Advertisement

அத்தியாயம் ஏழு :

காதலும் கற்று மற!!!!

ஐஸ்வர்யாவை அனுப்பிய ஈஸ்வர், இது தன்னுடைய பிரச்சனையில்லை யாரோ ஒருவனுடைய பிரச்சனை என்று மனதில் கொண்டு வந்தான். அடுத்தவனுடைய பிரச்சனை என்றால், தான் என்ன ஆலோசனை சொல்வோம் என்று நினைக்க ஆரம்பித்தான்.

பிரச்னையின் தீவிரம் அதிகம், பல நூற்றுக்கணக்கான மக்கள், இதில் ஓரிரெண்டு பேர் பாதிக்கப்படுவது ஒன்றுமில்லை, தானே பாதிக்கப் பட்டாலும் ஒன்றுமில்லை. அவர்களுக்கு நியாயம் செய்ய வேண்டும்.

“நிதி நிறுவன மோசடி” என்ற வார்த்தைத் தன்னுடைய உடலில் இந்த உயிர் இருக்கும் வரை வரக்கூடாது என்ற உறுதி எரிமலையாய் அவனுள் வெடித்து சிதறியது.

இது வராமல் இருக்க எதுவும் செய்யத் தயாரானான்.

எவன் இருந்தால் என்ன? இறந்தால் என்ன? தோன்றிய நொடி, எப்போதும் யாரோடும் பேசாத தன்னுடைய ஆணவத்தை எல்லாம் விட்டு தொலைபேசிய எடுத்தான்.

“நான் ஈஸ்வர், ஈஸ்வர் பைனான்ஸ்ல இருந்து பேசறேன், ஒரு வேலை இருக்கு பண்ண முடியுமா சுரேஷ்”

“என்ன தல? இப்படி சொல்லிட்ட! உனக்கு இல்லாததா, நான் பல தடவை உன்கிட்ட சொல்லியிருக்கேன் எதுன்னாலும் கூப்பிடுன்னு. நீங்க்காட்டி ஒரு தடவைக் கூட கூப்பிட்டதே இல்லை என்னை” என்று குறைபட்டான்.

“எதுக்கெல்லாம் குறைபடரதுன்னு ஒரு விவஸ்தை இல்லாம போச்சு”

“எல்லா வேலைலயும் ஒரு தொழில் தர்மம் வேணும் தல. நம்மகிட்ட வேல அவ்வளவு நீட் தல. அதாங்காட்டி சொன்னேன்”

“அதான் இப்ப கூப்பிட்டுட்டேன் இல்லை. உடனே வா”

“எங்க வர ஆபிஸ்கா”

“வேண்டாம், வேண்டாம், சத்யம் சினிமாஸ் வா, கூட்டமில்லாத படத்துக்கு ரெண்டு டிக்கெட் எடுத்துக்கோ, வெயிட் பண்ணு, நான் வந்து சேர்ந்துக்கறேன், எவனையும் கூட கூப்பிடாம வா”

“நீ சொன்னா சரி தல”,

உடனே கிளம்பினான், தியேட்டர் சென்றவன், அங்கே சுரேஷை பார்த்து செய்ய வேண்டிய வேலைகளை சொன்னவன், “பிரச்சனை வராம செய், மீறி வந்தா பார்த்துக்கலாம்” என்றான்.

“என்ன தல எல்லோரும் என் பேர் வராம செய்ன்னு சொல்லுவாங்க! நீ என்னடான்னா இப்படி சொல்ற”

அதற்கு பதில் சொல்லாதவன் “செய்வியா, மாட்டியா” என்றான். மனதில் ஓடியது, “தெரியாம செய்ய நிறைய வேலை வெச்சிருகேண்டா” என்று.

“முடிச்சிட்டுக் கூப்பிடறேன்”

திரும்ப ஆபிஸ் சென்றவன், எப்போதும் போல வேலைகளை கவனித்தான்,

ஜகன் அவனைப் பார்க்க அவனின் கேபின் வந்தவன், “விஷ்வா என்ன பண்ணலாம்” என்றான் பணத்தை முன்னிட்டு.

“என்ன பண்ணின பணத்தை” என்றான் ஜகனை பார்த்து.

“அஸ்வின் கிட்ட தான் கொடுத்தேன்” என்றான் சற்று தடுமாற்றமாக.

“அவ்வளவு பணம் ஏன் கொடுத்த, சும்மா திரும்ப திரும்ப, கேட்டான்! கொடுதேன்! சொல்லாத, அது நம்ம பணம் இல்லை! அடுத்தவன் பணம்! நேர்மை நாணயம் நம்பிக்கைன்னு ஏதேதோ சொல்றோமே! அதை எல்லாம் கட்டிக் காப்பாத்தணும்! என்ன பண்ணின?” என்றான் ஜகனை தீர்க்கமாகப் பார்த்து.

“நான் ஒன்னும் பண்ணலை” என்று தடுமாறியவன், எழுந்து போய் விட்டான்.

போகும் அவனை யோசனையாகப் பார்த்திருந்தான் ஈஸ்வர்.

பிறகு அவனின் பீ ஏ பார்க்க வந்தான், “சர், இன்னும் ரெண்டு மாசத்துல நம்ம ஸ்கீம் ஒன்னு முடியப் போகுது இல்லையா, ரெண்டு மூணு நாளாவே அதைக் கன்ஃபார்ம் பண்ணிக்க நிறைய கால்ஸ். நம்ம  மோட் ஆஃப் பேமென்ட் எப்படி?”

“எப்படிச் சொல்லியிருக்கோம்”

“அவங்க அக்கௌன்ட்க்கு ட்ரான்ஸ்பர் பண்ணற மாதிரி”

“எஸ், அப்படியே தான்! சொன்ன டேட்ல இருந்து அதிக பட்சம் ஒரு பத்து நாள் கிரெடிட் ஆகிடும்னு சொல்லுங்க, எல்லோர் கிட்டயும் ஒரு செக் லீஃப் வாங்குங்க, அந்த ப்ராசெஸ் உடனடியா ஆரம்பிங்க”

“எதுக்கு செக்ன்னு கேட்டா”

“எத்தனை வருஷ எக்ஸ்பீரியன்ஸ் எப்பக் கத்துக்குவீங்க, நான் வந்து ரெண்டு வருஷம் தான் ஆகுது. நீங்க பத்து வருஷமா இருக்கீங்க. இதுல இப்ப வந்தவன் முதலாளின்ற ஹோதால ஆர்டர் போடறான், கத்துக்குட்டின்னு கமெண்ட் வேற”

பீ ஏ விழித்தான். தாங்கள் பேசுவது இவனுக்கு எப்படித் தெரியும் என்பது போல.

“அவங்க அக்கௌன்ட் நம்பர்காக….. இல்லைன்னா மாத்தி மாத்தி கொடுப்பாங்க ஏதாவது தப்பாகும்”

“கேட்டா ஏதாவது மிஸ் யூஸ் பண்ணுவோம்னு கேள்வி கேட்பாங்க”

“கிராஸ் பண்ணி யாரும் உபயோகிக்க முயாதபடி குடுக்கச் சொல்லுங்க”

“சரிங்க சர்”

“நாளைக்கு காலையில எனக்கு ஆடிட்டர் கூட மீட்டிங் ஃபிக்ஸ் பண்ணுங்க, நாளைக்கு மதியம் ரெண்டு மணிக்கு போர்ட் மீட்டிங் சொல்லுங்க, அதுக்கு அப்புறம் ஆல் ஓவர் தமிழ்நாடுல இருக்குற எல்லா பிரான்ச் மேனேஜர்சும் என்னை பார்க்கணும் சொல்லுங்க, சென்னைக் கிளம்பி வரச் சொல்லுங்க”

“சர், உடனேவா! டிக்கெட் கிடைக்கலைன்ற மாதிரி ஏதாவது சொல்வாங்க”

“என்ன டிக்கட் கிடைக்காதா? அப்போ நடந்து வரச் சொல்லுங்க, இல்லை சைக்கில்ல வரச் சொல்லுங்க, இல்லை ஆட்டோல வரச் சொல்லுங்க” என்றான்

“என்ன பேசுகிறான்” என்பது போல பீ ஏ பார்க்க..

