Uyirin ularal - episode 27

Advertisement

Nasreen

Well-Known Member
உயிரின் உளறல் - அத்தியாயம் 27

அபியின் கால் வேரூன்றி அதே இடத்தில் நின்றது, எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ, அவளுடைய ஒரு கிளைன்ட் அவளுக்கு போன் செய்திருந்தார். அதன் சத்தம் அவளை உலகிற்கு கொண்டுவந்தது. அவரிடம் பேசிவிட்டு போனை வைத்தவள், ரிஷி பேசிவிட்டு போனதை நினைத்து யோசனையில் அந்த அறையை குறுக்கும் நெடுக்குமாக அளந்துகொண்டிருந்தாள்.

கால் வலித்ததுதான் மிச்சம். அவள் யோசனையும் வெற்றிபெறவில்லை, கத்திவிட்டு போனவனும் திரும்பிவரவில்லை.

இரவு சாப்பிட வருமாறு கற்பகம்மாளிடம் இருந்து அழைப்பு வரவே அபி தவித்துப்போனாள்.

கீழே போனவுடன் அத்தை கேட்பார்களே, அவர்கள் பெற்ற உத்தம புத்திரன் எங்கே என்று ? என்ன பதிலை சொல்ல ? தனியாக சாப்பிட வரக்கூடாது என்று ஏற்கனவே உத்திரவு வேறு போட்டிருக்கிறார்.

அட ஆண்டவா இந்த கடன்காரனை கட்டிக்கொண்டு நான் படும் வேதனை. மனைவியிடம் சண்டை போட்டால் வீட்டில் இருந்து போட்டால் என்ன ? பொசுக்கு பொசுக்கு என்று வெளியே போய்விட்டால் நான் யாரிடம் போய் நிற்க ? சுவரிடமா போய் பேச. நல்ல மனுஷன். என்று புலம்ப இரண்டாவது முறையும் அழைப்பு வந்தது.

வேறு வழியில்லை, வெளியே போயிருக்கிறார் என்று சமாளித்துவிடலாம், எங்கே என்று கேட்டால் என்ன செய்வது ? எதையாவது சொல்லி சமாளிப்போம் என்று நினைத்தவள்

" அடேய் நந்து எருமை எப்படியும் இங்கேதான் வருவ, உன்னை என்ன செய்கிறேன் என்று பார் " என்று மனதில் திட்டிக்கொண்டே கீழே போனாள் அபி.

அங்கே அபியை கற்பகம்மாளை விட பானு மிக ஆவலாக எதிர்பார்த்தார். இருக்காதா பின்னே ? தன்னுடைய பார்வையாலே அபியை ரிஷியை நெருங்கவிடாமல் தடுத்த திறமை படைத்தவளாயிற்றே ?

" என்ன அபி தனியே வருகிறாய், உன்னுடைய நிழல் எங்கே, அதான் உன் சின்னத்தான் ?" என்று கேட்டு ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தாள் பானு.

அபி அமைதியாக இருக்க
" அம்மு ரிஷி ஏன் சாப்பிட்டவரவில்லை ?" என்று கற்பகம்மாள் கேட்டார்.

" வந்து அத்தை, அவர் வெளியே போயிருக்கிறார். " என்றாள் தடுமாறிக்கொண்டு.

" இப்போதுதானே வந்தான், அதற்குள் எங்கே வெளியே சென்றான், அதுவும் தனியாக ?" என்ற கற்பகம்மாள் அபியின் முகத்தை ஆராய்ந்தார்.

அபி முகம் மாறாமல் காக்க முயன்றுகொண்டிருக்கும் போது, பானுவால் அவள் சந்தோசத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை. அபியை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தாள் பானு. அபிக்கு தான் அங்கேயே பூமிக்குள் புதைந்து விட வேண்டும் போல இருந்தது. இவள் முன் பதில் பேச முடியாமல் நிற்கின்றேனே, ரிஷிக்கும் அப்படித்தானே இருந்திருக்கும் என்று எண்ணி வருந்தியவள் உணவை அளைந்து கொண்டிருந்தாள். கண்ணில் குளம் உருவாக தொடங்கியது.

கற்பகம்மாள் என்ன நினைத்தாரோ " சரி சாப்பிடு அம்மு " என்று உணவில் அபியின் கவனத்தை திருப்பினார்.

அப்போது " ஓஒ சாரி நான் லேட்டா ?" என்று அங்கு வந்து சேர்ந்தான் ரிஷி.

அபி சத்தம் வந்த திசையை பார்த்து விழுக்கென்று நிமிர்ந்தாள். அவளை பார்த்து சிரித்தவன் அவள் அருகில் வந்து குனிந்து அவளை மென்மையாக அணைத்து, அவள் தலையில் முத்தமிட்டு " சாரி பேபி, கொஞ்சம் லேட்டாகிவிட்டது " என்று தன் இருக்கையில் அமர்ந்தான்.

" எங்கேடா போன, இவளிடம் கேட்டால் ராணுவ ரகசியம் மாதிரி வாயை திறக்க மறுக்கிறாள் " என்றார் கற்பகம்மாள். இவ்வளவு நேரம் அங்கே நடந்த பனி போரை பார்த்தவர் மகன் அதிலே மருமகளை வெற்றிபெற வைக்க ஏதாவது பதில் வைத்திருப்பான் என்று நினைத்து அப்படி கேட்டார்.

" அது, அதுவந்து அம்மு ஐஸ்கிரீம் கேட்டாள், அதை வாங்க போயிருந்தேன், அங்கே ஒரு நண்பனை பார்த்தேன், அவனிடம் பேசியதில் நேரம் போனதை கவனிக்கவில்லை நான். அம்மு இரண்டு முறை கால் செய்திருந்தாள். நான் எடுக்கவில்லை அதான் கோபத்தில் இருந்திருப்பாள். உங்கள் முன் என்னை திட்டக்கூடாது என்று அமைதியாயிருந்திருப்பாள்." என்றான்.

" இந்த நேரத்தில் என்ன ஐஸ்கிரீம் ? " என்றாள் பானு எரிச்சலுடன்.

" அவளுக்கு தேவை இருந்திருக்கும் கேட்டிருப்பாள், உனக்கெதற்கு இந்த கேள்வி ?" என்றான் ராம்.

பானு அவனை முறைத்துவிட்டு அமைதியாகிவிட, அபி கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டாள். பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து தன் கணவனை அவர்கள் முன் கேலிப்பொருளாக தான் மாற்றியதை நினைத்து வருத்தப்பட்டாள். இந்த பானு அக்கா சற்று முன் என்னை பார்த்தமாதிரிதானே அவரையும் இன்று மாலை பார்த்து சிரித்திருப்பாள். ஆனால் என் கணவனோ என்னிடம் உள்ள மனவருத்தத்தை வெளியே காட்டாமல், என்னை யார் முன்னாடியும் விட்டுக்கொடுக்வில்லையே. இதைத்தான் அவன் என்னிடம் எதிர்பார்த்து அது நடக்கவில்லை என்று அப்படி கோபப்பட்டிருக்கிறான். நியாயமான கோபம் என்றது அவள் மனது.

எல்லோரும் தங்கள் அறைக்கு கிளம்ப
" ரிஷி கொஞ்சம் என் அறைக்கு வந்துட்டு போப்பா " என்று மகனை அழைத்தார் கற்பகம்மாள்.

அபி தங்கள் அறைக்கு செல்ல ரிஷி தாயின் பின்னே சென்றான்.

பத்து நிமிடங்கள் ஆகியும் ரிஷி வராமல் போக அவனுக்காக காத்திருக்க பொறுமை இல்லாமல் அபியும் கற்பகம்மாளின் அறைக்கு போனாள்.

அங்கே தாயிடம் ரிஷி நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.

" நான் ஒன்றும் முட்டாள் இல்லை, நானும் உங்கள் வயதை கடந்துதான் வந்திருக்கிறேன். கல்யாணம் முடிந்து ஒரு வாரம் ஆகவில்லை, என் குழந்தையின் முகம் எத்தனை நாள் வாடிப்போய் தெரிகிறது. அவள் குழந்தை, தெரியாமல் ஏதாவது செய்துவிட்டாலும் நீ பொறுத்து போகவேண்டாமா ? என்னதான் சொல்லுவியோ ? அவள் முகத்தில் அருளே இல்லாமல் போய் விடுகிறது. கணவன் என்றால் இரண்டு கொம்பு முளைத்துவிடாது. என்னை சொல்லணும் உன் முரட்டு புத்திக்கு உன்னை அடித்து வளர்க்காமல் விட்டேன் பார் " என்றார் கற்பகம்மாள்.

அதற்குள் அபி " சின்னத்தான், சின்னத்தான்" என்று அழைத்துக்கொண்டே உள்ளே வந்தாள்.

" எங்கேயும் போய்விடவில்லை உன் சின்னத்தான் நீ முதலில் ஏலம் போடுவதை நிறுத்து, அப்புறம் அந்த அத்தானுக்கு முன் ஒரு அடை மொழி போடுகிறாயே அதையும் நிறுத்து. மற்றவர்களுக்கு கொடு உன் அடை மொழியை. இவனுக்கு அத்தான் மட்டும் போதும். பத்து நிமிடம் பொறுக்க முடியாமல் தேடிவருகிறவள் நாள் விடாமல் அவனிடம் ஏன் சண்டை போடுகிறாய், ஏன் எல்லோரும் வெறும் வாயை மெல்லுகிறீர்கள் இந்தா என்று அவலை கொடுப்பதர்க்கா " என்று அவளுக்கும் விழ

" சண்டை எல்லாம் போடவில்லை " என்றாள் அபி அவன் பின்னே நின்றுகொண்டு தலையை குனிந்தபடி

" வேற இந்த நேரத்தில் அவன் ஏன் தனியாக வெளியே போனான் "

" அவள் ஐஸ்கிரீம் கேட்டாள் அதான் வாங்க போனேன் " என்றான் ரிஷி.

" அப்புறம் அதை ஏன் சொல்லாமல் கேட்க கேட்க திரு திருவென்று முழித்தாள். நீ திட்டினாயா ? " என்றார் அவர் விடாமல்.

" இல்லை " என்றாள் அபி அவசரமாக.

" கொஞ்சமாக " என்றான் ரிஷி அவளை தொடர்ந்து.

கற்பகம்மாள் நம்பாமல் இருவரையும் பார்க்க

" இந்த நேரத்தில் ஐஸ்கிரீமா என்று திட்டினேன், அதான் கோபத்தில் பதில் சொல்லாமல் இருந்திருப்பாள் " என்றான் ரிஷி.

" என்ன ஐஸ்கிரீம் கேட்டதற்கு திட்டினாயா ? நீயா ? இந்த கதையை எல்லாம் வேறு யாரிடமாவது சொல்லு. என்னிடம் வேண்டாம். அவள் ஒன்றை கேட்டு நீ வாங்கிகொடுக்காமல் இருப்பாயா ? உங்களுக்குள் எதற்கு சண்டை என்று நான் கேட்கபோவதில்லை அது உங்கள் சொந்தவிஷயம். ஆனால் எதற்காகவும் இவள் முகம் வாடகூடாது, பார்த்துக்கொள். போங்க இருவரும் போய் சமாதானம் ஆகுங்கள். " என்று கூறினார் கற்பகம்மாள்.

ரிஷிக்கு உள்ளே கோபம் கனகனவென்று வந்தது ' அவள் செய்த வேலைக்கு சமாதானமா ?' என்று. அபியை பார்த்து முறைத்தான்.

அபியோ " வா சின்..... அத்தான் போகலாம் " என்று அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போனாள், நல்ல பிள்ளை போல.

அறையை விட்டு வெளியே வந்தால் அங்கே பானு கண்ணை உருட்டிக்கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தாள். அப்போது தன் கையை பிடித்திருந்த அபியின் கையையும் அவள் முகத்தையும் பார்த்தவனின் உதடு தன் கசப்பை காட்டியது. இப்போது விட்டுட்டு ஓடிடுவியே என்று சொல்லாமல் சொன்னது அது.

