Advertisement

அத்தியாயம் முப்பத்தி ஐந்து :

ஈஸ்வரின் இலகுவான மனநிலை அப்படியே மாறியது.. நிற்காமல் செல்லும் அவளைப் பார்த்தான்.

ஒரு திருப்பத்தில் பார்வையில் இருந்து மறைய.. அவளின் பின் சென்றான். அதற்குள் அப்பாவின் ரூம் சென்றிருந்தாள்.

ஈஸ்வர் உள்ளே செல்லவில்லை… அவள் வெளியே வருவதற்காக காத்திருந்தான். முரளி உள்ளே சென்றிருந்தான். கிட்ட தட்ட பதினைந்து நிமிடம் வெளியே பொறுமையாக நின்றிருந்தான். மனது ஏதோ சரியில்லை என்று அடித்துச் சொன்னது.

முரளியோடு தான் வர்ஷினி வெளியே வந்தாள்.. மீண்டும் கவனிக்காதது போல “முரளிண்ணா கார் வரை வாங்க” என்று சொல்லி முரளியை அழைக்க..

ஈஸ்வர் முரளியைப் பார்த்த பார்வை “நீ உள்ளே போ” என,

எப்படி வர்ஷினியின் வார்த்தையைத் தட்ட முடியும்.. அங்கே அந்த சமயம் முரளி அண்ணனாகிப் போனான் நண்பன் அல்ல. முரளி ஈஸ்வரை பார்த்தவாறு வர்ஷினியுடன் செல்ல..

அதுவரை இருந்த பொறுமை பறந்தது.. “இப்போ எதுக்கு என்னைப் பார்த்து ஓடற நீ” என்று காட்டமாக வர்ஷினியிடம் கேட்க,

“ஈஸ்வர் என்ன இது?” என்றான் முரளி.

முரளியின் புறம் திரும்பக் கூட இல்லை.. “என்ன பண்ணிட்டு இருக்க? என்னைப் பார்த்து பயந்து ஓடற” என்றான் தீவிரமாக..

மனதில் ஒரு பதட்டம் வர்ஷினிக்கு ஏற ஆரம்பித்தது. ஆனாலும் அதை வெளியில் காட்டாமல்.. “எனக்கு ஒரு பயமும் இல்லை.. நான் என்ன பண்ணினாலும் உங்க கிட்ட சொல்லணும்னு இல்லை புரியுதா?” என்றாள் கோபமாக..

முரளி, “வர்ஷினி என்ன இது?” என்று சொன்னவன்.. “ஈஸ்வர்!” என்று அவனையும் அடக்கினான்.

ஈஸ்வர் வர்ஷினியை சிறிது நேரம் பார்த்தவன்.. இது கோபமாகப் பேசும் நேரம் அல்ல என்று புரிந்து… முகத்தை அமைதியாக்கினான். பின்பு முரளியைப் பார்த்து  “வர்ஷினியை அனுப்பிட்டு வா” என்றவன்.. ராஜாராமின் ரூம் நோக்கிப் போய்விட.. அவ்வளவு சீக்கிரம் வார்த்தையை முடித்துக் கொண்டானா என்ற யோசனை மனதில் ஓடியது.

திரும்ப முரளியைப் பார்த்து, “அண்ணா உன்னோட ஃபிரண்ட் அப்பாக் கிட்ட என்ன பேசினாலும் என்கிட்டே சொல்லணும்.. என்கிட்டே யாரும் சொல்லாம விட்டீங்க.. என்ன பண்ணுவேன்னு எனக்குத் தெரியாது.. நான் ஹாஸ்டல் போய்டுவேன்!” என்று முரளியை மிரட்டி செல்ல..

என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பிப் போய்விட்டான் முரளி. “வர்ஷினி இப்படியெல்லாம் பேசாத! உன்னை யாரும் எங்கேயும் அனுப்ப மாட்டோம் புரிஞ்சதா?” என்றான் முரளியும் கடுமையாகவே.. “பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் வீட்ல இருந்து தான் சண்டை போடணும், வெளிய போறேன்ற வார்த்தை வரக் கூடாது!” என்றும் கோபமாகச் சொல்ல..

