Advertisement

அத்தியாயம் நாற்பத்தி ஐந்து :

வழி அதுவானாலும் போக மனதில்லை!!!

அன்று இரவு முழுவதுமே ஓரே யோசனை வர்ஷினிக்கு, காலையில் எழுந்ததும் அண்ணன்கள் இருவரிடமும் “அப்பா குடுத்தாங்க! என்ன சொல்லட்டும்?” என்று ஒரு ஆலோசனைக் கேட்டாள்.

மூன்று போட்டோ மற்றும் விவரங்கள் இருந்ததை பார்த்தனர் பத்துவும், முரளியும். அங்கே ஷாலினியும் வர.. அவளிடமும் காட்டினர். ரஞ்சனி கல்லூரி கிளம்ப வந்தவளிடம் “இங்கே வா!” என்று சொல்லி பத்துவும் காட்டினான்.

வீடு மொத்தமும் அங்கே குழுமியது. எல்லோர் மனதிலும் “இது என்ன? ஈஸ்வர் என்ன ஆனான்?” என்று தான் தோன்றியது. அதில் அன்று வர்ஷினிக்கு பிறந்த நாள், வாழ்த்த வேண்டும் என்று தோன்றவில்லை.

காலையில் கண் விழிக்கும் போதே ஈஸ்வரின் மெசேஜ் உடன் தான் விழித்தாள். அதன் பிறகு கல்லூரி தோழர் தோழிகளின் வாழ்த்துக்கள், கமலம்மா இன்னும் ரூம் விட்டு வெளியே வரவில்லை, கணவருக்கான பணிவிடைகளில் இருந்தார்.

தாத்தா வராந்தாவில் பேப்பரோடு அமர்ந்திருந்தார்.

யாருமே சொல்லவில்லை என்பது மனதினில் பதிய ஒரு ஏமாற்றம் உணர்ந்தாள்.

மூன்று ஃபோட்டோகளையும் பார்த்தனர், விவரங்கள் ஓரளவிற்கு திருப்தியாக இருந்தாலும், பண வசதி இருந்தாலும், குறையாகவே தெரிந்தனர். காரணம் ஈஸ்வர்.. அவனோடு ஒப்பிடுகையில் அங்கே இருந்த மூவரும் குறைவே.

“உனக்கு இதுல யாரையாவது பிடிச்சிருக்கா?” என்றான் பத்து.

உண்மையில் யாரையும் பிடிக்கவில்லை. தானாக மனமும் எல்லோரையும் ஈஸ்வரோடு ஒப்பிட்டது. ஒருவேளை நான் தேவையில்லாமல் அப்படி நினைக்கிறேனோ என்ற எண்ணத்தில் தான், அண்ணன்களிடம் காட்டினாள், கேட்டாள், அவர்கள் யாரையாவது அதில் நன்றாக இருக்கிறான் என சொன்னாலும் வர்ஷினி ஒத்துக்கொள்ள மாட்டாள் என்பது வேறு.

“அப்படி ஒன்னும் என்னை யாரும் அட்ராக்ட் பண்ணலை.. அதுதான் உங்க கிட்ட காட்டினேன், ஒருவேளை எனக்கு தெரியாதது ஏதாவது உங்களுக்கு தெரியுதான்னு..?”

“எப்படி ஈஸ்வரோடு வெளியே சென்றிருக்கின்றாள், இங்கே ஒன்றும் நடவாதது போல யாரையோ காமித்து எப்படி இருக்கிறார்கள் என்று கேட்கிறாள். அவனுக்கு இது தேவை தான்” என்று மனம் ஈஸ்வரிடம் கோபப்பட்ட போதும், வர்ஷினியிடமும் கோபப்பட்டது, “என்னுடைய அண்ணன் இவளுக்கு அவ்வளவு ஈசியா? என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றால் இவள்?” என்று.

“இந்த ஃபோட்டோ எல்லாம் காட்டி ஒப்பினியன் கேட்கற, அப்புறம் எதுக்கு விஸ்வாவோட வெளில போன? வர மாட்டேன் சொல்ல வேண்டியது தானே!” என்றாள் ரஞ்சனி, வேறு வார்த்தைகளில், அதாவது “அவன் உன்னை ப்ரபோஸ் செய்தது என்ன ஆனது?” என்று நேரடியாக கேட்காமல்.

“யார் போனா உங்க அண்ணனோட வெளில..?” என்றாள் ரஞ்சனியை பார்த்து வர்ஷினி. அவளின் குற்றம் சாட்டும் பாவனை வர்ஷினிக்கு பிடிக்கவில்லை.

“நீ போகலையா அவனோட?”

“நான் குழந்தைங்களோட போனேன்! அவர் தாசண்ணா வோட வேலையை பார்த்தார்!” என்றாள் அலட்சியமாக.

“என்ன?” என்று ரஞ்சனி அதிர்ந்து எழுந்து நின்று விட்டாள்.

ரஞ்சனியின் முகத்தில் ஒரு ஆக்ரோஷத்தை பார்த்த பத்து, அவளின் கை பிடித்தான். அதன் அழுத்தத்தில் வார்த்தையை விடாமல் ரஞ்சனி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாலும்.. பத்துவை திரும்பி பார்த்து முறைத்து நின்றாள்.

முரளி வர்ஷினியை அதட்டினான், “என்ன பேச்சு இது வர்ஷி? நம்மகிட்ட வேலை பார்க்கறவங்களோட ஈஸ்வரை சொல்வியா?” என,

“ப்ச்! முரளிண்ணா…” என்று அவனுக்கு சற்றும் குறையாத அதட்டலை குரலில் காட்டிய வர்ஷினி,

“அதை நான் சொல்லலை, அவர் தான் சொன்னார், நான் அவரோட வெளிய வரமாட்டேன்னு அவருக்கு தெரியும். அதனால தான் குழந்தைங்களை கூட்டிட்டு வந்தார். குழந்தைங்கன்றதால என்னால மறுக்க முடியலை, ஒரு நாள் நான் தாஸோட வேலையைப் பார்க்கிறேன்னு அவர் தான் சொன்னார்!”

“அஃப்கோர்ஸ், அது என்கிட்டே அவர் பெர்சனலா சொன்ன ஒரு வார்த்தை. அதை எப்பவும் யார்கிட்டயும் ஓபன் பண்ணியிருக்க மாட்டேன்! என்னை சொல்ல வெச்சது, ரஞ்சனி அண்ணி தான்!” என்று ரஞ்சனியை திரும்ப பார்த்து முறைத்தாள்.

“என்ன வர்ஷி இது?’ என்று பத்து சமாதானத்தில் இறங்க..

“என்னவா? அவங்க என்னை ப்ளேம் பண்ணினாங்க பத்துண்ணா, நேத்து எங்க அண்ணனோட சுத்திட்டு, இன்னைக்கு வேற மாப்பிள்ளையோட ஃபோட்டோ காட்றியான்னு மறைமுகமா கேட்கறாங்க?” என்றாள் நேரடியாக.

எல்லோருமே வாயடைத்து நின்றனர்!

“இந்த மாதிரி இன்னொரு தடவை பேசினாங்க, நான் அதை கேட்டுட்டு இருக்க மாட்டேன்.. அவ்வளோ சீப்பாவா என்னை நினைக்கிறாங்க?” என கேட்ட வர்ஷினியின் முகத்தில் இருந்த கோபம்..

யாராலும் பதில் பேச முடியவில்லை!

ஷாலினி தான் “வர்ஷி, ரஞ்சனி அந்த அர்த்ததுல சொல்லியிருக்க மாட்டா, ஈஸ்வர் அண்ணா கல்யாணத்துக்கு கேட்டார் இல்லையா? அது என்ன ஆச்சுன்னு கேட்டிருப்பா!” என,

“ப்ச்! சும்மா சப்பை கட்டு கட்டாதீங்க அண்ணி, எனக்கு தெரியும்! அண்ட் ரஞ்சனி அண்ணிக்கு அவங்க அண்ணன் என்னை கல்யாணம் பண்றதுல விருப்பம் இருக்காது, ஏன்னா என்னோட ஐடென்டிடி சரியா இல்லை இல்லையா?” என்று சொல்லி அவள் போக…

ரஞ்சனிக்கு பேச்சே வரவில்லை, “இல்லை! அப்படி எல்லாம் இல்லை! ஐஸ்வர்யாவை கொண்டு மட்டுமே ஈஸ்வரோடு வர்ஷினியின் திருமணம் அவளுக்கு பிடித்தமில்லை, வேறு என்ன அவளுக்கு வர்ஷினியோடு இருக்கிறது, எப்படி சொல்வாள் இதை”

வேகமாக வர்ஷினியின் முன் நின்றவள், “நீ சொல்ற மீனிங்ல என்னைக்கும் நான் உன்னை பார்த்தது இல்லை வர்ஷி, தேவையில்லாம இப்போ நீ தான் என்னை ப்ளேம் பண்ற, பத்துவோட என்னோட கல்யாணம் நடக்கறதுக்கு முன்னமே நான் அப்படி பார்த்தது இல்லை, இப்போ நீ பத்துவோட தங்கை. நான் அப்படி பார்க்கவே மாட்டேன்!” என்று ரஞ்சனி ஸ்திரமாக சொல்ல,

“அப்படி நினைக்கலைன்னா, என் அண்ணனோட ஊர் சுத்திட்டு வேற கல்யாணம் பண்ணறியான்னு நீங்க என்னை பார்த்திருக்க மாட்டீங்க!” என்றாள் வர்ஷினியும் விடாமல்.

“ரஞ்சனி, நீ பேசாதே!” என்று அதட்டிய பத்து.. “வர்ஷி எப்பவும் உங்க அண்ணி அப்படி பார்க்க மாட்டா, நீ தப்பு தப்பா புரிஞ்சிக்கிற!” என்றான்

“ஓகே, அப்படியே இருக்கட்டும்!” என்று சொல்லி வர்ஷினி போக,

யாராலும் அவளை சமாதானம் செய்ய முடியவில்லை.

“நான் அந்த அர்த்ததுல சொல்லலை!” என்று ரஞ்சனி சொல்ல..

முரளியும் ஷாலினியும் கவலையாகப் பார்த்திருந்தனர், இது ராஜாராமின் காதிற்கு போனால் என்ன ஆகுமோ என்று..

ஆனாலும் ஒரு வித்தியாசம் ரஞ்சனிக்கு வர்ஷினிக்கும் வந்தே விட்டது. “இவங்க அண்ணன் பெரிய ஆள்னா இவங்க வரைக்கும், எனக்கு என்ன வந்தது?” என்று கோபமாக தான் வர்ஷினி நினைத்தாள். கோபமெல்லாம் ஈஸ்வரின் மேல் தான் திரும்பியது, அது அர்த்தமற்றது என்று நன்றாக வர்ஷினிக்கு தெரிந்த போதும்.

ரஞ்சனியோ “ஐஸ்வர்யா பின்னாடி அப்படி சுத்தினான். உன்னோட வேகத்துக்கும் அவளோட நிதானத்துக்கும் சரிவராதுன்னு அவ்வளவு சொன்னேன்! கேட்டானா இவன்? கேட்கலை! இவனும் லவ் சொல்லி, அவளும் சொல்லி, இப்போ சரி வராதுன்னு அவளை கழட்டி விட்டுட்டான்”

“அவனுக்கு வேணும் நல்லா வேணும்!” என்று தான் கோபமாக நினைத்தாள். அதே சமயம் “ஐஸ்வர்யா போல இவளிடம் இருந்தும் அவனின் மனம் மாறிவிட்டால்?” நினைக்கவே பயமாக இருந்தது.

திரும்பினால் அவளையே பார்த்தபடி பத்து.. “இல்லை, நான் அப்படி சொல்லலை” என்றால் அவனிடமும்..

“நீ எந்த அர்த்ததுல சொன்னாலும் நீ அவளை குற்றம் சாட்டினது நிஜம், நானும் இங்கே தானே இருந்தேன்!”

“ஆமாம்! விஸ்வா என்ன அர்த்தத்துல அவளோட பழகறான்னு அவளுக்கு தெரியாதா.. அப்புறம் எதுக்கு அவனோட வெளில போனா .. அப்போ என்ன நினைப்பான், இவளுக்கும் அவனை பிடிக்கும்னு நினைக்க வாய்ப்பிருக்கு இல்லையா.. இப்போ வேற ஃபோட்டோ காட்டி கேட்கறா? இது தப்பு தானே!” என்றாள் பத்துவிடமும்.

“அதான் தெளிவா சொல்றாள்ள, குழந்தைங்களுக்காகப் போனேன்னு!”

“அவங்க ஜகன் அண்ணா குழந்தைங்க, ஜகன் அண்ணா வந்தா போயிடுவளா? மாட்டா!” என்று ரஞ்சனியும் அவளின் வாதத்திலேயே நிற்க..

“என்ன பேசற நீ?” என்ற பத்துவிற்கு கோபம் வர ஆரம்பித்தது.

“கோபப்படறதுல பிரயோஜனமில்லை, நெருப்புன்னு தெரிஞ்சும் தொட்டுட்டு, அப்புறம் சுடுதுன்னா, யாரும் எதுவும் பண்ண முடியாது.. வேண்டாம்னா எல்லா வகையிலும் வேண்டாம்னு காட்டணும்!” என்றாள் தெளிவாக.

அதை தானே பத்துவும் வர்ஷினியிடம் முன்பே சொல்லியிருக்கின்றான், “விடு! ஒரு நாள் வெளில போகறதுனால எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது!” என,

“என்ன பேசறீங்க நீங்க? சீரியஸ்னஸ் புரியலையா, அதுவுமில்லாம அப்படி எப்படி யாரோடவோ போகலாம், எங்க வீட்ல எல்லாம் அப்படி விட மாட்டாங்க, ஒரு வேளை உங்க வீட்டுப் பழக்கமோ? அதுதான் வருதோ?” என்ற வார்த்தையை ரஞ்சனி விட்டாள்.

அவள் சொல்ல வந்த அர்த்தமே, “இப்படி அவள் செய்யக் கூடாது என்று அண்ணன் நீ சொல்ல வேண்டும்!” என்ற அர்த்தம் மட்டுமே, “உங்கள் வீட்டின் பழக்கமாக அது உனக்கு தப்பாக தெரியவில்லையா? நீ வர்ஷினியிடம் சொல்ல வேண்டும் தானே!” என்ற அர்த்தம் மட்டுமே, அங்கு பத்துவைக் குறித்த பேச்சு மட்டுமே, வர்ஷினியை அவள் பேசவில்லை..

ஆனால் வார்த்தை பிரயோகங்கள் முற்றிலும் பத்துவிற்கு வேறு அர்த்தத்தைக் கொடுக்க,

அவள் முடித்த நேரம் பத்து ரஞ்சனியை கன்னத்தில் அறைந்து  இருந்தான்.

“வர்ஷினியை பத்தி தப்பா பேசறியா நீ?” என்று கர்ஜிக்க,

“நான் எங்கே அவளை பேசினேன்!” என்று முழித்து நின்றாள் ரஞ்சனி, விழுந்த அடியில் கண்களில் தானாக நீர் நிறைந்தது.

அவன் அறைந்த நேரம் கமலம்மா வேறு சரியாக அங்கே வர, “டேய் பத்து, என்னடா பண்ற?” என்று பதறி அருகில் வந்தார்.

பத்து வாயே திறக்கவில்லை.. ரஞ்சனி அதிர்ந்து கண்ணீர் வழிய சில நொடிகள் நின்றவள்,  வேகமாக தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு வெளியே நடக்க,

கமலம்மா தான் “ரஞ்சனி இரும்மா, என்ன விஷயம்?” என்று கேட்க கேட்க.. “ஒன்றுமில்லை” என்பது போல தலையை மட்டுமே ரஞ்சனியால் அசைக்க முடிந்தது, வேறு பேச முடியவில்லை. ஒரு அழுத்தம் தொண்டையில், பேச்சே வரவில்லை.

“அண்ணனும் நம்பவில்லை! கணவனும் நம்பவில்லை! யாருக்குமே தான் நல்லவள் இல்லையா, நான் வர்ஷினியை அப்படி சொல்வேனா என்ற துக்கம் மட்டுமே, ஈஸ்வரும் அதையே தான் சொல்கிறான் உன்னுடைய நாத்தனார், ஆனாலும் நீ அவளுக்காக பேசவில்லை என, பத்துவும் இப்போது என்னை தப்பாக தான் நினைக்கின்றான்”.

“ஐஸ்வர்யாவும் என்னை துரோகியாகத் தான் ஒதுக்கி விட்டாள். இதிலெல்லாம் என்னுடைய தவறு என்ன இருக்கிறது. ஒரு வேளை நான் தான் தவறோ? நான் தான் சுயனலவாதியோ?” கண்ணீர் வழிய வழிய பாதையே தெரியாத போதும் பழகிய வீடு என்பதால் நடந்தாள்.

வெளியே வேகமாக நடந்து விட்டாள், ஒரு ஆட்டோ பிடித்தவள், நேராக காலேஜ் சென்று விட்டாள். அங்கே அம்மா வீட்டிற்கும் இப்போது செல்ல முடியாது. அம்மா இப்படி தன்னை பார்த்தால் தாங்கவே மாட்டார் என்று தெரியும்.

“அவ்வளவு கெட்டவளா நான்? என்னை அடித்து விட்டான்!” யாரும் அவளை அடித்ததாக ஞாபகமே இல்லை.

பிரச்சனைகளின் பிடியில் இருந்து தப்பிக்க அவனை மணந்து கொண்டாலும், அவனுக்கு என்னை பிடித்திருக்கின்றது என்று நம்பி தானே மணந்து கொண்டேன்.. என்னை அடித்து விட்டான்.. நினைக்க நினைக்க கண்களில் நீர் பெருகியது. லைப்ரரிக்கு போய் ஒரு ஓரமாக தலைவலி என்று தோழியிடம் சொல்லி விட்டு கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.

பிரச்சனை என்று அங்கே அவள் நினைத்தது அஸ்வினை மட்டுமே. இதற்கு பேசாமல் விஷ்வாவிடமே அஸ்வினை சொல்லியிருக்கலாம், அவனே பார்த்துக் கொண்டிருப்பான். நானாக தேடிப் போய் பத்துவை திருமணம் செய்து கொண்டது தவறோ?

எங்கே ஆட்கள் இல்லாமல் இருப்பார்கள், எங்கே தனிமையை தேடி ஓடுவது என்று புரியவேயில்லை.

அங்கே பத்துவின் மனதிலும் மிகுந்த போராட்டம். முதலில் இருந்தே ரஞ்சனி, ஈஸ்வரோடு வர்ஷினியின் திருமணத்தை ஆதரிக்கவில்லை, நான் வேண்டாம் என்று சொன்னால் அது வர்ஷினிக்காக, இவள் ஏன் வேண்டாம் என்று சொல்கிறாள்? அப்போது வர்ஷினி அதற்கு தகுதியில்லை என்று தானே அர்த்தம்.

அவர்களுடைய பணப் பிரச்சனையில் இருந்து வெளியே வர மட்டுமே என்னை திருமணம் செய்து கொண்டாளோ என்ற எண்ணம் ஒங்க ஆரம்பித்தது.

பத்துவிற்கு ஐஸ்வர்யாவைப் பற்றி தெரியவே தெரியாது. ஐஸ்வர்யா ரஞ்சனிக்கு மிகவும் நெருங்கிய தோழியும் கூட. திருமணதிற்கு பின் அதை பார்க்கும் சந்தர்ப்பங்கள் இல்லை..

ஐந்தரை வருடங்கள் நகமும் சதையுமாக இருந்த தோழிகள்..

அதன் தாக்கங்கள் அதிகம்! அஸ்வினை கொண்டு தான் திருமண சமயத்தில் ஐஸ்வர்யாவிடம் இருந்து ரஞ்சனி சற்று தள்ளி நிற்க, அந்த சமயம் ஈஸ்வரும் ஐஸ்வர்யாவை விட்டு விலகி விட, ரஞ்சனிக்கும் ஐஸ்வர்யாவிற்கும் நிரந்தர பிரிவாகிவிட்டது.

எல்லாம் யோசனையாக மனதினில் ஓட, ரஞ்சனி மனதின் பாரம் தாளாமல் நிமிர்ந்து அமர்ந்தாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் “உங்களை பார்க்க வந்திருக்காங்க!”
என்று அவளின் டிபார்ட்மென்ட் அட்டன்டர் வந்து சொல்ல,

பத்துவாக இருக்கும் என்று எண்ணி தான் வந்தாள். வந்தாலும் அவனுடன் போகக் கூடாது என்று நினைத்து வர… அங்கே இருந்தது ஈஸ்வர்.

ஈஸ்வரை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவனைப் பார்த்ததும் மட்டுப்பட்டு இருந்த அழுகை பொங்கியது. அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.

“எதுக்கு வந்த?” என்று அவனருகில் வந்து கேட்க முயன்ற போது பேச்சே வரவில்லை.

அவளின் முகம் பார்த்த உடனே “வீட்டுக்கு போகலாம்!” என்றான்.

“ம்” என்று தலையாட்டி, ஹெச் ஓ டி யிடம் சொல்லி பேக் எடுத்து வர சென்றாள்.

செல்லும் அவளையே பார்த்திருந்தான் ஈஸ்வர்.

முரளி சற்று முன் தான் அழைத்திருந்தான், விஷயத்தையும் சொல்லியிருந்தான், “என்னன்னு தெரியலை, பத்துக்கும் ரஞ்சனிக்கும் சண்டை போல, அடிச்சிட்டான் போல” என்றான் தயங்கி தயங்கி.

“என்ன?” என்று அதிர்ந்து விட்டான் ஈஸ்வர்.

“அங்க வீட்டுக்கு வந்திருக்காளா இல்லை காலேஜ் போயிருக்கிறாளா தெரியலை. அம்மா எங்க இருக்கான்னு பார்க்க சொன்னாங்க?” என,

“நான் பார்த்துக்கறேன்!” என்று சொல்லி போனை வைத்து விட்டான். திரும்ப முரளி அழைத்த போதும் எடுக்க வில்லை. இப்போது அவளை தேடி காலேஜ் வந்திருந்தான்.

ரஞ்சனி வந்தவுடன், ஈஸ்வர் என்ன என்றெல்லாம் கேட்கவில்லை, மெளனமாக நடக்க, அவனுடன் நடந்தாள்.

கார் ஏறும் வரை கட்டு படுத்தி இருந்தவளுக்கு, ஏறியதும் அப்படி ஒரு அழுகை…

ஆதரவாக அவளின் தோள் பற்றி “நான் இருக்கேன் தானே! நான் பார்த்துக்கறேன் எதுன்னாலும்.. எதுக்கும் அழக் கூடாது!” என ஈஸ்வர் சொல்ல,

ஆனாலும் அழுகை நிற்கவில்லை.

முகத்தை கைகளில் மூடி அப்படி ஒரு அழுகை, காரில் அமர்ந்த படியே தன் மேல் சாய்த்துக் கொண்டவன், “அழக் கூடாது! அண்ணா நான் பார்த்துக்கறேன் சொல்றேன் தானே! பார்த்துக்குவேன்!”

