Advertisement

 அத்தியாயம் எழுபத்து மூன்று :

இதுவரை நடித்தது அது என்ன வேடம்..
இது என்ன பாடம்..

“இன்னமும் தேடிக்குவேன் அண்ணா” என்று வர்ஷினி ஸ்திரமாக சொல்லவும், யாரும் பேச முடியாமல் வாயடைத்துக் கொள்ள..

வர்ஷினியும் நிறுத்திக் கொண்டாள்.. மிக சில நொடிகள் என்றாலும் மனதில் அனைவருமே கணத்தை உணர..

அதற்குள் ப்ரணவியும் சரணும் வீட்டினுள் ஓடி வந்தனர்.  வர்ஷினியின் கவனம் முழுவதும் அவர்களிடம் திரும்பியது..

“ஹேய்ய்ய்யய்ய்ய், நான் தான் ஃபர்ஸ்ட்” என்றபடி சரண் ஓடி வந்து வர்ஷினியைத் தொட..

“போ அண்ணா” என்று முகம் சுருக்கி சற்று தூரத்திலேயே நின்று கொண்டாள் பிரணவி..

இருவரையும் ஆஆ என்று வாய் பிளந்து தான் வர்ஷினி பார்த்திருந்தாள்.. பின்னே ப்ரணவி ஏழு வயதில் இருக்க.. சரண் பத்து வயதில் இருக்க இருவருமே வளர்ந்திருந்தார்கள்..

முகம் சுருங்கி நின்ற ப்ரணவியின் அருகில் வந்த ஈஸ்வர் அவளை தூக்கிக் கொண்டு.. “அண்ணா, உன்னை விட பெரியவன்டா.. அதுதான் முதல்ல வந்துட்டான்” என,

“பெரியவன் தானே, அப்போ ஏன் என்னோட ரேஸ் போடறான்” என மீண்டும் முகத்தை சுருக்க.. அதைப் பார்க்கவே அவ்வளவு அழகாய் இருந்தது.

“அவன் உன்னோட அண்ணாடா!” என்ற பதில் ப்ரணவியிடம் சொன்னாலும் பார்வை வர்ஷினியிடம் அழுத்தமாய் பதிய..

பார்வை புரிந்தவள், “நான் எப்போ இல்லைன்னு சொன்னேன்” என்று சத்தமாகவே சொல்லி, முரளியிடமும் பத்துவிடமும் “நான் எப்போ உங்க கிட்ட இல்லைன்னு சொன்னேன்” என்று சீரியசாக கேட்க..

இருவரும் புரியாமல் என்ன என்று விழித்துப் பார்த்தனர்.

“அச்சோ” என்று சொல்லி.. “உனக்கு இவளே பரவாயில்லை” என்று ப்ரணவியைக் காட்டியவன்.. “நீ கொஞ்சம் நேரத்துக்கு வாயே திறக்க கூடாது” என்றான் சற்று கடுப்பாக.. 

“காஃபி மட்டும் குடிக்கட்டுமா? பசிக்குது!” என,

“திரும்பவுமா, இப்போ தானே குடிச்ச?”

ரஞ்சனி உடனே “இவ்வளவு காஃபி குடிக்கக் கூடாது வர்ஷ்” என..

“இவ்வளவு நாளா சொல்லாம.. இப்போ மட்டும் ஏன் சொல்றீங்க?” என்றாள் உடனே ரஞ்சனி அவளிடம் பேசாததை மனதினில் வைத்து. 

ப்ரணவியைத் தூக்கிய படி அருகில் வந்த ஈஸ்வர்.. “சித்தி வாய் மேல ஒரு அடி வை என் சார்பா!” என்றான்.

“என்னவோ இவன் என்னை அடிக்காத மாதிரி” என்று மனதினில் நினைத்தாள். ப்ரணவியை அருகில் பார்த்ததும் மனநிலை மாற “வைப்ப நீ” என பாவனையாகக் கேட்க.. அந்த நீல நிறக் கண்களின் பாவனையை ரசித்து பார்த்தவன்..  

ப்ரணவி தன்னைப் பார்க்கவும் ஈஸ்வர் தன் கன்னத்தை தொட்டுக் காட்ட அதை குழந்தை புரிந்தவளாக “எஸ், வைப்பேன் சித்தி” என்றபடி வர்ஷினியின் கன்னத்தில் முத்தமிட.. மீண்டும்  சூழ்நிலை லகுவானது..

எல்லோரும் ஈஸ்வரைத் தான் பார்த்தனர்.. மிகவும் கவனமாகத் தான் ஈஸ்வர் வர்ஷினியைக் கையாளுவதாக தோன்றியது..

மலரின் முகத்தில் ஒரு கிண்டல் புன்னகை கூட.. அதனை புரிந்த ஈஸ்வர் அம்மா என செல்லமாக முறைத்து நின்றான். அவர்கள் யாருக்கும் வர்ஷினியை இத்தனை நாட்கள் எப்படி இருந்தாள் எனத் தெரியவில்லை.. இன்று பார்க்கும் போது அவள் சகஜமாக பேசுவது தானே தெரிந்தது.  

ஆனால் இத்தனை நாட்களில் ஈஸ்வர் சிரித்து யாரும் பார்த்திருக்க மாட்டர்.. குழந்தைகளிடம் பேசும் போது கூட ஒரு கனிவு தான் இருக்குமே தவிர சிரிப்பு இருக்காது. இப்போது அவன் சிரிப்பது அங்கிருந்த அனைவர் மனதிற்குமே இதமாய் இருந்தது. 

ஆனால் வர்ஷினி அவளைப் பார்க்காததினால் தெரியவேயில்லை. “நான் புது கேம் வெச்சிருக்கேன், விளையாடலாமா.. நானே பண்ணினேன்.. உங்க கிட்ட தான் ஃபர்ஸ்ட், வா, வா” என்று பேசியபடி அவர்களை ரூமின் உள் அழைத்துப் போகப் போக..

“இரு, இரு, சரண் உன் சித்தி வேற என்னமோ கூடப் பண்ணியிருக்கா, நான் கேட்டா சொல்ல மாட்டேங்கறா.. இந்தப் படத்துல” என்று தன் மொபைலில் அந்தப் படத்தின் மேகிங் காட்ட..

முரளியும் பத்துவும் இவன் என்ன காட்டுகின்றான் என எட்டிப் பார்க்க..

சரண் பார்க்க போகவும், “அதுல வேண்டாம் என் லேப்ல பார்ப்போம், இதுல இருக்காது” என்று திரும்பவும் உள் போக,

அவள் செல்லவும் குழந்தைகள் செல்லவும் எதோ அலை அடித்து ஓய்ந்தது போல இருந்தது.

“ஷப்பா” என்று எல்லோரும் சற்று சாய்ந்து சோஃபாவில் அமர்ந்தனர்.

“எதோ கோபத்துல பேசுறா, மனசுல வெச்சிக்காத” என முரளியை பார்த்து சொல்ல..

“டேய், அவ என் தங்கச்சிடா” என..

“அப்படியா, நீ சொல்லி தான் எனக்கு தெரியும்” என்றான் சற்று கோபமாகவே.. “அவ யாரோடையும் பேசலை, ஓகே ஒத்துக்கறேன். ஆனா ஷாலினி மட்டும் தான் கூப்பிட்டா போல, நீங்க கூப்பிடலையா” என்றான்.

வர்ஷினி யாருடன் பேசுகிறாள் இல்லை என்பதெல்லாம் ஈஸ்வருக்கும் தெரியாது தானே.

“ஷாலினி கிட்டப் பேசியிருந்தா, நான் பேசியிருப்பேன்!” என முரளி சொல்லவும்.

“உன்னை திட்டுறான்னு கவலை எல்லாம் படக் கூடாது போல.. இன்னம் கொஞ்சம் நல்லா திட்டுன்னு எடுத்துக் கொடுக்கணும்” என முரளியிடம் சொல்லியவன்..

“நீங்களும் ஒரு தடவை கூடப் பேசலையா” என்றான் பத்துவையும் ரஞ்சனியையும் பார்த்து..  

மலர் எதிலும் தலையிடாமல் பார்த்துக் கொண்டிருக்க.. நமஷிவாயம் முன்பே வெளியே வராந்தாவில் இருந்த சேரில் அமர்ந்தவர் தான் எழுந்து உள்ளே வரவில்லை.  

“அவ அஸ்வின் கூட பேசறா, எனக்குப் பிடிக்கலை. அதனால நான் பேசலை” என நேரடியாக ரஞ்சனி சொல்ல..

“நானும் தான் பேசறேன். என்னை என்ன பண்ணின நீ?” என்றான்.

“உன்கிட்ட கூட நான் அதிகம் பேசலையே” என..

“அதிகம் பேசலை, ஆனா பேசற தானே.. அவ கிட்ட அப்படிக் கூட நீங்க பேசலை.. நீ பேசலை, அதனால உன் புருஷன் பேசலை.. அதனால உன் புருஷனோட வீட்டுக்காரன் பேசலை.. உங்களுக்கு ஷாலினி எவ்வளவோ பரவாயில்லை.. நம்ம வீட்டு வளர்ப்பு தான் சரியில்லை போல மா! நீ சொல்ற மாதிரி உன் பையனும் சரியில்லை, பொண்ணும் சரியில்லை” என்றான் மலரைப் பார்த்து..

உடனே பத்து “இவ்வளவு ரஞ்சனிக்குப் பிடிக்கலைன்றப்போ அஸ்வினை ஏன் உள்ள விடணும்”

“ரஞ்சனி எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்குத் தெரியாதா.. அவளுக்காக திரும்பத் திரும்ப வாழ்க்கையை சிக்கல் ஆக்கிக்கிட்டேன்.. ஒரு வகையில் ரஞ்சிக்காகப் பணத்துக்கு பின்னால் திரும்ப ஓட ஆரம்பிச்சு.. அதனால வர்ஷினியை சரியா பார்க்காம.. இப்போ என்னை விட்டு போயே ஆகணும்னு நிக்கறா”

“அஃப்கோர்ஸ் இது மட்டும் காரணம் இல்லை, இன்னும் இருக்கு, தப்பு என் மேலயும் இருக்கு. ஜஸ்ட் ஒரு காரணம் சொல்றேன், உங்களை குற்றம் சொல்றனேன்னு நினைச்சிடாதீங்க.. நான் சொல்ல வர்றது இவ்வளவு ரிஸ்க் எடுத்துட்ட நான் இப்போ அஸ்வினைக் கூட வெச்சிருக்கேன்னா, ஏதாவது காரணம் இருக்கும்னு ஏன் தோணலை?”

“என்ன காரணம்?” என்றாள் ரஞ்சனி உடனே.

“அதெல்லாம் சொல்ல முடியாது புரிஞ்சதா. இதை ஒரு காரணமா நினைச்சு பேசாம இருந்தீங்கன்னா ரொம்ப தள்ளி போயிடுவா உங்களை விட்டு.. அவ்வளவு தான் சொல்வேன்!” என்று முடித்துக் கொண்டான்.

“இப்ப இவ்வளவு பேசறவன் முன்னையே பேசச் சொல்றதுக்கென்ன” என்று முரளி கோபமாகப் பேச

“என்னையே அவ பேச விடலை.. நான் யாரை பேசச் சொல்வேன்.. அதுவுமில்லாம நீங்க யாரும் பேசறீங்களா இல்லையா எனக்கு எப்படித் தெரியும்.. ஷாலினி ஃபோன் பண்ணினா எடுக்கலை நீ சொல்லித் தான் தெரியும்.. பத்துவும் நீயும் அஸ்வின் கிட்ட பேச மாட்டீங்க எனக்குத் தெரியும். ஆனா வர்ஷினி கிட்ட பத்து பேசாம இருப்பான்னு நான் நினைச்சதில்லை.. ஏதோ ஒன்னு, இன்னும் அஸ்வின் விஷயம் வரக் கூடாது, அது ஒரு காரணமா இருக்கக் கூடாது” என்றான் ஸ்திரமாக.

அதற்குள் மலரின் கையினில் இருந்த குழந்தை இறங்கி தரையில் தவழ.. தூக்கிய பத்து “நான் உள்ள போகட்டுமா” என்று ஈஸ்வரிடம் கேட்க..

“போ பத்து” என, பின் வர்ஷினி இருந்த அறை நோக்கி செல்ல..

ஞாபகம் வந்தவனாக ஈஸ்வர் வேகமாக அவனிற்கு முன் சென்று அறைக்குள் பார்க்க அவன் நினைத்து சரி என்பது போல.. அவள் குளிக்கும் போது மாற்றி இருந்த உடைகள் படுக்கையின் மேலும் கீழேயும் இருக்க..

வேகமாக அதை எடுத்து ஒரு கபோர்டினுள் துருத்தவம்.. பத்து உள்ளே வரவும் சரியாக இருந்தது… ஆம்! எப்போதும் அவள் அப்படித் தான் செய்வாள்.. 

வர்ஷினி ஈஸ்வரை கவனிக்கக் கூட இல்லை பிறகு அவன் என்ன செய்கிறான் என எப்படி கவனிப்பாள்?  

பத்து உள்ளே வரவும்.. வர்ஷினியிடம் ஈஸ்வர் வேகமாக சென்று,, அவளுக்கு மட்டும் கேட்குமாறு.. “உங்க அண்ணா கிட்ட சண்டை போடக் கூடாது” என ஸ்ட்ரிக்டாகச் சொல்ல,

“தோடா” என்பது போல ஒரு பார்வை பார்த்தாலும் மறுத்துப் பேசவில்லை. பிறகு ஈஸ்வர் வெளியேறிவிட..     

அங்கு குழந்தைகளிடம் லேப்பில் ஏதோ காட்டிக் கொண்டு இருந்தாள்.. பத்துவைப் பார்த்ததும்.. அவனின் கையில் இருந்த குழந்தையைக் காட்டி.. “அண்ணா எனக்கு பிரண்ட் ஆக்கு” என ஆவலாகக் கேட்க..

பத்துவிற்கு மிகவும் குற்றவுணர்வாகப் போய் விட்டது.. வர்ஷினியின் திருமணதிற்கு முன் சகஜமாகப் பேசியது தான் பின்னே பேசியதாக ஞாபகமில்லை. இப்போது ஈஸ்வர் சொல்லவுமே மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இப்போது அதனையும் விட மிக அதிகம்.    

“லேப்பை தட்ட விடு, ஃபிரண்ட் ஆகிடுவான்” என

“பேர் என்ன அண்ணா?”  எனக் கேட்டவளிடம்.. “ரிஷி” என, 

“வா, வா ரிஷி” என்று பெரிய மனிதனிடம் பேசுவது போல.. அவனுக்கு அருகில் இடம் காட்ட.. குழந்தையை இறக்கி விடவும்..

அதுவும் சமத்தாக அமர்ந்து கொண்டது.. பின்னே லேப்பில் கவனம் செலுத்த.. ரிஷி வேகமாக கையை லேபில் படர விட.. அதில் இருந்த பிச்சர் காணாமல் போனது.

ரிஷி அதனைப் பார்த்ததும் சிரிக்க..  “ஹேய், குட்டிப் பையா என்ன பண்ற நீ” என்று ப்ரணவி அதட்ட.. “ரிஷி” என்று சரண் கத்த.. அதையும் விட..

“வர்ஷினி” என்று சத்தமாக அழைத்துக் கொண்டே ஷாலினி உள்ளே வந்தாள்..

அவளைப் பார்த்ததும் “அண்ணி” என வர்ஷினி உற்சாகமாக இறங்கி வர, ஷாலினி வந்து கட்டிக் கொள்ளவும்.. திரும்பவும் கர்ப்பமாக இருப்பதால் வயிறு பெரிதாக இருக்க, அது இடிக்க,

வர்ஷினி ஷாலினியிடம் “என்ன அண்ணி இது.. எங்க அண்ணா எப்படி உங்களை கட்டிப் பிடிப்பாங்க?” எனக் கிண்டல் பேச..

ஷாலினி சற்றும் சளைக்காமல், “உங்க அண்ணா கட்டிப் பிடிச்சதால தான் இப்படி ஆகிடுச்சு” என,

வர்ஷினி சத்தமாக சிரிக்கத் துவங்க.. அப்போது தான் பத்து அங்கிருப்பதை பார்த்து அசடு வழிந்தாள் ஷாலினி..

பத்துவுக்குமே இருவரையும் பார்த்து சிரிப்பு வர, அதனையும் விட அவர்கள் பேசியது அவனுக்கு லஜ்ஜையை கொடுக்க,  சிரித்தால் நன்றாக இருக்காது என உணர்ந்து.. அவன் ரிஷியைத் தூக்கி வெளியேறினான்.

