Ramadan 2020- Prophet Shoaib- Day 17

Advertisement

fathima.ar

Well-Known Member
ஹழ்ரத் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மத்யனைச் சார்ந்தவர்கள். இவர்களது வம்சாவழி நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது இரண்டாவது தலைமுறையோடு தொடர்பு கொண்டது. ‘மத்யன்’ என்பது ஒரு நகரின் பெயராகும். மத்யன் இப்னு இப்றாஹிம் என்பவரால் இது நிர்ணயிக்கப்பட்டது. மத்யன் என்ற சமுதாயத்தினரை நேர்வழிப்படுத்த அல்லாஹ் ஹழ்ரத் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நியமனம் செய்தான். ‘ஐக்கா’ என்பது ஒரு காட்டின் பெயராகும். இதில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களைச் சார்ந்தவர்களாக ஹழ்ரத் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருந்தார்கள்.

மத்யன்வாசிகள் அனைவரும் இறைமறுப்பாளர்களாக இருந்தார்கள். அளவையிலும், நிறுவையிலும் மோசடி செய்பவர்களாகவே இவர்கள் இருந்தனர். வீதிகளில் அமர்ந்து கொண்டு சாமான்களை வாங்க வருபவர்களை இடைமறித்து ஹழ்ரத் சுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்திக்க வேண்டாம் என்றும் அவர்களது உபதேசங்களுக்குச் செவிமடுக்க வேண்டாமென்றும் கூறி வந்தனர்.
ஹழ்ரத் சுஐபு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த மக்களுக்கு விக்கிரக ஆதாதனை செய்ய வேண்டாமென்றும், அளவையிலும், நிறுவையிலும் மோசடி செய்ய வேண்டாம் என்றும் தடுத்துக் கூறி, தாம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த நபியென்றும், தம் பேரில் விசுவாசம் கொண்டு அல்லாஹ்வை மட்டும் வணங்கி வரவேண்டும் என்றும் போதித்து வந்தார்கள்.

ஆனால் அந்த மக்களோ இவர்களது பேச்சுக்கோ, போதனைக்கோ செவி சாய்க்காது இவர்களைக் கேலி செய்ததோடு, இவர்களையும் இவர்களை பின்பற்றுபவர்களையும் ஊரை விட்டு வெளியேற்றப் போவதாகவும் பயமுறுத்தினார்கள்.
ஆனால் நபி அவர்கள் கொஞ்சம் கூட அஞ்சாது, பகல் முழுவதும் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை எடுத்துரைப்பதிலும்> பாவச் செயல்களை விட்டு விலகுமாறு வேண்டுவதையும், இரவில் அவர்கள் வணக்கங்களில் ஈடுபடுவதிலும் தங்களுடைய நேரங்களை செலவழித்தார்கள்.

அந்த மக்கள் ஷுஐப் நபி அவர்களின் வணக்க முறைகளை கேலி செய்து எங்கள் மூதாதையர்கள் செய்து வந்த வணக்கவழிபாடுகளை நாங்கள் விட்டுவிடுவோம் என்று நினைத்து விடாதீர்கள் என்றனர்.
நபியவர்கள் எவ்வளவோ நல்லுபதேசங்கள் செய்தும் அவர்கள் திருந்துவதாக தெரியவில்லை. நபியவர்களின் முயற்சிகள் பயனற்றுப் போய்விட்டன. ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முன்தோன்றி, ‘இந்த மக்கள் திருந்த மாட்டார்கள்.எனவே இவர்களை அழித்துவிட அல்லாஹ் முடிவு செய்து விட்டான். ஆகவே தாங்கள் தங்கள் மீது விசுவாசம் கொண்ட முஸ்லிம்களையும், தங்களின் உபதேசத்திற்குக் கட்டுப்பட்ட உற்றர் உறவினர்களையும் அழைத்துக் கொண்டு இந்த ஊரை விட்டு வெளியேறி விடுங்கள்.நாளை விடிவதற்கு முன்னதாகவே அல்லாஹ்வின் வேதனை இவ்வூரார் மீது இறங்கி> இவர்கள் அனைவரும் அழிந்து போய் விடுவார்கள்’ என்று கூறினார்கள்.


உடனே ஹழ்ரத் சுஐபு அலைஹிஸ்ஸலாம் அவர்களும்> அவர்களைச் சார்ந்தோரும் ஊரை விட்டு வெளியேறினார்கள். பொழுது இன்னும் சரியாகப் புலரவில்லை. அந்த ஊர்வாசிகள் தத்தம் படுக்கைகளை விட்டுக்கூட எழுந்திருக்கவில்லை. அவர்கள் நித்திரையில் இருக்கக் கூடிய நிலையிலேயே ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த ஊருக்கு நேர் மேலாக ஆகாயத்திலிருந்தவாறு ஒரு பயங்கரமான குரல் எழுப்பினார்கள். அவ்வளவுதான். அந்த ஊர் இருந்த பகுதியின் பூமியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இடியோசை போன்று இருந்த அந்த ஓசையின் அதிர்ச்சியின் காரணமாக அந்த ஊர் மக்கள் அனைவருமே மடிந்து போனார்கள். இரவில் தூங்கிய அவர்களில் யாருமே காலையில் எழுந்திருக்கவில்லை. மத்யன் வாசிகளின் நிலை இறுதியில் இப்படிப் பரிதாபமான முடிவைக் கண்டது. இதைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில்:

அல்-குர்ஆன் 11:84-95
அதேபோல் ஐக்காவாசிகளையும் நேர்வழிப்படுத்தவும் நபி ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களையே அனுப்பி வைத்தான். ஐக்காவாசிகள்; மத்யன் வாசிகளைவிட ஒரு மடங்கு மேலவே இருந்தார்கள். நபி சுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் போதனையைக் கேட்டு அவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் ஆகவில்லை. மேலும் நபியைக் கேலி செய்தனர். நீர் சொல்லும் உமது கடவுளுக்கு சக்தியிருக்குமானால், வானத்திலிருந்து ஏதேனும் வேதனையை இறக்கச் சொல்லும் பார்க்கலாம் என்று ஆணவத்துடன் பேசினர்.


சுஐப் நபி அவர்கள் அவர்களை அல்லாஹ்வை குறைவாக மதிப்பிடாதீர்கள். அவன் உங்களது ஒவ்வொரு சொல்லையும், செயலையும் உற்றுநோக்கியவனாகவே இருக்கிறான். அவனது ஆட்சியில் தாமதமுண்டு. ஆனால் தவறிருக்காது. நீங்கள் செய்துவரும் அக்கிரமங்களுக்கு கண்டிப்பாக தண்டனை உங்களுக்கு உண்டு. அதில் சந்தேகமில்லை’ என்றுகூறினார்கள். ஐக்கா வாசிகள் அதைப் பொருட்படுத்தவில்லை. மேலும் நபியவர்களை கேலி செய்வதிலும்> அவர்களது உபதேசங்களுக்கு மாறு செய்வதிலுமே திளைத்திருந்தார்கள்.
இறுதியில் அல்லாஹ்வின் கோபப்பார்வை ஐக்காவாசிகள் மீது பட ஆரம்பித்தது. ஏழு நாட்கள் வரை அப்பகுதியில் கடுமையான உஷ்ணம் தகிக்கவாரம்பித்தது. குளம்> குட்டை> கிணறு எல்லாமே ஒரேயடியாக வறண்டு போய் விட்டன. குடிப்பதற்கு ஒரு சொட்டுத் தண்ணீர்க் கூட கிட்டாது மக்கள் தவியாய்த் தவிக்க ஆரம்பித்தனர். அனல் காற்றின் கொடுமையைத் தாளமாட்டாது, வீட்டிலிருந்தவர்கள் எல்லாம் தத்தம் வீடுகளை விட்டு வெளியேறி, காடுகளில் வந்து மரங்களின் நிழலில் தங்கத் தொடங்கினர். அவர்களது மூளைகளும் வறட்சியால் பாதிக்கப்பட்டுப் போயின. இத்தகைய சூழ்நிலையில்தான் வானத்தில் ஒரு கருமேகம் தோன்றியது. அத்தோடு ஜிலுஜிலுவென்று தென்றல் காற்றும் வீசத் தொடங்கியது. அவ்வளவுதான்! அவர்கள் அத்தனைப் பேர் அகங்களும்> முகங்களும் மகிழ்ச்சியால் ஒரேடியாக மலர்ந்து போயின. கருமேகம் தென்றல் காற்று அவர்களை நிலைகொள்ளச் செய்யவில்லை. ஆடிப்பாடி களியாட்டம் புரியத் தொடங்கினர். ஆனால் கருமேகத்திலிருந்து வெளியான தீச்சுவாலை ஒருசில நேரங்களில் ஐக்காவாசிகள் அனைவரையும் பஸ்பம் ஆக்கிவிட்டது.


இந்த அழிவு சுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனதை பெரிதும் பாதித்தது. நபி அவர்கள் மனம் வெதும்பிப் போனார்கள். நமது போதனைகளை கேட்காது அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிப் போய் அழிந்து விட்டார்களே என்று நினைத்து நினைத்து அழுது அழுது அவர்களது பார்வையும் மங்கி விட்டது.

ஹழ்ரத் சுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இரண்டு புதல்விகள் இருந்தனர். அந்த மகள்களோடு கண்பார்வையும் இழந்த நிலையில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதுதான் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். வந்தவர்கள் நபி என்பதை அறிந்ததும்> தமது புதல்விகளில் ஒருவரை அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அதன்பிறகு 7 வருடங்கள் 4 மாதங்கள் வரை வாழ்ந்தார்கள். தம்முடைய 254 ஆவது வயதில் வபாத்தானார்கள். அன்னாரின் திருவுடல் மக்காவில் சபா மர்வா மலைகளுக்கிடையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top