முரளி அதிகம் கோபமாகப் பேச மாட்டான்.. அவன் கோபப்படவும் தணிந்தவள், பதில் பேசாமல் முறைத்துச் செல்ல..

முரளிக்கு என்னவாகுமோ என்று பயமே வந்தது.. “வர்ஷினிக்குப் பிடிக்கவில்லை, இந்த ஈஸ்வர் வற்புறுத்துகின்றானோ! சரியில்லையே!” என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.

உள்ளே ராஜாராமிடம், “அப்பா, நீங்க வர்ஷினிக் கிட்டப் பேசுங்க.. ஒரு வாரம் எல்லாம் வெயிட் பண்ண வேண்டாம்.. காலையில வீட்ல பாட்டி என் கல்யாணத்தைப் பத்தி பேசினாங்க.. கிரக நிலை மாறுது இன்னும் ரெண்டு மூணு மாசத்துல பண்ணிடணும்ன்னு.. சோ வர்ஷினி இல்லைனா வேற யாரையாவது பண்ணி வெச்சிடுவாங்க”

“நீங்க சொன்னா நான் பாட்டிக் கிட்டப் பேசணும்.. அவங்க ஒத்துக்கறது ரொம்ப சிரமம்” என்றான்.

ஆம்! தள்ள வேண்டாம், திருமணம் முடித்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் வேரூன்றியது. ஏனென்று தெரியவில்லை.. உள் மனது சொல்ல.. அதற்காக இல்லாத விஷயத்தை இட்டு கட்டினான், பாட்டி திருமணம் பேசினார்கள் என்று.

ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் அவர்களின் சம்மதம் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று தெரியும்.

சம்மதித்தால் சரி! சம்மதிக்காவிட்டால், எதிர்த்தாவது திருமணம் செய்வது என்ற முடிவிற்கு சில நிமிடத்திற்கு முன் வந்து விட்டான்.

யாரும் எதுவுமே அவனுக்குத் தடையில்லை.. ஆனால் வர்ஷினி!!

ஒரு வேலை உடம்பு சரியில்லாமல் இருக்குமோ? அவளுக்குத் தெரியாமல் போய்விட்டதோ என்ற எண்ணம் தோன்றிய நிமிடம், “இதோ வந்திடறேன்ப்பா” என்று வெளியில் வேகமாகச் சென்றான்.. வேக நடைகளால் ஓடினான் என்றே சொல்ல வேண்டும்.. தாஸ் காரை ஹாஸ்பிடல் வெளியில் நகர்த்த ஆரம்பித்து.. அதன் கேட்டில் எண்ணை பதிந்து கொண்டிருக்க.. வேகமாக சென்றவன்.. அவர்களைப் பிடித்து விட்டான்.

தாஸ் அவனைப் பார்த்ததும், “சார்! எப்போ வந்தீங்க” என்றான் முகம் மலர்ந்து.

“தாஸ்! நீ பின்னாடிப் போ!” என்றவன் டிரைவர் சீட்டினில் ஏற முயல.. வர்ஷினி கதவை திறந்து இறங்க முயன்றாள்…

அந்தச் செயல் அப்படி ஒரு கோபத்தை ஈஸ்வருள் கிளப்ப, “இறங்கின என்ன பண்ணுவேன்னே தெரியாது! உட்காரு!” என்று ஈஸ்வர் அவளிடம் விரல் நீட்டிப் பேசிய விதத்தில் பயந்து போனாள். இப்படி ஒரு ஆக்ரோஷத்தை அவனிடம் பார்த்ததில்லை. மனதை ஒரு பயம் தீவிரமாக அழுத்தியது. அந்த முகத்தில் அப்போது தெரிந்த அச்சத்தை ஈஸ்வர் கவனிக்கவில்லை.

சில நொடிகள் தயங்க.. அதில் தாஸ் இறங்கி ஈஸ்வர் ஏறியிருந்தான். தாஸ் ஒன்றும் சொல்லவில்லை, நாளுக்கு நாள் வர்ஷினிக்கு அதிகரித்து வரும் புதுப் புது நண்பர்கள், அவனுள் ஒரு அச்சத்தைக் கொடுத்தனர். யாராவது வர்ஷினியை கட்டுக்குள் வைத்தால் பரவாயில்லை என்ற எண்ணம் அதோடு, தாசை அவன் ஒன்று இறக்கிப்  போகச் சொல்லவில்லை, பின் தானே  அமரச் சொன்னான். சொன்னதை செய்தான்.

தாஸ் பின் அமர.. சிறிது தூரம் ட்ராபிக்கில் கலந்தவன்… வழியில் இருந்த ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலின் உள் சென்று பார்க்கிங்கில் காரை நிறுத்தி.. “தாஸ்! நாங்க சாப்பிடப் போறோம் வர்றியா?” என,

தாஸ் என்ன சொல்லுவான்.. “நான் இங்க இருக்கேன் சார்!” என்றான்.. அதே சமயம் தனியாகச் சாப்பிட அனுப்பவும் பயம்.. அய்யாவிற்குத் தெரிந்தால் திட்டுவார் எனத் தோன்ற.. தடுமாறி நின்றான்.

“உன்னைக் கேட்பாங்கன்னு தெரியும்! எங்களோட சாப்பிடாத, ஒரு இடத்துல தூரமா உட்கார்ந்துக்கோ. அங்க உட்கார்ந்து சாப்பிடு” என்றவன்..

“எனக்குப் பேசியே ஆகணும் இறங்கு!” என்று ஈஸ்வரின் குரலில் இருந்த தீவிரம் மறு பேச்சு பேசாமல் வர்ஷினியை இறங்க வைத்தாலும்.. இப்போது பயம் எல்லாம் இல்லை “என்னை செய்துவிடுவாய் என்னை? பார்த்து விடுகிறேன்!” என்ற இறுமாப்பு தோன்ற இறங்கினாள்.

அப்போது தெரிந்த அவளின் கண்களின் பாவனையில் சற்று ஆசுவாசப்பட்டான் ஈஸ்வர்.. அப்போது அந்தக் கண்கள் தெளிவாக இருந்தது, காலையில் பார்த்தது போல ஒரு மயக்கம் இல்லை.

அதில் எரிச்சலுற்றவள், “என் கண்ணை வேணாப் பிடுங்கி உங்க கைல குடுத்துட்டா அப்போ என்னை விட்டுடுவீங்களா? எதுக்கு இப்படி ஒரு கிரேசி பிஹேவியர்.. பைத்தியம்மாயிடப் போறீங்க!” என்றாள் அலட்சியமாக ..

அவளைப் பார்த்தவன்.. “உன் கண்ணை ஏன் பிடிங்கணும்னு நினைக்கிற.. உன்னோட கண் உன்னைப் பார்க்கிறதுக்கான ஒரு கதவு எனக்கு அவ்வளவு தான்.. நீ என் கண்ணைப் பிடுங்கி அதைப் பார்க்க முடியாமப் பண்ணினாலும் நீ தான் எனக்கு வேணும்.. உன்னை ஹர்ட் பண்றதைப் பத்தி எப்பவும் நினைக்காத, என்னைப் பண்ணு” என்றான் மிகவும் தீவிரமாக.

எதற்கு இவனுக்கு இவ்வளவு தீவிரம் என்று மனதில் ஒரு பயம், ஒரு அழுத்தம், மீண்டும் வர்ஷினிக்கு. “ஏன் இப்படிப் பண்றீங்க? உங்களுக்கு பிடிச்சா எனக்கும் பிடிக்கணும்னு இல்லை! ஏன் உங்களுக்குப் புரிய மாட்டேங்குது” என்றாள் முகத்தில் ஒரு கலவரத்தை தேக்கி.

அதை ஈஸ்வர் கவனத்தில் கொள்ளவில்லை. அவளின் வார்த்தையின் சாராம்சத்தைக் கவனித்தவன்,

சட்டென்று விடுபட்டவனாக “தேங்க்ஸ்! எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு ஃபீல் பண்றதுக்கு, எனக்கே அது ரொம்ப நாள் புரியலை!”

“ஐயோ, கடவுளே! திரும்பவும் முதலில் இருந்தா” என்பதுப் போல ஒரு பார்வை பார்த்தாள்.

“வா!” என்று அவன் உள்ளேப் போக…..

“யாரையாவது உதவிக்கு அழைப்போமா என்ன இது?” என்று மனதில் ஒரு சப்தம் தோன்றியது. அந்த இடத்தில் தாஸை அவள் கருத்தில் கொள்ளவில்லை.

திரும்ப தைரியத்தை வரவழைத்து “ச்சே! இவனிற்கு பயப்படுவதா பார்த்து விடுவோம்!” என்று யோசித்தபடி மெதுவாகப் பின் தொடர்ந்தாள். ஆனாலும் ஒரு பயம் எழுவதைத் தடுக்க முடியவில்லை. பின் தொடர்ந்தாள்.

காலை நேர பரபரப்பு சிறிதும் இல்லாமல் இருந்த அந்த ரெஸ்டாரன்ட் உள் சென்று.. ஓர் இருக்கையில் அமர்ந்தான். அவளும் சென்று அமர்ந்தாள். தாஸ் அவர்களைப் பார்த்த படி வேறு இடத்தில் அமர்ந்தான்.

“உனக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா? நீ நான் முன்ன பார்த்த மாதிரி இல்லை. எனக்கு எதோ வித்தியாசமா தோணுது” என..

“என்ன வித்தியாசமா தோணுது?” என்றால் அவனைக் கூர்மையாகப் பார்த்தபடி, முதல் முறை அவன் அப்படி சொன்ன போது இருந்த தடுமாற்றம் இல்லை.

“உன்னோட கண்ணு எப்பவும் ரொம்ப அட்ராக்டிவா, சார்மிங்கா இருக்கும். ஏதோ எனக்கு வித்தியாசம் தெரிஞ்சது, அப்போ உன்னைப் பார்த்த உடனே, இப்போ பரவாயில்லை”

“உனக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா. எதுக்கும் பார்த்துடலாமா? அப்பாக்கு நிறைய ப்ராப்ளம்ஸ் இருக்குத் தானே!” என்றான்.

“இல்லை, ஐ அம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட், அதுக்கு அவசியமில்லை, உங்களுக்கு என் மேல இருக்குற அட்ராக்ஷன் குறைஞ்சு இருக்கும். அதுதான் அப்படி தோணுது, என்னை விட்டுடுங்க!” என்றாள் தணிவாகவே.

சலித்த பாவனையை முகத்தில் கொண்டு வந்தவன் “என்ன பண்றேன் நான், உன்னை ஒன்னுமே பண்ணலையே” என்றான்.

“இல்லை! யு  ஆர் ட்ரபிலிங் மீ டு தி எக்ஸ்ட்ரீம்!”

“என்ன? நான் என்ன பண்ணினேன்! நைட் தான் இந்தியாவே வந்தேன், இந்த ஒரு வருஷமா நான் உன்னைப் பார்க்கலை, கான்டாக்ட் பண்ணலை! எதுவுமே பண்ணலையே!”

“யு நோ ஃபிசிகல் ஹராஸ்மென்ட் விட, மெண்டல் ஹராஸ்மென்ட் இன்னும் அதிகம். சொல்லப் போனா உங்க ஃபிசிகல் ஹராஸ்மென்ட்ல இருந்து கூட அப்போவே வெளில வந்துட்டேன். ஆனா இது முடியலை” என்று வர்ஷினி சொல்லும் பொழுது அவளின் குரலில் இருந்த கலக்கம் வெகுவாக ஈஸ்வரை அசைத்தது.

“என்ன பண்றேன் நான்?” என்றான்.

“என்ன பண்ணலை?” என்றாள் ஆவேசமாக.

“கொஞ்ச நாள் உன்னைப் பார்க்க மாட்டேன், ஆனா திரும்ப வருவேன், யாரையாவது கல்யாணம் பண்ணினாக் கூட உன்னைத் தான் நினைப்பேன் சொல்றீங்க.. இப்படி ஒருத்தங்க சொல்லும் போது எதுவுமே இல்லாத மாதிரி எப்படி என்னால நார்மலா இருக்க முடியும்”

“என்னைப் பார்த்து நல்லா இருக்கியான்னு கேட்கறீங்க? எப்படி நல்லா இருப்பேன்.. நான் நிம்மதியா தூங்கி எவ்வளவு நாள் ஆச்சு” என்று சொல்லும் பொழுது கண்கள் கலங்கியது.

முகத்தில் ஒரு ஆதரவற்ற தன்மை..

அணைத்து அறுதல் சொல்ல மனம் துடித்தது. என்ன செய்வது என்று புரியாமல் விழித்தான். இப்படி அவள் நினைத்துக் கொண்டு இருப்பாள் என்று நினைத்ததே இல்லை. வெளியில் காட்டிக் கொள்வது போல இல்லாமல் மனதளவில் தைரியம் குறைவோ என்று தோன்றியது.

“சாரி! ஐ அம் ரியல்லி சாரி! எப்பவும் உன்கிட்ட எது பண்ணினாலும் தப்பாப் போயிடுது” என்று ஈஸ்வர் சொன்ன போது, அவனின் முகம், குரல் உடல் மொழி, எல்லாம் மன்னிப்பை மட்டுமே வர்ஷினியிடம் வேண்டியது.

“அப்போ என்னை விட்டுடறீங்களா?’

“விடறதுன்னா புரியலை… நான் உன்னை ஒண்ணுமே பண்ணலையே!”

“அது எனக்கு சொல்லத் தெரியலை! சம்திங் டிஸ்டர்ப்ஸ் மீ, யார்கிட்டயும் சொல்ல முடியலை.. அப்பாக்கு தெரிஞ்சா உங்களை கொன்னே போட்டுடுவார்!”

“அப்போ உங்க அப்பாக்கிட்ட சொல்லிடேன். எனக்கு ஒன்னும் பயம் கிடையாது. ஈஸ்வர் அவ்வளவு ஈசி கிடையாது. ஒரு வேலை நீ நினைக்கிற மாதிரி உங்கப்பா என்னைக் கொன்னுட்டா, உனக்கு என்கிட்ட இருந்து விடுதலை தானே!”

“ப்ச்! காட்டிக் குடுக்கணும்னா நீங்க என்கிட்டே தப்பா நடந்தப்போவே காட்டிக் கொடுத்திருப்பேன்!”

“கொடு! உன்னை யாரு வேண்டாம் சொல்றா, எதுக்கு இப்படி உன் மனசை வருத்திகிட்டு இருந்து இருக்க!” என்றான் உண்மையாக.

“அது என்னால முடியாது!”

“உன்னால முடியாது தானே! அப்போ எனக்கு உன்னோட லைஃப்ல ஒரு சேன்ஸ் கொடு!”

“என்னது சேன்ஸ்ஸா???? எதுக்குக் குடுக்கணும்????” என்றாள் காட்டமாக.

“ஒன்னு என்னைக் காட்டிக் கொடு, இல்லை சேன்ஸ் கொடு! ஏதாவது ஒன்னு நீ பண்ணு!” என்றான் ஸ்திரமாக.

வர்ஷினியின் முகத்தினில் ஒரு ஆத்திரம் பொங்க, “உனக்குத் தெரியாது நீ என்ன பண்ணிட்டு இருக்கேன்னு! உனக்குத் தெரியாது! யு ஆர் கில்லிங் மீ ஃப்ரம் மை இன்சைட்!”

“இவ்வளவு சொல்றேன், திரும்பத் திரும்ப பேசினா என்ன அர்த்தம்.. யு ஆர் கோயிங் டு ஸ்பாயில் மீ டோட்டலி,  யு நோ என்னோட பதினெட்டாவது பிறந்த நாள் அன்னைக்கு தான் நீ என்கிட்டே அப்படி நடந்த, நாளைன்னுக்கு என்னோட பத்தொன்பதாவது பிறந்த நாள்.. இந்த ஒரு வருஷமா நான் மனசளவுல அனுபவிக்கிற டார்ச்சர் எனக்குத் தான் தெரியும்” என்று வர்ஷினி சொல்லச் சொல்ல அதிர்ந்து போனான்.

“உனக்குப் புரியாது.. நீ ஒரு பாதுக்காப்பான குடும்ப சூழ்நிலையில பிறந்து வளர்ந்த! என்னோட ஃபீலிங்க்ஸ் உனக்குப் புரியாது, உன்னை எல்லோரும் ரொம்ப மரியாதையா தான் பார்ப்பாங்க, என்னைப் பத்தி தெரியாதவங்க என்னை மரியாதையா தான் பார்ப்ப்பாங்க! ஆனா தெரிஞ்சிட்டா ஐ அம் லுக்குட் டவுன் இன் திஸ் சொசைட்டி, ஆனா எனக்கு அது ஒரு பெரிய விஷயம் கிடையாது, நீ கூட என்னை முதல் நாள் அப்படித்தான் பார்த்த!” என்றாள் மரியாதை எல்லாம் கைவிட்டு.

“ஆனா யு சி…..” என்று ஆரம்பித்தவள், “எல்லாம் உன்கிட்ட என்னால சொல்ல முடியாது!” என்று சொல்லி முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டாள்.

ஈஸ்வருக்கு ஒன்று நன்கு புரிந்தது, முதலிலும் அதைத்தான் சொன்னாள், இப்பொழுதும் அதைத்தான் சொல்கின்றாள்.. மிகவும் மரியாதையான ஒரு வாழ்க்கையை எதிர்பார்க்கின்றாள் என்று புரிந்தது.

“என்னால நீ எதிர்பார்க்கிற எல்லாம் கொடுக்க முடியம் வர்ஷி!”

முகத்தை நிமிர்த்தவே இல்லை.. சிறிது நிமிடங்கள் கழித்து நிமிர்ந்தாள், கண்களில் நீர் நிறைந்து இருந்தது.

“ஆனா எனக்கு வேண்டாம், நீ எனக்கு வேண்டாம், நீ என்னை ரொம்ப கீழ நினைச்சு என்கிட்டே மிஸ்பிஹேவ் பண்ணிட்ட. இப்போ அதைச் சரி பண்ணக் கல்யாணம் பண்ண நினைக்கிற. எனக்குத் தெரியும், நீ எனக்கு வேண்டாம்!” என்றாள் பிடிவாதமாக..

“ஹேய், அப்படியெல்லாம் இல்லவே இல்லை!” என்றான். ஆனாலும் ஐ லவ் யு என்ற வார்த்தையைச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் ஏற்கனவே அதை ஒரு பெண்ணிடம் சொன்ன ஒரு தயக்கம்,

வர்ஷினியின் மனதைத் தேற்றுவது தான் இப்பொழுது முக்கியம் போலத் தோன்ற,

“ஓகே ஃபைன்! நீ என்ன சொன்னாலும் கேட்கறேன், நீ இவ்வளவு மனசு கஷ்டப்படாத, என்னோட தொல்லையில்லாம இருப்பேன்னு நினைச்சேன்! ஆனா நீ என்னைப் பத்தியே நினைச்சிட்டு இருந்திருப்பன்னு எனக்குத் தெரியாது!” என்றான்.

ஆம்! இந்த வருடமாக ஈஸ்வரின் நினைவுகளே!!!

அவனை நம்பாமல் பார்த்தாள்,

“நம்பு! உனக்காகத்தான் உன்னைப் பார்க்காம இருக்க ட்ரை பண்ணினேன்! உனக்காக உன்னை நினைக்காம இருக்கவும் ட்ரை பண்றேன்” என்றான்.

அது முடியாது என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்! ஆனாலும் இப்போது வர்ஷினியின் மன அமைதி மிகவும் முக்கியமாகப பட்டது. நீ அவளை நினைத்ததை விட அவள் உன்னைப் பற்றி அதிகமாக நினைத்துக் கொண்டிருந்திருகின்றாள் என்று புரிந்தது.

“நீ என்ன பண்ணிட்டு இருக்கேன்னு உனக்குத் தெரியாது?” என்ற வார்த்தை ஒரு அச்சத்தைக் கொடுத்தது . தன்னிடம் இருந்து தப்பிப்பதற்காக அவள் எந்தச் சிக்கலிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று மனம் பதறியது.

அந்தப் பதற்றத்தை முகத்தினில் காட்டவில்லை. “இனிமே இப்படி அழக் கூடாது, எல்லோரும் இருந்தாலும் யாரும் இல்லைன்னு நினைக்கக் கூடாது, ஏதாவது கஷ்டமா இருந்தா என்னை டார்ச்சர் பண்ணு! என்ன வேணா பண்ணு! ஆனா நீ இப்படி ஃபீல் பண்ணக் கூடாது”

“நான் கெட்டவன் எல்லாம் இல்லை. உன்கிட்ட எதோ தடுமாறிட்டேன், ஆனா அது உன்கிட்ட மட்டும் தான்.. நீ கண்டிப்பா இதை நம்பணும். நீ ஏன் இதை மனசுல இவ்வளவு நாளா வெச்சிருந்த, என்னைக் கூப்பிட்டு பேசியிருக்கலாம் தானே!”

“நீங்க வந்துட்டா! அதனால கூப்பிடலை! சமயதுல ஃபோன் செஞ்சு கண்டபடி திட்டணும் போல ஆத்திரம் வரும்.. ஆனா அதையே சாக்கா வெச்சு நீங்க வந்துட்டா.. அந்தப் பயத்துல கூப்பிடலை” என்றாள்.

“சரி! இப்போ தான் வந்துட்டேன் தானே! திட்டிக்கோ!” என்று கைகளைக் கட்டி அமர்ந்தான்.

மெலிதாக அவளின் முகத்தில் ஒரு முறுவல், கூடவே “கண்டிப்பா என்னை விட்டுடுவீங்க தானே!” என்றாள் கரியத்திலேயே கண்ணாய்.

“கண்டிப்பா!!” என்று அதே முறுவலோடு திரும்ப சொன்னவன், “ஆனா நீயா என்கிட்டே வரமாட்டியே!” என்றான்.

“ஓஹ்! வரவைக்க முடியும்ன்னு அவ்வளவு நம்பிக்கை இருக்கா?”

இவ்வளவு நேரமாக கண்களைத் தவிர்த்து முகத்தை பார்த்து பேசியவன், இப்போது கண்களைப் பார்த்தான், பார்த்தவன் சிறிது நேரம் அவளின் சோர்ந்த விழிகளை ரசித்தான், ஆனால் வாய்மொழியால் பதில் சொல்லவில்லை,

என்ன சொல்லப் போகிறான் என்று ஆர்வமாகப் பார்த்தாள், அந்த ஆர்வத்தில் அவளின் கண்கள் சிறிது பளிச்சிட,

“ஏதாவது சொல்லித் திரும்ப உன்னோட மூட் ஸ்பாயில் ஆகிடப் போகுது! கிளம்பு நீ!” என்றான்.

ஆம்! அவளின் பேச்சுக்கள் உயிர்வரை வலித்தது, இப்போது எது சொன்னாலும் வேண்டாம் என்ற பேச்சுத் தான் வரும் என்று புரிந்து அமைதியாக இருந்தான். அதே சமயம் இப்போது சற்று நன்றாக இருக்கின்றாள் என்று புரிய, அதே மனநிலையோடு அனுப்ப முற்பட்டான்.

ஆனாலும் ஈஸ்வருக்கு இருந்த ஒரே நம்பிக்கை, இப்படி யாரிடமும் அவள் பேச மாட்டாள் என்று தோன்றியது. கூடவே “உன்னையே பிடிக்கலை. இன்னும் யாரையும் அவளுக்குப் பிடிக்காது!” என்று உள்மனது சொல்லியது. இயல்பு குணமான திமிர் ஒரு புறம் தலை தூக்கிய போதும், மனது முழுவதும் ஒரு பயம்.. “விட்டுப் போய்விடுவாளோ?” என்று.

அந்த பயம் முகத்தில் தெரிந்து விடாமல் இருக்க மிகுந்த பிரயர்த்தனப்பட்டான்.

வர்ஷினியின் முகம் சற்று மலர்ந்து இருக்க,

“உனக்கு என்னைப் பிடிக்குதோ? பிடிக்கலையோ? நாம சேர்ந்து இருக்கப் போறோமோ, சேரலையோ, எப்பவும் உனக்காக நான் இருப்பேன்றதை மனசுல வெச்சிக்கோ.. எதுன்னாலும் என்கிட்டே வா! இல்லை என்னைக் கூப்பிடு. தனியா இருக்கோம்ன்னு எப்பவுமே ஃபீல் பண்ணாத… நான் ஏதாவது பண்ணிடுவனோன்னு பயப்படாத! நான் உன்னை பாதிக்கற மாதிரி எதுவும் பண்ண மாட்டேன். உன்னோட எய்டீன்த் பர்த்டேல இருந்து நைன்டீன்த பர்த்டே வரை மறந்துடு”

“அப்போ என்னை விட்டுட்டீங்களா” என்று கண்களில் ஆர்வம் மின்னப் பேச, அந்த நீல நிறக் கண்களின் விசை ஈர்ப்பு அதிகமாக ஆரம்பித்தது.

“ஹய்யோ! இவ என்னை நல்லவனா இருக்க விடமாட்டா போலவே!” என்று திணற ஆரம்பித்தான்.

“கண்டிப்பா விட்டுடேன்! நீயா வந்து என்னைக் கட்டிப் பிடிச்சாக் கூட நான் உன்னைக் கட்டிப் பிடிக்க மாட்டேன்” என்றான் சிரிக்காமல்.

“பேச்சை பாரேன்!” முகம் சுணங்கிய போதும், ஈஸ்வர் சொல்லிய பாவனையில் வர்ஷினிக்கு சிரிப்பு மலரத் துடித்தது. ஆனாலும் சிரிப்பை அடக்கி அந்தப் பேச்சை வளர்க்காமல் ஒரு தலையசைப்போடுக் கிளம்ப,

அவளின் மாற்றங்களைக் கண்டவன், “இரு, ஏன்னு கேட்டுட்டுப் போ!” என்றான்.

“ஏன்?” என்ற பாவனையில் நிற்க,

“வஞ்சனையில்லாம சாப்பிடற போல, குண்டாகிட்ட அதுதான்!” என்றான் மீண்டும் சிரிக்காமல்.

“நான் ஒன்னும் குண்டு இல்லை!” என்று ஆரம்பித்தவள், “என்ன பேச வந்தோம்? என்ன பேசிக் கொண்டு இருக்கின்றோம்!” என்றுத் தோன்ற, அவளுடைய தலையில் அவளே செல்லமாகத் தட்டிக் கொண்டு திரும்ப நடந்தாள்.

“இவன் நிஜமாகத் தான் சொல்கிறானா? என்னை விட்டுவிடுவானா?” என்ற யோசனையோடு வர்ஷினிப் போக, தாஸ் அவளின் பின் வேகமாகச் சென்றான்.

செல்லும் அவளையேப் பார்த்து இருந்தான் ஈஸ்வர்.. “விடுவதா? உன்னையா?. ஆனாலும் இவள் என்னுடைய எல்லா முடிவுகளையும் நொடியில் மாற்றி விடுகிறாள்” என்று தோன்றப் புன்னகை மலர்ந்தது.

 

Advertisement