Advertisement

அத்தியாயம் இரண்டு :

அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
       பொன்னி நதி… கன்னி நதி… ஜீவ நதி..

அடுத்த நாள் முரளியின் திருமணமும் வெகு சிறப்பாக நடந்தது. ஈஸ்வர் குடும்ப சகிதமாக கலந்து கொண்டான். எல்லோரும் வந்தனர், அப்பா நமஷிவாயம், அம்மா மலர், தங்கை ரஞ்சனி, அண்ணன் ஜகன், அண்ணி ரூபா என்று அனைவரும். ஈஸ்வரின் தங்கைக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஜகனுக்கு மூத்தவள் சித்ரா அவளுக்கு திருமணம் ஆகியிருந்தது. பாட்டியும் பெரியம்மாவும் மட்டும் வரவில்லை.

முரளி அவர்கள் வீட்டினில் ஒருவன் போல, அங்கே வருவதும் போவதும் அதிகம். எல்லோரும் கட்டாயம் வரவேண்டும் என்று அழைத்திருந்தான். அதனால் எல்லோரும் வந்தனர்.

முரளி வீட்டினர் இன்றைய நிலையில் பெரும் பெரும் பணக்காரர்கள் தான். ஆனால் புது பணக்காரர்கள். ஈஸ்வரின் வீட்டினர் பரம்பரை பணக்காரர்கள். அந்த ஹோதா எப்பொழுதும் அந்த வகை ஆட்களுக்கு தனி தான்.

சங்கீதவர்ஷினி அன்று முரளியின் அருகில் தான் இருந்தாள், அவளின் அப்பா அங்கே தான் நிற்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லியிருந்தார். ஒதுங்கி தனியாக அமரக் கூடாது என்று கட்டளையே இட்டு இருந்தார்.

இன்னம் இரண்டு மூன்று வருடங்களில் அவளுக்கு திருமணம் செய்ய உத்தேசித்து இருந்ததால் தன்னுடைய மகள் என்று ஊருக்கே காட்ட விரும்பி அங்கே தான் இருக்க வைத்தார். முரளியும் ஷாலினியும் மணமேடையில் அமர்ந்து இருக்க அவர்களின் பின்புறம் மற்ற உறவினர்களோடு இருந்தாள்.

கமலாவிற்கும் உத்தரவு தான், சங்கீதாவை எதற்கும் விடக் கூடாது என்பது போல. தன் கணவரைப் பற்றி நன்கு அறிந்தவர். மகள் என்ற பாசம் அதிகம் என்றாலும் அதையும் விட அவருடைய செல்வலக்ஷ்மி சங்கீதா அவரைப் பொறுத்தவரை, ஆம் அவர்களுடைய செல்வ நிலை சங்கீதவர்ஷினி அவர்களின் வாழ்க்கையில் வந்த பிறகு தான் அதலபாதாளத்தில் இருந்து விண்ணைத் தொட்டது.

அது வரை சாதாரண ஜீவனம் கூட கிடையாது கஷ்ட ஜீவனம் தான். ராஜாராமின் அப்பா, அப்போது தான் எம் ல் ஏ சீட் கிடைத்து அரசியலில் நிற்கிறார். ஜெயித்து உடனே மந்திரியாகிறார். ஆனாலும் உடனே ஊழலில் மாட்டி மந்திரி பதவி பறிபோகும் நிலை. வர்ஷினி உருவான நேரம், அதை  கர்ப்பத்தில் அழிக்கும் நாள் தாண்டிவிட, வேறு வழியில்லாமல் பிறந்த குழந்தை. பிறந்த பின் அவளின் அம்மா ராஜாராமின் வாழ்க்கையில் இருந்து விலகிவிட…

அவள் பிறந்த நேரம் ராஜாராம் அப்பாவின் மந்திரி பதவி நின்று விட, அதன் பிறகு ஏறுமுகம் தான் அவரின் வாழ்க்கையில். திரும்பி பார்க்கவேயில்லை.

பணம், பகட்டு, மரியாதை என்ற ஒரு உலகம்… பெண்கள், உல்லாசம், உலகம் சுற்றுதல் என்று ஒரு உலகம். வாழ்க்கையின் ஒவ்வொறு நிமிடத்தையும் அனுபவிப்பவர்.

அதனால் யாரையும் விட மகள் மிகவும் முக்கியம். மகள் என்ற பாசம் இருந்தாலும், என்னவோ ஒரு மரியாதையும் கூட. அவளால் தான் இந்த செல்வ நிலை என்பதால், அதனால் தந்தை என்ற முறையில் சகஜமாக பேசினாலும், ஏதோ ஒன்று தள்ளி நிற்பார்.

அது கொண்டு தான், சங்கீத வர்ஷினியால் என்பது நிஜமோ பொய்யோ, அந்த வறுமையில் இருந்து வசதி என்ற ஏறுமுகத்தை வாழ்க்கையில் பார்த்தவர்கள், கமலாவும் முரளியும் பத்மநாபனும். அதனால் வர்ஷினி அவர்களுக்கும் முக்கியமானவள்.

இன்னும் நன்றாக பேசுவார்கள் தான். ஆனால் வர்ஷினி தள்ளியே நிற்பாள். அது அவளின் இயல்பா என்ன யாருக்கும் தெரியாது. அதனாலேயே மற்றவர்களும் ஒதுங்கிக் கொள்வர். என்னைப் பார்த்தா சிரிக்கணும்னு பார்க்காத மாதிரி போகறாங்க என்ற குற்றச்சாட்டு பாதி அவளின் பிறப்பைக் கொண்டு என்றாலும் மீதி அவளைக் கொண்டே. எல்லோரையும் பார்த்து எப்போதும் புன்னகைப்பதில் வஞ்சனை கிடையாது. ஆனால் அதற்கு மேல் பேசமாட்டாள். கேட்பதற்கு பதில் மட்டும். அதனால் பேசுபவர்களுக்கு மேலே என்ன பேசுவது என்றே தெரியாது.

இப்போதும் பதுமையாய் பின் நின்று எல்லோரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு, யாரவது ஏதாவது கேட்டால் மட்டும் பதில் சொல்லி என்று நின்று கொண்டிருந்தாள். ஏதோ ஒரு ஈர்ப்பு அவளின் தோற்றத்திலா இல்லை உடல் மொழியிலா எல்லோர் கவனத்தையும் கவர்ந்தாள். பார்வையை சில நொடிகளில் இருந்து சில நிமிடங்கள் பலரும் அவள் மேல் நிலைக்க விட்டே திருப்பினர்.

ரூபாவும் ரஞ்சனியும் “யார் அது” என்று ஈஸ்வரிடம் கேட்டனர். “அவளா…”, என்று அசட்டையாக பதில் சொன்னான், “முரளியோட அப்பாவோட பொண்ணு”

“தங்கையா?”, என்று ரஞ்சனி ஆர்வமாக கேட்க, “தங்கை தான்”, என்று என்று இழுத்ததில்,

“என்ன” என்றனர் குழப்பமாக.

“கூடப் பொறந்தவ இல்லை, ஆனா அவங்க அப்பாக்கு பொறந்தவ” என்றான்.

“ஓஹ்” என்று யோசனையாக பார்த்தனர். ரஞ்சனி “உனக்குத் தெரியுமா நீ பேசியிருக்கியா” என்று ஆர்வமாக கேட்க..

“எப்பவோ பார்த்திருக்கேன். அவ சின்னப் பொண்ணா இருக்கும் போது, பேசினது இல்லை, அவ தேடித் போய் பேசற அளவுக்கு பெரிய ஆளோ முக்கியமானோ ஆளோ கிடையாது. அது சரியான முசுடு கூட முரளி சொல்லியிருக்கான். இவன் பத்து வார்த்தை பேசினா ஒரு வார்த்தை பேசுமாம்” என்றான் அலட்சியமாக, இயற்கையில் உடம்பில் ஊரிய திமிர் அப்படித்தான் கணிக்க வைத்தது.

“எப்படித் தான் தப்பு பண்ணிட்டு தைரியமா அவங்கப்பா இப்படி செய்யறாரோ, நடு சபையில நிக்க வெச்சு இவ்வளவு முக்கியத்துவம்” என்று மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லவும் செய்தான். ரூபாவும் ரஞ்சனியும் யாரவது கேட்டுவிடார்களோ என்று பயந்து பார்த்தனர்

அந்த பயமெல்லாம் ஈஸ்வருக்கு இல்லை, “அவர் செஞ்சதை தானே சொன்னேன், அவருக்கே இல்லாத போது எனக்கென்ன” என்றான்.

ஈஸ்வரைப் பற்றி தெரிந்தவர்களாக கப்பென்று வாயை மூடிக் கொண்டனர் ரூபாவும் ரஞ்சனியும்.  முகத்தில் அடித்தார் போல எப்பொழுதும் பேசிவிடுவான். எதிரில் நிற்பவர் மனது காயப்படுமா இல்லையா என்று பார்க்க மாட்டான் என்று சொல்வதை விட, பட்டால் படட்டுமே அதுதானே உண்மை! என்பது போலத்தான் அவனின் பேசுக்கள் இருக்கும்.

அதற்குள் கையில் இருந்த ரூபா, ஜகனின் குழந்தை பிரணவி சிணுங்க, அவளைக் கையில் வாங்கினான். அது குண்டு குண்டென்று அழகாக இருந்தது. அவளுக்கு அண்ணன் சரண் யுகேஜி படித்துக் கொண்டிருந்தான். அவனைப் பள்ளியில் விட்டு தான் இவர்கள் திருமணத்திற்கு வந்திருந்தனர்.

மேடையில் தாலிக் கட்டி முடித்து மற்ற சடங்ககுகள் முடிந்திருக்க, முரளி எதற்கோ ஈஸ்வரைத் தேடியவன், யாரிடம் சொல்வது என்று தெரியாமல், வர்ஷினியிடம் “என் பிரெண்ட் ஈஸ்வர் இங்க இருப்பான். கூப்பிடு” என்று அவனைத் தேடி அடையாளம் காட்ட,

“அங்க இருக்காங்க அவங்க தானே” என்று காட்டினாள்.

“உனக்கு எப்படித் தெரியும்” என்றதற்கு, “அப்பா சொன்னாங்க” என்றாள்.

அப்பா எதற்கு இவளிடம் சொல்ல வேண்டும் என்ற யோசனை ஓடிய போதும் “கூப்பிடேன்” என்றான்.

கீழே இறங்கி அவர்களை நோக்கி வந்தவள் “அண்ணா கூப்பிடறாங்க” என்றாள் ஈஸ்வரிடம், குரல் அவ்வளவு இனிமையாய் மென்மையாய் சற்று குழந்தைத்தனம் மாறாமல் இருந்தது.

தன்னிடமா பேசினாள் என்று ஒரு நொடி கேள்வியாய் ஈஸ்வர் பார்க்க, அவனின் கையில் இருந்த பிரணவியின் அழகில் லயித்தவள், “உங்க குழந்தையா அழகா இருக்கா?” என்று கூடவே சொன்னாள்.

ரஞ்சனிக்கு சிரிப்பு பொங்கியது, ரூபா “என் குழந்தை” என்று சொல்ல வந்தவள் ரஞ்சனியின் சிரிப்பில் அடங்கினாள்.

ரஞ்சனியின் சிரிப்பிற்கு காரணம் “ஒரு அழகான பொண்ணு உன்னைப் பார்த்து ஒரு குழந்தைக்கு அப்பான்னு சொல்லிடிச்சே” என்ற எண்ணம். அதை அண்ணனிடம் பார்வையில் காட்டினாள். ஈஸ்வர் ரஞ்சனியின் சிரிப்பை பார்த்தாலும் அவனிடம் ஒரு ரியாக்ஷனும் இல்லை.

“நீங்க தப்பா எடுக்கலைன்னா நான் குழந்தையை தூக்கட்டுமா” என்று வர்ஷினி ஆர்வமாய் ஈஸ்வரிடம் கேட்க,

சில நொடிகள் அவளின் சகஜ மனப்பான்மையில் விழித்து தயங்கி நின்றான்.

அதற்குள் வர்ஷினி கையை வேறு நீட்டி விட, கொடுப்பதா வேண்டாமா என்று மனம் பெரிய பட்டி மன்றம் நடத்திய போதும் கைகள் தானாக நீட்டியது.

“குட்டிப் பாப்பா உங்க பேர் என்ன?” என்று வர்ஷினி குழந்தையிடம் பேச… இவன் கண்களால் பார்த்துக்கொள்ளுங்கள் என்று ரூபாவிற்கும் ரஞ்சனிக்கும் காட்டிச் சென்றான்.

“உங்க பாப்பா வா?” என்று ரூபாவை நோக்கியும் கேட்க,

“இப்ப தான் சரியா கேட்டிருக்க நீ” என்ற ரஞ்சனி,

“இது இவங்க பாப்பா” என்று ரூபாவை காட்டியவள் பின்பு சென்று கொண்டிருந்த ஈஸ்வரை காட்டி, “அவர் பாப்பா இல்லை, அவருக்கு கல்யாணமாகலை, இது அவங்க அண்ணி, நான் தங்கச்சி, இது அண்ணன், இது எங்க அப்பா அம்மா” என்று மொத்த குடும்பத்தையும் ஓரே நிமிடத்தில் அறிமுகம் செய்தாள்.

எல்லோரையும் பார்த்து மரியாதைக்கு புன்னகை செய்தவள்,  “பேர் என்ன?” என்றாள்.

“ரஞ்சனி” என்று ரஞ்சனி சொல்ல,

“ரஞ்சனி பாப்பா” என்றாள் குழந்தையை நோக்கி,

“அய்ய இல்லை, அது என் பேரு, பாப்பா பேரு பிரணவி” என்றாள் ரஞ்சனி.

“நல்லா இருக்கு” என்று சொன்னவள், “நான் கொஞ்சம் நேரம் வெச்சு இருக்கட்டா” என்றாள் தயங்கி.

“எங்க வெச்சு இருப்ப” என்று ரஞ்சனி கேட்க,

“அங்க” என்று மேடையைக் காட்டியவள், கூடவே “நீங்களும் வாங்க” என்று அழைக்க,

என்னவோ குழந்தையை வர்ஷினி அணைத்துப் பிடித்திருந்த விதத்தில் அதை வாங்க மனது வராத ரூபா, “இல்லை, அவ வேண்டாம்! நாங்க இங்க தானே இருக்கோம், நீ போ” என்றாள்.

“தேங்க்யு அக்கா” என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு வேடிக்கை காட்டிக் கொண்டு நடந்தாள்.

மேடையில் இவள் கையில் குழந்தையைப் பார்த்ததும் “யார் குழந்தை” என்றார் கமலா, கீழே இருந்த ரூபாவை காட்டினாள். அவருக்கு ஈஸ்வரை தெரியும் அவனின் அப்பா அம்மாவை தெரியும் வேறு யாரையும் தெரியாது. ரூபாவின் பக்கத்தில் இருந்த அவர்கள் கவனத்தில் பதியவில்லை.

“யார் அவங்க” என்றவர், “யார் குழந்தையாவது தூக்காத வர்ஷினி தப்பா நினைக்க போறாங்க” என்றார்.

“ஓஹ்” என்றவள் கீழே இறங்கப் போக,

“அது எங்கண்ணா குழந்தை தான் ம்மா”  என்றான் ஈஸ்வர், வர்ஷினி குழந்தையைத் தூக்கிக் கொண்டு மேடை ஏறும் போதே பார்த்து விட்டான். அதனால் அவனால் பதில் சொல்ல முடிந்தது.

“அப்போ சரி” என்றவர் விருந்தினர்களை கவனிக்கப் போய் விட,

இப்போது குழந்தையை வைத்திருப்பதா கொடுப்பதா என்று குழப்பம், அது அவளின்  கண்களிலும் பிரதிபலித்தது.

அந்தப் பார்வை ஈஸ்வருக்கு நன்கு புரிந்தது. அப்போது தான் அந்தக் கண்களை பார்த்தான், நீல நிறக் கண்கள். நம் பெண்களில் பார்க்க அரிதான கண்கள். அந்தக் கண்கள்… அதைப் பார்த்தவுடன் சட்டென்று மூழ்கிப் போகத் தோன்ற, “சே, என்ன நினைப்பு”  என்று மனதை ஒருமைப் படுத்தினான்.

அவன் பாட்டிற்க்கு முரளியின் புறம் சென்று விட்டான்.

அந்த ஒரு நொடி, அவனின் பார்வை, அது என்ன என்று வர்ஷினி ஆராயும் முன், அந்த இடத்தை விட்டு அகன்றிருந்தான் ஈஸ்வர்.

அப்போது பார்த்து பத்மநாபன் வந்தவன், அவன் ஒரு புறம் யார் குழந்தை என்று கேட்க, என்னவோ மாற்றி மாற்றி கேட்டதில் மனம் துவள, “அவங்களது” என்று ஈஸ்வர் வீட்டைக் காட்டியவள், ஒரு நொடி கூட நிற்காமல் குழந்தையைக் கொண்டு போய் ரஞ்சனியிடம் கொடுத்தாள்.

அதையும் ஈஸ்வர் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். ரொம்ப ரோஷம் போல என்று ஒரு நக்கல் புன்னகை உதட்டில்.

“பிரணவி அழுதாலா” என்றபடி ரஞ்சனி வாங்க, “இல்லை” என்று வாய்த் திறந்து கூட சொல்லாமல், இல்லை என்பது போலத் தலையாட்டி “தேங்க்ஸ் கா” என்று சொல்லி போகத் திரும்பவும்,

“என்ன நான் உனக்கு அக்காவா?” என்றாள் ரஞ்சனி சற்று கோபமாக,

இருந்த மனநிலையில் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல், தான் எதுவும் தவறு செய்து விட்டோமா என்று மிரட்சியோடு பார்க்க,

அந்த நீல நிறக் கண்கள் இப்போது ரஞ்சனியையும் கவர்ந்தது, “ஹேய்! உன் கண்ணு ரொம்ப அழகு, நத்திங் டு வொர்ரி, இவ்வளவு அழகான பொண்ணு என்னை அக்கான்னு கூப்பிட்டா நான் வயசான மாதிரி தெரிவேன்ல, அதான்!” என்றாள் தோளைக் குலுக்கி ஒரு சிநேக பாவத்தோடு.

அது ரஞ்சனியின் ஸ்பெஷல். எல்லோரிடமும் நன்றாக பேசுவாள், அவர்களையும் பேச வைத்து விடுவாள்.

அப்போதுதான் ரஞ்சனி தன்னோடு விளையாடுகிறாள் என்று புரிய,

“நீங்க நிறைய பொய் சொல்வீங்களா?” என்றாள் வர்ஷினி.

“என்ன பொய் சொல்றேன்”

“என்னைப் போய் அழகு சொல்றீங்க” என்று சொல்லி சிறிது பல் வரிசைக் காட்டி வர்ஷினி சிரிக்க,

ரஞ்சனி “ஹ ஹ” என்று சிரித்தவள், “பொய் சொல்லலை, நீ நிஜமா அழகு” என்றவள், “பேர் என்ன? என்ன படிச்சிருக்க?” என்று கேட்க ஆரம்பிக்க,

“சங்கீதவர்ஷினி, ப்ளஸ் டூ எழுதியிருக்கேன்” என்று சொல்ல,

அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரூபா, இப்போது சிரித்தாள்.

“எதுக்கண்ணி சிரிக்கிறீங்க” என்று இடுப்பில் கைவைத்துக் ரஞ்சனி கேட்க,

“அவ இப்ப தான் பிளஸ் டூ எழுதியிருக்கா நீ எம் பி பி எஸ் முடிச்சிட்ட, அவ உன்னை அக்கா கூப்பிடக் கூடாதா? என்ன அநியாயம் இது? அவ்வளவு சின்னா பொண்ணா நீ” என்றாள்.

அவர்கள் கலகலப்பாக பேசுவது வர்ஷினியைக் கவர, வேடிக்கை பார்த்தபடி நின்றாள். அவள் அப்படி வேடிக்கைப் பார்ப்பது இவர்களைக் கவர, அவளிடம் பேச்சுக் கொடுத்தனர்.

“உன் டிரஸ் ரொம்ப அழகா இருக்கு” என்ற ரஞ்சனி, “எங்க ஸ்டிச் பண்ணின” என்றாள்.

“கமலாம்மா தான் கூட்டிட்டுப் போனாங்க” என்று ஒரு தேர்ந்த டிரஸ் டிசைனரின் பேரை சொன்னாள். ரஞ்சனிக்கு யாரென்றே தெரியவில்லை, ரூபாவிற்கு நாளிதழில் சிறப்புக் கட்டுரையாக அந்த பேரை பார்த்த ஞாபகம்.

அது ஒரு காக்ரா சோலி தான், ஆனால் மிகுந்த வேலைப்பாடு இருந்தது. நகைகள் கூட எல்லாம் எப்பொழுதும் போடும் நகைகள் போல இல்லாமல் தேர்ந்து இருந்தது.

அந்த வார்த்தையில் இருந்தே தெரிந்தது, அவளை மிகவும் நன்றாக அக்கறை எடுத்துப் பார்த்துக் கொள்கிறார்கள் என்று.

“ஜ்வல்ஸ் கூட அழகா இருக்கு” என்றாள்.

“எல்லாம் கமலாம்மா செலக்ஷன்” என்றாள் வர்ஷினி. கூடவே “நீங்க டாக்டர்க்குப் படிச்சு இருக்கீங்களா” என்றும் கேட்டாள். யாரோடும் அதிகம் பேசப் பிரியப்படாதவள் ரஞ்சனியின் பேச்சிலும் அவளின் படிப்பிலும் ஒரு மரியாதை வர பேசினாள்.

ரஞ்சனி பேசிக்கொண்டு இருந்தாலும் எப்போதும் சுற்றுப் புறமும் கண்வைத்து இருப்பாள். அவள் கவனித்தது ஒன்று தான். யாரவது ஒருவர் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை வர்ஷனி என்ன செய்கிறாள் என்பது போல பார்த்துச் சென்றனர்.

தான் என்னவோ புத்திசாலி என்று ரஞ்சனி நினைத்திருக்க, பேசிக் கொண்டு இருந்த போதும் பேச்சு வாக்கில் வர்ஷினி, “எப்பவும் அப்படி தான்” என்றாள்.

“என்ன?” என்பது போல ரஞ்சனி பார்க்க,

“என்னை வந்து வந்து பார்த்துட்டுப் போறதைத் தானே பார்த்தீங்க,  எப்பவும் அப்படி தான், யாரும் என்னை ஒரு வார்த்தையும் பேசிடக் கூடாதுன்னு பார்த்துகிட்டே இருப்பாங்க, அது என்னை ப்ரொடக்ட் பண்ண, அந்த அவசியமில்லைன்னு அவங்களுக்கு புரியாது. அப்பாவோட ஆர்டர்” என்று அவள் சொல்லும்போதே அங்கே ராஜாராமும் கமலாவும் வந்தனர்.

வர்ஷினி யாருடனாவது இவ்வளவு நேரம் பேசினாள் என்றால் அது ஒரு அதிசயம் தான் அவர்களுக்கு. அதனோடு சேர்த்து முரளிக்காகவும் சிறிது நேரம் நமஷிவாயதிடம் அவரின் மனைவி மலரிடம் என்று பேசி சென்றனர்.

எல்லாம் பார்த்து இருந்தார் நமஷிவாயம், அவருக்கு சில வேலைகள் ஆக வேண்டி இருந்தது. அதனால் தான் திருமணதிற்குக் குடும்பத்தோடு வந்திருந்தார், பொறுமையாகவும் அமர்ந்திருதார்.

அவர்கள் செல்லும் போது வர்ஷினி உடன் சென்று விட்டாள்.

முரளியின் அருகில் இருந்த ஈஸ்வர் எப்போதோ மேடையில் இருந்து இறங்கி வந்து விட்டான். ஆனால் வர்ஷினி, ரஞ்சனியிடம் ரூபாவிடம் பேசிக் கொண்டு இருந்ததால் என்னவோ அருகில் வரத் தோன்றவில்லை. ஆனால் பார்வை வர்ஷினியின் மீது படிவதைத் தவிர்க்க முடியவில்லை. நொடிக்கொரு முறை கண்கள் சென்று மீண்டது.

என்ன இது என்று மனதில் ஒரு கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை.

கட்டாயமாக பார்வையைத் திருப்பி வேறு இடம் பார்த்தான். மனதினில் ஒரு உஷ்ணம். மொபைல் ஒலிக்க எடுத்துப் பார்த்தால் ஐஸ்வர்யா, சலிப்பாக இருந்தது.

எடுத்தான் “சொல்லு ஐஷு”

“என்ன பண்றீங்க”

கடுப்பாக வந்தது “என்ன பண்ணுவாங்க, உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது, லவ் பண்ணினா எப்போ பார்த்தாலும் பேசணும்னு ஏதாவது அவசியமா? நேத்து நைட் தான் ஒரு ஹால்ப் அன் ஹவர் பேசினோம், காலையில கல்யாணத்துக்கு கிளம்பும் முன்ன ரெடி ஆகிட்டீங்களான்னு பேசின, ரீச் ஆனதுக்கு அப்புறம் ரீச் ஆகிட்டீங்களான்னு மெசேஜ் பண்ணின, இப்ப போன் பண்ற, வாட் இஸ் திஸ்? ஐ ஆம் நாட் திஸ் மேக், எரிச்சலா வருது” என்று வார்த்தைகளைக் கடித்து துப்பினான்.

அந்தப் புறம் ஐஸ்வர்யாவின் கண்களில் மளமளவென்று கண்ணீர் இறங்கியது. அழுதால் சமாதானம் எல்லாம் செய்ய மாட்டான், இன்னுமும் கத்துவான் “என்ன பழக்கம் இது? சும்மா சும்மா அழுதுட்டு! உனக்கு வேற வேலையே கிடையாதா?” என்று நான்கு நாட்கள் ஆனாலும் பேசமாட்டான், ஃபோன் எடுக்கக் கூட மாட்டான்.

கண்ணீரை அடக்கினால் ஐஸ்வர்யா.

கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்.  

 

 

Advertisement