uyirinil inikkiraay neeye-5

Advertisement

NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ். தாமதத்திற்கு மன்னிக்கவும். இந்த கதையின் பதிவை தினமும் கொடுக்கறேன்னு சொன்ன விஷயத்தையே மறந்து போயிட்டேன். தினமும் நாலு பதிவா கொடுத்து இந்த கதையை முடிச்சிடறேன். யாருக்கும் பதில் கொடுக்க முடியாத சூழ்நிலையில இருக்கேன். சாரி பிரண்ட்ஸ். நேரமின்மையே முக்கிய காரணம். அதோட லேப்டாப் பக்கமே கொஞ்ச நாளைக்கு போக கூடாதுன்னு ஆர்டர் வேற.!! எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கறேன்.



5

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

அரசுவால் கண்ணனின் வார்த்தையை மீற முடியவில்லை என்பது ஒருபக்கம்,பிரவீனின் பயம் கலந்த பேச்சு ஒரு பக்கம் என்பதோடு இயல்பிலையே அவனால் யாருக்கும் கெடுதல் நினைக்க முடியாது.

இதே அம்சவேணியை இன்னும் மூன்று நான்கு வருடங்கள் கழித்து திருமணத்திற்கு பேசினார்கள் என்றால் உடனே சம்மதித்திருப்பான்.ஆனால் இன்றைய நிலையில் அவனை தடுப்பது அவனின் பொருளாதார நிலை மட்டுமே...

இப்போது தங்கியிருக்கும் வீட்டின் வாடகையே பிரவீன் பாதி கொடுப்பதினால் தான் கட்டுபடியாகிறது.இதே தான் மணம் முடித்தால் ஒன்று தான் வெளியேற வேண்டும்.இல்லை பிரவீனை வெளியே வேறு வீடு பார்க்க சொல்ல வேண்டும்..இதில் இரண்டாவது யோசனைக்கு தன்னால் சம்மதிக்கவே முடியாது என்றும் அரசுவிற்கு தோன்றியது.எந்த நிலையிலும் நண்பனை துரத்திவிட அவன் தயாராயில்லை..

தன் குழப்பங்களை எல்லாம் கண்ணனிடம் சொல்லி,”இப்போதைக்கு அந்த பொண்ணை வேலை பார்க்கற இடத்துலையே விட்டுடலாம்-ண்ணா.எனக்கு நல்ல கம்பெனில,நல்ல சம்பளமா வந்த பின்ன,நானே கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கறேன்.அதுவரைக்கும் கார்டியனா என் பேரை போட்டுக்கலாம்.அந்த மில்-ல வேலை செய்யற மேனேஜர் அண்ணா எனக்கு தெரிஞ்சவர் தான்.நான் சொன்னா அவர் கேட்பார்”என்றான் ஒரு முடிவோடு!!

“நீ சொல்றதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியபடாதுப்பா அரசு. நாம மில்லுல கொண்டு போய் விடவும்,அவங்க வீட்டுல டிராமா பண்ணி கூட்டிட்டு போய் வேற யாருக்கோ கல்யாணம் பண்ணி வைச்சிட்டா என்ன பண்றதுப்பா”என்றதும் இவனுக்கு கோபம் வந்துவிட்டது.

“அப்படியே போய் எவனை வேணா கட்டட்டும்.நானும் விட்டது தொல்லைன்னு சந்தோஷப்பட்டுக்குவேன்-ண்ணா..”பட்டென்று சொல்ல பிரவீன் முறைத்தான்.

“என்னடா முறைக்கிற”என்று அவனிடமும் எகிற,

“நாமளே இப்படி நடக்குமோ,அப்படி நடக்குமோன்னு பேசிட்டு இருக்கறதை விட,இப்போ தங்கச்சிக்கு கூப்பிட்டு,தெளிவா அதோட நிலை என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.உன்னோட வர விருப்பமா இல்லையான்னு அதுவே சொல்லிடும்”-என்று இத்தனை நேரத்தில் இப்போது தான் தெளிவாய் பேச,அதுவே கண்ணனுக்கும் அரசுவிற்கும் சரியெனப்பட,முன் யோசனையின்றி வேணிக்கு அழைத்துவிட்டான்.

அங்கே விடாது அழுது கொண்டிருந்தவள்,போனில் வெளிச்சம் தெரியவும்,அவசரமாய் கண்ணீரை துடைத்துவிட்டு போனை எடுத்துவிட்டாள்.

“ஹலோ”என்ற அவளின் குரலிலையே அரசுவிற்கு அவள் அழுதிருக்கிறாள் என்று புரிய,

சுற்றி வளைக்காமல்,நேரடியாகவே, “உனக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றாங்க.அதுக்கு நான் என்ன செய்யனும்னு எதிர்பார்க்கற”என்றவனை பின்னிருந்து அடித்தான் பிரவீன்.

“டேய்,இவ்வளவு நேரம் என்னடா சொல்லிட்டு இருந்தோம்,மறுபடியும் தங்கச்சிக்கிட்ட கேட்டுக்கிட்டு இருக்க”என்ற பிரவீனின் குரல் அம்சாவிற்கு கேட்க,

அரசுவிடம் பேசுவதை விட பிரவீனிடம் பேசுவது எளிதானது என்று தோன்றவும்,”அண்ணாகிட்ட கொடுக்கறீங்களா”என்றாள்.

சட்டென்று மூண்ட கோபத்தில்“எந்த அண்ணா”என்றான் ஒருவித வெறுப்புடன்..

அவளுக்கு அவனின் பேச்சு தொனியே பயத்தை கொடுத்தது என்றால் மிகையில்லை..

முயன்று திடத்தை வரவழைத்துக்கொண்டு,”பிரவீன் அண்ணாகிட்ட”என்று சொல்லிவிட்டாள்.

“ஓ,அப்போ இனி உன்னோட பிரவீன் அண்ணாகிட்டவே எல்லாம் பேசிக்க!அவனே உனக்கு வேண்டியத செய்வான்.அவனோட நம்பர் வேணும்னா கொடுக்கறேன்..எழுதிக்க!!”-இத்தோடு முடிந்தது என்பது போல் பேச,அவனிடமிருந்து போனை பிடுங்க முயன்ற பிரவீனை ஒரு கையாலையே தடுத்து,

“இப்படி நீ அமைதியா இருந்தேன்னா என்னால ஒண்ணும் செய்ய முடியாது.இப்போ நீ வாய திறந்து பேச போறியா,இல்லையா”ஏறக்குறைய கத்த,அவள் சத்தமாகவே அழுக ஆரம்பித்துவிட்டாள்.

அரசுவிற்கு பாவமாகிவிட்டது.

கண்ணை இறுக மூடி திறந்தவன்,ஒரு முடிவாய்,”நீ எதுவும் சொல்லாம என்னால எதுவுமே பண்ண முடியாதும்மா,உனக்கு கல்யாணம் பிடிக்கலைன்னா போலீஸ்ல ஒரு கம்பிளைன்ட் பண்ணிடுவோம்.அவங்க உன்னோட அம்மா அப்பாவை ஒரு மிரட்டு மிரட்டுனா கப்சிப்னு அமைதியாகிடுவாங்க.உன்னையும் நீ வேலை செய்யற மில்லுலையே பாதுகாப்பா தங்க வைக்க எல்லா ஏற்பாடும் செய்யறேன்.நீ என்ன சொல்ற”பொறுப்புடன் பொறுமையாய் பேச,அம்சாவிற்கும் அவனது யோசனை சரியாகவே தோன்றினாலும் மனதிற்கு அது சரியென்று படவில்லை.

‘எனக்காகவே இந்த வாழ்க்கையை வாழறவங்களை போய்,’இவங்களால எனக்கு ஆபத்துன்னு எப்படி நா கூசாம சொல்றது’என்ற சிந்தனை ஓடிய நொடியில்,

‘அப்போ வீட்டை விட்டு ஓடிப்போறது மட்டும் சிறப்பான செயலாக்கும்’இன்னொரு புறம் மனது எடுத்துரைத்து கொன்றது அவளை!

அவளது சிறிது நேர மௌனம் ஸ்பீக்கரில் அவளது பேச்சை கேட்டுக்கொண்டிருந்த பிரவீனிற்கு வேறு அர்த்தத்தை கொடுத்துவிட்டது தான் இங்கே சொல்லக் கூடிய விஷயம்.

அம்சாவிற்கு அரசுடன் வாழத்தான் விருப்பம்.வேறு எதற்கும் சம்மதமில்லை போல என்று அவனாகவே ஊகித்துக்கொண்டு,சட்டென்று அலைபேசியை பிடுங்கியவன்,”தங்கச்சி,நீ எதுக்கும் கவலைப்படாதம்மா.உனக்கு அரசுவை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? இல்லையா? அத மட்டும் சொல்லு.மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்”என்றதும் அரசு வழக்கம் போல நண்பனை பார்வையாலையே எரித்தான்.

சம்பந்தப்பட்ட இருவருமே முன்னெடுக்க தயங்கிய விஷயமே திருமணம் தானே..பிரவீனே முன்னெடுக்கவும்,அம்சாவிற்கு கண்ணீர் பொலபொலவென கொட்டத்தான் செய்தது..

மூச்சை இழுத்துக்கொண்டு,”எனக்கு சம்மதம்..அவருக்குண்ணா..?”கேள்வி கேட்க..

“அவனுக்கு டபுள் ஓகேவாம் தங்கச்சி”எனவும் அவளுக்கு சிலிர்ப்பு.

இங்கே பிரவீன் பின் மண்டையிலையே அடி வாங்கியது பாவம் அவளுக்கென்ன தெரியும்.
 

NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
நண்பர்களின் கை கலப்பை கவனித்த கண்ணன் இப்போது பொறுப்பாய்,”அம்சா நான் கண்ணன் பேசறேன்.நீ உங்கம்மா,ஆச்சிகிட்ட சொல்லிட்டு வருவியோ இல்ல சொல்லாமல் வருவியோ,சரியா பதினொரு மணிக்கு வீட்டை விட்டு வெளில வந்து நில்லு.தெருமுக்கு வரைக்கும் உனக்கு துணையா பத்தடி தள்ளி நம்ம பிரவீன் தம்பி வருவாப்ல..அதுக்கப்புறம் உன்னையும் அரசுவையும்,என் சம்சாரம் ஊருக்கு கூட்டிட்டு போய் நானே முன்ன நின்னு கல்யாணத்தை நடத்தி வைக்கறேன்.நீ உனக்கு தேவையானது எல்லாம் எடுத்துக்க.இப்போ வைச்சுடவா”

“அண்ணே..கூட துணைக்கு யாரும் பொண்ணுங்க வருவாங்களா”கேட்டதும் புரியாமல் முழித்து,பின் புரிந்தவராய்,

“வர சொல்றேன்மா.நீ ரெடியாகிடு.நாங்க கடைய அடைச்சதும் ‘ட்டான்’னு வந்து நிற்போம்”பொறுமையாய் பேசி வைத்தவர்,

“பொண்ணு கொஞ்சம் புத்திசாலித்தனமா தான் பேசுது.நீ பொழைச்சுக்குவ அரசு”என்றார் சிரிப்புடன்!

அது நக்கல் சிரிப்பா, ஆனந்த சிரிப்பா என்று அரசுவிற்கு புரியவில்லை.

ஒரே நாளில் கடந்த சில மணி நேரங்களுக்குள்ளாக தான் குடும்பஸ்தனாக மாற்றப்படுவோம் என்று அரசு கனவிலும் நினைத்தவனில்லை..ஆனால் நடந்துவிட்டதே!!

அதிகாலை இரண்டு மணிக்கு அம்சவேணி திருமதி அரசுவாகியிருந்தாள்.அவளது மனதில் பயம் படபடப்பு எல்லாவற்றையும் மீறி ஒருவித நிம்மதி மனதில் படர்ந்தது உண்மை.

அரசு மட்டும் உம்மென்று இருந்தான்.அவனுக்கும் திருமணத்தைபற்றி சில கனவுகள் இருக்கும் தானே.பிரவீன் அதை அறிவான்.

“டேய் மாப்ள,எதையும் பத்தி கவலைப்படாத.இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டதினால,நாலு பேருக்கு சோறு போட முடியலைன்னு வருத்தப்படாத.நாளைக்கு உனக்கு பிள்ளை பொறந்தா ஊருக்கே சோறு போடு”சொன்னவனை கண்ணாலையே எரித்தான்.

அருகிலிருந்த வேணியை பார்க்க தவறவுமில்லை..அவள் எதுவும் நாணிக்கோணி சிரிக்கிறாளா என்று பார்த்தான்.நல்ல வேலை அப்படி எதுவும் அவள் செய்து தொலைக்கவில்லை.இல்லையென்றால் இந்த நொடியிலிருந்து அவனது வெறுப்பின் படலம் ஆரம்பமாகியிருக்கும்.

கண்ணன் திருமணப்பதிவை உறுதி செய்துவிட்டு வந்தவர்,”அரசு என் சம்சாரம் வீடு இப்போ காலியா தான் இருக்கு.என்னோட கொளுந்தியா மவனுக்கு தான் அந்த வீடுன்னு எழுதி வைச்சிருக்கேன்.அவனுக்கும் அப்பா அம்மா இல்ல..அதனால இங்க இருக்க முடியலைன்னு அமெரிக்கா போய் செட்டில் ஆகிட்டான்.எப்படியும் ஒரு அஞ்சு வருஷத்துக்கு எட்டிக்கூட பார்க்க மாட்டான்.அதுவரைக்கும் இந்த வீட்டுல நீ தங்க முழு உரிமையும் இருக்கு.இந்தா ஆவணப்பத்திரம்”என்று தன் கைப்பட எழுதி கையெழுத்திட்டிருந்த பத்திரத்தை கொடுத்தார்.

அதை பிரித்துப் படித்தவனுக்கு கண் கலங்கியது.பெற்றவர்களுக்கு கூட சொல்ல முடியாமல் என்ன திருமணம் செய்து,எப்படி வாழப்போகிறோம் என்று அவனது மனது கலங்கிக்கொண்டிருந்தது.இப்போது கண்ணனின் செயலால்,இவர் தான் எனக்கு எல்லாம் என்று உணர்ந்தான்.

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தன்னையே அண்டி வாழும் அரசுவிற்கு தன்னால் முடிந்ததை செய்துவிட்டதாக நினைத்தார்.அவனுக்கு திருமணப்பரிசாக,அவர்களின் வாழ்க்கைக்கு நிரந்தர வருமானம் வரும் வகையில் ஒரு தொழிலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென்றும் நினைத்தார்.

தன்னுடைய சொத்தில் கூட சிலவற்றை எழுதி வைக்க அவருக்கு ஆசை தான்.ஆனால் தன் உடன்பிறப்புக்கள் மோசமானவர்கள்.ஏற்கனவே ‘கொளுந்தியா மகனுக்கு எல்லாம் கொடுக்கறான்’ என்று ஏசிக்கொண்டிருக்கிறவர்கள்,இவனுக்கு, தான் ஏதாவது ஆசையாக செய்யப்போய்,அது கடைசியில் அரசுவின் உயிரையே பறித்துவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்தே இருந்தார்.

பணம் என்றால் பிணமும் வாயைப்பிளக்குமாம்.இவர்களது உடன் பிறப்புக்கள் மட்டும் விதிவிலக்கா என்ன!

வீட்டில் தங்கும் அனுமதி பத்திரத்தோடு,கோவிலில் திருமணம் முடித்த ரசீதையும் கொடுத்தவர் வேணியிடம்,”இன்னும் ரெண்டு மூணு நாள் கழிச்சு,உன் வீட்டுக்கு போகலாம்மா..நாம இப்போவே போய் நின்னா,அவ்வளவா சரியா வராது.பிரிச்சுவிடத்தான் ஊர் பெருசுங்க பார்ப்பாங்க.அதனால இப்போதைக்கு போன் பண்ணி கல்யாணம் முடிஞ்சுதுன்னு மட்டும் சொல்லிடு என்ன”எனவும் தலையை ஆட்டினாள்.

அவளின் கண்கள் லேசாக கலங்கியிருக்க,அருகிலிருந்த அரசு அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.பிரவீன் தான் உடன் அழைத்து வந்த கண்ணனின் தூரத்து உறவினரான பெண்மணியிடம் பேசி அவளது அழுகையை குறைக்க வைத்தான்.

இங்கு நடக்கும் எதற்கும், எனக்கும் சம்மந்தமேயில்லை என்பது போல் நின்றிருந்த அரசுவிடம்,”உங்க வீட்டுக்கு போகலாமா மாப்ள”பிரவீன்,அரசுவின் மனம் உணர்ந்து கேட்க,

“வேண்டாம்டா.கல்யாணமே சிலரோட அழுகையில தான் நடந்திருக்கு.அப்படியிருக்க வீட்டுக்கு போய் அப்பாரோட சாபத்தையும் வாங்கிட்டு வர முடியாது.நாம நேரா அண்ணன் வீட்டுக்கே போயிடலாம்.அங்க இருந்து காலேஜும் பக்கம் தான்.நாம முன்னாடியிருந்த ரூமை காலி பண்ணிடலாம்”எனவும் பிரவீன் விழிக்க,கண்ணனோ,

‘புரியாத பயலா இருக்கானே’என்று நொந்து கொண்டார்.

“இங்க பாரு அரசு.அதெல்லாம் சரிப்பட்டு வராது.பிரவீன் அங்கேயே இருக்கட்டும்.வீட்டு வாடகையை எப்பவும் போல பாதி நீயே கொடுத்துடு.அவனுக்கும் சிரமமில்ல.உனக்கும் மனசு உறுத்தாது”என்று உறுதியாய் சொல்லிவிட,பிரவீனும் அதையே வழிமொழிய..மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து எல்லாரையும் நொந்துகொள்ள வைத்தான்.

பக்கத்தில் வேணி இருப்பதை கண்டுகொள்ளாமல்,”அண்ணா அதான் கல்யாணம் முடிஞ்சுடுச்சுல்ல.இனி ஒரு நாலஞ்சு மாசம் வரைக்கும் அந்தப்பிள்ள மில்லுல வேலை பார்க்கட்டும்.ஹாஸ்டல்லயே தங்கிக்கட்டும்”என்றதும் வேணி அரண்டு தான் போய் பார்த்தாள்.அவன் அவள் பக்கம் பார்த்தால் தானே அதை உணர்வான்.அதான் திரும்பவேயில்லையே மகராசன்..

கண்ணன் அவனை அடிக்காத குறையாய் சொல்லி புரிய வைத்தார்.

“நீ சொல்றது சரி வராதுன்னு முன்னாடியே சொல்லிட்டேன் அரசு.இங்க என் வீட்டுப்பக்கம் பாதுகாப்புக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.நீ காலேஜ் போயிட்டு வேலையையும் முடிச்சிட்டு வர்ற வரைக்கும் எந்த பிரச்சனையும் வராது.பக்கத்து வீட்டுக்காரவங்ககிட்ட சொல்லி வைச்சிடறேன்..போதுமா”என்று அவர் கேட்கவும்,அரசு அமைதியாய் நிற்க,வேணிக்கு மனம் கொஞ்சம் நிம்மதியானது.

‘தன்னை பாரமாய் நினைக்கிறாரோ’என்றே முன் எண்ணினாள்.ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காகவே அப்படி பேசியிருப்பார் போல என்று கண்ணனின் பேச்சின் மூலம் அவளாகவே சிலவற்றை புரிந்துகொண்டாள்...

அரசு கோபமாக இருக்கிறான் என்று அவளுக்கு தெளிவாகவே புரிந்தது.முடிந்த அளவுக்கு அவனுக்கு தான் பாரமாய் இருக்கக் கூடாது என்று அந்த கணமே முடிவு செய்தாள் அந்த அப்பாவிப்பெண்.

கணவனுக்கு மனைவியும்,மனைவிக்கு கணவனும் பாரமா என்ன? பாரமென்று நினைத்தால் திருமண பந்தத்தின் அர்த்தம் தான் என்ன? சிலர் அர்த்தத்தை புரிந்தும் வாழ்கிறார்கள்..புரியாமல் வாழ்ந்து முடித்தும் இருக்கிறார்கள்.எல்லாம் ஆண்டவன் விதித்தது..வேறென்ன நான் சொல்ல..!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top