Uyirin ularal - episode 19

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் - அத்தியாயம் 19

வீட்டில் கல்யாண வேலை மும்மரமாக நடந்துகொண்டிருந்தது.

அபியின் அறையில் " எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஜானு " என்றாள் அபி.

" என்ன பயமா ? என்னடி மறுபடியும் ஆரம்பிக்க ?" என்றாள் ஜானு அதிர்ச்சியாக.

" அது இல்லடி, வீட்டில் உள்ள பாதி பேருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை, அதான் பயமா இருக்கு, அத்தானும் பாவம். அவருக்கு பயமா இருக்காது, ஆனா படபடப்பா இருக்கும். அவர் முகத்தில் ஒரே டென்ஷன் " என்றாள் அபி.

" ஆமா கண்டிப்பா டென்ஷன் இருக்கத்தான் செய்யும், ஏன்னா இன்னும் உன் கல்யாண ப்ளவுஸ் வரவில்லையே, பார்த்து பார்த்து அல்லவா மாடல் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் நீ வேற செமைக்கு ட்ரெஸ்ஸை தைக்க குடுத்துட்டு நீதான் பொறுப்புன்னு வேற சொல்லிட்டியாம், புலம்பிட்டு இருந்தாரு. " என்றாள் ஜானு கிண்டலாக.

" உனக்கு வேற வேலையே இல்லை, எப்போ பாரு கிண்டல் " என்று சலித்துக்கொண்டவளை பார்த்து சிரித்த ஜானு

" சரி சரி கோபப்படாதே, எல்லார் வீட்டிலும் மாப்பிளை வேற வீடு, பெண் வேற வீடு என்று இருக்கும், வேலை இரண்டாக இருக்கும். ஆனால் உங்கள் வீட்டில் எல்லாம் ஒன்று, அதில் இந்த வீட்டு மருமக்களின் அட்டூழியம் வேறு, அதையும் சமாளிக்கணும். அதனால் கொஞ்சம் டென்ஷன் இருக்குமா இருக்கும். எல்லாம் உன் கழுத்தில் தாலி ஏறியவுடன் சரியாகிவிடும்" என்று அவளை தேற்றினாள் ஜானு.

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்கவே இரு பெண்களும் திரும்பினர். கதவை திறக்க அபி எழும்ப, " நீ இரு நான் பார்க்கிறேன் " என்று எழுந்து சென்றாள் ஜானு.

ரிஷிதான் நின்றிருந்தான். " ப்ளவுஸ் ஸ்டிச் பண்ணி வந்துவிட்டது. சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு ஏதாவது குறை இருந்தா சொல். அப்புறம் உன் பாதி உடை ஆல்டர் செய்து வந்துவிட்டது, மீதி இரண்டு நாளில் தந்துவிடுவாராம். " என்றான் ரிஷி சிரித்துக்கொண்டு.

அவன் சிரித்தாலும் அதை மீறி அவன் முகத்தில் டென்ஷன் தெரிந்தது. அவனை இமைக்காமல் பார்த்த அபி புன்னகைத்தாள். அது அவனுக்கு டென்ஷனை குறைத்தது போல இருந்தது.

அவள் தலைமேல் கை வைத்து "ஐ அம் ஓகே, டோன்ட் ஒர்ரி " என்று கூறிவிட்டு சென்றான் ரிஷி.

ஜானு சிரித்துக்கொண்டாள்.

" ஏன்டி ஜானு என்னை ஏன் இப்படி ரூமில் அடைத்து வைத்திருக்கிறீர்கள், எனக்கு பசிக்கு, சாப்பிட ஏதாவது தருவீர்களா ? இல்லையா ?" என்று கேட்டாள் அபி.

" என்ன ரூமில் அடைத்து வைத்திருக்கிறோமா ? நீ கல்யாண பெண்ணடி, இன்று ஒரு நாளாவது அடக்க ஒடுக்கமாக இரு." என்றாள் ஜானு தான் கொண்டுவந்த பேக்கை திறந்தபடி.

" ஆமா இல்லேன்னாலும் நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன், அதெல்லாம் அந்த காலமடி. சுற்றிக்கொண்டே இருப்பேன், சரி விடு, சாப்பிடவாவது கீழே போகலாம் வாடி " என்றாள் அபி.

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்கவே அபி எழுந்தாள்.

" இரு அபி நான் பார்க்கிறேன் " என்று பேக்கில் இருந்து எடுத்த பாக்ஸ்சை கையில் கொடுத்த ஜானு வேகமாக கதவை திறக்க சென்றாள்.

வெளியே அம்பிகாவும், பானுவும் நின்றிருந்தனர். இவள் ஏன் என்னை கதவை திறக்கவிடாமல் தடுக்கிறாள் என்று யோசித்துக்கொண்டிருந்த அபிக்கு வெளியே அவர்களின் குரலை கேட்டவுடன் எல்லாம் புரிந்தது.

ஜானு கதவை முழுவதுமாக திறக்காமல்
" என்ன ? " என்றாள் மொட்டையாக.

" என்ன ?என்ன ? எதுக்கு வழியில் நிற்கிறாய் ? நீ கல்யாணத்திற்கு வந்தவள் தானே, எங்களை ஏன் கேள்வி கேட்கிறாய் ? வழிவிடு நாங்கள் அபியிடம் பேச வந்திருக்கிறோம். நீ கொஞ்சம் வெளியே இருந்தால் எங்களுக்கு ரொம்ப வசதியாக இருக்கும். " என்றாள் அம்பிகா கொதிப்பாக.

" ஸாரி அவள் பாத்ரூமில் இருக்கிறாள், அதனால் தான் நான் கதவை திறந்தேன் " என்று ஜானு இழுக்கவும் அபி சத்தம் இல்லாமல் பாத்ரூமுக்கு நழுவினாள். மறக்காமல் கையில் போனை எடுத்து போனாள்.

" நீ எங்கே கதவை திறந்த, அதான் நந்தி மாதிரி நிற்கிறியே, தள்ளு " என்று தள்ளி கொண்டு இருவரும் உள்ளே நுழைந்தனர்.

" அக்கா நீங்கள் என்ன பேசி அவளை குழப்புவீங்களோ எனக்கு தெரியாது, இந்த கல்யாணம் மட்டும் நடக்க கூடாது " என்று பானு அம்பிகாவின் காதை கடித்தாள்.

" பானு ஜெய்யின் தவறான பார்வை மட்டும் தான் இவளுக்கு தெரியும், அதுக்கே அவனுடன் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னவ நம்ம அபி, ஆனா ரிஷியோ உன் தங்கையுடன் வாழ்ந்துட்டு அப்புறம் அவளை கழற்றிவிட்டுட்டு இவளை கல்யாணம் பண்ண போறான், இது மட்டும் அவளுக்கு தெரிந்தால் அபி தாங்குவாளா ?" என்று சோகமாக கேட்டு மேடை ரகசியம் பேசினாள் அம்பிகா.

ஜானு அவளின் பேச்சில் அதிர்ந்து தன் போனை கையில் எடுத்து அவர்களுக்கு தெரியாமல் ரிஷிக்கு மெசேஜ்ஜை தட்டிவிட்டாள்.

பாத்ரூம் சென்ற அபியோ காதில் இயர் போனை மாட்டிக்கொண்டு பாட்டுக்கேட்டுகொண்டிருந்தாள். வெளியே நடந்த பேச்சு அவள் காதில் விழவே இல்லை.

பெயருக்கு கதவை தட்டிவிட்டு உள்ளே வரும் ரிஷியை பார்த்த இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு ஜானுவை முறைத்தனர். " இவ வேலையா ?" என்று.

" என்னண்ணி இரண்டு அண்ணனும் உங்கள் இரண்டுபேரையும் கீழே தேடிக்கொண்டிருக்கிறார்கள், நீங்கள் இங்கே நின்றுக்கொண்டு என்ன செய்கிறீர்கள்? "என்று கேட்டான்.

" நாங்கள் என்ன செய்கிறோம் என்பது இருக்கட்டும், கல்யாண மாப்பிளை நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் ?" என்றாள் பானு.

" இது என்னண்ணி கேள்வி ? நம் வீட்டு பெண்ணின் கல்யாணம், அவளுக்கு ஏதாவது தேவையா என்பதை நாம் தானே பார்க்கவேண்டும், நீங்கள் மூன்றுபேரும் உங்கள் காரியத்திலேயே இருக்கிறீர்கள், பின்னே நான் தானே எல்லாவற்றையும் கவனிக்கவேண்டும், அம்முவுக்கு மெஹந்தி போட பார்லரில் இருந்து வந்திருக்கிறார்கள், அம்மு ரெடியா என்று பார்க்கவந்தேன், போன் செய்திருக்கலாம் ஆனால் எனக்கு அவளை பார்க்க ஆசை, சாப்பிட்டாளா இல்லையா என்றும் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன், நீங்கள் வந்த வேலையை சொல்லுங்கள் " என்றான் விடாமல்.

கடன்காரன் விடமாட்டான் போல என்று எண்ணிய பானு " வந்து கொழுந்தனாரே அப்பா, அம்மா உடன் பிறப்புகள் என்று யாரும் இல்லாத பெண் அபி. கூட பிறக்காவிட்டாலும் நாங்கள் எல்லோரும் அவளுக்கு சகோதரிகள் தானே, அதான் கல்யாணத்திற்கு பிறகு எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அவளுக்கு சொல்லிக்கொடுக்கலாம் என்று வந்தோம் " என்றாள் பானு சிரித்துக்கொண்டு.

" யாரு நீங்கள் இரண்டுபேரும் ? உருப்படும், நீங்கள் சொல்லிக்கொடுத்து உங்களை போல என் மனைவியும் நடந்துகொண்டால் என் பிழைப்பு சிரிப்பா சிரித்துவிடும். நான் என் அண்ணன் அளவுக்கு நல்லவன் இல்லை. உதாரணமாக பெரிய அண்ணி அம்முவிடம் பேசினால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று அண்ணனை மிரட்டிவைத்திருப்பது போல என்னிடம் என் மனைவி கூறினால் பயப்பட மாட்டேன். இப்படி ஒரு அப்பாவி பெண்ணை துன்புறுத்தாமல் போய் தொலை என்று விட்டுவிடுவேன். அம்மு அப்படியெல்லாம் மிரட்ட மாட்டாள். அப்புறம் என் மனைவிக்கு என்னென்ன சொல்லித்தரணுமோ அதை நான் அவளுக்கு இன்ச் பை இன்ச்சாக சொல்லிக்கொடுப்பேன், அதற்கு நீங்கள் தேவையில்லை. கீழே உங்கள் தங்கை ப்ரியா வந்து உங்களை காணாமல் தேடிகொண்டிருக்கிறார், போங்க " என்றான் ரிஷி.

ஜானுவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
அவளை முறைத்துவிட்டு இரண்டுபேரும் அங்கிருந்து சென்றனர் வந்த வேலை முடியாமலே.

"ஜானு அம்மு எங்கே ? அவர்கள் என்ன பேசினார்கள் ?" என்று கேட்டான்.

" யப்பா உங்க அண்ணிகள் ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவார்கள், உங்களுக்கும் அந்த ப்ரியாவுக்கு எல்லாம் முடிந்தமாதிரியும், நீங்கள் அவளை கழற்றிவிட்டுட்டு அபியை திருமணம் செய்ய போவதாக என்னம்மா பேசுகிறார்கள்." என்று வாயை பிளந்தாள் ஜானு.

" அம்மு எங்கே ? அவள் எதையும் கேட்டாளா ?" என்றான் பார்வையை அறையில் அலையவிட்டபடி.

" அவள் பாத்ரூமில் " என்றவள் பாத்ரூம் கதவை தட்டினாள் ஜானு, சத்தம் வராமல் போகவே வேகமாக தட்டினாள்.

பட்டென்று கதவை திறந்தாள் அபி, " ஏன்டி இப்படி கதவை உடைக்க ?" என்று கேட்டபடி காதில் மாட்டியிருந்த இயர் போனை கழற்றினாள்.

ரிஷி கையை கட்டிக்கொண்டு ஒரு கையால் சத்தம் வராமல் வாயை மூடிக்கொண்டு சிரித்தான்.

" சின்னத்தான் உனக்கு என்ன சிரிப்பு வேண்டியிருக்கு, எனக்கு சாப்பாடு தராமல் கொடுமை படுத்திவிட்டு. நான் அத்தையிடம் போய் சொல்ல போகிறேன், உங்கள் மகன் என்னை இப்பவே கொடுமை படுத்துகிறார் என்று" என்றாள் கோபத்தில்.

ரிஷி உடனே திரும்பி ஜானுவை பார்த்தான்.
" ஐயோ நான் அப்போதே அவள் கையில் கொடுத்தேனே " என்று அங்கும் இங்கும் தேடியவள் டேபிள் மேலே இருந்த பாக்ஸை எடுத்து அபி கையில் கொடுத்து
" இன்னா தின்னு தொலை சோத்துமுட்டை" என்றாள்.

" இது என்ன ? நீயா கொண்டு வந்த ? இங்கே உனக்கு சாப்பாடு கிடைக்காதா என்று வீட்டில் இருந்து கொண்டு வந்த சோத்துமூட்டை " என்றாள் அபி திருப்பி.

" வேணாம், கல்யாண பெண்ணாய் போனாய், இல்ல அப்பிவிடுவேன். எது கேட்பதாக இருந்தாலும் உன் அத்தானை கேளு " என்றவள் சொல்லுங்கள் என்பதுபோல ரிஷிக்கு செய்கை செய்தாள்.

".அது ஒன்றும் இல்லை அம்மு கல்யாணவேலையை வெளியாட்களிடம் விட்டுருப்பதால் வீட்டில் நிறைய புதுமுகங்கள், ஏற்கனவே வீட்டில் ஒத்துழைப்பு ஆஹா ஓஹோ என்று இருக்கு, சாப்பாட்டில் ஏதாவது யாராவது கலந்தால் கூட தெரியாது அதனால்தான் " என்றான் ரிஷி.

" அப்படின்னா எனக்கு யாராவது விஷம் வைத்துவிடுவார்களா ? இப்படியெல்லாமா யோசிப்பாய். அதான் முகத்தில் இவ்வளவு டென்ஷன்,.அப்படி யாரும் செய்வார்களா ? ஆமாம் நீ சாப்பிட்டாயா ?" என்று கேட்டாள் அபி.

" விஷம் எல்லாம் வைக்க மாட்டார்கள், மயக்க மருந்து ஏதாவது கலந்து ஆளை கடத்திவிட்டால் அதனால் தான் அலெர்ட்டா இருக்கலாம் என்று, எனக்கும் இதே ஏற்பாடுதான். நான் பிரட்டும் ஜமும் வாங்கிவைத்துள்ளேன், உனக்குத்தான் அதெல்லாம் பிடிக்காதே அதான் ஜானுவை கொண்டுவர சொன்னேன். " என்றான் ரிஷி.

மடமடவென்று பாக்ஸை திறந்தவள் " இந்தா சின்னத்தான் நீயும் கொஞ்சம் சாப்பிடு "என்று சாப்பாட்டை எடுத்து அவன் வாயருகே கொண்டுபோனாள்.

ரிஷி அவளையே பார்த்தபடி வாயை திறந்தான், அடுத்த வாயுக்கு போதும் என்று தடுத்தான்.

" எனக்கு இப்படி நடக்கும் என்று ஏற்கனவே தெரியும். அதான் எனக்கு தனியே வைத்திருக்கிறேன், உட்கார்ந்து அதை இரண்டுபேரும் சாப்பிடுங்கள் " என்றாள் ஜானு மற்றோரு பாக்ஸை திறந்தபடி.

" ஏன் உன்னையும் யாராவது கடத்திவிடுவார்களா ?" என்றாள் அபி இடக்காக.

" எதுக்கு அவன் தலையில் துண்டை போட்டுகொண்டு போவதற்காகவா " என்றாள் ஜானு.

இருவரின் பேச்சையும் கேட்டுக்கொண்டே அபி ஊட்டிவிட சாப்பிட்டுக்கொண்டிருந்த ரிஷி " அம்மு ப்ரியா ஏதாவது குழப்பம் செய்ய பார்க்கலாம், எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இரு " என்றான்.

" அவள் என்ன செய்துவிட போகிறாள், மிஞ்சி மிஞ்சி போனால் உன்னுடன் நெருக்கமாக இருப்பது போல ஏதாவது போட்டோ எடுத்து என்னிடம் காட்ட முயற்சிப்பாள், உனக்கு இது நல்ல சான்ஸ். அவள் கட்டிப்பிடித்தால் நீ என்ஜாய் பண்ணு சின்னத்தான், நான் ஒன்றும் சொல்லமாட்டேன் " என்றாள் சாப்பிட்டபடி.

அவளை முறைத்தான் ரிஷி.

" என்ன முறைக்கிற, இன்று மட்டும் உனக்கு பிரீடம், என்ஜாய் பண்ணு, பிராமிசா நான் கண்டுக்கமாட்டேன் " என்றாள் மறுபடியும்.

" உன்னிடம் போய் என் வாழ்க்கையை ஒப்படைக்கிறேன் பார், என்னை சொல்லவேண்டும், எருமை " என்றவன் அவள் கையில் இருந்த உணவை வாங்காமலே எழுந்து சென்றுவிட்டான்.

அபியின் முகம் உர் என்று போக வாசல் வரை போனவன் திரும்பி வந்தான். அவள் கையை பிடித்து அதில் இருந்த உணவை வாயில் வாங்கியவன் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு பெரிய டைரி மில்க் சாக்லேட்டை எடுத்து அவளிடம் கொடுத்தான். " இரண்டு பேரும் ஷேர் பண்ணிக்குங்க " என்று சென்றுவிட்டான்.

" ஏன்டி அப்படி சொன்ன, அந்த ப்ரியா இவரை கட்டிப்பிடித்தாள் உனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையா ?" என்றாள் ஜானு.

" என்ன பிரச்சனை வந்துவிடப்போகிறது, எனக்கு இவர் இப்படி டென்ஷனில் இருப்பதுதான் பிரச்சனையாக தெரிகிறது, யாருக்கெல்லாம் பயப்படவேண்டும். அதான் அப்படி பேசினேன் இனி ப்ரியாவை நினைத்து கவலைப்படாமல் கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா இருப்பார் " என்றாள் அபி.

" என்னமோ போ, உங்கள் இருவரின் கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடந்தால் சரி " என்றாள் ஜானு கவலையுடன்.

அப்போது கதவை தட்டும் சத்தம் கேட்கவே ஜானு சென்று பார்த்தாள். மெஹந்தி போடும் பெண் அங்கே நின்றிருந்தாள்.

அதன் பிறகு இரு தோழிகளும் ஆவலுடன் அதில் இறங்கினர். ' நந்து ' என்ற பெயரை அவள் கையின் மெஹந்திக்கு நடுவில் ஒளித்துவைக்கும் வேலை நடந்தது அங்கே. அதன் பிறகு நாளைய நாளைக்காக முகம் பொலிவுடன் இருக்க சில இயற்கை பொருட்களை கொண்டு தயாரான கலவையை முகத்தில் அப்பி கொண்டு பேய் போல் அமர்ந்திருந்தாள் அபி.

எதுவும் தேவையா ? எல்லாம் ஓகேவா என்று பார்த்து போக வந்த ரிஷி அவளை பார்த்து பயந்துவிட்டான் என்றே சொல்லலாம்.
ஜானு வெளியே போனில் பேசிக்கொண்டிருந்தாள்.

" ஏய் என்னடி கொடுமை இது, என்னத்தை போட்டு இப்படி முகத்தை பேய் போல ஆக்கிவைத்திருக்க, ஏதும் அலர்ஜி வந்திட போகுது பிசாசே " என்றான் ரிஷி மெதுவாக.

" சின்னத்தான் கடுப்பை கிளப்பாதே, உனக்காகத்தான் நான் இதையெல்லாம் போட்டு கொண்டு கஷ்டப்பட்டு கண்ணை மூடிக்கொண்டு இருக்கேன்" என்றாள் அபி கோபத்தில்.

" நான் உன்னிடம் கேட்டேனா ?" என்றான் அவன் சிரித்துக்கொண்டே.

கையால் அவன் முகத்தை தேடினால் அபி. அவன் அவள் கையை பிடித்து அவன் முகத்தில் வைத்தான். அவன் இருக்கன்னத்தையும் பிடித்தவள் " நீ எப்போதும் ஹீரோவாட்டும் இருக்கிறாய், நாளைக்கு சொல்லவே வேண்டாம், உன் அருகில் நான் திஷ்டி பொம்மை மாதிரி ஆகிவிட கூடாதில்லையா ? அதனால் தான் இவ்வளவு மெனெக்கிடுறேன். " என்றாள் அபி அவன் கன்னத்தை கிள்ளியபடி.

அப்போது "ம்க்கும் " என்று சத்தம் எழுப்பியபடி வந்தாள் ஜானு.

" நீ ஏன்டி என் உயிரை வாங்குற, நான் அப்படி என்ன செய்துகொண்டு இருக்கிறேன்" என்றாள் அபி கடுப்புடன்.

" ரிஷி சார் நீங்க போங்க, நான் இவளை நாளை உங்கள் கையில் கொடுக்கும் வரை பத்திரமா பார்த்துக்கொள்வேன் " என்றாள் ஜானு.

சிரித்தபடி ரிஷி அங்கிருந்து கிளம்பினான்.
கீழே கார்த்திகேயன் அவன் மனைவிடம் கொதித்துக்கொண்டிருந்தான்.

" இங்கே பார், நீ பார்த்த வேலைக்கு உன்னை இன்னும் இங்கே விட்டுவைத்திருப்பது வீட்டு மானம் போகக்கூடாது என்பதற்காகத்தான், ஆனால் எனக்கென்னவோ நீ இன்னும் அடக்குவதாக தெரியவில்லை, நீங்கள் மூன்றுபேரும் கூடி கூடி பேசுவதும், நாளை கல்யாணம் செய்து கொள்ள போகிறவன் உங்களை நினைத்தே நிம்மதியில்லாமல் அபியை அவள் தோழியின் துணையுடன் அறைக்குள்ளே வைத்திருப்பதும் எங்களுக்கு தெரியாமல் இல்லை. இந்த கல்யாணத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால் அடுத்த நொடியே நீ உன் அப்பன் வீட்டுக்கு நடையை கட்டிவிட வேண்டியதுதான். சும்மா சொல்கிறேன் என்று மட்டும் நினைக்காதே, சாது மிரண்டால் காடு தாங்காது, நான் மிரண்டால் உன் கழுத்தில் தொங்கும் தாலி தாங்காது, கழற்றிவைத்துவிட்டு போயிட்டே இரு என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிடுவேன் " என்று அவள் கையில் இருந்த போனை பிடிங்கினான் கார்த்திகேயன்.

" இது ஒன்று இருப்பதால் தான் உங்களை கையில் பிடிக்க முடியவில்லை. இந்த ரூமை விட்டு வெளியே போக நினைக்காதே, எல்லாம் ஆம்பிளைகளும் கெட்டவர்கள் இல்லை, ஆனால் உன்னை மாதிரி மனைவி அமைந்தால் எங்கேயிருந்து நல்லவர்களாக இருக்க?" என்று கேட்டபடி வெளியேறினான் அவன்.

அவன் பேச்சில் வெறியேறிபோயிருந்தாலும் அவள் உதட்டில் ஒரு புன்னகை பூத்தது, விடிவதற்குள் இந்த வீட்டில் என்னவெல்லாம் நடக்கபோகுதுன்னு பார்க்கத்தானே போகிறார்கள் என்ற அர்த்தம் பொதிந்து இருந்தது அதில்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top