“முடியாதுல்ல… வித்தவுட்ல வர சொல்லுயா! அவன் சொல்லுமுன்ன நீ சொல்ற! உன்னை என்ன செய்யலாம், வரணும்னா வரணும் வரமுடியலைன்னா அப்படியே ஆஃபிஸ் விட்டு வெளில போயிட சொல்லு, வந்ததுக்கு அப்புறம் எவனாவது ட்ராவல் அலவன்ஸ் கேட்டான், அந்த பில்லை கிழிச்சு உங்க முகத்துல தான் எறிவேன், எவனும் கேட்காதபடி நீங்க தான் பார்க்கணும் போங்க” என்று கத்தினான்.

“ஓகே சர்” என்றபடி வெளியே வந்தான் பீ ஏ. நாய் பொழப்பு நம்மளது என்று நினைத்தபடி. எதிர் பட்ட இன்னொரு ஸ்டாஃபிடம் “கத்தறார், என்ன விஷயம்னு தெரியலை” என்று நொந்து கொண்டான்.

முரளி வீட்டினர் மாலையில் தான் கோவிலில் இருந்து எல்லோரும் வீடு வந்தனர், அவர்கள் வந்ததும் வர்ஷினி முரளியிடம், “அண்ணா! உன் ஃபிரண்ட் மிஸ்டர் ஈஸ்வர் வந்தாங்க, உங்களைப் பார்க்க” என்றாள்.

“ஈஸ்வரா, ஃபோன் பண்ணலையே அவன்”

“தெரியலை அண்ணா! பட் ரொம்ப ஒரு மாதிரி டிஸ்டர்ப்டா இருந்தாங்க! இதுல கால்ல இடிச்சிகிட்டாங்க! நான் தான் அவங்க ஆபிஸ்ல  டிராப் பண்ணினேன்” என்றாள்.

“என்ன நீ டிராப் பண்ணினியா” என்றான் ஆச்சர்யமாக முரளி.

“ஆம்” என்றாள்.

“என்னடா நடக்குது” என்று மனதிற்குள் வியந்தான், முதலில் அப்படி ஒன்றும் ஈஸ்வர் டிஸ்டர்ப் ஆகும் ஆளில்லை அதுவும் அடுத்தவர் கவனம் கவரும் அளவிற்கு, அதிலும் அதிசயம் வர்ஷினி கொண்டு போய் விட்டேன் என்று சொல்வது, யாரோடும் பேசவே மாட்டாள், இதில் கொண்டு போய் விட்டாளா? ஈஸ்வர் ஒரு பெண் கார் ஓட்ட அருகில் அமர்ந்து போனானா? அதுவும் இவளை நம்பி, இவள் நன்றாக கார் ஓட்டுவது அவனுக்கு எப்படி தெரியும்?

இந்த சம்பாஷணையை ராஜாராமும் கேட்டுக் கொண்டு தான் இருந்தார்.

“என்ன பாப்பா? நீங்க தனியா கொண்டு போய் விட்டீங்களா”

“இல்லைப்பா! தாசண்ணாக் கூட வந்தாங்க”

“அப்போ சரி” என்றவர், கூடவே “தாஸையே கொண்டு போய் விட சொல்லியிருக்கலாமே! நீங்க ஏன் போனீங்க?”

“தோணிச்சு! போனேன்! தப்பா!”

“தம்பி நமக்குத் தெரிஞ்சவர் தான், இப்படி யாரும் தெரியாதவங்க கூடப் போகக் கூடாது”

“பா! நான் என்ன சின்ன பொண்ணா எனக்குத் தெரியாதா” என்று முகத்தை சுருக்கியவள், தன் ரூம் நோக்கி செல்லப் போக,

“இரு, வர்ஷினி! அப்பா பேசிக்கிட்டு இருக்காங்க” என்று அதட்டினான் பத்மநாபன்,

அவன் அதட்டியதற்கு கோபமாக அவனைப் பார்த்த போதும் இருந்தாள்.

ராஜாராமிற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்க,

“முதல்ல மரியாதையைக் கத்துக்கோ வர்ஷினி! அப்பா பேசிட்டே இருக்காங்க! நீ போற!” என்று அதட்டினான் பத்மநாபன்.

அப்படியே நின்றிருந்தாள், முகத்தை உர்ரென்று வைத்து,

ராஜாராமும் முரளியும் அவளுக்குப் பரிந்து ஏதோப் பேச வர, அவர்களைக் கண்களால் அடக்கியவன், “உட்காரு” என்று அதட்டினான்.

தொப்பென்று அவள் உட்கார, அவளருகில் அமர்ந்தான் பத்மநாபன்.

“நீங்கள் செல்லுங்கள்” என்பது போல முரளியையும் ராஜாராமையும் சைகை செய்தான். அவர்கள் அகன்று விட,

“வர்ஷினி, நீ போனது கண்டிப்பா தப்புக் கிடையாது, ஆனா நீ எல்லோருக்கும் போறது இல்லை, இப்படி திடீர்ன்னு ஒருத்தரோட சகஜமா  போனா எல்லோர் கவனத்தையும் கவரும். அதை தான் அப்பா சொல்றாங்க” என்றான் பொறுமையாக.

அப்போதும் அப்படியே அமர்ந்திருந்தாள், “ஹேய் வர்ஷ், cool..  கோபப்படாத! நீ ஒரு அழகான பொண்ணு இல்லையா? தெரிஞ்சவங்கன்னாலும், இப்படி சட்டுன்னு யாரோடையும் தனியா போகக்கூடாது. நல்லவங்க தான்னாலும் எல்லா நேரமும் சில சமயம் நல்லவங்களா இருக்க மாட்டாங்க”.

“ஐ நோ ஈஸ்வர், நல்லவன் தான் தப்பு சொல்ல முடியாது! ஆனா ரொம்ப கர்வம் பிடிச்சவன், தான்ற அகங்காரம் அவனுக்கு நிறைய. இங்க எல்லோரும் அவனைத் தலையில தூக்கி வெச்சு ஆடுவாங்க. கீப் டிஸ்டன்ஸ் வித் ஹிம்”

அவன் சொல்லாமல் விட்டது, “கல்யாணத்துல அவன் உன்னை அடிக்கடிப் பார்த்தான்” என்பது. கூடவே முரளி இல்லாத போது இவன் ஏன் வரவேண்டும் என்ற கேள்வி. அவன் என்ன கண்டான் ஈஸ்வரின் நிலையை.

“அண்ணா, உன் நல்லதுக்கு தானே சொல்வேன்” என்றான் தணிவாக ஆழ்ந்த குரலில்.

வர்ஷினி நிமிர்ந்து அவனைப் பார்க்க, “ஈஸ்வர், நல்லவன் தான் எனக்குத் தெரியும். ஆனா எல்லோரும் எப்படி நினைப்பாங்க சொல்ல முடியாது we should not give room for others to talk”.

“தாசண்ணாக் கூட வந்தாங்க”

“இதை விடு, இனிமே போகாத! யார்க் கூட வந்தாலும்!” என்றான் உறுதியாக.

“சரி” என்பதுப் போலத் தலையசைத்தாள்.

“உனக்கு எங்கே போகணும்னாலும் சொல்லு! நான் கூட வருவேன்!”

“ம், சரி!” என்று தலையசைத்தாள்.

“எங்களோட சகஜமா இரு! தள்ளி தள்ளி நிற்காத, முரளி எப்படியோ அப்படி தான் நீ எனக்கு, நிறைய முறை சொல்லணும்னு நினைச்சிருக்கேன், ஆனா சொன்னதில்லை you are my sweet little sister” என்று சொல்லிப் புன்னகைத்தான்.

அந்த புன்னகை வர்ஷினியையும் தொற்ற, புன்னகைத்தவள், “நான் இப்போ போகட்டுமா”

“போ, ஆனா ஒரு ரெண்டு வார்த்தை அப்பாக் கூட பேசிட்டுப் போ!”

அவர் எங்கே என்பது போல பார்த்தவள், “தாத்தாக் கூட இருக்காங்க” என்றாள்.