“அண்ணி எங்கே உங்க பெரியவன்” என,

“வெளில இருக்கான் வா” என்று குழந்தைகளை வெளியே கிளப்ப ஆரம்பித்தார்கள்.

வெளியே வந்த பத்துவின் முகத்தில் அப்படி ஒரு அடக்கப்பட்ட சிரிப்பு தெரிய.. “என்ன?” என்பது போல பார்வையால் வினவிய ரஞ்சனியின் அருகில் வந்ததும் புன்னகை முகத்தோடே ரெண்டு பேரும் ரொமான்டிக்கா பேசறாங்க, எனக்கு சிரிப்பு வருது” என மெல்லிய குரலில் சொல்ல..

“என்ன ரொமான்டிக்காவா?” என்று ரஞ்சனி சத்தமாக கேட்க.. ஈஸ்வரும் முரளியும் அவர்களை தான் பார்த்திருந்தனர்.

“ஷ், கத்தாதே!” என பத்து கடிய.. அதற்குள் வெளியே அவர்கள் வந்திருந்தனர்.

“இந்தப் பெண் வீட்டினருடன் கணவனுடன் எல்லாம் இவ்வளவு நாட்கள் பேசாமல் இருந்தாள்” என அடித்து சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப இயலாத ஒரு சூழல்..

கமலம்மா அமர்ந்திருக்கவும், “பெரியம்மா எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டபடி வேகமாக வர..

அவர் வர்ஷினியைத் தான் பார்த்து இருந்தார்.. கண்கள் கலங்க பார்த்து இருந்தார்.. பின்னே அவள் யாரோடும் பேசாமல் தனியாக இருக்கிறாள் என்பது சாதாரண விஷயம் கிடையாது.. ராஜாராம் என்று ஒரு மனிதர் இருந்தால் அவர் விட்டிருப்பாரா என்ன.. அவருடைய ஆன்மா கூட இந்த விஷயம் தெரிந்தால் தள்ளி தான் நிற்கும் என்று தெரிந்தவர் ஆகிற்றே..

ஆனால் அவர் செய்வதற்கு ஒன்றுமில்லை.. வர்ஷினி அவரை அருகில் விடவில்லை அவர் என்ன செய்ய முடியும்.. எல்லாம் கணவன் சொல்லிச் சொல்லி செய்த பெண்மணிக்கு.. தானாகச் செயல்பட முடியவில்லை.. அவளை புரிந்து கொள்ளும் புத்திச்சாலித்தனமும் இல்லை.. அவளை எப்படி கையாளுவது என்று தெரியவில்லை.. விளைவு அப்பா தவறிய நாளாக அந்த  வீட்டிடம் இருந்தும், வீட்டினரிடம் இருந்தும் தள்ளி நின்று விட்டாள்.

“அச்சச்சோ, ஏன் கண்கலங்கறீங்க?” எனக் கேட்கவும்..

அவருக்கு பேசவே வரவில்லை.. முரளி வந்து அருகில் அமர்ந்து கொண்டவன் “என்னமா?” என..

“ஒன்றுமில்லை” என்பதாக தலை அசைக்கத் தான் செய்தார், அவருக்குப் பேச வரவில்லை… எதிலோ தவறிவிட்டதாகத் தான் தோன்றியது..

“அதுதான் வந்துட்டேன் தானே” என வர்ஷினி சொல்ல…

அதற்குள் எங்கிருந்தோ வந்த நிஷாந்த “பாட்டி” என அவர் மேல் ஏற..

“அட யாருடா இது?” என வர்ஷினி பாவனைக் காட்ட..

“நான் நிஷாந்த்.. நீங்க?” என்றான் ஷாலினியின் மைந்தன்.

“நான் வர்ஷினி” என,

“வர்ஷினின்னா ஆரு..” என மழலையில் மிளிற்ற..

“ஃபோன் எடுக்கலைன்னு சொல்லத் தெரியுதில்ல.. நான் யாருன்னு நிஷாந்த்க்கு சொல்லிக் கொடுக்கலையா?” என்றாள் முரளியைப் பார்த்து கோபமாக.

அதுவரை எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்த்திருந்த ஈஸ்வர்.. “ஹே, ஹே, திரும்ப ஆரம்பிக்காதே” என்றவன், 

நிஷாந்தின் அருகில் வந்து “இது உன்னோட அத்தை” என்றான்.

“அத்தையா?” என நம்பாமல் பார்த்தது குழந்தை..

“அவ்வளவு குண்டா போயிட்டு.. இவ்வளவு ஒல்லியா திரும்பி வந்தா.. என் பையனுக்கு எப்படித் தெரியும்.. சும்மா உங்க அண்ணனை கேட்பியா” என ஷாலினி இடை புக..

“ஓஹ், அப்படியா..” என வர்ஷினி ராகம் இழுக்க…

“நீ ஏன் என் போன் எடுக்கலை?” என ஷாலினி இப்போது முறைக்க..

“ஃபோன் எடுக்கலைன்னா எடுக்கலைன்னு ஒரு கம்ப்ளயின்ட் தான் அண்ணி.. எடுத்திருந்தா இன்னும் நிறைய சொல்லியிருப்பீங்க.. அதைப் பத்தி பேச வேண்டாம் விட்டுடுவோம்” என சொல்லியவள்..

பின்பு நிஷாந்தை பார்த்து “நான் அத்தை.. நீ வாடா குட்டி” என,

அப்போதும் நிஷாந்த் விழிக்க.. ஈஸ்வர் தன்னுடைய மொபைலில் ஸ்க்ரீன் சேவரில் இருந்த வர்ஷினியின் புகைப்படத்தை காண்பித்து.. “அந்த ப்ளூ ஐஸ் பாரு” எனக் காட்டி, வர்ஷினியின் கண் காட்டினான்.

“அச்சோடா, என்ன அடையாளம்” என நினைத்தவள், ஆனாலும் இரு கன்னத்திலும் கைவைத்து கண்களை விரித்துக் காட்டி “பார்த்துக்கோ” என நிஷாந்திடம் காட்ட.. பார்த்த எல்லோர் முகத்திலும் புன்னகை..

அதையும் விட இவ்வளவு சகஜமாய் இருக்கும் பெண் ஏன் எல்லோரிடமும் இருந்து தள்ளி நின்றாள்.. அதையும் விட ஈஸ்வரின் வீடு தான் வந்திருக்கின்றாள், முகத்தையும் தூக்கி வைக்கவில்லை, ஆனாலும் ஏன் இந்த விவாகரத்து.. வர்ஷினி எனும் பெண்ணை புரிந்து கொள்ள முடியாது குழம்பிப் போயினர்.     

யாரையும் கவனிக்கும் மனநிலையில் ஈஸ்வர் இல்லை.. “இதைத்தானேடி நீ என்கிட்டே காட்ட மாட்டேன்னு சொன்ன” என்று நினைத்தபடி அந்தக் கண்களை ரசித்துப் பார்க்க,  அதில் முத்தமிடவும் ஒரு உந்துதல்.. பார்த்தது பார்த்தபடி இருந்தான் ஈஸ்வர். 

நிஷாந்த் புகைப் படத்தையும், வர்ஷினியையும் மாறி மாறிப் பார்த்து பின்பு லேசாய் புன்னகை புரிய.. “வா” என்று கை நீட்டிய வர்ஷினியிடம் மெதுவாய் நகர..

அண்ணனைப் பார்த்து ரிஷியும் அப்பாவின் கையில் இருந்து இறங்கி நகர.. இதனை சாக்காய் வைத்து ரிஷியைக் கையினில் தூக்கி கொண்டாள்.

தூக்கியவள் குழந்தையை மென்மையாய் அணைத்துக் கொள்ள.. ரிஷி அவளின் மேல் தன் முகம் உரச.. இந்த மாதிரி ஒரு குழந்தை தனக்கும் வேண்டும் என்று ஏங்கியது..

அவளின் எண்ணவோட்டத்தை படிக்க முயன்றவனாக ஈஸ்வர் அவளைத் தான் பார்த்திருந்தான்..

மனது ஒரு புறம் அவளை யாசித்தது..


விண் சொர்க்கமே பொய் பொய்.. என் சொர்க்கம் நீ பெண்ணே!

Advertisement