக்கா காபி…” என்று கூவியபடியே உள்ளே நுழைந்தாள் கயல்.
பேக்கை சோபாவில் பொத்தென்று வைத்துவிட்டு தானும் விழுந்தவள் ஆதி நட்டநடுவே நிற்பதை பார்த்து புருவம் சுருக்க, “ஏன் டல்லாக இருக்கிறீர்கள் மாமா? அவள் எங்கே… அக்கா… அக்கா…” என்று கயல் மீண்டும் கத்த சிடுசிடுப்போடு வெளியே வந்தாள் அனு.
“என்னடி? கத்திக்கொண்டே இருக்கிறாய். கொஞ்ச நேரம் நிம்மதியாக இருக்க விடுகிறாயா? எப்பொழுது பார்த்தாலும் தொனதொனவென்று ஏதாவது பேசிக்கொண்டு இல்லை கட்டளையிட்டுக்கொண்டு… ஒரு நாள் உனக்கு தேவையானதை செய்து கொண்டால் என்ன குறைந்தா போய் விடுவாய்? எல்லாவற்றிற்கும் நானே செய்ய வேண்டும். அதானே நான் தான் வேலைக்காரி ஆயிற்றே. உங்கள் எல்லார்க்கும் பணிவிடை செய்வது மட்டுமே என் வேலை. நானும் மனுஷி தானே…” என்று அவள் கிட்சனிலிருந்து பொரிந்து தள்ளியதோடு அவள் ராகத்திற்கேற்ப பாத்திரங்களும் உருண்டன. 
“நான் ஏதும் தவறாக கேட்டுவிட்டேனா மாமா? ஏன் இப்படி கத்துகிறாள்?” என்று ஆதியிடம் கிசுகிசுப்பாய் கேட்டாள்.
அனுவின் கோபத்தில் சற்று ஆச்சர்யப்பட்டாலும் இது தலைவலியின் வெளிப்பாடு தானா என்பதில் சந்தேகம் எழுந்தது.
“தெரியவில்லையே…” என்று அவன் உதட்டை பிதுக்க அனு வேகமாக அங்கிருந்த டேபிளில் சத்தத்தோடு கப்பை வைத்தாள்.
“இதோ இருக்கிறது…” என்று சொல்லிவிட்டு மீண்டும் அறைக்குள் புகுந்துக்கொண்டாள்.
கயல் ஆதியை பார்க்க அவன் குடிக்குமாறு கண்ணசைத்து விட்டு தானும் அறைக்குள் நுழைந்தான்.
“டாக்டரிடம் போகலாமா?” என்று கேட்டபடியே வார்டோபில் மாற்று உடை எடுத்தான்.
தன் மனம் ஒரு முடிவிற்கு வரும் வரை ஆதியிடம் முன்னர் போல் இருக்க ஏதோ ஒன்று தடுத்தது. எங்கு அவனோடு இருந்தால் ஏதும் கண்டுபிடித்து விடுவானோ என்ற பயத்தில் தலை வலிக்கிறது என்று பொய் சொல்லி அவனை தவிர்த்தாள். அதுவே அவளுக்கெதிராக குற்றஉணர்ச்சியாய் துளிர் விட அந்த மனப் போராட்டத்தில் கயலிடம் கத்திவிட்டாள். சிறிது நேரத்தில் அவன் காலடி சத்தம் கேட்டு அவன் வருவதை கணித்தவள் தன் முகம் மூடி போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.
பதிலளிக்காமல் அமைதியாய் இருப்பவளை நெருங்கியவன் அவள் தோள் பற்றி தட்டி எழுப்பினான்.
“அனு… எழுந்திரு… தலை ரொம்ப வலிக்கிறதா?”
“டிஸ்டர்ப் பண்ணாதீங்க. தூங்கினால் சரி ஆகிவிடும்.” என்று உள்ளிருந்தே கூறினாள்.
அதை ஏற்றுக்கொள்ளாமல் அவள் அருகில் அமர்ந்தவன் மெருதுவாய் அவள் தலையை வருடிவிட்டான். இரண்டு மணிநேரமாக குழம்பிய மனம் அவன் வருடியதில்  கண்ணீராய் வெளிப்பட்டது. போர்த்தி இருந்ததால் அவள் கண்ணீர் மணிகள் அவனிற்கு புலப்படவில்லை.
சிறிது நேரம் அப்படியே தடவிக் கொடுத்தவன் தூங்கிவிட்டாள் என்று நினைத்து வெளியேறினான். இரவு வரையும் விழிக்காமல் இருக்க ஆதி எழுப்பி இரவு உணவு கொடுத்தான். ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியாமலும், ரேகாவை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமலும் தவிக்க உண்மையாகவே தலைவலி அவளை ஆட்டி வதைத்தது.
“இந்த மாத்திரையை போடு.” என்று அவளிடம் நீட்ட அதை வாங்க மறுத்தாள்.
