Uyirin ularal - episode 11

Advertisement

B.subhashini

New Member
உயிரின் உளறல் - அத்தியாயம் 11


முடிவில்லா கேள்வியோடு அன்றைய இரவை கழித்தான் ரிஷி.

மறுநாள் காலை அனைவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

" அம்மு ஒரு பத்து நாளைக்கு உன் வேலையை கொஞ்சம் குறைத்துகொண்டு, என் ஆஃபீஸின் கணக்கையும் பார்த்துக்கொள். ஒரு புது ப்ராஜெக்ட் விஷயமாக நான் நாளை ஆந்திரா செல்கிறேன். வர பத்து நாள் ஆகும். என் pa வால் தனியாக சமாளிக்க முடியாது. தனியாக ஷாப்பிங் போகிறேன், என்று யாருடனும் பேச்சு கொடுத்து நீயும் டென்ஷன் ஆகி இருக்கிறவர்களையும் டென்ஷன் ஆக்காதே. அம்மாவை பார்த்துக்கொள் " என்று கூறியவன் அவள் பதிலை எதிர்பாராமல் எழுந்துகொண்டான்.

" உங்க தம்பிக்கு யாரிடம் எதை ஒப்படைக்கவேண்டும் என்றே தெரியல. இந்த அபியோ பாதி நேரம் வெளியே சுத்துறா, மீதி நேரம் நீச்சல் குளத்தில் இருக்கிறாள், இவளை நம்பி 10நாள் கம்பெனியை அவளிடம் பார்த்துக்கொள்ள சொல்கிறார். ப்ரியா பொறுப்பானவள் அவளிடம் சொன்னால் என்ன ?" என்றாள் பானு. இட்டலியை பிட்டு வாயில் வைத்தபடி.
********

ரிஷி தன்னுடைய ஆபீஸ் அறையில் அடுத்து ஆந்திராவில் செய்ய போகும் ப்ராஜெக்ட் வேலையில் மூழ்கி இருந்தான். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

" எஸ் " என்றான் லேப்டாப்பில் இருந்து பார்வையை அகற்றாமல்.

கதவை திறத்து உள்ளே வந்த நபரை பார்த்து அதிசயித்தான்.

" வாங்க வராதவர்கள் வந்திருக்கிறிங்க, என்ன விஷயம். உங்க கால் எல்லாம் இந்த பக்கம் வராதே " என்றான் கேலியாக.

பதில் சொல்லாமல் முறைத்தபடி நின்றாள் அபி.

" வா, உட்கார் " என்றான்.

அபி அங்கே இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.

" சொல்லு என்ன, இவ்வளவு தூரம் ?" என்றான் கேள்வியாக.

" எதுக்கு பத்து நாள் வெளியூர் போற " என்றாள் அபி நேரடியாக.

" புது ப்ராஜெக்ட் அம்மு. என் பிரெண்ட் ஒருவன் பைவ் ஸ்டார் ஹோட்டல் கட்ட போகிறான். இங்கே சென்னையில் நான் கட்டிய ஹோட்டலை பார்த்தவன், அவனுடைய ஹோட்டலையும் நானேதான் கட்டணும் என்று ஒரே பிடியில் நிற்கிறான். நான் எவ்வளவோ மறுத்து பார்த்துவிட்டேன். பிரெண்ட்க்கு இதை கூட செய்ய மாட்டியா ? என்கிறான்.

நானும் பார்த்தேன், பெரிய ப்ராஜெக்ட், அதிக லாபம், அங்கே இது என்னுடைய முதல் ப்ராஜெக்ட். நன்றாக முடிந்தது என்றால் வேறு ப்ரொஜெக்ட்டும் கிடைக்கலாம். மறுப்பதற்கு காரணமும் இல்லை. எனக்கு என்ன மனைவி இருக்கிறாளா? அல்லது ஏதாவது காதலி இருக்கிறாளா ? பத்துநாள் என்னை காணாமல் ஏங்க ? யார் என்னை தேட போகிறார்கள். ஒரே ஒரு அத்தை பெண் இருந்தாள் சில வருடங்களுக்கு முன்னால், நான் வர ஒருமணி நேரம் தாமதமானாலும் ஐம்பது போன் செய்வாள், வந்ததும் ஏதோ பலநாள் காணாதது போல கழுத்தை கட்டிக்கொண்டு தொங்குவாள். இப்போது எல்லாவற்றையும் நான் தொலைத்துவிட்டு நிற்கிறேன் தனிமரமாய். என்னை தேடுவாரும் இல்லை, என் பிரிவில் வாடுவாரும் இல்லை " என்றான்.

கேலியாக தொடங்கிய அவனது பேச்சு இறுதியில் கண் கலங்கியபடி முடிந்தது.

அபிக்கு அவன் பேச்சு வேதனை தந்தது.

" ஏன் சின்னத்தான் இப்படியெல்லாம் பேசுற. என்னால் என் கோபத்தை கன்ட்ரோல் பண்ண முடியல. எனக்கு ஏன் என்றே தெரியாமல் உன் மேல் கோபம் வருகிறது. பேசாமல் என்னை மெண்டல் ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டுறேன். என்னால் முடியல " என்றவள் டேபிளில் தலை கவிழ்த்து அழ ஆரம்பித்தாள்.

தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்தவன் அவளை நிமிர்த்தி தன் வயிற்றோடு அணைத்துக்கொண்டான்.

" என்னாலையும் முடியலடி, பேசாமல் எங்கேயாவது போயிடலாம் என்று தோணுது. நீ பைத்தியம் இல்லை, நான் தான் பைத்தியம் ஆகிக்கொண்டிருக்கிறேன். அம்மு நான் பேசாம மறுபடியும் பாரினுக்கு போயிடவா ?" என்று கேட்டான்.

இருந்தபடியே அவனை இறுக்கி அணைத்தவள் " நீயும் என்னை விட்டு போயிட்டா நான் செத்துப்போயிடுவேன் " என்றாள்.

" நீ இப்படி இருப்பதை பார்க்கும் போது நான் தினம் தினம் சாகிறேனடி." என்றான் அவன். அவனின் குரலில் கரகரப்பு கூடியிருந்தது.

அவனின் பிடியில் இருந்து விடுபட்டவள் கண்ணை துடைத்தாள்.

" இல்ல நான் இனி இப்படி இருக்க மாட்டேன். யாருக்கும் பயப்பட மாட்டேன். கோபப்படமாட்டேன். உன்னுடன் சண்டை போடமாட்டேன். நல்ல பொண்ணா நடந்துப்பேன். என்னை விட்டுட்டு போகாதே நந்து " என்றவளின் கண்ணில் மறுபடியும் கண்ணீர்.

அவளின் முகத்தை கையில் ஏந்தியவன்
" நான் உன்னை விட்டு எங்கேயும் போகல. பத்து நாள்... பத்தே நாள். கண்ணை முடி திறப்பதற்குள் ஓடிப்போயிடும். உனக்குத்தான் ஆபீஸ், பைல் என்றால் போதுமே. நீ இங்கே பார்க்க வேண்டிய வேலை நிறைய இருக்கு. கமிட் ஆகிவிட்டேன், கடைசி நிமிசத்தில் முடியாது என்று சொல்ல முடியாது. ப்ளீஸ் செல்லம் அழாதே. நான் தினமும் உனக்கு போன் செய்கிறேன்." என்று அவளை சமாதானம் செய்தான் ரிஷி. அவனுக்கு தெரிந்திருக்கவில்லை தான் அவளை விட்டு போகும் தூரம்.

" அப்படின்னா இனி நீ அடிக்கடி இப்படி போவியா ?" என்றாள்

" அடிக்கடி போகமாட்டேன், தேவைப்பட்டால் போவேன்." என்றவன் கையில் இருந்த வாட்சை பார்த்தான்.

" நீ சாப்ட்டியா ?" என்று கேட்டான்

அவள் இல்லை என்று தலையை ஆட்ட, போனை எடுத்தான். உணவை வரவழைக்க.

அவன் கையில் இருந்து போனை வாங்கி கீழே வைத்தவள் மறுபடியும் அவனின் வயிற்றில் சாய்ந்து கட்டிக்கொண்டாள்.

" வேண்டாம், நாம லஞ்சுக்கு வெளியே போகலாம். நான் இன்னைக்கு உன்னுடன் தான் இருப்பேன். எனக்கு ஏதோ மாதிரி இருக்கு. நீ என்னை விட்டு ரொம்ப தூரம் போவது போல." என்றாள்.

" சரி போகலாம், போ போய் முகத்தை கழுவிட்டு வா, கிளம்பலாம்." என்றான்.

இருவரும் ஹோட்டலில் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர். அவள் அதிகம் பேசவில்லை.

காரில் ஏறியவன் " எங்கே போகணும் அம்மு" என்று கேட்டான்.

" உன் ஆபீசுக்கு போகலாம். எனக்கு சில டீடைல் தேவைப்படுது. எல்லாம் சொல்லிதந்துவிட்டாய் என்றால் எனக்கு கொஞ்சம் ஈஸியாக இருக்கும்" என்றாள்.
அன்று மதியத்திற்கு மேல் அவனுடனே தன்னுடைய நேரத்தை கழித்தாள். தனக்கு தேவையான விவரத்தை கேட்டு, தனக்கு ஏற்றார் போல பைலை அடுக்கிவைத்துக்கொண்டு, ரிஷியின் paவிடமும் பேசிவிட்டு அனைத்தையும் சரியாக செட் செய்துவிட்டு போகலாம் என்றாள்.

" நான் காரில் வந்தேன் நந்து. நான் என் காரில் போகிறேன், நீ உன் காரில் வா " என்று கிளம்பினாள்.

" அம்மு " என்று அழைத்தான் ரிஷி.

அவன் முகத்தில் ஏதோ யோசனை இருந்தது. " என்ன " என்றாள் யோசித்தபடி.

" நீ இன்று இங்கு எதற்கு வந்தாய், என்னுடன் இருக்கவா ? இல்ல வேலை பார்க்கவா ? " என்று கேட்டான்.

சிரித்த அபி " இதுதானா, நீ அப்பப்போ என் முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தது. உனக்கு என்ன தோணுது ?" என்று பதில் கேள்வி கேட்டாள்.

" எனக்கு தோணுவது இருக்கட்டும், எனக்கு உன் வாய் மூலமாக பதில் வேண்டும் " என்றான்.

கதவு வரை சென்றிருந்தவள் திரும்பி வந்தாள். " நான் எதுக்கு வந்தேன் என்றால், என்னை விட்டுட்டு போகாதே சின்னத்தான் என்று கெஞ்சி கேட்க வந்தேன். என் கல்மனசு கார சின்னத்தான் முடியாது என்று மறுத்துவிட்டார். வேறுவழி இல்லாமல் அவருடன் ஒரு நாள் இருந்துகொண்டு என்று ஆபீஸ் வேலையும் படித்துக்கொள்ளலாம் என்று நினைத்து இங்கேயே இருந்தேன். உனக்குத்தான் தெரியுமே உனக்கு அப்புறம் எனக்கு பிடித்திருப்பது என் வேலை என்று. அதான் உன்னுடனே அதில் மூழ்கி போனேன். வீட்டுக்கு போனாள் உன் கழுகு கண் அண்ணி உனக்கு எஸ்கார்ட் ஆகிவிடுவார்.
நீயும் உன் வாயைவைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் காலையிலேயே ஊருக்கு போவதை பற்றி கூறிவிட்டாய். இந்நேரம் வீட்டில் ப்ரியா உனக்காக ஆசையாய் ஏங்கி காத்திருப்பாள். அப்புறம் உன்னை பார்ப்பது எங்கே ?" என்று முடித்தாள் அபி அவன் இரு கன்னத்தையும் கிள்ளி.

அந்த நொடியில் அவனுக்குள் தோன்றிய உணர்வு புதிது என்று சொல்ல முடியாமல் அபிக்கு மாப்பிளை தேட வேண்டும் என்று அவன் அம்மா கூறிய நாள் முதல் தோன்றிய எண்ணத்தின் பிரதிபலிப்பு என்று சொல்லக்கூடிய ஒரு உணர்வு. அபி விளக்கம் கூறிய பிறகும் அவன் முகம் தெளியாமல் போகவே

" என்ன ? மலையாட்டும் நிக்குற நந்து. நான் போகட்டுமா ? " என்றாள் அபி.

வேண்டாம் என்பது போல தலையாட்டினான் ரிஷி.

" உனக்கு என்ன வந்தது சின்னத்தான், அந்த வசந்த் பய இதுக்குள்ள பத்து நேரம் போன் போட்டுவிட்டான், நான் என் ஆபீஸ் போயிட்டு அப்புறம் தான் வீட்டுக்கு போக வேண்டும். நீ என்னவென்றால் போகாதேன்னு நிக்கிற. காலையில் எல்லோர் முன்னாடியும் உளறாமல் இருந்திருந்தால் லேட்டாக வீட்டுக்கு போயிருக்கலாம். முந்திரிக்கொட்டை மாதிரி உளரி விட்டு போக்காதேன்னா என்ன அர்த்தம். உன் அண்ணி எமகாதகி. இதற்குள் எல்லா ரிபோர்டும் போயிருக்கும்.
நீ ரொம்ப உருகாதே. உனக்கு நானே பரவாயில்லை. நீ என்னுடன் வா, என் ஆபிஸ்க்கு போயிட்டு உன் காரிலேயே இரண்டுபேரும் வீட்டுக்கு போகலாம். யாரும் கேட்டா என் கார் ரிப்பேர் அதனால என் சின்னத்தான் காரில் வந்தேன் என்று தைரியமாக கூறிவிடுகிறேன். வா போகலாம்" என்று கையை பிடித்து இழுத்தாள்.

" இல்ல வீட்டுக்கு போகவேண்டாம், ஏதாவது சினிமாவுக்கு போகலாம் " என்றான் அவன் அசையாமல்.

" ஐயோ ராமா, உன் அழிச்சாட்டியம் பெரிய அழிச்சாட்டியமா இருக்கே, பேசாமல் வா. பேக் பண்ணிட்டியா ?" என்று கேட்டாள்.

" இல்ல "

" என்ன இல்லையா ? அதை செய்யாமல்தான் சாருக்கு சினிமா கேட்குதா ? நீ நாளை ஊருக்கு கிளம்பி விடுவாய். நான் உன்னுடன் சினிமா பார்க்க வந்தேன் என்று தெரிந்தால் உன் அன்பு அண்ணி நீ வரும் போது என்னை இருந்த இடம் தெரியாமல் செய்து விடுவார். என் செல்லம் இல்ல, என் தங்கம் இல்ல ஒழுங்கா நல்ல பிள்ளையாய் கிளம்பு. " என்று அவனை இழுத்துக்கொண்டு கிளம்பினாள் அபி.

அபி ஆபீசுக்கு போயிட்டு இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். அவர்களை பானுவும் ப்ரியாவும் தங்களின் தீ பார்வையில் சேர்ந்தே வரவேற்றனர்.

" அபி நீ ஏன் ரிஷியுடன் வருகிறாய். உன் கார் எங்கே ? " என்று கேட்டாள் ப்ரியா. கிட்டத்தட்ட கத்தினாள்.

" என் கார் பஞ்சர். சின்னத்தான் ஆபிஸில் நிற்கிறது. அங்கே நீ ஏன் போனாய் என்று கேட்காதீர்கள். அத்தான் ஊருக்கு போன பிறகு அங்கே போய் நான் முழிக்க கூடாது அல்லவா அதனால்தான். வரும் போதுதான் பார்த்தேன் கார் பஞ்சர். அதான் அத்தானுடன் வந்தேன். " என்றவள் விறுவிறுவென்று சென்றுவிட்டாள்.

ரிஷி வீட்டிற்குள் போவதற்குள் அவனுக்கு ஒரு போன் கால் வந்தது. அர்ஜென்ட் என்பதால் அபி சமாளித்துக்கொள்வாள் என்று எண்ணி அவன் அப்படியே கிளம்பிவிட்டான் அபிக்கு ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு.

அபி நேராக தன் அறைக்கு சென்று பிரெஷ் ஆகிவிட்டு, ரிஷியின் அறைக்குள் சென்றாள். ப்ரியா பின்னோடு சென்று " உனக்கு இங்கே என்ன வேலை " என்று வெடித்தாள்.

" அதை நான் கேட்க வேண்டும். நான் இந்த வீட்டுப்பொண்ணு, எனக்கு இந்த வீட்டில் எங்கேயும் போகும் உரிமை இருக்கு. சின்னத்தான் ஊருக்கு போக ட்ரெஸ்ஸை பேக் பண்ண போறேன், தொந்திரவு பண்ணாதே. உனக்கு கல்யாணம் முடிந்த பிறகுதான் இந்த ரூமுக்குள் வரும் உரிமை இருக்கு." என்று தன் வேலையை பார்த்தாள்.

" அக்கா, அக்கா " என்று கோபத்தில் கத்தும் தங்கையை பார்த்து "என்ன ப்ரியா ? என்ன ஆச்சு உனக்கு ஏன் கத்துற ? என்றாள் பானு. அவள் கணவனும் அங்கேதான் இருந்தான்.

" அக்கா அந்த அபிக்கு எவ்வளவு திமிர். பயந்து பயந்து பேசுறவ எப்படி பாயுறா ? என்ன தைரியம் இருந்தால் என்னையே எதிர்த்துப்பேசுவாள் ?" என்று நடந்ததை கூறினாள்.

"அவளை சொல்லி என்ன பயன் எல்லாம் இவர் தம்பியை சொல்லணும். அவர் கொடுக்கும் தெம்பில்தான் இவள் இப்படி ஆடுகிறாள் " என்றாள் பானு.

" அப்படியெல்லாம் இல்லை. அபி ஒன்றும் பயந்தாரி இல்லை. அவள் நியாயமாக நடப்பவள். அமைதியானவள் ஆனால் யாராவது ரிஷியை சீண்டினால் பேயாக மாறிவிடுவார். நாங்கள் அண்ணன் தம்பி மூன்றுபேரும் நிறைய வாங்கியிருக்கிறோம். நீ அவள் அவனுக்கு உதவி செய்வதை தடுத்திருக்கிறாய் அதனால் லேஸாக காட்டியிருக்கிறாள் " என்றான் பானுவின் கணவன்.

" போதும் உங்கள் அபியின் புராணம். ரிஷியை சீண்டினால் பேயாக மாறுவாளா ? அதையும் பார்ப்போம். ப்ரியா என்னுடன் வா" என்று தங்கையை அழைத்து கொண்டு சமையல் அறைக்கு போனாள் பானு.

இவள் படாமல் திருந்தமாட்டாள் எப்படியும் போ என்று அமைதியானான் அவள் கணவன்.

அன்று இரவு உணவை முடித்துக்கொண்டு தோட்டத்தில் உலாவ சென்றிருந்தாள் அபி. ரிஷி கார் வரும் சத்தம் கேட்டது. இவள் தோட்டத்தை சுற்றி விட்டு ஒரு 20 நிமிடம் கழித்தே வீட்டுக்குள் வந்தாள்.

அங்கே " பரவாயில்லை அம்மா, ஒரு நாள் சாப்பிடாவிட்டால் என்னாகிவிடும் " என்று கூறிவிட்டு ரிஷி டைனிங் டேபிளிலிருந்து எழுந்தான்.

" என்னாச்சு அத்தை ? ஏன் சாப்பிடாமல் இருக்கனும் ?" என்று கேட்டாள்.

"நான் சொல்கிறேன் அபி. ரிஷிதான் வெளியே போயிட்டாரே, அங்கேயே சாப்பிட்டுக்கொள்வார் என்று அவருக்கு சமைக்கவில்லை. அவர் சாப்பிடாமல் வந்திருப்பார் போல " என்றாள் பானு அப்பாவியாக.

" அதற்கு என்ன ? ஏதாச்சும் ரெடி பண்ணி கொடுத்தா என்ன ? தினசரி என்ன விருந்தா நடக்கிறது. அந்த தோசை, இட்டலியை செய்ய எவ்வளவு நேரம் ஆகும். அதுக்கு சின்னத்தான் ஏன் பட்டினிகிடக்க வேண்டும் ?" என்று கேட்டாள்.

சமையல் கார பெண்மணி உட்பட யாரும் அசையாமல் நிற்க, சமையல் அறைக்குள் சென்றாள் அபி.

அங்கே நாளை வீட்டை காலி செய்வது போல எல்லாமே துடைத்து வைக்கப்பட்டிருந்தது. உடனே செய்வதுபோல எதுவும் இல்லை. உள்ளே பாத்திரம் சிதறும் சத்தம் வெளியே கேட்டு பானுவும், ப்ரியாவும் அதிர்ந்து நின்றனர்.

" எல்லோரும் ஊரைவிட்டு போகப்போறிங்களா ? ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனுஷனை கடிக்கும் நிலைக்கு வந்தாச்சா?கண்ணன் அத்தான் நான் இந்த குடும்பத்திற்கு யாரோ ? அனாதை. என்னை யாருவேன்றும் என்றாலும் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் உங்களால் கேட்கமுடியாது. கேட்கவும் வேண்டாம். இவர் உங்கள் சொந்த தம்பி, உங்கள் ரத்தம் கொஞ்சமாவது கொதிக்கவேண்டாம். மதியம் 1மணிக்கு சாப்பிட்டவர், அதற்கு பிறகு எதுவுமே சாப்பிடவில்லை.

அவரும் இந்த வீட்டின் வாரிசுதான். அவரின் ஆபீஸ் பங்கும் உங்களிடம்தான் இருக்கிறது. கேட்டுத்தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை. அவர் படிப்பை முடித்துவந்தவுடனே நீங்கள் அவரிடம் அதை ஒப்படைத்திருக்க வேண்டும். நீங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. நிற்க நேரம் இல்லாமல் ஓடுகிறார் உங்கள் யாருடைய தயவும் வேண்டாம் என்று. அட்லீஸ் அவருடைய வயிற்றில் கையை வைக்காமலாவது இருக்கலாம் இல்லையா. இப்போது பாட்டி இருந்திருந்தால் அவருடைய செல்ல பேரனுக்கு சாப்பாடுவைக்காமல் அவரை பட்டினிபோட நினைத்த அத்தனை பேரின் கையும் உடைந்திருக்காதா ?

அப்புறம் ப்ரியா அம்மா, சதா ரிஷி ரிஷி என்று காதலில் கரையும் என் அத்தானின் காதலியே, காதலில் உருகி கரைந்தால் மட்டும் போதாது. மற்றதையும் கொஞ்சம் நினைக்கவேண்டும். காதலாம் காதல் புடலங்காய் காதல். உன்னை கல்யாணம் முடித்தால் உருப்பட்டுவிடும் அவர் வாழ்க்கை.

பானுக்கா நீங்கள் இந்த வீட்டின் மருமகள்தான், ஆனால் நீங்கள் இந்த வீட்டிற்கு வரும் முன்னே நான் இந்த வீட்டின் மருமகள். எனக்கு இந்த வீட்டில் எல்லா உரிமையும் இருக்கு. நாங்கள் திரும்பி வரும் முன் உங்களின் கைக்கூலியாக வேலை பார்த்த வேலையாட்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றிருக்க வேண்டும், இல்லையென்றால் அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் இனி பொது கணக்கில் போகாது. உங்கள் கணக்கில் இருந்துதான் போகும்." என்று வெடித்தவள் தன் அறையை நோக்கி சென்றாள்.

அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க, ரிஷி சிரிப்பை அடக்க மிகவும் சிரமப்பட்டான். தம்பி சிரிப்பதை பார்த்த அண்ணன் முகத்திலும் சிறிய சிரிப்பின் சாயல். (வெளியே தெரியாமல்தான் )

கையில் கார் சாவியுடன் வந்தாள் அபி. ரிஷியின் ஆபிஸில் இருந்து ட்ரைவர் கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் எடுத்துக்கொண்டு வந்தார்.

" வா சின்னத்தான் " என்று ரிஷியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள் அபி.

அவள் இழுப்பிற்கு சென்றவன் திரும்பி பானுவையும், ப்ரியாவையும் பார்த்து சிரித்துக்கொண்டே போனான்.

***********

ஏதோ புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது வீட்டில்.

" நீங்க சொன்னதால்தானே அம்மா நாங்கள் அப்படி செய்தோம், இப்போ எங்க வேலையே போயிட்டே " என்று புலம்பினார்கள் இரு வேலையாட்கள்.

மாமியார் முன்னே வேலையாட்கள் உளறியதால் பானு சங்கடமாய் நெளிந்தாள்.

" என்னம்மா இதெல்லாம், ஏண்டா இதெல்லாம் நீ கேட்கமாட்டியா ? இது குடும்பம்டா, சீரியல் கிடையாது. யோசித்து யோசித்து வீட்டில் இருக்கும் ஒருஒருத்தரையும் உன் பொண்டாட்டி விதவிதமாக கொடுமைசெய்ய. உங்கள் எல்லோரையும் நம்பித்தான் அந்த பெண் குழந்தையை எடுத்து வளர்த்தேன். உங்களை நம்பியது தப்பு என்று மூன்றுபேரும் நிரூபித்துவிட்டிர்கள். அவன் ஒருவனாவது என் நம்பிக்கையை காப்பாத்த போராடுகிறான். இனி அவனை தீர்த்துக்கட்டுவது எப்படி என்று உன் பொண்டாட்டி யோசிப்பதற்குள் அவளை அடக்கி வை. எல்லாம் உங்கள் அப்பாவை சொல்லணும், சொத்தை பிரித்து கொடுத்தார் அல்லாவா ? அதான் இந்த ஆட்டம் போடுகிறீர்கள். போனாலே அம்மு அவள் கேஸ் போட்டாள் என்றாள் இந்த சொத்தில் அவளுக்கும் நீங்கள் பங்கு கொடுக்கவேண்டும். போடமாட்டாள் என்றுமட்டும் தப்பா நினைக்காதே, அவளை வளர்த்தது நான் இல்லை பயந்து பயந்து எப்போதும் இருக்க. அவளை வளர்த்தது யாருக்கும் அடங்காத உன் தம்பி. அவனின் குணம் தான் அவளுக்கும் இருக்கும்." என்றார் அவர்.
*********

மாமியாரும், கணவனும் முறைத்துவிட்டு போக, ஹாலிலேயே இருந்து விட்டனர் அக்காளும், தங்கையும்.

சற்று நேரத்தில் அபியின் கார் வரும் ஓசை கேட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அபி போனில் தன் தோழியுடன் பேசிகொண்டுவர, ரிஷி கையில் இரண்டு கோன் ஐஸ் கிரீமுடன் வந்தான். ஹாலில் இருப்பவர்களை ஓரக்கண்ணால் பார்த்து சிரித்தவன் ஒரு ஐஸ்கிரீமை சாப்பிட்டுக்கொண்டே வந்தான்.

" அம்மு இந்தா உன் ஐஸ்கிரீம் "என்று போனில் பேசியபடி தன்னை தாண்டி சென்ற அபியிடம் தான் சாப்பிட்ட ஐஸ்கிரீமை கொடுத்தான்.

கவனியாமல் அபி அதை வாங்கிக்கொண்டு போக அங்கே இருந்த இருவருக்கும் காதுவழியாக புகை வந்தது.

ஐஸ்கிரீமை வாங்கிக்கொண்டு போன அபி அது ஓபன் ஆகியிருப்பதை பார்த்து திரும்பிவந்தாள்.

" நீ நல்லா வருவ, குடிக்கவே தண்ணீரை காணுமாம், உனக்கு கொப்பளிக்க பன்னிர் கேக்குதா ? போ உன் ப்ரியா உன்னை குதறிவிட போகிறாள்." என்று சிரித்துக்கொண்டே வேறு ஐஸ்கிரீமை வாங்கிக்கொண்டு போய்விட்டாள்.

" ரிஷி ஸாரி, அக்கா ஏதோ தெரியாமல் செய்துவிட்டார்கள். அந்த அபி அதை ஊதி பெரிதாக்கிவிட்டாள் " என்றாள் ப்ரியா.

பதில் ஏதும் சொல்லாமல் ஒரு புருவத்தை தூக்கி பார்த்தவன் சென்றுவிட்டான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top