Uyirin ularal - episode 5

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் - அத்தியாயம் 5

" அம்மா யாரும்மா அது சண்முகம் " என்று கண்ணில் வெறியோடு வந்து நின்ற மகனை பார்த்தவர்

" அவன் உன் பெரிய அண்ணி சிபாரிசில் வேலைக்கு சேர்ந்தான், அப்புறம் கொஞ்ச நாளில் உன் அப்பா அவன் ஆள் சரியில்லை என்று அனுப்பிவிட்டார். ஏன் கேட்கிறாய் " என்றார்.

" இல்லை சும்மாதான் " என்றான்.

மகன் எதையோ சொல்ல விரும்பவில்லை என்பதை பிரிந்துகொண்டவர் வேறெதுவும் கேட்கவில்லை.

ரிஷிநந்தனுக்கு புரிந்தது, அப்பா அம்மாவின் மனது கஷ்டப்படும் என்று எல்லாவற்றையும் அவரிடமிருந்து மறைத்திருக்கிறார் என்று. ஆனாலும் சொல்ல வேண்டியதை சொல்லித்தானே ஆக வேண்டும் என்று எண்ணியவன் ஓரளவுக்கு அபிநேஹாவை பற்றி, அவளுக்கு தேவைப்படும் சிகிச்சையை பற்றி சொன்னான்.

" நான் அப்போதே நினைத்தேன் ஏதோ சரியில்லை என்று, எல்லாம் என்னால்தானடா, வயதான பிறகு நான் ஒரு பெண் பிள்ளையின் பொறுப்பை சுமந்திருக்க கூடாது, அவளை அவள் தாய் வளர்ந்த இடத்திலேயே வளர விட்டிருக்கணும். ஏன் சின்னவனே நம் வீட்டிற்கு வந்த மருமகள்கள் அனைவரும் இப்படி அரக்கியாக வந்திருக்கிறார்கள் " என்று புலம்பினார்.

" விடுங்கம்மா, எல்லாம் சரியாகிவிடும் " என்று தாயை தேற்றியவனுக்கு அந்த தெளிவு வர மறுத்தது.

" அம்மு ரெடியா ?" என்று கேட்டபடி கீழே இறங்கி வந்தவனை பார்த்து பானு கேட்டாள் " எங்கே கொழுந்தனாரே காலையிலேயே கிளம்பிட்டிங்க ? அவளை எங்கே கூப்பிடுறிங்க ? அவ சின்ன குழந்தை கிடையாது. வயசு பொண்ணு, உங்களுடன் வெளியே வந்தால் ஊரு என்ன பேசும்?" என்றாள்.

" அண்ணி உங்களுக்கு வயசு என்ன இருக்கும் ? ஒரு என்பது தொண்ணுறு ?" என்று கேட்டு பானுவின் தீ பார்வையை சந்தித்தான்.

" ஏன் கேக்கிறேன் என்றால் உங்க பேச்சு அப்படி இருக்கு. ஆணும் பெண்ணும் சமமான இந்த காலத்தில் வயசு பொண்ணு வயசு பையன் என்று பேசிகிட்டு, அதுவும் இல்லாமல் அவள் நான் தூக்கி வளர்த்த பொண்ணு, நீங்கள் இந்த வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே நாங்கள் அனைவரும் ஒன்றாக வளர்ந்தவர்கள், சரி தப்பு என்பது நம் பார்வையில்தான் சரிதானே. அப்புறம் இன்னொருமுறை இது மாதிரி பேசாதீங்க. நான் அவளை எங்கேயாவது கூட்டிட்டுப்போயிட்டே இருப்பேன். ஒவ்வொரு முறையும் உங்களிடம் ரிப்போர்ட் கொடுத்துட்டு போக முடியாது பாருங்க. என் உடம்பு மட்டும் இல்லை, மூளையும் ரொம்ப ஸ்டராங் அவ்வளவு எளிதாக யாராலையும் சலவை செய்ய முடியாது." என்றான்.

பானுவின் முகம் கறுத்து சிறுத்தது.

அதற்குள் " சின்னத்தான் போகலாமா ?" என்று வந்தாள் அபிநேஹா.

" ம் வா போகலாம் " என்று கிளம்பிவிட்டான்.

அவன் சென்ற பிறகு பானு கணவனிடம் வெடித்தாள். " என்ன திமிர் உங்க தம்பிக்கு, ஒரு அண்ணியிடம் பேசுகிறோம் என்ற எண்ணம் இருக்கா, இருக்கட்டும் எங்கே போய்விடுவார்கள் பார்த்துக்கொள்கிறேன் " என்றாள் கோபத்தில். அவள் கணவன் வாய்யை திறக்கவேயில்லை.

********

அபினேஹாவை பரிசோதித்த டாக்டர் அவளிடம் சில கேள்விகளை கேட்டார், சில டெஸ்ட்டை செய்தார். இறுதியில் ரிஷிநந்தனிடம் தனியாக பேசினார்.
" ரொம்ப சீரியஸான கண்டிஷன் என்றும் இல்லை, நார்மல் என்றும் இல்லை. மனதளவில் பாதிப்பு அதிகமாகவே இருக்கு. இதற்கு மாத்திரை மருந்து என்றெல்லாம் வேண்டாம். பயிற்சியும், முயற்சியும் வேண்டும். அவள் நினைக்க வேண்டும் கூண்டில் இருந்து வெளிவர வேண்டும் என்று" என்றார்.

" டாக்டர் எதனால் இப்படி ஆனாள் " என்று கேட்டான் ரிஷினந்தன்.

" எப்படி சொல்ல ரிஷிநந்தன், ஒரு குழந்தை பிறந்தது முதல் பல ஸ்டேஜ் உள்ளது அது முழு மனிதனாக மாற, அப்படி மாறும் போது அது அந்தந்த வயதிற்கு ஏற்ப சூழ்நிலைகளை கையாள தெரிய வேண்டும். புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் அனைவரும் காட்டிய அளவுக்கு அதிகமான பாசம் அவளுக்கு கஷ்டம் என்ற சூழ்நிலையை ஏற்படுத்தவில்லை. அப்புறம் தொடர்ச்சியாக ஒவ்வொருவரும் விலகியபோது கஷ்டத்தை பார்த்திராத அவள் மனம் அந்த சூழ்நிலையை கையாளதெரியாமல் திணறியது, அதோடு அப்புறம் அவளுக்கு வந்த சொந்தங்கள் தடுமாறி நின்ற அவளை கரம் பிடித்து தூக்காமல் மேலும் தடுமாற செய்துவிட்டது. துன்பங்கள் இல்லாத மனிதர்கள் கிடையாது, ஆனால் எல்லா துன்பத்தையும் எல்லோராலும் தாங்க முடியாது.

சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஏற்பட்ட புயலின் போது ஏழை சிறுவர்களும், பணக்கார சிறுவர்களும் ஒரே மாதிரிதான் பாதிக்கப்பட்டார்கள், ஆனால் பணக்கார சிறுவர்கள் செய்வதறியாது திணற, ஏழை சிறுவர்களோ அவர்களுக்கு உதவினார்கள். அவர்களிடம் காரணம் கேட்டபோது எங்களுக்கு இதெல்லாம் சகஜம், பசி பட்டினி பழகிப்போனது, ஆனால் அவர்கள் அப்படி இல்லை என்றார்கலாம்.
அங்கு கஷ்டம் ஒன்றேதான், பாதிக்கப்பட்டவர்களுக்கு வயதும் ஒன்றேதான், ஆனால் அதை அவர்கள் கையாண்ட முறை வேறு.

அதே நிலைதான் இவளுக்கும். யதார்த்தத்தை ஏற்க தெரியவில்லை. உன்னையே சார்ந்து இருந்ததினால் வந்த வினை என்றும் சொல்லலாம். முட்டைக்குள் இருந்து வெளிவராத கோழிக்குஞ்சை போல பிள்ளையை வளர்ப்பதால் பிறகு வரும் பாதிப்பை யாரும் உணர்வதில்லை. தோல்வி அடைவது வெற்றிக்கு மட்டும் முதல் படி இல்லை. தோல்வியை தாங்கி தாங்கி உரம் ஏறி போகும் மனதிற்கும் முதல்படி.