“இதெல்லாம் வேண்டாமே…” என்று கெஞ்சும் தோரணையில் தவிர்த்தவளை காதில் வாங்காமல் அவனே கட்டாயப்படுத்தி விழுங்க வைத்தான்.
சோர்வாக இருந்தவளை பார்க்க பாவமாய் இருக்க அவளை தன்னோடு சேர்த்து அணைத்து அவள் தூங்க ஏதுவாக வருடினான்.

மறுநாளும் அனு அவனை விட்டு சற்று தள்ளியிருக்க முயற்சித்தாள். ஆனால் அதில் தோற்றால் என்பதே நிதர்சனம். எங்கு திரும்பினாலும் அவனே தெரிந்தான். படங்களில் இது போன்றெல்லாம் பார்த்து இதெல்லாம் எப்படி நடக்கும் என்று ஒதுக்கிய விஷயங்கள் அவளுக்கும் நடக்க ஒரே அவஸ்தை தான் அவளுக்கு.
“ஹேய்… லெக்ஸரை கவனி. மேம் உன்னையே பார்க்கிறார்கள்.” என்று வர்ஷினி அவள் கையில் கிள்ள தன் பகல் கனவிலிருந்து விழித்தாள்.
வேகமாக நோட்ஸ் எடுக்க நோட்டை பார்த்தால் அதில் ஒரு பக்கம் முழுக்க ஆதி என்று எழுதியிருந்தது. ஒரு சில இடங்களில் இருவரின் பெயரும் ஓவிய வடிவில் அனு ஆதித்தியா என்று இருந்தது. அதை பார்த்து திகைத்தவள் வர்ஷினி பக்கம் திரும்ப, “என்னை ஏன் பார்க்கிறாய்? நீ தான் இவ்வளவு நேரம் நோட்ஸ் எடுக்காமல் கிறுக்கிக் கொண்டிருந்தாய். எல்லாம் காதல் படுத்தும் பாடு… நீ நடத்து டியர்… காலையிலிருந்தே இதைத் தான் செய்து கொண்டிருக்கிறாய்… ஆனால் லெக்ஷ்சரரிடம் மாட்டிக் கொள்ளாதே.” என்று கண்ணடித்து எச்சரிக்க சரியாக லெக்ஷ்சரரிடம் மாட்டிக் கொண்டார்கள்.
“வாட்ஸ் கோயிங் தேர்? லிஸ்சன் ஹியர்… இட்ஸ் ஒன்லி செகண்ட் டே அண்ட் யூ ஆல்ரெடி ஸ்டார்டட் யுவர் காசிப்.” என்று அவர் கண்டிக்கும் போதே மணி அடிக்க அன்றைய காலேஜ் முடிந்தது.
பல்லை கடித்துக் கொண்டு தன் உணர்வுகளை அடக்கியவள் வெளியில் மீண்டும் அவனை சந்திக்க நேரிடுமே, நேற்று ஏதோ உடம்பு சரி இல்லை என்று சமாளித்தாயிற்று, இன்று என்ன செய்வது என்று யோசித்தவள் அருகில் வந்தாள் வர்ஷினி.
“ஹே அனு…இன்னும் கிளம்பவில்லையா நீ? நேற்று அவ்வளவு வேகமாக காலேஜ் முடிந்ததும் கிளம்பினாய்? இன்று ஏன் தயங்குகிறாய்? வீட்டில் ஏதும் பிரச்சனையோ?” என்று கேட்டவளை விழிகள் அகல நோக்கினாள்.
“ஏன் நீ அடிக்கடி ஷாக் ஆகிறாய்? என் வீட்டில் எல்லாம் எப்பொழுதும் சண்டை தான். எனக்கு அது பழகி போய்விட்டது. காலையில் எழுந்து இரவு தூங்கும் நேரம் வரை புட்பால் மேட்ச் போல் அப்பாவிற்கும், அம்மாவிற்கும் சண்டை நடக்கும். சமாதானம் செய்யலாம் என்று நினைத்தால் என்னை பலிகடாக்கி விடுவர். முதலில் கஷ்டமாக இருக்கும் இப்பொழுது பழகி விட்டது. நான் லேட்டாக வீட்டிற்கு சென்றால் கூட ஏன் என்று கேட்காமல் அதை ஒரு பிரச்சனையாக்கி சண்டையிடுவர். அப்பப்பா… இவர்கள் சண்டையில் நான் எங்கு படிப்பது.” என்று வர்ஷினி தன் சோகக் கதை கூற அனுவிற்கு கயலின் நியாபகம் வந்தது. அதோடு சேர்த்து கயலை நம் சண்டைக்குள் கொண்டு வந்து கஷ்டப்படுத்தக் கூடாது என்ற ஆதியின் கூற்றும் நினைவு வர தன்னை தானே நொந்துக் கொண்டாள்.
எப்படி இருந்தாலும் இன்று ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணி வேகமாக வாயிலிற்க்கு செல்ல அங்கு ஆதிக்கு பதில் முரளி நிற்பதை கண்டதும் மனம் ஏனோ நெருடியது.

Advertisement