“சரி, அப்புறம் பேசு! போ!” என்று அனுப்பினான்.

ஆம்! ராஜாராமின் அப்பா வர்ஷினியை சற்று தள்ளித் தான் வைப்பார். திட்டுவார், மனம் நோகும் படி பேசுவார் என்று எதுவும் கிடையாது. ஆனால் ஒரு விலகல் தன்மை இருக்கும். ஒரு பாசம் இருக்காது, நீ வருகிறாயா வா! போகிறாயா போ! என்பது போலத் தான்.

அதனால் வர்ஷினியும் முடிந்தவரை தள்ளி நிற்பாள்.

“மேல என்ன படிக்கப் ப்ளான் பண்ணியிருக்க, மெடிசின், எஞ்சிநீயரிங், மானேஜ்மென்ட் ஸ்டடீஸ்” என்று லிஸ்ட் அடுக்க,

“விஷுவல் கம்யுனிகேஷன்” என்றாள் தெளிவாக.

“ஓஹ், ப்ளான் பண்ணிட்டியா” என்றான்.

“ம்ம்ம்” என்பது போல வர்ஷினி தலையசைக்க..

அதே சமயம் “என்ன, என்னுடைய ப்ளான்” என்பது போல ஈஸ்வரும் யோசனையில் இருந்தான். ஒரு பேப்பர் எடுத்தவன்,

பணம் வந்தால் எப்படி மேனேஜ் செய்வது, வராவிட்டால் எப்படி மேனேஜ் செய்வது, என்று லிஸ்ட் எடுத்தான்.

வந்தால் ஒரு பிரச்னையும் இல்லை வராவிட்டால் என்ன செய்வது என்று பல வழிகளை எழுதியவன், அதில் வரக் கூடிய சிக்கல்கள் என்ன என்றும் வரிசைப் படுத்தினான்.

அவன் இதைச் செய்து கொண்டிருக்கும் போதே முரளி அவனை அழைத்தான், “ஈஸ்வர், பார்க்க வந்தியா”

“ஆமாம்”

“நீ ரொம்ப அப்செட்ன்னு வர்ஷினி சொன்னா! என்ன விஷயம்?”

“போன்ல பேச முடியாது! நேர்ல தான் பார்க்கணும். என்ன பண்ணலாம், நீ பிசியா?”

“என்ன பெரிய பிசி! என்ன இது புதுசா ஃபார்மலான பேச்சு! வாடான்னா வர்றேன்”

“ம்ம்ம்ம்! உனக்கு புதுசாக் கல்யாணமாகியிருக்கு! அதான்!”

“ப்ச்! எங்க வரணும், சொல்லு! இல்லை நீ வர்றியா!”

“இல்லை, நான் வரலை! நீ வா!” என்று ஹோட்டலின் பெயரை சொன்னான்.

ஒரு மணி நேரத்தில் இருவருமே அங்கே இருந்தனர்,

ஈஸ்வரை பார்த்தவன் “என்னடா இப்படி இருக்க” என்றான் கவலையாக.

ஷேவ் செய்யாமல், ஒரு மாதிரி களையிழந்து, இப்படி ஈஸ்வரை இதுநாள் வரை முரளி பார்த்ததில்லை.

ஏன் முரளி என்றாவது ஒரு மேட்ச் இல்லாமல் அவசரமாக டிரஸ் செய்து சென்றால் கூட கடிவான். “எப்பவும் நம்ம லுக் அடுத்தவன் பார்க்கற போது பாராட்டுற மாதிரி இருக்கணும்” என்பான், அப்படி தான் இருப்பான்.

“உட்காரு” என்றவன், ஜகன் அஸ்வினிடம் பணம் கொடுத்தது, இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்று தெரியாமல் இருப்பது, அஸ்வினின் தந்தையிடம் கேட்டால், அவர் மரியாதையில்லாமல் அலட்சியமாக பதிலளித்தது என்று எல்லாமும் சொன்னான்.

“டைம்க்கு பணம் குடுக்கலை, பிரச்சனை ரொம்பப் பெருசாகும், அப்புறம் நம்ம திரும்ப கொடுத்தாக் கூட இந்த பேர் இருக்காது. பிசினஸ் டவுன் ஆகிடும். அதுவுமில்லாம கடனா நம்ம கஸ்டமர்ஸ்க்கு குடுத்த பணம் திரும்ப வரவே வராது. லாஸ் அப்படின்றதை விட, ஏமாத்திட்டோம்ன்ற பேர், அதுக்கு அப்புறம் எப்படி வெளில தலை காட்டுறது. எல்லாம் முடிஞ்சிடும்”

“என்ன பண்ணலாம்?”

“தெரியலை”

“எவ்வளவு பணம்?”

தொகையைச் சொல்லவும்,

“எப்படிடா இவ்வளவு பணம் கொடுக்க முடியும்” என்று வாயை பிளந்தான் முரளி. “இவ்வளவு பணம் என்ன பண்ணியிருப்பான்?”

“தெரியலை”

“அப்பாக் கிட்ட நான் பேசவா ஏதாவது அமௌன்ட் ஏற்பாடு பண்ண முடியுமான்னு?”

“பேசலாம்! ஆனா நான் எப்படித் திரும்ப குடுப்பேன்”

“இதுக்கெல்லாம் நான் எப்படிடா பதில் சொல்ல முடியும், என்ன அப்பாக் கிட்ட பேசட்டுமா”,

“உன் இஷ்டம்”

“இவனை!!!!!” என்பது போல முறைத்துப் பார்த்தான் முரளி. “உதவி செய்யட்டுமா என்று கேட்டால் உன் இஷ்டம் என்கிறான். உதவியைக் கூட எப்படி திமிராக கேட்கிறான், இவனை என்ன செய்ய” என்பது போலப் பார்த்தான்.

ஈஸ்வர் பேரரை கூப்பிட்டு “ரெண்டு லார்ஜ்” எனவும்,

“எனக்கு வேண்டாம்! கல்யாணமாகி ரெண்டு நாள் தான் ஆகுது! பயந்துடப் போறா” என்றான் மனைவியை நினைத்து.

“சரி, நான் குடிக்கறேன்! நீ வேடிக்கைப் பாரு”

“ஒன்னு கேன்சல் பண்ணுடா”

“நோ, நோ, ரெண்டும் எனக்கு வேணும்” என்று அவன் சொன்ன போது ஃபோன் வர அதை எடுக்கவும்,

“தல முடிச்சிட்டேன்! இனி என்ன பண்ண?”

“இருட்டு ரூம்ல நாள் முழுசும் போடு, சாப்பிட எதுவும் குடுக்காத, பாத்ரூம் போகணும்னா கூட அனுப்பாத! அடைஞ்சு கெடக்கட்டும்! நாளைக்கு இந்த நேரம் என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்” என்று போனை வைத்தான்.

“என்னடா? என்ன பண்ற?” என்று முரளி கவலையாகக் கேட்க,

“அதான் அவன் அந்த பிரகாசம்! அவனை தூக்க சொல்லியிருக்கேன்! என்ன தெனாவெட்டா பேசினான் தெரியுமா? இந்த விஷ்வேஸ்வரன் யாருன்னு அவனுக்கு காட்டணும்!” சொல்லும் போது குரலில் அவ்வளவு தீவிரம்.

“ஈஸ்வர், ஏதாவது பிரச்சனையில மாட்டிக்காத! உன் கிட்டயே அவ்வளவு அலட்சியமா பேசியிருக்கான்னா எதுக்கும் துணிஞ்சவனா இருப்பான்! சொந்தம் வேற!”

“எவனா இருந்தா என்ன? நான் யார்ன்னு அவனுக்குக் காட்டணும்! பணத்தை வாங்கியே ஆகணும்! அவன் இன்னும் உயிரோட இருக்குற நாள் வரை என்கிட்டே பேசினதை நினைச்சு வருத்தப்படணும்!”

முரளி கவலையாகப் பார்த்தான், ஈஸ்வர் நல்லவன், ஆனால் எதிரில் இருப்பவன் அவனுக்கு எதிரியாகும் வரை.

பல சமயம் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் என்று யாருக்கும் தெரியாத குணங்கள் நண்பனுக்கு தெரியும்.

எத்தனை வருடமாக ஈஸ்வரைப் பார்க்கிறான்.

“அப்பாக் கிட்ட பேசட்டுமா”

“பேசு! ஆனா எப்படி திரும்பக் கொடுப்பேன்னு கேட்டா என்கிட்டே இப்போதைக்கு பதில் கிடையாது, கண்டிப்பா திரும்பக் கொடுப்பேன்! ஆனா எப்போன்னு சொல்ல முடியாது. ஏன்னா திரும்ப கொடுக்கணும்னு ஒரு கம்பல்ஷனோட வேலை பார்த்தா, அதிக வட்டி போட வேண்டி வரும், வாங்குறவன் வாங்குவான். ஆனா ஒழுங்கா கட்டுவான்னு சொல்ல முடியாது. ஒரு மாதிரி சிஸ்டம் கொலாப்ஸ் ஆகும்!”

“இப்படி எல்லாம் நான் அப்பாக் கிட்ட பேச முடியாது! கேட்கறது கடன்டா பணிவா தான் கேட்கணும்! நீ கொடு, ஆனா நான் எப்பக் குடுப்பேன்னு சொல்ல முடியாதுன்னு எல்லாம் சொல்ல முடியாது! ரொம்ப பெரிய அமௌன்ட் ஏதாவது பதில் ரெடி பண்ணு புரியுதா” என்று முரளி அதட்ட.

“ம்ம்ம், யோசிக்கறேன்!” என்றான் ஈஸ்வர் தெனாவெட்டாக.

“நீ அடங்க மாட்டடா”

பேசப் பேச இரண்டு லார்ஜும் ஈஸ்வரின் உள்ளே இறங்கியது… “என்னடா கொஞ்சம் கூட ஏறவே இல்லை, என்னோட மைன்ட் ரிலாக்ஸ் பண்ணலாம்னா? முடியலை!” சொன்னவன்,

திடீரென்று சிரிக்க துவங்க….

“எதுக்குடா சிரிக்கிற இப்போ” என்றான் முரளி இன்னும் கவலையாக என்ன வாகிற்றோ என்று.

“உன் தங்கை இன்னைக்கு என்னைப் பார்த்து ஒரு காமெடி பண்ணினா”

“என்ன”

“அடி பட்டுச்சா, ஒரு நிமிஷம் கழிச்சு போங்கன்னு எனக்கு இளநி கொண்டு வந்து கொடுக்க சொன்னா” என்றான் சிரிப்புடன்.

முரளியின் முகத்திலும் புன்னகை “என்னவோ ஊருக்குள்ள உன்னை பார்த்தா நல்லவன்னு நினைக்கறாங்க” என்று அவனும் சிரித்தான்.

கூடவே “எவ்வளவு அடிச்சாலும் உனக்கு ஏறாதுன்னு, இளநியோட தான் எப்பவும் நீ மிக்ஸ் பண்ணி அடிப்பன்னு யாருக்கு தெரியும்” என்று சொல்ல….

“என்ன சொல்லு? அதோட டேஸ்டே தனி!, போதையும் ரொம்ப நேரம் நிற்கும், இப்போ பாரு எனக்கு போதையே இல்லை” என்று சொல்லி வெளியே வந்தான்..

“நீ கிளம்பு” என்று முரளியை அனுப்பி ஈஸ்வர் காரை எடுத்தான்.

காலையிலிருந்து முயன்று வர்ஷினியை ஒதுக்கி பிரச்சனைகளை முன் நிறுத்தி இருந்தான், இப்போது முரளியிடம் பேசவும் மீண்டும் அவளின் ஞாபகம்.

மனது “அவளையும் டேஸ்ட் பண்ணேன்டா. அந்த போதை எப்படி இருக்கும்ன்னு பார்க்கணும்” என்று சொல்லியது.

இத்தனை வருடம் பிறந்தது முதலாக வளர்த்த நற்பண்புகள் அவனை விட்டு ஒதுங்கியது.

கற்றது களவு!!!!

 

 

Advertisement