Ramadan 2020- Prophet Moosa- Day 19

Advertisement

fathima.ar

Well-Known Member
தப்ஸீர் ஐனுல் மஆனி யில், கஸஸ் அத்தியாயத்தின் விளக்கவுரையில், ‘ஆடுகளை மேய்ப்பதற்காக ஹழ்ரத் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஒரு கைத்தடியைக் கொடுத்தார்கள். இந்தக் கைத்தடி ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உயரத்திற்குச் சமமாகப் பத்தடி நீட்டமிருந்தது. அதன் மேல் பாகத்தின் நுனியில் இரு கிளையாகப் பிரிந்திருந்தது. இக்கைத்தடிக்கு 18 விசேச சிறப்புகளிருந்தன. இதை ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுவர்க்கத்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். ஒவ்வொரு நபியின் கைக்கும் மாறிமாறி இறுதியாக இது ஹழ்ரத் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து, இப்போது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வசம் வந்து விட்டது.’
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இக்கைத்தடி மிகவும் உதவி புரிந்ததாக வரலாற்றில் காணக்கிடக்கிறது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மத்யன் வந்து 8 வருடங்கள் கழித்து ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூத்த மகளான ஸபூராவுடன் ஒரு வெள்ளிக்கிமை திருமணம் நடைபெற்றது.
தங்கள் குடும்பத்தாரை எகிப்து சென்று பார்க்கும் ஆசை மூஸா நபி அவர்களுக்கு ஏற்பட்டது. ஹழ்ரத் சஐபு நபி அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். ஷுஐப் நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்பதை அறிந்து தம்முடைய கண் பார்வைக்காக துஆ செய்யும்படி கேட்டார்கள்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள் நீங்கள் துஆ செய்யுங்கள். நான் ஆமீன் கூறுகிறேன் என்று சொன்னார்கள். அவ்வாறு ஷுஐப் நபி அவர்கள் துஆ கேட்க மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆமீன் கூற ஷுஐப் நபி அவர்களுக்கு பார்வை கிடைத்து விட்டது. அல்லாஹ்விற்கு நன்றி செலுத்திக் கொண்டார்கள் நபி ஷுஐபு அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஸபூரா அம்மையாருடன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எகிப்து புறப்பட்டார்கள். துவா என்ற பள்ளத்தாக்கை கடந்து கொண்டிருக்கும்போது ஸஃபூரா அம்மையாருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. அன்று துல்கஃதா பிறை 18 வெள்ளிக்கிழமை இரவு எங்கும் ஒரே இருட்டு. மழையும் பெய்து கொண்டிருந்தது. ஸபூரா அம்மையார் குளிரில் நடுங்க ஆரம்பித்தார்கள். சிக்கிமுக்கி கல்லை எடுத்து நெருப்பை மூட்ட முயற்சித்தார்கள். அதிலிருந்து தீ வரவில்லை. வேறெங்கும் வெளிச்சம் தெரிகிறதா?என்று பார்த்து வர சென்றார்கள். தூர்ஸீனாய் மலைப்பக்கம் அவர்களுக்கு நெருப்பு காணப்பட்டது. மனைவியையும், பணியாட்களையும் அங்கேயே வைத்துவிட்டு தாம் மட்டும் விரைந்து சென்றார்கள்.
அங்கு அல்லாஹ்வுடன் மூஸா அலைஹிஸ்ஸலாம்; அவர்கள் வசனித்தார்கள். இதைப் பற்றி அல்லாஹ் கூறும்போது…

20:10. அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ; அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்” என்று (கூறினார்).

20:11. அவர் (நெருப்பின்) அருகே வந்த போது “மூஸாவே!” என்று அழைக்கப் பட்டார்.

20:12. “நிச்சயமாக நாம் தான் உம்முடைய இறைவன்; நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் “துவா” என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.

20:14. “நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக.

20:15. “ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது; ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன்.

20:16. “ஆகவே அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர்.

20:17. “மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?” (என்றும் அல்லாஹ் கேட்டான்.)

20:18. (அதற்கவர்) “இது என்னுடைய கைத்தடி; இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன்; இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன்; இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன” என்று கூறினார்.

20:19. அதற்கு (இறைவன்) “மூஸாவே! அதை நீர் கீழே எறியும்” என்றான்.

20:20. அவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார்; அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று.

20:21. (இறைவன்) கூறினான்: “அதைப் பிடியும்; பயப்படாதீர்; உடனே நாம் அதை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்.”

20:22. “இன்னும், உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி (வெளியில்) எடும்; அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இது மற்றோர் அத்தாட்சியாகும்.

20:23. “(இவ்வாறு) நம்முடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து (சிலவற்றை) உமக்குக் காண்பிக்கிறோம்.

20:24. “ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் (வரம்பு) மீறி விட்டான்” (என்றும் அல்லாஹ் கூறினான்).

20:25. (அதற்கு மூஸா) கூறினார்: “இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!

20:26. “என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!


20:27. “என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!

20:28. “என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!


20:29. “என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக!

20:30. “என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக)!

20:31. “அவரைக் கொண்டு என் முதுகை வலுப்படுத்துவாயாக!
20:32. “என் காரியத்தில் அவரைக் கூட்டாக்கி வைப்பாயாக!
அல்-குர்ஆன் 20:10-32


எகிப்து சென்று பிர்அவ்னுக்கு இஸ்லாத்தைப் போதிக்கும் படி சொன்னான். அதேபோல் அவர்கள் வைத்திருந்த கைத்தடியை கொண்டு அற்புதம் நிகழ்த்தும் சக்தியை அல்லாஹ் கொடுத்தான். மலையிலிருந்து திரும்பி வந்தபோது மலையில் நடந்த விசயத்தை தம் மனைவியிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னபோது, ‘என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து உடனே எகிப்து செல்ல ஆயத்தமாகுங்கள்’ என்று விடைகொடுத்து அனுப்பினார்கள்.

மிகவும் சிரமப்பட்டு தங்கள் வீட்டைக் கண்டுபிடித்து கதவைத் தட்டினார்கள். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை இம்ரான் காலமாகிவிட்டிருந்தார்கள். சில நேரம் கழித்து மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து வந்தவர் தமது மகன் மூஸாதான் என்று அவரது தாயார் யூகானிதா அவர்கள் தெரிந்து கொண்டார்கள். அவர்களது சகோதரர் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தம் சகோதரரை அறிந்து கொண்டார்கள். அவர்களிடம் நடந்த அத்தனை விஷயங்களையும் எடுத்துச் சொன்னார்கள்.

அல்லாஹ் தமக்கு நபித்துவம் அளித்து பிர்அவ்னை சந்தித்து உபதேசிக்க சொன்னதையும் விபரமாக சொன்னார்கள். இதைக் கேட்ட தாயாருக்கு சந்தோஷம் ஏற்பட்டு அல்லாஹ்வுக்கு பலமுறை சஜ்தா செய்தார்கள். ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அல்லாஹ்வுக்கு சிரம் தாழ்த்தி நன்றி செலுத்திக் கொண்டார்கள்.

தற்போதைய பிர்அவ்னின் கொடுங்கோன்மையை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சொன்னார்கள். ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் பிர்அவ்னுடைய அரண்மனையைச் சென்றடையும் போது, இரவு நேரமாயிருந்தது. தாங்கள் வந்திருப்பதை வாயிற்காவலனிடம் சொல்லி அனுப்பினார்கள். நீண்ட நேரம் கழித்தபின் ஒரு சேவகன் வந்து அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அரண்மனைக்குள் சென்றான்.
அங்கு அவர்களிருவரும் ‘நாங்கள் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர்கள். உமக்கு புத்திக் கூறி நேர்வழிப்படுத்துமாறு அல்லாஹ் எங்களிருவரையும் ஏவியுள்ளான். நீர் உம்மை இறைவன் என்று கூறுவதைவிட்டு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி உம்மையும் எங்களையும் அண்டசாரங்களையும் அத்தனையும் படைத்துப் பாதுகாத்து வரும் அந்தச் சர்வலோக இரட்சகன்பால் உமது முகத்தை திருப்பிக் கொள்ளும். எங்களுடைய இந்த நல்லுபதேசத்தை செயல்படுத்தவில்லையானால் இம்மை மறுமையில் கடுமையான தண்டனையை அல்லாஹ் கொடுத்து விடுவான்’ என்று கூறினார்கள்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அடையாளம் கண்டு கொண்ட பிர்அவ்ன், நீர் அல்லாஹ்வின் தூதர் என்பதை நான் எப்படி நம்புவது? என்று கேட்டான். உடனே ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்கள் வசமிருந்த தமது கைத்தடியைக் கீழே போட்டார்கள். அது பச்சை நிறத்தில் ஆண் பாம்பாக பயங்கர உருவெடுத்து விட்டது. அதன் முதுகில் கறுப்பு அம்பு போன்ற நீண்ட முடிகள் காணப்பட்டன. சபையிலிருந்த அத்தனைப் பேரும் அலறியடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார்கள். தாறுமாறாக ஓடிய அவனது ஆட்களில் பலர் மிதிபட்டே இறந்து போனார்கள். ஓ மூஸாவே! உமது பாம்பை பிடித்துக் கொள்ளும் என்று பிர்அவ்ன் அலறினான்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பாம்பின் தலை மீது கை வைத்தார்கள். அது பழைய நிலைக்கு வந்து கைத்தடியாகவே மாறிவிட்டது. வேறொரு அத்தாட்சியை காட்டும்படி பிர்அவ்ன் சொன்னான். தமது கையை சட்டைப் பைக்குள் விட்டு வெளியே எடுத்தார்கள். அந்தக் கரம் ஆயிரம் சந்திரனடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்க ஆரம்பித்தது. அந்த சபையிலுள்ள அத்தனைபேரும் அதனைக் கண்டு கண்கூசி மயங்கி விழுந்துவிட்டார்கள். இதனை அல்லாஹ் திருமறையில்….

7:104. “ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று மூஸா கூறினார்.


7:105. “அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என்மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் – ஆகவே இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை” (என்றும் அவர் கூறினார்).

7:106. அதற்கு அவன்
“நீர் அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருப்பீரானால் – நீர் உண்மையாளராக இருப்பின் அதைக் கொண்டுவாரும்” என்று கூறினான்

7:107. அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் – உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.
– அல்-குர்ஆன் 7:104-108

இப்போதாவது எங்களை அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக் கொள்வாயா! என்று மூஸா நபி கேட்டார்கள்.
சிறிது யோசனையில் ஆழ்ந்த பிர்அவ்ன் அவ்வாறு ஏற்றுக் கொண்டால் அல்லாஹ் எனக்கு என்ன தருவான்?’ என்று கேட்டான்.

அவ்வாறு நீர் ஒப்புக்கொண்டால் உனக்கு நிரந்தர வாலிப வயதை அளித்து விடுவான். அடுத்து உமக்கு சக்திமிக்க அரசாங்கத்தை கொடுப்பான். மூன்றாவதாக உமக்கு என்றுமே நோய் அண்டாது. நல்ல திடகாத்திரத்துடன் வாழ்ந்து வருவீர்கள். நான்காவது உமக்கு இன்பம் கொழிக்கும் சுவனவாழ்வு கிடைக்கும் என்றார்கள்.

ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பேச்சைக் கேட்டதும் அவர்கள் பேரிலும், அல்லாஹ் பேரிலும் விசுவாசம் கொள்ளலாமா? என்று ஆசை பிறந்தது. முதுமையுடன் வாழ அவன் விரும்பவில்லை. விசுவாசம் கொண்டபின், அல்லாஹ் தன்னை ஏமாற்றிவிட்டால், இப்படியொரு சந்தேகம் பிர்அவ்னை அலைக்கழித்தது. நான் எனது மந்திரிகளுடன் ஆலோசனை செய்து சொல்கிறேன் என்று சொல்லி ஆசியா அம்மையாரிடம் வந்து நடந்த விசயத்தை விபரித்து சொன்னான்..
உடனே ஆசியா அம்மையார் மகிழ்ச்சியடைந்து, ‘இது மிகவும் அருமையான விசயமாயிற்றே. உடனே நீங்கள் மூஸாவின் கூற்றுப்படி நடந்து கொள்ளுங்கள். இப்படியொரு சந்தர்ப்பம் நமக்கு மீண்டும் கிடைப்பது அரிது’ என்றார்கள்.

தனது பிரதம மந்திரி ஹாமானை கலந்து ஆலோசித்த பிர்அவ்ன், மன்னாதி மன்னா சக்திபடைத்த மன்னராகிய நீங்கள் சாதாரண மூஸாவிடம் சரணடைவதா? காலையில் எழுந்தவுடன் உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள் என்றான்.
அன்றிரவு பிர்அவ்ன் தூங்கிக்கொண்டிருந்தபோது அவனின் முடிக்கு கறுப்புசாயத்தை ஹாமான் பூசச் செய்துவிட்டான். உலகில் முதன்முதலில் ரோமத்திற்கு கறுப்பு சாயம் பூசிக் கொண்டது பிர்அவ்ன்தான்.
காலையில் எழுந்தவுடன் பிர்அவ்ன் தம் முகத்தை கண்ணாடியில் பார்த்தான். தனக்கு இளமை திரும்பி விட்டதாக எண்ணினான்.
ஹாமானின் பேச்சை கேட்டு மூஸா செய்து காட்டிய சூனியத்தைப் போல நாமும் சூனியம் செய்து காட்டி, அவரைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்ய நாட்டிலுள்ள சூனியக்காரர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினான். சுமார் 70 அல்லது 80 ஆயிரம் சூனியக்காரர்கள் பிர்அவ்னுடைய அரண்மனையை நோக்கி வந்து கூட ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு நான்கு பேர் தலைமை தாங்கி நின்றார்கள். அவர்கள் முன் சூனியக்காரர்கள் தங்கள் சூனியங்களை செய்தனர். ஆனால் அல்லாஹ் மூஸா நபி அவர்களுக்கு கொடுத்த அற்புதத்தினால் அவை அனைத்தையும் அவர்கள் வென்றார்கள்.

சூனியக்காரர்கள் அனைவரும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது விசுவாசம் கொண்டு அல்லாஹ்விற்கு அடிபணிந்து முஸ்லிமானார்கள். அதை அல்லாஹ் தனது வேதத்தில்….


7:109. ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், “இவர் நிச்சயமாக திறமைமிக்க சூனியக்காரரே!” என்று கூறினார்கள்.

7:110. (அதற்கு ஃபிர்அவ்ன்), “இவர் உங்களை, உங்களுடைய நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே (இதைப்பற்றி) நீங்கள் கூறும் யோசனை யாது?” (என்று கேட்டான்.)
7:111. அதற்கவர்கள், “அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணையைக் கொடுத்து விட்டு, பல பட்டிணங்களுக்குச் (சூனியக்காரர்களைத்) திரட்டிக்கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக!

7:112. “அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.
7:113. அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், “நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?” என்று கேட்டார்கள்.
7:114. அவன் கூறினான்: “ஆம் (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்). இன்னும் நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்.”

7:115. “மூஸாவே! முதலில் நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் எறியட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.

7:116. அதற்கு (மூஸா). “நீங்கள் (முதலில்) எறியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர்.

7:117. அப்பொழுது நாம் “மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்” என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.

7:118. இவ்வாறு உண்மை உறுதியாயிற்று, அவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன.
7:119. அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள்.
7:120. அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து:
7:121. “அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்;

7:122. “அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்” என்று கூறினார்கள்.
அல்குர்ஆன் 7:109-122
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து 72 கிப்திகள் உட்பட சுமார் ஆறு இலட்சம் பேர் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது விசுவாசம் கொண்டு முஸ்லிம்களாகி விட்டதாக ஒரு குறிப்பில் காணப்படுகிறது.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், முஸ்லிம்களின் பெருக்கம் அதிகமாகி விட்டதால் கடைவீதிகளிலும், தெருக்களிலும் வணங்குவதற்கு வணக்கவழிபாட்ட இடங்கள் ஏற்படுத்தப்பட்டன. கிஜ்பீல் மூஸா நபிக்கு உதவி செய்தார். இதனை அறிந்த பிர்அவ்ன் அந்தவழிபாட்டுக் கூடங்களை இடிக்க உத்தரவிட்டான். கிஜ்பீலை சிரச்சேதம் செய்யவும் கட்டளையிட்டான். கிஜ்பீல் அங்கிருந்து தப்பி ஒரு குகையில் பதுங்கிக் கொண்டார்.
பகிரங்கமாக அல்லாஹ்வை வழிப்படுவது ஆபத்தாகி விட்டதால், தத்தம் வீடுகளிலேயே இரகசியமாகத் தொழுது வருமாறு அல்லாஹ்வின் உத்தரவு வந்தது. அதன்படியே முஸ்லிம்கள் தொழுது வந்தனர்.
கடும் கோபத்திலிருந்த பிர்அவ்ன் பனீ இஸ்ரவேலர்களையும், மூஸா நபி மீது விசுவாசம் கொண்ட கிப்தியர்களையும் சொல்லொண்ணாத் துன்பம் கொடுக்க ஆரம்பித்தான்.

இதில் அவன் மனைவி ஆசியா அம்மையாரும் கொடுமைக்கு ஆளானார்கள். பிர்அவ்ன் மீது தண்டனை விதிக்க அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு பனீ இஸ்ரவேலர்கள் மூஸா நபி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் மீது ஒன்றன்பின் ஒன்றாக இறக்கினான். 1. பஞ்சத்தை கொடுத்தான். 2. மழை, காற்றை அதிகப்படுத்தி வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தினான். 3. வெட்டுக்கிளிகளைப் படையாக அனுப்பி அவர்களை இம்சித்தான். 4. தவளைக் கூட்டங்களை ஏவி தொல்லைக் கொடுத்தான். 5. பேன்களை ஏவி அவர்களை சித்திரவதை செய்தான். 6. தண்ணீரை இரத்தமாக மாற்றி அவர்களை கதிகலங்கச் செய்தான். 7. சிலநாட்கள் தொடர்ந்து சூரியன் உதிக்காதபடி செய்து அவர்களைத் திக்குமுக்காடச் செய்தான். 8. மூன்று தினங்கள் வரைத் தொடர்ந்து மண் மாரி பொழியச் செய்து அவர்களை மண் குவியல்களில் மூழ்கடித்தான். 9. ஒவ்வொரு வீட்டிலும் தலைக் குழந்தைகளை இறக்கச் செய்தான். இவ்வேதனை பிர்அவ்னை ஆதரிக்கும் மக்களுக்கு மட்டுமே ஏற்பட்டது.

இத்தனை வேதனைகள் இறக்கப்பட்ட பின்னரும் பிர்அவ்ன் மாறியிருப்பான் என்று எண்ணிய மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிர்அவ்னிடம் வந்து முஸ்லிமாகிவிட உபதேசம் புரிந்தார்கள்.
ஆனால் அவன் அல்லாஹ்வை காணப் போகிறேன் என்று சொல்லி ஹாமானிடம் ஒரு உயரமான கோபுரத்தை கட்டச் சொல்லி அதில் ஏறி மூஸாவுடைய அல்லாஹ்வை கண்டுபிடித்து அவனை ஒழித்துக் கட்டிவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று சொன்னான். இந்தக் கோபுரம் கட்டும் பணியில் ஐம்பதாயிரம் கொத்தனார்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். ஏழாண்டுகள் இந்தப் பணி நடைபெற்றது. சுமார் 20 ஆயிரம் அடி இருந்தது என்றும் 10 ஆயிரம் அடி இருந்தது என்றும் இருகூற்றுகள் உள்ளன.
ஹாமானை அழைத்துக் கொண்டு கோபுரத்தின் மேல் ஏறிப் பார்த்து மூஸாவின் அல்லாஹ்வை நெருங்கி விட்டதாக பெருமை பட்டுக்கொண்டான். அங்கிருந்து விஷம் தோய்ந்த அம்மை எய்தான். அவை திரும்ப இரத்தக் கறையுடன் கீழே விழுந்தன.
ஒரு தப்ஸீரில் இந்தக் கோபுரத்தின் ஒரு பகுதி படைவீரர்களின் பாசறை மீது விழுந்தது. மற்றொரு பகுதி நைல்நதி மீது விழுந்தது. பிறிதொரு பகுதி அந்தக் கோபுரத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கொத்தனார்கள் மீது விழுந்தது. அத்தனைப் பேர்களையும் உருத்தெரியாது அழித்து விட்டது.
மூஸாவின் அல்லாஹ்வை கொன்றுவிட்டேன் என்று பிர்அவ்ன் ஆசியா அம்மையாரிடம் சொன்ன போது, ஆசியா அம்மையார் நகைத்து விட்டார்கள். மூஸா நபியையும், அவனது இறைவனையும் விசுவாசம் கொண்டதாக சொன்னார்கள். கோபம் கொண்ட பிர்அவ்ன் ஆசியா அம்மையாரை அரைகுறை ஆடையிலாக்கி முச்சந்தியில் நிறுத்தி ஆணியடித்து சித்திரவதை செய்தான்.
இந்நிலையில் அப்பக்கம் வந்த மூஸா நபி அவர்களிடம் இதை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் அல்லவா? என்று கேட்டார்கள். ஆம். என்றார்கள் மூஸா நபி. உம் விருப்பம் என்ன? என்று அல்லாஹ் கேட்கிறான் என்று கேட்டார்கள்.
எனக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை அமைத்து தருவாயாக! பிர்அவ்னுடையதும், அவனுடைய கூட்டத்தை விட்டும் என்னை பாதுகாப்பாயக! என்று வான்பக்கம் நோக்கி பிரார்த்தித்தார்கள். வெண்முத்துக்களால் அமைக்கப்பட்ட மாளிகையை அல்லாஹ் அவர்களுக்கு காண்பித்தான். அதனைப் பார்த்து ஆசியா அம்மையார் கல கலவென்று சிரிக்க ஆரம்பித்தார்கள். பிர்அவ்ன் தம்மை அவர்கள் கேலி செய்கிறார்கள் என்று எண்ணி ஒரு பணியாளை அனுப்பி அவர்கள் மீது பெரிய கல்லை போடச் செய்தான். அக்கணமே அவர்கள் உயிர் பிரிந்து விட்டது.
 

fathima.ar

Well-Known Member
இவ்வளோ நாள் பார்த்துட்டு வந்த நபிமார்கள்ல..
இப்ராஹீம் நபிக்கு வஹீ மூவமா சட்ட திட்டங்கள் வந்தது..
அதுக்கு அப்புறம் மூஸா நபிக்கு தான் முழுமையான சட்டதிட்டங்கள் வந்தது..

மூஸா நபி- தவ்ராத் வேதம்
தாவூத் நபி- சபூர் zabur வேதம்
ஈஸா நபி- இன்ஜீல் bible


முஹம்மது நபி- அல் குர்ஆன்..
குர்ஆன் மனித இனத்திற்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறை வேதமாகும்.
இறைவனே இதை காக்கவும் செய்கிறான்..
1400 வருடங்களுக்கு மேலாக எந்த மாற்றமும் இன்றி இந்நூல் விளங்கி வருவதும் இதன் சிறப்பாகும்...



Back to Prophet Moosa...
வேதம் எல்லா வந்திருக்குன்னா..
எவ்வளவு கஷ்டங்களை கடந்து வந்திருப்பாங்க..


வரலாறுஉஉஉஉஉஉஉஉ
ரொம்பஅஅஅஅஅஅ
பெருசுஉஉஉஉஉஉ..


நாளைக்கு மிச்சத்தை போடுறேன்
 

fathima.ar

Well-Known Member

“இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!

20:26. “என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!

20:27. “என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!

20:28. “என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!


இன்றளவும் எந்த ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பு இந்த துவா ஓத்திட்டு தான் ஆரம்பிப்பாங்க..
நம்ம சொல்ற விஷயம் சரியாக கொண்டு சேர்வதற்கு இந்த துவா ஓதனும்...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அடுத்த பதிவுக்கு waiting.

நன்றி ஃபாத்திமா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top