Ramadan 2020- Prophet Yunus - day 30

fathima.ar

Well-Known Member
#1
கப்பல் ஒன்று தயாராக இருப்பதும் தெரிந்தது. அந்த கப்பலில் ஏறி வேறு எந்த நாட்டிற்காகவது சென்று நிம்மதியாக வாழலாம் என்று எண்ணிய அவர்கள், மாலுமியிடம் அனுமதி கேட்டு அதில் ஏறிக் கொண்டார்கள்.
அவர்களின் கள்ளங்கபடமற்ற தோற்றமும், அருள் சுரக்கும் முகமும் அங்குள்ள எல்லோரது உள்ளங்களையும் கவர்ந்து விட்டது. அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதிலும் மிகவும் அக்கறைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். கப்பல் நடுக்கடலில் நின்றுவிட்டது. கப்பலின் மாலுமி கப்பலை முழுமையாக சோதித்துப் பார்த்தான். அதில் எவ்விதக் கோளாறும் இல்லை என்று தெரிந்தது.

அக்காலத்தில் ஒரு எஜமானுக்கு கட்டுப்படாதவர் தெரியாமல் ஓடிவந்து கப்பலில் ஏறிக் கொண்டாலும் அந்த கப்பல் நடுக்கடலில் நின்றுவிடும். அதன்அடிப்படையில் மாலுமி ‘உங்களில் யாராவது ஒருவர் உங்கள் எஜமானுக்கு கட்டுப்படாமல் இங்கு வந்து ஏறிக் கொண்டிருக்கிறீர்களா? அவர் இந்த கப்பலை விட்டும் அப்புறப்பட்டு விடுங்கள். அந்த ஒருவருக்காக இக்கப்பலிலுள்ள அனைவருக்கும் ஆபத்து வந்துவிடும் என்றான்.
சிறிது நேரம் வரை கப்பலில் ஒரே அமைதியாக இருந்தது. இறுதியி;ல ஓர் ஓரத்தில் அமர்ந்திருந்த யூனூஸ் அலைஹிஸ்ஸலாம்அவர்கள் நான் தான் அந்தக் குற்றவாளி. என் எஜமான் இட்ட கட்டளையை நிறைவேற்றாது அவனது அனுமதியின்றி ஓடோடி வந்து இக்கப்பலில் ஏறிக் கொண்டேன். தயவு செய்து என்னைத் தூக்கி கடலில் எறிந்து விடு’ என்று சொன்னார்கள்.
கப்பலில் உள்ள அனைவரும் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். அவர்கள் யூனூஸ் நபியின் கூற்றை நம்பவில்லை. என்னுடைய கூற்றில் நம்பிக்கை ஏற்படவில்லையா? நான் சொல்வது பொய் என்று நினைக்கிறீர்களா? என் எஜமானின் உத்தரவின்றி நான் ஓடிவந்தது உண்மைதான் என் ஒருவனுக்காக உங்கள் அத்தனை பேரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். நான் சொல்வது உண்மையா? பொய்யா? என்பதை சீட்டு எழுதி குலுக்கிப் போட்டு அதன்படி முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.
அவர்கள் சொன்னபடி சீட்டை எழுதிப் போட்டு குலுக்கிப் பார்த்து எடுத்ததில் உண்மை என்றே வந்தது. பலதடவை போட்டும் அப்படியே வந்தது. இறுதியாக மாலுமியே போட்டு பார்த்தான். அப்பவும் அப்படியே வந்தது. ஒரு மனிதப் புனிதர் மீது இவ்வாறு பழியை சுமத்தி அவரை கப்பலை விட்டு எப்படி அப்புறப்படுத்துவது என்று தயங்கிக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த யூனூஸ் நபி அவர்கள் ‘உங்கள் அனைவரின் தயக்கத்தையும் நான் புரிந்து கொண்டேன். இத்தகைய குற்றத்தை நான் செய்திருக்க மாட்டேன் என்றுதானே நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள். ஆனால் அப்படியில்லை. நான் என் எஜமானிடம் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவந்தது உண்மைதான். என் ஒருவனுக்காக நீங்கள் ஆபத்தில் சிக்குவதை நான் விரும்பவில்லை. எனவே நான் இக்கப்பலை விட்டு ஒழிந்து போகிறேன்’ என்று சொல்லியவாறே யாரும் எதிர்பாராத வண்ணம் கப்பலிலிருந்து கடலில் குதித்து விட்டார்கள்.
அவர்கள் கடலில் விழுவதற்கும் அங்கு ஒரு பெரிய மீன் தனது வாயை அகலமாக திறந்து கொண்டு அவர்களை விழுங்குவதற்கும் மிகவும் பொருத்தமாக இருந்தது. கப்பலில் இருந்தவர்கள் அதனைப் பார்த்து அலறினார்கள். ஆனால் அல்லாஹ் விதித்தபடி அனைத்தும் நடந்து முடிந்து விட்டது.

யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த மீன் வயிற்றில் நாற்பது நாட்கள்
இருந்தார்கள் என பெரும்பாலான சரித்திர ஆசிரியர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்..

யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை உணவாக்கிக் கொள்ளக் கூடாதென்று அந்த மீனுக்கு அல்லாஹ் உத்திரவு பிறப்பித்து விட்டான். அல்லாஹ் மீனின் வயிற்றை ஒரு சிறைக்கூடம் போல ஆக்கியிருந்தான். அவர்களுக்கு அது ஒரு கண்ணாடி கூடம் போன்றிருந்தது. அங்கிருந்தவாறே கடலுக்குள் அல்லாஹ்வின் படைப்பினங்கள் அனைத்தையும் கண்டு வியந்தவாறு தஸ்பீஹ் ஓதிக் கொண்டிருந்தார்கள்.
இந்த மீனுக்குப் பெயர் தவுராத் வேதத்தில் ‘ரகா’ என்றும் ஜபூர் வேதத்தில் ‘மாலூயா’ என்றும் இன்ஜீல் வேதத்தில் ‘மூகினா’ என்றும் திருக்குர்ஆனில் ‘நூன்’ என்றும் காணப்படுகிறது. இந்த மீன் யூனூஸ் நபியை சுமந்து கொண்டு ஏழு கடல்களையும் சுற்றி வந்தது. அந்தளவுக்கு ஆறாயிரம் வருடங்கள் ஒரு மீன் சுற்றித் திரியும் அளவுக்கு ஒரு குறுகிய காலத்தில் சுற்றித் திரிந்ததாக மஆலிமுத் தன்ஜீல் என்ற நூலில் குறிப்பு ஒன்று காணப்படுகிறது.

அல்லாஹ்வின் அனுமதியின்றி நைனுவாவை விட்டு ஓடிவந்ததையும் அதன் காரணமாக மனைவி மக்களை பறிகொடுத்து விட்டதையும் பிறகு கப்பலில் ஏறி பின் அதிலிருந்து குதித்து மீன் வயிற்றுக்குள் சென்றுவிட்டதையும் ஆகிய எல்லாச் சம்பவங்களையும் ஒருசேர நினைத்து உருக ஆரம்பித்தார்கள். மீனின் வயிற்றுக்குள்ளேயே அழுது புலம்பி, ஸஜ்தாவில் விழுந்தார்கள். அல்லாஹ்விடம் உருக்கமாக பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தார்கள்.

இதன்காரணமாக அல்லாஹ் அவர்களின் வேண்டுதல்களை ஏற்றுக் கொண்டு அவர்களை வெளியே கக்கி விடும்படி மீனுக்கு உத்திரவிட்டான். உடனே அந்த மீன் கடற்கரையோரமாக வந்து அவர்களை வெளியே கக்கியது. இந்த இடம் ஈராக்கின் தலைநகரான பாக்தாதிலிருந்து சுமார் 170கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கூஃபா நகரிலுள்ள புராத் நதிக் கரையிலுள்ளது. இந்த இடத்தை மக்கள் மகாமே யூனூஸ் என்று அழைக்கிறார்கள்.

இவற்றைஅல்லாஹ் திருக்குர்ஆனில் 21 : 87>88ல் கூறுகிறான்.

இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது. (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”என்று பிரார்த்தித்தார்.

எனவே.நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம். –அல்குர்ஆன் 21 : 87-88


மீன் வயிற்றிலிருந்து வெளியேறிய யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மீனின் வயிற்றிலிருந்து கொடிய சூட்டின் காரணமாக தலைமுடி, தாடி முடி மற்றும் உடலின் எல்லாப் பாகங்களிலிருந்த முடிகள் அனைத்தும் உதிர்ந்து போயிருந்தன. அவர்களால் எழுந்து உட்காரவோ, நடமாடவோ முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையைப் போக்க அல்லாஹ் அவர்கள் அருகில் ஒரு சுரைக் கொடியை முளைப்பித்தான் அது அவர்களுக்கு நன்றாக நிழல் கொடுத்தது.

காலையிலும்,மாலையிலும் ஆடு ஒன்று மற்ற அறிவிப்பின்படி மான் ஒன்று பால் கொடுத்து வந்தது. இப்படியே நாற்பது நாட்கள் ஓடிவிட்டன.
நாற்பது நாட்களுக்குப் பிறகு யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தெம்பு ஏற்பட்டது. எழுந்து உட்காரவும், நடக்கவும் முடிந்தது. முகத்திலும், தலையிலும், உடலிலும் முடி முன்போல் நன்றாக வளர்ந்து காணப்பட்டது.


மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் – அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர். நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளிந்தோடிய போது -அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் – இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).ஆகவே, அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்; ஒரு மீன் விழுங்கிற்று.ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து – தஸ்பீஹு செய்து – கொண்டிராவிட்டால் – (மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை,அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார். ஆனால்,அவர் நோயுற்றிருந்த நிலையில்நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம்.மேலும் நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம்.
என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் 37:139-147வரைஅழகாக கூறுகிறான்.


ஒருநாள் பகலில் அவர்கள் சற்றுக் கண்ணயர்ந்து மீண்டும் எழுந்தபோது அவர்களுக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்த சுரைக் கொடி காய்ந்து போய்,அதன் இலைகள் எல்லாம் கொட்டிக் கிடந்தன. திடுக்கிட்டு விட்ட ஹழ்ரத் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிகவும் மனவேதனைப் பட்டார்கள். உடனே அல்லாஹ் அவர்களுக்குக் கீழ்வருமாறு வஹீ அறிவித்தான்.
‘ஒரு கொடி சாய்ந்து விட்டற்காக நீங்கள் இவ்வளவு மனவேதனைப் படுகிறீர்களே! அதனை நீங்கள் முளைப்பிக்கவும் இல்லை. அதனை வளர்க்கவும் இல்லை. ஆனால் நான் படைத்து, வளர்த்து வந்த ஓரிலட்ச நைனுவா மக்களை அழிந்து போகச் சாபமிட்டு ஓடி வந்து விட்டீரே!

உங்களது இச்செயல் எனக்கு எவ்வளவு வேதனையளித்திருக்கும் என்று நீங்கள் எண்ணிப் பார்த்தீரா?’ என்று.
அவர்களுக்கு காலையிலும் மாலையிலும் பால் கொடுத்து வந்த அந்த ஆடும் தனது வருகையை நிறுத்திக் கொண்டது. இதனால் அவர்களுக்கு கடும்பசியும், தாகமும் வாட்டி வதைத்தது. இந்தச் சமயத்தில் அவர்களை அல்லாஹ் நைனுவா நகருக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு நற்போதனை புரிந்து வருமாறு மீண்டும் பணித்தான்.


அல்லாஹ்வின் உத்திரவிற்கு பணிந்து அவர்கள் நைனுவா நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
வழியில் அவர்கள் தங்கள் மனைவி, இரு மக்களையும் சந்தித்தார்கள். அவரது மனைவியை ஒரு சிற்றூர் அரசன் பலாத்காரமாக அபகரித்துச் சென்றிருந்தான். ஆனால் அம்மாதரசியை அவனால் தீண்ட முடியவில்லை.


இதனால் அந்த அம்மையாரை நைனுவா நகருக்கே திருப்பி அனுப்பி வைத்து விட்டான். வழியில் யூனூஸ் நபி அவர்கள் தம் மனைவியை கண்டு தம்மோடு சேர்த்துக் கொண்டார்கள். அதன்பிறகு ஓநாய் கவ்விச் சென்ற மூத்தமகன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். அவனையும் அடையாளம் கண்டு தம்மோடு சேர்த்துக் கொண்டார்கள். மூவரும் சேர்ந்து போய் கொண்டிருக்கும்போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைய மகனையும் சந்தித்து அவரையும் தம்மோடு சேர்த்துக் கொண்டார்கள்.
மிகவும் மகிழ்ந்த அவர்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் நன்றி செலுத்தி புகழ்ந்தார்கள். நைனுவா நகரை நெருங்கியதும் ஹழ்ரத் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் முதலில் சந்தித்தது ஒரு இடையனை. அவனிடம் நைனுவா நகர் மக்களின் நிலை என்ன என்று கேட்டார்கள்
தாங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று அவன் கேட்டான். அதற்கு யூனூஸ் நபி அவர்கள் விபரங்களை சொன்னதும்,அவன் உடனே ஊருக்குள் ஓடி விரபங்களை தெரிவித்து மக்களையும் அரசனையும் அழைத்து வந்தான்.
தம்மை நோக்கி வந்த கூட்டத்தைப் பார்த்து யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். வந்தவர்கள் நபி அவர்களை சுற்றி வளைத்துக் கொண்டு அன்னாரை புகழ்ந்து பாடவாரம்பித்தார்கள். நைனுவா அரசர்முல்இப் இப்னுல் இர்ஷா யூனூஸ் நபி அவர்களின் கரத்தை பற்றி முத்தமிட்டவாறு தங்களை மன்னித்து அருளும்படியும், தாங்கள் அனைவரும் முஸ்லிமாக மாற தயாராகவிருப்பதாகவும் தெரிவித்தான்.


ஹழ்ரத் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினார்கள். ஓர் இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அன்று இஸ்லாத்தை தழுவினார்கள் என்று ஓரு குறிப்பு காணப்படுகிறது.


ஹழ்ரத் யூனூஸ்அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீனின் வயிற்றிலிருந்து வெளிப்பட்டு சுமார் 31 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்து தமது 60 ஆவது வயதில் இப்பூவுலகை நீத்து கூஃபாவில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement