Ramadan 2020- Prophet Ibrahim- Day 9

Advertisement

fathima.ar

Well-Known Member
இவர்களின் பெயர் குர்ஆனில் 69 தடவை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இவர்களின் பெயர் இப்ரம் என்று இருந்தது என்றும் பிறகு இப்றாஹீம் என்று ஆனது என்றும் தத்கிரத்துல் மௌத்தா என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நபிமார்களில் பெரும்பான்மையோர் இவர்களின் வழித்தோன்றல்களாகவே இருக்கின்றனர். அதனால் இவர்களுக்கு அபுல் அன்பியா (நபிமார்களின் தந்தை) என்ற பெயரும் ஏற்பட்டிருந்தது. வேதம் அருளப்பட்ட நான்கு நபிமார்களும் இவர்களின் வழிவந்தவர்களே.

இவர்களின் தந்தை பெயர் தாரக். ஆனால் இவர்களை வளர்த்தவர்கள் ஆஸர் என்பவர். அரபி மொழியில் தந்தைக்கும், தந்தையின் சகோதரருக்கும் அபீ என்று சொல்லப்படும். இதன்காரணமாக ஆஸரையும் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை என்றே இறைவன் குறிப்பிடுகிறான். இவர் தாரக் அவர்களின் சகோதரர் ஆவார். தாயின் பெயர் உஷா.ஆஸர் ஒரு புரோகிதர். பெரியார்களின் சிலைகளை வடித்து, தெய்வங்கள் என்று மக்களை நம்பவைத்து, அவற்றை வியாபாரம் செய்வது கொண்டு பிழைப்பு நடத்துபவர். இந்தத் தீயச் செயலைக் கண்டு மனம் வெதும்பி தம் வளர்ப்புத் தந்தையிடம் படைத்த அல்லாஹ் ஒருவன் இருக்க அவனுக்கு இணைவைக்கும் சிலைகளை நீங்கள் விற்கலாமா? என்று கேட்கிறார்கள். அப்படி இருந்தும் ஆஸர் சிலைகளை விற்றுவருமாறும் தம் மகனிடம் வற்புறுத்துகிறார்கள்.

நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த இடத்தில் வளர்த்த தன் தந்தைக்கு வழிப்படுவதை விட, தன் தந்தையையும் தன்னையும் மற்றும் அகிலமனைத்தையும் படைத்துப் போஷித்துப் பரிபாலித்து வரும், அந்த அல்லாஹ் ஒருவனுக்கு வழிப்படுவதே தனது தலையாய கடமை என்ற தெளிவான முடிவுக்கு வருகிறார்கள்.

தனது செயல் தன்னையும் தனது குடும்பத்தையும் உலக வாழ்வில் பாதிக்கிறதே என்பதையும் பொருட்படுத்தாமல், மக்களிடம், “மக்களே இந்தப் பெரியார்களின் சிலைகள் மனிதக் கைகளால் செய்யப்பட்டவை – வெறும் சிலைகளே! இவற்றாலோ, இவற்றுற்குரிய பெரியார்களாலோ, உங்களுக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை! இவற்றையோ, இவற்றிற்குரியவர்களையோ வணங்குபவர்கள் அறிவீனர்களே! நஷ்டவாளிகளே! அப்படிப்பட்டவர்கள் இப்பெரியார்களின் சிலைகளை வாங்கிக் கொள்ளலாம்” என்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் பிரச்சாரம் தந்தை ஆஜருக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சியது போல் வேதனையைக் கொடுத்தது. கடுங்கோபமுற்று மகனைப் பார்த்து, “நீ என் கண்ணிலும் விழிக்காதே; உன்னைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவேன்”, என்று வீட்டை விட்டே துரத்தி அடிக்கிறார்.

(அதற்கு அவர்) “இப்றாஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக்க கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லாலெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்றார். -(குர்ஆன் 19 : 46) .
ஆதரிப்பார் யாரும் இல்லாமலும் ஒதுங்குமிடம் இன்னதென்று தெரியாத நிலையிலும் அந்த இளம் வயதிலேயே அல்லாஹ் மீது பூரண நம்பிக்கை வைத்துத் தனித்துத் தனது உலக வாழ்வைத் துவக்குகிறார்கள் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்.

நானே இறைவன் என்று கூறிய நம்ரூதுடன் போராடி அவனை மாளச் செய்து ஒரே இறைமார்க்கத்தை நிறுவ வந்தவர்கள் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். பாபல் நகரத் தெருக்களில் 27 வயது நிரம்பிய இளவல் இப்றாஹீம் தன்னையும், தன் அதிகாரத்தையும் எதிர்ப்பதை அறிந்த நம்ரூத் இவர்களைத் தன் அரண்மனைக்கு அழைத்து வரச் செய்து இவர்களுடன் வாதிட்டான். வாதத்தில் தோற்று தலைகுனிந்தான்.

இச்சமயத்தில் ஒரு திருவிழா வந்தது. நகர மக்கள் அனைவரும் விழாக் கொண்டாட ஊருக்கு வெளியே சென்று விட்டனர். இச்சமயம் பார்த்து இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கோயிலுக்குள் நுழைந்து, கோடாரிக் கொண்டு அங்கிருந்த 70 சிலைகளையும் உடைத்து நடுவில் நின்ற பொற்சிலையின் கழுத்தில் அதை மாட்டிவிட்டுப் போய்விட்டனர். விழாக் கண்டு திரும்பியோர் இதனை இப்ராஹீமே செய்திருப்பார் என உணர்ந்து அவர்களை அழைத்து விசாரிக்க, ‘அந்தச் சிலைகளிடமே கேட்டுக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டார்கள் அவர்கள்.


அதற்கு (அவர்களில் சிலர்) “இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது” என்று கூறினார்கள்.

“அப்படியானால் அவரை மக்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்; அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு” என்று சொன்னார்கள்.

இப்றாஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?” என்று (அவர் வந்ததும்) கேட்டனர்.

அதற்கு அவர் “அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்” என்று கூறினார்.

(இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி,(ஒருவருக்கொருவர்) “நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள்” என்று பேசிக் கொண்டார்கள்.

பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; “இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!” (என்று கூறினர்).

“(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்” என்று கேட்டார்.

சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?” (என்று இப்ராஹீம் கூறினார்).

(இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

இதன்காரணமாக அம் மக்கள் இவர்கள் மீது வெறுப்புக் கொள்ள, அதனைப் பயன்படுத்தி அவர்களைத் தீர்த்துக் கட்டவும் முயற்சித்தான் நம்ரூத்.
ஊருக்கு வெளியே நெருப்பு குண்டத்தை வளர்த்து ஓர் இயந்திரத்தின் உதவியால் இவர்களை அதன் நடுவே தூக்கி எறிந்தான். அவர்கள் தீயில் எரிந்து சாம்பலாகி விடுவார்கள் என்று நம்ரூத் எண்ணினான். ஆனால் அல்லாஹ் அந்த நெருப்புக் குண்டத்தை குளிர்ச்சியாக மாற்றி விட்டான். ஆனால் அவர்களைப் பிணைத்திருந்த கயிறு மட்டும் எரிந்துத சாம்பலாகிவிட்டது.



(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம். (குர்ஆன் 21:69)
இந்நெருப்பு குண்டம் 50 நாட்கள் எரிந்து அதில் அவர்கள் இருந்தனர். நெருப்புக்குள் இருந்த நாட்களே தமக்கு இன்பத்தை அதிகம் தந்தது என்று இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இச்சமயத்தில் நம்ரூத் இறை நிராகரிப்பை விட்டுவிட எண்ணினான். ஆனால் அவனை அவனுடைய அமைச்சர் ஒருவன் தடுத்து விட்டான். எனவே நம்ரூத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு கூறினான். அவ்வாறே இவர்கள் ஸாரா, லூத் ஆகியோர்களுடன் காறான் போய்த் தங்கினர். இங்கு வைத்துதான் இவர்கள் ஸாரா அம்மையாரை மணம் முடித்துக் கொண்டனர். லூத்தை இறைஆணைப்படி முதஃபகாத் நாட்டுக்கு அனுப்பிவிட்டு இவர்கள் தம் மனைவி சாராவுடன் மிஸ்ர் நாட்டுக்கு சென்று அங்கு தங்கினர்.


இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்)அவர்கள் மூன்று விஷயங்களை மாற்றிச் சொன்னதைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும்.
அவை: 1. (அவரை இணைவைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது,) ‘நான் நோயுற்றிருக்கிறேன்” என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும்.
2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு மக்கள், ‘இப்படிச் செய்தது யார்?’ என்று கேட்டபோது, ‘ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது” என்று கூறியதுமாகும்.
3. (மூன்றாவது சூழ்நிலை வருமாறு:) ஒரு நாள் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) ‘இங்கு ஒருவர் வந்திருக்கிறார்: அவருடன் அவரின் அழகான மனைவியும் இருக்கிறாள்” என்று கூறப்பட்டது.


உடனே, இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் சாரா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை யார் அந்தப் பெண் எனக்கேட்க இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ‘இவள் என் சகோதரி’ என்று கூறி ஸாரா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடமும் அவனிடம் அவ்வாறே பதிலளிக்க கூறினார்.
அவன் ஸாரா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம்), ‘அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குக் தீங்கு செய்ய மாட்டேன்” என்று சொன்னான்.

உடனே, சாரா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்கள் அணைக்க முயன்றான். முன்பு போன்றே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், ‘எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று சொன்னான்.

அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, ‘நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக்கொண்டு வரவில்லை. ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள்” என்று சொன்னான்.
பிறகு, ஹாஜிரா அவர்களை, சாரா (அலைஹிஸ்ஸலாம்)அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா (அலைஹிஸ்ஸலாம்)அவர்கள், இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது வந்தார்கள். இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கைகளால் சைகை செய்து, ‘என்ன நடந்தது?’ என்று கேட்டார்கள். அவர், ‘அல்லாஹ் நிராகரிப்பாளனின் அல்லது தீயவனின் சூழ்ச்சியை முறியடித்து, அவன் மீதே திருப்பி விட்டான். ஹாஜிராவைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’. ‘(அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) கூறினார்:) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜிரா)தான் உங்களின் தாயார். புஹாரி : 3358 அபூஹூரைரா ரலியல்லாஹு அன்ஹு

இத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் ஹாஜரா என்ற பெண்ணை மணந்து கொள்ளுமாறு ஸாரா அம்மையார் தம் கணவரிடம் சொன்னார்கள். அதையேற்று அவர்கள் ஹாஜரா அம்மையாரை மணம் முடித்துக் கொண்டனர்.
பலஸ்தீனத்தில் இப்றாஹீம் நபியவர்கள் தங்கியதுமே பாலை நடுவே நீர் ஊற்றுகள் பொங்கி வழியத் தொடங்கியது. இதனால் நாடோடி அரபிகள் அங்குவந்து தங்கலாயினர். அவர்கள் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இடையூறு செய்யவே அதிலிருந்து வெளியேறி ஜபரூனில் குடியேறினர். இறைவனை முழுவதும் வணங்குவதற்கு தமக்கு இடையூறாக இருக்கும் பொருட்செல்வத்தை வாரி வழங்குமாறு வேண்டினர். இவ்வேண்டுதல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவர்களிடம் ஆட்டுக்கிடைகள் மட்டும் 5000 இருந்தன. அவற்றின் காவலுக்காக நாலாயிரம் நாய்கள் இருந்தனவென்றும் அவை ஒவ்வொன்றின் கழுத்திலும் பொற்சவடி ஒன்று அணிசெய்து கொண்டிருந்தது என்றும் கூறுவர்.
இதன்பின் இவர்கள் ஒரு மகனை நல்குமாறு இறைவனை வேண்ட ஹாஜராவின் மணிவயிற்றில் ஹழ்ரத் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்தார்கள்.


அதன்பின் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு வயது குழந்தையாக இருந்தபோது அவர்களையும் அவர்களது அன்னை ஹாஜராவையும் இறைவனின் கட்டளைப்படி பாரான் பள்ளத்தாக்கில் விட்டுவிட்டு சிரியா திரும்பினர். இதன்பின் ஆண்டிற்கு ஒருமுறை தம் மகனையும், மனைவியையும் பார்க்க இவர்கள் இங்கு வந்து செல்வார்கள். அல்லாஹ்வின் ஆணைப்படி கஃபாவை தம் மகனுடன் சேர்ந்து உயர்த்திக் கட்டினர்.

ஒருநாள் தம் அருமை மகனார் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தம் கைகளால் அறுத்துப் பலியிடுவதாக கனவு கண்டு அவ்விதமே தம் மகனை அழைத்துச் சென்று பலியிட முயன்றபோது கத்தி கழுத்தை அறுக்கவில்லை. அதுகண்டு கோபம் கொண்ட இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அருகில் இருந்த பாறை மீது ஓங்கி அடிக்க, பாறை வெட்டுப்பட்டது.
இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் கொண்ட உறுதியில் தளர்வதாக இல்லை. இந்தக் கட்டத்தில் ஷைத்தான் வந்து தந்தையின் உள்ளத்தில் பிள்ளைப் பாசத்தை உண்டாக்கி, சோதனையின் தோல்வியடையச் செய்ய முயற்சி செய்கிறான். தந்தை ஷைத்தானின் வலையில் சிக்கவில்லை. ஷைத்தானைக் கல்லால் அடித்துத் துரத்துகிறார்கள். ஷைத்தான் பெற்ற தாயிடம் சென்று, கலைக்கப் பார்க்கிறான். பெற்ற மனம் பித்து என்பார்கள். ஆனால் இங்கு அந்தப் பித்து உள்ளமும் கலங்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் விருப்பம் அதுவானால், அதை நிறைவேற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது என்று கூறி ஷைத்தான் அடித்துத் துரத்துகிறார்கள்.


ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;

நாம் அவரை “யா இப்றாஹீம்!” என்றழைத்தோம்.


“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.

“நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”

ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.

இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:


“ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!


இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.
– (குர்ஆன் 37 :103 -110)
இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தியாக உணர்வை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டைப் பலியாக்கி உலகம் அழியும்வரை, மக்கா வந்து ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், ஹஜ்ஜுக்கு வராத மற்றும் வசதி படைத்த முஸ்லிம்களும் குர்பானி கொடுப்பதையும் விதியாக்கியுள்ளான்.


அதன்பின் அவர்களுக்கு ஸாரா அம்மையார் மூலம் ஹழ்ரத் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்தனர். ஆண்டுதோறும் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் மக்கா வந்து ஹஜ்ஜு செய்ய வந்து போய்க் கொண்டிருந்தனர்.
உழவுத் தொழிலை இவர்கள் செய்து வந்தனர். இவர்கள் விருந்தினர் இல்லாமல் ஒரு போதும் சாப்பிட்டதில்லை. விருந்தினர்களைத் தேடி பெரும்தொலைவு செல்வார்கள்.
இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்)அவர்கள், தம் எண்பதாவது வயதில் ‘கத்தூம்’ (எனும் வாய்ச்சி’யின்) மூலமாக விருத்த சேதனம் செய்தார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3356 அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு

பல நல்லொழுக்கங்களை துவக்கியவர்கள் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே. மிகவும் இறையச்சத்துடன் தொழுவார்கள். அவர்களின் இதயம் இறையச்சத்தால் படபடக்கும் சப்தம் பிறரின் காதுகளில் விழும் என்று சொல்லப்படுகிறது.

இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இறைவன் பத்து கட்டளைகளை அருளினான். இவர்கள் தங்கள் 265 ஆம் வயதில் மறைந்தனர். இவர்கள் தாங்கள் வாழ்ந்து வந்த இடத்தில் ஸாரா அம்மையாரின் அடக்கவிடத்திற்கு அண்மையில் நல்லடக்கம் செய்யப்பட்டனர்.
 

fathima.ar

Well-Known Member
பகரமாக - பதிலாக..(exchange)
விருத்தசேதனம்- circumsion

ஷைத்தானுக்கு கல் எரிதல் ஹஜ்ஜின் ஒரு கடமையாக இன்றளவும் ஹஜ் நாட்களில் நடந்து வருகிறது...

இப்ராஹீம் அலைவஸல்லம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் என்றால்..
ஒவ்வொரு தொழுகையிலும்.. ஒவ்வொரு முஸ்லிம் ஆன ஆண்கள் பெண்கள் முஹம்மது நபி அவர்களின் பெயரையும்
இப்ராஹீம் நபி அவர்களின் பெயரையும் உச்சரிக்கும் பாக்யம் பெற்றவர்கள்..
 

Anuradha Ravisankarram

Well-Known Member
ரொம்ப நன்றாக இருந்தது. இறையச்சம் எனும் சொல் எப்போதோ படிக்கும்போது கவனித்தது ரொம்ப பிடிக்கும்...
இப்ராஹிம் இதயம் இறையச்சத்தில் படபடத்தது பிறருக்கு வெளியே சத்தம் கேட்டது ....
Very nice..
Thanks
வாழ்க வளமுடன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top