Prasath Krishna's மை குட்டி ஸ்டோரி (Quarantine memories)

Advertisement

Prashadi

Member
மை குட்டி ஸ்டோரி
(Quarantine நினைவுகள்)


fd2a70d16fc88005c19d4d688198b656.jpg





நினைவு 1



நேரம் காலை 9மணி....


"மம்மீ!!!"

"ஏன் இப்பிடி கத்துற??"

"இல்ல மீ....அடுத்த வாரம் எக்ஸாம் வருது...விளையாட்டெல்லாம் நிறுத்திட்டு படிக்கலாம் னு நினைச்சேன்."

"இது உனக்கே ஓவரா தெரில. கிரௌண்டுக்கே போகாதவ விளையாட்டை நிறுத்துறாலாம்."

நானோ என் பல்லைக்கடித்துக்கொண்டு

"மீ!!! நா அந்த விளையாட்டை சொல்லல...சீரியஸ்ஸா படிக்கலாம் னு இருக்கேன்"

"ம்ம்...சரி. இப்ப அதுக்கு நான் என்ன பண்ணனும் ?"

"இப்ப கேட்டிங்களே இது கேள்வி. ஒன்னும் பெருசா இல்லமீ. டீவி பாக்குறதை குறைங்க. அப்பறம் அடிக்கடி பிளெண்டர் போடாதிங்க"என நான் அடுக்கிக்கொண்டே போக

அவரும் பொறுமை இழந்து"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"

"நான் கன்சன்ட்ரேட் பண்ணனும்ல"என

என்னைத்தவிர வீட்டில் இருந்த மற்ற மூன்று ஜீவன்களும் என்னைக் கண்களாலே எரித்துக் கொண்டிருந்தனர்.

நிலைமையை சமாளிக்க நான் வாய்த்திறப்பதற்குள்

"விசேட செய்தி ஒன்று!

கொரோனாவின் தாக்கம் மக்கள் மத்தியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாவிடினும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலை விடுமுறை இன்று முதல் ஆரம்பமாகின்றது. அத்தோடு தனியார் கல்வி நிறுவனங்களும் மூடப்படுகின்றன."

'நியூஸ் வாசிச்ச அக்கா வாயில சக்கரையை போடனும்'என உள்ளுக்குள் நினைத்தாலும் "ஆத்தீ!!! அப்போ எக்ஸாம் இல்லையா? படிச்சதெல்லாம் வேஸ்டா? ச்சே, இப்பிடி ஆகிடுச்சே"என

மீண்டும் அந்த மூன்று ஜீவன்களின் நம்பாத பார்வை என்னைத் தொடர்ந்தது. நானோ எனது திருட்டுத்தனத்தை வெளியே காட்டாமல் "சரி நான் வீட்ல இருந்து ரிவைஸ் பண்றேன்" என்று திரும்பிப்பார்க்காமல் சென்று அறைக்குள் அடைந்து கொண்டேன்.

ஆனாலும் "அம்மோய்! இவள பாத்தா அவ்வளோ நல்லவளா தெரியலயே"என்ற தமயனின் குரல் மட்டும் என் காதை வந்தடைந்தது.

"எனக்கெதாவது நல்லது நடந்தா மட்டும் இவனுக்கு மூக்கு வேர்த்துடும். சரி நம்ம வேலைய பாப்போம்"என எனக்குள் நானே பேசிவிட்டு எனது வேலையைப் பார்க்கச் சென்றேன்(வேறென்ன உறங்குவது தான்)



நேரம் பகல் 2 மணி...

"பிரஷாதி!!!" என்ற அம்மாவின் அலறல் ஒலியில் பதறியடித்து எழும்பி நேரத்தை பார்த்தேன்.

"ச்சே! இப்பிடி தூங்குனா நான் எப்பிடி படிக்கிறது? வெரி பேட். மம்மீ வேற கூப்புடுறாங்க. சீக்கிரம் போவோம் இல்லாட்டி இன்னைக்கு நாம தான் பெனால்ட்டி எடுக்கனும்" என எனக்குள்ளேயே புலம்பிவிட்டு கூடத்திற்கு சென்றவுடன் சாப்பாட்டுடன் சேர்த்து நான் ஏற்கவேண்டிய பெனால்டியும் தயாராகவே இருந்தது. (எல்லா சாப்பாட்டு பாத்திரங்களையும் எடுத்து வைத்து, கழுவ வேண்டியவைகளை கழுவி,சமையலறையை சுத்தம் செய்ய வேண்டும் *இது தான் நான் சொன்ன பெனால்டி)

நானும் என்னையே நொந்து கொண்டு எல்லாவற்றையும் முடித்து விட்டு அறைக்குத் திரும்பினேன்.

'சரி இப்பொ படிப்போம்'என புத்தகத்தை திறந்த பத்து நிமிடத்தில் எனது மைண்ட் வாய்ஸ் மீண்டும் வேலை செய்தது.

'நாம இன்னைக்கு ரெஸ்ட் எடுப்போம். நமக்கு தான் லீவ் இருக்கே. நாளைக்கு தொடங்குவோம்'என்ற மைண்ட் வாய்ஸிற்கு உடன்பட்டு புத்தகத்தை மூடி வைத்தேன். ஆனால் விதியோ என்னைப் பார்த்து சிரித்தது.







நினைவு 2




நாட்களும் நகர்ந்தன.....

மூடிய புத்தகங்கள் அறையில் தூங்கிக்கொண்டிருந்தன....

அறையில் இருந்த நானோ கைப்பேசியின் மடியில் வாசம் கொண்டிருந்தேன்....

அப்பொழுது தான் என் மனதை உலுக்கிய சம்பவம் நிகழ்ந்தது...

"மாணவர்களின் கவனத்திற்கு!
தற்போதிருக்கும் அசாதாரண நிலை காரணமாக, மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் தடை படாமல் இருக்க நிகழ்நிலை வகுப்புகள் நாளை முதல் நடைபெறவுள்ளன. அதற்கான நேர அட்டவணை வாட்சப் குரூப்பில் அனுப்பி வைக்கப்படும்.

இப்படிக்கு,
நிர்வாகம் "

"அதுதானே பாத்தேன். என்னடா சத்தத்தையே காணோம் னு. ஆனாலும் இவங்க ரொம்ப சின்சியரா இருக்காங்க பா. சரி... நாம தான் படிக்கல. கிளாஸ்லயாவது கவனிப்போம்"என நினைத்துக் கொண்டு அதற்கான செயலிகளை பதிவிறக்கம் செய்தேன்.

முதல் நாள் வகுப்பு....

திரைக்கு பின்னால் ஆசிரியர்...
திரைக்கு முன்னால் நான்...
என்னோடு சேர்ந்து பல பாவப்பட்ட ஜீவன்களும் தான்...

எப்போதும் வாயிற்கு ஓய்வே குடுக்காது பேசும் அத்தனை ஜீவன்களும் அமைதியின் பிடியில்...
எப்போதும் "அமைதியா இருங்க!" என்று கத்தி ஓயந்து போன ஆசிரியரோ இன்று மகிழ்ந்து போய் பாடம் நடத்திகொண்டிருந்தார். அதே போல் எல்லா பாடங்களும் மாறி மாறி மாறி மாறி நடந்துகொண்டே இருந்தன.

ஆனால் இவர்களின் சந்தோஷம் கொஞ்ச நாட்களில் காணாமல் போனது....

வகுப்பிலுள்ள மாணவர்களிடம் இவ்வளவு நாட்களில் நடத்திய பாடத்தில் கேள்வி எழுப்பினார்... ஆனால் பதில் தான் வரவில்லை ( பாடத்தை கவனித்தால் தானே வரும்) முதலில் விரும்பிய அமைதி இப்போது பிடிக்காமல் போக, அவரோ அனைவரையும் அன்மியூட் பண்ண சொன்னார். ஆனால் அந்தோ பரிதாபம்
ஆர்வத்தில் அன்மியுட் செய்த மாணவர்களின் சத்தம் காதைப் பிளக்காத குறை தான். அதிலும் ஹைலைட் என்னவென்றால்

"எருமை மாடு! பல்லு கூட விளக்காம என்னத்துக்கு ஃபோன பாத்துட்டு இருக்க "

"பட்டு!!! மேசைல டீ வச்சிருக்கேன். குடிச்சிட்டு படிமா"

"அக்கா!!! ஏன் என் கொப்பிய எடுத்து எழுதிட்டு இருக்க?"

"அடேய் தடியா! அது என் பிஸ்கட் டா! வைடா அதை!"

இவ்வாறு பல குரல்களுடன் இன்னும் சில சௌண்ட் எஃபெகட்ஸ்களும்

"பவ் பவ் பவ்"என குரைக்கும் சத்தம்...

"க்ர்க் க்ர்க்"என்று கொரிக்கும் சத்தம்...

"அவள நான் அவனோட வாழ விடமாட்டேன்! பழிவாங்கியே தீருவேன்!" என்ற சீரியல்களின் சத்தம் என வகுப்பே களை கட்டியது.

பொறுமை இழந்த ஆசிரியர், "ஆல் ஆஹ் யூ அன்மியூட்! " என்றவுடன் 'பாட்டும் நானே பாவமும் நானே' ஸைலண்ட் எஃபெக்ட் தான் எல்லாருக்கும்.

பெருமூச்சொன்றை இழுத்து விட்ட ஆசிரியர் மீண்டும் "ஓகே கண்டினியூ பண்ணுவோம் என்றவுடன் தான் 'நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே' என்ற நினைப்போடு நின்ற மூச்சு திரும்பி வந்தது.

மீண்டும் அமைதி படலம்....
ரெண்டு மூன்று நாட்கள் இதே நிலைமை தொடர்ந்தது.

பிறகு....


பிறகு.....




"ஒண்ணும்மில்ல அதுவே பழகிடுச்சு "




நினைவு 3


"புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும் இடம் மட்டும் நூலகமன்று நினைவுகள் அடுக்கப்பட்டிருக்கும் மனதும் ஒரு நூலகம் தான்."

இன்றும் அந்த பக்கங்களை திருப்பி பார்க்கின்றேன்....
என் முகத்தில் புன்னகை மட்டும் மறையவில்லை....



நிகழ்நிலை வகுப்புகளோடு போராடிக் கொண்டிருந்த நேரம்...

ஆசிரியர் கேள்விகளுக்கான பதில்களை அனுப்புவதற்கு தான் சாட் போக்ஸ் ஆன் செய்யப்பட்டது. ஆனால் நாமோ அரட்டை அடிக்கத் தான் சாட் போக்ஸ் பக்கம் செல்வதே... (எவ்ளோ நேரம் தான் பாடத்தை கவனிக்கிறது. ஒரு என்டடெயின்மண்ட் வேண்டா? )

அப்போது தான் ஒருமுறை...
அரட்டையின் தொடர்ச்சியிலும் ஆர்வத்திலும் எவ்ரிவன் சாட்டில் நம்ம பங்கு ஒருவரால் "செருப்பு" என்று போடப்பட்டுவிட்டது.(அதற்கு காரண கர்த்தாவே நான் தான் . என்னை திட்டுவதற்கு, பாவம் நம் மக்களை ஆரவக்கோளாரில் திட்டிவிட்டாள்.)
ஆனால் அவளுக்கு தான் நடுங்கத் தொடங்கியது. ஆசிரியர் பேசிக் கொண்டே அந்த சாட்டையும் பார்த்து விட்டு சிரித்தார் ஆனால் ஒன்றும் செல்லவில்லை. ( அவர் எப்போதும் மாணவர்களின் சேட்டைகளை பெரிதாக்க மாட்டார். தவறு என்று கண்டிக்க வேண்டிய இடத்தில் அவர்கள் வழியிலே சென்று திருத்துவார். அதனால் தப்பித்தோம் )

இன்னொரு முறை ஆசிரியர் ஒருவர், கொடுத்த பயிற்சிகளை முடித்தவுடன் ஹாண்ட் ரெயிஸ் பண்ண சொன்னார். ( அது தான் பா ரெயிஸ் ஹேண்ட் ஈமோஜி போடுறது) ஆனால் நம் அறிவாளிகள் சிலர் பழக்கதோஷத்தில் திரைக்கு பின் கைகளை தூக்கிக்கொண்டிருந்திருக்கின்றனர். ( அதுவும் ஆசிரியர் பொறுமை இழந்து ஒவ்வொருவரையும் கூப்பிட்டு விசாரிக்கும் போது தான் பூனைக்குட்டி வெளியே வந்தது)

நிகழ்நிலை வகுப்புகளின் போது தான் நேரடி வகுப்புகளின் அருமை விளங்கியது.


இந்த நாட்கள் தான் , நாம் துன்பப்பட்டோம்; துயரப்பட்டோம்; கஷ்டப்பட்டோம்; கதறப்பட்டோம் என்று நினைத்ததையெல்லாம் பொக்கிஷங்களாக்கியது....

ஓடி ஓடி உழைத்த கால்களுக்கு ஓய்வு கிடைக்காதா என்று ஏங்கிய மனதும் கால்களும் நிற்க முடியாமல் தவித்தன....

உறவுகளிடம் ஓரிரு வார்த்தைகளை மட்டும் உதிர்த்த உதடுகள், தன் உறவுகளிடம் உணர்வுகளையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டன...

இயந்திர நாட்களில் தூசின் தாலாட்டில் உறங்கிய அறைகள் தட்டி எழுப்பப்பட்டன...

புகைப்படங்கள், மறந்து போன பக்கங்களை திருப்பிப் பார்க்கச் செய்தது...

மழுங்கிப்போன மூளையை வேலை செய்ய வைத்தது( என் மூளையை தான்)...





இந்த பக்கம் நிகழ்நிலை வகுப்புகளின் கதைகளை கொண்டிருந்ததால், அடுத்த பக்கத்தை திருப்பினால் அது நம்ம சமயலறைப் பக்கம்....

சமைக்கிறேன் என்ற பேர்வழியில் வீட்டின் ஜீவன்களை கொலை செய்யாமல் ஓரளவு துன்பத்தை மட்டும் கொடுத்தேன்( நமக்கு கொடுத்து தானே பழக்கம்)

எல்லாரும் ஸ்டேடஸில் டக்ளோனா காஃபி போட்டத்தை போட நமக்கும் ஆர்வம் வந்தது. ஆனால் என் நேரம்! வீட்டில் காஃபித்தூள் வாங்க மாட்டார்கள் .
பிறகென்ன த்ரீ இன்கிரீடியன் உணவு வகைகள் தான்.

அதுமட்டுமில்லை ஃபேஸ்புக், யூடியூப் களில் இயற்கை உணவுகள், நோயெதிர்ப்பு சக்திக்கான பானங்கள் என பல வெரையிட்டிகள் என் அம்மாவின் கைவண்ணத்தில் கிடைத்தது.

கறுத்திருந்த என் முகம் கொஞ்சம் அழகானதும் அம்மாவின் கைவண்ணத்தில் தான். (அழகோ! அப்பிடி கேட்பது புரிகிறது. ஆனால் இதிலிருந்து என்ன தெரிகிறது?? நம்மை நாமே நேசிக்க வேண்டும் என்று தெரிகிறது)

ஒருவாறு இந்த நாட்களை கடந்ததும் பாடசாலைகளும் வகுப்புகளும் ஆரம்பிக்க புது வகையான உணர்களோடு 'நெகிடிமு ஸ்ரீலங்கா' வும் (மக்கள் கொரோனாவின் தாக்கத்தில் சோர்வுறாமல் இருக்க இலங்கையில் உருவாக்கப்பட்ட பாடல். ) இணைந்து கொள்ள, மீண்டும் வராதா என ஏங்கிய பொழுதுகளோடு ஜக்கியமாகினோம். ஆனால் அது ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லை.

"விசேட செய்தியொன்று!

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, மக்கள் அவதானத்தோடு இருக்கும் படி கேட்டுக்கொள்வதோடு மீண்டும் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்படுகின்றது"

"என்னது!!! மறுபடியும் முதல்லருந்தா."
(இப்போ எல்லாரோட மைண்ட் வாய்ஸும் இதுதான்)


முற்றும்.

-பிரசாத் கிருஷ்ணா-
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான சிறுகதை,
பிரசாத் கிருஷ்ணா டியர்

ஹா ஹா ஹா
கொரங்கு கொரோனாவால் ஸ்கூல், காலேஜ் ஸ்டூடெண்ட்ஸுக்கு உண்டான தாக்கத்தை அழகாக சொல்லியிருக்கீங்க
ஆனால் ஒன் ஸ்மால் டவுசர் டவுட்டு
அது என்ன டக்ளோனா காப்பி?
புதுசா இருக்கே
ஹா ஹா ஹா
 

Prashadi

Member
ரொம்ப நன்றி! டக்ளோனா காஃபி னு நெட் ல அடிச்சு பாருங்க. எல்லா கொடுமையும் காட்டும்.
 

Ivna

Active Member
Arumai...
Corona nerya maathitu namala...antha matram thodaruma or kanama poirima nu thaa therla pa...
Own experience ah?that means are u a college student?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top