Thendralai Thoothuvittu - Ep 4

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் 4

“அம்மா நான் வெங்கடேசன் அங்கிளைப் பார்த்துவிட்டு அப்படியே ஷோரூம் போய்விடுவேன். உங்களுக்கு ஏதாவது வாங்கி வரவேண்டுமா?” என்று கேட்டபடியே கிளம்பிக் கொண்டிருந்தாள் சத்யா.

“வேண்டாம்மா... நீ கவனமா போயிட்டு வா...” என்று தாயார் சொல்ல, தாயாரை ஜாக்கிரதையாக இருக்குமாறு கூறி விரைவில் அவருக்கு ஒரு துணையை ஏற்பாடு செய்ய இருப்பதையும் சொல்லிவிட்டு வெளிப்புறமாக கதவை லாக் செய்து சாவியை எடுத்துக் கொண்டு நடந்தாள்.

“ம்... மகராசி கதவை சாத்திக்கிட்டு கிளம்பியாச்சு... அப்பன் இருக்கும்போதே கெட்டு அலைஞ்சவ! இப்போ இருக்குற இந்த குருட்டுத் தாயாருக்கு என்ன தெரியும்! தாயும் மகளும் வாழ வேண்டாமா...? அதான் இவ அப்படி கண்ட கண்ட இடத்துக்கு போகிறாள்” என்று சத்யாவின் காதுபடவே தன் கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் ரேவதி.

அவர்களது பேச்சைக் கேட்ட சத்யா தங்களை நோக்கி வருவதைக் கண்டதும் வாயை மூடிக்கொண்டாள்.

அவர்களருகில் சென்றவள் “உங்க பேச்சுக்கு அளவே கிடையாதா? ஒருத்தியை எவ்வளவுதான் கேவலப்படுத்துவீங்க?” என்றாள் மூக்கு விடைக்க.

“ஏன் நான் உண்மையைத்தானே சொன்னேன்?” என்றாள் அவள் தயங்காமல்.

“என்ன உண்மை? நான் எங்கே போறேன், என்ன செய்றேன்னு பார்க்க ஆள் எதுவும் ஏற்பாடு செய்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள் கோபம் தணியாமலே.

அவள் கேட்டதற்கு பதிலளிக்காமல் “ஆனாலும் ஒழுக்கம் கெட்டு அலையுற உனக்கு இவ்வளவு வாய் ஆகாதுடியம்மா...” என்றாள் அவள் ஏளனமாக.

“ஒழுக்கம் கெட்டா...? என் ஒழுக்கத்தைப் பற்றி எனக்குத் தெரியும். அதைப்பற்றி நீங்கள் பேச வேண்டிய அவசியமில்லை... இனியொரு முறை இப்படிப் பேசுங்கள் அப்புறம் இருக்கிறது...” என்று திரும்பியவளிடம், “பேசினால் என்ன பண்ணுவே?” என்று கேட்டாள் ரேவதி திமிராக.

“ம்... நான் என்ன செய்வேன்றதை நீ பேசும்போது பார்த்துக்கலாம். ஆனால் என் ஒழுக்கத்தைப் பற்றி பேசும்முன் உன் கணவனிடமும் மகனிடமும் ஒழுக்கம் என்றால் என்னவென்று கேட்டுவிடு...” என்று அவளிடம் சொல்லிவிட்டு அருகில் நின்ற அவளது கணவனிடம் திரும்பியவள், “என்ன... ஒழுக்கத்தின் சிகரம்! வாயைத் திறக்காமல் நிற்கிறீர்கள்? நீங்களே உங்க மனைவிகிட்ட சொல்றீங்களா...? இல்லை நான் சொல்லட்டுமா?” என்று கேட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

அவள் இரண்டடி எடுத்து வைப்பதற்குள்... “என்னங்க... இவ என்ன சொல்றா?” என்று ரேவதியின் கடுமையான குரலும், “ஏய்..! இவ ஏதோ கதை விடுறாடி... வீணாக நமக்குள் சண்டை மூட்டிவிடப் பார்க்கிறாள்...” என்று நழுவ முயன்ற அவள் கணவனது குரலும் கேட்க ‘காலையிலேயே என்னை பேசியதற்கு இருவருக்கும் தேவைதான்’ என்றெண்ணியவாறே நடையை எட்டிப் போட்டாள்.

சத்யா பணிபுரியும் ஷோரூமிற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒரு பெண்ணுடன் வந்து அவளுக்கு வேண்டியமட்டும் செலவளித்துச் சென்றிருந்தான் ராமநாதன்- ரேவதியின் கணவன்.
அவள் நிற்பது மேல்தளமாதலால் ராமநாதன் அவளைக் கவனித்திருக்க வாய்ப்பில்லை... ஆனால், இவளால் ஷோரூமிற்குள் நுழைபவர்களையும் வெளியேறுபவர்களையும் பார்க்கும் வகையில் தான் அவள் நிற்கும் இடமிருந்தது.

நேராக வெங்கடேசன் வீட்டிற்குச் சென்றவள் அவரது மனைவியைக் கண்டதும் “வணக்கம் ஆன்ட்டி! அங்கிள் இல்லையா?” என்று கேட்டாள்.

அவளிடம் எதுவும் பேசாமலே உள்ளே சென்றவர் “உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க...” என்றார் கணவனிடம். யாரோ தெரியாத நபரைப் பற்றி பேசுவதைப் போல கூறவும் இவளது முகம் வாடிவிட்டது.

இதே ஆன்ட்டி முன்பு அவள் வரும்போதெல்லாம் வாய் நிறைய புன்னகையுடன் வரவேற்றது நினைவிற்கு வர அதே நினைவுடன் நின்றவள்முன் வந்தார் வெங்கடேசன்.

அவரைக் கண்டதும் பழைய நினைவுகளை ஒதுக்கி “அங்கிள் அம்மாவைப் பார்த்துக் கொள்வது பற்றி கேட்டிருந்தேனே...! அது பற்றிப் பேசலாம் என்று வந்தேன்..” என்று அவள் சொன்னவுடன், “என் நம்பர்தான் உன்னிடம் இருக்கிறதே! அதில் கூப்பிட்டுக் கேட்டிருக்கலாமே! எதற்கு வீடுவரை வரவேண்டும்..?” என்றார் அவர்.

அதாவது 'இனிமேல் வீட்டிற்கு வராதே என்று நாசூக்காக சொல்கிறார் போலும்' என்றெண்ணிக் கொண்டவள் “இல்லை அங்கிள்... இந்த வழியாகத் தான் நான் வேலை பார்க்கும் ஷோரூமிற்குச் செல்ல வேண்டும். போகிற வழியில்தானே பார்த்து பேசிவிடலாம் என்று நினைத்தேன்...” என்று தன் காரணத்தைக் கூறினாள் அவள்.

“சரி... சரி... அதைவிடு. நான் ஒரு வயசான பெண்மணியை ஏற்பாடு செய்திருக்கிறேன். மாசம் மூவாயிரம் சம்பளம் கேட்கிறார்... உன்னால் முடியுமா?” என்று கேட்டார்.

“முடியும் அங்கிள்” என்றாள் சற்றும் யோசிக்காமல்.

“முடியுமானால் சரிதான். அப்புறம் நீ போறதுக்கு முன்னாலயே வந்துவிட்டு நீ வீடு திரும்பிய பிறகுதான் போவார்கள். அவர்களோட மதிய இரவுச் சாப்பாடு உன் செலவு. அம்மாவைப் பார்த்துக் கொள்வதைத் தவிர உன் வீட்டு வேலை எதையும் அவர்களிடம் சொல்ல வேண்டாம். உன் அம்மாவிற்கு நல்ல துணையாக இருப்பார்கள்... ஏதாவது அவசரத் தேவை என்றால் உன்னை அழைத்துச் சொல்ல வசதியாக அவர்களுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து உன் நம்பரையும் கொடுத்துவிடு” என்று தான் சொல்ல வேண்டியவற்றையெல்லாம் சொல்லி முடித்தார் அவர்.

அவர் முடித்ததும் “அங்கிள் எப்போதிலிருந்து..?” என்று அவள் ஆரம்பிக்க நாளையிலிருந்து வந்துவிடுவார்கள் என்றார் அவர்.

“ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்... அப்போ நான் புறப்படுறேன்” என்று நிம்மதியுடன் விடைபெற்றாள்.

மாலை சற்று சீக்கிரமாகவே வீடு திரும்பிய சஞ்ஜீவை அழைத்தார் பார்வதி.

“என்னம்மா?” என்று அருகில் சென்றவனிடம் சோபாவைக் காட்டி தன்னருகில் அமரச் சொன்னார்.

அமர்ந்தவன் “ஏதாவது முக்கியமான விஷயமாம்மா?” என்று கேட்டான்.

தாயாரிடம் அக்கறையாகவே கேட்டபோதிலும் அவன் முகத்திலிருந்த இறுக்கம் ஒரு தாயாக அவருக்கு சங்கடத்தை அளித்தது.

அவனது கையைப் பிடித்தபடி “ஏன்ப்பா... நீ இப்படி மாறிட்டே?” என்று அவர் கேட்க, புரியாமல் “எப்படி?” என்று கேட்டான் மகன்.

“எப்போதும் உன் மனதில் எதையோ போட்டு குழப்பிக் கொண்டிருப்பது போல... சட்டென்று கோபப்படுகிறாய்... என்னிடம் கூட முன்போல அமர்ந்து பேசுவதில்லை..” என்று அவர் அடுக்கவும், “என்னம்மா என்னைப் பற்றி தெரிந்த நீங்களே இப்படிக் கேட்கிறீர்கள்?” என்றான் அவன்.

“இல்லை கண்ணா... நான் உன்னிடம் குறை காண வேண்டுமென்றோ உன் மனதைப் பற்றி அறியாமலோ இதை சொல்லவில்லை... நாங்கள் ஏழு வருடம் தவமிருந்து பெற்ற பிள்ளை நீ... எங்கே என்னைப் போல குறையுடன் பிறந்துவிடுவாயோ என்று ரொம்பவும் பயந்திருந்தேன். அப்படி இல்லாமல் எங்கள் குறை தீர்க்கும் மருந்தாய் வந்ததாலேயே உனக்கு சஞ்ஜீவன் என்று பெயர் வைத்தோம். நீ நன்றாக பிறந்துவிட்டதாலேயே அடுத்த குழந்தையும் நன்றாக இருக்கும் என்று நம்பி மறுகுழந்தை பெற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை எங்களுக்குை. ஒற்றைப் பிள்ளையாக இருக்கும் உன் வாழ்வு நன்றாக இருக்க வேண்டுமென்று நாங்கள் ஆசைப்படக்கூடாதா?” என்று கண்ணீர் விட்டபடி “சொல்லுப்பா... ஏன் எங்களுக்கு இப்படி ஒரு கஷ்டத்தைக் கொடுக்கிறாய்?” என்று கேட்டார்.

அவ்வளவு நேரமும் தாயாரின் பேச்சை அமைதியாகக் கேட்டிருந்துவிட்டு அவர் ஏன் என்று கேட்டதும் ஆறுதலாக அவரது கையைப் பிடித்து சோபாவிலிருந்து இறங்கி அவரருகே மண்டியிட்டு அமர்ந்து “அம்மா... நான் நித்யாவை எப்படி கல்யாணம் செய்தேன் என்று தெரியுமல்லவா?” என்று கேட்டான்.

‘அவர் எப்படி மறப்பார்?’

அவனது தந்தை எப்படி யாருமற்ற பார்வதியை ஊனமுற்றவர் என்று தெரிந்தும் அவரது குடும்பத்தார் அதைக் காரணம் காட்டி மறுத்தபோதும் அவர்களை எதிர்த்து காதல் மணம் புரிந்தாரோ... அதேபோல ‘ஒரு ஆதரவற்ற பெண்ணிற்குத்தான் தானும் வாழ்வு கொடுக்க வேண்டும்’ என்ற எண்ணம் மகன் மனதிலிருப்பதை அவர் முன்பே அறிந்திருந்தார்.

அதனாலேயே அவனுக்குத் திருமண வயது வந்ததும் தந்தை வழி உறவினர்கள் நான் நீ என்று பெண் கொடுக்க வந்தும் வேண்டாம் என்று மறுத்துக் கொண்டிருந்தவன்... திடீரென்று ஒருநாள் தன் அலுவலகத்திற்கு டொனேஷன் கேட்டு வந்த அனாதைப் பெண் நித்யாவை திருமணம் செய்ய சம்மதம் கேட்டபோது பெரியவர்கள் மறுக்கவில்லை. திருமணத்தை வெகு சிறப்பாகவே நடத்தினார்கள்.

அவற்றை நினைத்துப் பார்த்தவர் “எப்படிப்பா மறக்க முடியும்?” என்றார் மகனிடம்.

“சாக வேண்டிய வயதாம்மா அவளுக்கு? நான் அவளை எப்படியெல்லாம் வாழ வைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். என் ஆசைகளையெல்லாம் சிதறடித்த அவளை...” என்று பல்லைக் கடித்த மகனது முகம் மாறவும் பயந்து மகனை உலுக்கியவர், “ஜீவா யாருப்பா...? யாரோ உன் ஆசைகளையெல்லாம் சிதறடித்ததாக சொன்னாயோ... யாரது?” என்று கேட்டார்.

தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டதை உணர்ந்தவன் “இல்லைம்மா... இன்றைக்கு ஆபீஸில் ஒரு பிரச்சினை. அதையே நினைத்துக் கொண்டிருந்தேனா அந்த கோபத்தில் ஏதோ பேசிவிட்டேன். நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் நிச்சயமாக நீங்கள் ஆசைப்பட்டபடி வாழ்வேன்...” என்றவன், “இப்போது ஒரு காபி கிடைக்குமா?” என்று கேட்டான்.

மகன் கொஞ்சமேனும் முன்போல நடந்து கொள்வதில் மகிழ்ந்தவர் “இதோ... இப்பவே கொண்டு வரச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு “சின்னமணி...!” என்று குரல் கொடுத்தார்.

தாயார் வேலையாளை அழைத்ததும் எழுந்தவன் “நான் மாடிக்குப் போறேன் அங்கே கொண்டு வரச் சொல்லுங்கள்” என்று மாடிக்குச் சென்றான்.

மகனுக்கு காபி அனுப்பிவிட்டு அவன் சொன்ன 'நான் உங்கள் விருப்பப்படி வாழ்வேன்' என்ற எண்ணத்திலே அமர்ந்திருந்தவர் “அத்தை!” என்ற குரலில் கலைந்தார்.

வந்தவள் சங்கரனின் தமக்கை கல்யாணியின் மகள்.

“வாம்மா கல்பனா... எப்படி இருக்கிறாய்? வீட்டில் எல்லாரும் சௌக்கியமா?” என்று விசாரித்தபடி தன்னருகே அமரச் சொன்னவரின் அருகில் அமராமல் “எல்லாரும் நல்லா இருக்கிறோம்...” என்று பதிலளித்துவிட்டு “அத்தான் எங்கே?” என்று கேட்டாள்.

அவன் அறையில் இருப்பதாகச் சொன்னதும் “அப்போ... நான் மேலே போய்ப் பார்க்கிறேன்” என்று மாடிக்குச் சென்றாள்.

நித்யாவின் மறைவுக்குப் பிறகு கல்பனா அடிக்கடி வந்து செல்கிறாள். சஞ்ஜீவன் சம்மதித்தால் அவனைத் திருமணம் செய்யவும் தயாராக இருக்கிறாள். ஆனால் சம்மதம் தெரிவிக்க வேண்டியவன் அவளைப் பற்றிய பேச்சை எடுத்தாலோ, அவளைக் கண்டாலோ எழுந்து சென்றுவிடுவான்.

மேலே சென்றவள் மெதுவாக அவனது அறைக் கதவைத் தட்டினாள்.

திறந்து பார்த்தவன் அவளைக் கண்டதும் “என்ன?” என்றான் எரிச்சலை மறைக்காமலே.

அவனுக்கு தன் வருகைப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்தும் உணராதவள் போல உள்ளே சென்று “அத்தான்... அன்றைக்கு நான் ஷாப்பிங் கூட்டிப்போக கேட்டபோது வேலை இருப்பதாகச் சொன்னீர்கள். இன்றைக்கு நீங்கள் ப்ரீயாகத் தானே இருக்கிறீர்கள். வாங்களேன்... போகலாம் ப்ளீஸ்..!” என்று அழைத்தாள்.

முதலில் மறுத்தவன் வெளியே சென்று வருவது மனதிற்கு சற்று புத்துணர்ச்சியாக இருக்கும் என்றெண்ணி “நீ கீழே போய் வெயிட் பண்ணு... நான் பிரஷ்ஷாயிட்டு வர்றேன்” என்று அவளை அனுப்பிவிட்டு ரெடியானான்.

ஹாலுக்குச் சென்று அத்தையுடன் பேசிக் கொண்டிருந்தவள் ஐந்தே நிமிடத்தில் அவன் வந்துவிடவும் பார்வதியிடம் சொல்லிக் கொண்டு அவனுடன் நடந்தாள்.

இருவரும் சேர்ந்து செல்வதைக் கண்டவர் மகனது மனதை சீக்கிரம் மாற்றும்படி இறைவனிடம் வேண்டிக் கொண்டார்.

காரில் அமர்ந்ததும் “எங்கே போக வேண்டும்?” என்று கேட்டவனிடம், அவள் அந்தக் கடையின் பெயரைச் சொல்ல கார் விரைந்தது.
சத்யா வேலை செய்யும் கடையா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top