Thendralai Thoothuvittu - Ep 11

Advertisement

Kalaarathi

Well-Known Member
அத்தியாயம் 11

பரிசோதித்த டாக்டர் “விஷம் இரத்தத்தில் கலக்கவில்லை... அதனால் பயப்பட ஒன்றுமில்லை...” என்று சொல்லிவிட்டு சிகிட்சையை ஆரம்பிக்கலானார்.

எதற்கும் இன்று ஒருநாள் மட்டும் தங்கள் கண்காணிப்பில் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்.

சங்கரன் டாக்டருக்கு நன்றி தெரிவிக்க¸ “நாங்க எங்க கடமையைத்தான் செய்தோம்...” என்றார் உண்மையான கடமை உணர்வுடையவராக.

“கடமையாகவே இருந்தாலும் எங்களுக்காக பரிசோதனையை துரிதமாக முடித்தீர்களே... அத்தோடு எங்கள் பொறுப்பிலிருக்கும் பெண்ணிற்கு ஏதேனும் ஆகிவிட்டால் அவள் தாயாருக்கு எப்படி நாங்கள் பதிலளிக்க முடியும்” என்று தன் கவலையைக் கூறினார்.

“ஒன்றும் பிரச்சினையில்லை சார். நீங்கள் சரியான நேரத்திற்கே கொண்டு வந்ததால் இந்த அளவோடு போனது. விஷம் ஏறியிருந்தால்தான் நிலைமை மோசமாகியிருக்கும்” என்று சொல்லிவிட்டுச் சென்றார் மருத்துவர்.

சத்யாவிற்கு மயக்கம் தெளிந்துவிட்டது. கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது.

அருகில் அமர்ந்திருந்த பார்வதி¸ தலையை வருடியவாறே “இப்போ எப்படி இருக்கிறது சத்யா” என்று கேட்டார்.

“என்னை மன்னிச்சிடுங்கம்மா... நான் உங்களுக்கு அதிக சிரமம் கொடுத்துவிட்டேன்” என்று வருந்தினாள்.

மயக்கம் தெளிந்துவிட்டதை அறிந்த சங்கரனும் அவளைக் காண வந்தார். இப்போது தன்னைக் கண்டால் அவளது ரியாக்ஷன் எப்படியிருக்குமோ¸ உடலுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ¸ என்றெண்ணிய சஞ்ஜீவன் பெற்றோரை கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுத் தான் சென்றதும் காரை அனுப்புவதாகக் கூறி கிளம்பிவிட்டிருந்தான்.

நேரமாகி விழித்து எழுந்த கல்பனா ரூமைவிட்டு வெளியே வந்தபோது வீட்டில் ஒருவரும் இல்லை எனவும்¸ இவ்வளவு காலையில்... மணி என்ன என்று பார்த்தபோது கடிகாரம் பத்தைக் காட்டியது.

‘அட இவ்வளவு நேரமாகிவிட்டதா¸ ஆனால் எல்லாரும் அப்படி எங்கே போய்விட்டார்கள்’ என்றெண்ணியவள் சென்று சமையல் செய்யும் தாமரையைக் கேட்டாள்.

விபரம் அறிந்ததும் ‘இந்த சத்யா என்னதான் நினைத்திருக்கிறாள்¸ எல்லோரையும் அவளுக்கு பணிபுரிய வைக்கிறாளா¸ இருக்கட்டும் இதற்காக அவளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்’ என்று உறுதி எடுத்தாள்.

வீடு வந்த சஞ்ஜீவனின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் சத்யாவையே சுற்றி வந்தது.
அவளுக்கு விஷம் ஏறி அவள் இறந்திருந்தால் அவளைப் பழிவாங்க இயலாது. அவளுக்குத் தான் எந்தவொரு கஷ்டத்தையும் ஏன் அனுபவித்தோம்¸ அனுபவிக்கப்போகிறோம் என்பதே தெரியாமல் போய்விடும். அவள் உயிருடனிருந்தால் தான் இதெல்லாம் நடக்கும்... இதையெல்லாம் தெரிந்து தான் செய்த தப்பைப் புரிந்துகொண்டு அவள் வாழும் வாழ்வையே வெறுக்க வேண்டும்.

ஆமாம்¸ இதுதான் சரி. இனி அவள்மேல் எந்தவிதமான பரிதாபமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு குளித்துக் கிளம்பி வெளியே சென்றான்.

வெளியே செல்வதற்காகப் புறப்பட்டு வந்தவனைக் கண்டதும் “அத்தான்... நீங்கள் வெளியே போவதாக இருந்தால் என்னையும் உடன் அழைத்துச் செல்கிறீர்களா¸” என்று கொஞ்சிப் பேசினாள்.

“சாரி கல்பனா¸ நான் என் பிரண்ட்ஸை பார்க்கப் போகிறேன். அதனால நீ அப்பாம்மா வந்த பிறகு டிரைவரையோ இல்லை அம்மாவையோ கூட்டிட்டுப் போ” என்றவன் போய்விட்டான்.

“இன்னும் எத்தனை நாளைக்குத்தான் என்னை அவாய்ட் பண்ணுவீர்கள் என்று பார்க்கிறேன்” என்று போகும் காரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்று இரவே சத்யா மருத்துவமனையிலிருந்து வந்தாயிற்று. வந்தவளை இரண்டு நாட்கள் தங்களுடன் தங்குமாறு வற்புறுத்தினர் தம்பதியினர். அவளும் உடல்நிலையைப் பொறுத்து சம்மதித்தாள். வேலைக்காரர்களும் அவளை மரியாதையுடனே நடத்தினர்.

கல்பனா எல்லோரிடமும் திமிராகப் பேசுவதால் யாருக்கும் அவளைப் பிடிப்பதில்லை. இது எல்லாமாக சத்யாவின்மேல் அவளது கோபத்தை அதிகரித்தது.

அன்று பார்வதியம்மாளிடம் “உங்கள் மகனிடம் நன்றி சொல்ல வேண்டும்¸ அவரைப் பார்க்க முடியுமா அம்மா¸” என்று கேட்டாள் சத்யா.

“இப்போது ஆபீஸ் அறையில்தான் இருப்பான். போ... போய் பார்த்துவிட்டு வா...” என்று அனுப்பினார்.

கதவைத் தட்டியவளுக்கு “வரலாம்” என்று உடனே பதில்வர உள்ளே நுழைந்தாள். அவன் அலமாரியில் ஏதோ பைலை தேடிக் கொண்டிருப்பதைக் கண்டவள்¸ “சார் என்ன பைல் தேடுறீங்கன்னு சொல்லுங்க... நான் எடுத்துத் தருகிறேன்” என்று அவனிருந்த பக்கம் சென்றாள்.

குரல் அருகில் வந்துவிட்டதை உணர்ந்து திரும்பினான்.

இவன்!!!

சத்யாவிற்கு தலை சுற்றுவது போல் இருந்தது.

இருந்திருந்து இவன் இருந்த இடத்திற்கேவா வேலைக்கு வந்திருக்கிறேன். கடவுளே இது என்ன சோதனை! எதுவும் பேசாமல் அவள் அப்படியே நிற்க¸ முகத்தருகே சொடுக்கியவன் “ஹலோ!” என்றான்.

அவள் தன்னிலைக்கு வரவும் “எனக்கு ஜே.எம்.டி. குரூப்போட பைல் வேண்டும்” என்றவன் சேரில் அமர்ந்து கொண்டான்.

‘என்ன! இவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லையா..! இல்லை மறந்துவிட்டானா..!’ என்ற குழப்பத்துடனே சென்று அவன் கேட்ட பைலை எடுத்துக் கொடுத்தாள்.

வாங்கிக் கொண்டவனிடம் “நன்றி” என்றாள்.

“எதற்கு?” என்று அவன் பார்க்க¸ “அன்றைக்கு என்னை காப்பாற்றியதற்கு...” என்றாள்.

“ஓ...!” என்று அவன் முடித்துக் கொள்ள¸ அவள் கிளம்பினாள்.

அவள் கதவை நெருங்கியபோது “எப்போது இந்த வேலையை விட்டுச் செல்வாய்?” என்று அவன் குரல் கேட்டது.

அப்படியே நின்றுவிட்டவள் திரும்பினாள். அப்படியென்றால் அவனுக்கு அவளைத் தெரிந்திருக்கிறது... அவன் மறக்கவில்லை.

“ஏன் சார் இப்படி கேட்கறீங்க?”

“ஏன்னா... எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை¸ நீ இங்கு வேலை பார்ப்பதும் பிடிக்கவில்லை” என்றான்.

“இன்றைக்கு இப்படி சொல்பவர் பயோ-டேட்டாவில் என் போட்டோவைப் பார்த்தவுடனே வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமே!” என்றாள் அவள்.

“அதை நான் பார்க்கவில்லை¸ பார்த்திருந்தால் நிச்சயம் நீ இங்கு வர சம்மதித்திருக்க மாட்டேன். ஆனால் வந்துவிட்டதால் அதைப்பற்றிப் பேசி பயனில்லை¸ அதனால் நீ சீக்கிரமே இங்கிருந்து கிளம்பிவிடுவது நல்லது” என்றான்.

அவனைப் பார்த்தவள் “முயற்சி செய்கிறேன்” என்றாள்.

அன்று ஜவுளிக்கடையில் முகத்துக்கு எதிரே அவனைப் பார்த்தபோது வியந்த அவளது விழிகளில் இன்று தெரிந்த வெறுமையோ வேறு எதுவுமோ அவனை பாதித்தது. அது எதனால் என்று அவன் யோசிக்கவில்லை.

வெளியே வந்தவளை அழைத்த பார்வதி ஏதேதோ கதை பேசினார். அவர் சொன்னவற்றிற்கு காது கொடுத்திருந்த சத்யாவிடம் அவர் என்ன பேசினாரென்று கேட்டால் தெரியாது.

இவர்களைக் கவனித்த கல்பனா வந்து “அத்தை என்ன நீங்க எப்போதும் அவளையே கவனிக்கிறீங்க¸ உங்களுக்கு சொந்தம் நானா..? இல்லை இவளா?” என்று சத்யாவை முறைத்துப் பார்த்தவாறே கேட்டாள்.

வந்தவளின் கண்களில் இருந்த வெறுப்பைக் கவனித்தவள்¸ தன்னை விரும்பாதவர்கள் இருக்கும் இடத்தில் எப்படி அமைதியாக வேலை பார்க்க முடியும் என்று யோசிக்கலானாள்.
அதற்குள் பார்வதி “இதென்ன பேச்சு கல்பனா¸ சத்யா நான் அழைத்து வந்த பெண். இனி இப்படி என்னிடம் வந்து நானா... அவளா... என்று கேள்வி கேட்காதே” என்று அதட்டினார்.

“ஏன் அத்தை கோபப்படுறீங்க?” என்றாள் சுருதி இறங்க.

“ஏன் என்றால் சத்யா எனக்கு மிகவும் முக்கியமானவள்¸ அவளை என்ன சொன்னாலும் அது என்னை சொன்னது போலத்தான் புரிந்ததா? போ... போய் சாப்பிட்டுவிட்டு வேறு வேலை இருந்தால் பார்” என்றதும்¸ “ம்...” என்று அமைதியாகத் திரும்பினாள்.

அவளது முகம் மட்டும்தான் அமைதியாக இருந்ததே தவிர மனம் கொதித்துக் கொண்டிருந்தது. ‘ஏய் நொண்டி கிழவி! என்னையே விரட்டுறியா? உன் பையன் மட்டும் என்னை கல்யாணம் பண்ணட்டும். அப்புறம் என்கிட்ட இந்த மாதிரி பேசிப்பார்... உன் வாயிலயே போடுவேன்’ மனம் கனன்றாலும் தன் வயிற்றை காயப்போட்டுவிடாமல் சாப்பிடப் போய்விட்டாள்.

அவள் சென்றதும் சத்யா “நான் இங்கிருந்து போகலாமென்று நினைக்கிறேன் அம்மா” என்றாள்.

“என்ன சத்யா இது¸ அவ பேசினதை வைத்து இந்த முடிவெடுத்தாயா?” என்று கேட்டார்.

“சேச்சே... அப்படி எல்லாம் இல்லைம்மா. நீங்க என்மேல் ரொம்ப பாசம் வைக்கிறீங்க¸ அப்புறம் நான் வேறிடம் போகும்போது ரெண்டுபேருக்குமே கஷ்டமாக இருக்கும். அதனால தான் வேறு வேலை ஏதாவது தேடிக்கொண்டு சென்றுவிடுவது நல்லது என்று...” என்று முடிக்க முடியாமல் இழுத்தாள்.

“ஒருவரிடம் அன்பைக் காட்டுவதுகூட தப்பா சத்யா?” என்று கேட்டார் வலியுடன்.

“இல்லைம்மா... நீங்க இப்படி என்மேல அளவுக்கதிகமாக அன்பு காட்டுறது... பின்னால் இங்கிருந்து நான் பிரிந்து செல்லும்போது அந்த வலியை என்னால தாங்க முடியாதும்மா¸ அதனால்தான்” என்றாள்.

அவரது கண்களில் நீர் நிறைந்துவிட்டது. “பைத்தியம்... நாளைக்கு இப்படியாகும் என்று இன்றே இப்படி ஒரு தப்பான முடிவை எடுப்பாயா?” என்று கேட்டு சிரித்தவர்¸ “அப்படியெல்லாம் ஒரு வலியையும் நீ அனுபவிக்கமாட்டாய். இப்போதைக்கு இந்தப் பேச்சையே எடுக்காதே” என்று முடித்துவிட்டார்.

“நான் கொஞ்சநேரம் தோட்டத்தில் இருந்துவிட்டு வருகிறேன்மா” என்று கிளம்பினாள்.

மூன்று விதமான மனிதர்களைப் பார்த்தவளுக்கு மூச்சடைப்பது போலிருக்க¸ அந்த உணர்விலிருந்து விடுபடுவதற்காக தோட்டத்தை அடைந்தவள்¸ அங்கிருந்த ஒரு இடத்தில் அமர்ந்தாள்.

இவர்களது பேச்சைக் கேட்டிருந்த சஞ்ஜீவனும் அவளைத் தொடர்ந்து தோட்டத்திற்கு வந்தான்.

புல்வெளியில் போடப்பட்டிருந்த பெஞ்ச்சில் அமர்ந்தவள்¸ முகத்திற்கு கால்களால் முட்டுக் கொடுத்தவாறு கண்மூடியிருந்தாள். உள்ளே யோசனை ஓடியது. ‘அவனுக்கு... சஞ்ஜீவனுக்கு என்னை ஏன் பிடிக்கவில்லை¸ அவன் இவ்வளவு வெறுக்குமளவு அப்படி என்ன தவறு செய்தேன்?’

“ஏய்..!” என்ற குரலில் கண்களைத் திறந்தவளுக்கு எதிரே சஞ்ஜீவன் தான் நின்றிருந்தான்.

“சார் என் பெயர் சத்யா¸ என்னை அப்படியே கூப்பிடுங்க” என்றாள்

“இப்ப அது ரொம்ப முக்கியம். வேலையைப் பார்க்காமல் இது என்ன...¸ பகலிலே தூக்கமா?” என்றான் கடுமையாக.

“இல்லை சார்¸ அங்கே நீங்கள் இருந்த...” என்று அவள் சொல்லும்முன்¸ “ஏன் நான் இருந்தால் உனக்கென்ன¸ வேலை செய்ய முடியாதா?” என்று கேட்டான்.

அவள் இப்போது அமைதியாகவே இருக்க “ஷோரூம்¸ ஹோட்டல் என்று தினம் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் இடத்தில் அலங்காரமாக வேலை பார்த்தவளுக்கு வீட்டில் அதுவும் பெரியவர்கள் இருக்குமிடத்தில் வேலை பார்க்க பயமா¸ அப்படி என்ன நடந்துவிடும் என்று இந்த பயம் வேண்டிக்கிடக்கு?” என்று அதிகமாகவே கோபப்பட்டான்.

“என்ன வேலை சார்¸ சொல்லுங்க... செய்கிறேன்” என்றாள்.

“தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களுக்கு போனஸ் வழங்குவது பற்றி குறிப்பெடுக்க வேண்டும்¸ அப்புறம் வீட்டில் ஒரு பங்ஷன் வரப்போகிறது¸ கம்பெனி ஆண்டுவிழா நடக்கும். அதற்கான ஏற்பாட்டையெல்லாம் செய்ய வேண்டும்” என்று அவன் சொல்ல¸ ஆபீஸ் அறைக்குச் சென்றனர் இருவரும்.

அவன் ஒவ்வொன்றாக சொல்லச் சொல்ல கவனமாக செய்து முடித்தாள். அவளது கவனம் முழுவதும் லேப்டாப்பில் இருக்க¸ அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கவனம் வேலையில் இல்லை.

‘அப்பா சொன்னது போல் இவள் வேலையில் மும்மரமாகத்தான் இருக்கிறாள். இருந்தாலும் இப்படி இவள் தினமும் என் பார்வையில் பட்டுக்கொண்டிருந்தால் என் எண்ணம் எப்படி நிறைவேறும்?’ என்று அவன் யோசனை ஓடியது.

அவன் கொடுத்திருந்த அலுவலை முடித்தவள் “அடுத்து என்ன சார்?” என்று கேட்டதை அவன் கவனிக்கவில்லை. பதிலில்லாமல் போக அவனை நிமிர்ந்து பார்த்தவள்¸ தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டு “சார்!” என்று சற்று அழுத்தம் கொடுத்து மீண்டும் அழைத்தாள்.

அதன் பின்னர் அவள் ஓய்வெடுக்க நேரமில்லாது நிறைய வேலைகளைக் கொடுத்தான்.
அவனது செல்போனில் அழைப்பு வர “நீ வேலையைப் பார்” என்று அவளைப் பணித்துவிட்டு வெளியே சென்றான்.

அவன் வெளியே சென்றதும்... அப்போது பார்த்த அவனது பார்வையில் என்ன இருந்தது என்று யோசித்தவளுக்கு நிச்சயமாக எதுவுமே புரியவில்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top