அபிக்கோ அவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டியிருந்தது, இப்போது விட்டால் மறுபடியும் எங்காவது அவன் சென்றுவிட்டால் என்ன செய்வது என்ற கவலை அவளுக்கு.

நின்ற ரிஷியை " என்ன நின்னுட்டிங்க, போகலாம் வாங்க " என்று இழுத்துக்கொண்டு போனாள் அபி.

பானு போகும் அவளையே முறைத்து பார்த்தாள்.

தங்கள் அறைக்குள் வந்ததும் அவன் கையை அவளிடம் இருந்து விடுவித்தான் ரிஷி. எதுவும் பேசாமல் குளியல் அறைக்குள் புகுந்தவன் உடையை மாற்றிக்கொண்டு சோபாவில் வந்து பொத்தென்று விழுந்தான்.

அபிக்கு கோபம் வந்தது. " உனக்கு கொழுப்பு கூடிவிட்டது, வருவல அம்முன்னு அப்போ பார்த்துக்கொள்கிறேன். உன் கோபம் எத்தனை நாளைக்கு " என்றவள் பெட்டில் போய் அவளும் அவனை போல பொத்தென்று விழுந்தாள். வாய்க்குள்ளே முனங்கியபடி அவனை திட்டியவள் பெட்ஷீட்டை எடுத்து தலையோடு மூடினாள்.

கொஞ்ச நேரம் அங்கே எந்த சத்தமும் இல்லை. சோபாவில் படுத்தவன் மெல்ல தலையை தூக்கி பார்த்தான், அவள் தலையோடு போர்த்தியிருப்பதை பார்த்தவன்

" தலையை கவர் பண்ணாம படு கழுதை " என்று பல்லை கடித்தான்.

பட்டென்று பெட்ஷீட்டை விலக்கியவள்
" அப்படிதான் படுப்பேன் " என்று மறுபடியும் தலையோடு மூடினாள்.

" என்னிடம் வாங்காதே, இன்று உனக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். ஒழுங்காக கழுத்துவரை போர்த்திக்கொண்டு படு, அப்படியா உன்னை குளிர் ஆட்டுகிறது " என்றவன் ac அளவை குறைத்தான்.

" முடியாது, நான் இப்படித்தான் படுப்பேன். என்ன செய்வ ? நீதான் என்னுடன் சண்டையே, நாளைக்கு பாரு இந்த சோபாவை என்ன பண்றேன் என்று " என்றாள் போர்வைக்குள் இருந்துகொண்டு.

" தரையில் படுத்தாலும் படுப்பேனே தவிர நேரத்துக்கு ஒருமாதிரி மாறும் உன்னுடன் படுக்கமாட்டேன் " என்றவன் திரும்பி படுத்தான். ஆனாலும் பாழும் மனது கேட்கவில்லை அவனுக்கு. இப்படி தலையோடு போர்த்திக்கொண்டு படுத்தால் மூச்சு முட்டாதா என்று நினைத்து எழுந்து அவள் அருகில் சென்றான் பெட்ஷீட்டை பிடுங்க.

அவன் இழுக்க, அவள் பலங்கொண்டு அவள் புறம் இழுக்க இறுதியில் அவள் விரித்த வலையில் சரியாக போய் விழுந்தான் ரிஷி. ஆனாலும் சமாளித்து அவள் மேல் விழாமல் தள்ளி போய் விழுந்தான்.

" குரங்கே " என்றவள் சட்டென்று அவன் மேல் ஏறி உட்கார்ந்தாள்.

" ஏய் குட்டிபிசாசே என்னடி பண்ணுற ? ஒழுங்கா கீழே இறங்கு இல்ல " என்றான் கோபத்தில்.

" இல்லன்னா என்ன பண்ணுவ ? ஒன்றும் கழற்ற முடியாது. அசையாமல் நான் சொல்வதை கேள், அப்புறம் இறங்குகிறேன்" என்று அவன் இரு கையையும் கீழே அழுத்தி பிடித்துவைத்தாள்.

அவளை கீழே தள்ள அவனுக்கு ஒரு நிமிடம் ஆகாது, ஆனாலும் " சரி சொல்லி தொலை" என்றான் ரிஷி.

அபி அவன் முகத்தருகே தன் முகத்தை கொண்டுவந்து ஒருநிமிடம் எதுவும் சொல்லாமல் அவனையே உற்று பார்த்தாள். அதன்பிறகு " ஐ அம் ரியலி சாரி டார்லிங் " என்றாள் மென்மையாக மெதுவாக.

பதில் ஏதும் சொல்லாமல் அவளையே பார்த்தவன் " போக்கிரி செய்வதை எல்லாம் செய்துவிட்டு சாரி கேட்கும் ஸ்டைலை பாரு" என்று அவளின் பிடியை தளர்த்தி, அவளை அணைத்துக் கீழே கொண்டு வந்து சிரித்தான் ரிஷி.

" அப்பா சிரிச்சிட்ட, என் மேல் உள்ள கோபம் போயிட்டா ?" என்று கேட்டாள் அபி.

" கோபம் போகல பட் நீ சாரி கேட்ட ஸ்டைல்ல நான் இம்ப்ரெஸ் ஆகிட்டேன். போனா போகுது பிழைத்து போ " என்று அவள் உதட்டை பிடித்து ஆட்டியவன்

" புத்தர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார், ஆசைதான் துன்பத்திற்கு காரணம் என்று. உன்னிடம் நான் கொண்ட அதிகப்படியான எதிர்பார்ப்பின் காரணம் தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம். இனி நான் உன்னை மாற்ற நினைக்காமல் என்னை மாற்றி கொள்கிறேன் " என்றவன் அவளை விடுவித்துவிட்டு கட்டிலில் தன் இடத்தில் படுத்துகொண்டான்.

அவன் புறம் திரும்பி படுத்த அபி வெகு நேரம் விழித்திருந்தாள். ஆனால் அவனோ படுத்த ஐந்தாவது நிமிடம் உறங்கிப்போனான். பக்கத்தில் படுத்திருந்தாலும் அவன் மனதால் தன்னை விட்டு விலகி சென்றுவிட்டான் என்று நினைத்தாள் அபி. " அரக்கன்" என்று திட்டினாள். பானுவின் மேல் அவளுக்கு கொலை வெறி வந்தது.

**********

அடுத்து வந்த நாட்களில் அபி இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டு பிடித்திருந்தாள். பானு ஹாலுக்கே ஷிப்ட் ஆன மாதிரி எப்போதும் அங்கேயே இருக்க அபி ரிஷிக்கு முன்னே ஆபிஸில் இருந்து புறப்படுவதை தவிர்த்து, அவன் வந்த பிறகுதான் வீட்டுக்கு வந்தாள். எதற்கு முன்னே வருவானே ? அவனிடம் திட்டுவாங்குவானேன் ? என்று நினைத்தாள்.

அவனும் இவளின் மனம் புரிந்து ஆபீஸ் விட்டு வந்த பிறகு தன் அறையிலேயே இருந்துவிடுவான். அவள் வந்த பிறகும் முன்பு இருந்த இணக்கம் எல்லாம் ஒன்றும் இல்லை. பொதுவாக பேசுவார்கள். பக்கத்தில் எங்கேயாவது போகணும் என்றால் போவார்கள். இப்படியே ஒருவாரம் செல்ல ஒருநாள் மாலை அபிக்கு ரிஷி போன் செய்தான்.

" அம்மு ஒரு சைட்டில் கொஞ்சம் பிரச்சனை. வேலையை அட்வான்சா முடித்து கொடுக்கவேண்டிய கட்டாயம். நைட் ஒர்க் நடக்குது. மனோவை புள் நைட் ஸ்டே பண்ண வைக்க முடியாது. அவன் வைப் கன்ஷிவா இருக்காங்க தனியா வேற. ஸோ என்னால இன்று இரவு வர முடியாது. நாளைக்கும் எப்போது வருவேன் என்று தெரியாது. நீ காலையில் ஆபீசுக்கு ட்ரெஸ்சை கொடுத்துவிட்டுடு. டேக் கேர் " என்று போனை வைத்தான்.

அபிக்கு பாலும் கசந்ததடி, படுக்கையும் நொந்ததடி என்று ஆனது. அன்று இரவு போனது. மறுநாள் இரவு 10 மணிவரை இருந்துபார்த்தாள். அவனை காணவில்லை. போனும் போட்டு அவனை தொந்திரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து அமைதியானாள். ஆனால் மனம் இருப்பு கொள்ளாமல் தவித்தது. பலநாள் பிரிவு போல அவனை எதிர்பார்த்து கண்ணும் கருத்தும் வாசலை விட்டு அகல மறுத்தது.

மருமகளின் தவிப்பை பார்த்து கற்பகம்மாள் அவளுக்கு சிறு சிறு வேலையை கொடுத்தார். புத்தகத்தை வாசித்து காட்ட சொன்னார். காசிக்கு போனாலும் கருமம் தீராது என்பது போல அவள் வாசித்த புத்தகத்தில் 'அத்தான் 'என்ற வார்த்தை வர மேலே படிக்காமல் அப்படியே நின்றாள்.

" அம்மு உன்னால் எனக்கு பெரும் சோதனையாக இருக்கு. அவன் எங்கே போய்விட்டான். வேலைக்குத்தானே போயிருக்கிறான், அதுவும் முழுதாக இரண்டு நாள் கூட ஆகவில்லையே. இப்படி இருந்தால் எப்படி. " என்றார் சிறு கண்டிப்புடன்.

அதற்குள் அபியின் கண்ணில் கண்ணீர் தேங்கியது. உதட்டை பிதுக்கிகொண்டு அவள் அழுகைக்கு தயாராக

" அம்மாடி நான் இப்போது என்ன சொல்லிவிட்டேன். அழுதுவிடாதே அந்த புத்தகத்தை மூடிவை. ஏதாவது கொலை கார நாவலாக எடுத்து படி " என்றார் அவர் பதறிப்போய்.

அதையும் படித்தாகிவிட்டது. கற்பகம்மாள் சோர்வாக தெரிய அவரை படுக்க சொல்லிவிட்டு வெளியே ஹாலில் வந்து காத்திருந்தாள் அபி. மணி 10தை தாண்டியும் அவன் வருவது போல தெரியவில்லை. ரொம்ப முக்கியம் போல பானு தன் அறையில் இருந்த டிவியை பார்க்காமல் ஹாலில் இருந்து படம் பார்த்தாள்.

அபி நோடிக்கொருமுறை வாசலை பார்த்து பார்த்து சோர்ந்து போவதை பார்த்த பானுவுக்கு ஆத்திரமும், சந்தோஷமும் மாறி மாறி வந்தது.

கடைசியாக இன்றும் வரமாட்டான் போல என்று எண்ணிய அபி எழுந்து தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
அப்போது வழக்கத்தைவிட ஹார்ன் சவுண்ட் அதிகமாக கேட்டது ரிஷியின் காரிலிருந்து.

வந்துவிட்டான் என்று அந்த சத்தம் அறிவிக்க அபி திறந்திருந்த கதவில் வழியே வேகமாக ஓடி வந்தாள்.

இவன் ஏன் இப்படி ஹார்ன் அடித்துக்கொண்டு வருகிறான் இந்த இரவு வேளையிலே என்று எரிச்சலாக நினைத்த பானுவை கடந்து வேகமாக ஓடும் அபியை பார்த்த பானுவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.

ஓடிச்சென்ற அபி ரிஷி உள்ளே வருவதற்குள் வாசலிலேயே அவனை போய் வேகத்தோடு கட்டிப்பிடித்தாள்.

வேகமாக கட்டிபிடித்தவள் அத்தோடு நில்லாமல் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு முகம் எங்கும் அதே வேகத்துடன் முத்தம் கொடுத்தாள். ரிஷி அபியை விட உயரம் கூடியவன். பெண்களில் அபி சற்று உயரம் என்றாலும் ரிஷியின் முன் சற்று குள்ளமாகவே தெரிவாள்.

மனைவி இப்படி வருவாள் என்று எதிர்பார்த்தானோ என்னவோ அவனும் கையில் எதையும் எடுத்து வராமல் காரிலேயே வைத்துவிட்டு வந்திருந்தான் தன் பொருட்களை.வேறன்ன இரண்டு கையும் பிரீயாகத்தான் இருக்கு.

தன் மனைவி முத்தம் கொடுக்க கஷ்டப்படாத வண்ணம் அவளை பாதி தூக்கியிருந்தான்.

" நேஹா போதும் விடு ஒரே வேர்வை நாற்றம் என்னிடம் " என்றான் அவளை கீழே விடாமல்.

ஆனாலும் அவள் நிறுத்தின பாடில்லை. பின்பு ரிஷியும் சளைக்காமல் அவளுக்கு பதில் முத்தம் தந்தான் மன்னிப்பு கேட்டபடி.

இதையெல்லாம் அங்கு நின்று காதிலும் மூக்கிலும் புகை வரும் வரை பார்த்திருந்த பானுவுக்கு ஒரு சிறு சந்தேகம் இருந்தது.

ஒருவேளை அபி தான் இங்கே இருந்ததை கவனிக்கவில்லையா, அதனால் தான் பயம் இல்லாமல் இப்படி நடந்துகொண்டாலோ என்ற சந்தேகம். அதனால் அங்கு அவர்களுக்காக காத்திருந்தாள் பானு.

ரிஷி அபியை பாதி தூக்கியபடி உள்ளே வந்தான். அப்போது பானு நிற்பதை பார்த்தான். ஒருவார இடைவெளி, இரண்டு நாள் பிரிவு தன் மனைவியை இப்படி நடந்துக்கொள்ள தூண்டியிருக்கலாம். கஷ்டப்பட்டு கல்லாக்கி கொண்டு விலகி இருந்த என் மனது இப்போது பழைய மாதிரி திரும்பி உள்ளது. ஆனால் இப்போது இந்த அண்ணியை பார்த்து அவள் அன்று நடந்தது போல நடந்துகொண்டால்? " என்ற சிறு கலக்கத்துடன் அவன் நடையில் நிதானம் வந்தது.

அபிக்கோ சுற்றுசூழல் மறந்துவிட்டது போல, அவள் " நந்து என்னை தூக்கிட்டு போ " என்றாள்.

ரிஷிக்கு மனம் லேசானது. சந்தோஷத்தில் ஒரு வேகத்தோடு தூக்கியவன் தன் அறையை நோக்கி சென்றான் பானுவை கடந்து.

அபிக்கு அந்த ஒரு வாரத்திலும், இந்த இரண்டு நாளிலும் என்ன புரிந்ததோ, அவள் முற்றிலும் மாறிப்போயிருந்தாள்.

கேட்பாரில்லை என்று புலம்பியவனின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைத்தாள். தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் என்பது போல அவனின் ஒவ்வொரு அசைவிலும் அபி இருந்தாள்.

அவனுடைய அன்றாட தேவையை பூர்த்தி செய்வதில் அவனுக்கு தாயாகவே மாறிப்போனாள். நல்ல தோழியாக அவனின் ஒவ்வொரு செயலிலும் கை கொடுத்தாள்.
ரிஷியும் அவளை கையில் வைத்து தாங்கினான். இருவரில் யார் அன்பு பெரியது என்பதை ஒரு பட்டிமன்றம் வைத்தாலும் தீர்ப்பு சொல்லமுடியாத படி தங்கள் அன்பை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.

அப்படியே நாட்கள் சென்றிருந்தாள் நன்றாகத்தான் இருந்திருக்கும்.
Nice ud
 

Lakshmimurugan

Well-Known Member
சில பேர்க எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார்கள் பானு அந்த வகையைச் சேர்ந்தவளோ.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top