Kathirukkiren kannamma-Part 1

Pallavi

Writers Team
Tamil Novel Writer
#1
என் கதையை வரவேற்ற அனைத்து வாசகர்களும் என் நன்றி.கதையின் முதல் அத்தியாயம் கீழே.படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

காத்திருக்கிறேன்
பல்லவி

அத்தியாயம் ஒன்று

காலை நேரம் வெளியே செல்வதற்கு தயாராகி வெளியே தன் வீட்டின் ஹாலிற்கு வந்தான் டாக்டர் நிரஞ்சன்.லண்டனில் உளவியலில் முனைவர் பட்டம் பெற்று முன்தினம் இரவுதான் தாய்நாடு திரும்பியிருந்தான்.இத்தனை நாட்களாக பிரிந்திருந்த நண்பர்களையும் உறவினர்களை பார்க்க எண்ணி காலையிலேயே கிளம்பிவிட்டிருந்தான்.அவன் கிளம்பியதை பார்த்த அவன் தாய் லஷ்மி,

"ரஞ்சன் இவ்ளோ காலையிலேயே வெளியே கெளம்பிட்டியா...டிபன் சாப்பிட்டு போடா"

"இல்லேம்மா சதீஷ் வீட்டுக்கு கூப்பிட்டுயிருக்கான்.போயிட்டு சாய்ங்காலம் வந்தர்றேன்"

என்றபடி அன்னையைப் பார்த்தவன் அவர் ஏதோ சொல்ல தயங்குவதைக் கண்டான்.

"அம்மா என்னாச்சு? ஏதாவது சொல்லனுமா?"

"அது....அது...இல்ல ஒண்ணு இல்ல...நீ போய்ட்டு வா... அப்புறம் சொல்றேன்"

"அம்மா..வாங்க இங்கே!"

என்றபடி அவரை அழைத்து சென்று சோபாவில் தன்னருகே உட்கார செய்தான்.

"அம்மா.. நீங்க என்னமோ சொல்ல நினைக்கிறீங்க... தயங்காம சொல்லுங்க அத...."

"அது நம்ம வசு....வசுவுக்கு..."

"ம்...வசுக்குட்டிக்கு என்ன?இப்ப இஞ்சினியரிங் மூணாம் வருஷம்தானே படிக்கிறா?காலேஜ்லேந்து வரட்டும்...நானே சாய்ங்காலம் சித்தப்பா வீட்டுக்கு போறதா தான் இருந்தேன்"

"அவ காலேஜ் போகல...படிப்ப நிறுத்தியாச்சு"என்றார் அப்போதுதான் மாடியிலிருந்து இறங்கி வந்த நிரஞ்சனின் தந்தை ஜீவானந்தம்.

திடுக்கிட்டு அவரைத் திரும்பிப் பார்த்தான் நிரஞ்சன்.அவர் சொல்வதை அவனால் நம்பவே முடியவில்லை.

"அப்பா! என்ன சொல்றீங்க?படிப்ப நிறுத்தியாச்சா?ஏன்?வசுக்குட்டிக்கு என்ன ஆச்சு?நல்லா படிக்கிற பொண்ணாச்சே!"

அவனருகில் சோபாவில் அமர்ந்த அவர் நீர்க் கோர்த்த தன் விழிகளை மெல்லத் துடைத்துக் கொண்டார்.அவர் மனையாளும் சேலைத் தலைப்பால் பொங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.அவர்கள் கண்ணீர் கண்டு பதறிய நிரஞ்சன்,

"அப்பா ஏன் அழறீங்க?வசுக்குட்டிக்கு என்ன? உடம்புக்கு ஒண்ணுமில்லையே?"என்றான் பதறியபடி.

"அவளுக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லப்பா...ஆனா பதினைந்து நாள் முன்னாடி டூர் போன பொண்ணு திரும்பி வந்த பின்னடி ரொம்ப மாறிடுச்சு...ஏதேதோ பேசறாளாம்..எப்படியோ நடந்துக்குறாளாம்...அதுனால காலேஜிலேந்து நிறுத்திட்டாங்க....தம்பி மொகத்த பாக்க முடியல"

அவர் சொல்வதை கவனமாகக் கேட்ட நிரஞ்சன் சிறிது யோசித்தான்.

"அப்பா!டூர்ல அப்படி என்னதான் ஆச்சு? என்னென்னமோ பேசறான்னு சொன்னீங்களே... அப்படி என்ன என்ன பேசுறா?நீங்க அவகிட்ட பேசினீங்களா?"

"இல்லப்பா....நாங்க போன போது அவ மருந்து வேகத்துல தூங்கிட்டு இருந்தா... ரொம்ப ஸ்டெயின் பண்ணிக்கறான்னு தூக்க மாத்திரை கொடுக்கறாங்களாம்"

அதிர்ந்த நிரஞ்சன்,

'என்ன தூக்க மாத்திரையா?'என மனத்திற்குள் கவலையடைந்தான்.

"தம்பி நீதான் அதெல்லாம் பத்தி நெறைய படிச்சிட்டு வந்திருக்கேல்ல...நம்ப வசுக்குட்டிய நீனே சரி பண்ண முடியாமான்னு பாரு..."

"சரிம்மா நா இப்பவே போய் பாக்குறேன்"

என்றவன் தன் காரில் சித்தப்பாவின் வீட்டை நோக்கி விரைந்தான்.காரில் செல்கையில் தான் அறிந்த தங்கை வசுந்தராவை எண்ணிப் பார்த்தான்.

அவன் தந்தை ஜீவானந்தமும் சித்தப்பா தனசேகரும் சேர்ந்து அவர்களின் தந்தை தொடங்கிய சிறிய தொழிலை அவர்களின் இத்தனை வருட கடின உழைப்பால் இந்தியாவின் நம்பர் ஒன் பிஸினஸ் சாம்ராஜ்ஜியமாக மாற்றி இருந்தனர்.வேறு வேறு வீடுகளில் வசித்தாலும் வாரத்தில் ஒரு நாள் விசேஷ நாட்கள் பண்டிகை தினங்களில் என அவர்கள் ஒன்றாக சேர்ந்து இருந்தனர்.இதில் பெண்மணிகள் இருவரும் நாளில் நான்கைந்து முறையாவது போனில் பேசிக் கொள்வர்.

மூத்தவர் ஜீவானந்திற்கு நிரஞ்சன் ஒரே மகன்.இளையவர் தனஞ்சயனின் மகள்தான் வசுந்தரா.

வசுந்தரா அழகான பெண்.ஐந்தரை அடி உயரமும் உயரத்திற்கேற்ற பருமனும் கொண்ட தங்க பதுமை அவள்.இன்றைய நாகரிகப்படி முடியை வெட்டாமல் இடைவரை நீண்டிருந்தது அவள் கூந்தல்.கலகல பேச்சும் முத்துப்பல் சிரிப்பும் எவரையும் கவர்ந்துவிடும்.படிப்பிலும் கெட்டி.பத்து பன்னிரெண்டாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்தாள்.கல்லூரியிலும் எல்லாவற்றிலும் முதலிடத்தில் இருந்தாள்.

கூடப் பிறந்தவர்கள் வேறு யாரும் இல்லாததால் நிரஞ்சனும் வசுந்தராவும் ஒருவரையொருவர் உயிரென நேசித்தனர்.ஒருவரைப் பற்றி மற்றொருவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை எனலாம்.அண்ணனிடம் கேட்டால் சரியாக இருக்கும் என தங்கையும் தங்கை சொல்வதே சரி என அண்ணனும் சொல்வதை கேட்டு இரு பெற்றோரும் மகிழ்ந்துக் கொள்வர்.

நிரஞ்சன் லண்டன் புறப்படும் போது விமான நிலையத்திற்கு வழியனுப்பி வைக்க வந்த வசுந்தராவை,

"ஏய் வாலு உன் விளையாட்டு எல்லாத்தையும் மூட்டைக் கட்டி வச்சிட்டு பெரியவங்க நாலு பேரையும் நா வரவரைக்கும் ஜாக்கிரதையா பாத்துக்கோ...புரிஞ்சுதா!"

"அதெல்லாம் நா பாத்துக்குறேன்...நீ மட்டும் ஒருத்தனா போயி ஒருத்தனாவே வா...கூட அந்த ஊரு யாரையாவது பொண்ண கூட்டிட்டு வந்துடாதே"

"உன்ன!......"

இருவரும் ஏர்போர்ட்டில் ஓடியதை நினைத்து அவன் கண்கள் நீரில் நனைந்தது.

சித்தப்பா வீட்டு கேட்டில் இவன் காரைக் கண்டதும் கூர்க்கா கேட்டை அகலத் திறந்தான்.உள்ளே சென்று ஹாலில் நுழைந்த போது சித்தி கமலா இவனைக் கண்டதும் வேகமாக ஓடி வந்து அணைத்துக் கொண்டார்.அவரின் உடல் அழுகையில் குலுங்கியது.

"சித்தி!அழாதீங்க ஒண்ணும் இல்லை.நா தான் வந்துடேன்ல! எல்லாத்தையும் நா சரி பண்றேன்"என்று அவரை தட்டிக் கொடுத்தான்.

சிறிது சமாதானமடைந்த சித்தியை அழைத்து வந்து சோபாவில் அமர்த்தினான்.இதற்குள் வேலையாள் மூலம் நிரஞ்சனின் வரவை அறிந்த சித்தப்பா விரைந்து வந்தார்.சித்தியை போல அழவில்லை எனினும் துக்கத்தை அடக்க போராடிக் கொண்டிருந்தவரை இறுக அணைத்துக் கொண்டான் நிரஞ்சன்.இவரும் சிறிது சமனப்பட்ட பின்,

"சித்தப்பா! இதெல்லாம் என்ன?வசுக்கு என்ன ஆச்சு? எல்லாத்தையும் விவரமா சொல்லுங்க..."

"என்னத்தப்பா சொல்றது... பதினைந்து நாளு முன்னே வரைக்கும் எல்லா நல்லாத்தான் இருந்தது.வசும்மா செட்டெல்லாம் சேர்ந்து லீவுக்கு கோவா போறதா ப்ளான் பண்ணாங்க...ஒரு வாரம் இருக்கறதா முடிவாச்சு... எனக்கு கூட இதுல அவ்வளவா இஷ்டம் இல்ல.வேண்டாம்ன்னு சொல்லிப் பாத்தேன்..ஆனா உன் தங்கைய பத்தி உனக்கு நல்லா தெரியுமே...அவ நெனச்சா நெனச்சது தான்.ஒரு பத்து பேரு இருந்தாங்க....நானே போய் ட்ரைன் ஏத்தி விட்டுட்டு வந்தேன்...ஒரு வாரம்ன்னு போனவங்க மூனே நாள்ல வந்துட்டாங்க...கலகலன்னு சிரிச்சிக்கிட்டே போன பொண்ணு பேயறைஞ்சா போல வந்து நின்னா...பேச்சில்ல சிரிப்பில்ல சரியா சாப்பிடறதும் இல்ல.... ஏதேதோ சொல்றா...தூக்கத்துல ஏந்து ஏதோ சொல்லி கத்தறா.... கொஞ்ச நேரத்துல எதுவுமே நடக்காத மாதிரி சும்மா உட்கார்ந்திருக்கா....என்ன பண்றதுன்னே தெரியவில்லைப்பா... நீதான் எப்படியாவது அவள சரி பண்ணும்..."என்று கண்ணீர் விட்டார் சித்தப்பா தனஞ்செயன்.

"கோவாவுல அப்படி என்னதான் நடந்ததுன்னு ஏதாவது தெரியுமா உங்களுக்கு?"

"இல்லப்பா கூட போன அவ பிரண்ட்ஸுக்கும் எந்த விவரமும் தெரியலை...அங்க போன அன்னிக்கு நல்லாத்தான் இருந்தாளாம்...மறுநாளு எங்கேயோ பீச் பாக்கறதுக்கு போனாங்களாம்...அங்கதான் அவ பியேவியர்ல சேன்ஞ்ச் வர ஆரம்பிச்சதாம்.ஏதேதோ சொல்லி கத்திட்டு மயங்கி விழுந்துட்டாளாம்... அப்புறம் பக்கத்துல இருக்குற டாக்டர்கிட்ட ஊசி போட்டாங்களாம்...எந்திரிச்ச அப்புறமும் அப்படியேதான் பண்ணாளாம்... அவங்க பயந்து ஊருக்கே கூட்டிட்டு வந்துட்டாங்க... டாக்டர கூட்டிட்டு வந்து காட்டினோம்...அவரு ஏதோ மாத்திரை கொடுத்தாரு...அதுல சரியாகலைன்னா கவுன்ஸ்லிங் கொடுக்கலாம்ன்னு சொல்றாரு... எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியல.... எப்படி இருந்த பொண்ணு..."

"கவலைபடாதீங்க சித்தப்பா நம்ப வசுவை பழையபடி செய்யறது என் பொறுப்பு...அவ ஏதேதோ சொல்றான்னு சொல்றீங்களே...அது என்னன்னு ஏதாவது தெரியுதா?"

"அது ஏதோ பேரு....

அப்போது வீட்டின் மேலிருந்து

"கெளகெளததம்ம்........."என்ற குரல் அந்த வீட்டையே கிடுகிடுக்க செய்து அவர்கள் இதயத்தை உறைய வைத்தது.
 
#3
:D :p :D
உங்களுடைய ''காத்திருக்கிறேன்
கண்ணம்மா''-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பல்லவி டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes