Uyirin ularal - chapter 2

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் அத்தியாயம் 2


" அம்மா " என்று ரிஷினந்தன் போட்ட சத்தத்தில் அபிநேகாவின் தூக்கம் சற்று கலைந்தது. புரண்டு படுத்தவளை பார்த்தவன் எதுவும் பேசாமல் அவள் அருகில் சென்று கேசத்தை தடவி கொடுத்தான். அவள் மீண்டும் உறக்கத்துக்கு செல்ல

" இவள் பெற்றோர் என்னமோ வெளிநாட்டிற்கு சென்றது போல இவளும் கூடவே சென்றிருக்கலாம் என்று கூறிகிறீர்களே அம்மா. அவர்கள் சென்றிருப்பது என்றுமே திரும்பிவர முடியாத இடத்திற்கு. ஆறுமாத குழந்தையான இவளை நீங்கள் எடுத்தது சதை கூலாக கிடந்த இவளின் பெற்றோரின் நடுவில்." என்றான். அவனின் குரலில் ஆத்திரம் மிகுந்து இருந்தாலும் தாயிடம் பேசுகிறோம் என்று குரலில் ஒரு அமைதி இருந்தது.

" ஆறு மாத குழந்தை தன் பெற்றோருடன் செல்வதை உன்னால் தாங்க முடியவில்லை. ஆனால் கடந்த ஒரு வருடத்தில் இவள் எத்தனை முறை சாக போகிறேன் சாக போகிறேன் என்று துடித்திருக்கிறாள். இவள் இந்த வீட்டின் செல்வம். ஆனால் இன்று இவள் இங்கு எப்படி நடத்தப்படுகிறாள் " என்றார் அவர்.

" எல்லாவற்றையும் ஒரே நாளில் என்னால் நிறுத்த முடியும். ஆனால் நீங்கள் தான் உங்கள் மற்ற மூன்று மகனின் வாழ்க்கை என்று என் கையை கட்டி போட்டு வைத்திருக்கிறீர்கள் " என்றவன் அங்கே நில்லாமல் சென்றுவிட்டான்.

நேராக தன் அறைக்கு சென்றவன் அங்கு இருந்த வாட்ரோபை திறந்து அதில் இருந்த ஆல்பத்தை எடுத்தான். அமர்ந்து அதை திறந்தவன் கை அதில் இருந்த ஒவ்வொரு புகைப்படத்தையும் தடவியது. ஆறு மாத குழந்தை முதல் அவளுடைய பதினைந்துவயது வரையிலான போட்டோவில் அபிநேஹா சிரித்துக்கொண்டிருந்தாள். அதன் பிறகு எந்த போட்டோவும் எடுக்கப்படவில்லை. ரிஷினந்தனின் எண்ணம் ஆறுமாத குழந்தையாய் இருந்த அபிநேஹாவை நோக்கி சென்றது.
***********

கற்பகம்மாள், ராஜேந்திரன் தம்பதியருக்கு நான்கு ஆண் பிள்ளைகள். ராஜேந்திரனின் தாயார் ஆவுடையம்மாள் சொல்வதுதான் அந்த வீட்டின் சட்டம். இரண்டு குழந்தை போதும் என்று ராஜேந்திரன் சொன்ன போது, பெண் பிள்ளை இல்லாத வீடு வெறும் கூரை, கண்டிப்பாக ஒரு பெண் பிள்ளை வேண்டும் என்று ஆவுடையம்மாள் சொல்ல, மூன்று வருட இடைவெளியில் மூன்றாவதும் ஆண் பிள்ளையாகவே பிறந்தது. ஆனால் ஆவுடையம்மாளில் பிடிவாதம் தளரவே இல்லை. சரி இனி எங்கே குழந்தை பிறக்கப்போகுது என்று எந்த குடும்ப கட்டுப்பாடும் செய்யாமல் அந்த தம்பதியினர் இருந்துவிட ஐந்து வருடத்திற்கு பிறகு வந்து பிறந்தான் ரிஷினந்தன். போதுமடா சாமி என்று முதல் முறை மாமியாரின் பேச்சை எதிர்த்தார் கற்பகம்மாள்.

கார்த்திகேயன், கண்ணன், ராம்கோபால் ரிஷினந்தன் என்று நான்கு குழந்தைகளை வளர்ப்பதற்குள் கற்பகம்மாளுக்கு முழி பிதிங்கிவிட்டது. நான்கு குழந்தைகளுக்கு இடையிலான வயது வித்தியாசம் அவரை மிகவும் களைப்பட செய்தது. மூத்தவனுக்கும், கடைசி மகனுக்கும் 11 வயது வித்தியாசம்.

ஆவுடையம்மாள் கண்டிப்பானவர் என்றாலும் மகனின் குடும்ப வாழ்க்கையில் ரொம்பவும் மூக்கை நுழைக்க மாட்டார். பெண் பிள்ளை வேண்டும் என்று தான் நினைத்ததால் தன் மகனும், மருமகளும் படும் கஷ்டத்தை பார்த்தவர், அதிலும் அவரின் கடைசி பேரன் ரிஷினந்தனின் குறும்பையும் அதை சமாளிக்க தன் மருமகள் படும் பாட்டையும் பார்த்தவர், அடிக்கடி சுற்றுலாவுக்கு அனுப்பிவிடுவார். வருடம் ஒருமுறையாவது அனைத்து வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு ஒரு நீண்ட சுற்றுலாவுக்கு மகனை குடும்பத்துடன் அனுப்பிவிடுவார்.

அப்படி அவர்கள் ஊட்டி, கொடைக்கானல், பெங்களூர் என்று சுற்றிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த ஒரு இரவு பொழுதில் தான் அந்த கோர விபத்தை பார்த்தனர். பெங்களூர் ஹைவே ரோட்டில் தாறுமாறாக வந்த ஒரு லாரி எதிரே சரியான பாதையில் வந்துகொண்டிருந்த ஒரு காரை வந்து மோதியது. அதில் காரின் முன்பாகம் காணாமலே போனது. பயங்கர சத்தத்துடன் நடந்த இந்த விபத்தை பார்த்த ராஜேந்திரனின் மற்ற பிள்ளைகள் எல்லோரும் காரின் உள்ளே பதுங்க, கீழே இறங்கி ஓடும் தன் பெற்றோர்களுடன் ஓடினான் ஆறுவயது சிறுவனான ரிஷினந்தன். ராஜேந்திரனும், கற்பகம்மாளும் செய்வது அறியாது திகைத்து ஆம்புலன்ஸ்க்கு போன் போட்டனர்.

" அப்பா அப்பா பாப்பா, அப்பா பாப்பா அழுகுது " என்ற இளைய மகனின் குரலில் திரும்பி பார்த்தவர்கள் மகன் மிச்சமான காரின் பின் சீட்டில் பொதிந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஒரு குழந்தையின் கையை பற்றியிருப்பதை பார்த்து அதிர்ந்து போயினர்.

ராஜேந்திரன் மகனை பற்றி தூக்க, வீறிட்டு அழும் குழந்தையை தூக்கினார் கற்பகம்மாள். காரின் முன் பகுதி முழுவதும் நொறுங்கி, முன் சீட்டில் இருந்த அந்த குழந்தையின் பெற்றோர்கள் இருவருமே சதை கூலான போதும், ஒரு சின்ன அடி கூட படாமல் குழந்தை மிகவும் பத்திரமாக இருந்தது.

போலீஸ் அங்கே விரைந்து வந்து மற்ற காரியங்களை பார்க்க, குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் நின்றனர் ராஜேந்திரன் தம்பதினர்.

" சார் இறந்தவர்களை அடையாளம் காண முடியவில்லை. கார் நம்பர், போன் என்று எல்லாவற்றையும் ஆராய்ந்து இறந்தவர்கள் யார் என்று கண்டுபிடிக்க சில நாட்கள் ஆகலாம். அதுவரை இந்த குழந்தையை ஒரு ஆசிரமத்தில் விட வேண்டும். பச்சை குழந்தை வேற, இதை உரியவர்களிடம் சேர்க்கும் வரை வேற வழி இல்லை " என்ற போலீஸ் அந்த குழந்தையை வாங்க கையை நீட்டினார்.

உடனே குழந்தையை பின்னுக்கு இழுத்துக்கொண்டு கணவனை பார்த்தார் கற்பகம்மாள். மனைவியின் எண்ணத்தை புரிந்துகொண்டவர் தன் பாக்கெட்டில் இருந்து விசிட்டிங் கார்டை எடுத்தார்.
" சார் இது என்னுடைய கம்பெனி கார்ட், என் பெயர் ராஜேந்திரன், சென்னையில் வசிக்கிறோம். KAR குருப்பின் சேர்மன் நான். இந்த குழந்தையின் சொந்தக்காரர்களை கண்டு பிடிக்கும் வரைக்கும் குழந்தை எங்கள் பாதுகாப்பில் இருக்கட்டும், தேவையான பார்மாலிட்டீஸ் எல்லாவற்றையும் ரெடி பண்ணுங்க சார் " என்றார் அவர்.

" ஓகே, உங்களுடைய ஐடி ப்ரூப் எல்லாவற்றையும் தாங்க " என்ற போலீஸ் சில கையெழுத்துக்களை வாங்கிக்கொண்டு குழந்தையை அவர்களிடம் கொடுத்தார். குழந்தையை சுற்றியிருந்த துணியில் சில ரத்த கறைகள் காணப்படவே, அதை எல்லாவற்றையும் மாற்றி " பாப்பா எனக்கு எனக்கு "என்று துள்ளிய மகனிடம் குழந்தையை தந்தார் கற்பகம்மாள்.

தகவல் கொடுக்க தாமதமானதால் வந்து சேர வேண்டிய நேரத்திற்கு மகன் குடும்பம் வராமல் போக ஆவுடையம்மாள் பதற்றமானார். அவரை அதிகம் காக்க வைக்காமல் அணைவரும் வந்து சேர்த்தனர்.

ஆறு பேராக போன தன் மகன் குடும்பம், ஏழாக திரும்பி வந்ததை பார்த்த ஆவுடையம்மாள் நடந்ததை கேட்டு அதிர்ச்சியாகி நின்றார்.

" எல்லாம் சரி, விபத்தை பார்த்த, உதவி செய்த, அதோட விடாம இது என்ன ? பொம்மையை தூக்கிட்டுவரது போல ஒரு குழந்தையை தூக்கிட்டுவந்து நிற்கிற" என்றவரிடம் மகன் பதில் சொல்லாமல் நிற்க,

" நீங்கள் தானே பெண் பிள்ளை இல்லாத வீடு வெறும் கூரை என்றிர்கள் அத்தை " என்றார் கற்பகம்மாள். தான் பேசினால் முகத்தை கூட பார்த்து பேசாத தன் மருமகள் பதிலுக்கு பேசியதையும், அவள் கண்ணில் இருந்த உறுதியியையும் பார்த்தவர் " என்னடா ராஜேந்திரா இது " என்றார் அவர் மருமகளை காட்டி.

" அம்மா இப்போதைக்கு இந்த குழந்தை யாருடையது என்று முடிவு ஆகலை, அதுவரை இருவரும் கொஞ்சம் பொறுங்கள். யாரும் வரவில்லை என்றாள் இதை பற்றி பேசலாம் " என்று மகன் முடிக்க அப்போதைக்கு ஆவுடையம்மாள் அமைதியானார்.

மூத்த இரு மகன்களும் டீனேஜ் என்பதால் அவர்கள் அவர்கள் வேலையில் மூழ்கினர். மூன்றாவது மகன் கிரிக்கெட் மட்டையுடன் கிளம்பிவிட கடைசி மகன் தாயையும், புதிதாக வந்த பாப்பாவையும் விட்டு அகலாமல் இருந்தான். அவன் எப்போதும் அப்படிதான். தாயின் சேலை தலைப்பை பிடித்து கொண்டே திரிவான். கற்பகம்மாள் குழந்தையை குளிக்கவைத்தால் இவன் தண்ணீர் ஊற்றினான், பொட்டுவைத்தால் பவுடர் போட்டான்.

" ஏண்டா சின்னவனே உனக்கு வேற வேலையே இல்லையா ? உன் அம்மாதான் ஏதோ கிறுக்கு வேலை செய்கிறாள் என்றாள் நீயும் அவளுடன் சேர்ந்துகொண்டு அலைகிறாய் ?" என்று கேட்ட பாட்டியிடம்

" போ பாட்டி நீ சும்மா சும்மா அந்த குட்டி பாப்பாவை திட்டுற, உனக்கு அந்த பாப்பாவை பிடிக்காட்டி எனக்கு உன்னையும் பிடிக்காது, நான் உன்னுடன் சண்டை போட்டுடுவேன், நான் உன் கூட கா போ " என்று ஓடும் பேரனை கவலையுடன் பார்த்தார் ஆவுடையம்மாள்.

பார்த்து ஒரு நாள் ஆன ஒரு குழந்தைக்காக சொந்த பாட்டியுடன் சண்டையை பாரேன் என்று வாய் விட்டே முனங்கியவர் யோசனைக்குள்ளானார்.

அன்று இரவு குழந்தை விடாமல் அழுதது. கற்பகம்மாள் செய்வது அறியாது நின்றார். தொடர்ந்து நான்கு குழந்தைகள், அதற்கு
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் இடையே ஆன இடைவெளி அவரை ஏற்கனவே சோர்வடைய செய்திருந்தது. இப்போது மறுபடியும் ஒரு குழந்தையை வளர்க்கவேண்டும்.

குழந்தை விடாமல் அழுவதை கேட்ட ஆவுடையம்மாள் தனக்கு துணையாக இருந்த அன்னம்மாளை மருமகளுக்கு துணையாக அனுப்பிவைத்தார்.

" என் மருமகள் நான் எதற்காக இந்த குழந்தை வேண்டாம் என்று சொல்கிறேன் என்று புரிந்து கொள்வாளோ இல்லையோ " என்று புலம்பியபடி.

மூன்று நாள் கழித்து பெங்களூர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வர ராஜேந்திரனும் கற்பகம்மாளும் அந்த குழந்தையுடன் கிளம்பினர்.
**********

" வாங்க, உட்காருங்க, இந்த குழந்தையின் பெற்றோரை ஒருவழியாக கண்டுபிடித்து விட்டோம். அவர்கள் தமிழ்நாட்டை சேர்த்தவர்கள்தான். ஆனால் இருவருமே ஒரே ஆசிரமத்தில் வளர்த்தவர்கள். இருவருக்கும் பெற்றோர்கள் என்று யாரும் கிடையாது. நடந்ததை சொன்னவுடன் அந்த ஆசிரம நிர்வாகி இந்த குழந்தையை பார்க்க மிகவும் ஆசைப்பட்டார். இந்த குழந்தையின் பெற்றோர் இருவருமே நன்றாக படிப்பவர்களாம். தங்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்த பிறகுதான் கல்யாணமே செய்தார்களாம். அந்த நிர்வாகி இந்த குழந்தையை அவரிடம் ஒப்படைக்க சொன்னார். நான் உங்களிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று சொல்லியுள்ளேன்." என்றார்.

" வேண்டாம், அந்த நிர்வாகி இவளை பார்க்க ஆசைப்பட்டார் என்றால் ஒருநேரம் அவரை பார்த்துவிட்டு வருகிறோம். ஆனால் குழந்தையை நாங்களே வளர்த்து கொள்கிறோம்." என்றார் கற்பகம்மாள் அவசரமாக.

அவரின் குரலில் இருந்த அவசரத்தை பார்த்த போலீஸ் சிரித்து கொண்டார்.
" குழந்தையை நீங்கள்தான் வளர்க்க போகிறீர்கள் என்ற தெளிவு இருந்தால், அவரை நீங்கள் சந்திக்க வேண்டிய அவசியம் வராது. இதோ இதுதான் இந்த குழந்தையின் பெற்றோர் " என்று ஒரு போட்டோவை கொடுத்தார் அவர்.

போட்டோவில் இருந்த ஜோடி அப்படி ஒரு அழகான அம்சமான ஜோடி. இந்த குழந்தை அப்படியே அவள் அப்பாவை உரித்து வைத்திருந்தாள். கண்கள் அவள் அம்மாவுடையது. சில நேரம் கடவுளுக்கு இரக்கமே இருப்பதில்லை என்று நினைக்க தோன்றியது.

பிறகு முறைப்படி அக்குழந்தையை தத்து எடுத்தனர் ராஜேந்திரன் தம்பதியினர். ஆவுடையம்மாளுக்கு மகன் செய்தது சுத்தமாக பிடிக்கவில்லை ஆனாலும் மருமகள் பிடிவாதமாக இருப்பதை பார்த்தவர்

" என்னமோ செய்யுங்கள், ஆனாலும் இந்த குடும்பத்திற்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கு. எங்கோ யாருக்கோ பிறந்த குழந்தை இந்த வீட்டு வாரிசாக இருக்க கூடாது. குழந்தையை வளர்த்து கொள்ளுங்கள் ஆனால் அது உங்களை அப்பா, அம்மா என்று அழைக்க கூடாது. தான் இந்த வீட்டு பெண் இல்லை என்பது தெரிந்தே இந்த குழந்தை வளர வேண்டும். பிற்காலத்தில் அதுக்கு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்யும் கடமை உங்களுக்கு இருக்கலாம். தாராளமாக செய்து கொள்ளுங்கள். தங்கத்தால் இழைப்பீர்களோ ? வைரத்தால் நிறைப்பீர்களோ செய்து கொள்ளுங்கள் ஆனால் சொத்தில் பங்கு மட்டும் கொடுக்க கூடாது. அதற்க்கு முழு உரிமையும் என் நான்கு பேரனுக்கு மட்டுமே உள்ளது " என்று முடித்துவிட்டார் ஆவுடையம்மாள்.

ஏதோ இதுமட்டுமாக ஒத்துக்கொண்டாரே என்று சந்தோசப்பட்டுக்கொண்டார் கற்பகம்மாள்.

பெயர் தெரியாத காரணத்தால் கற்பகம்மாள் புதிய பெயர் யோசிக்க ஆளுக்கொரு பெயர் சொன்னார்கள்.

" அம்மா என்னுடன் இரண்டுபேர் படிக்காங்க, அவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அபிநயா அப்புறம் கவிநேஹா. இரண்டு பேரையும் பாப்பாவுக்கு வைக்கணும். நான் ஒருநேரம் அபின்னு சொல்லுவேன், அப்புறம் நேஹான்னும் சொல்லுவேன் " என்று முரண்டு பிரித்தான் ரிஷினந்தன்.

அவன் பிடிவாதம் தாங்காமல் " அவன் சொல்வதையே வைத்துவிடு மருமகளே, அப்படியே அந்த குட்டியை அவனிடமே கொடுத்துவிடு வளர்த்துவிட்டு போகிறான் " என்றார் அவன் பாட்டி.

" ஐயா ஜாலி ஜாலி " என்று அவன் குதிக்க

" இரண்டு பெயர் எல்லாம் வைக்க முடியாதுடா, ஒரு பெயரை சொல்லு " என்று ராஜேந்திரன் சொல்ல " அபிநேஹா " என்று கற்பகம்மாள் முடித்தார்.

இரண்டு பெயர் வைக்கச்சொன்னவன் கடைசிவரை பெயர்ச்சொல்லி கூப்பிட்டதே இல்லை. அபிநேஹா எல்லோருக்கும் ' அம்மு ' என்றே ஆகிப்போனாள். தன் பிஞ்சு காலால் தளிர்நடை போட்டு, பொக்கை வாயை வைத்துக்கொண்டு சிரித்து சிரித்தே தன்னை வேண்டாம் என்று சொன்ன பாட்டியின் செல்ல பெண்ணாகி போனாள் அபிநேஹா.

குழந்தைக்கு பேச கற்று கொடு என்று மருமகளை மாமியார் ஏவ " நீங்களே சொல்லிக்கொடுங்களேன் " என்று குழந்தையை கையில் கொடுத்துவிட்டு போய்விடுவார் கற்பகம்மாள்.

பாலை மட்டும் கொடுக்காதே பருப்பு சாதமும் நெய்யும் கொடு என்றால் அதற்கும் பதில் " நீங்களே கொடுங்களேன் அத்தை " என்பதுதான்.

" அம்மாவை ஏன் கஷ்டப்படுத்துகிறாய் " என்று ராஜேந்திரன் கேட்க " நான் என்ன செய்வேன்? நல்லா பாருங்க, அந்த குட்டிக்கு சின்னவனும் அவள் பாட்டியுமே போதும், என்னை எங்கே தேடுது." என்றார் அவர்.

அபிநேஹா பேச தொடங்கியது ' அத்தை ' என்ற வார்த்தைதான். ' அத்தை ' என்றால் அத்தனை நோயும் நொடியும் அத்து போய்விடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதுபோல அபிநேஹாவுக்கு யாரும் இல்லை என்பது அத்து போய் அத்தை, மாமா, நான்கு அத்தான், பாட்டி என்று அத்தனை சொந்தமும் கிடைத்தது.

ஆவுடையம்மாள் அபிநேஹாவின் மேல் பிரியமாக இருந்தாலும் அவர் சொன்னது சொன்னதுதான் என்று கூறிவிட்டார். ஆக அபிநேஹாவிற்கு அம்மா, அப்பா இல்லாதவர்களாகவே போய்விட்டனர். அதற்காக என்றுமே அபிநேஹா வருத்தப்பட்டது கிடையாது. அதற்கும் மேலாக அன்பு திகட்ட திகட்ட கிடைத்தது அவளுக்கு. ஆனால் எதுவரை ?
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஷ்வபூமி டியர்
 
Last edited:

Saroja

Well-Known Member
நல்ல கதை
அவ வளர்ந்து பெரிய
பெண் ஆகும்போது
மருமகளுக வந்ததும்
மாறிடுச்சா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top