Uyirin ularal - episode 16

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் - அத்தியாயம் 16

கல்யாணத்தை நிறுத்த போகிறேன் என்று வந்து நிற்கும் மகனை பார்த்து கற்பகம்மாள் அதிர்ச்சியானார்.

" உனக்கு என்ன விளையாட்டாக இருக்கிறதா ரிஷி" என்றார் கற்பகம்மாள் கோபத்தில்.

" நான் ஏன் விளையாடப் போகிறேன், நான் உண்மையைத்தான் சொல்கிறேன் " என்றான் ரிஷி சாதாரணமாக.

" என்ன பொல்லாத உண்மையை சொல்கிறாய் . இன்னும் இரண்டு நாள் தான் கல்யாணத்திற்கு உள்ளது. இப்போது வந்து கல்யாணத்தை நிறுத்த போகிறேன் என்றால் என்ன அர்த்தம் " என்றார் கற்பகம்மாள்

"நான் கல்யாணத்தை நிறுத்தப்போவதாக எப்போது கூறினேன் , அந்த மாப்பிள்ளையின் கேரக்டர் சரியில்லை அதனால் அவனுடன் திருமணம் வேண்டாம் என்றுதானே கூறினேன் "என்றான் ரிஷி.

"நீ கூறியதற்கு வேறு என்ன அர்த்தம், இன்னும் இரண்டு நாட்களுக்குள் வேறு எந்த மாப்பிள்ளை நீ போய் பார்ப்பாய், ஏற்கனவே என் பெண்ணுக்கு மனக் கோளாறு இருப்பதாக ஊரெல்லாம் பேசுகிறார்கள், இதில் கல்யாணம் நின்று போனால் என்னவெல்லாம் பேசுவார்களோ?" என்றார் கற்பகம்மாள் கலக்கத்துடன்.

"ஊர் பேசும் என்பதற்காக என் அம்முவை என்னால் ஒரு பொறுக்கிக்கு கட்டி வைக்க முடியாது , அதுமட்டுமில்லாமல் நான் இருக்கும் போது கல்யாணம் எல்லாம் நிற்காது" என்றான் ரிஷி.

"நான் இருக்கும் போது என்றால் என்ன அர்த்தம் ? நீயா மாப்பிள்ளையாக போய் நிற்கப் போகிறாய் ?"என்றார் கற்பகம்மாள் கோபமாக.

"ஆமாம் "என்றான் ரிஷி. வெகு சாதாரணமாக

கற்பகம்மாள் அதிர்ச்சி எல்லாம் ஆகவில்லை. அமைதியாக " ஊரெல்லாம் ப்ரியாவை காதலிப்பதாக ஒரு பெயர் வாங்கி வைத்திருக்கிறாயே அதை என்ன செய்யப் போகிறாய்" என்றார் அவர்

" அது உண்மை இல்லை என்பது உங்களுக்கு தெரியுமே" என்றான் அவன்

"எனக்குத் தெரிந்து என்ன லாபம் தெரியவேண்டியவர்களுக்குத் தெரியாதே, நீ இந்தக் கல்யாணத்தை நிறுத்துவதாக கூறினால் அம்மு ஏற்றுக் கொள்வாள், ஆனால் நீயே அவளுக்கு கணவனாக வருவதாகச் கூறினாள் அவள் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டாள்.

அதுமட்டுமில்லாமல் போதிய ஆதாரம் இல்லாமல் இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது" என்றார் கற்பகம்மாள்.

"என்னிடம் ஆதாரம் உள்ளது "என்றார் ரிஷி

" இப்போது உனக்கு கிடைத்த ஆதாரம் நான் அவளுக்கு நிச்சயமாகிவிட்டது என்று சொன்ன உடனே ஏன் கிடைக்கவில்லை? அதாவது நீ ஏன் உடனே அந்த மாப்பிள்ளை பற்றி விசாரிக்க வில்லை? கிளம்பி வா என்றதற்கு வராமல் நான்கு நாள் கழித்து வந்து நின்றாய். அன்று அவர்கள் மோதிரம் போடும்வரை ஏன் அமைதியாக இருந்தாய்? இப்பொழுது மாப்பிள்ளை சரி இல்லை இன்று கடைசி நிமிஷத்தில் சொல்கிறாய், அதுமட்டுமில்லாமல் நீயே அம்முவை திருமணம் செய்வதாக வேறு சொல்கிறாய். இதில் நீ மட்டும் முடிவு செய்தால் போதுமா முக்கியமாக அம்மு இதற்கு சம்மதம் சொல்ல வேண்டும். அவள் சொன்னாலும் மற்ற அனைவரும் நீ சொல்வதை ஏற்றுக்கொண்டு இந்த திருமணத்தை நிறுத்த முன்வர வேண்டும். இது எல்லாம் நடக்கிற காரியமா? என் குழந்தையை ஏன் ஆளாளுக்கு துன்பபடுத்துகிறீர்கள் ? எல்லோரும் செய்தது போதாது என்று நீயும் உன் பங்குக்கு ஆரம்பித்துவிட்டாய்.

ஐந்து வருடமாக ஒருத்தியை நீ காதலிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாள் அவள். அவளிடம் போய் நான் உனக்கு அவசர மாப்பிள்ளையாக போகிறேன் என்று நீ சொல்வாயா ? என்று கேட்டார் அவர்.

"அம்மா நீங்கள் சொன்னவுடன் நான் மாப்பிள்ளையை பற்றி விசாரிக்காதது தப்புதான். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது அதை இப்போது என்னால் சொல்ல முடியாது. அதே போல தான் நான் ஐந்து வருடம் பிரியாவை காதலிப்பதாக அம்மு நினைக்கும் போதும் நான் அமைதியாக இருந்ததற்கும் காரணம் இருக்கிறது அது என்னுடைய பர்சனல் அதை என்னால் யாரிடமும் சொல்ல முடியாது, உங்களிடமும்தான் என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா.

இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு நான் யாரின் சம்மதத்தையும் கேட்கப்போவதில்லை. அவன் என் அம்முவுக்கு ஏற்றவன் இல்லை, அதுமட்டுமில்லாமல் என் அம்முவுக்கு நான் எடுக்கும் எந்த முடிவுக்கும் விளக்கம் கொடுக்க தேவையில்லை.

நான் எது செய்தாலும் சரியாகத்தான் செய்வேன் என்று நீங்கள் நம்பாவிட்டாலும் அவள் என்னை நிச்சயம் நம்புவாள். என் வார்த்தையை நம்பி என்னுடன் மணமேடையில் வந்து அமர்வாள்.

அவள் கல்யாணம் சொன்ன தேதியில் நிச்சயம் நடக்கும், மாப்பிள்ளை அந்த ஜெய் இல்லை, நான்தான் என் அம்முவிற்கு தாலி கட்ட போகும் மாப்பிள்ளை. இதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது" என்றான் ரிஷி தீர்மானமாக.

"அதுதான் எனக்கு தெரியுமே நீ கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதி என்றாலும் அவள் குதிப்பாள், அதற்காக நீ அவளை உன் இஷ்டம் போல் ஆட்டிப் படைக்காதே. அவளுடைய முழு சம்மதத்துடன் அவளை உனக்கு நீ மனைவியாக்கிக் கொண்டாள் அதை பார்த்து சந்தோசபடும் முதல் ஆள் நான்தான். " என்றார் கற்பகம்மாள் சிறு புன்னகையுடன்.

**********

" யப்பா உண்மையிலேயே நம் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் cid ஆகியிருந்தால் ஒரு கேஸும் பெண்டிங் ஆகாது, ஒருவனும் தப்பவும் முடியாது. கல்யாண பெண் என்று என்ன காவல் ?
ஐயா ராசா நீ சொல்லவேண்டியதை சீக்கிரம் சொல்லு, உனக்கு ஐந்து நிமிடம் மட்டும் தான் டைம் " என்று குளிரில் துப்பட்டாவை இழுத்து மூடிக்கொண்டு வந்தாள் அபி.

எதுவும் சொல்லாமல் ட்ரக் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் ரிஷி.

" ஐயோடா என்ன லுக்கு, ப்ரியா நியாபகத்தில் கனவில் மிதக்கிறாயா ? ஆமாம் ப்ரியா எங்கே ? ஊரில் இருந்து இன்னுமா வரவில்லை, என்ன ? நான் பேசிக்கொண்டே இருக்கிறேன், நீ அசையாமல் சிலையாக நிற்கிறாய் ? நான் அ.. பி.. அபி நேஹா, ப்ரியா இல்லை." என்றாள் அபி கையை ரிஷியின் முகத்துக்கு முன்னால் ஆட்டியபடி நிதானமாக.

ஆடிய அவள் கரத்தை பிடித்தவன்
" அம்மு நான் உன் கல்யாணத்தை பற்றி ஒரு முடிவு எடுத்துள்ளேன், அதில் உன் சம்மதம் மிகவும் முக்கியம், ஆனால் நீ என் முடிவை பற்றியோ இல்லை வேறு எதை பற்றியோ என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் உன் சம்மதத்தை சொல்ல வேண்டும், அதற்கு முன்பு நான் எது செய்தாலும் உன் நன்மைக்குத்தான் செய்வேன் என்பதையும், என் முடிவால் யாருக்கும் எந்த பாதகமும் இருக்காது என்பதை நீ முழுவதுமாக நம்ப வேண்டும் " என்றான் அவள் கண்ணை நேராக பார்த்து.

" ஐயோ சின்னத்தான் உன் பீடிகையை பார்த்தால் எனக்கு ரொம்ப பயமாயிருக்கு ? உன்னிடம் சம்மதம் சொல்லும் முன்பு ஒரு நிமிடம் நீ சொன்னதை ரீகால் செய்து பார்த்து கொள்கிறேன் " என்றவள் யோசித்துவிட்டு

" ஓகே சின்னத்தான், நீ என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் சம்மதிக்கிறேன், போதுமா. நான் போகட்டுமா ? " என்று கேட்டாள்.

" வேண்டாம் போக வேண்டாம் ? என் முடிவை பற்றி கேளாமல் நீ போக வேண்டாம்" என்றான் ரிஷி.

" அப்படின்னா சீக்கிரம் சொல். கீழே உன் அண்ணிகள், இங்கே ஒரே குளிர். இரண்டும் எனக்கு ஒத்துக்காது " என்றாள் அபி கையை அவன் பிடியில் இருந்து உருவிக்கொண்டு.

" கீழே ஷாப்பிங் போன களைப்பில் எல்லோரும் ப்லட் ஆயாச்சு, மேலே இந்த குளிர் அதை இப்படி சமாளிக்கலாம் " என்றவன் அவளை தன் புறம் இழுத்து, அவளை திருப்பி தன்னோடு அணைத்துக்கொண்டான்.

அவன் செய்கையில் அபிக்கு அவன் முடிவை பற்றி கொஞ்சம் கொஞ்சம் புரிய தொடங்கியது. இல்லையென்றால் இன்று மாலையும், தற்போதும் அவன் தன்னிடம் இப்படி நடந்துகொள்ளமாட்டான் என்று எண்ணியவள்

" நந்து அடுத்தவர்கள் பொருட்கள் மீது ஆசைப்படக்கூடாது என்று நீ தான் சொல்லித்தந்தாய், இப்போ நீயே அதை பிரேக் பண்ணலாமா ? " என்றாள் அபி.

" நான் பொருள் இல்லை அம்மு, ரத்தமும், சதையும், உயிரும், உணர்வும் கொண்ட மனிதன், அதோடு நான் யாருக்கும் எந்த துரோகமும் பண்ணுபவனும் இல்லை, நீ இன்னொருத்தி பொருளை பறித்துக்கொண்டாய் என்று நினைப்பதற்கு, கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதுதான் மெய், என்னிடம் நீ என்றாவது இதை கடைபிடித்தாயா ? உனக்குள்ளாயே மூழ்கி போனாயே, என்னை பற்றி என்றாவது நினைத்தாயா நேஹா ?" என்று கேட்டான் ரிஷி அவள் காதோரம் தன் முகத்தால் உரசிக்கொண்டு ரகசிய குரலில்.

அவனுடைய அந்த அழைப்பு அவளை குழப்பியது, மிகவும் ஆழமாக யோசிக்கமுடியாத படிக்கு அவனது கன்னம் இவளின் கன்னத்தோடு உரசிக்கொண்டு இவளின் எண்ண ஓட்டத்தை நிறுத்தியது.

" என்னமோ செய் சின்னத்தான், ஆனால் நாளைக்கே யாராவது வந்து அது என் உடைமை, எனக்குதான் சொந்தம் என்று வந்து நின்றாள் அப்புறம் நான் பத்திரகாளியாகிவிடுவேன், அப்புறம் ஏதாவது முக்கியமாக பேசும் போது இப்படி பிடித்துக்கொண்டு நிற்காதே, எவ்வளவு நேக்கா நீ என் முகத்தை பார்த்து பேசாமல் திருட்டு வேலை செய்கிறாய் ? விடு என்னை" என்றாள் அபி.

" நீ ஏன் இதை திருட்டு வேலை இன்று நினைக்கிறாய் ? நீ மறுத்து விடுவாயோ என்ற பயமாகக்கூட இருக்கலாம் இல்லையா?" என்றான் ரிஷி

" யாருக்கு ? உனக்கு பயம் என்றால் யார் நம்புவார்கள் ?நீ சரியான ரவுடி பையன். உன்னை பற்றி எனக்கு தெரியாதா ? முதலில் என்னை விடு அப்புறம் ஏதாவது பேசுவது என்றால் பேசு. உன் விளையாட்டை நிப்பாட்டு " என்று அவனின் பிடியை விலக்கி விட்டாள் அபி

அவளை பார்த்து சிரித்த ரிஷி " ஓகே இப்போது விசயத்திற்கு வருவோம், இந்த கல்யாணத்தை நிறுத்துவதில் 2 பிரச்சனை. ஒன்று மாப்பிள்ளை பார்த்தவர் அம்பிகா அண்ணி, இரண்டாவது பிரச்சனை பிரியா.

இவர்களை எதிர்த்துதான் நம் திருமணத்தை நடத்தி ஆக வேண்டும் அண்ணிகளின் கொடுக்கு வாயை பற்றி உனக்கு நான் சொல்ல தேவையில்லை. அவர்கள் எவ்வளவு கீழே இறங்கி வேண்டுமானாலும் பேச தயங்கமாட்டார்கள் அனைத்தையும் தாங்கும் மனவலிமை உனக்கு வேண்டும். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான் என்ன ஆனாலும் யார் என்ன பேசினாலும் உன் தைரியத்தை விட்டுவிடாமல் நான் இருக்கிறேன் என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஸ்டெடியாக நிற்க வேண்டும்.

உன் பின்னால் உன் நந்து இருக்கிறான் என்று நீ எதையும் பற்றி கவலைப்படாமல் அவர்கள் பேச்சை எதிர் கொள்ள வேண்டும். நன்றாகக் கேட்டுக் கொள் எக்காரணத்தைக் கொண்டும் உன் கண்ணில் கண்ணீர் வர கூடாது. அதேபோல நீ எனக்கு கொடுத்த வாக்கிலிருந்து பின் வாங்கவும் கூடாது புரிகிறதா ? என்று கேட்டான் ரிஷி.

அபி கண்ணில் இப்போது ஏகப்பட்ட கலக்கம் பயம் தெரிந்தது. ஆனாலும் அவள் பேச்சில் அது வெளிப்படவில்லை.

சரி என்று தலையை மட்டும் ஆட்டினாள் அபி.

" சரி நீ கிளம்பு நாளைக்கு 10 மணிக்கு நீ ரெடியாகி இரு .நாம் இருவரும் ஷாப்பிங் போக வேண்டும் "என்றான்

"ஐயோ நாளைக்கு 10 மணியா? அது எப்படி முடியும் வீட்டில் எல்லோரும் இருப்பார்களே?" என்றாள் அபி

அவளை இமைக்காமல் பார்த்தவன் அவள் அருகில் சென்றான் "அவளின் முகத்தை கையில் ஏந்தியவன் இப்போதுதானே சரி சரி என்று தலை ஆடினாய் அதற்குள் பயந்து நடுங்குகிறாயே ? என்று கேட்டான்

" 8 வருட பயம், நீ அதை 8 நிமிடத்தில் விட்டுவிடு என்றால் எப்படி முடியும் ?எனக்கு மிகவும் பயமாக உள்ளது. பேசாமல் கல்யாணத்தை மட்டும் நிறுத்து, உன்னை திருமணம் செய்தால் அவர்கள் இதுவரை பேசியது அனைத்தும் உண்மையாகிவிடும்" என்றாள் அபி.

ரிஷியின் கண்ணில் கோபம் படர்ந்தது. "உனக்கு அவர்கள் பேச்சுதான் முக்கியமாக போய்விட்டது என்னைப் பற்றி உனக்கு எந்த அக்கறையும் இல்லை அப்படி தானே? என்றான்

" அப்படி இல்லை நந்து நான் எனக்காக சொல்லவில்லை, உன் நன்மைக்காகத்தான் சொல்கிறேன். உனக்கு நான் எந்த விதத்திலும் பொருத்தம் இல்லை. அழகிலும் சரி மற்ற எதிலும் சரி, உனக்கு என்னைவிட உயர்ந்த பெண் கிடைப்பாள். எனக்காக என்னை இந்த திருமணத்திலிருந்து காப்பதற்காக உன் வாழ்க்கையை எதற்காக பணயம் வைக்கிறாய் ? என்றாள் அபி.

" எனக்கு எந்த மாதிரியான வாழ்க்கை துணை வேண்டும் என்பதை நான் அறிவேன். யாருக்காகவும் எதற்காகவும் நான் என் வாழ்க்கையை பணயம் வைக்கும் அளவுக்கு நான் உன்போல் ரொம்ப நல்லவன் இல்லை. இப்போது என்ன ? உனக்கு பயமாக உள்ளது அப்படித்தானே சரி இங்கே வா" என்று தன் இரு கரத்தையும் விரித்து அவளை அழைத்தான்.

அபி தயங்கினாலும் அப்போது அவனது அணைப்பு அவளுக்கு தேவையாக இருந்தது அதனால் மறுப்பு ஏதுமின்றி அவனது கைக்குள் சிறைப்பட்டாள்.

"சாரி நந்து என்னை மன்னித்துவிடு, உன்னை காயப்படுத்தவேண்டும் என்று நான் நினைக்கவில்லை "என்றாள் அபி

"இங்கே பார் அம்மு அவர்கள் என்ன பேசினாலும் அது என்னை பேசுவதாக எண்ணிக்கொள் உனக்கு தானாகவே தைரியம் வரும்" என்றான் ரிஷி.

" ஆனால் நந்து இந்த கல்யாணத்தை என்ன சொல்லி நிறுத்துவாய் என்று கேட்டாள் அபி.

"அதை பற்றி நீ கவலை படாதே கதை நான் பார்த்துக் கொள்வேன் நீ செய்யவேண்டியதெல்லாம் பி போல்ட். நன்றாக நினைவு வைத்துக்கொள் எதிர் அணியில் எண்ணிக்கை அதிகம் நம் அணியில் நான் மட்டும்தான் இருக்கிறேன் நீ எனக்கு பக்கபலமாக இருப்பாய் என்று நம்புகிறேன்" என்றவன் அதன் பிறகு எதுவும் பேசாமல் அவளை அணைத்தவாறு அமைதியாக நின்றான் ஐந்து நிமிடத்தில் போக வேண்டும் என்றவள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் உறங்கிய பின்பும் அவனை விட்டு அசையாமல் நின்றாள் அதன் பிறகு அவளின் மனதில் ஒரு தைரியம் வந்தது.

" இப்போ பயம் போயிட்டா " என்று கேட்டவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து அவள் அறைக்கு அனுப்பிவிட்டான்.

"இருவரும் நாளை நடக்கப் போவதை நினைத்து ஒருவித உணர்வில் இருந்தனர் அவர்களை அதிகம் காக்க வைக்காமல் கதிரவன் எப்பொழுதும் போல விழித்தான்.

மறுநாள் காலை ஆறு மணி அளவில் ரிஷியின் 3 அண்ணன்களுக்கும் போனில் ஒரு வீடியோ மெசேஜ் புதிய எண்ணில் இருந்து வந்தது. அதை பார்த்த மூன்று பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்றனர்.

"இந்த வீடியோவில் இருந்த செய்தி உண்மை என்றால், அது ரிஷிக்கு தெரியவந்தால் இந்த வீட்டில் ரணகளமே நடக்கும்.நாளை அம்முவுக்கு திருமணம் என்ற நிலையில் அவளுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த மாப்பிள்ளை இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதும் இல்லாமல் திருமணத்திற்கு பின்பு அபியை எப்படி எல்லாம் துன்புறுத்து போகிறேன் என்று பட்டியலிடுகிறான். இதை மட்டும் ரிஷி பார்த்தான் என்றால் இந்த கல்யாணம் நிற்பது ஒரு கரையில் இருக்கட்டும் இந்த மாப்பிள்ளையை பார்த்தவர்களுக்கும் அவனை பற்றி விசாரித்தவர்களுக்கும் என்ன நடக்குமோ? என்றான் கண்ணன். ( இரண்டாவது அண்ணன் ).

" வேறன்ன செய்வான், அண்ணன் என்றும் பாராமல் அவன் குணத்தை காட்டுவான் " என்றான் ராம்கோபால். ( மூன்றாவது அண்ணன் ).

" என்னடா சும்மா ஆள் ஆளுக்கு மிரட்டுறீங்க ? அவ்வளவு குதிக்கிறவன் தானே வந்து இந்த பொறுக்கியை பற்றி விசாரித்திருக்க வேண்டியதுதானே ? ரிஷியை விடுங்கள், நம் மூவருக்கும் அனுப்பியவன் அவனுக்கு மட்டும் அனுப்பாமலா இருப்பான். அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம், இப்போது நாம் யோசிக்கவேண்டியது அபியை பற்றி. இப்படி ஒரு கேவலமானவனுக்கும் நம் வீட்டு பெண்ணுக்கும் நாளை கல்யாணம், அதை நிறுத்த ஏதும் வழியிருந்தால் சொல்லுங்கள், இல்லையென்றால் ரிஷியை கூப்பிடுங்கள், அவன் போய் அந்த பொறுக்கிக்கு நாலு காட்டு காட்டினான் என்றால் அந்த நாய் ஓடும் இடம் தெரியாமல் ஓடிவிடும். அவன் போகும் போது இரண்டு ஹாக்கி மட்டையை கையில் கொடுத்தனுப்புவோம் " என்றான் மூத்தவன் கார்த்திகேயன்.

" ஐயோ அண்ணா கல்யாணம் நின்றுவிடும், பிறகு அபியின் கதி " என்றான் ராம்கோபால்.

" அப்படியென்றால் அவனின் சுயரூபம் தெரிந்த பின்னும் அந்த பொறுக்கி நாயுக்கு நம் வீட்டின் பெண்ணை திருமணம் செய்து கொடுக்கணும் என்கிறாயா ? அறிவு கெட்டவனே, அபியை நம் மனைவிகள் மாதிரி தாடகை என்று நினைத்தாயா ? அவள் பூ போன்றவள், ஏற்கனவே அவளை இந்த வீட்டு மருமகள்கள் என்ற பெயரில் வந்த மூன்று குரங்குகளிடம் கொடுத்தாகிவிட்டது, இன்னும் கணவன் என்று ஒரு கொரில்லாவிடம் அவளை கொடுக்க சொல்கிறாயா ?" என்றான் கார்த்திகேயன் கோபத்தில்.

"அய்யோ அண்ணா நீங்களே சொல்கிறீர்கள் நமக்கு வாய்த்த மனைவிகள் குரங்கு என்று. அவர்கள் அபியை மட்டுமல்ல நம்மையும் சேர்த்து பிராண்டி விடுவார்கள். இதை வேறுவிதமாக நாம் அணுக வேண்டும். முதலில் இந்த மெசேஜை பற்றி ரிஷிக்கு எதுவும் தெரியுமா என்பதை நாம் தெரிந்து கொள்வோம். நமக்கு இதை அனுப்பியவன் கண்டிப்பாக அவனுக்கும் அனுப்பி இருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி அவனுக்கு அனுப்பவில்லை என்றால் நாம் இதைப்பற்றி அவனிடம் சொல்வோம். ஆனாலும் நீயும் உன் மனைவியும் எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள். "என்றான் கண்ணன் (இரண்டாவது அண்ணன்.)

கண்ணன் சொல்வதே சரி என்று பட கார்த்திகேயனும் மற்ற இருவரும் அதற்கு சம்மதித்தனர்.

காலை உணவு வேளையும் வந்தது, வீட்டில் உள்ள அனைவரும் டைனிங் டேபிள் முன்பாக இருக்க அபியும் ரிஷியும் சற்று தாமதமாக வந்து சேர்ந்தனர்.

உணவு நேரம் முடியும் வரையில் மூன்று பேரும் ரிஷியின் முகத்தில் ஏதாவது உணர்வு தெரிகிறதா என்று ஆராய்ந்தனர். ஆனால் அவன் முகத்திலிருந்து எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இனி வேறு வலி இல்லை நாம்தான் சொல்லியாக வேண்டும் என்ற முடிவுக்கு மூன்று பேரும் வந்தனர்.
 

Saroja

Well-Known Member
அருமையான அண்ணன்கள்
இந்த கல்யாணம் நடக்குமா
 

Janavi

Well-Known Member
அண்ணன்கள் பொறுப்பாக இருக்காங்க....Nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top