Uyirin ularal - chapter 1

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
#1
உயிரின் உளறல் - அத்தியாயம் 1

ஆழ்ந்த நீல நிறம் டைல்ஸ் பதிக்கப்பட்டு நீல நிற தண்ணீராய் காட்சி அளிக்கும் அந்த முட்டை வடிவிலான நீச்சல் குளத்தின் குளிர்ந்த தண்ணீர் எல்லாம் வென்நீராகும் அளவுக்கு அதனுள் மீனாய் நீந்திக்கொண்டிருந்தவளின் மூச்சு காற்று வெப்பமாய் வெளிவந்தது.

நீந்துவது என்பது சிலரில் பொழுதுபோக்கு, விருப்பம், விளையாட்டு, போட்டி என்று இருக்கும். ஆனால் தற்சமயம் நீந்திக்கொண்டிருக்கும் அபிநேஹாவுக்கு அது ஒரு வகையான சிகிச்சை. அவளின் குடும்ப மருத்துவரால் பரிந்துரைக்கபட்ட சிகிச்சை. எப்போதும் ஒருமணி நேரத்தில் முடியும் சிகிச்சை இன்று..........

*********

அந்த எட்டுமாடி கட்டிடத்தில் ஆறாவது தளத்தில் தன் அலுவலகத்தில் இருந்து பைலை புரட்டிக்கொண்டிருந்த ரிஷினந்தனின் போன் தனது ரிங்க்டோனை வெளியிட்டது. அழைப்பது தாய் என்று அறிவித்தது அந்த ரிங்க்டோன்.

அதை எடுத்தவனின் முகத்தில் சிறு அச்சம் தென்பட்டது. அதிகம் நடமாட்டம் இல்லாத தன் தயார் தன்னை ஒரு தேவைக்கு தவிர சும்மா அழைப்பதில்லை. ஆனால் அந்த ஒரு தேவை சமீப காலமாக அதிகரித்து கொண்டே போவதுதான் அவனை கவலை அடைய செய்தது.

" ஹலோ சொல்லுங்கம்மா, எவ்வளவு நேரம்? இன்னும் வெளிவரவில்லையா ? சரி இதோ வந்துவிடுகிறேன். " என்று போனை வைத்தவனின் கை தானாக அவன் பின் கழுத்தை தடவியது.

இரவு 7 மணிக்கு மீட்டிங் போகவேண்டும் என்று கூறிய தன் பாஸ் 6 மணிக்கு காரணமே சொல்லாமல் கிளம்பவும் " இனி இவருக்கு மீட்டிங் நினைவு இருந்த மாதிரிதான்" என்று நினைத்து கொண்டு தன் போனை எடுத்தான் மீட்டிங்கை கேன்சல் செய்ய, ரிஷினந்தனின் pa ஆகாஷ்.

வழக்கத்தை விட வேகமாகவும், சத்தமாகவும் கேட்ட தன் முதலாளியின் கார் ஹாரன் சத்தத்தை கேட்டு பதறி ஓடி வந்தார் கேட் செக்யூரிட்டி.

அவன் எழுப்பிய ஹாரன் சத்தம் வேறொரு நபருக்கு என்பதால் அவரின் முகத்தில் தோன்றிய அச்சம் தேவையற்றது என்பதுபோல ஒரு சிறு புன்னகையை கொடுத்துவிட்டு காரை ஓட்டிச்சென்றான் ரிஷினந்தன். கம்பிரமாக தோன்றிய அந்த பெரிய வீட்டிற்குள் சென்றவன் தன் தாயார் இருக்கும் அறையை நோக்கி சென்றான்.

" வாப்பா, அன்னம்மாவை நான்காவது முறையாக அனுப்பியிருக்கிறேன்." என்றார் கற்பகம்மாள் கவலையுடன்.

பதில் ஏதும் சொல்லாமல் அன்னம்மாவின் பதிலுக்காக தன் தாயுடன் காத்திருக்க தொடங்கினான் ரிஷினந்தன்.

பத்து நிமிடத்தில் அவளுக்கு சற்றும் பொருத்தம் இல்லாத ஒரு தொழ தொழ உடையில் அங்கு வந்து சேர்ந்தாள் அபிநேஹா . ஒரு 23 வயது பெண்ணுக்கான எந்த அடையாளமும் இல்லை அவளிடம்.
அபிநேஹா என்றால் அனைவருக்கும் நினைவு வருவது ஜீன்சும் ஒரு டாப்ஸும் அணிந்துகொண்டு முகத்தை முழுவதும் மறைக்கும் ஒரு ஜோடாபொட்டி கண்ணாடியும், அவள் உடைக்கு பொருந்தாத கொண்டையும்தான். அவள் முகம் பவுடரை பார்த்து பலவருடம் இருக்கும் என்று சொன்னது. இதுதான் அபிநேஹா.

கடந்த மூன்றுமணி நேரம் தண்ணீருக்குள் நீந்திய அறிகுறி அவளின் உடலில் தெரிந்தது. அவளின் முகம் களைப்பை பூசிக்கொண்டிருந்தது, கண்கள் சிவந்து தென்பட்டன. அவளை பார்த்த ரிஷினந்தன் அவளின் செயலுக்கு எந்த விளக்கத்தையும் கேளாமல், அவளை நெருங்கியவன் அவளின் முகத்தில் வந்துவிழுந்த கத்தை முடியை ஒதுக்கினான்.

அடுத்த நொடியே அவளின் கை அவனின் கையை ஒரு வேகத்துடன் தட்டிவிட்டது. ஆனால் அதற்காக அவனிடம் எந்த மாற்றமும் தோன்றவில்லை. மாறாக
" என்னடா பிரச்சனை" என்று கேட்டான்.

அந்த கேள்வியில் அவளின் முகம் மேலும் விகாரமாக மாறியது.

" எனக்கு என்ன பிரச்சனை?" என்றவள் நகத்தை கடிக்க ஆரம்பித்தாள். அவளுடைய கண் அங்கேயும் இங்கேயும் அலைபாய்ந்தது.

" நீ தான் எனக்கு பிரச்சனை சின்னத்தான்" என்றாள் அவனை பார்த்து.

" நானா " என்றது அவனது குரல் அதிர்ச்சியில்.

" ஆமாம் நீதான், 29 வயது ஆகியும் கல்யாணம் பண்ணாமல் இருக்கும் நீதான் எனக்கு பிரச்சனை. நீ இருக்கும்...... " என்று வேகமாக தொடங்கியவள் கற்பகமாளின் வேதனையான முகத்தை பார்த்து அமைதியானாள்.

அதற்குள் " அத்தை " என்று பானுவின் குரல் அந்த அறையை நெருங்கியது. பானு அந்த வீட்டின் மூன்றாவது மருமகள்.

" சரி நீ உன் ரூமுக்கு போடா " என்றான் ரிஷினந்தன், அபிநேஹாவை பார்த்து.

பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து அகன்றாள் அவள்.

அந்த அறைக்குள் நுழைந்த பானுவை நிமிர்ந்து பார்க்காமல் செல்லும் அபிநேஹா முறைத்தாள் பானு.

" அத்தை காஃபி கொண்டுவரவா " என்று கேட்ட மருமகளை பார்த்து மறுப்பாக தலையை ஆட்டினார் அவர்.

" சரித்தே, அதை கேட்கத்தான் வந்தேன் " என்று திரும்பி சென்ற மருமகளை கோபத்துடன் பார்த்தவர் " பாவம் என் குழந்தை " என்றார் ரிஷினந்தனிடம்.

" நான் என்ன செய்ய முடியும் ? அதான் நீங்களே பார்க்கிறீர்களே, எங்களை சுற்றி எத்தனை கண்கள் என்று " என்றான் அவன் ஒருவித சலிப்புடன்.

ஏதோ யோசித்தவன் " அம்மா நான் வெளியே போகிறேன். அவளை அழைத்து உங்களுடன் வைத்து கொள்ளுங்கள். ஏதாவது வேலை கொடுங்கள். நான் நாளை மறுநாள் அவளை டாக்டர் அங்களிடம் அழைத்துபோகிறேன் " என்றவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டான்.
**********

அன்னம்மா அபிநேகாவை கற்பகம்மாள் அழைப்பதாக கூறினார்.

" அத்தை அழைத்தீர்களா " என்று வந்து நின்றாள் அபிநேஹா.

"ஆமாம் வாம்மா, நீ நேற்று எனக்கு படித்து காட்டிய புத்தகத்தை முழுதாக முடிக்கவில்லை. அதனால் அதை தொடர அழைத்தேன் " என்றார் அவர்.

" எனக்கு இப்போது அதை படித்துக்காட்டும் மூடே இல்லை " என்றாள் அவள்.

" ஆனால் அதை கேட்கும் மூடில் நான் இருக்கிறேனே, அந்த கதையின் முடிவு என்னவாக இருக்கும் என்று யோசித்து யோசித்து எனக்கு நேற்று இரவெல்லாம் தூக்கமே இல்லை. இராமாயணம், மஹாபாரதம் எல்லாம் படித்தாகிவிட்டது, ஏதாவது நல்ல கதைகளை சொல்லு என்று கேட்டதற்கு இந்த வயதில் நீ எனக்கு மர்ம நாவல்களை பழக்கிவிட்டாய். அதையும் பாதி பாதியாக படித்துகாட்டி நீ என் ப்ரெஸ்ஸரை எகிற வைக்கிறாய் அம்மு " என்றார் அவர்.

" அப்படி என்னை கூப்பிடக்கூடாது. நான் யாருக்கும் அம்மு இல்லை, அபிநேஹா என் பெயர். நீங்கள் வைத்ததுதானே, பின்னே அப்படி கூப்பிடுவதற்கு என்ன ? " என்று முகத்தை சுருக்கியவள், நேற்று மூடி வைத்த புத்தகத்தை கையில் எடுத்தாள்.

ஆனால் அதை படிக்கவில்லை. " அத்தை எனக்கு இன்றைக்கு என்னவோ போல இருக்கு, நான் உங்க மடியில் படுத்துக்கவா ? என்று கேட்டாள், பின்பு உடனே மறுப்பாக தலையாட்டியவள் " வேண்டாம், வேண்டாம் அப்புறம் நீங்களும் என்னை விட்டு போய் விடுவீர்கள், அப்புறம் நான் உண்மையில் அநாதை ஆகிவிடுவேன் " என்றாள் ஒரு பத்தற்றதுடன்.

" வாயிலே போடுவேன், எப்போ பாரு இப்படி எதையாவது பேசிகிட்டு, வந்தவர்கள் எல்லோரும் ஒருநாள் போய் தான் ஆகவேண்டும், அப்புறம் நான் போனாலும் நீ அனாதையெல்லாம் ஆக மாட்டாய், அதான் உன் சின்னத்தான் இருக்கிறானே அப்புறம் என்ன ?"

" போங்கத்தே, அவருக்கு கல்யாணம் முடிந்த பிறகு நான் அனா...." என்று பேச வந்தவள் அமைதியாகி கையில் இருந்த கதையை அவளின் அத்தைக்கு படித்துகாட்ட ஆரம்பித்தாள்.

கதை எல்லோரும் படிக்கலாம். ஆனால் கதையை கதையாய் உயிரோட்டத்துடன் படிக்க ஒரு சிலரால்தான் முடியும். அதில் அபிநேஹா கைதேர்ந்தவள். அவளின் குரல்வளம், வார்த்தை உச்சரிப்பு, ஏற்ற இறக்கம் எல்லாம் அந்த கதையின் கதாபாத்திரத்தை கண்முன்னே கொண்டுவரும் ஆற்றல் கொண்டது. ஆனால் இன்று ஏனோ கற்பகம்மாளுக்கு கதையில் எண்ணம் போகவில்லை. அபிநேஹாவை பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார்.

"அம்மு " என்று அழைத்தவரை நிமிர்ந்து பார்த்தாள் அபிநேஹா.

" அம்மு நான் ஒன்று கேட்பேன் நீ எதையும் மறைக்காமல் பதில் சொல்லவேண்டும். " என்றார் அவள் கையில் இருந்த புத்தகத்தை வாங்கியபடி.

" நான் ஏன் எதையும் மறைக்கப்போகிறேன், ம் கேளுங்க " என்றாள்.

" நீ இன்றைக்கு எங்கெல்லாம் போன, யாரெல்லாம் பார்த்த ?" என்று கேட்டார்.

"இவ்வளவுதானா. ம் ஆபிஸ் போனேன் இரண்டு புது கிளைன்ட்டை பார்த்தேன். அப்புறம் மதியத்திற்கு மேல் எனக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்க மாலுக்கு போனேன், அங்கே " என்றவள் மேலே எதுவும் கூறாமல் நிறுத்தினாள்.

" உண்மை " என்று கற்பகம்மாள் கண்ணை காட்டவும்

" அங்கே, வந்து அங்கே பானு அக்காவையும், அவர்கள் தங்கை ப்ரியாவையும் பார்த்தேன் " என்றாள் திக்கி திணறியபடி.

" சரி, எனக்கு பசிக்கு அன்னம்மாவை நம் இருவருக்கும் உணவு எடுத்து வர சொல் " என்றார் அவர்.

உணவை மறுக்க போனவள் அதற்கு பயன் இருக்காது என்று நினைத்து "சரி "என்றாள்.

உணவை முடித்துவிட்டு விட்ட இடத்தில் இருந்து கதையை தொடர்ந்தனர் அத்தையும், மருமகளும். பிறகு அபிநேஹா தன் அத்தையின் மடியில் தலைவைத்து படுத்துகொண்டாள். கற்பகம்மாள் அவள் தலையை கோதியபடி இருந்தார்.

" அத்தை அந்த ப்ரியாதான் சின்னத்தானுக்கு மனைவி என்று அனைவராலும் முடிவான பிறகும், சின்னத்தான் ஏன் கல்யாணத்தை தள்ளி தள்ளி போடுறாரு ? நான் அவரின் கல்யாணத்துக்கு இடைஞ்சலா இருக்கேன்னா ? நான் இந்த வீட்டை விட்டு போயிடவா ? எங்கேயாவது" என்று கேட்டாள் அபிநேகா.

" அனைவராலும் என்றாள் அதில் யாரெல்லாம் இருக்காங்க ? முக்கியமா உன் சின்னத்தான் இருக்கானா ?" என்றவரிடம்

" இல்லை அவர் இல்லை, ஆனால் ஏன் இல்லை ?" என்றாள்.

" அவன் இப்போ வந்திடுவான், உன் சந்தேகத்தை அவனிடமே கேள், அப்புறம் வீட்டைவிட்டு போவதையும் பற்றி " என்றார் அவர்.

" எதுக்கு நான் அடிவாங்கவா ?" என்றாள்.

" தெரியுதில்ல, பேசாம தூங்கு " என்றார்.

" காலு வலிக்குதா ?" என்று கேட்டு எழ போனவளை தடுத்தவர்

" இல்ல, படுத்துக்க " என்றார் அவர். ஏற்கனவே களைப்பில் இருந்தவள் கற்பகம்மாவின் பரிசத்தில் சீக்கிரமே கண் அயர்ந்து போனாள்.

சற்று நேரத்தில் வந்த ரிஷிநந்தன் தாயின் அறைக்கு வந்தான். அங்கே தன் தாயின் மடியில் தூங்குபவளை பார்த்தவன்
" தூங்கிவிட்டாளா?" என்று கேட்டபடி அவளின் தூக்கம் கலைந்துவிடாதபடி கையில் ஏந்தி கட்டிலின் மறுபக்கத்தில் படுக்க வைத்தான்.

" சாரிம்மா கொஞ்சம் லேட்டா ஆயிட்டு " என்ற மகனிடம்

" இன்று என் குழந்தையை வேதனை படுத்தியது உன் சின்ன அண்ணியும் அவள் தங்கையும், ஏப்பா நான் எத்தனை முறை சொல்லிவிட்டேன் அந்த ப்ரியாவை உனக்கு பிடித்திருந்தா சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ என்று, இப்போ பாரு அவளுக செய்யும் வேலையை " என்று கடிந்து கொண்டார் மகனை.

" அது எப்படிம்மா ? என் அம்முவுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுக்காம என் வாழ்க்கையை பார்ப்பேன், அப்புறம் அந்த ப்ரியாவை பிடிக்கும், பிடிக்காது என்றெல்லாம் இல்லை." என்றான் அவன்.

" அதான் யாரோ ஊரெல்லாம் இவளுக்கு மனநிலை சரியில்லை என்று பரப்பிவைத்துள்ளார்களே. அதனால் தானே என் குழந்தை வாழ்க்கையில் எந்த நல்லதும் நடக்காமல் தள்ளி போகிறது, பேசாமல் இவள் அன்று தன் பெற்றோர்களுடன் சேர்ந்தே போயிருக்கலாம் " என்றார் கண் கலங்கியபடி.

" அம்மா " என்று அலறினான் ரிஷிநந்தன்.
 
#3
:D :p :D
உங்களுடைய "உயிரின்
உளறல்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
விஷ்வபூமி டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement