Ramadan 2020- Prophet Yunus - Day 29

Advertisement

fathima.ar

Well-Known Member
ஹழ்ரத் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வழித்தோன்றலில் வந்தவர்கள். இவர்களது தாயார் பெயர் மத்தா என்றும் பதூரா என்றும் கூறப்படுகிறது. தந்தையின் பெயர்தான் மத்தா என்ற கூற்றும் உள்ளது. ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களது வழித்தோன்றலில் வந்தவர்கள் என்ற குறிப்பும் காணப்படுகிறது.


ஈராக் நாட்டின் தஜ்லா நதிக் கரையோரத்தில் உள்ள யூனூஸ் நபி மலை என்ற பெயரில் பிரசித்திப் பெற்ற ஒரு குன்று உள்ளது. அப்பகுதியில்தான் நைனுவா என்ற பெயருடன் ஒரு நகரம் இருந்தது. அந்நகரில் சுமார் ஓரு லட்சம் பேர் வாழ்ந்து கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் விக்கிரகத்தை தொழுபவர்களாக இருந்தனர். அவர்களது பாதங்கள் மூன்றடி நீளமுள்ளதாக இருந்தது.
அக்காலத்தில் அஷ்இயா என்ற பெயருடன் இஸ்ரவேலர்களில் ஒரு நபியாகவும், ரசூலாகவும் இருந்தார்கள். ஹஸ்கியா என்பவர் இஸ்ரவேலர்களின் அரசராக இருந்தார். நைனுவா மக்கள் இஸ்ரவேலர்கள் மீது படையெடுத்து, அவர்களில் பலரைச் சிறைபிடித்துக் கொண்டனர்.


அவர்களை மீட்க அரசரின் ஆணைப்படி, யூனூஸ் நபி அவர்கள் நைனுவா சென்றனர். அந்நகரை முல்இப் இப்னுல் இர்ஷா என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனை நோக்கி யூனூஸ் நபி அவர்கள், ‘தான் பனூ இஸ்ரவேலர்களின் நபி என்றும் நீங்கள் விக்கிரகதொழுகை விட்டுவிட்டு முஸ்லிமாகி விடவேண்டும் என்றும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்ரவேலர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். அந்த அரசன் அவர்களை ஏளனமாகப் பார்த்து சிரித்தான். அவர்களை விடவில்லை.
யூனூஸ் நபி அவர்கள் தொடர்ந்து மூன்று தினங்கள் வரை இதே கோரிக்கையை அரசனிடம் வேண்டியபடி இருந்தனர். அவன் செவிசாய்க்கவில்லை. அதன்பிறகு அரண்மனையை விட்டு வெளியேறி நகருக்குள் சென்று மக்களிடம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தனர். விக்கிரக வணக்கத்தை விட்டுவிடுமாறும், அல்லாஹ்வை மட்டும் வணங்குமாறும் வீதிதோறும் வீடுதோறும் இரவும் பகலும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அம்மக்களில் ஒருவர் கூட இஸ்லாத்தை ஏற்கவில்லை.
இதைக் கண்ட அரசன் நபி அவர்களை சிறையில் அடைத்து உண்ண உணவும் தண்ணீரும் கொடுக்காமல் மிகவும் கொடுமைப் படுத்தினான். ஆயினும் அவர்கள் சிறையில் மிகவும் தெம்பாகவே காணப்பட்டனர். இது சிறைப் பணியாளர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நபி அவர்களிடம் கேட்டதற்கு எனக்கு அல்லாஹ் சுவர்க்கத்திலிருந்து தினமும் தவறாது உணவு தருகிறான். அதனைத்தான் நான் சாப்பிட்டு வருகிறேன் என்று கூறினர்.
சிறைப்பணியாளர்கள் இதைக் கேட்டதும் மிகவும் ஆச்சரியப்பட்டு, நமக்கும் இதுபோல் கிடைக்குமா? என்று கேட்கவாரம்பித்தனர். அல்லாஹ் நாடினால் கிடைக்கும் என்று நபி அவர்கள் பதிலளித்தனர். அவர்களும் இஸ்லாத்தை தழுவ தயாராகிவிட்டனர்.
இச்செய்தி அரசருக்கு தெரியவந்ததும், நபி அவர்களை நடுசந்தியில் நிறுத்தி சிரச்சேதம் செய்ய முடிவெடுத்தான். ஆனால் மந்திரிகள் பயமுறுத்தியதன் காரணமாக அந்த யோசனையை கைவிட்டான். ஆனால் அவர்களையும் அவர்கள் குடும்பத்தார் அனைவரையும் அந்த ஊரைவிட்டே விரட்டி விட்டான். அதன்பிறகு சிலகாலம் வரை பற்பல இடங்களில் சுற்றிக் கொண்டேயிருந்தார்கள். மீண்டும் அல்லாஹ் அவர்களை நைனுவா நகருக்கே செல்லுமாறு வஹீ மூலம் அறிவித்தான். இத்தடவை நைனுவா மக்கள் முன்பை விட அதிகமாக எதிர்க்க ஆரம்பித்தார்கள். கல்லால் அவர்களை அடிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் உடல் முழுவதும் இரணகளமாகிவிட்டது.
இவ்வளவு எதிர்ப்பிக்கிடையிலும் சுமார் 30ஆண்டுகள் அவர்கள் உபதேசித்தார்கள். ஆனால் அதில் இருவர் மட்டுமே அவர்களைப் பின்பற்றியதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.
மனம் சலித்துப் போன யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நைனுவா மக்களை நோக்கி ‘நீங்கள் இவ்வாறு என் வேண்டுகோளுக்கு செவி சாய்க்காது போனால் அல்லாஹ்வின் கோபப்பார்வை உங்கள் மீது இறங்கி விடும். ஜாக்கிரதை’ என்று எச்சரித்தார்கள்.
அதற்கு அந்த நைனுவான மக்கள், உங்களுடைய அல்லாஹ்வின் கோபப்பார்வை எங்களை என்ன செய்துவிடும் என்று கேலி செய்து கைகொட்டி சிரித்தார்கள்.
நெருப்பு மழையை பொழியச் செய்து உங்களையெல்லாம் அழித்து விடுவான் என்றார்கள்.
அப்படியா! அவ்வளவு சக்தி உண்டா அல்லாஹ்வுக்கு? என்று கேலியும் கிண்டலும் செய்தார்கள்.
அதற்கு யூனூஸ் நபி அவர்கள் ‘ அல்லாஹ்வின் சக்தியைப் பற்றி நீங்கள் இவ்வாறு கிண்டலும் கேலியும் பேசுவது நல்லதல்ல. மீண்டும் நான் உங்களை எச்சரிக்கிறேன். இந்த விக்கிரகவணக்கத்தை விட்டொழித்து அல்லாஹ்வுக்கு மட்டும் சிரம்பணிந்து வாருங்கள். இல்லாவிட்டால் இன்னும் 40நாளில் நெருப்புமழை பொழிந்து நீங்கள் அனைவருமே அழிந்து போவீர்கள் ‘ என்று கடும் கோபத்துடன் சொன்னார்கள்.
அதன்பிறகு அவர்கள் அந்நகரை விட்டுப் புறப்பட்டு ஒரு மலை உச்சி மீது அமர்ந்து கொண்டார்கள். அங்கிருந்தவாறே அவர்கள் ‘யாஅல்லாஹ் நான் அந்த நைனுவா மக்களை திருத்த எவ்வளவோ பாடுபட்டேன். அவர்கள் கடைசிவரை திருந்தவே இல்லை. என்னை கொடுமைப்படுத்தினதைப் பற்றி கூட நான் பொருட்டாக நினைக்கவில்லை. ஆனால் உன்னுடைய சக்தியை பற்றி இழிவாக பேசியது பற்றிதான் என்னால் பொறுக்க முடியாமல் போய்விட்டது. அதனால் தான் நாற்பது நாட்களில் நெருப்பு மழை பொழிந்து அவர்கள் எல்லோரும் அழிந்து போவார்கள் என்று சாபமிட்டு விட்டேன்’ என்று சொன்னார்கள். மேலும் யா அல்லாஹ் நான் கூறிய தவணைப்படி நாற்பது நாட்களானதும் அவர்கள் மீது நெருப்பு மழை பொழிந்து நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாயாக! என்ற பிரார்த்தித்தவண்ணம் இருந்தார்கள்.
யூனூஸ் நபி சொன்ன நாற்பது நாட்களில் 39நாட்கள் கழிந்தன. அம்மக்களில் ஒருசிலருக்கு ஒருவித அச்சம் பிடித்துக்கொண்டது. நாற்பதாவது நாள் அரசன் உட்பட மக்கள் அனைவரும் வானத்தைப் பார்த்தவண்ணம் குலை நடுங்கிப் போய் இருந்தனர். பொழுது புலர்ந்து தென்றல் காற்று ஜிலு ஜிலு என்று வீசவாரம்பித்ததுமே எல்லோருக்கும் ஒரே ஆச்சரியமாக போய் யூனூஸ் எவ்வளவு பெரிய பொய் சொல்லி நம்மை ஏமாற்றிவிட்டார். நல்லவேளையாக அவர் சொல்லைக் கேட்காமல் நமது தெய்வங்களை பூஜிப்பதை நிறுத்தவில்லை என்று பேசவாரம்பித்தார்கள்.
இதனைக் கண்ட அரசனுக்கு கோபம் வந்து யூனூஸை பிடித்து தண்டனை கொடுக்க விரும்பி ஊரெல்லாம் அறிவிக்கச் செய்துவிட்டார். சிறிது நேரத்திற்குள் திடீரென சூழ்நிலை மாறத் துவங்கியது. தென்றல் காற்று ஓயத் தொடங்கி, இலேசான உஷ்ணக் காற்று வீசவாரம்பித்தது. போகப் போக அதன் வேகமும் உஷ்ணமும் கூடிக் கொண்டே சென்றது. அடுத்து யாருமே எதிர்பாராவண்ணம் சிவப்பு மேகங்கள் தீப்பிழம்புகள் பொழியத் தொடங்கின.
இத்தகைய பயங்கர நிலை ஏற்பட்ட பிறகுதான் அந்த மக்களுக்கு ஹழ்ரத் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூற்றில் நம்பிக்கை பிறந்தது. அவர்களைக் கண்டுபிடித்து அல்லாஹ்வின் கோபத்தை தணிக்க அவர்கள் மூலம் உபாயத்தை தேடலாம் என்று சிலர் அவர்களைத் தேடத் துவங்கினர். அரசனும் தன்னுடைய முந்தைய உத்திரவை மாற்றி யார் ஹழ்ரத் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களைத் தேடி என்னிடம் அழைத்து வருவார்களோ அவர்களுக்கு பொற்காசுகள் தருவதாக அறிவித்து விட்டான். நகர மக்கள் அனைவரையும் நெருப்பு மழை நிற்கும்வரை ஸஜ்தாவில் விழுந்து அல்லாஹ்விடம் அழுதுபுலம்பி பாவமன்னிப்புக் கேட்டு கொண்டே இருங்கள் என்று உத்திரவு போட்டதோடு தானும் ஸஜ்தாவில் சிரம் வைத்து அழுது புலம்பிப் பாவமன்னிப்பு கேட்க ஆரம்பித்துவிட்டான்.
நைனுவா மக்களின் நிலை இவ்வாறு மாறிவிட அல்லாஹ் நைனுவா மக்களையும் அரசரையும் மன்னித்து நெருப்பு மழையை நிறுத்திவிட்டு மீண்டும் தென்றல் காற்றை வீசச் செய்து விட்டான். நைனுவா நகர மக்களும் தாங்கள் வணங்கி வந்த விக்கிரகங்களையெல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு ஏகவல்லவனாம் அல்லாஹ்வை வணங்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதைத்தான் அல்குர்ஆன் 10:98ல் விபரமாக கூறுகிறது.

தங்களுடைய ஈமான் பலனளிக்குமாறு (நம்பிக்கை கொண்டு வேதனையிலிருந்து தப்பித்துக் கொண்ட) யூனுஸுடைய சமூகத்தாரைப்போல் மற்றோர் ஊரார் ஏன் ஈமான் கொள்ளாமல் இருக்கவில்லை? அவர்கள் (யூனுஸுடைய சமூகத்தார்) ஈமான் கொண்டதும் இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நாம் அகற்றினோம்; அன்றி சிறிது காலம் சுகம் அனுபவிக்கும் படியும் வைத்தோம். – அல்குர்ஆன் 10:98

நைனுவா நகரில் ஏற்பட்ட இந்த மாறுதல் ஹழ்ரத் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. சுமார் நாற்பது நாட்கள் கழித்து அவர்கள் மலை உச்சியிலிருந்து இறங்கி அந்நகரை பார்த்து வர எண்ணி அந்நகரை நோக்கி நடக்கவாரம்பித்தார்கள். நகரை நெருங்கியதும்அங்குள்ள மக்கள் சந்தோஷமாக இருப்பதைக் கண்டு நான் இட்ட சாபப்படி, அல்லாஹ்விடம் நாம் கேட்ட துஆ ஏற்றுக்கொள்ளப்படவில்லையா? திரும்பவும் அந்த ஊருக்குள் நுழைந்தால் நான் பொய்யன் என்று அந்த மக்கள் என்னை தூற்றமாட்டார்களா? என்று அவர்கள் கலங்கி விட்டார்கள். அதனால் மனைவி, மக்கள் குடும்பத்தோடு நெடுதூரத்திற்கு சென்றுவிட எண்ணி புறப்பட்டு விட்டார்கள்.

போகும்வழியில் இடையில் தஜ்லா நதி குறுக்கிடவே, அதைத் தாண்டுவதற்கு படகைத் தேடவாரம்பித்தார்கள். அங்கு படகு தென்படாமல் போகவே மூத்த மகனை தூக்கிக் கொண்டு நீந்தி அக்கரையில் விட்டு வந்தார்கள். பிறகு இளையமகனை தூக்கி நீந்திக் கொண்டு வரவே தண்ணீரின் வரத்து அதிகரிக்கவே அந்த மகன் கைதவறி ஆற்றினுள் விழுந்துவிட்டான். நீர் அதை அடித்துக் கொண்டு போய்விட்டது. அக்கரையில் விட்ட மூத்த மகனை ஓநாய் ஒன்று தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்து. அதை துரத்திக் கொண்டே சென்றார்கள். பிடிக்கமுடியவில்லை. திரும்பவந்து அக்கரையில் உள்ள மனைவியையாவது காப்பாற்றலாம் என்று எண்ணி வந்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர்கள் மனைவியை அவ்வழியே வந்த அடுத்த ஊர் அரசன் பலவந்தமாக வாகனத்திலமர்த்திக் கொண்டு பறந்து ஓடிவிட்டான்.
மறுகரை வந்து பார்த்ததும் மனைவி இல்லாததால் மிகவும் கலங்கி போய்விட்டார்கள். என்னசெய்வது என்றே தெரியவில்லை. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்ற எகீன் கொண்டு கால்போன போக்கில் நடக்கவாரம்பித்தார்கள். இவ்வாறு சென்றுகொண்டு இருக்கும்போது கடல் தெரிந்தது. அங்கு புறப்படுவதற்கு கப்பல் ஒன்று தயாராக இருப்பதும் தெரிந்தது. அந்த கப்பலில் ஏறி வேறு எந்த நாட்டிற்காகவது சென்று நிம்மதியாக வாழலாம் என்று எண்ணிய அவர்கள், மாலுமியிடம் அனுமதி கேட்டு அதில் ஏறிக் கொண்டார்கள்..


 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top