அவளுக்கும் உனக்கும் வெறும் ஆறுவயது வித்தியாசம் என்பதால் உன்னை குற்றம் கூறமுடியாது. உன் பெற்றோரும், பாட்டியும் இன்னும் கொஞ்சம் பக்குவமாக இவளை வளர்த்திருக்கலாம். ஐ மீன் தைரியமாக, தெளிவாக. எனிவே பாஸ்ட் இஸ் பாஸ்ட். நடக்கப்போவதை பார்க்கலாம். அவளுக்கு ஸ்விம்மிங் தெரியும்தானே? " என்று கேட்டார்.

" ம் தெரியும் டாக்டர் "

" அவள் எப்போதெல்லாம் டென்ஷன் ஆகிறாளோ அப்போதெல்லாம் அவள் செய்ய வேண்டியது ஸ்விம்மிங், அதுதான் அவளுக்கு ஒரு சின்ன டிரீட்மென்ட். அப்புறம் பெரிய முக்கியமான டிரீட்மென்ட் நீ. புரியும் என்று நினைக்கிறேன், அவளுக்கு ஏற்பட்ட முதல் பாதிப்பு உன் பிரிவுதான். எப்படியும் உனக்கு திருமணம் ஆக இன்னும் மூன்றோ நான்கோ ஆண்டுகள் ஆகலாம். அதுவரை அவளுக்கு நீ துணையாக இரு. என்னை கேட்டால் அவளுக்கு ஒரு நல்ல துணைவனை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டு நீ உன் வாழ்க்கை துணையை தேடிக்கொண்டால் நன்றாக இருக்கும். என்ன ?அதற்கு முன் ஏதாவது கமிட் ஆகிவிட்டாயா? வெளிநாட்டிற்கெல்லாம் போய் படித்திருக்கிறாய், கமிட் ஆகியிருக்க நிறைய வாய்ப்பு உண்டு " என்று கேட்டு சிரித்தவரை பார்த்து பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தான் ரிஷிநந்தன். குடும்ப நண்பர் அனைத்தும் தெரிந்தவர், கேலிகிண்டலாக மனதை படிக்க நினைக்கிறார் என்று எண்ணினான் அவன்.

" விளையாட்டுக்குத்தான் கேட்டேன் ரிஷி, பட் ஒன் திங் அப்படி எதுவும் இருந்தாலும் அந்த பெண்ணின் உரிமை வேட்கை இவள் மீது பாயாதபடி பார்த்துக்கொள். பேசாமல் உன் தாயார் இவளை மகளாக ஏற்று வளர்த்திருக்கலாம். சரி அதை விடு, இன்னும் காலேஜ் திறக்க ஒருமாதம் இருக்கு இல்லையா ? அதுவரை இவளை ஊட்டிக்கு அழைத்துச்செல். ஏனென்றால் ஒரு ஒருவாரம் இவளை ஹாஸ்பிடலில் வைக்கவேண்டியவரும். இங்கே இருந்தால் அது சரிபட்டுவராது. என்னுடைய பிரெண்ட் ஊட்டியில் இருக்கிறான். நீ அங்கே வீட்டில் வைத்தே இவளுக்கு தேவையான சிகிச்சையை செய்யலாம், யாருக்கும் தெரியாமல். நியாபகம் இருக்கட்டும் ரிஷி உன் அப்பா இல்லாததால் இப்போது நீ அவளுக்கு ஒரு கார்டியன் அவ்வளவுதான், அவளுடைய நிழல் இல்லை. அவளை ஆரோக்கியமாக வளரவிடு." என்று கூறியவர் அபிநேஹாவை அழைத்து சில அறிவுரைகளை கூறிவிட்டு அனுப்பிவைத்தார்.
**********

" அதெப்படி. முடியும், ஒரு கைக்குழந்தையை வைத்துக்கொண்டு என்னால் இங்கே தனியே இருக்க முடியுமா ? சுற்றுலா செல்வதென்றால் உங்கள் நண்பர்களுடன் செல்வதெற்கென்ன ? இந்த வயசான காலத்தில் அத்தையை போட்டு கஷ்டப்படுத்திக்கொண்டு, ரெண்டுகெட்டான் வயதில் இருக்கும் ஒரு பெண் பிள்ளையும் அழைத்துக்கொண்டு அதுவும் ஒன்று இரண்டு நாள் இல்லை ஒரு மாதம் பயணம், யோசிக்கவேண்டாமா ? என்று குதித்தாள் பானு.

" அண்ணி உங்களுக்கு நான் இவர்களை என்னுடன் அழைத்து போவதில் பிரச்சனையா ? இல்லை உங்களுக்கு உதவிக்கு ஆள் இல்லை என்பதில் பிரச்சனையா ?" என்றான் ரிஷி.

" இரண்டிலும் தான் " என்றாள் பானு வெடுக்கென்று.

" முன்னதில் உங்களுக்கு பிரச்சனை என்றால் அதற்காக என்னால் எதுவும் செய்யமுடியாது. உங்கள் விருப்பப்படி நடப்பதற்கு நாங்கள் நீங்கள் வைத்து விளையாடும் பொம்மை இல்லை, இரண்டாவது காரணம் சற்று யோசிக்க வேண்டியதுதான். பாப்பாவுக்கு பால் கலக்க கூட உங்களுக்கு தெரியாது என்று கேள்விப்பட்டேன், அதனால் பாப்பாவை கவனித்துக்கொள்ள ஒரு பயிற்சியுள்ள கேர்டேக்கரை ஏற்பாடுசெய்துவிட்டேன், நாளை காலையில் வந்துவிடுவார் " என்றான் ரிஷி.

" என்ன ? என் குழந்தையை கவனிக்க யாரென்றே தெரியாத ஒரு ஆளை நீங்கள் ஏற்பாடு செய்வீர்களா ? அதெல்லாம் தேவையில்லை, அபியை இங்கே விட்டுவிட்டு போங்கள். அவளை நாங்கள் பார்த்துக்கொள்வோம், அப்புறம் கண்காணாத தூரத்தில் நீங்கள் பார்த்திருக்கும் காலேஜ் எல்லாம் அவளுக்கு வேண்டாம், பக்கத்தில் தினமும் போயிட்டுவரும் காலேஜே போதும். அவள் படிப்பை நான் பார்த்துக்கொள்வேன் " என்றாள் பானு கோபத்தில்.

" எப்படி இதற்கு முன் பார்த்துக்கொண்டிருந்திர்களே அதுபோலத்தான், அண்ணி அவள் உங்கள் வீட்டு வேலைகாரி இல்லை. உங்களுக்கு தொண்டு செய்ய. இந்த வீட்டின் ராணி அவள். ஓப்பனா சொல்லணும் என்றால் உங்கள் வஞ்சக எண்ணம் இனி அவளின் பக்கம் கூட திரும்பக்கூடாது, அப்படி திருப்பினால் விளைவு எப்படி இருக்கும் என்று உங்கள் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு தலையை ஆட்டும் உங்கள் கணவரிடம் கேளுங்கள். கதை கதையாய் சொல்லுவார்." என்றான்.

பானு அதிர்ந்து போய் நின்றாள். " பொடியன் என்று நினைத்தால் இப்படி பேசிவிட்டு போகிறானே "என்று.

********

தன் தாய், தாயின் உதவியாளர் அன்னம்மாள், அபியுடன் ஊட்டியை சென்றடைந்தான் ரிஷி. அங்கு இருந்த தனது கெஸ்ட்ஹவுசில் போய் இறங்கினான்.

சிறகு முளைத்த பறவைப்போல அந்த ஒருமாதமும் சுற்றித்திரிந்தாள் அபிநேஹா. ரிஷி அவளை தனியாகவே இயங்க பழக்கினான். எப்போ எதை கேட்டாலும் "நான் பிஸி நீயே பார்த்துக்கொள்ளேன் " என்றே கூறினான். ஆனால் எப்போதும் அவள் அருகினிலே இருந்தான். ஒருவாரம் அவளுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. ஓரளவுக்கு தெளிவானவள் அவள் உடையையும் தோற்றத்தையும் மட்டும் மாற்ற மறுத்தாள்.

" இந்த வெளித்தோற்றம் உன்னை சிலரிடமிருந்து வேறுபடுத்தும் " என்று எவ்வளவோ கூறியும் " பரவாயில்லை " என்பதுதான் அவள் பதிலாக இருந்தது.

" விட்டுவிடுங்கள் டாக்டர், அவளுக்கு பிடித்த மாதிரியே அவள் இருக்கட்டும் " என்று கூறினான் ரிஷி.

" அம்மு நீ போறது வேற கலாச்சாரம் கொண்ட ஒரு சிட்டி. உனக்குன்னு ஒரு பிரெண்ட்ஸ் சர்க்கிள் உருவாக்கி கொண்டு பழையதை எல்லாம் மறந்து இருக்க பாரு. ஒன்றை மட்டும் மறக்காதே, உனக்கு கிடைத்த லைப் கூட கிடைக்காத எத்தனையோ பேர் உன்னை சுற்றியே இருக்கிறாங்க. உன் பிரச்சனையை பெரியதாக நினைப்பதை விட்டுவிட்டு சொல்ல முடியாத அளவுக்கு பெரிய சுமையை தாங்கிக்கொண்டிருக்கும் மற்றவர்களையும் பாரு சரியா. வெறும் பாடத்தை இல்லை மற்ற மனிதர்களையும் படிக்க கற்றுக்கொள் " என்று கூறி அவளை காலேஜில் கொண்டு விட்டுவந்தான்.

ஐந்து வருடம் அவள் படிப்பு முடியும் வரையில் அவள் சென்னை பக்கம் வந்ததே இல்லை. விடுமுறை நேரங்களில் கூட. சார்ட்டட் அக்கவுண்ட்ஸ் முடித்து திரும்பிவந்தாள். அவள் வந்தவுடன் கற்பகம்மாளின் முதல் வேலை அவளுக்கு மாப்பிளை தேடுவதாகத்தான் இருந்தது.

அப்போதுதான் வந்து இடி போல வந்தது அந்த செய்தி.

" என்னம்மா பெண்ணை பற்றி எல்லாம் சொன்னிர்கள், ஆனால் பெண்ணுக்கு கொஞ்சம் புத்தி சரியில்லை என்றும், அதற்காக சிகிச்சை எடுத்ததை பற்றியெல்லாம் சொல்லவே இல்லையே " என்றார் தரகர்.

" தரகரே அநியாயமாக பேசாதீர்கள் " என்று கற்பகம்மாள் கோபப்பட

" என்னம்மா அநியாயமாக பேசினேன், ஊட்டியில் ஒருமாதம் தங்கி இருந்து சிகிச்சை எடுத்தது எல்லாம் தெரியுமா, இப்படி பட்ட பெண்ணை திருமணம் செய்ய மாப்பிளை வீட்டில் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் "என்றார் அவர்.

" தரகரே நாங்கள் எந்த மாப்பிள்ளையையும்
விலைக்கு வாங்கும் எண்ணத்தில் இல்லை. வேறு எங்காவது அவர்கள் விலை போவார்களா என்று பாருங்கள் " என்று அவரை அனுப்பி வைத்தான் ரிஷி. அவனுக்கு யார் சொல்லியிருப்பார்கள் என்று தெரியும் ஆனாலும் தாயிடம் அவன் அதை கூறவில்லை. ஒன்டரை ஆண்டுகளுக்கு மேலாக இது தொடர்கிறது, அதற்குள் ரிஷி மற்றும் அபிநேஹா வாழ்க்கையில் சில மாற்றங்கள் நிகழ்ந்தது.
 

banumathi jayaraman

Well-Known Member
அபிநேஹாவுக்கு பைத்தியம்ன்னு செய்தி பரப்பியது அந்த அம்பிகா மூதேவியின் வேலைதானே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top