“உனக்கு என் மேல கோபம், நீ என்னை பார்க்கவேயில்லை!” என சொல்லி கண்ணீரோடு பார்க்க.

“ஆமாம்! இப்படி நீ அழுதா நான் எப்படி பார்ப்பேன்? உன் முகம் சகிக்கலை?” என,

அழுகையிலும் அவனின் தோளில் ஒரு அடி வைக்க,

“எதுன்னாலும் நான் பார்த்துக்கறேன்! இப்படி அம்மா முன்ன அழுதுடாத.. அவன் அடிச்சதும் சொல்லிடாத! தாங்க மாட்டாங்க!” என,

உனக்கு தெரியுமா என்ற பார்வை பார்த்த போதும், “நான் உன்கிட்ட கூட சொல்லலை!” என்றாள் தேம்பியபடி.

“தட்ஸ் குட் கேர்ள், ஈஸியா கிடைச்சா அதோட அருமை பெருமை தெரியறது இல்லை.. அண்ணா எல்லாம் பார்த்துக்குவேன், நீ இப்படி அழாத.. எனக்கு பார்க்க முடியலை!” என்றான்.

“ம்ம்” என்று தலையாட்டி ரஞ்சனி கண்களை துடைத்துக்கொள்ள, காரை கிளப்பினான் ஈஸ்வர்.

மிகுந்த வருத்தமே ஈஸ்வருக்கு! “பின்னே எவ்வளவு செல்லமாக வளர்ந்தவள்.. இந்த ஒரு வருடமாக பத்துவின் வீட்டினில் இருக்கின்றாள், இன்னும் வாழ்க்கையை ஆரம்பித்தது போலத் தெரியவில்லை.. அப்படியிருக்கையில் அடித்திருக்கின்றானா அவன்?” என்று கோபம் கனன்றது.

பெண்களை அடிப்பதே தவறு.. அதிலும் ரஞ்சனி ஒரு டாக்டரும் கூட, எப்படி இருந்தாலும் பெண்கள் பெண்கள் ஆகிவிடுகிறார்கள், பணியின் மதிப்பு கூட இல்லையா? தப்பே இவள் செய்திருக்கட்டும்? அடித்து விடுவானா இவன். என்ன நினைத்துக் கொண்டிருகின்றான்!

“என் தங்கைக்கு என்ன மாப்பிள்ளையா கிடைத்திருக்க மாட்டான், இவனை தேடிப் போய் திருமணம் செய்துகொண்டால், அவள் மதிப்பு குறைந்து விடுமா?”

“எங்கே தவறிவிட்டோம், நான் வர்ஷினியிடம் தவறியது இதுவரையிலும் அவளுக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்!”

“வேறு எங்கு தவறு? என்ன நான் சரி செய்ய வேண்டும்?” என்று யோசிக்க ஆரம்பித்தான்.

ஆனாலும் ஈஸ்வரின் தங்கையை ஒருவன் அடிப்பதா, அவன்  கணவனாகினும்..

எனக்கும் ரஞ்சனிக்கும் சண்டை என்பது வேறு.. கணவன் என்றால் அடித்து விடும் உரிமை வந்து விடுகிறதா? கண்டிப்பாக வரும், எப்போது? நான் திருப்பி அடிப்பேன் என்று சொல்லும் மனைவியிடம், திரும்ப அடிக்கும் மனைவியிடம், அங்கே அது உரிமை ஆகிவிடுகிறது, கூடவே சகஜமும் ஆகிவிடுகின்றது.

ஆனால் ரஞ்சனி அப்படி எல்லாம் செய்யவே மாட்டாள்.. அவளின் அருமை அந்த மடையனுக்கு தெரிய வேண்டாமா? என்று கோபம் பொங்கியது.

விலக நினைத்தாலும் விலக முடியாதது பந்தமும் பாசமும்!        

 

Advertisement