Uyirin ularal - episode - 35

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் - அத்தியாயம் 35

" அத்தான், அத்தான் எழுந்திரு, எனக்கு நேரமாகிறது. கும்பகர்ணன் மாதிரி தூங்குவதை பார். நேற்றே கூறினேனே எனக்கு காலையிலேயே ஆபீஸ் போகவேண்டும் என்று. எல்லாம் அந்த பொடிப்பய வசந்தை சொல்லவேண்டும். எவனோ பாலோ பன்றான் என்று எப்பொ பாரு அவனுக்கு ஒரு புலப்பம். அதனால் நேரமாயிட்டு என்று என்னை வீட்டில் கொண்டுதான் விடுவேன் என்று காரையும் கொண்டுபோயிட்டான். நான் இப்படி உன்னை தாங்கிக்கொண்டிருக்கிறேன் " என்றாள் சலிப்பாக.

" என்ன ? என்ன சொன்ன ? யாரோ உன்னை ப்பாலோ பண்றங்களா ?" என்று கேட்டான் தூக்கத்தில் இருந்து விழித்தவன்.

" ஆமா நான் ஐநா சபை தலைவரு என்னை ப்பாலோ பண்ண. அந்த வசந்த்தான் அப்படி இரண்டுவாரமா உளறிக்கிட்டே இருக்கான். அவனிடம் என்னன்னு கேட்டுக்கோ. இப்போ நேரமாகுது கிளம்பு " என்றாள் அபி வேகமாக.

" மணி 6 தானடி ஆகுது. அதற்குள் உனக்கு என்ன அவசரம்." என்றான் எழுந்துகொண்டே.

" எப்படியும் நீ கிளம்ப ஒரு ஒருமணி நேரம் ஆகாது " என்றாள் அபி கேலியாக.

" ஆமாம் முகத்துக்கு மேக்கப் போடவேண்டும் அதனால் ஆகத்தான் செய்யும். கிராதாகி கொஞ்சம் தூங்கவிட்டால் தான் என்ன ? " என்றவன் குளியலறைக்குள் புகுந்துகொண்டான்.

ஏழுமணிக்கெல்லாம் இருவரும் வீட்டைவிட்டு கிளம்பிவிட்டனர். அவளை ஆபிஸ் போய் சேரும் முன்பே வசந்த் அங்கே நின்றான்.

"குட்மார்னிங் ரிஷி சார், உங்களிடம் பேசவேண்டும் " என்றான் வசந்த்.

" குட்மார்னிங் நானும் உன்னை பார்க்கவேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன்." என்றான் ரிஷி அவனை தோளில் தட்டி.

" வசந்த் பேசிவிட்டு சீக்கிரம் வா, வேலை இருக்கு. " என்றவள் ரிஷியிடம் ஒரு தலையசைப்புடன் உள்ளே சென்றுவிட்டாள்.

" சார் மேடம் உங்களிடம் ஏதாவது சொன்னார்களா ?" என்று கேட்டான் வசந்த்.

" எதை பற்றி " என்றான் ரிஷி.

" அதான் சார் மேடமை யாரோ ப்பாலோ பண்றங்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம் அதை பற்றித்தான்" என்றான் வசந்த்.

" ம் சொன்னா, ஆனா வசந்த் உனக்கு ஏன் அப்படி தோன்றியது " என்று கேட்டான் ரிஷி.

" சார் உங்களுக்கே தோன்றும் பாருங்க. . நீங்க வந்த காரை எங்கேயாவது நிறுத்திட்டு ஒரு ஆட்டோவில் இந்த ரோட்டின் திருப்பத்தில் யாருக்கும் சந்தேகம் வராமல் வெயிட் பண்ணுங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் மேடம் இங்கிருந்து அவர்கள் காரில் கிளம்பி உங்கள் அண்ணன் ஆபீசுக்கு போவாங்க, அப்போது பாருங்க " என்றான் வசந்த் சீரியஸாக.

ரிஷிக்கு குழப்பமாக இருந்தது, ஆனாலும் அவன் வசந்தின் பேச்சை அலட்சியம் செய்ய விரும்பவில்லை, காரணம் இவன் கூறியதில் 0.1% உண்மை இருந்தாலும் அபிக்கு ஏதாவது ஆபத்துவந்துவிடக்கூடாதே என்ற எண்ணம்தான்.

" வசந்த் கூறியபடி ரிஷி ஒரு ஆட்டோவில் காத்திருந்தான். கொஞ்ச நேரத்தில் அபியின் கார் அவன் இருந்த ஆட்டோவை கடந்து சென்றது. அதன்பிறகு வசந்த் கூறியது போல எதுவும் நடக்கவில்லை. இது அவனின் மனபிரம்பை என்று நினைத்துக்கொண்டு அவன் ஆட்டோவில் இருந்து இறங்க போகவும் ஒரு பைக் அவனை கடந்தது. அப்போதும் ரிஷி எதுவும் நினைக்கவில்லை.

" சல்லி பய, இவனெல்லாம் கழுமரத்தில ஏத்திதான் கொல்லனும் " என்று ஆட்டோக்காரர் முனங்குவதை கேட்ட ரிஷி

" யாரை கொல்லனும் ?" என்றான் கேள்வியாக.

" அதான் அந்த பைக்கில் போறானே அந்த பொறம்போக்கை. இவனுக்கு இதே பொழப்பா போச்சு " என்றார் அவர் புரியாமல்.

" கொஞ்சம் தெளிவா சொல்லுங்க " என்றான் ரிஷி.

" என்னத்தை சார் தெளிவா சொல்ல, சொல்லி என்ன ஆவ போகுது? நாங்க ஏழைங்க, என்ன அக்கிரமம் நடந்தாலும் கண்டும் காணாமலும் போகவேண்டியதுள்ளது. உங்களை பார்த்தா பெரிய இடத்து பிள்ளை மாதிரி தெரியுறீங்க. உங்களால் முடிந்ததால் ஏதாவது செய்யுங்க.

அதோ போறான்னே பன்னாடை அவன் சரியான ரவுடி, காசிற்காக கொலையே செய்வான், அதுமட்டுமல்ல ஏதோ ஒரு கூட்டத்துக்கு பெண்களை கடத்தி சப்லே செய்வானாம். அடிக்கடி இப்படி எந்த வண்டியையாவது ப்பாலோ செய்வான். அப்புறம் அந்த வண்டியையும் காணாது, இவனையும் காணாது. இப்போ ஒரு இரண்டு வாரமா முன்னே போச்சே ஒரு வண்டி அதன் பின்னாடி போறான் என்ன செய்யப்போறானோ ? கொலையோ!!! கடத்தலோ தெரியல.
போனவாரம் ஒரு ஆளு என் ஆட்டோவில் ஏறினான், இவன் வீட்டிற்கு போகணும் என்று அட்ரெஸ் சொன்னான். பார்க்க மப்பிடி போலீஸ் மாதிரி இருந்தது. அவனை பிடிக்க போகிறான் என்று நினைத்தால் அவன் அந்த ரவுடியின் தோள் மேல் கையை போட்டு பேசிக்கொண்டு இருக்கிறான். எல்லாம் கூட்டுக்கள்ளர்கள்." என்றார் ஆட்டோ டிரைவர்.

" அந்த பைக் காரனை ப்பாலோ பண்ணுங்க" என்று ஏறி அமர்ந்தான் ரிஷி. அவனுக்குள் ஏக குழப்பம். யாராக இருக்கும் என்று.

அவனை ஒருமாதிரி பார்த்தார் ஆட்டோ காரர்.
" அந்த காரில் இருப்பது என் மனைவி " என்றான் ரிஷி அவர் பார்வைக்கு பதிலாக.
அதிர்ச்சியாகிய அவர் உடனே ஆட்டோவை கிளப்பினார் வேகமாக.

அபி சென்ற கார் நின்ற இடத்திலிருந்து சற்று தொலைவில் நின்றிருந்தான் பைக் காரன், தலையில் ஹெல்மடுடன்.

அவன் அருகில் ஆட்டோவில் சென்று இறங்கினான் ரிஷி. ஆனால் அவனிடம் எந்த சலனமும் இல்லை. ஒருவேளை ஹெல்மட் போட்டிருப்பதால் இவனுக்கு அவனின் முகமாற்றம் தெரியாமல் இருந்திருக்கலாம்.

ரிஷி கண்ணன் ஆபீஸுக்கு செல்ல நினைத்து எண்ணத்தை மாற்றிக்கொண்டான். வசந்த்க்கு போன் செய்தான்.

" வசந்த் அம்முவை தனியாக விடாதே, அவளிடம் நீ எதுவும் சொல்லவும் வேண்டாம். நீ கூறியது உண்மைதான். நான் அவனை பார்த்துக்கொள்கிறேன், பார்த்துக்க " என்றவனின் குரலில் ஏகத்திற்கு கவலை கொட்டிக்கிடந்தது.

ரிஷி தன் போலீஸ் நண்பனை தொடர்பு கொண்டான். தனியார் டிடெக்ட்டிவ் எஜென்டிடமும் ஹெல்ப் கேட்டான். அவனால் யூகிக்க முடியவில்லை யாராக இருக்கும் என்று.
இதை செய்கிறவர்கள் தெரிந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உன் மனைவி என்று தெரிந்து பணத்துக்காக கூட இருக்கலாம். என்றார் போலீஸ் நண்பன்.

அன்றும் அபி இரவு தாமதமாகத்தான் வந்தாள், ஆனால் ரிஷி ஹாலில் இல்லை. யோசனையுடன் அபி தன் அறைக்கு சென்றாள். அங்கு ரிஷி டென்ஷனில் அங்கேயும் இங்கேயும் அலைந்துகொண்டிருந்தான்.

" நந்து" என்றாள் மெல்லிய குரலில்.

அவள் குரல் கேட்டு அவளை பார்த்தவன் பார்வையில் நெருப்பு தகதகவென்று எறிந்தது. இவள் புரியாமல் நிற்க
" தூக்கி உடப்பில் போடு அவன் கம்பெனியை, வேண்டுமென்றால் நம் சொத்தை அவன் பெயரில் மாற்றிகொடுத்து ஒரே நாளில் முடி இந்த பிரச்சனையை " என்று உறுமினான்.

அபி செய்வதறியாது நின்றாள். ஏன் இப்படி கோபப்படுகிறான் ? இவனை எப்படி சமாளிக்க ? என்று மருண்டு விழித்தபடி நின்றாள்.

அவளின் பயத்தை கண்டவன் தன் கோபத்தை அடக்க முயற்சித்தான், அவனால் முடியவில்லை. ஒன்றும் பேசாமல் அங்கிருந்து வெளியே போய்விட்டான்.
அபி அப்படியே நின்றாள், பிறகு உடையை மாற்ற சென்றாள். அவள் உடையை மாற்றிவந்த பிறகும் அவனை காணவில்லை. கன்னத்தில் கைதாங்கியபடி தன் முன்னால் இருந்த உணவை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள், ஆனால் அவன் வந்தபாடில்லை.

பொறுத்திருந்த அபி எழுந்து அவனை தேடி போனாள். இந்நேரம் கீழே போயிருக்கமாட்டான் என்ற கணிப்பில் மொட்டைமாடிக்கு சென்றாள். அவன் அங்கே செதுக்கிய சிலை போல நின்றுகொண்டிருந்தான். அவனின் கோபம் அவளுக்குள் குளிரை பரவச்செய்தாலும் வருவதை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவனின் பின்னே சென்று நின்றாள். அவன் அசையாமல் நிற்கவும், நடுங்கும் கையை ஒருவழியாக தூக்கி அவனின் பின்னே இருந்து அணைத்து அவனின் முதுகில் முகத்தை சாய்த்தப்படி நின்றாள் அபி.
அப்போதும் அவன் அசையாமல் இருக்க
இவளின் பொறுமை பறந்தது.

" ஏன்டா நந்து எப்படி என்னை இம்சை பண்ணுற ? எதுக்கு இப்போ இவ்வளவு கோபம் என்றாவது சொல்லிதொலையேன். எனக்கு ரொம்ப பசிக்குது, உன்னை விட்டுட்டு சாப்பிட கஷ்டமா இருந்தது இல்லையென்றால் நீயும் ஆச்சு உன் கோபமும் ஆச்சு என்று படுத்திருப்பேன் " என்றாள் அபி.

அவனின் பேச்சில் எந்த மாற்றமும் வரவில்லை " வா போகலாம் " என்றவன் அவள் கையை விலக்கிவிட்டு முன்னே நடந்தான்.

அபிக்கு குழப்பமும், கோபமும் ஒருங்கே வந்தது. எப்படியும் போ என்று நினைத்தவள் மடமடவென்று சாப்பிட்டாள். இனியும் வேலை என்று லேப்டாப்பை எடுத்தா ஆடுவான். செய்யவேண்டிய வேலை நிறைய இருக்கு என்று நினைத்து பெருமூச்சி விட்டவள் டீவியை ஓடவிட்டாள்.

ரிஷியோ ஒருதலையணையை தன் முகத்தில் வைத்துக்கொண்டு படுத்துகொண்டான்.

" இப்ப என்ன ? என்னிடம் பேசுவாயா ? மாட்டாயா ?" என்றாள் அபி.

" இரண்டுநாளைக்கு நான் வெளியூர் போகிறேன் " என்றான் அவன்.

" ஓகோ அதுக்குதான் இந்த டிராமாவா ?" என்றவள் அவன் முகத்தில் இருந்த தலையணையை எடுத்து அவனை அடித்தாள்.

வேகத்தில் அவளிடமிருந்து அதை பறித்தவன் " செம கடுப்பில் இருக்கிறேன். பேசாமல் படு." என்றான்.

அபி கோபத்தில் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள். அவன் அவளை சமாதானம் செய்ய முயற்சிக்கவே இல்லை.

காலையிலேயும் இதுவே தொடர, தான் இரண்டுநாள் வெளியூர் செல்வதாக அனைவரும் இருக்கும் போது தாயிடம் கூறிவிட்டு கிளம்பிவிட்டான் ரிஷி.
கற்பகம்மாளுக்கு ரிஷியின் போக்கு கவலையை அளித்தது. திருமணத்திற்கு முன்பு அவன் இப்படி அடிக்கடி வெளியூர் போவான்தான், நண்பர்களுடன் சுற்றிவிட்டு வருவான், ஆனால் இப்போதும் அது தொடர்ந்தால் ? என்று நினைத்தார் கற்பகம்மாள்.
மற்ற நேரம் என்றால் கவலையில் கரைந்திருப்பாள் அபி, ஆனால் எதையும் யோசிக்க நேரம் கொடுக்காமல் இழுத்து சென்றது வேலை. ஆனாலும் அடிக்கடி போன், மெசேஜ் வருகிறதா என்று பார்த்து பார்த்தே நொந்து போனாள்.
மாலை வீடு வந்து சேர்ந்தாயா ? சாப்பிட்டாயா என்று நாளைக்கு இருமுறை மட்டும் போன் செய்தான் ரிஷி.

அவன் சென்றது வெளியூர் எல்லாம் இல்லை. அவன் அந்த இரண்டுநாளும் அபியை சுற்றியேதான் இருந்தான். போலீஸ், டெக்டக்ட்டிவ் என்று அனைவரும் அந்த பைக் காரனை ப்பாலோ செய்துகொண்டே இருந்தனர், ஆனால் அவனோ அபியை தொடர்ந்து செல்வதோடு நிறுத்திக்கொண்டான். அவனை என்ன சொல்லி நெருங்குவது என்று போலீஸ் நினைத்து, அவனின் பழைய கேஸை எல்லாம் கிளறியது.

அந்த ஆட்டோ காரர் கூறியதை தவிர அவனுக்கு எதிராக எந்த சாட்சியும் இல்லை. போலீஸ் செய்வதறியாது அவனின் போனை ட்ரெஸ் செய்யலாம் என்று அவனின் நம்பரை கண்டுபிடிக்க வழிதேடியது.

அவன் பைக்கை மடக்கி நார்மல் செக்கிங் போல செக் செய்துவிட்டு அவனின் போனை வாங்கி சோதனை செய்தார்கள். நம்பரை கண்டுபிடித்த பின்பும் உபயோகமான எந்த தகவலும் இல்லை. கடைசியாக சந்தேக கேசில் அவனை அரெஸ்ட் செய்யலாம் என்று போலீஸ் தீர்மானித்து அவனை ப்பாலோ செய்தது. அவன் மாலை வீடு திரும்பும் அபியின் கார் பின்னே செல்ல, சந்தேக கேஸ் என்று விசாரிக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போலீஸ் அவனை கைது செய்தது.
போலீஸ் டிரீட்மென்ட் நாள் முழுவதும் நடைபெற்ற பின்பு அவன் கூறிய பதில் "பணத்துக்காக " என்பது மட்டும்தான். அவன் போலீஸ் கஸ்டடியில் இருக்க ரிஷி ஒருவித நிம்மதியுடன் மறுநாள் இரவு வீடு திரும்பினான். தாயை பார்த்துவிட்டு தன் அறைக்குள் வந்தவன் அறை இருளில் மூழ்கி இருக்கவும் அதிர்ச்சியானான்.

அவன் பாதுகாப்பாக வீடு வந்து சேர்ந்தாள் என்பதை உறுதி செய்த பின்புதானே இவன் போலீஸ் ஸ்டேஷன் சென்றான். பிறகு இவள் எங்கே போனாள் என்ற குழப்பத்தில் அறையில் வெளிச்சத்தை பரவவிட்டான். அங்கே கட்டிலில் சுருண்டு படுத்து தூங்கிக்கொண்டிருந்தாள் அபி. ஒருசில பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. பக்கத்தில் தூக்க மாத்திரை பட்டை இருந்தது. ஒருமாத்திரையை எடுத்திருந்தவள் அதை உபயோகிக்காமல் அப்படியே வைத்திருந்தாள்.

ரிஷி மிகுந்த கவலைக்குள்ளானான். இந்த பெண் ஏன் இப்படி இருக்கிறாள். சமுதாயத்தில் தனித்து தெரியும் அளவுக்கு சாதித்த பெண். அன்பானவள், ஒரு பெண்ணுக்கு தேவையான அனைத்து குணத்தையும் பெற்றவள், ஆனால் மிகவும் மென்மையானவளாக இருக்கிறாளே !!! எளிதில் உணர்ச்சிவசப்படுகிறாள் !!!!நின்று பிரச்சனையை எதிர்கொள்ள தயங்கிறாள். அதிக சோதனை மனதை திடப்படுத்தும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இவளை பலவீனபடுத்திவிட்டதே என்று நினைத்தவன் அவள் அருகில் சென்றான்.

" அம்மு, அம்மு..... " என்று எழுப்பினான். கண்ணை திறந்து பார்த்தவள் இவனை கண்டதும் திரும்பி படுத்துகொண்டாள்.

" இப்போ எதுக்கு நீ தூக்கமாத்திரை எடுத்த" என்றான் சிறு கோபத்தில்.
" ஆங் சும்மா சும்மா ஒரு கடன்காரன் நினைவாக இருந்தது, தூங்கினால் அவனை மறந்து தொலையலாம் என்று நினைத்தேன், அப்புறம் அவன் திட்டுவானே என்று வைத்துவிட்டேன்" என்றாள் அவள்.

" நினைவு வந்தால் வந்துவிட்டு போகட்டும் என்று இல்லாமல் எதற்க்கு இந்த மாத்திரை." என்றான் அவன் விடாமல்.

கோபத்தில் எழுந்து அமர்ந்தவள் " பேசாம இரு, நான் செம கடுப்பில் இருக்கிறேன் " என்றாள் அவனை போலவே.

" எதுக்கு உனக்கு இந்த கோபம் " என்று அவளை அவன் நெருங்க

" கிட்ட வந்த கொன்னுடுவேன், புருஷன் என்று பார்க்கிறேன் இல்ல என்ன சொல்லி திட்டுவேன் என்று எனக்கே தெரியாது, பேசாமல் நீ சின்ன அத்தானாகவே இருந்திருக்கலாம். கல்யாணம் என்று செய்து எனக்கு புருஷனாகி என்னை என்ன கொடுமை எல்லாம் செய்கிறாய். எங்கே போகிறேன் என்று சொல்வது கிடையாது, ஒரு போன் கிடையாது, நான் செய்தாலும் எடுப்பது கிடையாது. இந்த அழகில் என்ன கோபமாம் கோபம். பேசாமல் போய் வேலையை பார் " என்றவள் எழுந்து தன்னுடைய நீச்சல் உடையை எடுத்தாள்.

அவள் பேசியதை முகத்தில் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவன் அவள் நீச்சல் உடையை எடுத்ததும்
" மணி என்ன தெரியுமா ? குளிரில் விறைச்சு போவ " என்றான்.
" போனால் போகிறேன் போ, தூங்கினாலாவது கோபம் குறையும் என்று பார்த்தால் எழுப்பி புண்ணியம் கட்டிக்கொண்டாய், நீச்சலாவது அடித்துவிட்டு போகிறேனே " என்று சென்றுவிட்டாள்.

" அதிக நேரம் எடுக்காமல் சீக்கிரம் வந்துவிடு " என்றான் அவன்.
**********
அவனை பார்த்த பொழுதே வடிய தொடங்கிய கோபம் தண்ணீருக்குல் இறங்கிய கொஞ்ச நேரத்தில் காணாமல் போயிருந்தது. நீச்சல் அடிக்கவும் தோணாமல், தண்ணீரை விட்டு வெளியே வரவும் தோணாமல் தண்ணீருக்குள் இருந்தாள் அபி.
அபி சிதறவிட்டிருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து அதன் இடத்தில் வைத்துவிட்டு அறையை ஒதுக்கியவன் அங்கே இருக்க மனம் இல்லாமல் இவளை தேடி வந்தான்.

அவன் வருவதை பார்த்த அபிக்கு இப்போதுதான் தண்ணீர் குளுமையாக தெரிந்தது.
தண்ணீருக்குள் இருந்துகொண்டே "என்ன ?" என்றாள்.

" சும்மா " என்றவன் காலை மட்டும் நீருக்குள் விட்டு வெளியே அமர்ந்தான். அவனை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தாள் அபி.
"அம்மு இங்கே வா "

" முடியாது போடா, கல்லு பாறாங்கல்லு "

" என் செல்லம் இல்ல வா, உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் "
" ஒன்னும் வேண்டாம். சும்மா சும்மா என் மேல உனக்கு கோபம் வருது. என் மேல் உனக்கு பாசமே இல்ல, போ "

" சாரி இனி கோபமே படமாட்டேன். வாடி ப்ளீஸ். "


" முடியாது "
" அப்படின்னா நான் உள்ளே வந்திடுவேன் " என்றான் ரிஷி இறங்க தயாராக.

அபி பதிலேதும் சொல்லாமல் அவனையே முறைத்துக்கொண்டு அவனை நோக்கி வந்தாள்.

வந்தவள் அவன் அருகில் வராமல் சற்று தள்ளி திரும்பி நின்றாள். அவளை இழுத்து பின்னோடு அணைத்தவன் " அப்படி என்னடி உனக்கு கோபம், முகத்தை இப்படி திருப்பிக்கிற" என்றான் அவள் கழுத்தில் இதழ் பதித்து.

" விடு என்னை. இரண்டு நாள் என்னைவிட்டுட்டு எங்கே போன, அதுவும் எதுவுமே சொல்லாமல் " என்றாள் அவள் அவன் முகத்தை தள்ளிவிட்டபடி.

" ஏன்டி அம்மு இப்படி இருக்கிறாய். இரண்டு நாள்தானே சென்றேன். சொல்லிக்கொள்வது போல இருந்தால் சொல்லியிருக்கமாட்டேனா ? நீ தைரியமான பெண்ணாக எப்போது மாறுவாய். என்னை சுற்றியே உன் வாழ்க்கை இருக்கக்கூடாது அம்மு. நான் இல்லாவிட்டாலும் நீ தைரியமாக இருக்க வேண்டும். நான் மட்டும் உன் வாழ்க்கை இல்லை " என்றான் ரிஷி.

கையில் தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் அடித்தவள் " இந்தா வாயை கழுவு, பெரிய வாழ்க்கை. இரண்டு நாளில் மூச்சு முட்டிப்போச்சு, இந்த அழகில் இவர் இல்லாவிட்டாலும் தைரியமாக இருக்க வேண்டுமாம். ரொம்ப முக்கியம். வேண்டுமென்றால் நீ நான் இல்லாமல் தைரியமாக இரு" என்றாள் அபி.
" போதுமடி வாயாடி தெரியாமல் சொல்லிவிட்டேன். " என்றான் அவன்.
" எங்கே போன ?" என்றாள் அபி.

ஒருநிமிடம் அமைதியாக இருந்தவன் எல்லாவற்றையும் கூறினான்.
" ப்பூ இவ்வளவுதானா ! அந்த வசந்த் நோட் பண்ணியதை நான் பார்க்காமலா இருந்தேன். அந்த பைக் காரன் ப்பாலோ செய்ததை நானும் கவனித்தேன், அதனால்தான் அன்று காலை நான் உன்னுடன் ஆபீஸ் போனேன். " என்றாள் தோளை குலுக்கியபடி.

"ஆரம்பத்திலே என்னிடம் ஏன் நீ இதை சொல்லவில்லை " என்றான் அவளை வேகமாக திருப்பி.

" என் தைரியசாலி கணவன் பயந்துவிடக்கூடாது என்றுதான் " என்றாள் அபி கண்ணை சிமிட்டி.
" உன் பாதுகாப்பில் உனக்கு இவ்வளவு அலட்சியம் கூடாது அம்மு. உன் விஷயத்தில் எல்லாமே இங்கு சரியாகிவிடவில்லை. யாராலும் எதுவும் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார்கள் அவ்வளவுதான். நீ நினைப்பது போல நம் குடுப்பத்தார்கள் சாதாரணமானவர்கள் இல்லை." என்றவன் அந்த ஜெய்பிரகாஷை பற்றிய அனைத்து உண்மைகளையும் கூறினான்.

" புரியுதா ? ஆபத்து எப்போது யார் உருவத்தில் வரும் என்று சொல்லமுடியாத நிலை. ஸோ ப்ளீஸ் உன்னை சுற்றி அசாதாரணமாக ஏதாவது நடந்தால் என்னிடம் சொல்லிவிடு " என்றான் அதிர்ச்சிவிலகாத அபியின் முகத்தை பார்த்து.
அவள் தலையை ஆட்டினாள். ரிஷிக்கு அவளின் முகத்தை பார்த்து சிரிப்புடன் காதலும் சேர்ந்து வந்தது.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஸ்வபூமி டியர்

என்னத்தை உண்மையை என்னத்தை சொல்லி ரிஷி என்னத்தை எச்சரித்து என்னத்தை பண்ண?
அபிக்கு துன்பம் வருமா?
அப்படின்னா யாரால் வரும்?
உறவினரால் தொல்லை வருமா?
இல்லை ஜெயப்பிரகாஷால் வருமா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top